17 JUL, 2025 | 05:16 PM

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் சிங்கள மக்களுக்கு விவசாயத்துக்காக அரச நிறுவனமொன்று நிலத்தை பகிர்ந்தளித்தமையானது அருகருகே வாழும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே முறுகல் நிலையை உருவாக்கியுள்ளது.
தங்கள் விவசாய நிலங்களை ஏற்கனவே ஆக்கிரமித்துள்ள சிங்கள மக்கள் புதிதாக காடழிப்பிலும் ஈடுபடுவதாக தமிழ் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், சிங்கள மக்கள் விவசாயத்துக்காக பயன்படுத்தும் காணி தமது பரம்பரைக் காணி எனவும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் அந்தக் காணியில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அந்தக் காணியில் விவசாயம் செய்துவரும் ஒரு சிங்கள விவசாயி சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, வெடிவைத்தகல் கிராம சேவகர் பிரிவில் உள்ள திரிவைத்தகுளம் கிராமத்திற்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதியில் வசிக்கும் சிங்கள மக்கள், தமிழ் மக்களின் சுமார் 1,000 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

வன்னி பகுதியில் காடழிப்பைத் தடுக்க வனப் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய ரவிகரன், அந்த திணைக்களம் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது பழி சுமத்தும் விதமாகவும் அல்லது தமிழ் மக்களை அழிக்கும் விதமாகவும் செயற்படுவதாக தெரிவித்தார்.
பெரிய அளவிலான காடழிப்பு குறித்து வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் விசாரித்ததாகக் கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்ச்செல்வன், துப்பரவு செய்யப்படும் காணி மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது என பிராந்திய நில அலுவலர் தன்னிடம் குறிப்பிட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் நான் விசாரித்தபோது, அவர், இது மகாவலி எல் வலயத்திற்கு சொந்தமானது என்பதால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காணி, மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்திய வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் நெடுங்கேணி அலுவலகம், காடுகளை அழிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்ததாக, தமிழ்ச்செல்வன் பிராந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

நெடுங்கேணி வன இலாகா திணைக்களத்திடம் கேட்டபோது 2021ஆம் ஆண்டு மகாவலி எல் வலயத்திற்கு கீழ் காணப்படுவதால் இது தொடர்பில் தலையீடு செய்ய முடியாது எனவும் எனினும் காணி அபகரிக்கப்படுவதாக தகவல் கிடைத்தமையால் தாங்கள் மகாவலி அபிவிருத்தி அதிகாரியின் போகஸ்வெவ மற்றும் வெலிஓயா அலுவலகங்களில் சென்று பேசியதோடு இதனை தடுத்து நிறுத்துமாறும் கோரியதாக அதிகாரி தெரிவித்தார்.
புதிதாக காடுகளை அழித்து கையகப்படுத்தப்பட்ட காணிக்கு மேலதிகமாக, தமிழர்களுக்குச் சொந்தமான சுமார் 400 ஏக்கர் நெல் வயல் காணிகளை சிங்கள மக்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டினார்.
300, 400 ஏக்கர் காணி டோசர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே எங்களது 350, 400 ஏக்கர் வயல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு வவுனியா வடக்கு மகாவலி எல் வலயத்திற்குள் 5259.83 ஹெக்டேயர் செல்வதால் இதில் தலையீடு செய்ய முடியாது எனவும் இதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதகாவும் குறிப்பிட்டனர். இதன் ஊடாக இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிய முடியுமென வன இலாகா அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சிங்கள மக்கள், தமிழ் மக்களின் விவசாய காணிகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளதாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கூறிய குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அந்த விவசாய காணிகள் தனது மூதாதையர்களும் கிராம மக்களும் 1955 முதல் பயிரிட்டு வந்த காணிகள் என போகஸ்வெவ கிராமத்தில் வசிக்கும் பிமல் தர்மதாச, தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டுக் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில்,
“1955ஆம் ஆண்டு எனது தந்தை, எங்கள் பியதாச மாமா மற்றும் எங்கள் மக்கள் இந்த வயலில் பயிரிட்டனர். நாங்கள் இந்த வயலை பயிரிட்டுக் கொண்டிருந்தபோதுதான், 1985ஆம் ஆண்டு, எங்கள் கிராமமான போகஸ்வெவ புலிகளால் தாக்கப்பட்டு, எங்கள் கிராம மக்கள் கொல்லப்பட்டனர். நாங்கள் அகதிகளானோம். பின்னர் நாங்கள் அகதி முகாம்களில் வசித்து வந்தோம். போர் முடிவடைந்த பின்னர், 2010 ஜூலை மாதம் 26ஆம் திகதி நாங்கள் மீள்குடியேறினோம்” என்றார்.
இவ்வாறு மீள்குடியேறிய பின்னர், தமது காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் அனுமதிகளை சமர்ப்பித்து, நிலத்தை விடுவிக்க வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்ததாக விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் போகஸ்வெவ கிராமத்தில் வசிக்கும் பிமல் தர்மதாச, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய காணொளியில் விளக்கம் அளித்துள்ளார்.
வனப் பாதுகாப்புத் திணைக்களம் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வந்த நிலையில், கிவுல் ஓயா திட்டத்தை ஆரம்பிக்க வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையே தலா 12 ஆயிரம் ஹெக்டேயர் காணிப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறும் பிமல் தர்மதாச, வனப் பாதுகாப்புத் திணைக்களம் 12 ஆயிரம் ஹெக்டேயர் முள் காடுகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கியதாகவும் கூறுகிறார்.
இதற்கமைய, அவரது விவசாய காணி மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கைகளுக்குச் சென்றுள்ளதோடு காணி உரிமையை கொண்டுள்ள சிங்கள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தலா 40 ஏக்கர் நிலத்தை இரண்டு சந்தர்ப்பங்களில் விடுவித்து, 2020 முதல் விவசாய நடவடிக்கைகளுக்கான வாய்ப்பை வழங்கியதாக பிமல் தர்மதாச மேலும் கூறுகின்றார்.
கடந்த ஐந்து வருடங்களாக சிங்கள விவசாயிகள் அந்த நிலத்தில் விவசாயம் செய்துவருவதாக அவர் கூறுவதோடு, தற்போது தமிழ் பிரதிநிதிகள் காணியின் உரிமையை கோரியுள்ளதால், அந்தக் காணியில் விவசாயத்தில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.
சுமார் 40 வருடங்களாக அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இந்த காணி, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் சிங்கள விவசாயிகளால் பயிரிடுவதற்காக விடுவிக்கப்படுவதாகக் கூறும் பிமல் தர்மதாச, சிங்கள விவசாயிகள் குத்தகை அனுமதியின் கீழ் காணியில் பயிரிடுவதாகவும் மேலும் கூறினார்.
https://www.virakesari.lk/article/220244