ஊர்ப்புதினம்

மன்னார் - வங்காலையில் கடலரிப்பு : கடல்நீர் கிராமங்களுக்குள் உட்புகும் நிலை : ரவிகரன் நேரடி விஜயம்!

3 months 2 weeks ago

28 MAY, 2025 | 10:45 AM

image

மன்னார் - நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் செவ்வாய்க்கிழமை (27) நேரடியாகச்சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் இடர்பாடுகளை கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறிப்பாக வங்காலை பகுதியில் கடலரிப்பு நிலமைகள் அதிகரித்துள்ளதால் கடல்நீர் கடற்கரையோர கிராமங்களுக்குள் உட்புகும் நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதிமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையிலேயே இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு இவ்விடயம் அப்பகுதி மக்களால் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் இவ்வாறு நிலமைகளை நேரடியாகச்சென்று பார்வையிட்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

ஏற்கனவே, கடலரிப்பைத் தடுப்பதற்கு வங்காலைப்பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டதைப்போன்று, ஆறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படவேண்டுமெனவும், இதன்மூலமே கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகுவதைத் தடுக்கமுடிவதுடன், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தடுக்கமுடியமென மக்களால் இதன்போது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கடலரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த சிக்கல் நிலமை தொடர்பில் உரிய தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசென்று, தடுப்பணை அமைப்பதுதொடர்பில் கவனம் செலுத்தப்படுமெனதெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20250527-WA0067.jpg

IMG-20250527-WA0125.jpg

https://www.virakesari.lk/article/215870

2021 உடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக உயர்வு!

3 months 2 weeks ago

New-Project-314.jpg?resize=750%2C375&ssl

2021 உடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக உயர்வு!

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு இந்த நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவு மிகக் குறைந்த அளவில் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த பணவீக்கத்தால் மக்கள் தற்போது பயனடைந்து வந்தாலும், 2021 உடன் ஒப்பிடும்போது நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2025/1433574

பெருமளவிலான போதைப்பொருட்களை கடத்திய இரு மீன்பிடி படகுகளுடன் 11 பேர் கைது

3 months 2 weeks ago

28 MAY, 2025 | 10:39 AM

image

தெற்கு கடற்பகுதியில், ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை கடத்திய இரண்டு மீன்பிடி படகுகளுடன் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மாத்தறை தெவுந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து 450 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/215871

திருகோணமலை மாநகர சபையின் மேயரை அறிவித்தது தமிழ் அரசுக் கட்சி

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

28 MAY, 2025 | 01:51 PM

image

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசுக் கட்சி அறிவித்துள்ளது.

திருகோணமலை தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

சபைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு குறித்த தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-05-28_at_1.26.17_PM.

திருகோணமலை முதலாவது மாநகர சபைக்காக தமிழ் அரசுக் கட்சி சார்பில் 9 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பாக 4 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் சார்பாக தலா 1 உறுப்பினர்களுமாக மொத்தமாக 25 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கு ஆட்சியமைப்பதற்கு 13 உறுப்பினர்கள் தேவைப்படுகின்ற நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கவுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் ஆதரவளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/215899

துப்பாக்கி கேட்ட அர்ச்சுனா – வேண்டாமென்ற சஜித்!

3 months 2 weeks ago

துப்பாக்கி கேட்ட அர்ச்சுனா – வேண்டாமென்ற சஜித்!

தனக்கு பாதுகாப்பு தேவையென எவரேனும் எம்.பி கோரிக்கை முன்வைத்தால் அது தொடர்பில் ஆராய்வதற்காக அந்த கோரிக்கையை தேசிய பாதுகாப்பு குழுவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது எம்.பிக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வேளையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர் தமக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியங்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்குவதற்கான வசதிகள் இல்லையென்றால் தனது பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள தனக்கு துப்பாக்கியொன்றை வழங்குமாறும் கோரியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவவர், ஜனநாயகம் உள்ள நாட்டில் பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கப்படக் கூடாது என்றும், அதிகாரிகளாலேயே அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேவண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைத்த பின்னர் சில எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எம்.பி.க்களின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தனக்குத் தெரிவிக்குமாறு சபாநாயகரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கலந்துரையாடலின் போது நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்வேளையில் நாட்டில் இடம்பெறும் கொலை மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் போதைப் பொருள் வர்த்தகர்களிடையே இடம்பெறும் மோதல்களுடன் தொடர்புடையவை என்றும், சில சம்பவங்களில் பிரதேச அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.samakalam.com/துப்பாக்கி-கேட்ட-அர்ச்சு/

கடந்த ஆட்சியில் இருந்த 40 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை - விமல் வீரவன்ச

3 months 2 weeks ago

Published By: VISHNU

28 MAY, 2025 | 03:19 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 40பேரை கைதுசெய்து சிறையில் அடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது சிறையில் இருப்பவர்கள் சிலரும் அந்த பட்டியலில் இருக்கின்றனர் என தேசிய சுதந்தி முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றின் பாேதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச நிறுவனங்களின் அதிகாரிகளை கைதுசெய்து சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் அந்த அரசாங்கத்தில் இந்த நடவடிக்கையை அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவருடன் இருந்தவர்களே மேற்கொண்டுவந்தனர்.

உர கப்பல் ஒன்றுக்கு பணம் செலுத்தியதாக தெரிவித்து அரச அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவை கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். இவ்வாறு செயற்பட்டால் அரச இயந்திரம் செயலிழந்துவிடும்.

அரச அதிகாரிகள் எந்த தீர்மானங்களையும் எடுக்காமல்போகும் நிலை ஏற்படும். தீர்மானம் எடுத்தால் சிறைக்கு செல்ல நேரிடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படும்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு 29ஆம் திகதி வருமாறு எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில், வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள், மாலிகாவத்தையில் இடிந்துவிழும் நிலையில் இருந்த கடைத்தொகுதி ஒன்றை அதிகாரசபையின் நிதி மூலம் அதனை செப்பனிட்டு, அதனை வாடகைக்கு வழங்க கேள்விகோரல் விடுத்திருக்கின்றனர்.

யாரும் வராதநிலையில் அதில் விலை குறைப்பு மேற்கொண்டு மீண்டும் கேள்விகோரலுக்கு விட்டபோது ஒருவர் அதனை வாங்கி இருக்கிறார். இதற்கான அனுமதி அப்போது இருந்த குழுக்களின் அனுமதியை பெற்றுக்கொண்டு, இறுதியாக பணிப்பாளர் சபை, அதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது.

இதற்கும் அமைச்சருக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் வீடமைப்பு அதிகாரசபையின் நடவடிக்கையால் அரசாங்கத்துக்கு நட்டமடைந்துள்ளதாகவும். அப்போது இந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் இதுதொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்காெள்ள வருமாறு அழைப்பு வந்திருக்கிறது.

எப்படியாவது எம்மை சிக்க வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பழைய விடயங்களை அரசாங்கம் கிழறிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு கைதுசெய்வதற்கு 40பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதில் தற்போது செயற்பாட்டு அரசியலில் இருப்பவர்களும் இ்ல்லாதவர்களும் அடங்குகின்றனர். அந்த பட்டியலில் தற்பாேது கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் சிலரும் அடங்குகின்றனர். அதேபோன்று முன்னாள் அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரண ஆகியோரின் பெயர்களும் உள்ளடங்குகின்றன.

நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் நாயகம் அடிக்கடி ஜனாதிபதி செயலகத்துக்கு சென்று அதுதொடர்பில் ஆலாேசனை கேட்டுவருகிறார். ஜனாதிபதி செயலகத்திலே இந்த பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு வாக்குகள் குறைவடைய காரணம் திருடர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியமையாகும் என்றே இவர்கள் நினைக்கின்றனர். அதனடிப்படடையிலே தற்போது 40பேரை கைதுசெய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/215862

விரைவாக புனரமைக்கப்படும் கடவுசீட்டு அலுவலகம்!

3 months 2 weeks ago

விரைவாக புனரமைக்கப்படும் கடவுசீட்டு அலுவலகம்!

adminMay 28, 2025

01-1.jpg?fit=1170%2C878&ssl=1

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வரும் கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய தினம் (27.05.25) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சகிதம் பார்வையிட்டார்.

இதன் போது இதுவரை நடைபெற்ற வேலைகளின் முன்னேற்றத்தினை அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

மேலும், கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அமைக்கப்படவுள்ள கொட்டகை மற்றும் கடவுச்சீட்டு அலுவலகத்தில் கடமையாற்றவுள்ள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி விபரங்களை அமைச்சரிற்கு மாவட்ட செயலர் எடுத்துக்கூறினார்.

https://globaltamilnews.net/2025/216069/

போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்வு!

3 months 2 weeks ago

போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்வு!

adminMay 28, 2025

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதியை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுன்னாகம் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவரது உடைமையில் இருந்து 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை போதை பொருளை விற்பனை செய்யும் நோக்குடன் தான் உடைமையில் வைத்திருக்க வில்லை எனவும், தனது சொந்த பாவனைக்காகவே வைத்திருப்பதாக கூறியுள்ளார்

அதனை அடுத்து அவரை காவற்துறையினர் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை குறித்த யுவதி போதைக்கு அடிமையானவர் என உறுதிப்படுத்தப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் மருத்துவ அறிக்கையுடன், யுவதியை காவற்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (27.05.25)  செவ்வாய்க்கிழமை முற்படுத்திய வேளை , யுவதியை எதிர்வரும் 06 மாதங்களுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2025/216074/

தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குக: அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை

3 months 2 weeks ago

Published By: VISHNU

28 MAY, 2025 | 03:01 AM

image

ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் செவ்வாய்க்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அரசாங்க மாற்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரையிலான தற்போதைய தமிழ் அரசியல் குறித்து உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான நிலப் பிரச்சினைகள், வடக்கு மாகாணத்தில் சுமார் 6000 ஏக்கர் கடலோர நிலங்களை அரசு நிலங்களாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்பு குறித்தும், தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வாக வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்கள், காவல்துறை மற்றும் நிதி ஆகியவற்றில் மீளமுடியாத அதிகாரங்களைக் கொண்ட சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு நிறுவப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், அவரது துணைவியார் கிரிட்டினா ஸ்டீபன்ஸ், திட்ட ஒத்துழைப்புக்கான முதல் செயலாளர், திருமதி ஜோ கிட், அரசியல் துறைக்கான இரண்டாவது செயலாளர் திரு. மேத்யூ லார்ட் மற்றும் மூத்த ஆராய்ச்சி அதிகாரி திரு. சில்வெஸ்டர் வொர்திங்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/215859

வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு தெற்கில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது!- வட மாகாண ஆளுநர்

3 months 2 weeks ago

download-8.jpg?resize=750%2C375&ssl=1

வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு தெற்கில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது!- வட மாகாண ஆளுநர்

அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பாதைகள் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள்  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு கவலையுடன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதித் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தின் நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது  யாழ். மாவட்டத்தில் காணப்படும்  குடிநீர் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கடல் நீரை சுத்திகரிக்கும் செயற்றிட்டத்தின் ஊடாக குடிநீர் வழங்கல் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கு அதிகளவில் செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி யாழ்ப்பாணத்தில் முக்கியமானதாக மாறிவரும் நிலையில் கழிவு நீர் சுத்திகரிப்பு பொறிமுறை இங்கு  இல்லை என்றும் இதன் காரணமாக பல சவால்களை  மக்கள் எதிர்கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

அத்துடன் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய இரண்டு துறைகளினதும் உற்பத்திப் பொருட்கள் அப்படியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் அவற்றை முடிவுப்பொருட்களாக்கி ஏற்றுமதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர்  வலியுறுத்தியிருந்தார்.

https://athavannews.com/2025/1433494

பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது – பிரதமர்

3 months 2 weeks ago

New-Project-298.jpg?resize=750%2C375&ssl

பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது – பிரதமர்

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது.

அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்களை தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

பிள்ளைகள் ஒரு அரசின் அடிப்படை பொறுப்பாகும். இலங்கை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளதன் ஊடாக சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கும், அவர்களின் உச்சகட்ட நலனிற்காக செயற்படுவதற்கும் கடமைப்பட்டுள்ளது.

இதனூடாக குறித்த பொறுப்பு அரசிற்கும், பாடசாலை கட்டமைப்புக்கு பொறுப்பாக செயற்படும் அரச பிரதிநிதிகளான அனைத்து அதிகாரிகளுக்கும் உள்ளது.

அண்மைக்காலமாக பதிவாகும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை கண்ணோக்கும் போது, பாடசாலை கட்டமைப்பிற்குள் சிறுவர்கள் முகம்கொடுக்க நேரிட்டுள்ள துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

எனினும் வீடு உட்பட பாடசாலையும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மற்றும் பொருத்தமான சூழலாக அமைய வேண்டுமென சுட்டிக்காட்டிய பிரதமர், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றனர்.

இதனால் பாடசாலை சூழல் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

பாடசாலை கட்டமைப்பிற்குள் பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறும் எந்த வகையிலான சித்திரவதையும் தொடர்ந்தும் இடம்பெறக்கூடாதெனவும், பாடசாலைக்குள் பிள்ளை முகம்கொடுக்கும் உடல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், வேறு வகையிலான புறக்கணிப்பு, உள ரீதியான துஷ்பிரயோகம் என எதுவாக இருந்தாலும் அதனை மறைத்து அல்லது புறக்கணிப்பு செய்வதை மேற்கொள்ளக் கூடாது.

அது மறைப்பதற்கு அல்லது புறக்கணிப்பதற்கான விடயம் அல்ல. பாடசாலையின் பிரதான அதிகாரம்மிக்க நபராக பாடசாலை அதிபரினால் அவை குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறான செயற்பாடுகளை அலட்சியப்படுத்துவது முழு பாடசாலை கட்டமைப்பும் தோல்வியடைவதற்கு காரணமாக அமைகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மிக விரைவாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பதிலளிப்பு தாமதமடையும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்கு முகம்கொடுத்த பிள்ளை உடல், உள ரீதியாக வழமைக்கு திரும்ப முடியாத அளவிற்கு பாதிப்பை எதிர்கொள்ளும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் துரித தலையீடு செய்வதன் ஊடாக உயிரைக் காப்பாற்றுவதற்கும், சுய கௌரவத்தை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையிலுள்ள ஏனைய அதிகாரிகள் சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையிலுமான வன்முறைகளை அடையாளம் காண்பதற்கும், தடுப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும் தேவையான அறிவு மற்றும் அது தொடர்பில் செயற்படுவதற்கு தேவையான வழிமுறைகள் குறித்தான அறிவைக் கொண்டிருப்பதும் மிக முக்கியமானது.

தொடர்ச்சியாக பிள்ளைகளுடன் தொடர்புபடும் உங்கள் அனைவரும் சிறுவர் உரிமைகள் தொடர்பிலும், சட்டரீதியிலான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் அறிந்திருத்தல் வேண்டும். சிறுவர் உள்ளங்களை புரிந்துகொள்வதற்கும், சிறுவர்களுடன் சரியான முறையில் செயற்படுவதற்கும் உதவும் சிறுவர் உளவியல் கல்வியை பெற்றிருப்பதும் மிகவும் முக்கியமானது.

சிறுவர்களுக்குள் ஏற்படும் அழுத்தங்களை அடையாளம் காண்பதற்கும், சிறுவர்களுக்குள் ஏற்படும் அதிருப்தி அவர்களின் கற்றல் செயற்பாடுகளை பாதிக்கும் விதத்தை புரிந்துகொள்வதற்கும் சிறுவர்களுடன் மிகவும் நெருக்கமாகவும் கருணையுடனும் பழகி அவர்களுக்கு பதிலளிப்பதற்கு கல்வித் துறையில் சேவையாற்றும் அதிகாரிகள் பயிற்சிகளைப் பெற்றிருப்பது உட்பட தேவையான சந்தர்ப்பங்களில் குறித்த அறிவைப் பயன்படுத்துவதும் மிகவும் முக்கியமானது.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அரசின் வளமான நாடு – அழகான வாழ்க்கை கொள்கை பிரகடனத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்து வகையிலான சித்திரவதைகளிலிருந்து அவர்களை பாதுகாப்பது அதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் நீதிபதி எல்.டீ.பீ.தெஹிதெனிய, இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் நிமல் ஜீ புஞ்சிஹேவா, ஆணையாளர் பேராசிரியர் டீ.தனராஜ், மேல் மாகாண கல்வி செயலாளர் நிஷாந்தி ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் அதிபர்களும் கலந்துகொண்டனர்.

https://athavannews.com/2025/1433466

யாழ். மாவட்ட சுற்றுலாத்துறை, கழிவகற்றல் முகாமைத்துவம், பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி குழுவினருடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்

3 months 2 weeks ago

27 MAY, 2025 | 03:10 PM

image

யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை, கழிவகற்றல் முகாமைத்துவம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி குழுவினருடனான விரிவான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (26) பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார அபிவிருத்தி உட்கட்டுமானம் மற்றும் சுற்றுலாத்துறைகளை விருத்தி செய்வது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் உலக வங்கி கடந்த இரண்டு மாதங்களாக பொருத்தமான திட்டங்கள் தொடர்பில் களத்தரிசிப்புக்கள் செய்து ஆராய்ந்து அடிப்படைத் தரவுகளை பெற்றிருந்தது.

IMG-20250527-WA0005.jpg

இதன் இறுதி அங்கமாக துறை சார்ந்து காணப்படும் அபிவிருத்தி தேவைப்பாடுகள், தடைகள், அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து திட்டங்களை நிச்சயப்படுத்தும் வகையில் கடந்த மூன்று தினங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினம் உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி, செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் மற்றும் உலக வங்கியின் ஏனைய பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியதுடன், தொடர்ந்து துறைசார் திணைக்களங்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

IMG-20250527-WA0013.jpg

இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபரால் மாவட்டத்தின் விவசாயம், மீன்பிடி அபிவிருத்திக்கான தேவைகள், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை கைத்தொழில் வலயத்துக்கான புதிய முதலீடுகள், யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்தல், சரசாலை மற்றும் மண்டைதீவு சிறுதீவுப் பகுதிகளை சூழல்சார் சுற்றுலா மையங்களாக மாற்றுதல், நெடுந்தீவினை சுற்றுலா நோக்கில் முழுமையான அபிவிருத்தி கொண்ட தீவாக மாற்றுதல் போன்ற விடயங்களுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச ரீதியாக டிஜிட்டல் அடிப்படையிலான வானிலை அவதானிப்பு நிலையங்களை நிறுவுதல் போன்றவற்றுக்கான நிதி தேவைப்பாடு குறித்து எடுத்துக்கூறப்பட்டது.

மேலும், மீன்பிடி படகுத்தள அபிவிருத்தி, போதைவஸ்து பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாகாண ரீதியான புனர்வாழ்வு நிலையம், உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாகாண ரீதியான காப்பகம் மற்றும் யாழ்ப்பாண நகர அபிவிருத்தி வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி, கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம், கழிவகற்றல் முகாமைத்துவம் போன்ற விடயங்களுக்கான அவசியப்பாடு பற்றி உலக வங்கி பிரதிநிதிகளிடம் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

IMG-20250527-WA0018.jpg

இக்கலந்துரையாடலின் இறுதியில் பின்வரும் செயற்றிட்டங்கள் முன்னுரிமையாகவுள்ளதாக உலக வங்கி குழுவினரிடம் முன்வைக்கப்பட்டது.

1. யாழ்ப்பாண நகர வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி

2. கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம்

3. மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைக்கும் செயற்றிட்டம்

4. யாழ் நகர திண்மக்கழிவு முகாமைத்துவம்

5. யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்தல்

6. யாழ்ப்பாண மாவட்டத்தில் மீன்பிடி படகுத்தளம் மற்றும் மீன்பிடி துறைமுக அபிவிருத்தி

7. அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான புதிய முதலீடுகள்

8. உள்ளூராட்சி சபைகளின் திண்மக்கழிவு முகாமைத்துவம்

IMG-20250527-WA0006.jpg

இக்கலந்துரையாடலின்போது, உலக வங்கியின் செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் செயற்றிட்ட தலைவர் ஆகியோர் அரசாங்க அதிபரால் முன்னுரிமைப்படுத்தி முன்வைக்கப்பட்ட செயற்றிட்டங்களை கருத்தில் கொள்வதாகவும், இச்செயற்றிட்டங்கள் தொடர்பான திட்டங்கள், செயற்றிட்ட முன்மொழிவுகள் மற்றும் சாத்தியப்பாட்டு அறிக்கைகள் போன்றவற்றை விரைவில் சமர்ப்பிக்குமாறும் கோரியிருந்தனர்.

இந்த கலந்துரையாடலின் இறுதியில் யாழ்ப்பாண பழைய கச்சேரி வளாகத்துக்கு உலக வங்கிக் குழுவினரை அரசாங்க அதிபர் அழைத்துச் சென்றதையடுத்து, புனரமைப்பின் அவசியம் தொடர்பில் நேரடியாக குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர், மாநகர சபை பிரதம பொறியியலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி மற்றும் உதவிப் பணிப்பாளர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், கைத்தொழில் அதிகார சபையின் மாகாண பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் சுற்றுலா துறைசார் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

IMG-20250527-WA0015.jpg

IMG-20250527-WA0014.jpg

IMG-20250527-WA0007.jpg

https://www.virakesari.lk/article/215817

அரச சேவையில் 15,073 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்

3 months 2 weeks ago

27 MAY, 2025 | 02:33 PM

image

(எம்.மனோசித்ரா)

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள், 4 மாகாண சபைகள் மற்றும் 2 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சிற்காக ஆசிரியர் பற்றாக்குறைக்காக 199 நியமனங்கள், சப்ரகமுவ மாகாணத்துக்கு ஆசிரியர் பற்றாக்குறைக்காக 3661 நியமனங்கள் உட்பட சுமார் 6000 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் பொது நிர்வாக அமைச்சின் கீழ் 1658 நியமனங்களும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு மற்றும் தபால் சேவை என்பவற்றுக்கு சுமார் 300 நியமனங்களும் வழங்கப்படவுள்ளன.

இவற்றை உள்ளடக்கி 15,073 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/215809

பெய்ஜிங்கின் முக்கிய செய்தியுடன் இலங்கை வரும் சீன அமைச்சர் தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு

3 months 2 weeks ago

25 MAY, 2025 | 10:01 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு புதன்கிழமை (28) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறது.

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய பொருளாதார முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையிலேயே உயர்மட்ட பிரதிநிதிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்வதாக தெரிவித்தள்ள சீன தரப்பு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் பொருளாதார வர்த்தக துறைசார்ந்த பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலங்கை - சீன வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்தின் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்ப விருந்தினராக பங்கேற்கும் சீன வர்த்தக அமைச்சருடன், 77 சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 115 வர்த்தக பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டின் ஊடாக இருதரப்பு வணிக உறவுகளை வலுப்படுத்தவும், வணிகப் தொடர்புகளை எளிதாக்கவும், மேலும் பல்வேறு துறைகளில் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வழிகளை அடையாளம் காணவும் முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த விஜயத்தில் இரு நாடுகளுக்க இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முக்கியத்தவம் பெறுகிறது. ஏனெனில் இலங்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டும் என்பது சீனாவின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால் பிராந்தியத்தின் வணிக இராஜதந்திரம் சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு தொடர்ந்தும் சவால்களை ஏற்படுத்துவதாக உள்ளது. வரி கட்டண அளவீடுகள் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கலின் அளவு குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக ஆறு சுற்றுகளுக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முடங்கின.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது முன்னெடுக்கப்பட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்ய ஒப்புக்கொண்டாலும், இந்த விடயத்தில் அரசாங்கம் இறுதி முடிவை எடுக்க வில்லை.

இவ்வாறானதொரு நிலையிலேயே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான பெய்ஜிங்கின் முக்கிய செய்தியுடனேயே சீன அமைச்சர் இலங்கை வருகிறார்.

https://www.virakesari.lk/article/215610

கடலோர இரவுப் பொழுது: உறங்காத கொழும்பு கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

3 months 2 weeks ago

கடலோர இரவுப் பொழுது: உறங்காத கொழும்பு கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. 

அதற்கமைய, ‘கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு’  தொனிப்பொருளின் கீழ் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவல வரைக்குமான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அதில் காலி முகத்திடல் தொடக்கம் புனித தோமஸ் ஆரம்ப பாடசாலை வரைக்கும் 400 மீற்றர் தூரமான வலயத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318449

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் 'சிவப்பு' எச்சரிக்கை

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

27 MAY, 2025 | 02:20 PM

image

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிவப்பு எச்சரிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் 12:30 மணிமுதல் புதன்கிழமை (28) பிற்பகல் 12:30 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அ ம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரப் பகுதிகளில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், சில நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரக் கடல் பகுதிகளிலும் அலைகளின் உயரம் (சுமார் 2.5 மீ - 3.0 மீ) அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

500603225_1015582410762240_5309645714020

https://www.virakesari.lk/article/215810

இலங்கை தமிழரசுக் கட்சி , ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

3 months 2 weeks ago

27 MAY, 2025 | 12:56 PM

image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான பல நிபந்தனைகளுடன்கூடிய ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (27) திருகோணமலையில் உள்ள தமிழரசுக்கட்சி காரியாலயத்தில் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் திருகோணமலை தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்தௌபீக் மற்றும், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக திருகோணமலை மாவட்ட குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

குறித்த ஒப்பந்தத்தில் மூதூர் பிரதேச சபை மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றில் இரு கட்சிகளும் தலா இரண்டு வருடங்களை பகிர்ந்து கொள்வதெனவும், மூதூர் பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியை வழங்குவது எனவும் இறுதி இரண்டு வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியையும் வழங்குவது என இணங்கிக் கொண்டுள்ளனர்.

அதேபோன்று குச்சவெளி பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்; உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியை வழங்குவது எனவும் இறுதி இரண்டு வருடங்களுக்கு ஸ்ரீ தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு தவிசாளர் பதவியையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு உப தவிசாளர் பதவியையும் வழங்குவது எனவும் இணங்கி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுக் கொண்டனர்.

இதைவிட திருகோணமலை மாநகரசபை, நகரமும் சூழலும் பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்; ஆதரவு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2025-05-27_at_11.46.10.jp

WhatsApp_Image_2025-05-27_at_11.46.09.jp

WhatsApp_Image_2025-05-27_at_11.46.08__1

WhatsApp_Image_2025-05-27_at_11.46.08.jp

https://www.virakesari.lk/article/215799

நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருவிழா காளாஞ்சி கையளிக்கப்பட்டது

3 months 2 weeks ago

27 MAY, 2025 | 02:05 PM

image

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சியை ஆலய சம்பிரதாய முறைப்படி ஆலய கணக்குப்பிள்ளை யாழ். மாநகர சபையினருக்கு இன்றைய தினம் (27) வழங்கிவைத்தார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவப் பெருவிழாவுக்கான ஆலயச் சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதித் தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்குப்பிள்ளையால் கையளிக்கப்பட்டது.

இதன்போது பாரம்பரிய முறைப்படி யாழ். மாநகர சபை வளாகத்தில் வாழை, தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

DSC_5406.jpg

DSC_5405_copy.jpg

DSC_5416.jpg

DSC_5421.jpg

DSC_5427.jpg

DSC_5425.jpg

DSC_5431.jpg

DSC_5444.jpg

https://www.virakesari.lk/article/215805

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பில் புதிய சட்டம் - அரசாங்கம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

27 MAY, 2025 | 01:40 PM

image

(எம்.மனோசித்ரா)

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக வினைத்திறனான சட்டரீதியான ஒழுங்குமுறையை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பணத் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய – பசுபிக் வலயத்தின் உறுப்பினர் என்ற ரீதியில் நிதிச் செயற்பாட்டு செயலணியால் தயாரிக்கப்பட்ட நிதித் தூய்மையாக்கல், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் விரிவாக்க நிதியிடலுக்கு எதிராக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தராதரங்களை பயனுள்ள வகையில் அமுல்படுத்துதல் மற்றும் வலுவுறுத்தலுக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

மேலும், குறித்த செயலணியின் உறுப்பு நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ற வகையில் நிதி செயற்பாட்டு செயலணியின் தராதரங்களுக்கு ஏற்புடையதான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை 'பரஸ்பர மதிப்பீடு' எனும் பெயரில் அழைக்கப்படும் பரஸ்பர சமமான மீளாய்வு செயன்முறைக்கு இலங்கை உட்படுகிறது.

இலங்கை தொடர்பான 3 ஆவது மதிப்பீட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டத்துக்கு அமைய வெளிவிவகார விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்மொழிவை 2178 (2014) விரைவாக பிரகடனப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு சட்டத்தை வகுப்பதன் மூலம் மேற்குறித்த முன்மொழிவின் ஏற்பாடுளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

அதற்கமைய, 2026 மார்ச் மாதத்துக்கு முன்னர் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பான சட்டத்தை தயாரிக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. எனவே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை முன்மொழிவின் 2178 (2014) அடிப்படையில் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மறறும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

https://www.virakesari.lk/article/215804

வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்

3 months 2 weeks ago

Gazzeet_1200px_22_12_06.jpg?resize=750%2

வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்.

வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28,  அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 வெளியிடப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்த போதிலும் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, இந்த வர்த்தமானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

வடக்கில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு அந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433387

Checked
Mon, 09/15/2025 - 22:38
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr