முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் - பலதார மணத்தை ஒழிக்க வேண்டும்
Thursday, August 28, 2025 கட்டுரை

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் உட்பட நாட்டின் தனியார் சட்டங்களில் சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கடந்த திங்கட் கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.ரி.பி. தெஹிதெனிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் உள்ள பாகுபாடு காட்டும் மற்றும் சர்வதேச தரங்களுக்கு முரணான விதிகளில் உடனடியாக திருத்தம் தேவை என வலியுறுத்தியுள்ள ஆணைக்குழு, நாட்டின் தேசிய சட்டங்கள் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்யும் கடமை தமக்கு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை மேற்கோள்காட்டியுள்ள ஆணைக்குழு, நாட்டில் பெண்களின் சுகாதாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் இருந்தாலும், பாகுபாடு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை பிரச்சினைகள் இன்னும் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது. கண்டியச் சட்டம், முஸ்லிம் திருமணச் சட்டம் மற்றும் யாழ்ப்பாண திருமண உரிமைகள் மற்றும் மரபுரிமைச் சட்டம் போன்ற தனியார் சட்டங்களில் சீர்திருத்தம் தேவைப்படும் பல விதிகள் உள்ளதாக ஆணைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் காணப்படும் பல்வேறு பாகுபாடு காட்டும் விதிகளை ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது. அவையாவன:
1. இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆண்கள் மட்டுமே பதிவாளர்களாகவும், காதிகளாகவும் (நீதிபதிகள்) நியமிக்கப்பட முடியும்.
2. ஆண்களுக்கும், பெண்களுக்கும் விவாகரத்துக்கான நிபந்தனைகள் வேறுபடுகின்றன. ஒரு கணவர் காரணம் கூறாமல் ‘தலாக்’ விவாகரத்து செய்ய முடியும். ஆனால் ஒரு மனைவி ‘பஸ்ஹ{‘ விவாகரத்து கோரும்போது, திருமண முறிவுக்கான காரணத்தை நிரூபிப்பதுடன், இரு சாட்சிகளால் அதனை உறுதிப்படுத்தவும் வேண்டும். கணவர் தனது மனைவியால் தொடங்கப்பட்ட விவாகரத்தை மேல்முறையீடு செய்ய முடியும், ஆனால் மனைவிக்கு அந்த உரிமை இல்லை.
3. திருமண சம்மதம்: திருமணத்தின் போது மணமகளின் கையொப்பம் சம்மதத்திற்கான சான்றாகக் கோரப்படுவதில்லை. ஆனால் ஒரு ஆண் பாதுகாவலரின் (வாலி) கையொப்பம் கட்டாயமாகும்.
4. முஸ்லிம் சட்டத்தில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது பெண்களின் உரிமையையும், ஊநுனுயுறு உடன்படிக்கையையும் மீறுவதாக ஆணைக்குழு கருதுகிறது. பலதார மணங்களில் உள்ள பெண்கள் பெரும்பாலும் உளவியல் ரீதியான அழுத்தம், கைவிடுதல் மற்றும் வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.
5. முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது குறிப்பிடப்படவில்லை. ஒரு காதியின் அனுமதியுடன் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணின் திருமணத்தைப் பதிவு செய்ய இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. பெண் குழந்தைகளின் திருமணம் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இது உடனடியாக சீர்திருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்துகிறது.
6. காதி நீதிமன்ற அமைப்பானது பல குறைபாடுகளை கொண்டுள்ளது. பெண்களுக்கு இந்த அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை. காதி நீதிபதிகள் நியமனத்திற்கு முறையான தகுதிகள் அல்லது பயிற்சி வரையறுக்கப்படவில்லை.
இந்த அறிக்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.
1. அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) பிரிவுகளுடன் முரண்படும் அனைத்து முஸ்லிம் திருமணச் சட்ட விதிகளையும் திருத்த வேண்டும்.
2. அனைவருக்கும் குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்க வேண்டும்.
3. காதி அமைப்பின் நேர்மறையான அம்சங்களைத் தக்கவைத்துக்கொண்டு, பாகுபாடு அற்ற, புதிய குடும்பச் சட்ட நீதிமன்ற அமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும்.
4. பெண் காதிகளை நியமிக்க அனுமதிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டும்.
5. பலதார மணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தச் சீர்திருத்தம் தொடர்பான கலந்தாலோசனைகள் முஸ்லிம் பெண்கள் உட்பட பரந்த சமூகத்தின் பங்களிப்புடன் விரைவாகவும், உள்ளடக்கியதாகவும் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli
வைச்சாண்டா ..பெரிய ஆப்பு...இனி சனத்தொகை குறையுமோ..