ஊர்ப்புதினம்

ஸ்டாலின், விஜய்க்கு எதிராக போராட்டம் - வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் எச்சரிக்கை

3 weeks 6 days ago

05 Oct, 2025 | 07:07 AM

image

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் எமது நாட்டின் இறைமையில் உள்ள கச்சதீவை அரசியலுக்காக பயன்படுத்தினால் அவர்கள் இருவருக்கும் எதிராக கடற்றொழில் சமூகம் மிக விரைவில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்குமென வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடாக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சதீவை மீட்பேன் என வடக்கு கடற்றொழில் சமூகத்திற்கு எதிரான ஒரு கருத்தை தொடர்ச்சியாக அரசியல் மேடைகளில் பேசி வருகின்றார்.

முதலமைச்சரே, நல்லெண்ண அடிப்படையில் வடக்கு கடற்றொழில் சமூகம் கடந்த 2023ஆம் ஆண்டு மூன்று மகஜர்களை உங்களுக்கு அனுப்பியது. அதற்கு நீங்கள் எதுவித பதிலும் வழங்கவில்லை. ஆனால் அரசியல் இருப்புக்காக கச்சதீவு விவகாரத்தை தூக்கி வைத்து வடக்கு கடற்றொழிலாளர்களை பகைக்கின்ற ஒரு விடயத்தை நீங்கள் செய்கின்றீர்கள்.

கச்சதீவினால் தான் இந்திய மீனவர்கள் பாதிக்கப்படுவதாக உங்களது அரசியல் இருப்புக்காக பொய்யான ஒரு குற்றச்சாட்டை தமிழ்நாட்டிலே நீங்கள் பேசாதீர்கள்.

வடக்கு கடற்றொழில் சமூகம் கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டு அரசுக்கோ எதிரான எந்த ஒரு போராட்டத்தையும் பாரிய அளவில் முன்னெடுக்கவில்லை.

தொடர்ச்சியாக இவ்வாறு பேசி தமிழ்நாட்டு மீனவர்களை வடக்கு மீனவர்களுக்கு எதிராக தூண்டுவீர்களாக இருந்தால் வடக்கு கடற்றொழில் சமூகமாகிய நாங்கள் பாரிய ஒரு போராட்டத்தை முன்னெடுப்போம்.

அதுபோல தமிழக வெற்றி கழகத்தின் விஜயும் அரசியல் இருப்புக்காக கச்சதீவு விவகாரத்தை பேசுகின்றார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முதலே, இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சனையை சமூகமாக தீர்ப்பதற்கு முன் வாருங்கள் என்று விஜய்க்கும், சீமானுக்கும் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் நீங்கள் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

கச்சதீவு விவகாரத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டதாக ஒருபோதும் வரலாறு இல்லை. உலகத்திலேயே தடை செய்யப்பட்ட, கடல்வளத்தை கருவறுக்கின்ற இரட்டை இழுவைமடி தொழிலைத்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் செய்கின்றனர்.

நீங்கள் இந்த இழுவைமடி தொழிலை நிறுத்திவிட்டு மாற்றுமுறை தொழிலை செய்யுங்கள். இதன்போது உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுக்கின்றோம்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. இலங்கையின் சட்டத்தின்படி, எல்லை மீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது வடக்கு கடற்றில் சமூகத்தின் தெளிவான நிலைப்பாடாகும். இழுவைமடி தொழிலை நிறுத்திவிட்டு சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் தொழில் செய்வது குறித்து சிந்திப்பதற்கு கடற்றொழில் சமூகம் தயாராக இருக்கின்றது.

இந்திய அரசாங்கம் இந்த விடயத்தை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும் என்பது எமது விருப்பம். அதைவிடுத்து வடக்கு மாகாண மக்களுக்கு சொந்தமான கச்சதீவு குறித்து அரசியல் மேடைகளில் பேசி மீனவர்களை தூண்டி விடுவது கண்டிக்கத்தக்கது. அதன் விளைவுகள் எதிர்காலத்தில் பாரதூரமாக இருக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/226902

'தேசிய மக்கள் சக்தி செயலால் நிரூபிக்கிறது; வட மாகாணத்தை அவர்களால் அபிவிருத்தி செய்ய முடியும்' - ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை

3 weeks 6 days ago

'தேசிய மக்கள் சக்தி செயலால் நிரூபிக்கிறது; வட மாகாணத்தை அவர்களால் அபிவிருத்தி செய்ய முடியும்' - ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை

Published By: Digital Desk 1

04 Oct, 2025 | 01:23 PM

image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் 'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டத்தின் கீழ் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு வீதிக்கட்டுமானத்தின் ஆரம்ப நிகழ்வு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் முதல் தடவையாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு என்பன குறிகாட்டுவானில் இன்று சனிக்கிழமை(04) காலை நடைபெற்றது.

இதன்போது ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் ஓர் விடயத்தைக் கூறுவார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தத்துறையின் அமைச்சராக இருக்கும்போது வடக்குக்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ளலாம். அமைச்சர் பிமல் ரத்நாயக்க எந்தத் திட்டம் வரும்போதும் அதில் வடக்கு மாகாணத்தையே முதன்மைப்படுத்துவார் என்று அவர் கூறுவார். அது உண்மை.

நான் யாழ்ப்பாண மாவட்டச் செயலராக இருந்தபோது குறிகாட்டுவான் வீதிப் புனரமைப்பு மற்றும் இறங்குதுறை புனரமைப்புக்கு கடுமையாக முயற்சித்தேன். ஆனால் அது கைகூடவில்லை. இப்போதுதான் சாத்தியமாகியிருக்கின்றது. இது மிகச் சிறப்பான தருணம். இந்த அரசாங்கம் சொல்லில் அல்ல செயலில் நிரூபித்து வருகின்றது. வடக்கு மாகாணத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன.

பல அமைச்சர்கள் வடக்கு மாகாணம் தொடர்பான விடயங்களை சாதகமாகவே அணுகுகின்றார்கள். அது வடக்கு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இவற்றுக்கு மேலாக, நெடுந்தீவு பிரதேசத்துக்கே உதவி அரசாங்க அதிபராக முதலில் நியமிக்கப்பட்டேன். அந்தப் பிரதேச மக்களின் வலிகள் தெரியும். அந்தப் பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது சிறப்பானது. இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், யாழ் மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடக்கு மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர்கள், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வீதி அபிவிருத்திப் பணி 299 மில்லியன் ரூபா செலவில் முதல் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதேநேரம், 800 மில்லியன் ரூபா செலவில் குறிகாட்டுவான் இறங்குதுறையும் மறுசீரமைக்கப்படவுள்ளது. 

அத்துடன், குறிகாட்டுவான் வரையிலான பிரதான வீதியில் 3.2 கிலோ மீற்றர் அடுத்த வருடம் புனரமைக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

01__1_.jpg

01__9_.jpg

01__10_.jpg

https://www.virakesari.lk/article/226871

புதிய அரசியலமைப்பு விரைவில் கொண்டுவரப்படும் - கடற்றொழில் அமைச்சர்

3 weeks 6 days ago

04 Oct, 2025 | 01:12 PM

image

புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - சங்கானையில் நிகழ்வு ஒன்றின் பின்னர் வெள்ளிக்கிழமை (03) ஊடகவியலாளர் ஒருவர் "புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக உங்களது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார்.

புதிய அரசியலமைப்பு சட்டம் எமது கொள்கை பிரகடனத்தில் இருக்கின்ற ஒரு விடயம். நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒருவருடம்தான் நிறைவடைந்துள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது மக்களுக்கு தெரியும். ஆனால் அரசியல்வாதிகள் தெரிந்தும் தெரியாதது போல நடிப்பார்கள்.

அந்தவகையில் புதிய அரசியலமைப்பு சட்டம் இந்த நாட்டு மக்களுடைய சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வகையில், நீண்டு நிலைக்கக்கூடிய ஒரு சட்டமாக விரைவில் கொண்டுவரப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/226869

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

4 weeks ago

04 Oct, 2025 | 02:17 PM

image

கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா  வந்தாறுமூலை வளாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பமானது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் ஆரம்பமான இப்பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளில் பிரதம அமைச்சரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி   பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டார்.

இப்பட்டமளிப்பு விழாவில் 1966 உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் வழங்கி உறுதிசெய்யப்படவுள்ளன.  

முதலாம் நாளின் சனிக்கிழமை (04)  முதலாவது அமர்வின் போது  சிவசுப்ரமணியம் பத்மநாதனுக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது. 240 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது அமர்வின் போது 345, மூன்றாவது அமர்வின் போது 400 பட்டதாரிகளுக்கும் முதுமாணி, இளங்கலைமாணி உட்பட விவசாயத்துறை, கலைத்துறை, வணிக முகாமைத்துவத்துறை மற்றும் அழகியல் கற்கைகள் துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானத்துறை மற்றும் சித்தமருத்துவத்துறைகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன.

இரண்டாம் நாள் (05) நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சிரேஸ்ட பேராசிரியர் கபில செனவிரட்ன  பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

இரண்டாம் நாளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் அமர்வுகளின்போது முறையே 261, 365, 355 பட்டதாரிகளுக்கும் வணிக முகாமைத்துவத்துறை,  தொழில்நுட்பத்துறை, அழகியல்கற்கைத்துறை, பிரயோக விஞ்ஞானத்துறை, தொடர்பாடல் முகாமைத்துவத்துறை, கலைத்துறை, மருத்துவத்துறை, வணிக முகாமைத்துவத்துறை ஆகியவற்றிலிருந்து உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களுக்கான பட்டங்கள்   வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது.

7__1_.jpg

16.jpg

6__2_.jpg

5__2_.jpg

3.jpg

https://www.virakesari.lk/article/226874

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் - பொலிஸ்

4 weeks ago

Published By: Digital Desk 1

04 Oct, 2025 | 10:02 AM

image

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பரவல் குறித்து பொலிஸாருக்கு நேரடி தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்களின் தொலைபேசி இலக்கங்கள் முன்னதாக, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.

சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்களின் கீழ் உள்ள மாவட்ட பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் கண்காணிப்பாளர்களின் தொலைபேசி இலக்கங்களும் நேற்று வெள்ளிக்கிழமை (03) வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றிற்கு தொடர்பினை ஏற்படுத்தி, போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்கலாம் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதில் பொதுமக்களின் ஆதரவு பெரிதும் பாராட்டப்படுவதாகவும், பொதுமக்களால் வழங்கப்படும் தகவல்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் பாடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/226852

Telephone Index

https://www.police.lk/?page_id=1301

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!

4 weeks ago

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து நேற்று பலமுறை பழுதடைந்து வீதியின் இடை நடுவில் நின்றததாக மக்கள்  விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்று(3) அதிகாலை கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து மருதங்ககேணியில் பழுதடைந்து காணப்பட்டது. பழுது நீக்கி மருதங்கேணியில் இருந்து புறப்பட்ட குறித்த பேருந்து ஆனது மீண்டும் இடை நடுவே பழுதடைந்துள்ளது.

பயணிகள் சிரமம்

பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது மீண்டும் அதே பேருந்து கேவில் நோக்கி நேற்று மாலை பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டது அதிகளவான பயணிகளை ஏற்றி வந்த குறித்த பேருந்து மீண்டும் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்துள்ளது.

இதனால் குடாரப்பு தொடக்கம் கேவில் வரை செல்ல வேவண்டிய பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 இரவு வேளையில் குழந்தைகளுடன் பலர் வீதியில் இருப்பதை காணக்கூடியதாக இருந்தது வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான வடமராட்சி கிழக்கு பகுதிக்கு சிறந்த தரமான ஒரு பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்! | Vadamaratchi East Push Broken Government Bus

அண்மையில் வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பாக பேசப்பட்டபோது 750. வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் நல்ல நிலையிலுள்ள பேருந்தை வடமராட்சி கிழக்கிற்க்கான சேவையிலீடுபடுத்துமாறு வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவரும் ஒருங்கிணைப்பு தலைவருமான றஜீவன் உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மக்களின் கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை இதனால் வடமராட்சி கிழக்கில் சேவையில் ஈடுபடும் அரச பேருந்துகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன.

 இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட வழிவகை செய்யுமாறு நாளை பருத்தித்துறைக்கு வரவிருக்கும் போக்குவரத்து அமைச்சர் கவனத்திற்கும் கொண்டு செல்லுமாறு வடமராட்சி கிழக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://tamilwin.com/

யாழ். இளைஞர்களை நேர்மை மற்றும் ஒழுக்கமிக்க நிலைமைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது ; ஸ்ரீ பவானந்தராஜா

4 weeks ago

04 Oct, 2025 | 11:38 AM

image

கல்வி, ஒழுக்கம், நேர்மை, கண்ணியம், உழைப்பு போன்றவற்றிற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு காலத்தில் பெயர் போனவர்கள். ஆனால் கடந்த ஆட்சிகளில் ஏற்பட்ட போதைப்பழக்கம், தொலைபேசி பாவனை காரணமாக இளைஞர்கள் திசைமாறி சீரழிந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்களை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்ன நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் - சங்கானை வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (03)  நடைபெற்ற நடைபெற்ற நல்லொழுக்க தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூக மாற்றங்கள் எவ்வாறு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று அனைவருக்கும் தெரியும். ஒழுக்கமின்மையே இதற்கெல்லாம் காரணம். ஒழுக்கமானது குடும்பத்தில் ஆரம்பித்து, பின்னர் கிராமத்திற்கு பரப்பப்பட்டு, அது நாடு நோக்கி நகர வேண்டும். பழைய அரசாங்கங்களின் செயற்பாடுகளால் அவை தலை மாறி போயிருக்கின்றன. 

கடந்த கால அரசாங்கத்தில் மதுபானசாலை அனுமதி பத்திரங்களை அரசியல்வாதிகள் பெற்று கிளிநொச்சியிலும் சரி யாழ்ப்பாணத்திலும் சரி மதுபானசாலைகளை திறந்து இருக்கின்றார்கள். சாப்பாட்டுக் கடைகளை விட மதுபானசாலைகளே அதிகமாக இருக்கின்றன.

பெரிய ஒரு அரசியல் கட்சியின் ஆதாரவாளர்கள் ஒரு போதைப்பொருள் தொழிற்சாலையையே உருவாக்கும் அளவிற்கு போதைப் பொருட்களை கொண்டு வந்து தெற்கில் வைத்திருக்கின்றார்கள். 

இதனைக் கடந்த அரசாங்கங்கள் கண்டும் காணாமல் தான் விட்டிருந்தன.  ஆனால் எமது ஜனாதிபதி இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்துள்ளார். 

இவ்வாறானவர்கள் உண்மையிலேயே 15-20 வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு கைது செய்யாமையால்தான் அவர்கள் போதைப் பொருட்களை வீடு வீடாக விநியோகிக்கும் அளவிற்கு திறமை பெற்றிருக்கின்றார்கள். 

ஒரு அரசாங்கத்திற்கு நிழல் அரசாங்கமாக செயல்படும் அளவிற்கு அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள். எனவே அவர்களை அடக்குவது எமது அரசாங்கத்தின் கடமை. அதனை நாங்கள் செய்வோம் என்றார்.

IMG-20251003-WA0046.jpg

IMG-20251003-WA0045.jpg

IMG-20251003-WA0049.jpg

IMG-20251003-WA0048.jpg

IMG-20251003-WA0047.jpg

https://www.virakesari.lk/article/226863

மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு! மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு!

4 weeks ago


மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு!

மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே, நேற்று (3) சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் வாகனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் செப்டம்பர் 24 அன்று தெரிவித்ததாகவும் கமகே மேலும் குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பயணிகள் வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த நிலைமை மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2025/1449531

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள்!

4 weeks ago

New-Project-54.jpg?resize=750%2C375&ssl=

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள்!

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகையானது 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என  தெரியவந்துள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடியபோது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

இலங்கை பெற்ற கடன்கள் குறித்து குழு விசாரித்தபோது, கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட பொதுக் கடன் மேலாண்மை அலுவலக அதிகாரிகள், 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது 19.6 டிரில்லியன் ரூபாய் வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறினர்.

அனைத்து கடன் வாங்கும் செயல்முறைகளும் தற்போது அரச கடன் மேலாண்மை அலுவலகத்தால் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றன.

நாட்டின் கடன் மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்த திறமையான அதிகாரிகளை நியமிப்பதன் முக்கியத்துவத்தையும் கோப் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதன்போது எடுத்துரைத்தார்.

https://athavannews.com/2025/1449528

17 ஆண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு!

4 weeks ago

me இலங்கை

17 ஆண்டு கால  ஆராய்ச்சியின் விளைவாக புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு!

17 ஆண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு!

சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

இந்த ஊட்டச்சத்து மருந்து, மூலக்கூறு உயிரியல் மற்றும் நெட்வொர்க் மருந்தியல் போன்ற நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி 05 மருத்துவ தாவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெர்னோனியா ஜெய்லானிகா, ( Vernonia zeylanica) நிஜெல்லா சாடிவா, (Nigella sativa) ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ், (Hemidesmus indicus) லூகாஸ் ஜெய்லானிகா (Leucas zeylanica) மற்றும் ஸ்மைலாக்ஸ் கிளாப்ரா (Smilax glabra) ஆகிய தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மருந்துகளின் கலவையானது புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடும் என்று பேராசிரியர் சமீரா ஆர். சமரக்கோன் உள்ளிட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1449481

ரணில் விக்ரமசிங்க வைத்துச் சென்ற கடன் பொறிக்குள் தற்போதைய அரசு சிக்கியுள்ளது - புபுது ஜயகொட

4 weeks ago

ரணில் விக்ரமசிங்க வைத்துச் சென்ற கடன் பொறிக்குள் தற்போதைய அரசு சிக்கியுள்ளது - புபுது ஜயகொட

04 Oct, 2025 | 04:11 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற  பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின்  கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தினால் உலகில் ஆகக்குறைவான கடன் குறைப்பு செய்த நாடு இலங்கை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை தெரிவித்திருக்கிறது. இலங்கைக்கு இதுதொடர்பில் ஆலாேசனை வழங்கிய அரசாங்கமும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை சர்வதேச நாணய நிதியம் சொல்வதால் அதனை செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்திருந்து. ஆனால்  இந்த நடவடிக்கையில் தலையிட்டிருந்த நாணய நிதியம் தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மிகவும் மோசமான முறையில் விமர்சித்திருக்கிறது. 

அதாவது 2028ஆகும்போது நாங்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் எனவும் நாங்கள் 2028இல் பாரியதொரு தொகை கடன் செலுத்த வேண்டி ஏற்படுகிறது. அதேநேரம் கடன் மறுசீரமைப்பு குறைகிறது. 2028இல் எங்களுக்கு கடன் மீள செலுத்த முடியாமல் போனால், எங்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை. கடன் குறைப்பும் வட்டியும் கணக்கிடப்படுவது, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று வருட சராசரிக்கு அமைவாகும் எனவும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க  (டைம் பாம்) நேரம்பார்த்து வெடிக்கும் குண்டுகளை புதைத்து விட்டுச்சென்றுள்ளதாக நாங்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தோம்.சில குண்டுகள் 2025 இறுப்பகுதியில் வெடிக்கும் வகையிலும் இன்னும் சில குண்டுகள் 2028இல் வெடிக்கும் வகையிலே புதைத்துள்ளார். இந்த டைம் பாம்களை எடுத்துக்கொண்டு விழுங்க வேண்டாம் என இந்த ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நாங்கள் தெரிவித்திருந்தோம்.

அதுமாத்திரமல்ல, எங்களுக்கு கடன்  செலுத்த முடியாமல் நாங்கள் நெருக்கடிக்குள்ளாகினாலும், வாக்குறுதியளித்த கடன் உரிமையாளர்களுக்கு கட்டாயமாக கடன் தவணைகளை செலுத்த வேண்டும் எனவும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது.அதனால்  கடன் செலுத்துவதற்கும் வட்டி செலுத்துவதற்கும் எங்களுக்கு கடன் பெறவேண்டி ஏற்படுகிறது. அதற்காக மக்களின் சொத்துக்கள் வளங்களை விற்பனை செய்தாவது பணம் தேட வேண்டிவரும்.

அதனால்  அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில், சர்வதேச நாணய நிதியம், ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ஷ்வினர் இணைந்து  பொறி ஒன்றை வைத்திருந்தனர். அந்த  பொறிக்குள் இந்த அரசாங்கம் அழகான முறையில் தற்போது மாட்டிக்கொண்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/226840

அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்!

4 weeks ago

அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்!

04 Oct, 2025 | 09:59 AM

image

அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக, தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(03) இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.  

அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக, வங்கி தனியார் மயப்படுத்தலை நோக்கி செல்லவுள்ளதாக போராட்டக்காரர்கள் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

20251003_190441.jpg

20251003_190441.jpg

20251003_190441.jpg


https://www.virakesari.lk/article/226851

யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

4 weeks ago

யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

04 Oct, 2025 | 10:59 AM

image

யாழ் மாவட்ட  பண்பாட்டுப்பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய யாழ்ப்பாண மாவட்ட  பண்பாட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றது.

யாழ். புனித யுவானியர் தேவாலய முன்றலில் இருந்து கலாசார ஊர்வலம் ஆரம்பமாகி மாவட்டச் செயலகத்தினை வந்தடைந்ததனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் கேட்போர் கூடத்தில் பண்பாட்டுப் பெருவிழா  நடைபெற்றது.

குழந்தை  ம.சண்முகலிங்கம் அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டுப் பெரு விழாவில், 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில்  - பிரதேசங்களுக்குரிய கலைஞர்களாலும், மாணவர்களாலும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

மேலும், "யாழ்ப்பாணம் - 4" (மரபுகளும் நம்பிக்கைகளும்) நூல் வெளியீட்டு விழாவும்  நடைபெற்றது.

தொடர்ந்து  நிகழ்வில் "யாழ் முத்து" விருது 15 கலைஞர்களுக்கும், இளங்கலைஞர் விருது 15 கலைஞர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில்  பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட ஓய்வு நிலை மாவட்ட செயலர் இமெல்டா சுகுமார் மற்றும் அவரது கணவர் கே. சுகுமார் ஆகியோரும்,  சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ரகுராம்,  வடக்கு மாகாண  பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப்பாளர்  தர்சினி நிதர்சனும்,  கெளரவ விருந்தினராக அளவெட்டி நாதஸ்வர கலாநிதி இரத்தினவேல் கேதீஸ்வரன் கலந்து கொண்டனர்.  

3__12_.jpg

3__16___1_.jpg

3__18_.jpg

3__21_.jpg

3__19___1_.jpg

3__3_.jpg


https://www.virakesari.lk/article/226859

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு

4 weeks ago

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு

04 Oct, 2025 | 10:00 AM

image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு எதிர்வரும் 08.10.2025 புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது. 

பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்த ஆய்வுமாநாட்டின் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

ஆய்வு மாநாடு கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ். சந்திரபோஸ் திறப்புரையினை ஆற்றவுள்ளார்.  

பல்கலைக்கழகங்களின் பிரதான பணிகளில் ஒன்றாக இருப்பது ஆய்வுச் செயன்முறையாகும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர்களும் கல்விசார் ஆய்வுகளில் சிரத்தையுடன் ஈடுபட வேண்டும் எனும் எதிர்பார்ப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

அதற்கமைய, பல்கலைக்கழக மாணவர்களும் பல்வேறு தடங்களில்  தமது ஆய்வு நாட்டத்தைக் காண்பித்து வருகிறார்கள். 

அந்தவகையில், கலைப்பீடத்தின் இளம் கலைமாணி ஆய்வு மாநாடு கடந்த நான்கு வருடங்களாக மிகச் சிறப்பாக நடைபெற்றுவந்தது.

இம்முறை நடைபெறும் ஐந்தாவது மாநாடு “வெவ்வேறு துறைகளை இணைத்து மாற்றங்களை வலுவூட்டுவதற்காக அறிவைச் செயற்படுத்துதல்” என்னும் தொனிப்பொருளோடு 16 ஆய்வுத் தடங்களில் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது. 

இளங்கலைமாணி கற்கையின் இறுதியாண்டில் மாணவர்கள் நிறைவுறுத்திய ஆய்வுகளின் அளிக்கையாக இம்மாநாடு அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/226849

’நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம்’ - சி.வி.கே.சிவஞானம்

4 weeks ago

’நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம்’ - சி.வி.கே.சிவஞானம்

அரசியலமைப்பில்  இருக்கும் 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்ய வேண்டும் என்று கேட்பதிலே சைக்கிள் கட்சியைத் தவிர நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய போதே சி.வி.கே.சிவஞானம் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் அதீத அக்கறை எடுக்க வேண்டும் என்று சொன்னாலும் அதில் மிக முக்கியமான பணி இந்தியாவுக்கு உண்டு. இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஊடாக அந்தப் பொறுப்புக் கூட இந்தியாவுக்கு இருக்கின்றது.

ஆனால், பொதுவாகவே இந்தியத் தரப்பு ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றது. அது என்னவென்றால் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதுதான். அண்மையில் கூட இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான சந்திப்பின் போது கூட நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றுதான் அவர்  சொல்லியிருக்கின்றார்.

உண்மையில் நாங்கள் ஒருமித்துதான் இருக்கின்றோம். உதாரணத்துக்கு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம். பிறகு ஏன் ஒற்றுமையாக வாருங்கள் என்று இந்தியா சொல்கின்றது?

ஆக நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம். அதைவிடுத்து விசுவாமித்திரருக்கு வரம் கொடுத்தது போல் கேட்கத் தேவையில்லை. நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தாலும் ஆக அந்தச் சைக்கிள் கட்சியினர்தான் இதற்கு உடன்படவில்லை. அவர்கள் உடன்படாமல் இருக்கட்டும்.

உலகத்தில் எங்கும் எல்லோரும் முழு ஒற்றுமை என்று கிடையாதே. அவர்களை விட்டால் நாங்கள் தமிழரசுக் கட்சி மட்டுமல்லாமல் ஏனைய எல்லாக் கட்சிகளும் ஒருமித்துத்தான் இருக்கின்றன என்றார். (a)

https://www.tamilmirror.lk/செய்திகள்/நாங்கள்-எல்லோரும்-ஒற்றுமையாக-உள்ளோம்/175-365699

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு உதவும் காவல்துறையினரின் தகவல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம்

4 weeks ago

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு உதவும் காவல்துறையினரின் தகவல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம்

adminOctober 3, 2025

Ilankumaran.jpg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் , கடத்தல்கள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவும்  காவல்துறையினர் தொடர்பிலான விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெறும் பகுதிக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினர்.

அதன் போது, தினசரி காவல்துறையினரின் உதவியுடனேயே இப்பகுதியில் இருந்து மணல் அகழ்வுகள் இடம்பெறுவதாகவும் , மணல் அகழ்வில் ஈடுபடும் நபர்களுடன் காவல்துறையினர் நல்லுறவில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

அதனை தொடர்ந்து , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

வடமராட்சி கிழக்கு பகுதியில் ஒரு சிலர் தொடர்ந்து சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குப் பிரதானமான காரணமாக இருப்பவர்கள் காவல்துறையினர். போதை பொருள் கடத்தல்காரர்களிடம், மணல் கடத்தல்காரர்களிடமும் லஞ்சம் வாங்கி விட்டு இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கிறார்கள்

காவல்துறையினர் உரிய முறையில் தமது கடமைகளை செய்திருந்தால் இந்த வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.  கடத்தல் சம்பவங்கள் ஊடாக ஒரு சிலர் அதிகளவான சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்திருக்கிறார்கள் அவர்களுடன் சில காவல்துறையினரும் அதிகளவான சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்

இது தொடர்பாக வடமராட்சி கிழக்கில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுபவர்கள், அவர்களுடைய பெயர் விபரங்கள், அவர்களுக்கு உதவி செய்யும் காவல்துறையினருடைய பெயர் விவரங்கள் யாவும் நாங்கள் எடுத்து, இந்த பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இதனை பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து அவர்களை விசாரணைக்கு அழைக்கும் போது இவர்கள் எவ்வாறு இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார்கள் என்பது தொடர்பில் அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்

முன்னைய அரசாங்கங்கள் போன்று இந்த அரசாங்கத்திலும் கடத்தல் சம்பவங்களை செய்துவிட்டு அல்லது அவர்களுக்கு உதவி செய்துவிட்டு தப்பி விடலாம் என்று நினைப்பது தவறானது.  இன்னும் மூன்று வருடங்களுக்குள் அனைவரையும் கைது செய்து சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக ஒழிப்போம். கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் அவர்களுக்கு துணை நிற்கும் காவல்துறையினரும் மிக அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/221083/

மன்னாரில் பொலிஸ் காவலில் நபரொருவர் உயிரிழப்பு

4 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 34 வயது நபர், இன்று (03) காலை தடுப்புக்காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருகையில்,

பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று (02) மாலை, போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ராஜேந்திரன் கபிலன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸார் அவரைத் துரத்திப் பிடித்த நிலையில், அவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட கபிலனை பொலிஸார் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர், பொலிஸ் நிலையத்தின் கூண்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், இன்று (03) காலை அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

இன்று காலை 6:30 மணியளவில், அவரது சடலம் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மதியம் 12 மணியளவில், மன்னார் நீதிமன்ற பதில் நீதிவான் ஜெபநேசன் லோகு, பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

அதன் பின், அவர் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கும் சென்று, பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தைப் பார்வையிட்டு விசாரணைகளைத் தொடர்ந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த நபரின் தாய், இன்று (03) காலை பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு வந்து, பொலிஸார் தனது மகனை அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

-மன்னார் நிருபர் லெம்பட்-

https://adaderanatamil.lk/news/cmgb3c26e00tco29nzci5q8wh

இலங்கையில் தினமும் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவு

4 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கையில் தினமும் சுமார் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35,000 புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர். இவர்களில் 35% (அதாவது, சுமார் 13,000 பேர்) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக அவர் கூறினார்.

கண்டி மாவட்டம், பொல்கொல்லவில் நேற்று (02) நடைபெற்ற நான்காவது ஆரோக்கிய நல மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வருடாந்த மருந்து செலவில் 30% புற்றுநோய் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும், இதைக் கட்டுப்படுத்த ஆரம்ப கட்டத்தில் நோயைக் கண்டறிவது ஒரே வழி எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

30 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களிடையே மரணத்திற்கு தொற்றாத நோய்கள் முக்கிய காரணமாகவும், அதே வயதுடைய பெண்களிடையே புற்றுநோய் முக்கிய காரணமாகவும் உள்ளதாக சுகாதாரத் தரவுகள் வெளிப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த நிலைமை மாறி வருவதாகவும், தொற்றாத நோய்களால் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மக்களின் உயிர்கள் இழக்கப்படுவது வருந்தத்தக்கது எனவும் அவர் கூறினார்.

இந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள், மக்களுக்கு சுகாதார ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்குவது மட்டுமல்லாமல், உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை சேவைகளையும் படிப்படியாக அறிமுகப்படுத்தும் என்றும், உடற்பயிற்சி, யோகா, இசை சிகிச்சை போன்றவற்றை உள்ளடக்கிய இடமாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmgavogg600smqplpggf8ww2q

இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும் - சிவஞானம் சிறிதரன்

4 weeks ago

Published By: Vishnu

03 Oct, 2025 | 08:08 PM

image

பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்துவருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை நிலைநாட்டும் வகையில் இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் ஓரங்கமாக நடைபெற்ற பக்க நிகழ்வில் உரையாற்றியபோதே சிறிதரன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;

சமாதானம் நிலவும் தற்காலத்திலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு குறித்த எனது நீண்டகாலக் கவலையை வெளிப்படுத்த விரும்புகிறேன். இத்தகைய பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் மனித உரிமைகளை ஒடுக்கக்கூடிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடுங்கோன்மையான விதிகளுக்குப் பலியாகி வருகின்றனர்.

தற்போது செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த நீதித்துறை விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி சாட்சியாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள், ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்படல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகிவருகின்றன.

நான் 2013 ஆம் ஆண்டு முதல் ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணைப்பொறிமுறையை நிறுவவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மேமாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் முறையான நிபுணத்துவம் உடையவர்களால் சுயாதீனமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

எனவே இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும் என்ற விடயம் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில் உள்வாங்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறேன். அத்தோடு இடைக்கால நீதிப்பொறிமுறையின் ஓரங்கமாக மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படவேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிக்கான அணுகலை மேற்கொள்வதற்கும், இழப்பீட்டைப் பெறுவதற்கும், விசாரணைகளில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்பதற்குமான வாய்ப்பு கிட்டவேண்டும். ஏனெனில் தமிழர் பகுதிகள் முழுமையாக இராணுவமயமாக்கப்பட்டிருப்பதனால், பாதிக்கப்பட்ட தரப்பினர் இலங்கை அரசாங்கத்தின் மீது அச்சம் கொண்டிருக்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்துவருகின்றனர். எனவே இவ்விவகாரத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/226833

யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!

4 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவமானது நேற்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர். இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் குறித்த மாணவி இதனை தெரிவித்துள்ளார்.

படுகாயம்டைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

https://adaderanatamil.lk/news/cmgb1vtva00soqplpq3rp82y3

Checked
Sat, 11/01/2025 - 17:30
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr