ஊர்ப்புதினம்

வடக்கு கிழக்கில் ஆரம்பமாகும் பாரிய போராடடம்!

3 months ago

வடக்கு கிழக்கில் ஆரம்பமாகும் பாரிய போராடடம்!

1104574961.jpg

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ள போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மலையக சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்கு முன்பாக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கோரிய நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இரண்டாவது நாளாக நேற்றும் இடம்பெற்றுள்ளது.

நீண்டகாலமாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. 

https://newuthayan.com/article/வடக்கு_கிழக்கில்_ஆரம்பமாகும்_பாரிய_போராடடம்!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை

3 months ago

17535402239058790206789893684357.jpg

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், குடும்பப் பிணக்கு தொடர்பாக விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 66 வயது கைதி ஒருவர், இன்று (25) மதியம் 12:20 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கிளிநொச்சி, புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு என அடையாளம் காணப்பட்ட இவர், தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி ஜெமீல் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.

கிளிநொச்சி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

https://adaderanatamil.lk/news/cmdj2htun01ngqp4kj6slv95l

ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது

3 months ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்த சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவுகுறித்த அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

இலங்கை பாராளுமன்றத்தின் மேனாள் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான அமரர்.இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் காலமாகி ஒருவருடம் நிரம்பியுள்ள சூழலிலும், அவரது மறைவினால் தமிழ்த்தேசிய அரசியற் தளத்தில் ஏற்பட்ட இடைவெளியை உணர்ந்த ஒருவனாக, இந்தச் சபையில் அவரின் மறைவுக்கான ஆழ்ந்த துக்கத்தையும் மரியாதையுடனான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

தமிழ் மக்களின் நீண்டகால இன விடுதலைப் பயணத்தில், அறம், அரசியல் நுண்ணறிவு, அனுபவம் என்பவற்றின் முழுமையான ஆளுமை வடிவமாகத் திகழ்ந்த சம்பந்தன் ஐயா அவர்கள், 1933 பெப்ரவரி 5ஆம் திகதி தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் பிறந்து, தமது கல்வியை திருகோணமலையிலுள்ள புனித வளனார் தமிழ் பாடசாலையில் ஆரம்பித்து, யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி, குருநாகல் புனித ஆன்ஸ் கல்லூரி, மொறட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பயின்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கற்கையைப் பூர்த்திசெய்து, தனது தொழில்முறை வாழ்க்கையை சட்டவாளராக ஆரம்பித்த போதும், 23 வயது நிரம்பிய 1956 ஆம் ஆண்டிலேயே தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து, தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார். 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப் பொருளாளர், உப தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியையும் அலங்கரித்ததோடன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், 2015 முதல் 2018 வரையான காலத்தில் இலங்கை பாராளுமன்றத்தின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து, தமிழின விடுதலைப் போரியல் காலகட்டத்திலும், தமிழர்கள் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்ட 2010 முதல் 2024 வரையான கடந்த 14 ஆண்டுகளிலும் சம்பந்தர் என்கின்ற அரசியல் பேராளுமை ஆற்றிய செயல்களின் கனதி மிகப் பெறுமதியானது. 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து முழுமையாக இருபத்தொரு ஆண்டுகளின் பின்னர், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் திருகோணமலைத் தொகுதியின் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டதன் மூலம், தனது நேரடி அரசியற் பிரதிநிதித்துவத்தை ஐயா ஆரம்பித்திருந்தார். 

இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், தனிநாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983இன் இதே ஜுலை மாதத்தில், மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மூன்று மாதங்கள் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் புறக்கணித்ததால் பதவியிழந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவராக, சம்பந்தன் அவர்களும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 1983 செப்டம்பர் 7 இல் இழந்தார். 

அதன்பிற்பாடு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.அருணாசலம் தங்கத்துரை அவர்களது மறைவின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தின் அடிப்படையில், 1997 இல் மீளவும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட சம்பந்தன் அவர்கள், 2001.10.20ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக பதவியேற்ற அதே காலப்பகுதியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றிருந்தார். 

அதன் தொடர்ச்சியாக 2004, 2010, 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அத்தனை பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட அவரை திருகோணமலை மாவட்ட மக்கள் தமது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தனர். 

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் தமிழினத்தின் அரசியற்தலைவராக அவரது பிரதிநிதித்துவம் மிகப்பெரியது. இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக 1984இல் நடைபெற்ற முதலாவது வட்டமேசை மாநாட்டிலும், 1985இல் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையிலும் தமிழர் பிரதிநிதியாக கலந்து கொண்டமை, ஈழத்தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு குறித்து இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருடன் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டமை, பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவராக பங்கேற்றமை, இந்திய மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் பலருடன் சந்திப்புகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டமை, 13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பிலும், மாகாண சபைகளுக்கான அதிகாரங்களின் பலவீனங்கள் குறித்தும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களை வரைவதில் முக்கிய பங்காற்றியமை உள்ளிட்ட விடயங்கள் அவரது அரசியல் வாழ்வின் மிக முக்கிய செயற்பாடுகள் எனலாம். 

இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'பிராந்தியங்களின் ஒன்றியம்' என்ற தீர்வுத் திட்ட வரைவினை வடிவமைப்பதில் அமரர் நீலன் திருச்செல்வம் அவர்களுடன் சம்பந்தன் ஐயாவின் பங்கும் இருந்திருக்கிறது. 

இவற்றுக்கு மேலாக 2010 - 2015வரையான காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இலங்கையின் அரச தரப்புகளோடு நடைபெற்ற 14 பேச்சுவார்த்தைகளையும், மைத்திரிபால - ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலமான 2015 - 2019வரையான காலத்தில் நடைபெற்ற அனைத்துப் பேச்சு வார்த்தைகளையும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவோடு திரு.சம்பந்தன் அவர்களே தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார். 

விடுதலைப் போராட்ட மௌனிப்பின் பின்னர் திக்குத் தெரியாதிருந்த ஈழத்தமிழர்களின் அரசியல் ஆபத்பாந்தவனாக காலத்தால் அடையாளப்படுத்தப்பட்ட சம்பந்தன் அவர்களின் தலைமைத்துவ முதிர்ச்சிதான், இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டுப் பயணத்திற்கு அடித்தளமிட்டிருந்தது. 

அரசியல் வெறுமை சூழ்ந்த கடந்த 14 ஆண்டுகளை இராஜதந்திர ரீதியாக சரிவரக் கையாண்ட அரசியற் தலைவராகவும், அவரைப் பின்பற்றும் எங்களின் அரசியற் பயணத்திற்கான வழிவரைபடத்தை உருவாக்கித் தந்த ஒருவராகவும், சம்பந்தன் அவர்கள் சாணக்கியம் மிக்க அரசியற் தலைவராக தனது பயணத்தில் வெற்றிகண்டிருந்தார் என்பதே உண்மை. 

சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளால் மதிக்கப்பட்ட, ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்தும் தமிழினப் படுகொலைக்கான நீதி விசாரணை குறித்தும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக அணுகத்தக்க அரசியற் தலைவராகவும் சம்பந்தன் அவர்களே அடையாளம் பெற்றிருந்தார். அது அவரது அரசியல் அனுபவத்திற்கும், தலைமைத்துவ ஆளுமைக்கும், இனம்சார் அரசியலில் அவர் ஆற்றிய வகிபங்குக்கும் கிடைத்த அடையாளமே. 

எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்த சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது. 

இருந்தபோதும் அவரது தடங்களைப் பின்பற்றும் ஒருவனாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இருப்பை உறுதிசெய்யவும், ஈழத்தமிழர்களது அரசியல் உரித்துக்கான தமிழ்த் தேசியப் பயணத்தில் எனக்கிருக்கும் தார்மீகப் பங்கை உறுதிசெய்யவும், இதயசுத்தியோடு பணியாற்றுவேன் என்ற உறுதியோடு ஐயாவின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்து, அவரது குடும்பத்தினருக்கான அனுதாபங்களையும் பகிர்ந்து நிறைவுசெய்கிறேன்" என்றார்.

https://adaderanatamil.lk/news/cmdiptf1001n2qp4k3i340ksv

செம்மணியில் பால் போத்தலுடன் காணப்பட்ட குழந்தையின் எலும்புக் கூடு அகழ்ந்தெடுப்பு

3 months ago

பால் போத்தலுடன் காணப்பட்ட குழந்தையின் எலும்புக் கூடு அகழ்ந்தெடுப்பு : இதுவரை செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் 81 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

Published By: VISHNU 25 JUL, 2025 | 08:03 PM

image

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

WhatsApp_Image_2025-07-25_at_19.59.12_75

செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக வெள்ளிக்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-07-25_at_19.59.09_0a

அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழியில் வெள்ளிக்கிழமை இரண்டு மனித எலும்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.

WhatsApp_Image_2025-07-25_at_19.59.11_6d

அத்துடன் ஏற்கனவே 76 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை (25) புதிதாக ஐந்து மனித எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. 

WhatsApp_Image_2025-07-25_at_19.59.07_23

இதுவரை மொத்தமாக 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதே நேரம் இரண்டாவது அகழ்வு தளமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் சட்டரீதியாக புதைக்கப்பட்ட சடலம் ஒன்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பாதுகாப்பாக மூடப்பட்டது.

குறித்த சடலம் தொடர்பான ஆய்வுகளின் பிற்பாடு அதன் காலத்தை சொல்ல முடியும். அதை அகழ்தெடுக்கவில்லை. குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் புதைக்கப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வந்ததற்கமைய சடலம் மூடப்பட்டது.

பாலுட்டும் போத்தலுடன் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையின் எலும்புக்கூடு அகழ்ந்தெடுக்கப்பட்டது. பாலூட்டும் போத்தல் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/220964

பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை கைது

3 months ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார்.

சந்தேகநபரின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, அதில் 12 கிலோ 196 கிராம் ஹஷீஷ் மற்றும் 5 கிலோ 298 கிராம் கொக்கேய்ன் ஆகிய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

https://adaderanatamil.lk/news/cmdi5df1o01m2qp4kmm93cckb

வவுனியாவில் கிணற்றில் தவறி வீழ்ந்த இரு யானைகள்: ஒரு யானை பலி

3 months ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம அலுவலருக்கு இன்று (25) காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிராம அலுவலர், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், பொலிசாருக்கும் உடனடியாக தெரியப்படுத்தியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர்.

மற்றைய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த இரு யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றுக்கள் வீழ்ந்தமையால் ஒரு யானை சேற்றில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-வவுனியா தீபன்-

https://adaderanatamil.lk/news/cmdim8yrk01muqp4kpwp2wnbv

நாளை, வடகிழக்கில் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் - கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

3 months ago

வடகிழக்கில் நாளை இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி போராட்டம் - கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

25 JUL, 2025 | 01:23 PM

image

நீண்டகாலமாக  தமிழ் மக்கள் மீது  திட்டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது  வடக்குகிழக்கு  சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில்  வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும்  26ம் திகதி சனிக்கிழமை  காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி  கந்தசாமி கோயில், மன்னார் நகரப்பகுதி வவுனியா  புதிய பேருந்து நிலையம் யாழ்ப்பாணம் செம்மணியிலும் நடைபெறவுள்ளது.

உண்மைக்கும் நீதிக்குமான  இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு  தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு சமூக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

c50f246b-f478-4675-a9f1-1bf903414b81.jpg

இதேவேளை சர்வதேச விசாரணை பொறிமுறையை " கோரி நாளை இலங்கையின் வடக்கு - கிழக்கு எங்கும்  இடம்பெறவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக 'மான்புமிகு மலையக மக்கள் சிவில் கூட்டிணைவு' கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்னால் நாளை காலை 10 மணிக்கு போாராட்டம்.

https://www.virakesari.lk/article/220909

வெலிக்கடை படுகொலைகள் குறித்தும் விசாரணை வேண்டும்

3 months ago

தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உள்ளிட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

”வெலிக்கடை சிறைச்சாலையில் கண்கள் பிடுங்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டே தோழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் எங்கே புதைக்கப்பட்டார்கள் என்பதை அறியமுடியாமல் உள்ளது. எனவே, கடந்தகால கொலைகள் பற்றி விசாரிக்கும் இந்த அரசாங்கம், வெலிக்கடை படுகொலை பற்றியும் விசாரிக்க வேண்டும். ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக்காலத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.” – எனவும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/319329

மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!

3 months ago

New-Project-321.jpg?resize=750%2C375&ssl

மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!

மேலும், 40 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார்.

ஐக்கிய இராச்சியம் உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் விசா கட்டண விலக்கு அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்த முடிவால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 66 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் தொடர்புடைய வருமானத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பு பற்றாக்குறையை ஈடுசெய்யும் என்றும் கூறினார்.

https://athavannews.com/2025/1440631

கன்னியா வெந்நீர் ஊற்று ஆலயத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக்கு; காலக்கெடு விதித்தும் மிரட்டல்

3 months ago

கன்னியா வெந்நீர் ஊற்று ஆலயத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக்கு; காலக்கெடு விதித்தும் மிரட்டல்

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை,ஆடி அமாவாசை பிதிர்க்கடன் தீர்க்கும் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பௌத்த பிக்கு ஒருவர் காலக்கெடு விதித்ததுடன்,அங்கு பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார்.

கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஆடி அமாவாசை தீர்த்தமும், பிதிர் தர்பண நிகழ்வும் இடம்பெற்றது. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு பிதிர் தர்ப்பண வழிபாட்டிலும் தீர்த்த உற்சவத்திலும் ஈடுபட்டு தமது முன்னோர்களுக்கான கடமையை நிறைவேற்றியிருந்தார்கள்.

இந்த நிகழ்வானது நிறைவு பெறும் தறுவாயிலில் அங்கு இருந்த பூசைப் பொருட்கள் மற்றும் அன்னதானப் பொருட்களை ஏற்றுவதற்காக முச்சக்கரவண்டி வந்தபோது, அங்கு வந்த பௌத்த பிக்கு ஒருவர், இங்கே வாகனங்கள் உள்நுழைய முடியாது எனவும் நேரம் முடிந்து விட்டதால் அவ்விடத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் அங்கு சத்தம்போட்டு அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் பக்ததர்கள் உட்பட பூசகர்கள் தங்களுக்குரிய பூசைப் பொருட்களையும் அன்தான பொருட்களையும் எடுத்துக் கொண்டு அமைதியான முறையில் அங்கிருந்து வெளியேறினார்கள்.

ஆடி அமாவாசை தீர்த்தத்திற்காக தொல்லியல் திணைக்களத்திடம் முற்பகல் 11 மணிவரை அனுமதி பெற்றிருந்த நிலையில், சம்பந்தம் இல்லாத பௌத்த பிக்கு அங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இறந்த ஆத்மாக்களுக்கான கடனை தீர்க்கும் புனிதமான நிகழ்வில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதாகவும் ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்தனர்.

https://akkinikkunchu.com/?p=334170

புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு: 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை!

3 months ago

புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு: 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை!

July 25, 2025

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த உத்தரவை நேற்று (24) கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

2017 முதல் 2020 வரை யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கவும் 2018 முதல் 2020 வரை ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் சேகரித்ததற்கும் 16 தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இது தொடர்பாக, சட்ட மா அதிபர் அவர்களுக்கெதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று  (24) இந்த வழக்கு விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.

பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், குற்றச்சாட்டுகள் யாழ்ப்பாணம் பிராந்தியத்தில் நிகழ்ந்தவையென்பதால், கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என அவர்களின் வாதத்தை ஏற்ற நீதிபதி மகேஷ் வீரமன், குற்றச்சாட்டுகள் இருந்த போதும், நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்படாத நிலையில் வழக்கை தொடர முடியாதென்று தெரிவித்துள்ளார்.

எனவே, குற்றச்சாட்டுகளிலிருந்து அந்த 16 இளைஞர்களையும் முற்றிலும் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/புலிகள்-இயக்கத்தை-மீளுரு/

வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை; வெற்றுக் காணிகள் விடுவிக்கப்படும்

3 months ago

வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை; வெற்றுக் காணிகள் விடுவிக்கப்படும்

Published By: VISHNU

25 JUL, 2025 | 04:21 AM

image

வெருகல் வட்டவன் பகுதியில் விவசாயிகளின் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்படும் எனவும், கல்லடியில் வெற்றுக் காணிகளாக இருக்கின்ற பகுதி எல்லைக் கற்கள் அகற்றப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் பிரதேச பிரதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெருகல் பிரதேசத்தின் வட்டவன் மற்றும் கல்லடி பகுதிகளில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை வியாழக்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டிருந்து. இது தொடர்பான கள விஜயத்தின் பின்னர் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2025.07.17 அன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய இன்றைய தினம் (24) பிரதேச சபை தவிசாளர் சே.கருணாநிதி, பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், உதவி பிரதேச செயலாளர் திருமதி. துசிதீபா, தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் டபில்யூ.யு.எஸ்.பெரேரா, பிரதேச சபை செயலாளர் சாந்தகுமார், குடியேற்ற உத்தியோகத்தர் ந.கஜகோகுலன், உதவி வன ஜீவராசிகள் உத்தியோகத்தர் பி.ஜெகதீஸ்வரன், அடைவு வன நிலதாரி எம்.பி.எம்.அசாருதின், தொல்பொருள் திணைக்கள வலய உத்தியோகத்தர் ஜி.கிரிஷாந்த், கிராம அலுவலர் சாள்ஸ் அன்ரனி, கிராம அலுவலர் திருமதி ஜீவராணி ஆகியோர் குறித்த கள விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேச செயலாளரினால் குறித்த களவிஜயம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தொல்பொருளியல் இடமான வட்டவன் பகுதியில்  பிரதான வீதிக்கு சுமார் ஒரு கிலோமீட்டரில் பாலக்காட்டு பகுதியில் உள்ளோக்கி செல்லும்போது மலைத்துடர் காணப்படுகின்றது இம்மலை தொடரில் அண்ணளவாக 12 இடங்களில் தொல்பொருள் அடையாளங்களான புராதன எழுத்துக்களும், குகைகளும் காணப்படுபட்டதை அவதானிக்க முடிந்தது எனவும், தொல்பொருள் அடையாளப்படுத்தப்பட்ட மலைத் தொடரை சுற்றியுள்ள எல்லைப் பிரதேசங்களில் தொல்லியல் அடையாளங்களை பாதுகாக்கும் அதேவேளை நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தொல்லியல் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளரினால் குறித்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 2025.08.14ஆம் திகதி நடைபெற இருக்கின்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு முன்னதாக விசேட தொழிற்ப குழுவினர் இவ்விடத்திற்கு அழைக்கப்பட்டு அடையாளப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது பிரதேச மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியப்படுத்தப்பட்டதுடன் உத்தேசமாக மலை உச்சியில் இருந்து அண்ணளவாக 50 மீட்டர் பகுதி சுற்றளவு உடைய இடங்களையே தொல்லியல்துறை ஒதுக்கமாக எல்லைப் படுத்துவதாக தெரியப்படுத்தப்பட்டதுடன் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தில் மக்கள் வழமை போன்று நெற்செய்கையில் ஈடுபட முடியும் என தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று கல்லடி பகுதியில் பாசன பப்பத விகாரையை சூழ தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லை கற்கள் இடப்பட்டு காணப்படுகின்றது. இப்பகுதியில் பயிர்ச்செய்கை பண்ணப்படும் காணிகளும் சிறிய பற்றை காடுகளும் காணப்படுகின்றது இதில் வேளாண்மை மற்றும் மேட்டுநில பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் காணியானது சுமார் 15 தொடக்கம் 20 ஏக்கர் வரையும் காணப்படுகின்றது. தொல்பொருள் திணைக்கள எல்லைக்குள் ஒருவருக்கு காணி அளிப்பு பத்திரமும் ஒரு நபருக்கு காணி அனுமதி பத்திரமும் காணப்படுவதாக குறித்த கிராம அலுவலரினால் தெரியப்படுத்தப்பட்டது. 

இப்பிரதேசத்தில் பற்றை காடுகளாக காணப்படுகின்ற தொல்பொருளியல் திணைக்களம் எல்லை கற்கள் காணப்படும் பகுதிகள் தொல்பொருளியல் தடயங்கள் காணப்படுவதால் அப்பகுதியை விடுவிக்க முடியாது என்றும் அப்பகுதிக்கு அப்பால் வெற்று காணிகளாக காணப்படுகின்றதும் எல்லை கற்கள் இடப்பட்டுள்ள காணிகளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத் தீர்மானத்தினை பெற்று தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை பெற்று தற்போது இடப்பட்டுள்ள எல்லை கற்களை பிடுங்கி குறித்த பகுதியை விடுவிக்க ஆவண செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/220886

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை: புட்டு புட்டு வைத்தார் ஜனாதிபதி

3 months ago

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை: புட்டு புட்டு வைத்தார் ஜனாதிபதி

image_fe1c36757f.gif

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் புள்ளி விபரங்களுடன் புட்டு புட்டு வைத்தார்.

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு, 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 406 உள்ளன. 30 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 752 உம் உள்ளன.

அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவான உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141 என்னும், 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 உள்ளன.

குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும் பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும் திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.

சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்கவேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/98-பாடசாலைகளில்-ஒரு-மாணவனும்-இல்லை-புட்டு-புட்டு-வைத்தார்-ஜனாதிபதி/150-361675

யாழ். பல்கலைக்கழக முன்புற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை!

3 months ago

யாழ். பல்கலைக்கழக முன்புற நடைபாதை வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை!

1535390164.jpeg

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்புறமாகவுள்ள நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.

மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் தற்காலிக வியாபார நிலையங்களை அகற்றும் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

குறித்த நடைபாதையில் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் அகற்றுமாறும், அதனை மீறி வியாபாரங்களில் ஈடுபடுகின்றவர்களின் அத்தனை வியாபார நிலையப் பொருட்களும்  ஜூலை 30 ஆம் திகதி சபையினால் கையகப்படுத்தப்படும்.

அத்துடன் நடைபாதையில் வாகனங்கள் நிறுவத்துவதும் முற்றாக தடை செய்யப்படுகின்றது. குறித்த அறிவித்தலினை மீறி வாகனங்களை நிறுத்துவோர் மீது போக்குவரத்துப் பொலிசார் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளது.

https://newuthayan.com/article/யாழ்._பல்கலைக்கழக_முன்புற_நடைபாதை_வியாபார_நிலையங்களை_அகற்ற_நடவடிக்கை!

யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்தே இ.போ.ச., தனியார்; நெடுந்தூர சேவை - ஓகஸ்ட் முதல் நடைமுறை

3 months ago

யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்தே  இ.போ.ச., தனியார்; நெடுந்தூர சேவை - ஓகஸ்ட் முதல் நடைமுறை

1483995968.jpg

எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துசபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தும், இலங்கைப் போக்குவரத்துசபை மற்றும் தனியாரின் உள்ளூர் சேவைகள் தற்போது இலங்கைப் போக்குவரத்துசபை செயற்படும் மத்தியபேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தூரப் பேருந்து நிலையத்தைச் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன். நெடுந் தூரப் பேருந்து நிலையத்திலிருந்து தனியாரும், இலங்கைப் போக்குவரத்து சபையினரும் இணைந்த நேர அட்டவணையில் செயற்படுவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் நெடுந்தூர தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தால் மாகாண மேல் நீதிமன்றத்தில், வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கும். இலங்கைப் போக்குவரத்துச்சபைக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், பேருந்து சேவைகள் மக்களின் நன்மைக்காகத்தான் செயற்படுத்தப்படுகின்றன. எனவே மக்கள் நலனை முன்னிறுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும். நெடுந்தூரப் பேருந்து நிலையத்துக்குச் செல்வதால் மக்களுக்குத்தான் பல்வேறுவகைகளிலும் நன்மை. அதேநேரம், இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் சில குறைபாடுகளைச் சொல்கின்றனர். எனவே, இந்தத் திட்டத்தை செயற்படுத்தும்போது ஏற்படுகின்ற குறைகளைத் தொடர்ச்சியாக நிவர்த்தி செய்து இதனை நகர்த்துவோம் -என்றார்.

https://newuthayan.com/article/யாழ்.புதிய_பேருந்து_நிலையத்திலிருந்தே%C2%A0%C2%A0இ.போ.ச.,_தனியார்;_நெடுந்தூர_சேவை_-_ஓகஸ்ட்_முதல்_நடைமுறை

இந்த ஆண்டில் 36,000 புற்றுநோயாளர்கள் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி!

3 months ago

1676463966-APEKSHA6.jpg?resize=650%2C375

இந்த ஆண்டில் 36,000 புற்றுநோயாளர்கள் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி!

இந்த வருடத்தின் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்  மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோயாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி நேற்றைய தினம்  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் தற்போது 3,300 வாய் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புகைபிடித்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வாய் புற்றுநோய் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இது கவலைக்கிடமான விடயமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440561

கிணற்றிலிருந்து தாய் – இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்பு

3 months 1 week ago

கிணற்றிலிருந்து தாய் – இரு குழந்தைகளின் சடலங்கள் மீட்பு

adminJuly 24, 2025

dead.jpeg?fit=880%2C495&ssl=1

முல்லைத்தீவு மாவட்டம்  மாங்குளம்  காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கும் அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு  மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த  தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள    கிணற்றிலிருந்தே  சடலமாக  இன்று வியாழக்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளனர்

தாய் உசாகரன் மாலினி( வயது 38)   மகள்களான  உசாகரன் மிக்சா ( வயது 11)   உசாகரன் சதுசா (வயது 04) ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த  கிணற்றின் அருகில்  இன்று அதிகாலை கைப்பை ஒன்றும்  ஏனைய  பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊா் மக்கள் அந்த விடயம் தொடர்பாக கிராம அலுவலர் மற்றும்  காவல்துறையினருக்கு   வழங்கிய தகவல்களின்  அடிப்படையில் அங்கு  சென்ற    கிராம அலுவலர் மற்றும்  காவல்துறையினர் கிணற்றில் சடலங்கள் இருப்பதை   பாா்வையிட்டதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி  சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள்   மீட்கப்பட்டு  மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று  பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்

இவர்கள் உயிர் மாய்த்துக் கொண்டார்களா அல்லது  கொல்லப்பட்டனரா என்பது தொடர்பில்  மாங்குளம்  காவல்துறையினா்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

https://globaltamilnews.net/2025/218314/

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; இழப்பீடாக 1 பில்லியன் டொலர் வழங்க உத்தரவு!

3 months 1 week ago

New-Project-300.jpg?resize=750%2C375&ssl

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; இழப்பீடாக 1 பில்லியன் டொலர் வழங்க உத்தரவு!

021 மே மாதம் கொழும்பு கடற்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்புகளுக்கு எக்ஸ்-பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பலின் உரிமையாளருக்கான இழப்பீடு உத்தரவினை உயர் நீதிமன்றம் இன்று (24) பிறப்பித்தது.

அதன்படி, குறித்த கப்பலின் உரிமையாளர்கள் இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் வந்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் 2021 மே 20 அன்று தீப்பிடித்து, சில நாட்களின் பின்னர் கடலில் மூழ்கியது.

இதனால் இலங்கையின் மேற்குக் கடற்கரையில் பில்லியன் கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் நச்சு இரசாயனங்கள் சிதறின.

இந்தப் பேரழிவு கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மீன்பிடி சமூகங்களையும் பேரழிவிற்கு உட்படுத்தியது.

இதில் துப்புரவு நடவடிக்கைகள் மற்றும் இடைக்கால நிவாரண முயற்சிகள் அடங்கும்.

https://athavannews.com/2025/1440451

பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் – பிரதமர்

3 months 1 week ago

New-Project-304.jpg?resize=750%2C375&ssl

பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் – பிரதமர்.

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து, நேற்று (23) பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் இதனைக் கூறினார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய விளக்கங்கள் இந்த சீர்திருத்தம் குறித்த விளக்கங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அசோக டி சில்வா ஆகியோர் ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு வழங்கினர்.

பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், பல்வேறு முக்கிய விடயங்களை தெளிவுபடுத்தினார்:

* கற்றல் மற்றும் மதிப்பீட்டில் மாற்றம்:

“ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகும் முறைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த தொகுதி முறையில் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் கற்றுக்கொள்ளவும், மதிப்பீடு செய்யப்படவும் வாய்ப்புகள் கிடைக்கின்றன,” என்று பிரதமர் விளக்கமளித்தார்.

* க.பொ.த சாதாரண தரப் பரீட்சை:

புதிய பாடத்திட்ட வழிகாட்டுதலின்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும்.

* அமுலாக்கத்தின் தொடக்க நிலை:

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தத்தின் கீழ், 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே புதிய கல்வித் திட்டம் கற்பிக்கப்படும். இந்த சீர்திருத்தத்தைக் கண்காணிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம் இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யப் போதுமான கால அவகாசம் இருப்பதாகவும், சீர்திருத்தம் இறுதியானது என்று கூற முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இந்த சீர்திருத்தம் குறித்த கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க ஊடகவியலாளர்களுக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

* வகுப்பறை மாணவர் எண்ணிக்கை:

ஒரு வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 – 30 ஆகக் குறைக்க வேண்டும் என்பதே இலக்கு. தற்போது 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைகள் உள்ளன. கல்வி அமைச்சர் மற்றும் செயலாளரின் உத்தரவின்படி அதிக மாணவர்களை வகுப்பறைகளுக்குள் உள்வாங்கும் முறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை மட்டுமே உள்வாங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

* ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை:

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு செய்வதற்கு முன், பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை முதலில் நீக்க வேண்டும் என்றும், இது உடனடி செய்யக்கூடிய காரியமல்ல என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். புலமைப்பரிசில் பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து, கல்வி முறையின் சுமையைக் குறைப்பதே சீர்திருத்தத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

* முன்பள்ளிப் பருவ வளர்ச்சி மையங்கள்:

முன்பள்ளி குழந்தைப் பருவ வளர்ச்சி மையங்களை நடத்துவது மற்றும் அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்த முழுமையான கண்காணிப்பை கல்வி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த சீர்திருத்தம் பரிந்துரைப்பதாக பிரதமர் கூறினார்.

ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம்

இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த கல்விப் பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன, ஆசிரியர் பயிற்சிக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முன்மொழியப்பட்ட ஐந்து தூண்களிலும் ஆசிரியர் பயிற்சி உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் பயிற்சிப் பாசறைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்தோர் போன்ற சமூகத்தினர் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

https://athavannews.com/2025/1440490

அப்பாவை விடுதலை செய்யுமாறு எல்லா அரசாங்கங்களையும் கேட்டுள்ளோம் - இந்த அரசாவது விடுதலை செய்யவேண்டும் - ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்

3 months 1 week ago

24 JUL, 2025 | 08:45 PM

image

அப்பாவை விடுதலை செய்யுமாறு இலங்கையின் எல்லா அரசாங்கங்களையும் கேட்டுக்கொண்டதாகவும் எனினும் எவரும் விடுதலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த அரசாங்கமாவது தங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

ஆனந்தசுதாகரனின் மகள் தெரிவித்துள்ளதாவது,

நான் எட்டுமாசம் வயிற்றில் இருக்கும்போதே அப்பாவை கொண்டுபோய்விட்டார்கள்.

நாங்களும் எவ்வளவோ அரசாங்கத்தை போய் கேட்டுக்கொண்டிருந்தோம் அப்பாவை விடச்சொல்லி, யாருமே முன்வரவில்லை.

இந்த அரசாங்கமாவது முன்வந்து எங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என  கேட்டுக்கொள்கின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலில் விழுந்தெல்லாம் கேட்டோம், அப்பாவை விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தோம் விடவில்லை.

ஆனந்தசுதாகரனின் மகன் தெரிவித்துள்ளதாவது,

எனது அப்பா பிடிபட்டு 14 வருடங்களாகின்றது, நிறைய அரசியல்வாதிகளை சந்தித்து அப்பாவின் விடுதலை தொடர்பாக கதைத்தோம். இதுவரை எந்த முடிவும் இல்லை. இந்த அரசாங்கமாவது எங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும்.

https://www.virakesari.lk/article/220871

Checked
Sat, 11/01/2025 - 02:27
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr