முல்லைத்தீவு - வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக வெட்டி அழிக்கப்பட்ட மரங்கள்
02 Oct, 2025 | 09:30 AM

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையர்கட்டு வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை (01) உரிய இடத்திற்கு நேரடியாகச்சென்று நிலமைகளை ஆராய்ந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்களுக்கெதிராக விரைந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு வெள்ளப்பள்ளம் கிராமஅலுவலர், உடையார்கட்டு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள வெள்ளப்பள்ளம் குளக்காணியில் உள்ள நீர்மரங்கள் பாரிய அளவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளன.
குறித்த வெள்ளப்பள்ளம் குளத்தின் அருகிலுள்ள ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளரினாலேயே இவ்வாறு நீர்மரங்கள் பாரியளவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைவாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்றையதினம் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்ததுடன், பிரச்சினை தொடர்பாக மக்களிடம் கேட்டறிந்துகொண்டார்.
அந்தவகையில் உடையார்கட்டு கமநலசேவைநிலைய பிரிவிற்குட்பட்ட வெள்ளப்பள்ளம் குளத்தின் அருகிலுள்ள ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளர் ஏற்கனவே குறித்த வெள்ளப்பள்ளம் குளத்திற்குரித்தான பெருமளவான பகுதிகளை ஆகிரமித்துள்ளதாக கிரமமக்களால் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் அதன் தொடர்சியாகவே குறித்த ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளர் குளத்தின் எஞ்சியபகுதிகளையும் ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே இவ்வாறு மரங்களை வெட்டியிருக்கலாமெனவும் கிராமமக்களால் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு இவ்வாறு குளத்தின் பகுதிகளிலுள்ள நீர் மரங்கள் பெருமளவு அழிக்கப்பட்டமையால் நிலத்தடி நீர் அற்றுப்போகும் அபாயம் ஏற்படுமெனவும், அருகிலுள்ள கிணறுகளில் நீரின்றிப்போகுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் எஞ்சிய குளத்தின் பகுதிகளும் தனிநபரினால் ஆக்கிரமிக்கப்பட்டால் அப்பகுதி கால்நடைகளுக்கு குடிநீரில்லாமல் போகும் அபாயம் ஏற்படுமெனவும் மக்களால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
குளத்தின் காணிகளுக்குள் சட்டவிரோதமாக மரங்கள் பாரிய அளவில் வெட்டி அழிக்கப்பட்டமைக்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் பொலிசார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடும் செய்யப்பட்டது.
அதேவேளை இவ்வாறு குளக்காணிக்குள் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டமைக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிராமமக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு இதன்போது மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உடனடியாக உடையார்கட்டு கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வெள்ளப்பள்ளம் பகுதிக்குரிய கிராம அலுவலர் ஆகியோரை குறித்த பகுதிக்கு அழைத்ததுடன், நிலைமைகளை காண்பித்து சட்டவிரோதமாக குளக்காணிக்குள் நீர்மரங்கள் வெட்டப்பட்டமைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
அதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளருக்கும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு சட்டவிரோதமாக குளக்காணிக்குள் பாரிய அளவில் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டமைக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினர்.
அந்தவகையில் வெள்ளப்பள்ளம் குளத்தின் பகுதிக்குள் சட்டவிரோதமாக பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டமைக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கிராமஅலுவலர், உடையார்கட்டு கமநலசேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



https://www.virakesari.lk/article/226635