ஊர்ப்புதினம்

வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago

New-Project-289.jpg?resize=750%2C375&ssl

வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,062 பேர் உயிரிழந்துள்ளனர்.

2025 முதல் மே 25 ஆம் திகதி நிலவரப்படி பதிவான 1,062 வீதி விபத்துக்களின் மூலமாக இந்த இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

அதேநேரம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான 2,064 வீதி விபத்துகளில் சுமாமர் 7,000 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து பதிவான வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1433399

குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடல்

3 months 2 weeks ago

Published By: VISHNU

27 MAY, 2025 | 04:18 AM

image

குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடலானது திங்கட்கிழமை (26) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

IMG-20250526-WA0107.jpg

குறித்த கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குச்சவெளி வெளிக்கள போதனாசிரியர் நவசீலன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய உட்பட குச்சவெளி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/215773

யாழில் சமையலில் ஈடுபட்ட இளம் குடும்பப் பெண் தீப்பற்றியதால் உயிரிழப்பு!

3 months 2 weeks ago

Published By: VISHNU

27 MAY, 2025 | 04:02 AM

image

யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புலவர் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கஜன் ஜனுயா (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதன்போது அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியவேளை அது அவரது ஆடையிலும் பட்டு தீப்பற்றியது. பின்னர் அவர் குளியலறைக்குள் சென்று தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு, எரிகாயங்களுக்கு பற்பசை பூசியுள்ளார்.

இதன்போது அங்கு வந்த கணவர் அயல்வீட்டு பெண்ணொருவருடன் அவரை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மானிப்பாய் பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர். தீ காயத்தால் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

https://www.virakesari.lk/article/215770

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சிக்குன்குனியா

3 months 2 weeks ago

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சிக்குன்குனியா

May 27, 2025 9:58 am

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சிக்குன்குனியா

நாட்டில் தற்போது சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் விரிவான நுளம்பு கட்டுப்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது.

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்தைச் சுற்றியுள்ள சூழலை நுளம்புகள் இல்லாமல் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வாரத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது ஒதுக்கி, தங்கள் வீடுகள், அலுவலக வளாகங்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் சிறப்பு வேண்டுகோளையும் விடுத்தார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டு, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களைக் கொண்ட 31,145 வளாகங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், நுளம்பு லார்வாக்கள் உள்ள 6077 வளாகங்களும் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, 3916 சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும், 1470 வளாகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை மையமாகக் கொண்டு, இந்த நுளம்பு கட்டுப்பாட்டு திட்டம் மே 19 முதல் 24 வரை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆய்வு செய்யப்பட்ட மொத்த வளாகங்களின் எண்ணிக்கை 128,824 என்றும், அவற்றில் 119,677 வீடுகள், 257 பாடசாலைகள், 304 பிற கல்வி நிறுவனங்கள், 789 அரச நிறுவனங்கள், 5025 தனியார் நிறுவனங்கள், 700 கட்டுமான தளங்கள், 195 தொழிற்சாலைகள், 263 பொது இடங்கள், 514 மத இடங்கள் மற்றும் 1100 பிற இடங்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கையில் சிக்குன்குனியா வைரஸின் பரவல் 16 ஆண்டுகளில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/chikungunya-has-become-a-threat-in-sri-lanka/

இலங்கைத் தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுப்புடன் பேசமுன்வர வேண்டும் : கருணா அம்மான்

3 months 2 weeks ago

இலங்கைத் தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுப்புடன் பேசமுன்வர வேண்டும் : கருணா அம்மான்

kugenMay 27, 2025

534350c0-14fc-11f0-8a1e-3ff815141b98.png.webp


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி விட்டுக் கொடுப்புடன் மக்கள் சார்ந்து தீர்மானம் எடுப்பார்களாக இருந்தால் மட்டக்களப்பில் குறைந்தது பத்து சபைகளில் எந்த பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவு, ஏனைய இனத்தவர்களின் ஆதரவு இல்லாமல் தனித் தமிழ் உறுப்பினர்களாக ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது.

கட்சிக் கொள்கைகளுக்கு அப்பால் மக்களை முன்நிறுத்தியே தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிகளின் கொள்கைகளும் தமிழ் மக்களின் நலனை நோக்காகக் கொண்டே அமைகின்றன என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் இணைத்தலைவருமான கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்) தெரிவித்தார்.

நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விடயங்கள் மற்றும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே மட்டக்களப்பில் கிட்டத்தட்ட 37 ஆசனங்களை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பாக நாங்கள் பெற்றிருக்கின்றோம். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்பதை நாங்கள் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன்மை கருதி, கிழக்கு மாகாணத்தைத் தமிழரே ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே உருவாக்கினோம். அந்த நோக்கத்தின் முதற்கட்டமாக கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் நாங்கள் போட்டியிட்டு அதனூடாக தற்போது 37 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம்.

இத்தேர்தலில் இலங்கைத் தமிழ அரசுக்கட்சி கூடுதலாக ஆசனங்களைப் பெற்றுள்ளது. அடுத்தபடியாக தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கின்றது. இதில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி விட்டுக்கொடுப்புடன் பேச முன்வருவார்களாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்திலே குறைந்தது பத்து சபைகளில் எந்த பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவு, ஏனைய இனத்தவர்களின் ஆதரவு இல்லாமல் தனித் தமிழ் உறுப்பினர்களாக ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது.

இது தொடர்பான விடயங்கள் எமது கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஜெயம் அவர்களிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளுராட்சி மன்ற ஆட்சி அதிகாரங்கள் தொடர்பில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

எங்களைப் பொறுத்தவரையில், என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடும் தமிழர்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் முன்வருவார்களாக இருந்தால் நாங்கள் மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயார்.

இதில் கட்சிக் கொள்கைகளுக்கு அப்பால் மக்களை முன்நிறுத்தியே தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிகளும் தமிழ் மக்களின் நலனை நோக்காகக் கொண்டே தமது கொள்கைகளை வகுக்கின்றன. அந்த அடிப்படையில் நாங்களும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனித் தமிழ் கட்சி, இந்த நாட்டிலே தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எங்களின் கொள்கையும். அதே போன்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையும் வகுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை வகுத்ததிலே நானும் ஒருவன்.

எனவே இங்கு கொள்கை ரீதியில் முரண்பாடுகள் வருவதற்குப் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. அதை அவர்கள் தான் விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு பாரிய அச்சம் இருக்கின்றது. அவர்கள் வடக்கு கிழக்கிலே பாரிய சரிவைச் சந்தித்துக் கொண்டு வருகின்றார்கள். பதவிப் போட்டிகள், பொறாமைகள், ஆசைகள் எல்லாம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் தற்போது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அடிப்படையில் இதில் அவர்கள் தான் முடிவை எடுக்க வேண்டும்.

இதிலே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தேசியம் தேசியம் என்று பேசிக்கொண்டு முஸ்லீம்களுடன் சேர்ந்தோ அல்லது தேசிய மக்கள் சக்தியுடன் சேர்ந்தோ ஆட்சியமைப்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு இனத்துவேசம் பிடித்த அரசாங்கம் என்பதை அனைவரும் தற்போது அறிந்திருக்கின்றார்கள். இதனை நான் ஆரம்ப காலம் முதலே சொல்லி வந்திருக்கின்றேன். தற்போது அவர்கள் அவர்களின் முகத்தைக் காட்டத் தொடங்கி விட்டார்கள்.

இதே போன்றே கிழக்கு மாகாண சபையிலும் தமிழர்களாகச் சேர்ந்து நாங்கள் போட்டியிட வேண்டும். இது தொடர்பான அழைப்பை நாங்கள் அனைத்து தரப்பினருக்கு விட்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குள் சுமந்திரன் சாணக்கியன் போன்றவர்கள் உள்நுலைந்ததன் பிற்பாடு இந்தக் கட்சியை வளர்த்தவர்களையெல்லாம் அவர்கள் வெளியிலே விட்டுவிட்டார்கள்.

பொதுவாகப் போராட்ட களங்களிலே நின்ற செல்வம் அடைக்கலநாதன், ஜனா, சுரேஸ் பிறேமச்சந்திரன் போன்ற உறுப்பினர்களையெல்லாம் புறந்தள்ளி விட்டார்கள். எனவே அவர்களையெல்லாம் நாங்கள் அழைக்க வேண்டும். ஒற்றுமையாக நின்று போட்டியிட வேண்டும். ஏனெனில் தற்போது ஒரு செய்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாவுல்லா அவர்களை நிறுத்துவதற்கு தீர்மானமொன்று எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனவே கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் முஸ்லீம்கள் இதில் தீவிரமாக இருக்கின்றார்கள்.

கடந்த முறை உங்களுக்கு தெரியும் 11 ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களைப் பெற்ற முஸ்லீம் காங்கிரஸ்ஸிடம் ஆட்சியை ஒப்படைத்து கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்குப் பாரிய துரோகம் இளைத்தவர்கள் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அந்த நிலைமை வராமல் நாங்கள் அனைவருடனும் பேசி கிழக்கு மாகாணத்தைத் தனித் தமிழர் ஒருவர் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார். https://www.battinews.com/2025/05/blog-post_173.html

மன்னாரில் இந்திய - இலங்கை அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

3 months 2 weeks ago

மன்னாரில் இந்திய - இலங்கை அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

Published By: VISHNU

27 MAY, 2025 | 04:27 AM

image

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் திங்கட்கிழமை (26) மாலை 4.45 மணி அளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

DSC_0459.JPG

இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட கடன் உதவி ஆகிய உதவித்திட்டங்கள் மூலம்  ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட குறித்த வீடுகள் திங்கட்கிழமை (26) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

DSC_0447.JPG

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பீ.சரத் , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

DSC_0415.JPG

இதன் போது மன்னார்   பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேசச்  செயலாளர் எம்.பிரதீப் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

DSC_0431.JPG

DSC_0471.JPG

DSC_0468.JPG

DSC_0467.JPG

DSC_0463.JPG

DSC_0449.JPG

https://www.virakesari.lk/article/215774

வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சரவைத் தீர்மான அறிவிப்பில் நீக்கம் குறித்து பிரஸ்தாபிக்க வேண்டும் - சுமந்திரன்

3 months 2 weeks ago

வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சரவைத் தீர்மான அறிவிப்பில் நீக்கம் குறித்து பிரஸ்தாபிக்க வேண்டும் - சுமந்திரன்

Published By: VISHNU

27 MAY, 2025 | 04:41 AM

image

(நா.தனுஜா)

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றவா என அவதானிப்போம். அவ்வாறு வெளியிடப்படாதவிடத்து நாளைய தினம் (28) மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமைகோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதுடன், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

அதன்படி இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்பதாக மேற்படி வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படவேண்டும் எனவும், அன்றேல் வட, கிழக்கு மாகாணங்களில் அரச இயந்திரத்தை ஸ்தம்பிதம் அடையச்செய்யும் வகையில் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அவரது கூற்றின்படி 28 ஆம் திகதிக்கு இன்னமும் ஒரு தினமே எஞ்சியிருக்கும் நிலையில், போராட்டத்துக்கான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளவா என வினவியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'இவ்வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் முற்றாக நீக்கவேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகும். அதனைவிடுத்து வேறு எத்தகைய தீர்வுகளை வழங்கினாலும் நாம் நிச்சயமாக மக்கள் போராட்டத்தை நடாத்துவோம். அதற்கமைய இன்றைய தினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஏதேனும் தீர்மானம் அறிவிக்கப்படுகின்றதா எனப் பார்ப்போம். அவ்வாறு அறிவிக்கப்படாதவிடத்து, மக்கள் போராட்டத்துக்கான ஆயத்தங்களை மேற்கொள்வோம்' என சுமந்திரன் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/215777

Checked
Mon, 09/15/2025 - 19:37
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr