எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின் ஊடாகவே உறுதிப்படுத்தப்படவேண்டும்; வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்குக் கடிதம்
Published By: Vishnu
11 Dec, 2025 | 01:27 AM

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றம் குறித்து ஒரு சமரச அணுகுமுறையைப் பரிசீலித்துவரும் நாடுகளுக்கு நாம் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம். இந்த அரசாங்கம் ஏற்கனவே ஒரு வருடமாக அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் இதுவரை நீதி வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
ஏற்கனவே சரிவடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் தற்போதைய அனர்த்தத்தினால் மேலும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எமது விவகாரத்தை விட அக்கறைக்குரிய பல விடயங்கள் உள்ளன. எனவே எமக்கு இழைக்கப்பட்ட கடும் அநீதிகளுக்கான பொறுப்பேற்பு சர்வதேச விசாரணை ஊடாகவே உறுதிசெய்யப்படவேண்டும். அதுவும் காலதாமதமின்றி நிகழவேண்டும் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவியினால் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
புதன்கிழமை (10) சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோரும், அன்புக்குரியவர்களுமான நாம், எமது குடும்ப உறுப்பினர்களைத்தேடி 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவருகிறோம். எமது போராட்டம் பதில்களோ அல்லது நீதியோ இல்லாமல் தொடர்கிறது.
இந்த 'சர்வதேச மனித உரிமைகள் தினம்' 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இலங்கையில் தமிழர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு, இனவழிப்பினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இனவழிப்பின் மிகக்கொடூரமான வடிவமொன்று 2009 ஆம் ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டது. சரணடைந்தவர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் எனப் பொய்யான வாக்குறுதி அளித்து, அதனை நம்பி தாமாகவே சரணடைந்த 29 குழந்தைகள் உட்பட குடும்பமாகச் சரணடைந்தவர்களும், உறவுகளால் கையளிக்கப்பட்டவர்களும் இலங்கை அரசாங்கத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள். அந்த நாள் முதல் எமது வலியும், போராட்டமும் நின்றபாடில்லை.
சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகப் போராடும் எம்மைப் பொறுத்தமட்டில், இந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருளாக இந்தக் குற்றங்களுக்கான பொறுப்பேற்பே உள்ளது. அதிகாரத்துக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நீதியை வழங்குவோம் எனக்கூறி சர்வதேச சமூகத்துக்கு முன்பு தன்னை ஒரு மீட்பராக முன்னிறுத்துகிறது. ஆயினும், ஒவ்வொரு முறையும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான கோப்பை மூடுவதற்கும், முன்னேற்றம் எட்டப்பட்டிருக்கிறது என்ற மாயையைக் கட்டமைப்பதற்கும் செயற்திறனற்ற பொறிமுறைகள் அல்லது குறுக்குவழிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சர்வதேசத்தின் ஆதரவுடன் நாம் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களைத் தேடிய சுமார் 500 பெற்றோர்களும், உறவினர்களும் எவ்வித பதிலோ, நீதியோ கிட்டாமல் மரணித்துவிட்டார்கள். இந்த எண்ணிக்கை சமீபத்திய 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நெருக்கமானது. ஆயினும் எமத இறப்புகளுக்கு எந்த நாடும் துக்கப்படவோ, அக்கறைப்படவோ இல்லை. எந்த நாடும் உதவிக்கு வரவில்லை. இந்தத் தொடர்ச்சியான சோகத்தை சர்வதேச சமூகம் ஏன் கருத்திற்கொள்ளத் தவறிவிட்டது?
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றம் குறித்து ஒரு சமரச அணுகுமுறையைப் பரிசீலித்துவரும் நாடுகளுக்கு நாம் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம். இந்த அரசாங்கம் ஏற்கனவே ஒரு வருடமாக அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் இதுவரை நீதி வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஏற்கனவே சரிவடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் தற்போதைய அனர்த்தத்தினால் மேலும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எமது விவகாரத்தை விட அக்கறைக்குரிய பல விடயங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இனத்துவேசத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் இலங்கையில் இருக்கும் வரை, எந்தக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியாக இருந்தாலும், எமக்கான நீதியை வழங்குவதற்குத் தயாராகவோ அல்லது எதிர்ப்புக்களை மீறி அதனைச் செய்யக்கூடிய திறனுடையவராகவோ இருக்கமாட்டார். எனவே எமக்கு இழைக்கப்பட்ட கடும் அநீதிகளுக்கான பொறுப்பேற்பு சர்வதேச விசாரணை ஊடாகவே உறுதிசெய்யப்படவேண்டும். அதுவும் காலதாமதமின்றி நிகழவேண்டும்.
எனவே நாம் நீண்டகாலமாக முன்வைத்துவரும் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறோம். இனப்படுகொலை, சர்வதேசக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்தவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
https://www.virakesari.lk/article/233026