Published By: Vishnu
29 Oct, 2025 | 12:43 AM

(எம்.மனோசித்ரா)
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்தும் வகையில் 22 துறைகளில் சுமார் 8000 ஆட்சேர்ப்புக்களும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேரச் சட்டகத்தை அடையாளங் கண்டு, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர3 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த குழுவுக்கு அந்தந்த அமைச்சுக்களில் குறித்த அமைச்சின் கீழ் இயங்குகின்ற திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவுகின்ற பதவி வெற்றிடங்களைப் நிரப்புவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் விதந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
அந்த விதந்துரைகளுக்கமைய அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 79 ஆட்சேர்ப்புக்களுக்கும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் 120 ஆட்சேர்ப்புக்களுக்கும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் 44 ஆட்சேர்ப்புக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சில் 17 ஆட்சேர்ப்புக்களுக்கும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சில் 123 ஆட்சேர்ப்புக்களுக்கும், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சில் ஒரு ஆட்சேர்ப்புக்கும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் 310 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சிர் ஒரு ஆட்சேர்ப்புக்கும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் ஒரு ஆட்சேர்ப்புக்கும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் 48 ஆட்சேர்ப்புக்களுக்கும், வெளி விவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் 54 ஆட்சேர்ப்புக்களுக்கும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மறும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சில் 6 ஆட்சேர்ப்புக்களுக்கும், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சில் 355 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சில் 5,198 ஆட்சேர்ப்புக்களுக்கும், பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் 213 ஆட்சேர்ப்புக்களுக்கும், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சு 1,261 ஆட்சேர்ப்புக்களுக்கும், தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரு ஆட்சேர்ப்புக்களுக்கும், வடக்கு மாகாண சபையில் 115 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சப்பிரகமுவ மாகாண சபையில் 11 ஆட்சேர்ப்புக்களுக்கும், வடமேல் மாகாண சபையில் 85 ஆட்சேர்ப்புக்களுக்கும், வடமத்திய மாகாண சபையில் 89 ஆட்சேர்ப்புக்களுக்கும், மேல் மாகாண சபை 414 ஆட்சேர்ப்புக்களுக்கும் என ஒட்டுமொத்தமாக 8,547 ஆட்சேர்ப்புக்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரியில் 2003 ஆட்சேர்ப்புக்களுக்கும், மார்ச்சில் 5882 ஆட்சேர்ப்புக்களுக்கும், மே மாதம் 15 073 ஆட்சேர்ப்புக்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/228932