24 Sep, 2025 | 04:01 PM

தமிழர் தாயகப்பரப்பில் அரச கட்டமைப்புக்களினூடாக முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் இந்திய அரசின் நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலை நோயாளர் விடுதிஅமைக்கும் திட்டத்தை மீள ஆரம்பிப்பதுடன், முள்ளியவளை கலைமகள் வித்தியாலய வகுப்பறைத் தொகுதியின் கட்டுமானப்பணிகளை மீள ஆரம்பிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தம்மால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற சந்திப்பில் தம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தோம். இதன்போது ஆக்கபூர்வமாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.
குறிப்பாக நானும் இதன்போது பல்வேறு விடயங்கள் சார்ந்து கருத்துக்களை இந்திய உயர்ஸ்தானிகருக்குத் தெரிவித்திருந்தேன்.
குறிப்பாக இதன்போது மாகாணசபைகள் தொடர்பில் பேசியிருந்தேன். அந்தவகையில் மாகாணசபை முறைமையை இந்தநாட்டில் அறிமுகப்படுத்தியதே இந்தியாதான் ஆனால் தற்போது மகாணசபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் தெரிவித்தேன்.
அத்தோடு மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் என்று கூறப்பட்டு வருகின்றபோதும் நீண்டகாலமாக மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படாமலுள்ளமையினையும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதேவேளை தமிழர் தாயகப்பரப்பிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் தமிழ் மக்களுக்குரிய அதிகமான நிலப்பரப்புக்கள் சில திணைக்களங்களினூடாக அபகரிக்கப்பட்டுள்ள விடயத்தினையும் இதன்போது எடுத்துக்கூறியிருந்தேன்.
இவ்வாறு எமது தமிழ் மக்களின் பெருமளவான பூர்வீக நிலங்கள் வனவளத்திணைகமகளம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், படையினர்போன்ற அரசகட்டமைப்புக்களினூடாக அபகரிக்கப்பட்டுள்ளதால் எமதுக்கள் விவசாயம், கடற்றொழில், கால்நடைவளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடுவதிலும் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பதையும் இதன்போது தெளிவுபடுத்தினேன்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசகட்டமைப்புக்களின் ஊடாக காணி அபகரிப்புக்கள் இடம்பெற்றுள்ள விதத்தை புள்ளிவிபரங்களின் மூலம் சுட்டிக்காட்டியதுடன், வடக்கு, கிழக்கில் உள்ள எட்டுமாவட்டங்களிலும் இதே ஆக்கிரமிப்பு நிலமைகள் இருப்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தேன்.
இதுதவிர இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள்தொடர்பிலும் இதன்போது கருத்துக்களை முன்வைத்திருந்தேன்.
குறிப்பாக ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடந்தகாலயுத்தம் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில் வடக்குமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட கடற்பரப்புக்களில் தற்போது இந்திய இழுவைப்படகுகள் அத்தமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுவதால், வடபகுதி தமிழ் மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில்கூட இந்திய இழுவைப்படகுகள் தமது அத்துமீறிய சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தை நான் அவதானித்தவற்றையும் எடுத்துக்கூறினேன். எனவே இந்த விடயத்தில் கூடுதல் கவனமெடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தேன்.
அதேவேளை இந்திய நிதிஉதவியில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்திய சாலையில் அமைக்கப்படவிருந்த நோயாளர் விடுதி இதுவரை அமைக்கப்படாமலுள்ளமை தொடர்பிலும் இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன்.
குறித்த முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் விடுதி அமைப்பதுதொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றில் சுகாதார அமைச்சரிடம் நான் கேள்வி எழுப்பியிருந்தநிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ விரைவில் குறித்த நோயாளர் விடுதிக்கான வேலைத்திட்டங்களுக்கான நடவடிக்மைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனத் தெரிவித்த விடயத்தையும் இதன்போது தெரியப்படுத்தினேன்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் போதுமான அளவில் முறையான நோயாளர் விடுதி இன்மையால் மக்கள் பெருத்த இடர்பாடுகளுக்கு மத்தியில் சிகிச்சைபெற்றுவருவதைச் சுட்டிக்காட்டி, இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தேன்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள கலைமகள்வித்தியாலயத்தில் இந்திய நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தொகுதி அமைக்கும் வேலைத்திட்டம் இடைநடுவே கைவிடப்பட்டுக் காணப்படுகின்ற விடயத்தினை இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரதே கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன்.
இவ்வாறு இந்திய நிதி உதவியில் அமைக்கப்பட்டு, பூரணப்படுத்தப்படாமலுள்ள கட்டடத் தொகுதியிலேயே மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமையினையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.
அத்தோடு குறித்த வகுப்பறைக் கட்டடத்தொகுதி அமைப்பதுடன் தொடர்புடைய சில ஆவணங்களும் இதன்போது என்னால் கையளிக்கப்பட்டிருந்தது. அத்தோடு மாணவர்களின் நலன்கருதி விரைவாக முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டடத்தொகுதி வேலைகளை விரைந்து ஆரம்பிக்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை முன்வைத்தேன்.
என்னால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை செவிமடுத்த இந்திய உயர்ஸ்தானிகர், என்னால் முன்வைக்கப்பட்ட சகலவிடயங்களிலும் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலை நோயாளர்விடுதி அமைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவும் கூடுதல் கரிசனையுடன் செயற்படுவதாகவும், விரைவில் தாமும் இந்தவிடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி குறித்த நோயாளர் விடுதியை அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு முள்ளியவளை கலைமகள் வித்தியாலய வகுப்பறைக் கட்டடத்தொகுதி விடயத்திலும் தாம் கூடுதல் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.
அதேவேளை இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி நுழைகின்ற விடயத்திலும் தாம் கவனம் செலுத்துவதாகவும் இதன்போது இந்தியஉயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
மேலும் அரசியல்ரீதியான பல்வேறு விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அந்தவகையில் ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது. கலந்துகொண்ட அனைத்துப் பராாளுமன்ற உறுப்பினர்களும் ஆக்கபூர்வமாக தமது கருத்துக்களை முன்வைத்தனர் என்றார்.

https://www.virakesari.lk/article/225962