ஊர்ப்புதினம்

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

1 month ago

New-Project-396.jpg?resize=750%2C375&ssl

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

ஆசிய வர்த்தகத்தில் தங்கத்தின் விலையானது செவ்வாய்க்கிழமை (30) புதிய சாதனை உச்சத்தை எட்டியது.

அமெரிக்க அரசாங்க முடக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் பாதுகாப்பான புகலிட உலோகத்திற்கான தேவையை அதிகரித்தன.

அதன்படி, ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,865.73 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது.

அதே நேரத்தில் தங்க எதிர்காலம் ஒரு அவுன்ஸ் 3.893.72 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது.

மூன்றாம் காலாண்டில் மஞ்சள் உலோகத்தின் வி‍லை சுமார் 17% சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஏனெனில் பல காரணிகள் மஞ்சள் உலோகத்தின் விலை உயர்வுக்கு செல்வாக்கு செலுத்துகின்றன.

அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் அரசாங்க முடக்கத்தைத் தவிர்க்க முடியாது என்ற நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், தங்கத்திற்கான தேவை இந்த வாரம் அதிகரித்துள்ளது.

செலவு சட்டமூல நிறைவேற்றவும் நூற்றுக்கணக்கான கூட்டாட்சி நிறுவனங்கள் மூடப்படுவதைத் தவிர்க்கவும் செப்டம்பர் 30 (புதன்கிழமை 0400 GMT) நள்ளிரவு வரை காங்கிரஸ் அவகாசம் அளித்துள்ளது.

குடியரசுக் கட்சி ஆதரவுடன் கூடிய செலவு சட்டமூலம் அண்மையில் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

ஆனால் இப்போது செனட்டில் எதிர்ப்பை எதிர்கொள்கிறது.

குடியரசுக் கட்சியினர் செனட்டில் 53 இடங்களைக் கொண்ட பெரும்பான்மையைக் கொண்டுள்ளனர்.

ஆனால் செலவு சட்டமூலத்தை அங்கீகரிக்க குறைந்தது 60 வாக்குகள் தேவை.

சுகாதாரச் செலவுகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளை மையமாகக் கொண்ட அரசியல் முட்டுக்கட்டையை உடைக்க திங்களன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இரு கட்சிகளும் நடத்திய பேச்சுவார்த்தைகள் சிறிதும் முன்னேற்றமில்லை என்று தெரிகிறது.

அரசாங்க முடக்கம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கும், இது வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முடக்கம் ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான அரசு வேலைகள் பறிக்கப்படலாம் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்தது – இது தொழிலாளர் சந்தையில் மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலை.

இலங்கை விலை விபரம்;

கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 306,000 ரூபாவாக காணப்படுகிறது.

அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 282,000  ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1449028

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை!-அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்

1 month ago

1755064640-US-State-Department-Sri-Lanka

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை!-அமெரிக்க இராஜாங்கத்  திணைக்களம்.

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை என அமெரிக்க இராஜாங்கத்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லாமையினால் நிறுவன ஊழல் தொடர்ந்து நிலவுவதாகவும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது 2025 முதலீட்டு சூழல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய நிர்வாகத்தின் கீழ் உயர் மட்ட அரசியல் லஞ்சக் கோரிக்கைகள் குறைவடைந்துள்ள போதிலும் சலுகை பெற்ற குழுக்களால் பாதுகாக்கப்படும் துறைகளில் ஊழல் நீடிப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேவையற்ற விதிமுறைகள், சட்ட நிச்சயமின்மை, அதிகாரிகளின் பலவீனங்கள் முதலீட்டாளர்களுக்கு சவாலாக உள்ளதாகவும்; குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள் தனியார்துறை தலைமையிலான பொருளாதார வளர்ச்சியை விமர்சித்துவருவதுடன் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை ஊக்குவிக்கும் நிலைப்பாட்டையும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் உட்கட்டமைப்பு துறைகளில் முன்னணி உலகளாவிய நிறுவுனங்கள் பெரும்பாலும் இல்லை என்பதனையும் தெரிவித்துள்ளது

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதங்களை வழங்கியிருந்தாலும், ஆரம்பகாலம் முதல் உள்ள இந்த அரசாங்கத்தின் மேற்குலக எதிர்ப்பு மற்றும் மார்க்சிச சித்தாந்தங்கள் காரணமாக பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 400 மில்லியன் டொலர் பெறுமதியிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திலிருந்து இந்திய அதானி கிரீன் எனர்ஜி விலகியதனையும் மேற்கோள்காட்டி  குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பலவீனமாக அதிகாரிகள் நிச்சயமற்றதன்மை தேவையற்ற விதிமுறைகள் ஆகியன இலங்கையில் முதலீடு செய்வதற்கான ஏனைய சவால்களாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிப்பதற்கும் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி பகிரங்கமாக உறுதியளித்துள்ளதாகவும் உயர்மட்ட அரசியல் லஞ்சம் குறைவடைந்துள்ளமை   கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1449036

ஏ9 வீதியில் பஸ் விபத்து ; மூன்று பேர் காயம்!

1 month ago

ஏ9 வீதியில் பஸ் விபத்து ; மூன்று பேர் காயம்!

30 Sep, 2025 | 12:04 PM

image

ஏ9 வீதியில் அநுராதபுரம், மிஹிந்தலை , பலுகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

https://www.virakesari.lk/article/226478

வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக இலங்கை மீது அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு

1 month ago

வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக இலங்கை மீது அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முதலீட்டுப் பின்னணி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இது தொடர்பில் பல முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள், தனியார் துறை தலைமையிலான பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து விமர்சித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைத்து முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் அளித்தாலும், அரசாங்கத்தின் பழைய மேற்குலக எதிர்ப்பு மற்றும் மார்க்சிச செல்வாக்கு கொண்ட சித்தாந்தங்கள் காரணமாக, பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் சந்தேகத்துடன் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

அத்துடன், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாகக் கூறும் அமெரிக்கா, இலங்கை முதலீட்டுச் சபை பிரதான முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் என்ற போதிலும், அவர்களுடன் நிலையான மற்றும் வெளிப்படையான உரையாடலை பேணுவது சவாலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே,தேவையற்ற கட்டுப்பாடுகள், சட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகாரிகளின் பலவீனமான பதிலளிப்பு போன்றவையும் இலங்கையில் முதலீடு செய்வதற்கு உள்ள ஏனைய பிரச்சினைகளாக அந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

இதேவேளை, இந்திய நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி (Adani Green Energy), இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து 400 மில்லியன் டொலர் பெறுமதியான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் இருந்து விலகியதை அமெரிக்க அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்குக் காரணம், முன்னர் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய இலங்கை அரசாங்கம் எடுத்த முயற்சிகளே என அதானி நிறுவனம் தெரிவித்துள்ளதாக அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி பகிரங்கமாக உறுதியளித்துள்ளதாகவும், புதிய நிர்வாகத்தின் கீழ் உயர் மட்ட அரசியல் கையூட்டல் கோரிக்கைகள் குறைந்துள்ளதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறிப்பாக சில சலுகை பெற்ற குழுக்களால் பாதுகாக்கப்பட்ட துறைகளில் நிறுவன ரீதியிலான ஊழல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

https://www.samakalam.com/இலங்கை-மீது-அமெரிக்கா-கட-2/

தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல! - சுரேஷ் க.பிரேமச்சந்திரன்

1 month ago

தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல! - சுரேஷ் க.பிரேமச்சந்திரன்

மன்னார் தீவுப்பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களினால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதுடன் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும், சூழலியலாளர்களும், உளவியல் அறிஞர்களும், கருத்து தெரிவிக்கின்ற நிலையில் அரசாங்கம் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு மக்களின் வாழ்வியல் உரிமையை உத்தரவாதப்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் எத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகளும் மக்களின் வளமான எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதாக இருக்க வேண்டுமே அன்றி அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இலங்கையில் மாற்று வலுசக்தியை வலுப்படுத்துமுகமாக காற்றாலை மின்கோபுரங்கள் சூரிய சக்தி மின் ஆலைகள் என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக மன்னார் தீவுப்பிரதேசத்தில் அப்பிரதேசம் சுற்றிவர கடலைக் கொண்டிருப்பதன் காரணமாக பாரிய காற்றாலைகளை அமைக்க அரசாங்கம் தனியார் துறைகளுக்கு ஊக்கமளித்து வருகின்றது.

மன்னார் மக்கள் இரண்டு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர். ஒன்று கனியவளமிக்க மண் கொள்ளையிடப்படுகின்றது. மக்கள் செரிவாக வாழக்கூடிய பிரதேசங்களில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.

மன்னார் தீவில் ஏற்கனவே முப்பதுக்கும் மேற்பட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் அதனுடைய இரைச்சல் ஒலி என்பது மக்களையும், மாணவர்களையும் வெகுவாக பாதித்து வருவதாக மக்கள் ஏற்கனவே முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

மேலதிகமாக இன்னும்பல காற்றாலைகளை அமைக்க நிறுவனங்கள் முயற்சிப்பதானது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மேல் கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

மாற்றுவலுசக்திகள் தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. காற்றாலை மின் உற்பத்தியும் மின்உற்பத்திக்கான மாற்றுவழி என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மக்கள் செரிவாக வாழும் பிரதேசங்களில் மிக அதிகப்படியான காற்றாலைகளை நிறுவுவதானது மக்களின் அன்றாட வாழ்வில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

என்பதும் உண்மையானது. இவை ஒருபுறமிருக்கரூபவ் ஒவ்வொரு காற்றாலை மின்கோபுரத்தை நிறுவும்பொழுதும் எழுபதடிக்குமேல் நிலம் தோண்டப்படுகின்றது. இதன் காரணமாக கடல்நீர் ஊருக்குள் வரக்கூடிய வாய்ப்பும் மழைநீர் மண்ணுக்குள் சேகரிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிலத்தடிநீர் மாசுபடுவதென்பதும் கடல்நீர் உட்புகுவதும் வெறுமனே மன்னார் தீவை மட்டும் பாதிக்கின்ற விடயமல்ல. அது மன்னார் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நிலத்தடிநீரை பாதிக்கக்கூடும் என்ற அச்சமும் மக்களுக்கு உள்ளது. இதற்கெதிராகத்தான் மன்னார் தீவுப்பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

தேர்தலின் போது இவை அனைத்தும் நிறுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தாலும் இந்த வேலைத்திட்டத்தைத் தொடரும்படி ஜனாதிபதி இப்பொழுது உத்தரவிட்டிருக்கின்றார். தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் வாழ்வியல் உரிமைகளையும் அவர்களின் எதிர்காலத்தையும் அவை பாதித்துவிடக்கூடாது.

இந்த விடயத்தில் அத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது. ஏற்கனவே முப்பது காற்றாலைகளை நிறுவும்பொழுது மக்கள் அதற்கான எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. ஆனால் அதனால் இன்று ஏற்படுத்தப்படும் இரைச்சலினால் நிகழும் ஒலி மாசுபாடானது மக்களுக்கு பெரும்பிரச்சினையாக இருக்கின்றது என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

எனவே மேற்கொண்டு காற்றாலை மின்கோபுரங்களை அமைக்க வேண்டாம் என்பதுதான் மன்னார் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. இதனை அரசு கவனத்துடன் பரிசீலப்பதை விடுத்து இதற்கெதிராகப் போராடுபவர்களை அடித்துத் துன்புறுத்துவதும் சிறையிலடைப்பதும் ஜனநாயக விரோதமானதும் சர்வாதிகார அணுகுமுறையுமாகும்.

அரசாங்கம் இவற்றைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர்கள் தேர்தல்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும் மன்னார் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் கவனத்தில் எடுத்து ஏனைய காற்றாலை மின்கோபுர அமைப்புகளை வேறு பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதே சிறந்ததெனக் கருதுகிறோம். அத்தகைய முடிவெடுப்பதானது மன்னார் மக்கள் அமைதியாகவும் தமது வாழ்வாதாரங்களைப் பாதுகாத்து வாழவும் வழிவகுக்கும் எனக் கருதுகின்றோம் என தெரிவித்தார்.

https://www.samakalam.com/தமிழ்-மக்கள்-அபிவிருத்தி/

கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்!

1 month ago

கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்!

adminSeptember 30, 2025

01-1.jpg?fit=968%2C720&ssl=1

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை அனுமதியின் கோப்பாய் பகுதியில் கொட்டி தீ வைத்து விட்டு , வைத்தியசாலை ஊழியர்கள் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோப்பாய் நன்னீர் திட்டம் , விவசாய நிலங்களுக்கு அருகாமையில் , உள்ள வெற்றுக்காணிக்குக்குள் வைத்தியசாலைக்கு சொந்தமான வாகனத்தில் , வைத்தியசாலையின் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.

அதனை அவதானித்த ஊரவர்கள் , கழிவுகளை கொட்டுவது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதன் போது தாம் நீதிமன்ற அனுமதி பெற்றே நாம் இவ்விடத்தில் கழிவுகளை கொட்டுவதாக கூறியுள்ளனர். அதனை அடுத்து அப்பகுதி மக்கள் அது தொடர்பில் வலி. கிழக்கு பிரதேச சபைக்கும் அறிவித்துள்ளனர்.

அதற்கு கழிவுகளை கொட்டியவர்கள் அதற்கு தீ வைத்து விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்து , சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

https://globaltamilnews.net/2025/220960/

ஆளுங்கட்சியின் 159 உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு; மாதாந்தம் 3 கோடி ரூபாய் மக்கள் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு - உதய கம்மன்பில

1 month ago

29 Sep, 2025 | 02:39 PM

image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்கள் மாதாந்தம் சுமார் 3 கோடி ரூபாவை மக்கள் விடுதலை முன்னணியின் நிதியத்துக்கு வழங்கி மக்கள் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக குறிப்பிட்டு பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில் ஆளுங்கட்சியின் 159 உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (29) முறைப்பாடளித்ததன் பின்னர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு பின்வருமாறு குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான தேவானந்த சுரவீர 'நாங்கள் அனைவரும் எமது மாதாந்த சம்பளத்தை மக்கள் விடுதலை முன்னணியின் நிதியத்துக்கு முழுமையாக வழங்குகிறோம். கட்சி கொடுக்கும் நிதியில் இருந்து தான் வாழ்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தனது மாத சம்பளத்தை தனது விருப்பத்துக்கேற்ப செலவு செய்ய முடியாது.செலவு செய்யும் முறைமை தொடர்பில் நிச்சயிக்கப்பட்ட விடயதானங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாதாந்த கொடுப்பனவு, வருகைக்கான கொடுப்பனவு மற்றும் குழுக்களில் பங்குப்பற்றுவதற்கான கொடுப்பனவு என்ற மூன்று கொடுப்பனவுகளை மாத்திரம் தனது விருப்பத்துக்கேற்ப பயன்படுத்த முடியும்.

விருந்துபசார கொடுப்பனவு, தொலைபேசி மற்றும் வாகனத்துக்கான கட்டண கொடுப்பனவு, அலுவலக கொடுப்பனவு,எரிபொருள் கொடுப்பனவு ஆகிய கொடுப்பனவுகளை கட்சியின் நிதியத்துக்கு வழங்கி அவற்றை அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவது மக்கள் நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாகவும்.

தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களும் ஒவ்வொரு மாதமும் 3 கோடி ரூபாய் மக்கள் நிதியை முறைகேடாக தமது கட்சியின் நிதியத்துக்கு வழங்கியுள்ளார்கள். இவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தில் எவருக்கும் சிறப்பு சலுரக வழங்கப்படாது என்பதை அரசாங்கம் தாரக மந்திரமாக குறிப்பிடுகிறது. 159 பேருக்கு எதிராக சட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது என்பதை எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

https://www.virakesari.lk/article/226404

தனியார் வங்கியொன்று இலங்கையில் அதன் அனைத்து செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளமை சாதாரண விடயமல்ல – ஐக்கிய மக்கள் சக்தி

1 month ago

29 Sep, 2025 | 04:26 PM

image

(எம்.மனோசித்ரா)

உலகில் நீண்ட வரலாற்றைக் கொண்ட தனியார் வங்கியொன்று இலங்கையில் அதன் அனைத்து செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளமை சாதாரண விடயமல்ல. இது இலங்கையில் வங்கி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் எதிர்மறையான ஒரு போக்கினையே காண்பிக்கிறது. எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட்டு இதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மறைக்கப்பட்ட நெருக்கடியொன்று உருவாகியுள்ளது. பொருளாதார நிபுணர்கள், நாட்டிலுள்ள முதலீட்டாளர்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் இன்னும் சில ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்களை மீள செலுத்தாவிட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளன. எமக்கு கற்பனை உலகில் வாழ முடியாது.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் உரிய நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுக்காததால் நாடு பாரிய நெருக்கடிகளை ஏற்பட்டு, இறுதியில் ஆட்சியும் கவிழ்ந்தது. இவ்வாண்டின் 5 ஆண்டு ஆட்சி காலத்திலேயே மீண்டும் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த வேண்டிய காலம் ஆரம்பமாகிறது. வருடத்துக்கு சுமார் 5 பில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது.

ஆனால் நாட்;டில் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி இருப்பு 6 – 7 பில்லியன் டொலர் மாத்திரமே. வெளிநாட்டு கடன் மீள் செலுத்தலுடன் ஏனைய செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு நாட்;டின் அந்நிய செலாவணி இருப்பு ஆகக் குறைந்தது 12 பில்லியன் டொலராவது காணப்பட வேண்டும்.

ஆனால் பொருளாதார வளர்ச்சி வேகம் அதற்கு ஏற்றதாக இல்லை. எனவே அரசாங்கம் இதற்கு அரசியல் ரீதியான பதிலை வழங்காமல் பொருளாதார ரீதியிலான தீர்வினை முன்வைக்க வேண்டும்.

உலகில் நீண்ட வரலாற்றைக் கொண்ட தனியார் வங்கியொன்று இலங்கையில் அதன் அனைத்து செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளமை சாதாரண விடயமல்ல. இது இலங்கையில் வங்கி கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் எதிர்மறையான ஒரு போக்கினையே காண்பிக்கிறது.

எனவே இந்த வங்கி நாட்டில் அதன் செயற்பாடுகளை நிறுத்துவரத தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/226417

கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம் - இருவர் படுகாயம்

1 month ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கிளிநொச்சி - தட்டுவான்கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இருவர் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்துள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-யாழ். நிருபர் கஜிந்தன்-

https://adaderanatamil.lk/news/cmg4ur31g00q5o29nv8jqz4zn

ஜனாதிபதி இன்று ஜப்பானிய பிரதமரை சந்திக்கிறார்

1 month ago

29 Sep, 2025 | 01:28 PM

image

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று திங்கட்கிழமை (29) ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை (Shigeru ISHIBA) சந்தித்து கலந்துரையாடல் நடத்த உள்ளார்.

இதன்போது, இரு நாடுகளின் பொருளாதாரம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தப்படும்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர்.

https://www.virakesari.lk/article/226399

”LGBTQ சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டாம்” - பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

1 month ago

இலங்கையில் LGBTQ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு அனுமதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்த கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அத்தகைய நடவடிக்கை நாட்டின் கலாச்சாரத்தை அழித்துவிடும் என்றார். 

"தங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஆசைகளை நிறைவேற்ற இங்கு வரும் வெளிநாட்டினரால் இலங்கையின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பலியாக அனுமதிக்கக்கூடாது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதை அறிந்திருக்கிறாரா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவர் பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று கர்தினால் ரஞ்சித் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டில் கூறினார். 

"ஓரினச்சேர்க்கை மனப்பான்மையுடன் பிறந்தவர்களை நாம் துன்புறுத்தக்கூடாது. அவர்களை கருணையுடன் நடத்த வேண்டும். இருப்பினும், அத்தகைய மனப்பான்மையுடன் பிறக்காதவர்களை மாற்றும்படி கட்டாயப்படுத்தக்கூடாது," என்று அவர் மேலும் கூறினார்.

Tamilmirror Online || ”LGBTQ சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டாம்”

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக பதவியேற்கவுள்ள சிவாஜி

1 month ago

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக பதவியேற்கவுள்ள சிவாஜி

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ள நிலையில். எம்.கே.சிவாஜிலிங்கம் விரைவில் உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார் என்று தெரியவருகின்றது.

16 உறுப்பினர்களைக் கொண்ட வல்வெட்டித்துறை நகரசபைக்கு கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார ரீதியாகப் போட்டியிட்ட ஏழு உறுப்பினர்கள் வெற்றி பெற்று தமிழ்த்தேசியப் பேரவை ஆட்சி அமைத்துள்ளது. தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் தெரிவு செய்யப்பட்ட அப்புலிங்கம் உதயசூரியன் கடந்த மாதம் 27ஆம் திகதி தனது பதவி விலகல் தொடர்பில் தேர்தல் திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்தப் பதவி விலகல் தேர்தல் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அந்த வெற்றிடத்துக்கு தமிழ்த் தேசியக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆவணம் கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதும் விரைவில் எம்.கே.சிவாஜிலிங்கம் நகரசபை உறுப்பினராக பதவி ஏற்பார் என்றும் தெரியவருகின்றது.

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராக பதவியேற்கவுள்ள சிவாஜி

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ; ஒக்.4இல் ஒப்பந்தம்! - இளங்குமரன்

1 month ago

29 Sep, 2025 | 11:01 AM

image

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். 

நெடுந்தீவு பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் வேலணைக்குச் சென்றே தமக்கான எரிபொருட்களை பெற்றுக்கொள்கின்றனர். 

நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கு சுமார் ஒரு மணிநேரம் படகில் கடல் பயணம் மேற்கொண்டு, குறிகாட்டுவானில் இருந்து, வேலணை பகுதிக்கு தரை வழியாக சென்று எரிபொருட்களை கொள்வனவு செய்து, மீண்டும் நெடுந்தீவுக்கு கொண்டுசெல்லவேண்டிய நிலையிலேயே அப்பகுதி மக்கள் காணப்படுகின்றனர். 

இந்நிலையில், நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக அங்கு வாழும் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், தற்போது எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். 

நெடுந்தீவு போன்றே ஏனைய கடல் கடந்த தீவுகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என தீவுகளில் வசிக்கும் மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ; ஒக்.4இல் ஒப்பந்தம்! - இளங்குமரன் | Virakesari.lk

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தைத் தேடி மட்டக்களப்பு காயங்குடா காணியில் விசேட அதிரடிப்படையினர் அகழ்வு நடவடிக்கை!

1 month ago

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணியொன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி, விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை (29) நீதிமன்ற உத்தரவுக்கமைய அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்துள்ளது.

அந்த காலப்பகுதியில் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து, மறைத்து வைத்துள்ளதை அகழ்ந்து எடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற உத்தரவு பெற்று மண் அகழ்வும் இயந்திரமான பக்கோ இயந்திரம் மூலம் அகழ்வுப் பணியை இன்று முன்னெடுத்தனர்.

இதன்போது வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,  கல்லடி விசேட அதிரடிப்படை பொறுப்பாளர், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்,  தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப் பணியை இன்று காலை 9 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை மேற்கொண்டபோதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

இதையடுத்து அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதையடுத்து, அங்கிருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேறினர்.

இதேவேளை குறித்த பகுதி கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளதுடன் அங்கு அக்காலகட்டத்தில் புலிகளின் முகாம் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

download__2_.jpg


விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தைத் தேடி மட்டக்களப்பு காயங்குடா காணியில் விசேட அதிரடிப்படையினர் அகழ்வு நடவடிக்கை!  | Virakesari.lk

2014 முதல் 2022 வரை இலங்கை மின்சார சபைக்கு ரூ.594,368 மில்லியன் நஷ்டம் – கோப் குழுவில் தெரிவிப்பு

1 month ago

2015ஆம் ஆண்டு தவிர 2014 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் ரூ.594,368 மில்லியன் என்பது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) தெரியவந்தது.

இலங்கை மின்சார சபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பாராளுமன்ற உறுப்பினர்  நிஷாந்த சமரவீர அதன் தலைவர் தலைமையில் புதன்கிழமை (24) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரியவந்தது.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நஷ்டத்திற்குப் பல காரணங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய கோப் குழு,  நிறுவனத்தில் ஊழியர்கள் இருக்கும்போது சபையின் சில செயற்பாடுகள் வெளித்தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது. இதுபோன்ற தொடர்ச்சியான நஷ்டங்கள் காரணமாக 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணங்கள் அதிகளவில் அதிகரித்ததாகவும், இதன் காரணமாக மக்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இருப்பினும், 2023க்குப் பின்னர் மின்சார சபை இலாபம் ஈட்டும் நிலைக்குச் சென்றது என்பதும் இங்கு தெரியவந்தது.

கடந்த காலத்தில் சுமார் 18 மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டதற்கு கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணம் அல்ல என்றும், மாறாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் செலுத்தவேண்டிய கடன் செலுத்த முடியாமையே காரணம் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 

2014ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணம் போதுமானளவு திருத்தத்திற்கு உள்ளாகாமையால், திடீரென மின் கட்டணத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என்றும் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

இதன் காரணமாக மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 24 மணிநேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எல்.ரி.எல் நிறுவனத்தின் பங்குகள் பிரிக்கப்பட்ட விதம் தெளிவாக இல்லை என்றும், இந்த நிறுவனத்தை மறுசீரமைக்கும்போது இது மேலும் சிக்கலாக அமையலாம் என்றும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.  

எல்.ரி.எல். நிறுவனம் (லங்கா ட்ரான்ஃபோமர் நிறுவனம்), வெஸ்ட் கோஸ்ட் நிறுவனம் மற்றும் ஈசொட் (Esot) நிறுவனம் ஆகிய நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் செயல்பாடு குறித்து சிக்கல்கள் இருப்பதாக தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

இந்த நிறுவனத்தின் பங்குப் பிரிப்புக்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் மிகவும் தெளிவற்றதாக இருப்பதாகக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

எனவே, சட்டப் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குழு தெிவித்தது. 

அத்துடன் ஒக்டோபர் 24ஆம் திகதி எல்.ரி.எல். நிறுவனத்தை கோப் குழுவிற்கு அழைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

புத்தளம் அனல் மின் நிலையத் திட்டத்திற்காக ரூ. 124.30 மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 6 வாகனங்களை ஒப்பந்ததாரர் இன்னும் வழங்கவில்லை என்பதும் தெரியவந்தது. தொடர்புடைய ஒப்பந்தத்தின்படி, திட்டம் முடிந்த பிறகு இந்த வாகனங்கள் மின்சார சபையிடம் ஒப்படைக்கப்படவிருந்த போதும், அவை இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை. இதனால், பொதுச் சொத்து தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது

மேலும்,  இலங்கை மின்சார சபை ஊழியர் சேமலாப நிதிய விதிகளுக்கு முரணாக ரூ.64 மில்லியன் கல்விக் கடன் மற்றும் ரூ.6,618.3 மில்லியன் சொத்துக் கடன்களாக 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருப்பதாகவும் புலனானது. இந்தக் கடன்கள் பணிப்பாளர் சபை, தொழிலாளர் ஆணையாளர் மற்றும் உள்நாட்டரசிறை ஆணையாளர் நாயகம் ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் 2003ஆம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதி விதிமுறைகளைத் திருத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாமல் இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 11 மாதங்களாக பதில் உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவர் பணியாற்றி வருகின்றமை குறித்தும் கோப் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. 

இலங்கை மின்சார சபையில் குறிப்பாக அதிக அளவு பணம் புழக்கத்தில் உள்ள ஒரு நிறுவனமாக, நிரந்தர உள்ளகக் கணக்காய்வாளர் இல்லாதது வருந்தத்தக்கது என்று குழு சுட்டிக்காட்டியது. இந்தப் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்கள் எதிர்காலத்தில் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அனுமதி இல்லாமல் வழங்கப்பட்ட பல கொடுப்பனவுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. பதவியணி ஆணைக்குழு மற்றும் பொதுநிர்வாக சேவை ஆணைக்குழு ஆகியவற்றின் ஒப்புதல் இல்லாமல் 2008 ஏப்ரல் 9 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளின் பட்டியலில் சேர்க்கப்படாத கொடுப்பனவுகளுக்காக 2023ஆம் ஆண்டில் ரூ. 507.47 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. தொழில்முறை கொடுப்பனவைப் பெற உரிமையுள்ள அதிகாரிகளுக்கு தக்கவைப்பு கொடுப்பனவு வழங்கப்படக்கூடாது என்றாலும், தொழில்முறை கொடுப்பனவைப் பெற உரிமையுள்ள 517 அதிகாரிகளுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தக்கவைப்பு கொடுப்பனவாக ரூ. 99.85 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க குழு பரிந்துரைகளையும் வழங்கியது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹ்மான், சுஜீவ சேனசிங்க, அசித நிரோஷன எகொட விதான, சந்திம ஹெட்டியாராச்சி, சட்டத்தரணி நிலாந்தி கொட்டஹச்சி, ருவன் மாபலகம, எம்.கே.எம். அஸ்லம், திலின சமரகோன், ஜகத் மனுவர்ண, தர்மப்பிரிய விஜேசிங்க, தினேஷ் ஹேமந்த, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர். 

2014 முதல் 2022 வரை இலங்கை மின்சார சபைக்கு ரூ.594,368 மில்லியன் நஷ்டம் – கோப் குழுவில் தெரிவிப்பு  | Virakesari.lk

மன்னார் மக்கள் மீதான வன்முறை அடக்குமுறையானது தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு - ஸ்ரீகாந்தா

1 month ago

29 Sep, 2025 | 05:35 PM

image

(எம்.நியூட்டன்)

மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என  தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிரான அம்மாவட்ட மக்களது உண்மையான நீதியான போராட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது சட்ட விரோதமானது என கருதியிருந்தால் அதில் ஈடுபட்ட மக்களை சட்ட ரீதியாக கைது செய்திருக்க வேண்டும். 

ஆனால் அவர்களை தாக்குவதற்கும் காயங்களை ஏற்படுத்துவதற்கும் அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்க முடியாது.

அனுர தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவுக்கு வரும் இந்த சூழ்நிலையில், அரசு நடத்தியிருக்கிற இந்த காட்டு தர்பார் என்பது அரசுக்கு எதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்கள், பாரிய அளவில் பரந்து விரிவடையும் பொழுது அரசு அவை தொடர்பிலே எத்தகைய அணுகுமுறையை கையாளும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகவே நாங்கள் கருதுகிறோம்.

அத்துடன் இந்த அடாவடியை அங்கீகரிக்கவோ அல்லது ஆமோதிக்கவோ ஜனநாயகத்தை மக்களது அடிப்படை உரிமைகளை மதிக்கின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் கடந்த காலத்தில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், காற்றாலை திட்டம் தொடர்பில் ஒரு பரந்த அளவிலானதும் அந்த திட்டத்திற்கு எதிராக மன்னார் தீவில் எழுந்திருந்த நிலையில்,  80 நாட்களாக இந்த போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், அதை நசுக்க இந்த அரசு முயற்சிக்கின்றது.

இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வரை சென்று போராடும் மக்கள், இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த பின்னணியிலே அரசாங்கம் இந்த பிரச்சினையை நிதானமாக கையாள இந்த அரசு முனைந்திருக்க வேண்டும்.

உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்திருக்க வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை இரவிரவாக  காற்றாலை உபகரணங்கள், உதிரிப்பாகங்கள், இயந்திரங்கள் எல்லாம் மன்னார் தீவுக்குள் கொண்டுவரப்பட்ட போது அதற்கு மக்களுடைய எதிர்ப்பலை எழுந்திருந்த நேரத்தில், அதை நிதானமாக கையாள அரசு முயற்சித்திருக்க வேண்டிய நிலையில், அரசு காட்டுமிராண்டித்தனமான முறையில் அந்த மக்களை அடித்து துவைத்திருக்கிறது.

இதனால் சிலர் காயமடைந்து இருக்கிறார்கள். இதன் ஊடாக ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடுகிற மக்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் கூட இந்த அரசாங்க ஒரு செய்தியை சொல்லி இருப்பதாகத்தான்  கருத வேண்டி இருக்கிறது.

குறிப்பாக அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் ஒரு எல்லையைத் தாண்டுமாக இருந்தால் அரசாங்கம் தன்னுடைய பலத்தை மக்கள் மீது பிரயோகிக்க தயங்காது என்பதை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கோருகின்றேன்.

இப்பொழுது கூட நேரம் கடந்து விடவில்லை.  அரசாங்கம் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி தன்னுடைய நிலைப்பாட்டில் கூட அவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு நிதானமாக தீர்வுக்கு வர முடியும். ஆனால் நசுக்க முடியும் என்ற எண்ணத்திலே அரசாங்கம் செயற்படுமாக இருக்கின்றது.

குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகள் இந்த உண்மைகளை உணர வேண்டும்.

முழு இலங்கை தீவிலும் வாழ்கிற தமிழ் மக்கள் ஏன் ஜனநாயக உரிமைகளை மதிக்கிற சிங்கள மக்கள் கூட உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த சந்தர்ப்பத்திலே நான் சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார்.

மன்னார் மக்கள் மீதான வன்முறை அடக்குமுறையானது தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு - ஸ்ரீகாந்தா | Virakesari.lk

சிங்கள மக்கள் தமது தலைவரைக் காட்டிக் கொடுத்துள்ளனர் எனது கடவுள் பிரபாகரன் - இராமநாதன் அர்ச்சுனா

1 month ago

(எம்.மனோசித்ரா)

மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால் எம்மைப் போன்றவர்களை இலக்கு வைக்கின்றனர். எனது கடவுள் பிரபாகரன் என்பதை அச்சமின்றி கூறுகின்றேன். ஆனால் சிங்கள மக்கள் தமக்காக சேவையாற்றிய மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக் கொடுத்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

திங்கட்கிழமை (29) நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரபாகரன் எனது கடவுள் என்பதே எனது நிலைப்பாடாகும். எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன். ஆனால் இந்நாட்டு மக்கள் தமக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக முன்னின்ற தமது தலைவரை காட்டிக் கொடுத்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் தலைவர் அல்ல., ஆனால் அவர் சிங்கள மக்களின் தலைவராவார்.

ஆனால் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக் கொடுத்துள்ளனர். நாமல் உள்ளிட்டோர் கள்வர்கள் எனக் கூறிய போது நானும் அவற்றை நம்பினேன். முழு நாடும் அதை நம்பியது. பொய் கூறியவர்களை மேலாக பாரிய பொய்களைக் கூறுபவர்கள் வந்ததும் அனைவரும் அவர்களை நம்பினர். ஆனால் இறுதியில் அவர்களது பொய்கள் அனைத்தும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

எனக்காக முன்னிலையானமைக்காக நாமலுக்கு மதிப்பளிக்கின்றேன். நாமல் தவறிழைத்துள்ளார் எனில் அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதனை விடுத்து சிறுபிள்ளைத்தனமாக செயற்பட வேண்டாம். தும்புத்தடி எழுந்து பாராளுமன்றத்தில் உரையாற்றுவதாக சில எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். நான் தும்புத்தடியாக இருக்கின்றேனா அல்லது அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் அவ்வாறு இருக்கின்றார்களா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால் எம்மைப் போன்றவர்களை இலக்கு வைக்கின்றனர். ஒன்றில் என்னைக் கைது செய்வர். அல்லது சாமர சம்பத் தசநாயக்கவை கைது செய்வர். நாமிருவரும் இல்லை என்றால் ஆளுங்கட்சிக்கு அரசியலும் இல்லை. பிரபாகரன் எனது தலைவர் என்பதை நான் அச்சமின்றி கூறுகின்றேன். அவர் பயங்கரவாதியா என பல முறை கேள்வியெழுப்பியும் யாரும் அதற்கு பதிலளிக்கவில்லை.

அந்த கேள்விக்கு பதிலளித்தால் வடக்கில் வாக்கு வங்கி வீழ்ச்சியடையும் என்பதை அங்கிருப்போருக்கு தெரியும். என்னை பைத்தியம் என்று கூறுவதால் எனக்கு கவலையில்லை. ஆனால் நான் ஓரினச் சேர்க்கையாளன் அல்ல என்றார்.

சிங்கள மக்கள் தமது தலைவரைக் காட்டிக் கொடுத்துள்ளனர் எனது கடவுள் பிரபாகரன் - இராமநாதன் அர்ச்சுனா | Virakesari.lk

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

1 month ago

New-Project-14-5.jpg?resize=750%2C375&ss

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது!

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1448885

பூநகரியில் விபத்து; 5 வயது சிறுமி பலி!

1 month ago

Published By: Digital Desk 1

29 Sep, 2025 | 10:30 AM

image

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் 18வது மைல்கல் அருகே இடம்பெற்ற விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூநகரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், அதன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் உடன் பயணித்த சிறுமியும் காயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சிறுமி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூநகரி பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/226373

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி உறுதி!

1 month ago

New-Project-371.jpg?resize=750%2C375&ssl

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி உறுதி!

கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில், எந்த நாடும் தனியாக முன்னேற முடியாது என்றும், சிறந்த இராஜதந்திர உறவுகள் இலங்கையை உலகின் உச்சத்திற்கு உயர்த்தும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும், இலங்கை வரலாற்றில் எந்த இன மோதல்களும் தலைதூக்காத ஆண்டாக கடந்த வருடம் வரலாற்றில் இணைவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

டோக்கியோவில் உள்ள Reiyukai மண்டபத்தில் நேற்று (28) பிற்பகல் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில், மகா சங்கத்தினர், மதத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஜப்பானில் வசிக்கும் பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையிலோ அல்லது நாட்டிற்கு வெளியேயோ வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் தனிப்பட்ட சலுகைகள் அல்லது நலன்களை எதிர்பார்த்து தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைவரும் எதிர்பார்த்த மாற்றத்திற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அரசாங்கத்தின் ஒரு வருட பயணத்தின் வெற்றியை அளவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிறுவுதல், சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல், ஊழல் மற்றும் மோசடி இல்லாத ஆட்சியை நிறுவுதல் மற்றும் அரச இயந்திரத்தை செயற்திறனுள்ளதாக்குதல் போன்ற மக்கள் எதிர்பார்க்கும் புதிய மாற்றங்களுக்கு அரசாங்கம் கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க பணிகளை நிறைவேற்றியுள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்தோடு வெளியில் கட்டியெழுப்பப்பட்டு வரும் பொருளாதாரத்திற்குள் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கவில்லை என்றும், எதிர்காலத்தில் சில வரி விகிதங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கட்டியெழுப்பப்படும் இலங்கையில் முதலீடு செய்து, நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்காளராகுமாறு ஜப்பானில் வாழும் இலங்கையரிடம் இதன் போது கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி பதிலளித்தார்.

ஜப்பானில் வாழும் இலங்கை சமூகத்தினரிடையே உரையாற்றிய ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:

இலங்கையின் புதிய அரசியல் மாற்றத்திற்கு நீங்கள் பல்வேறு வழிகளில் ஆதரவளித்துள்ளீர்கள்.

செப்டம்பர் 21 ஆம் திகதி ஏற்பட்ட அந்த அரசியல் திருப்பத்தில் நீங்கள் பங்கேற்பாளராகவும் பங்குதாரர்களாகவும் மாறிவிட்டீர்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்து இப்போது ஒரு வருடம் நிறைவடைகிறது.

இந்த ஒரு வருட காலத்தை எந்த அளவுகோலால் அளவிட வேண்டும்? கடந்த ஆண்டு நல்லதா கெட்டதா என்பதை, நாங்கள் அரசாங்கத்தை அமைத்தபோது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளால் அளவிட வேண்டும்.

அவ்வாறின்றி, நாங்கள் ஆட்சி அமைத்தபோது வேறு எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தவர்களின் கருத்துகளின் அடிப்படையில் அல்ல.

அன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்க எந்த நோக்கத்திற்காக ஆதரித்தீர்கள்?

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களான நீங்களோ அல்லது எங்கள் அரசாங்கத்தை உருவாக்க பங்களித்த இலங்கையில் உள்ள எவருமோ தனிப்பட்ட ரீதியில் எதையும் சம்பாதிக்கும் நோக்கிலோ, சலுகை பெற வேண்டுமென்றோ தனிப்பட்ட முறையில் ஏதாவது பெற வேண்டும் என்ற நோக்கத்துடனோ செயல்படவில்லை.

எனவே, நீங்கள் அனைவரும் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால் சென்று ஒரு நாடாக, ஒரு தேசமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் விருப்பத்துடன் மட்டுமே பங்களித்தீர்கள்.

ஏற்கனவே இருந்த பாதைக்கு பதிலாக ஒரு புதிய பாதையை உருவாக்கும் நோக்கத்துடன் நீங்கள் செயல்பட்டீர்கள்.

முதலில், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியிருந்தது.

இன்று, நாட்டின் பொருளாதாரத்தை நாம் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஸ்தீரப்படுத்தியுள்ளோம்.

ஆனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

அதேபோன்று, சட்டத்தின் ஆட்சியை நீங்கள் எதிர்பார்த்தீர்கள்.

ஒவ்வொரு வளர்ந்த நாட்டிலும் இருக்கும் காரணி என்னவென்றால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நாங்கள் காண்கிறோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

ஆனால் சட்டத்தை அணுகக்கூடியவர்களும் அணுக முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்பது எங்கள் கருத்தாக இருந்தது.

அதிகாரத்தாலும் செல்வத்தாலும் இந்த நிலை உருவாக்கப்பட்டது.

ஆனால் இன்று, சட்டத்தை அணுக முடியாத யாரும் நம் இலங்கையில் வசிக்கவில்லை.

நாட்டைக் கட்டியெழுப்புவதில், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை, சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல் மற்றும் மோசடி மற்றும் ஊழலைக் குறைத்தல் மற்றும் திறமையான அரச பொறிமுறை என்பன அவசியம்.

இன்று, இலங்கையில் 76 ஆண்டுகால அரசியல் அதிகாரத்திற்குப் பிறகு, பொதுமக்களின் பணம் திருடவோ அல்லது வீணாக்கவோ செய்யாத ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

ஏனெனில், அரச பொறிமுறையானது இந்த பழைய பழக்கங்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும்.

அதை மாற்றுவதற்கான முதல் படியை நாங்கள் எடுத்துள்ளோம்.

சிறந்த அரச சேவையை உருவாக்க தேவையான அடிப்படை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.

வலுவான இராஜதந்திர உறவுகளை உருவாக்குவதும் மிக முக்கியம்.

உலகில் எந்த நாடும் இனி தனிமையில் வாழ முடியாது.

பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளால் நாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளோம்.

எனவே, தேசிய எல்லைகள் இருந்தாலும், பொருளாதாரத்தில் இனி தேசிய எல்லைகள் கிடையாது.

சந்தையில் தேசிய எல்லைகள் இல்லை.

அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன.

எனவே, ஒரு அரசு முன்னேற, வலுவான, நிலையான மற்றும் தெளிவான வெளிநாட்டு உறவுகள் அவசியம்.

கடந்த ஆண்டில், நமது இராஜதந்திர உறவுகளில் பராமரிக்கப்பட வேண்டிய சமநிலையை எம்மால் குறிப்பிடத்தக்க அளவில் பராமரிக்க முடிந்தது என்று நான் நினைக்கிறேன்.

இந்த அடிப்படைகளை நிறுவாமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

மேலும், வெவ்வேறு இனக்குழுக்கள் மற்றும் மதங்கள் நம் நாட்டில் வாழ்கின்றன.

அவர்களுக்கு அவற்றின் தனித்துவமான கலாச்சாரங்கள் உள்ளன. எனவே, நமது நாடு பல்வேறு மக்கள் நிறைந்த நாடு.

நமது நாட்டை முன்னோக்கி நகர்த்த, இந்த மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.

ஆனால் நீண்டகால அரசியல் போராட்டத்தின் காரணமாக, இந்த மக்கள் பல்வேறு இன மோதல்கள் மற்றும் மத மோதல்களை உருவாக்குவதன் மூலம் ஒருவருக்கொருவர் அந்நியப்படுத்தப்பட்டனர்.

புவிசார் அரசியல் இயக்கம் அத்தகைய இன ஆதாரங்கள் மற்றும் சித்தாந்தங்களுடன் கட்டமைக்கப்பட்டது.

எனவே, மோதல்கள் நிறைந்த ஒரு நாடு, ஒருவருக்கொருவர் பிரிவினையையும் வெறுப்பையும் விதைக்கும் ஒரு நாடு முன்னேற முடியாது.

எனவே, நம் நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை, மொழி வேறுபாடுகள் மற்றும் மத வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளும் ஒருமித்த கருத்தைக் கொண்ட ஒரு அரசை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

கடந்த ஆண்டு இலங்கையின் வரலாற்றில் எந்த இன மோதல்களும் அதிகரிக்காத ஆண்டு என்று நான் நினைக்கிறேன். ஆனால் நாம் மேலும் முன்னேற வேண்டும்.

ஒரு வலுவான கட்டிடத்தை கட்டியெழுப்ப, நமக்கு மிகவும் வலுவான அடித்தளம் தேவை.

ஆனால் நம் நாடு அடித்தளம் உடைந்த ஒரு நாடு. இன்று நாம் அந்த அடித்தளத்தை அமைத்துவிட்டோம்.

கடந்த ஆண்டு நமது நாட்டை முன்னோக்கி கட்டியெழுப்ப தேவையான வலுவான அடித்தளத்தை அமைத்த ஆண்டு.

இப்போது நாம் இந்த அடித்தளத்தின் மீது கட்டிடங்களை கட்டத் தொடங்க வேண்டும்.

இந்த அடித்தளத்தில் நாட்டை கட்டியெழுப்பும்போது, அரசாங்கத்திற்கு சவால்கள் உள்ளன.

நாட்டிற்கு ஒரு சவால் உள்ளது.

மக்களுக்கும் ஒரு சவால் உள்ளது.

அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால் வருவாயை ஈட்டுவதாகும்.

நாடு எதிர்கொள்ளும் சவால் பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்ய தேவையான டொலர்களை ஈட்டுவதாகும்.

மேலும் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் அவசியம்.

எனவே, அரசாங்கம் வருவாயை ஈட்ட வேண்டும்.

இலங்கையில் முதல் முறையாக, வரவு செலவுத் திடத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் வருவாயை விட இந்த ஆண்டு அதிக வருவாயை ஈட்ட முடிந்தது.

அரசாங்கம் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து வருவாயை ஈட்டுவதற்கு பதிலாக, அரசாங்கம் ஒரு வெளியில் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

அந்த வெளிப் பொருளாதாரத்தை தயார் செய்வதற்கு தேவையான சட்ட ஆதரவு மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் வகிபாகமாகும்.

வெளிப் பொருளாதாரம் வளரும்போது, வரி விகிதம் குறைந்து மக்கள் நிவாரணம் பெறுவர்.

அதன்படி, இந்த வரவு செலவுத் திட்டத்தில் எந்த புதிய வரிகளையும் அறிமுகப்படுத்தாதிருக்க எதிர்பார்க்கிறோம்.

எதிர்காலத்தில் சில வரி விகிதங்களை குறைப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.

இவ்வாறு எங்களிடம் பொருளாதாரத் திட்டங்கள் உள்ளன.

அதற்காக, வெளியிலே பாரிய பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும்.

அதில், சுற்றுலாத் துறையில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

2030 ஆம் ஆண்டுக்குள் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து 8 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருளாதாரமாக மாற நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அதற்காக, வர்த்தகர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கி வருவதோடு சுற்றுலாத் துறைக்குத் தேவையான சூழலை உருவாக்குகிறது.

மேலும், இலங்கையின் பிம்பத்தை மேம்படுத்துவது இந்த விடயத்தில் முக்கியமானது.

இலங்கை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

மேலும், நாடு தற்போது தேவையான முதலீடுகளைப் பெற்று வருகிறது.

நெடுஞ்சாலைகள், மின்சாரம், நீர் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசாங்கம் அதிக முதலீடு செய்ய வேண்டும்.

அதேபோன்று, தனியார் துறை பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். அரசாங்கத்திடம் அதிக எண்ணிக்கையிலான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

பெயர் இருந்தபோதிலும், அவை அந்த நிலத்திற்கு ஏற்ப வருமானத்தை ஈட்டுவதில்லை.

எனவே, மிகவும் மதிப்புமிக்க எமது வளமான நிலத்தை மிகச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும்.

எனவே, தோட்டங்களை வைத்திருக்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பலனற்ற அனைத்து நிலங்களையும் வழங்குமாறு நாங்கள் அறிவித்துள்ளோம்.

அவற்றில் முதலீடு செய்ய உங்களை அழைக்கிறோம்.

உங்களுக்கான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் பணியாகும்.

மேலும், தொழில்வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு.

இன்று, அந்த பொறுப்பை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.

எனவே, சில ஆண்டுகள் கடினமாக உழைத்தால், நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமையை பொருளாதார ரீதியாக நாம் போக்க முடியும்.

மேலும், அரச சேவையை செயற்திறனுள்ளதாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

டிஜிட்டல் மயமாக்கலை அதன் முக்கிய அங்கமாக நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

அடுத்த ஆண்டுக்குள், அரசாங்கத்துடனான அனைத்து கொடுக்கல் வாங்கலும் ஒன்லைனில் செலுத்தப்படும்.

மேலும், கேள்வி மனுக்கல், மற்றும் சுங்கப் பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். அதை வெற்றிகரமாக மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நமது நாட்டின் சட்டங்களை இயற்றியவர்களே அந்தச் சட்டங்களுக்கு மாறாகச் செயல்பட்டுள்ளனர்.

சட்டம் இருந்தாலும், அது செயல்படுத்தப்படவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

சட்டம் மட்டும் போதுமானதல்ல. அது செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இப்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்று, 40 கட்சிகள் ஒரே அறையில் கூடும் அளவுக்கு அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டின் பிரஜைகள், சட்டத்திற்கு பயப்பட வேண்டும்.

அந்த கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.

மேலும், தேசிய பிரச்சினையை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே மேலும் மோதல்கள் இல்லாத வகையில் நாட்டை ஆளுவதே எங்கள் அணுகுமுறையாகும்.

வடக்கின் மக்கள் போரினால் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

இனிமேல் போர் இல்லாத வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

வடக்கு மக்களுக்கு தேவையான அபிவிருத்தி மற்றும் சட்டப் பாதுகாப்பு வழங்கி சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ள ஒரு நாட்டையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

நமது குழந்தைகளை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றவும் நாங்கள் பாடுபடுகிறோம்.

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பின்னிப் பிணைந்துள்ளன.

இன்று, இவற்றைக் கட்டுப்படுத்த நாங்கள் பாடுபடுகிறோம்.

போதைப்பொருள் மற்றும் குற்றங்களின் இந்த மறைவான அரசை மூட முடிவு செய்துள்ளோம்.

மேலும், இந்த பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும்.

நாம் மேல்மட்டத்தில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சியைக் காட்டினாலும், மக்களின் வாழ்க்கை மாறவில்லை என்றால், அது பலனளிக்காது.

மக்களின் வாழ்க்கையை எப்போதும் ‘அஸ்வெசும’வுக்கு மட்டுப்படுத்தப்பட முடியாது.

அவர்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

எனவே, விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளை நவீன தொழில்நுட்பத்துடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.

கிராமங்களுக்கு பொருளாதாரத்தையும் விரிவுபடுத்த வேண்டும்.

அதற்குத் தேவையான திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் நமது நாட்டு மக்கள் ஒரு புதிய மாற்றத்தை, ஒரு புதிய பயணத்தை விரும்பியிருந்தால், அந்த புதிய மாற்றத்திற்கும் புதிய பயணத்திற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்கிறோம்.

அந்தப் பயணத்தில் உங்கள் பங்களிப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

உங்களிடமிருந்து ஒரு கிண்ணம் நீர் கூட எங்களுக்கு வேண்டாம். நாட்டிற்கு முதலீடுகளைக் கொண்டு வாருங்கள்.

மேலும், வெளிநாட்டில் பணிபுரியும் போது நீங்கள் பெற்ற அனுபவங்களை எங்கள் நாட்டிற்கு கொண்டு வாருங்கள்.

அதற்குத் தேவையான வசதிகளை நாங்கள் தயார் செய்து தருகிறோம்.

அதன்படி, தேசத்தைக் கட்டியெழுப்பும் பயணத்தின் ஒரு பகுதியாக மாற உங்களுக்கு வாய்ப்பு உள்ளது” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

https://athavannews.com/2025/1448799

Checked
Sun, 11/02/2025 - 08:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr