ஊர்ப்புதினம்

இலங்கையில் கனமழை: கொழும்பு உள்பட பல இடங்களில் வீடுகள் சேதம் - மின்சாரம், ரயில் சேவை பாதிப்பு

3 months 2 weeks ago

கடும் காற்றுடனான வானிலை

படக்குறிப்பு,கடும் காற்றுடனான வானிலை காரணமாக மின்சார கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன

30 மே 2025, 08:59 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் கடும் காற்றுடனான வானிலை காரணமாக தலைநகர் கொழும்பு உள்பட பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகள் சேதமடைந்தன. மோசமான வானிலை நீடிப்பதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. ரயில் சேவையும் பல இடங்களில் தடைபட்டுள்ளது.

கொழும்பு நகரில் வீடுகள் சேதம்

இலங்கையில் கடந்த ஓரிரு தினங்களாகவே பல்வேறு பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காற்று வீசி வருகின்றது. இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் வீசிய கடும் காற்று காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு கடும் காற்றுடனான வானிலை நிலவியிருந்தது. கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதி முதல் வெள்ளவத்தை பகுதி வரையான கரையோர பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வீசிய கடும் காற்றுடனான வானிலை கரணமாக மரங்கள் முறிந்து வீழந்திருந்ததுடன், பல கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் வீசிய கடும் காற்றுடனான வானிலை காரணமாக பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இந்த மரம் முறிந்து வீழ்ந்ததில் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். மரம் முறிந்து வீழ்ந்தமையினால் எவருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

கொழும்பு - தெமட்டகொடை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மதில் சுவரொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. நேற்றிரவு பெய்த கடும் மழையுடன் கூடிய கடும் காற்று காரணமாகவே இந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் காற்று

படக்குறிப்பு,கடும் காற்றுடனான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன

கண்டியில் தாய் - மகள் காயம்

கண்டி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது தொலைத்தொடர்பு கோபுரமொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த வீட்டில் வசித்து வந்த தாய் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

அவிசாவளை - தெரணியகலை பகுதியில் மரமொன்று வீடொன்றின் மீது முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் காயமடைந்த மூவரும் தெரணியகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் கவலைக்கிடமான நிலையிலிருந்த சிறுமியொருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புத்தளம் - ஆனைமடு பகுதியில் போலீஸ் நிலையத்தின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, போலீஸ் நிலையத்தின் கட்டடத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 50 வருடம் பழைமையான மரமொன்றே இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை

படக்குறிப்பு,வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை

ரயில் சேவைகளில் பாதிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் கடும் காற்றுடனான வானிலை காரணமாக, ரயில் மார்க்கங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. இதனால், பல ரயில் மார்க்கங்களின் ஊடாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புத்தளம் ரயில் மார்க்கத்தின் ஊடாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

வதுரவ மற்றும் கீனவல ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, அந்த ரயில் மார்க்கத்தின் ஊடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மரம் முறிந்து வீழந்தமையினால், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் தடை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசிய வரும் கடும் காற்றுடனான வானிலை

படக்குறிப்பு,நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசிய வரும் கடும் காற்றுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் வீசி வரும் கடும் காற்றுடனான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

கடும் காற்றுடனான வானிலை காரணமாக மின்சார கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்தே இவ்வாறு மின்சாரம் தடைபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

தடைபட்டுள்ள மின்சாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை குறிப்பிடுகின்றது.

இன்றைய வானிலை

கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு கடும் காற்றுடனான வானிலை நிலவியிருந்தது

படக்குறிப்பு,கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு கடும் காற்றுடனான வானிலை நிலவியிருந்தது

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்றைய தினம் இடைக்கிடை கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

மேல், சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் 100 மில்லிமீட்டருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

வடமத்திய மாகாணம், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றைய தினம் இடைக்கிடை மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் வேகமானது, 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தை அடுத்து, பொதுமக்களை அவதானித்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8jgw401yxwo

மாணவர்களுக்கு சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்க ஆரோக்கிய சூழல் அவசியம்; வைத்தியர் ஜே. மதன்

3 months 2 weeks ago

30 MAY, 2025 | 11:50 AM

image

ஆரோக்கியமற்ற நிலைமைகள் காரணமாக சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நமது மாணவர்கள் ஆரோக்கியமான சூழலை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படல் காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளை கண்காணிக்க சென்ற வேளை மாணவர்கள் பாடசாலையிலுள்ள கழிவறைக்குச் செல்ல ஆர்வம் காட்டாமல் இருப்பதை அறியக்கிடைத்தது.

அசுத்தமான மற்றும் துர்நாற்றம் வீசும் கழிவறைகளே இதற்கு முக்கிய காரணம்.

மலசல கூடங்களை சுத்தப்படுத்த ஆளனிப்பற்றாக்குறை மற்றும் அதற்கான போதிய நிதி உதவியின்மை போன்ற குறைகள் உள்ளன.

இதனால் மாணவர்கள் கழிவறைக்குச் செல்ல தயங்குவதுடன் சிறுநீரை வெளியேற்றாமல் வைத்துக்கொள்ள பழகிக் கொள்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு, சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்பட வழிவகுப்பதோடு பல நடத்தைப் பிரச்சினைகளுக்கும் ஆளாக நேரிடும்.

இப்பிரச்சினைகள் மிகவும் அவசரமாக பரிசீலிக்கப்பட வேண்டியதுடன் ஆரோக்கியமற்ற நிலைமைகள் காரணமாக சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நமது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படல் காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.

இதுகுறித்து பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பெற்றோர்கள் கவனம் செலுத்தி அதிபருடன் கலந்துரையாடி துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மாணவர்களின் சிறுநீரக நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை என்றார்.

r3.jpg

r1.jpg

https://www.virakesari.lk/article/216060

யாழில் பிறப்பு வீதம் அதிகரிப்பு

3 months 2 weeks ago

30 MAY, 2025 | 12:24 PM

image

யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலுக்கமைவாக இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது .

இதன்படி, 2025 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை யாழ்.மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு எண்ணிக்கை ஆயிரத்து 572 ஆகவும் பதிவு செய்யப்பட்ட இறப்புகளாக ஆயிரத்து 373 ஆகவும் பதிவாகியுள்ளன.

இறப்புகளை விட 199 பிறப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216068

மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி கொட்டிய குளவிகள்; ஒட்டுசுட்டானில் சம்பவம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

30 MAY, 2025 | 12:17 PM

image

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை பாடசாலை சென்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி துரத்தி தேன் குளவிகள் கொட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம் ஒன்றில் தேன் குளவிகள் கூடுகட்டி இருந்துள்ளது. இன்றையதினம் வலயமட்ட விளையாட்டுப் போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்யாலய மைதானத்தில் இடம்பெற இருந்த நிலையில் திடீரென தேன் குளவிகள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி கொட்டியுள்ளது. இதனால் அச்சமடைந்த மாணவர்கள் பரவி பாய்ந்து ஒடியுள்ளனர்.

இப்பாடசாலையின் மாடிக் கட்டிடம் ஒன்றில் பலகாலமாக தேன் குளவிகள் கூடுகட்டி வாழ்வதாக கூறப்படுகிறது.

1000297963.jpg

1000297962.jpg

1000297967.jpg

https://www.virakesari.lk/article/216067

இந்தியாவில் அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது

3 months 2 weeks ago

இந்தியாவில் அகதிமுகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் - சுமந்திரன்

30 MAY, 2025 | 12:40 PM

image

இந்தியாவில் அகதிமுகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த நிலையில் பலாலியை வந்தடைந்த ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர். அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

நாடு திரும்புவதற்குத் தேவையான சகல ஆவணங்களும் அவரிடம் இருந்தபோதும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு “அகதி” என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் ஜூன் 5ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாடு திரும்புவதற்கு தாயாராக இருக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயந்து வராமல் பண்ணுவதற்கான ஏற்பாடா இது?

https://www.virakesari.lk/article/216073

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்

3 months 2 weeks ago

30 MAY, 2025 | 02:32 PM

image

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை வியாழக்கிழமை (29) மேற்கொண்டார்.

இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் குறைபாடுகள் தொடர்பில் முகாமையாளரிடம் கேட்டறிந்ததோடு, அதனை உடனடியாக தீர்க்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அங்கு பணிபுரியும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் முகமாக தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துக் கொண்டனர்.

DSC_3741.jpg

DSC_3745__2_.jpg

https://www.virakesari.lk/article/216078

பயங்கரவாதத்துக்கு எதிராக கனேடிய அரசு எடுக்கும் நடவடிக்கையை 'இனப்படுகொலை' என்பீர்களா? - கனேடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் விஜயதாஸ ராஜபக்ஷ கேள்வி

3 months 2 weeks ago

30 MAY, 2025 | 09:22 AM

image

(நா.தனுஜா)

பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், கனடாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தோற்றம் பெறுமாயின், அதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பில் கனேடிய அரசு நடவடிக்கை எடுக்குமாயின், அதனையும் 'இனப்படுகொலை' என்று வகைப்படுத்துவீர்களா? என கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து விஜயதாஸ ராஜபக்ஷவினால் ஹரி ஆனந்தசங்கரிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த அரசாங்கத்தில் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகப் பதவி வகித்த நான், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டேன்.

இலங்கையில் சுபீட்சத்தையும், புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் நோக்குடனேயே உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

முதலாவதாக கனடாவின் அரசியலில் உச்சத்தை எட்டியிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்தினைக் கூறுகின்றேன்.

இலங்கையில் சகல சமூகங்களினதும் மதிப்பைப்பெற்ற தமிழ் அரசியல்வாதியான வீ.ஆனந்தசங்கரியின் மகனான உங்களது அமைச்சு நியமனம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

உங்களது தந்தையின் சார்பில் 2002 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜரான நான், தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணியின் தலைவராக அவர் பதவி வகிப்பதை வெற்றிகரமாக நியாயப்படுத்தி வென்றேன்.

அதேபோன்று 2004 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, அவர் தப்பி வந்து எனது வீட்டில் தஞ்சம் புகுந்தார்.

அவருக்குப் பாதுகாப்பு அளித் நான், அவரை அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் அழைத்துச்சென்றேன்.

எனது வேண்டுகோளின்படி அவர் உங்களது தந்தைக்கு அரச பாதுகாப்பு வழங்கியதுடன், அது சுமார் இரு தசாப்தங்கள் வரை தொடர்ந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையகாலங்களில் வெளியிடப்பட்டுள்ள சில கருத்துக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒரு முன்னுதாரணமாகக் காண்பிக்கும் வகையிலான செயற்பாடுகள் தொடர்பில் நான் மிகுந்த அதிருப்தி அடைகின்றேன்.

தமிழீழ விடுதலைப்புலிகளால் சுமார் 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், அவர்களில் சுமார் 27,000 க்கும் மேற்பட்டோர் இராணுவத்தினராவர்.

அதுமாத்திரமன்றி முக்கிய தமிழ் அரசியல் தலைவர்கள், சமூகத்தலைவர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர்.

பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், கனடாவில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தோற்றம் பெறுமாயின், உயிரிழப்புக்கள் தொடர்பில் கனேடிய அரசு நடவடிக்கை எடுக்குமாயின், அதனையும் 'இனப்படுகொலை' என்று வகைப்படுத்துவீர்களா? இல்லை எனில், இலங்கை மீது அதனை ஒத்தவகையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தீவிர கரிசனைக்குரியதாகும்.

தற்போது இலங்கைக்கு தூரநோக்கு சிந்தனையும், கருணையும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில வெளிநாட்டுத்தரப்புக்களின் சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகள் உள்நாட்டு நிலைவரத்தை மேலும் மோசமாக்குகின்றன.

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் ஆகியோர் இந்தத் துருவமயமாக்கலுக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர்.

அதற்குக் காரணம் தமிழ் சமூகத்தின் மீதான அக்கறை அல்ல. மாறாக அரசியல் ரீதியான நோக்கங்களும், தேர்தல் அடைவுகளுமே அதற்குக் காரணமாகும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/216047

சட்டவிரோத மணல் அகழ்வு – நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர்

3 months 2 weeks ago

சட்டவிரோத மணல் அகழ்வு – நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர்

May 30, 2025 11:47 am

சட்டவிரோத மணல் அகழ்வு – நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர்

கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி வரையான கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சி, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பகுதிக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகளால் அமைச்சருக்கு முறைபாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால் பெருமளவான வயல் நிலங்கள், நீர்ப்பாசன கட்டுமானங்கள் என்பன சேதமடைந்து வருகின்றன எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே நேற்று அன்று பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி வரை மணல் அகழ்வது தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

DSC_3765.jpg

https://oruvan.com/illegal-sand-mining-minister-chandrashekhar-visits-and-inspects/

TIN இலக்கத்தை இலகுவாகப் பதிவு செய்ய கியூஆர் குறியீடு அறிமுகம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

30 MAY, 2025 | 09:30 AM

image

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் (TINs) பதிவு செய்யும் முறையை இலகுவாக்குவதற்ககாக கியூஆர் குறியீடு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஜி.எச். பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி ஏற்கனவே TIN இலக்கத்தை பதிவு செய்தவர்களும் தங்கள் பதிவை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

எவ்வாறு இல்லை எனில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அதை எவ்வாறு பெறுவது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

வரி நிர்வாகம் மற்றும் இணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 1 கோடிக்கும் அதிகமான TIN இலக்கங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/216049

உயிர்நீத்த கடற்படை வீரர்களை நினைவு கூர்ந்து மரக்கன்றுகள் நடுகை

3 months 2 weeks ago

உயிர்நீத்த கடற்படை வீரர்களை நினைவு கூர்ந்து மரக்கன்றுகள் நடுகை

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் கடற்படையினரால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. 

இந்நிகழ்வு வேலுசுமன கடற்படை முகாம் கட்டளை அதிகாரியின் ஏற்பாட்டில் இன்று (29) காலை இடம்பெற்றது. 

மே 18 ஆம் திகதி உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் முதன்மை நோக்கத்துடன் இவ்வாறு மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. 

இதன்போது முந்திரி செடிகள் மற்றும் தென்னங்கன்றுகள் என்பன நாட்டப்பட்டன. 

குறித்த நிகழ்வில் மண்டைதீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார் மற்றும் கடற்படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

https://adaderanatamil.lk/news/cmb99dzvp014iqpbs9xde6d2x

சீன, போலந்து அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்!

3 months 2 weeks ago

சீன, போலந்து அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்!

adminMay 30, 2025

china.jpeg?fit=1170%2C658&ssl=1

இலங்கைக்கு சென்றுள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ(Wang Wentao) , இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயல்படுத்தும் வெளிப்படையான வேலைத்திட்டம் காரணமாக சீன முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவித்த அமைச்சர், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடனான இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

சவாலான காலகட்டத்தில் இருநாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில், வர்த்தகம் மற்றும் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்கொள்ளும் போது இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க சீனா அரப்பணிப்புடன் செயற்படுவதாக சீன வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கடந்த சீன விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது சீன வர்த்தக அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கமாகும். மேலும், சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நிறைவுசெய்தல் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

போலந்துக்கு இலங்கை முக்கியமான நாடு – போலந்து வெளிவிவகார அமைச்சர்!

poland.jpeg?resize=800%2C450&ssl=1

இலங்கைக்கு சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர், போலந்து குடியரசின் வௌிவிவகார அமைச்சர் ரடொஸ்லாவ் சிகோர்ஸ்கி (Radoslaw Sikorski) இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், எதிர்வரும் காலங்களில் உலக அளவில் இலங்கை எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்களை வெற்றிகொள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரி முறைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வரம்புகளுக்குள் செயலாற்றும்போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பரந்த ஒத்துழைப்புடன் செயலாற்ற எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் GSP+ நிவாரணத்தை தொடர்ச்சியாக வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ள முன்னேற்றகரமான நிலைப்பாட்டை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வரவேற்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த, போலந்து வௌிவிவகார அமைச்சர் ரடொஸ்லாவ் சிகோர்ஸ்கி , தனது சுற்றுப் பயணம் ஐரோப்பிய ஒன்றியத்தை போலவே இலங்கை மீது போலந்து கொண்டிருக்கும் சிறப்பு அவதானத்தை காண்பிக்கிறது என்றும் தெரிவித்தார்.

இலங்கை – போலந்து வரலாற்று தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொண்டு இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கை மற்றும் போலந்துக்கு இடையில் 50 வருட இராஜதந்திர தொடர்புகள் மற்றும் 30 வருட அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத்திட்டங்களை இங்கு நினைவுகூர்ந்த போலந்து வௌிவிவகார அமைச்சர் புதிய அரசாங்கத்தோடு நெருக்கமான ஒத்துழைப்புடன் செயலாற்றுவதே போலந்து அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்பதையும் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதுவர் கார்மென் மொரெனோ(Carmen Moreno) உள்ளிட்ட தூதுக்குழுவினரும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

https://globaltamilnews.net/2025/216133/

இந்தியா எமக்கு வேண்டப்பட்ட நாடாக உள்ளது – வடக்கு ஆளுநர்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 2

29 MAY, 2025 | 04:33 PM

image

எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்யும், எமக்கு மிகவேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

மனிதாபிமான உதவிகளை வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

"முல்லைத்தீவில் நான் மாவட்டச் செயலராக பணியாற்றிய அனுபவம் எனக்குள்ளது. இங்கு உள்ள கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனக்கு நன்றாக தெரியும். போருக்குப் பிறகு சட்டவிரோத மீன்பிடி உங்கள் வாழ்வை பாதித்தது. இன்று இந்திய அரசு மற்றும் மக்களிடமிருந்து பெறுமதியான வலைகளும், குளிர்சாதன பெட்டிகளும் கிடைக்கின்றன."

அதிகமாக இந்தியாவின் வீடமைப்பு திட்டம், ரயில் பாதை புனரமைப்பு, மற்றும் தற்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை புனரமைப்பை எடுத்துக்காட்டினார். "இந்தியா தொடர்ந்து எமக்கான உதவிகளை வழங்க வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திலகநாதன் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ. உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

IMG-20250528-WA0155.jpgIMG-20250528-WA0158.jpgIMG-20250528-WA0146.jpgIMG-20250528-WA0148.jpgIMG-20250528-WA0164.jpgIMG-20250528-WA0143.jpgIMG-20250528-WA0149.jpg

https://www.virakesari.lk/article/216000

இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் யாழ். திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவ குழுக் கூட்டம்

3 months 2 weeks ago

29 MAY, 2025 | 04:31 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவ குழுக் கூட்டம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது.

2023.08.23ஆம் திகதி இணைந்த முகாமைத்துவக் கூட்டம் இறுதியாக நடைபெற்றிருந்த நிலையில், இந்தக் கூட்டத்தை மீண்டும் கூட்டுவதற்கான கோரிக்கையை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்திருந்தார். அதற்கு அமைய, நேற்று இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தியத் தூதுவர் தலைமையிலான குழுவினர், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயன், யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.டிலானி, கலாசார ஊக்குவிப்பு பணிப்பாளர் பிரசாட் ரணசிங்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டதோடு, புத்தசாசன, சமய விவகார கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இணையவழியில் பங்கேற்றிருந்தார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG-20250529-WA0009.jpg

IMG-20250529-WA0005.jpg

IMG-20250529-WA0010.jpg

IMG-20250529-WA0011.jpg

https://www.virakesari.lk/article/215993

24 மணி நேர ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் இன்றுடன் நிறைவு

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

29 MAY, 2025 | 04:52 PM

image

(எம்.மனோசித்ரா)

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்வதற்கு வருகைத்தரும் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவையை 24 மணி நேரமும் மேற்கொள்ளும் பணி 2025.02.18 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு அது இன்றுடன் (30) நிறைவடைகிறது.

எனவே ஜூன் 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் காலை 7 மணி முதல் பி.ப 2.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அன்றைய தினம் முதல் ஒருநாள் சேவையின் கீழ் முன்கூட்டியே நாளொன்றை ஒதுக்கிக்கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் அல்லது முன்னுரிமை தேவையுள்ள விண்ணப்பதாரிகளுக்கு மேற்படி காலப்பிரிவிற்குள் தமது விண்ணப்பங்களை ஒருநாள் சேவையின் கீழ் ஒப்படைக்க முடியும்.

பிரதான அலுவலகத்தில் சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பங்கள் மு.ப. 7 மணி முதல் பி.ப. 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். பிராந்திய அலுவலகங்களில் முன்னர் போன்றே காலை 7 மணி முதல் பி.ப. 2 மணி வரை சாதாரண சேவை மற்றும் ஒருநாள் சேவையின் கீழ் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

https://www.virakesari.lk/article/216011

தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ?

3 months 2 weeks ago

 வி.ரி.சகாதேவராஜா

 மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் மக்கள் முழுமையாக வாழ்கின்ற கல்லாற்றில் புத்தர் சிலை தொடர்ந்து நிலை கொண்டிருப்பது முறையாகுமா? தேவையா?  அது இன சௌஜன்யத்தை,  நல்லிணக்கத்தை பாதிக்கும். எனவே அச்சிலை அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார்.

கல்லாற்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்...

 பெரிய கல்லாறு பாலத்தின் அருகே பிரதான வீதியில் இராணுவ சூழல் இருந்த காலகட்டத்தில் இந்த புத்தர் சிலை ஒரு தனியார் காணியில் வைக்கப்பட்டிருக்கின்றது .

சின்னவத்தை பிரதேச பிக்கு ஒருவரினால் இந்த சிலை அடாத்தாக அந்த காணியிலேயே வைக்கப்பட்டதாக அறிகிறேன்.

அந்த காலகட்டத்திலே இராணுவம், பொலிஸார் ஆட்சி நிலவிய காலம் என்ற காரணத்தினால் பொது மக்களாலோ ஏனைய அரசியல் வாதிகளாலோ எதுவும் செய்ய முடியாத ஜனநாயக மற்ற ஒருசூழ்நிலை இருந்தது .

ஆனால், இன்று சகல இன மக்களையும் அனுசரித்து சாதி, இன,மத பேதம் இல்லாமல் ஊழல் ஒழிப்போம் என்று  வந்த அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. 

எனவே, முழு தமிழ் மக்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் வாழ்கின்ற இந்த கல்லாற்றில் அதுவும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக தனியார் காணியில் அடாத்தாக வைக்கப்பட்டது. இன்று அங்கு எந்த பௌத்தர்களும் இல்லை. வணங்குவதற்கு கூட யாருமில்லை.

இன்று அது அங்கு அவசியமா?  என்ற கேள்வி எழுகின்றது. இது தொடர்பாக இந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் வாய்திறப்பதாகவும் இல்லை . எதற்கெல்லாமோ குரல் எழுப்புகிறார்கள். ஆனால், எமது உரிமையோடு இருப்போடு மண்ணோடு கூடிய  இந்த விஷயத்தை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதேபோல் உகந்தமலையிலும் புத்தர் சிலை முளைத்துள்ளது.

இந்துவாகப் பிறந்த புத்த பகவான் எந்த இடத்திலும் தன்னை கொண்டு இப்படி ஏனைய இன வேறிடத்தில்  நிறுத்தி இன உறவை சீரழிக்குமாறு கூறவில்லை .உகந்த மலையில் அதே செயல்பாடு தான் தொடர்ந்திருக்கிறது.

 எனவே, நல்லிணக்க அரசாங்கம் இதை கவனத்தில் கொண்டு இவ்வாறு தனித் தமிழர்கள்  வாழ்கின்ற இடங்களில் இருக்கின்ற இந்த புத்தர் சிலைகளை அகற்ற வேண்டும் என்று அன்பாக வேண்டிக் கொள்கிறேன் என்றார்.

Tamilmirror Online || தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ?

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து இன்று பாதயாத்திரையை தொடர்ந்த பக்தர்கள்!

3 months 2 weeks ago

29 May, 2025 | 04:57 PM

image

கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையினை மேற்கொண்டுள்ள குழுவினர், மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்கு நேற்று வருகைதந்து, அங்கு தங்கியிருந்து, இன்று (29) காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு, பின்னர், பாதயாத்திரையினை தொடர்ந்தனர்.

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தினை நேற்று (28) மாலை சென்றடைந்தது.

மே மாதம் 1ஆம் திகதி தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தலைமையில் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது.

வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இந்த புனித பாதயாத்திரை இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாதயாத்திரை ஆகிறது. 

நேற்று மாலை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்த பாதயாத்திரை குழுவினர் அங்கு தங்கியிருந்து இன்று (29) காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டு பாதயாத்திரையினை ஆரம்பித்தனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி உகந்தைமலை முருகன் ஆலயத்திலிருந்து யால காட்டுவழிப்பாதை திறக்கப்படும்போது அதன் ஊடாக பயணித்து 25ஆம் திகதி கதிர்காம கந்தன் ஆலயத்தினை சென்றடையவுள்ளதாக சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து இன்று பாதயாத்திரையை தொடர்ந்த பக்தர்கள்!    | Virakesari.lk

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம்-சிவில் சமூக பிரதிநிதிகளிடம் நீதியமைச்சர்

3 months 2 weeks ago

29 May, 2025 | 02:28 PM

image

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் புதிய சட்டம் அவசியமில்லை என சிவில் சமூக பிரதிநிதிகள் அவரிடம் விடுத்த வேண்டுகோளிற்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் இன்று நீதியமைச்சரை சந்தித்தனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராயும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட சமர்ப்பிப்பில் கையொப்பமிட்ட பிரதிநிதிகள் குழுஇ இன்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைச் சந்தித்துஇ பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் புதிய பயங்கரவாதச் சட்டத்தால் அதை மாற்றக் கூடாது என்ற எங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. 

 வரலாற்று ரீதியாக அரசாங்கம் தன்னை பாதுகாப்பதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளது என்பதை இந்தக் குழு எடுத்துக்காட்டியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீண்டகால தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்களில் சிலர் 15-16 ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அதுவரை அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் மேலும் அதை ஒரு புதிய பயங்கரவாதச் சட்டத்தால் மாற்றக் கூடாது என்றும் அவர்கள் அழைப்பு விடுத்தனர் - 

இந்த நிலைப்பாட்டையே ஜேவிபி பல வருடங்களாக  பின்பற்றி வந்தது

. குழுவின் அமைப்பையும் அவர்கள் விமர்சித்தனர் ஏனெனில் இது பெரும்பாலும் இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளைக் கொண்டுள்ளது மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் இல்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக நீதியமைச்சர் அமைச்சர் உறுதியளித்தார் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய மற்றொரு சட்டம் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம்-சிவில் சமூக பிரதிநிதிகளிடம் நீதியமைச்சர் | Virakesari.lk

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சந்திரன் கிராம வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

3 months 2 weeks ago

29 May, 2025 | 03:08 PM

image

முல்லைத்தீவு  மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'சந்திரன் கிராமம்' வீடுகள் கையளிப்பு நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் புதன்கிழமை (28) கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் நடைபெற்றது.

குறித்த சந்திரன் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால்  இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ்  நிர்மாணிக்கப்பட்ட  24 வீடுகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால்   கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த கையளிப்பு நிகழ்வில் இந்நிய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நஷிமுதீன்,தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் அரவிந்த ஸ்ரீநாத், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்,  கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கிராம அலுவலகர்கள்,  ஏனைய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சந்திரன் கிராம வீடுகள் மக்களிடம் கையளிப்பு! | Virakesari.lk

முல்லைத்தீவில் குடிநீர் விநியோகம் திறந்து வைப்பு !

3 months 2 weeks ago

29 May, 2025 | 04:32 PM

image

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக புதன்கிழமை (28) முல்லைத்தீவு  மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்ட வேலைகளை திறந்து வைத்தார். 

இதில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால்   கொக்குத்தொடுவாயில் நிர்மாணிக்கப்பட்ட  குடிநீர் விநியோக நிலையத்தினை திறந்துவைத்ததுடன் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தினை சம்பிரதாயபூர்வமாக மக்களிடம் வழங்கி வைத்தார்.  

குறித்த குடிநீர் திட்ட வேலைத்திட்டமானது  2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தது. 

இந்தக் குடிநீர்த் திட்டமானது கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 1250 குடும்பங்களுக்கு வழங்கக்கூடியதுடன் திட்டத்தின் ஆரம்பத்தில் 250 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கும் நடைமுறையில் நான்கு குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது. 

இந்த திறப்பு விழாவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நஷிமுதீன்,  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய பொறியியலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கிராம அலுவலகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FB_IMG_1748442258479.jpgFB_IMG_1748442282349.jpgFB_IMG_1748442269153.jpgFB_IMG_1748442270756.jpg

முல்லைத்தீவில் குடிநீர் விநியோகம் திறந்து வைப்பு ! | Virakesari.lk

வடக்கு ரயில் சேவைகள் ஒரு மாதம் இடைநிறுத்தம்!

3 months 2 weeks ago

வடக்கு ரயில் சேவைகள் ஒரு மாதம் இடைநிறுத்தம்!

00]

http://seithy.com/siteadmin/upload/train-021124-seithy.jpg

மாகோவிலிருந்து அநுராதபுரம் வரையிலான பிரதான புகையிரத மார்க்கத்தில் ஐந்து பாலங்களில் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதால், மீண்டும் ஒரு மாத காலத்திற்கு வடக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

  

சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து பாலங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய கடன் உதவியுடன் ஐந்து பாலங்கள் அமைக்கப்படவுள்ளதோடு, சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். பொசன் பௌர்ணமி தினத்துக்கு பின்னர் கட்டுமாணப்பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் 9,127 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த புகையிரத மார்க்கம் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட போதிலும், சமிக்ஞை கட்டமைப்பின் கட்டுமானம் தாமதமாகி வருகிறது. சமிக்ஞைகள் இல்லாததால், தற்போது அந்தப் பகுதியில் டோக்கன் முறையில் புகையிரதங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுடன் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் சமிக்ஞை கட்டமைப்பின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டால் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் பணிகளை முடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=333925&category=TamilNews&language=tamil

Checked
Mon, 09/15/2025 - 22:38
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr