15 Oct, 2025 | 01:25 PM

( இணையத்தள செய்திப் பிரிவு )
உலக உணவு தினம் 2025 ஐ “ சிறந்த உணவுகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் – கைக்கோர்ப்போம் ” என்ற மையக்கருத்தில் இலங்கை உலக நாடுகளுடன் இணைந்து கொண்டாடுகிறது.
அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும் சிறந்த போசாக்கையும் உறுதிப்படுத்த, நிறுவன வரம்புகள், துறைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்ற செய்தி தெளிவாகிறது.
இந்நிலையில், ஒக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின்(FAO ) பிரதிநிதி விம்லேந்திர ஷரன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் ( IFAD ) பணிப்பாளர் ஷெரீனா தபஸ்ஸூம் மற்றும் உலக உணவுத் திட்டத்திற்கான இலங்கை பிரதிநிதி மற்றும் பணிப்பாளர் பிலிப் வார்ட் ஆகியோர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் சவால்கள் மற்றும் நிலை:
இலங்கை தற்போது பட்டினி மற்றும் போசாக்குக் குறைபாட்டைக் குறைப்பதில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், பொருளாதார ஸ்திரமின்மை, காலநிலை மாற்றங்கள் மற்றும் சந்தைச் சீர்குலைவுகளின் கூட்டு விளைவுகளால் குடும்பங்களும் சமூகங்களும் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்கின்றன.
கிராமப்புற சமூகங்கள், குறிப்பாக சிறு பரிமாண விவசாயிகள், உலகளாவிய மற்றும் உள்நாட்டுச் சந்தைகள், நிதி வசதிகள் மற்றும் காலநிலைக்கு உகந்த தொழில்நுட்பங்களை அணுகுவதில் தடைகளை எதிர்கொள்கின்றனர்.
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது என்பது உலகளாவிய கடமைகளை நிறைவேற்றுவதுடன், நாட்டினுள் மக்களின் வாழ்வாதாரம், கண்ணியம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதையும் குறிக்கிறது.
ஐ.நா.வின் ரோமைத் தளமாகக்கொண்ட நிறுவனங்களின் பங்களிப்பு:
ஐக்கிய நாடுகள் சபையின் ரோம் நகரத்தை தளமாகக் கொண்ட உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD), மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியன இலங்கையின் முயற்சிக்கு தனித்துவமான பலத்தை வழங்குகின்றன:
FAO: விவசாயத்தை நவீனமயமாக்குதல் மற்றும் பல்வகைப்படுத்துதல் தொடர்பான கொள்கை வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குகிறது.
IFAD: கிராமப்புற வளர்ச்சியில் முதலீடு செய்து, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்துகிறது, அத்துடன் சிறு பரிமாண விவசாயிகளுக்கு நிதி அணுகலை மேம்படுத்துகிறது.
WFP: உடனடி உணவு மற்றும் போசனைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், மீண்டெழும் திறனையுடைய உணவு கட்டமைப்புகளை உருவாக்க பாடசாலை உணவுத் திட்டங்கள், அவசரகாலத் தயார்நிலை மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்துகிறது.
இந்த முயற்சிகளை ஒன்றிணைத்து, தேசிய முன்னுரிமைகளுடன் இணைத்து, அரச நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள், தனியார் துறையின் புத்தாக்கம், சிவில் சமூக ஈடுபாடு மற்றும் சமூகப் பங்கேற்பு மூலம் வலுப்படுத்தப்படும்போது மட்டுமே சாதகமான விளைவுகளை எட்ட முடியும்.
நம்பிக்கைக்குரிய வழிமுறைகள் (இலங்கையில் உள்ள உதாரணங்கள்):
இலங்கையில் உணவுப் பாதுகாப்பை நோக்கிய நம்பிக்கைக்குரிய பல வழிமுறைகள் ஏற்கனவே உள்ளன:
நவீன தொழில்நுட்பம்: சந்தை அணுகலுக்கான டிஜிட்டல் தளங்கள், காலநிலைக்கு உகந்த திட்டமிடலுக்கான தொலை உணர்வு (ரிமோட் சென்சிங்) தொழில்நுட்பம் போன்றவை விவசாயத்தை மறுவடிவமைக்கின்றன.
நீர்வள முகாமைத்துவம் : குளங்களின் அடிப்படையிலான நீர்ப்பாசன முறைகளை மீட்டெடுப்பது, சிறு பரிமாண விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுகிறது.
இளைஞர் புத்தாக்கம்: இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் வேளாண் தொழில்நுட்பத் தீர்வுகள், உற்பத்தியாளர்களை நேரடியாக நுகர்வோருடன் இணைக்கின்றன.
போசணை மேம்பாடு: செறிவூட்டப்பட்ட அரிசியை பாடசாலை உணவில் சேர்ப்பது இளம் பாடசாலைப் பிள்ளைகளின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
பால்நிலை சமத்துவம்: பெண் உற்பத்தியாளர் குழுக்கள் வருமான ஆதாரங்களை விரிவுபடுத்துவதிலும், பால்நிலை சமத்துவத்தை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
முன்னோக்கிச் செல்லும் வழி - ஐந்து முன்னுரிமைகள்:
உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய இலங்கையின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த, பின்வரும் ஐந்து முன்னுரிமை விடயங்கள் அவசியமாகும்:
டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம்: விவசாயத்தில் வேகத்தை அதிகரித்து, சிறு விவசாயிகள் (குறிப்பாக பெண்கள், இளைஞர்கள்) காலநிலைத் தகவல், நிதிச் சேவைகள் மற்றும் சந்தை இணைப்புகளின் நன்மையை அனுபவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பெண்கள் மற்றும் இளைஞர் தலைமை:மீண்டெழும் தன்மை கொண்ட வேளாண் உணவு கட்டமைப்புகளை உருவாக்குவதில் பெண்கள் மற்றும் இளைய தலைமுறையினரைத் தலைவர்களாகவும் புத்தாக்கவியலாளர்களாகவும் பார்க்க வேண்டும்.
காலநிலைக்கு இயைபாக்கம்: குளங்களை அடிப்படையாகக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளைப் புதுப்பித்தல், காலநிலைக்கு பொருத்தமான நடைமுறைகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மூலம் மீண்டெழும் திறனை வலுப்படுத்தல்.
ஒருங்கிணைந்த தேசியத் தளம்: கூட்டாண்மைகள், தரவுகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒருங்கிணைந்த தேசியத் தளத்தை அரசு, தனியார் துறை, கல்வித்துறை மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்க வேண்டும்.
போசணை உணர்திறன் கொண்ட சமூகப் பாதுகாப்பு: பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை (குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை) சென்றடையக்கூடிய சமூகப் பாதுகாப்புச் செயற்திட்டங்களை உறுதி செய்வதன் மூலம் சத்தான உணவுக்கான அணுகலை உறுதி செய்தல்.
இவ்வருட உலக உணவு தினத்தன்று, அனைவரும் ஒன்றாகக் கைகோர்ப்பதன் மூலம் நிகழ்காலத் தலைமுறைகளுக்கும், எதிர்காலத் தலைமுறையினருக்கும் சிறந்த உணவையும் சிறந்த எதிர்காலத்தையும் இலங்கை உறுதி செய்ய முடியும்.
https://www.virakesari.lk/article/227787