
கட்டுரை தகவல்
(இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)
''தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.'' என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன்.
இலங்கையின் கண்டி - சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர்.
இந்த மண்சரிவு சம்பவம் நேற்று முன்தினம் (27) இரவு ஏற்பட்டது.
சரசவிகம - ஹதபிம பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழையுடனான வானிலையின் போது, இந்த பகுதியிலுள்ள வீடொன்று மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த செய்தியை அறிந்த பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் குறித்த வீட்டை அண்மித்து மீட்பு பணிகளை ஆரம்பித்த தருணத்தில் அந்த பகுதியில் மீண்டும் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ராணுவத்தின் உதவியுடன் தேடல்
இந்த மண்சரிவில் அப்பகுதியிலிருந்த ஏனைய வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதுடன், காப்பாற்றுவதற்காக விரைந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் மண்ணுக்குள் புதையுண்டனர்.
பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் மேற்கொண்ட தேடுதல்களில் 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், இன்றைய தினம் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை மண்ணுக்குள் புதையுண்ட 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கிராம சேவை உத்தியோகத்தரின் கண்காணிப்பில் புதைக்கப்பட்டன.
ஏனையோரை தேடும் பணிகளுக்காக ராணுவத்தினர் இன்று வரவழைக்கப்பட்டு, மாலை முதல் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டன.
அப்பகுதியில் ஆறொன்று ஊடறுத்து செல்கின்றமையினால், மீட்பு பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.

படக்குறிப்பு,வி.கே.முத்துகிருஸ்ணன்
மண்சரிவு ஏற்பட்ட இடத்திலுள்ள வீடொன்றின் உரிமையாளரான வி.கே.முத்துகிருஸ்ணன், முதல் வீட்டில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து, ஏனைய இளைஞர்களுக்கு தகவலை வழங்கியுள்ளார்.
உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சற்று மேலே வந்த தருணத்திலேயே அவருடைய வீட்டுக்கு கீழுள்ள அனைத்து வீடுகளும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.
இறுதி நொடியில் தப்பித்த தருணம்
இறுதி நொடியிலேயே தான் தப்பித்ததாக வி.கே.முத்துகிருஸ்ணன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.
''மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்த குடும்பங்களுடன் காப்பாற்ற போன இளைஞர்களும் இறந்து விட்டார்கள். முதல் வீட்டை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் சென்றார்கள். மண்சரிவு ஏற்பட்ட முதல் வீட்டிலுள்ளவர்களை காப்பாற்றும் போது, மறுபடியும் மண்சரிவு வந்தது. பாரிய சத்தத்துடன் மண்சரிவு வந்தது. எனக்கு தெரிந்தளவில் 23 பேர் அந்த இடத்தில் இருந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட பலர் இருந்தனர். ஐந்து குடும்பங்கள் அந்த இடத்தில் இருந்தது. என்னுடைய வீட்டோடு சேர்ந்து 6 குடும்பங்கள். குறிப்பிட்டளவு உடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இன்னும் பலரை தேட வேண்டியுள்ளது. இனிமேல் நாங்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டோம். அந்த இடத்திலுள்ள மக்களுக்கு நிரந்தர இடமொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்'' என குறிப்பிட்டார்.
உதவ சென்றவர் உயிரிழந்த சோகம்

படக்குறிப்பு,மண்சரிவில் உறவினரை இழந்த உஷா
தனது மைத்துனனை இழந்த சரசவிகம பிரதேசத்தைச் சேர்ந்த உஷா, ''சரியான மழை. அப்போது இரண்டு பேர் வந்து, பிள்ளைகள் எல்லாம் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றனர் என மைத்துனரிடம் சொன்னார்கள். போய் உதவி செய்வோம் என்று மைத்துனர் அழைத்தார். நாங்கள் போக வேண்டாம் என கூறினோம். ஆனாலும் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவரை பற்றிய தகவலே கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் தான் தெரியும் இப்படியான சேதம் நடந்திருக்கிறது என்று. அவருடைய உடல் கிடைத்தது.'' என கண்ணீருடன் தெரிவித்தார்.
'காப்பாற்ற சென்றவர் உயிருடன் இல்லை'

படக்குறிப்பு,தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜா
தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜாவும், '' அவர் என்னுடைய அண்ணாவின் மூன்றாவது மகன். அவருக்கு கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அவர் தொழில் செய்துவிட்டு வரும்போது, இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒரு பிள்ளையை தூக்கி வந்து வீடொன்றில் விட்டுவிட்டு, வீட்டில் அம்மாவிடம் சொல்லியிருக்கின்றார். மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிவிட்டு வருகின்றேன் என்று சொல்லி இன்னுமொரு முறை போயிருக்கின்றார். அப்படி சென்றவர் மண்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.'' என குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cde69885rk6o