ஊர்ப்புதினம்

சொகுசு வாகனங்கள் ரகசியமாக பதிவு!

3 months 1 week ago
சொகுசு வாகனங்கள் ரகசியமாக பதிவு! மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு

Published By: VISHNU   11 FEB, 2024 | 09:48 PM

image

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத பெருமளவிலான கார்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கப்படாத சுமார் 400 கார்களை திணைக்களம் பதிவு செய்துள்ளமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு பதிவுசெய்யப்பட்டவற்றில் 156 வாகனங்கள் குறித்த உரிய தகவல்களை ஆணைக்குழு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதுடன் அவற்றில் பெரும்பாலானவை சொகுசு வாகன வகையைச் சேர்ந்தவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வாகனங்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு போலியாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படுவதால், அரசுக்கு ஏராளமான வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட வாகனங்களில் 7 வாகனங்களை தற்போதைய உரிமையாளர்களிடம் இருந்து பெற்று இலங்கை சுங்கத்தில் ஒப்படைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி 06 வாகனங்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 05 வாகனங்கள் இலங்கை சுங்க பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/176134

இலங்கையில் UPI கட்டணமுறை!

3 months 1 week ago
நாளை முதல் இலங்கையில் UPI கட்டணமுறை! இந்திய, இலங்கை மற்றும் மொரிஷியஸ் தலைவர்கள் இணைந்து ஆரம்பிப்பர்

Published By: VISHNU   11 FEB, 2024 | 10:01 PM

image

இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை நாளை முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத், ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக கொழும்பில் இதனை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

Unified Payment Interface (UPI) என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை 2016 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்தினால் உடனடி பணம் செலுத்தும் முறைமையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இது பல வங்கிக் கணக்குகளை, ஒரே கைபேசி செயலி, ஊடாக இணைக்கும் அமைப்பாகும், இந்த கட்டண முறையானது கைபேசிகள் மூலம் வங்கிகளுக்கு இடையேயான மற்றும் தனிப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.  இதன்மூலம் இலங்கையின் சுற்றுலா வர்த்தகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபின்டெக் (Fintech) கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியா முன்னணியில் உள்ளது.  அந்நாட்டின் வளர்ச்சி அனுபவங்கள் மற்றும் புதுமைகளை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் இந்திய பிரதமர் முக்கியத்துவம் அளித்துள்ளார். 

இலங்கை மற்றும் மொரிஷியஸுடனான இந்தியாவின் வலுவான கலாச்சார மற்றும் மக்களிடையேயான தொடர்பைக் கருத்தில் கொண்டு, இந்த அறிமுகமானது வேகமான மற்றும் தடையற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தின் மூலம் பரந்த அளவிலான மக்களுக்கு பயனளிக்கும் என்பதுடன் நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தும்.

Unified Payment Interface (UPI) அறிமுகமானது இலங்கை மற்றும் மொரிஷியஸுக்குப் பயன்படும் என்பதோடு இந்தியாவுக்கும் இது பயனளிக்கும்.

மொரிஷியஸ் பிரஜைகளுக்கும் UPI தீர்வுச் சேவைகளைப் பெறுவதற்கு உதவும். மொரீஷியஸில் RuPay கார்ட் சேவைகளை நீட்டிப்பதன் மூலம் மொரீஷியஸ் வங்கிகள் மொரீஷியஸில் RuPay பொறிமுறையின் அடிப்படையில் கார்ட்களை வழங்குவதற்கும், இந்தியா மற்றும் மொரீஷியஸ் ஆகிய இரு நாடுகளிலும் RuPay  கார்டைப் பயன்படுத்துவதற்கும் உதவும்.

https://www.virakesari.lk/article/176130

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்

3 months 1 week ago

Published By: VISHNU   11 FEB, 2024 | 06:17 PM

image

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (11) திடீரென விஜயம் செய்த பௌத்த குருமாரை இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில் ஏற்றி சென்றமை தெரிய வந்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு வரை சென்று தற்போது வழிபாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) பௌத்தகுருமார் உள்ளடங்கிய குழுவினர் வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பகுதிக்குச் சென்றிருந்தனர்.

அங்கு சென்ற பௌத்த குருமார் இது தமது பூர்வீக இடம் என மீண்டும் சர்ச்சையை உருவாக்கியிருந்ததாக தெரியவருகின்றது.

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில்  குறித்த குழுவினரை அழைத்து சென்றமை தற்போது ஆதாரமாக வெளிவந்துள்ளது.

குருந்தூர் மலை உட்பட பல்வேறு இடங்களிலும் பௌத்த குருமார் இராணுவத்தினர் மூலமாக  செயற்பட்டு வரும் நிலையில் வெடுக்குநாறி ஆலயத்திலும் இராணுவத்தினர் பின்புலத்தில் இருந்து பௌத்த மயமாக்கல் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/176120

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

3 months 1 week ago

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய செய்தி சேனலான WION க்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, “….இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் எதையும் நாடு அனுமதிக்காது” என்று குறிப்பிட்டார்.

WION நிருபர்: இந்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் ?

ஜனாதிபதி ரணில்: நான் மீண்டும் வருவதற்கு நான் போட்டியிட வேண்டும். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை முதல் கடமையாகக் கொண்டுள்ளேன் . திவால்நிலையிலிருந்து மீள்வதில் கவனம் செலுத்துவதே இலக்காகும். நான் மீண்டும் ஜனாதிபதவிக்காக போட்டியிட எதிர்பார்த்துள்ளேன்.

WION நிருபர்: நீங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்துவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்களா? அதாவது, இலங்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதன் அடிப்படையில் உங்கள் பதவிக்காலத்தில் பொருளாதாரம் பற்றிய உங்கள் பார்வை என்ன?
ஜனாதிபதி ரணில்: சரி, நான் மிகவும் திருப்தியடைகிறேன், எங்களால் இதைச் செய்ய முடியும் என்று நான் உணர்கிறேன்.

https://thinakkural.lk/article/291322

உள்ளுராட்சி மன்றங்களுக்கு காணிகளை அன்பளிப்பதே இனம்சார் பாதுகாப்பானது - நிரோஷ்

3 months 1 week ago
11 FEB, 2024 | 09:35 PM
image

மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடன் மக்கள் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டங்களை வகுத்துச்  செயற்படுத்துவதிலும் அரச தாபனங்கள் சிரத்தை எடுக்குமாயின் கிராம மட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்வது இலகுவாக அமையும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீர்வேலியில் நேற்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற தமிழ் முற்றம் மற்றும் தபாலகக் கட்டிடத் திறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்,

நீர்வேலி மண் தமிழ் மக்களின் பாரம்பரியத்திற்கு உரிய மண்ணாகும். இந்த மண்ணில் தமிழ் முற்றத்தினை அமைக்க வேண்டும் என நான் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் அவை தீர்மானம் உள்ளிட்ட  பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டேன்.

இந்நிலையில் ஏற்கனவே நீர்வேலியில் தபாலகத்திற்கான கட்டிடத்தினை தனது கொடையாக அமைத்து வழங்குவதற்கான செயற்றிட்டத்தினை ஆரம்பித்திருந்த தொழிலதிபர் கிருபாகரன் அவர்கள் தமிழ் முற்றத்தினை அமைத்து அதில் பெரியார்களின் சிலைகளை நிறுவும் பொறுப்பினையும்  தானே முன்வந்து  ஏற்றுக் கொண்டு அதனை தற்போது அவர் முழுமையாகச் செயற்படுத்தியுள்ளார். அவரது முற்போக்கான கொடை எண்ணத்திற்கும் செயற்பாட்டுக்கும் பாராட்டுக்கள்.

இதற்காக அவருடன் உழைத்த ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் இ.குணநாதன் தலைமையில் குழுவினர்க்கு நன்றிகள். இன்றைய கால கட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் பல நிதி பற்றாக்குறை மற்றும் அவற்றை செயற்படுத்துவதில் உள்ள செலவீனங்களை ஒழுங்குபடுத்துவதிலும் அவற்றை நிர்வாக ரீதியில் சட்ட திட்டங்களுக்கு உள்ளாக அணுவதில் காணப்படும் தாமதங்கள் வாயிலாக விரைவாக ஈடேற்றுவதில் இழுபறிகள் உள்ளன.

இந் நிலையில் மக்களுக்கு வேண்டிய எமது இனத்தின் பண்பாடு கலாச்சாரம் வரலாறு போன்றவற்றினை நிலைநிறுத்தத் தக்க செயற்றிட்டங்களை கொடையாளர்களிடம் கையளித்து அவற்றை மக்கள் மயப்படுத்துவது சிறந்த உத்தியாகும்.

அரச நிறுவனம் மேற்கோள்ளும் அபிவிருத்தியில் பங்கேற்பு அபிவிருத்தி என்பதற்கு மேலாகச் சென்று மக்களின் பங்களிப்பாக அபிவிருதியை முன்கொண்டு செல்வதும் அவசியமாகவுள்ளது. அது தனவந்தர்கள் கொடையாளிகளை கிராம மட்டத்தில் இணைப்பதாக அமையும்.

இதேநேரம் இன்று பலர் அரச தாபனங்களுக்கு தமது சொத்துக்களை நன்கொடை அளிக்க முன்வருகையில், அவ்வாறான சூழ்நிலைகளில் மத்திய அரசாங்கம் சார்ந்த தாபனங்களுக்கு அன்பளிப்பது இன முரன்பாடும் பல்வேறு பட்ட ஆக்கிரமிப்பினையும் எதிர்கொள்ளும் இனம் நாம் என்ற வகையில் சரியான தீர்மானம் இல்லை.

மேலும், மத்திய அரசின் தாபனங்கள் கொழும்பு மட்ட முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயற்படலாம். ஆனால், உள்ளுராட்சி மன்றத்திற்கு நிலங்களை அன்பளித்தால் அதில் எமது மக்கள் பிரதிநிதிகளின் முடிவே செல்வாக்குச் செலுத்தும்.

மத்திய அரசு சார்ந்த தாபனங்களுக்கு காணித் தேவை காணப்படின் அவற்றை உள்ளுராட்சி மன்றங்களுக்கு கையளித்து குறித்த உள்ளுராட்சி மன்றங்கள் மத்திய அரசின் தாபனங்களுக்கு வாடகைக்கு விட முடியும்.

இதன் வாயிலாக எமது நிலம் சார்ந்த இன ரீதியிலான பாதுகாப்பினை நாம் உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/176117

உருமய திட்டத்துக்குள் மலைய மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர் - அரசாங்கம்

3 months 1 week ago
11 FEB, 2024 | 09:28 PM
image

(எம்.மனோசித்ரா)

முறையான காணி உரிமையின்றி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் காணி உறுதி வழங்கு 'உரித்து' (உருமய) வேலைத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் வினவிய போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார். 'விவசாய நடவடிக்கைகளுக்காக நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட காணிகளுக்கான உரிமம் வழங்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் இந்த வேலைத்திட்டத்தோடு தொடர்புடையதல்ல.

இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு நிச்சயம் 7 பேர் காணி வழங்கப்படும். எவ்வாறிருப்பினும் விவசாய நடவடிக்கைகளுக்காக அரச காணிகளைப் பெற்றுக் கொண்ட சகலருக்கும் எவ்வித பேதமும் இன்றி உரிமம் வழங்கப்படும். வடக்கு, கிழக்கு மக்களும் இதில் உள்ளடங்குவர்.' என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

'உரித்து' திட்டத்தின் கீழ் 1935ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ்  விவசாயிகளுக்கு அனுமதிப்பத்திரம் மற்றும் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அரச காணிகளின் முழு உரிமையையும் விவசாயிகளுக்கு வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

அதற்கமைய  20 இலட்சம் விவசாயக் குடும்பங்கள்   பயனாளிகளாக இனங்காணப்பட்டுள்ள இந்த உரித்து  வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் கீழ் 2 பில்லியன் ரூபா  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தம்புள்ளையில் இடம்பெற்றது.

எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணி, உரிமத்துடன் வழங்கப்படும் என்று அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்பட்டதாகக் தெரியவில்லை. எனவே இதுகுறித்து வினவிய போது ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ்  தெரிவிக்கையில்,

காணி உரிமம் வழங்கும் இந்த வேலைத்திட்டம் வரவேற்கத்தக்கதாகும். இந்த வேலைத்திட்டத்தை தேசிய மயப்படுத்தி 200 வருடங்களாக இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக மக்களுக்குரிய காணி உரிமமும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும், காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மிக விரைவில் அதற்கான ஆக்க பூர்மான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மலையத்தில் காணப்படும் 10 பிரதேச செயலகப்பிரிவுகளையும் உள்ளடக்கிய வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/176106

பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக நெல் அறுவடை.

3 months 1 week ago
FB_IMG_1707487476350-e1707566658330-750x பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக நெல் அறுவடை.

பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தினால் சுமார் முக்கால் ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக நெல் அறுவடை விழாவானது பாடசாலை முதல்வர் சபரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் நளாயினி வசந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த பாடசாலைக் காணி கடந்த வருடம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது. தரிசு நிலமாக காணப்பட்ட குறித்த காணியில் நெற்செய்கை மேற்கொண்டு இன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாடு தொடர்பில் அப்பாடசாலை சமூகத்தினருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு பாடசாலைகள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் தரிசு நிலங்களாக காணப்படும் நிலையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தின் செயற்பாடு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

FB_IMG_1707487472747-600x450.jpg

FB_IMG_1707487452597-600x450.jpg

FB_IMG_1707487437824-600x450.jpg

FB_IMG_1707487459844-600x450.jpg

FB_IMG_1707487443255-600x450.jpg

FB_IMG_1707487448565-600x450.jpg

FB_IMG_1707487470185-600x450.jpg

https://athavannews.com/2024/1369297

ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகளை பின்பற்றவேண்டிய அவசியமில்லை – விஜயதாச

3 months 1 week ago

Published By: RAJEEBAN   11 FEB, 2024 | 08:14 AM

image
 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகளை பின்பற்றவேண்டிய அவசியமில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்

சண்டே ஒப்சேவருக்கான பேட்டியொன்றின் போது  நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டிய அவசியமில்லை அவர்களின் செயற்பாடுகளின் மூலம் சாதகமான விளைவுகள் எதுவுமில்லை அவர்களின் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என அவர் தெரிவித்துள்ளார்.

எங்களின் சிவில் சமூகத்தினர் சில சட்டங்களை மாற்றவேண்டும் என தெரிவித்துள்ளதால் நாங்கள் எங்கள் சமூகத்தினருடன் கலந்துரையாடுவோம் சர்வதேச நிபுணர்களுடன் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சில மாற்றங்களை மேற்கொள்ளப்போகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/176067

யாழ்ப்பாணத்தில் தமன்னா, யோகி பாபு பங்கேற்ற நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் - ரசிகர்கள் ரகளை ஏன்?

3 months 1 week ago
இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் ஏன்?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்திய பிரபல பாடகர் ஹரிகரனின் மாபெரும் இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அமைதியின்மையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட, ஆள் அடையாளத்தை உறுதி செய்துக்கொள்ள முடியாத ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதைத் தவிர, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

பிரபல தென்னிந்திய நடிகையான ரம்பா, இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்திரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஐரோப்பாவில் வாழும் இந்திரன் குடும்பத்தினர், யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்ய தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் நோர்தன் யூனி என்ற பெயரில் பல்கலைக் கழகமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்தை விளம்பரப்படுத்தும் நோக்குடன் ஹரிகரன் தலைமையிலான இசை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை தென்னிந்திய நடன கலைஞரான கலா மாஸ்டர் ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.

நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் யோகி பாபு, சிவா, ரெடிங்டன் கிங்ஸ்லி, டிடி எனப்படும் திவ்யதர்ஷினி, புகழ், சுவேதா மோகன், ஸ்ரீநிஷா உள்ளிட்ட பல கலைஞர்கள் வருகை தந்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் வரலாறு காணாத வகையில் நடைபெறும் நிகழ்வாக இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட போதிலும், கடும் மழை காரணமாக நிகழ்வு பிப்ரவரி மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, இந்த இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் நகரில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் ஏன்?
இசை நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

பிரபல பாடகர் ஹரிகரன் தலைமையிலான பிரமாண்ட இசை நிகழ்ச்சி நேற்று மாலை ஆரம்பமாகியது.

இந்த நிகழ்ச்சி இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விசேட பிரமுகர்களுக்காக டிக்கெட்களும் விற்பனை செய்யப்பட்டன.

''இந்த இசை நிகழ்ச்சியில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்கள் மூலம் கிடைக்கும் பணம், கல்விக்காக ஒதுக்கப்படும்" என ரம்பாவின் கணவரும், முதலீட்டாளருமான இந்திரன், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருந்தார்.

பல கோடி ரூபாய் செலவில் இந்த நிகழ்வு மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இசை நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியிருந்த பின்னணியில், இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

விசேட பிரமுகர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டு, அதற்கு பின்புறத்தில் இலவசமாக நிகழ்ச்சியை பார்வையிட வருகைத் தந்தவர்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த தருணத்தில், இலவசமாக பார்வையிட வருகைத் தந்த இளைஞர்கள், விசேட பிரமுகர்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி பாதுகாப்பு தடுப்பு வேலிகளை கடந்து வர ஆரம்பித்துள்ளனர்.

இதை கட்டுப்படுத்த போலீஸார் முயற்சித்த போதிலும், போலீஸாரால் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை.

அத்துடன், வீடியோ பதிவுகளை மேற்கொள்வதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மேடைகளில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் ஏறியது,பாதுகாப்பற்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மேடையிலிருந்து கீழே இறங்குமாறு கோரிய போதிலும், ரசிகர்கள் அதனையும் பொருட்படுத்தவில்லை என போலீஸார் கூறுகின்றனர்.

இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் ஏன்?
இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் ஏன்?

இந்த நிலையில், அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட இளைஞர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர போலீஸ் அதிகாரிகள் முயற்சித்த பின்னணியில், அங்கு அமைதியின்மை மேலும் வலுப்பெற்றது.

நிகழ்ச்சியை நடாத்துவதற்காக வருகை தந்த கலா மாஸ்டர், டிடி, சிவா, ஹரிகரன் உள்ளிட்ட கலைஞர்கள், ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு கோரிய போதிலும், ரசிகர்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர்.

''உங்களை பார்ப்பதற்கு நாங்கள் ஆசையாக வந்திருக்கின்றோம். நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உங்கள் காலில் வீழ்ந்து நமஸ்காரம் பண்ணிக்கிறேன். எல்லாம் கொஞ்சம் அமைதியாக இருங்கள்." என நடன கலைஞர் கலா மாஸ்டர் மேடையில் அறிவித்த போதிலும், ரசிகர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை.

நிகழ்ச்சியை அமைதியாக நடத்துவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்த போதிலும், ரசிகர்கள் அதற்கு செவிமடுக்காததை தொடர்ந்து, இசை நிகழ்ச்சி முழுமையாக நிறுத்தப்பட்டது.

சமூக வலைத்தள பதிவுகள்

இசை நிகழ்ச்சியில் அமைதியின்மை ஏற்பட்டு, இசை நிகழ்ச்சி இடை நடுவில் நிறுத்தப்பட்டமை குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது

''அறிவார்ந்த சமூகம் இன்று இப்படி ஆகிவிட்டதே என்று கவலையளிக்கின்றது" என இலங்கையின் பிரபல வானொலி ஒலிபரப்பாளர் ரஜீவ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் ஏன்?

பட மூலாதாரம்,FB/RJ RAJIV

இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் ஏன்?

பட மூலாதாரம்,FB/ CHANDRU KUMAR

இதேவேளை, ''பொங்கும் தமிழர்... மங்கும் கலாசாரம்.... பேரினவாதிகள் எதையும் செய்ய தேவை இல்லை" என பிரபல சமூக செயற்பாட்டாளரும், அரசியல்வாதியுமான சந்திரகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் கலாசார சீர்கேட்டை நிறுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜா பிபிசி தமிழுக்கு குறிப்பிடுகின்றார்.

''என்ன நோக்கத்திற்காக இந்த நிகழ்ச்சி நடந்ததோ தெரியாது. ஆனால், நாங்கள் இதை பொருளாதார ரீதியில் வாய்ப்பாக பயன்படுத்த தவறி விட்டோம். மற்றையது இவ்வளவு காலமும் போதைப்பொருள் கூடுகின்றது, பெண்கள் பிரச்னை, மதுபானம் கூடுகின்றது என்று எல்லோருக்கும் சந்தேகம் தான் இருந்தது. இப்போது அதனை உறுதிப்படுத்தி விட்டார்கள். போராட்டம் இடம்பெற்ற ஒரு இடத்திற்கு இழுக்காகும்.

தமிழர் பகுதிகளில் கலாசார சீர்கேடு அதிகரிப்பதாக கூறுவதை நிறுத்த வேண்டும். படம் பார்க்கின்றோம் தானே. அவ்வாறு என்றால், படம் போடக்கூடாது. திரையரங்கு மூடப்பட வேண்டும். படத்தில் வருகின்ற தமன்னா, நேரில் வந்தால் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்கள்?. யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒழுக்கம், பண்பாடு அவசியமானது. எங்களை பண்பாக நடத்திக் கொள்ளும் பண்பும் நடத்தையும் இவர்களிடம் இல்லை.

எங்களுக்கு எங்களுடைய சுய கட்டுப்பாடு அவசியமானது. இது சுயக் கட்டுப்பாடு இல்லாத சமூகமாக மாறியுள்ளது. மற்றவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு நாம் நம்மை சுய விமர்சனம் செய்து பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட பண்பை நாங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது எதிர்காலத்தில் பாரிய பிரச்னையை தோற்றுவிக்கும். இப்படியான சமூகத்தை வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் என்ன செய்ய போகின்றோம்." என சமூக செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் ஏன்?
தமிழர் பகுதியில் கலாசார சீர்கேடா?

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒருங்கிணைப்பில் காணப்பட்ட தவறே இந்த பிரச்னை எழுவதற்கான பிரதான காரணமாக இருந்திருக்க கூடும் என்பதே தவிர, கலாசார சீர்கேடு என இதனை கூற முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் பாரதி ராஜநாயகம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''கலாசார சீர்கேடு என சொல்ல முடியாது. நிகழ்ச்சி என்பது எல்லா இடங்களிலும் நடப்பது ஒன்று. இங்கு நடந்த நிகழ்ச்சியில் சரியான முறையில் ஒழுங்குப்படுத்துவதில் குறைபாடுகள் இருந்திருக்கின்றது. டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டவர்கள் நீண்ட இடைவெளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளனர். அதனால், அவர்களுக்கு ஏற்பட்ட விரக்தி காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம். அதனாலேயே தடைகளை உடைத்துக் கொண்டு முன்னோக்கி வந்திருக்கின்றார்கள் என நான் நினைக்கின்றேன்.

பிரபல நடிகர்கள், நடிகைகள் வருகின்றார்கள் என்பதனால், அவர்களை பார்வையிட அனைவருக்கும் ஆர்வம் இருந்திருக்கும். ஓரளவிற்கேனும், அவர்களை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். டிக்கெட்களை பெற்றுக்கொண்டவர்களுக்கும், இலவசமாக பார்வையிட வந்தவர்களும் இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகளை பார்வையிட முடியாது போனமை தொடர்பில் எழுந்த விரக்தியே இந்த பிரச்னைக்கு காரணம் என நினைக்கின்றேன். அதைதவிர, கலாசார சீர்கேடு என கூற முடியாது." என அவர் கூறுகின்றார்.

இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் ஏன்?
''நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது - கலைஞர்கள் திருப்தியாக நாடு திரும்பினார்கள்"

"நிகழ்சசி ஏற்பாட்டாளர்களின் குறை என இதனை கூற முடியாது. மக்களின் உணர்வின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும்" என ஹரிகரன் இசை நிகழ்ச்சிக்கான  ஏற்பாட்டு குழுப் பணிப்பாளர் ஷியா உல் ஹசன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

''அருமையான நிகழ்ச்சி. மக்கள் தமது உணர்வுகளை வெளிக்காட்டினார்கள். இப்படியான ஒரு நிகழ்ச்சி கொழும்பில் கூட நடாத்தப்படவில்லை. இவ்வளவு நட்சத்திரங்களையும் பார்த்ததன் பிறகு அவர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். நிகழ்ச்சி இடைநடுவில் நிறுத்தப்படவில்லை. முழுமையாக நடாத்தப்பட்டது. இடையில் மாத்திரம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. யாருக்கும் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அறிவிப்பொன்று மாத்திரம் விடுக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சியை முழுமையாக நடாத்தினோம்.

இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் ஏன்?
இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் ஏன்?

ஏற்பாட்டாளர்களின் குறை என்று சொல்ல முடியாது. எதிர்பார்க்க முடியாத கூட்டம் வந்தது. இவ்வளவு பெரிய ரசிகர்கள் ஒன்று கூடினால், எந்தவொரு ஏற்பாட்டாளராலும் கட்டுப்படுத்த முடியாது. ஏற்பாட்டாளர்களின் பிழை என்று சொல்வதற்கு எதுவும் நடக்கவில்லை. ரசிகர்கள் முன்னோக்கி நகர்ந்தார்கள். அவ்வளவு தான். அதுவொரு பெரிய பிரச்னை கிடையாது. அது மக்களின் உணர்வு வெளிப்பாடு. வெளிப்படுத்தி விதம் வித்தியாசமாக இருந்தது. அனைத்து கலைஞர்களும் திருப்தியாக நாடு திரும்பினார்கள். இந்தியாவில் கூட இவ்வளவு பெரிய ரசிகர்களை நாங்கள் பார்வையிடவில்லை என கலைஞர்கள் கூறினார்கள். மக்கள் இவ்வளவு அன்பு கொடுத்ததை தாங்கள் பார்த்ததில்லை என அவர்கள் கூறினார்கள்" என இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுப் பணிப்பாளர் ஷியா உல் ஹசன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cd1jrv1118no

இன்றைய வானிலை

3 months 1 week ago
too-much-heat.jpg

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 4 செல்சியஸினால் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதன்படி, புத்தளத்தில் 33.7 செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரியில் 33.5 செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவாகியது.

கட்டுநாயக்கவில் வெப்பநிலை 33.4 செல்சியஸாக உயர்ந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

https://thinakkural.lk/article/291294

பொலிஸ் அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு

3 months 1 week ago

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு அடுத்த வார தொடக்கத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதுவரையில் பெறப்பட்ட கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவில் பாதி உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உதவித்தொகை 17,000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது. அதில் 11,800 ரூபா உடனடியாக வழங்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/291253

இலங்கை விமான நிலையங்கள் தொடர்பில் அதானி குழுமம் கலந்துரையாடல்

3 months 1 week ago

இலங்கை விமான நிலையங்கள் தொடர்பில் அதானி குழுமம் கலந்துரையாடல்

இலங்கை விமான நிலையங்கள் தொடர்பில் அதானி குழுமம் கலந்துரையாடல்

இலங்கையின் 03 விமான நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் அதானி குழுமம் கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி த இந்து வர்த்தக இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

அந்த விமான நிலையங்களின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயணிகளின் திறனை அதிகரிப்பதற்கும் ஒரு தனியார் பங்காளியின் ஆதரவு எதிர்பார்க்கப்படுவதுடன்,  அதானி குழுமம் அதற்காக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மும்பை சர்வதேச விமான நிலையம் உட்பட இந்தியாவில் உள்ள 07 விமான நிலையங்களின் நிர்வாகத்தை தற்போது அதானி குழுமம் நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://tamil.adaderana.lk/news.php?nid=183862

திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் - இந்தியா ஆலோசனை

3 months 1 week ago
திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் குறித்த ஆலோசனையை கிழக்கு ஆளுநரிடம் முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு 
10 FEB, 2024 | 02:30 PM
image
 

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர். 

இதன்போது திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின்போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இந்திய பாதுகாப்பு அமைச்சின் குழுவினர் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

1707541308086.jpg

1707541308104.jpg

 

1707541308120.jpg

1707541308141.jpg

1707541308068.jpg

https://www.virakesari.lk/article/176032

யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பிஐயா கலாமணி காலமானார்

3 months 1 week ago
10 FEB, 2024 | 03:14 PM
image

வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ். பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி உடல் நலக் குறைவு ஏற்பட்டு தனது 72வது வயதில் இன்று சனிக்கிழமை (10) அதிகாலை காலமானார். 

அல்வாய் தெற்கைச் சேர்ந்த அவர், ஆரம்ப கல்வியை வதிரி தேவரையாளி இந்து கல்லூரியிலும், இடைநிலை கல்வியை நெல்லியடி மத்திய கல்லூரியிலும் கற்று யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைப் பட்டதாரி ஆனார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக இணைந்து கலைப்பீட விரிவுரையாளர் ஆனார்.

மேலும், உயர் கற்கைகளை மேற்கொண்டு கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்ட அவர், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளராக நீண்ட காலம் பணியாற்றினார். 

கலை இலக்கியத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், காத்தவராயன் உள்ளிட்ட பல இதிகாச புராண நாடகங்களை தயாரித்தும் நடித்தும் மேடையேற்றியுள்ளார். 

மூன்று பிள்ளைகளின் தந்தையாரான இவரது ஒரு மகனான பரணிதரன் கடந்த சில ஆண்டுகளாக ஜீவநதி எனும் இலக்கிய மாத சஞ்சிகையினை வெளியிட்டு வருகிறார்.

கலாமணியின் தந்தையார் தம்பிஐயா புகழ்பூத்த அண்ணாவியார் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/176045

இந்தியா - இலங்கைக்கிடையில் பெற்றோலிய குழாய் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை

3 months 1 week ago

Published By: VISHNU   09 FEB, 2024 | 11:38 PM

image
 

(எம்.மனோசித்ரா)

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் திருகோணமலை எண்ணெய் தாங்கி மற்றும் கொழும்பை இணைக்கும் பெற்றோலியக் குழாய் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் மூலம் இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த முன்மொழிவு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இந்தியா சென்றுள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தனர்.

தொழில்நுட்ப ஆய்வுகள், தேவையான சந்தை பகுப்பாய்வு, நிதி பகுப்பாய்வு மற்றும் வணிக மாதிரிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பொறிமுறையை தீர்மானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேக குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் உள்ள எண்ணெய் எண்ணெய் தாங்கி, இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் கூட்டு முயற்சியின் கீழ் முதலீடுகள் மற்றும் திட்டங்களின் விரிவாக்கம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/176010

கைதிகளின் கைரேகைகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை!

3 months 1 week ago
10 FEB, 2024 | 10:29 AM
image
 

சிறைக்கைதிகளின்  கைரேகைகளை பெற்று கைதிகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களமர நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்படி,  தற்போது நாட்டிலுள்ள முப்பது சிறைச்சாலைகளில் உள்ள  கைதிகளின் கைரேகைகளை பெற்று டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது . 

இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கைதியின் கைரேகைகளைப. பெற்று அவர்களுக்காக தயாரிக்கப்பட்பள்ளி தொழில்நுட்ப அமைப்பில் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளாகவும்  பணிப்பாளர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/176022

பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை! – பொலிஸ் பேச்சாளர்

3 months 1 week ago
9-1.jpg

பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய, இந்த சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், சிவில் உடையில் உள்ள பொலிஸார் அவர்கள் தொடர்பில் கண்காணிப்பதுடன், தமது கமராக்கள் மூலம் அதனை சாட்சியமாக பதிவு செய்வார்கள். பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இதேவேளை, எவரேனும் ஒருவர், போலியான முறைப்பாடுகளை வழங்குவாராயின் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், போலி முறைப்பாடுகளின் ஊடாக எந்தவொரு நபரேனும் பாதிக்கப்படுவாராயின், அது விசாரணையின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் தமக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/291097

இந்தியாவுடனான புதிய தரைவழித் தொடர்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் - இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

3 months 1 week ago

Published By: VISHNU   09 FEB, 2024 | 09:13 PM

image

உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல்,  தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2050 ஆண்டளவில் இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

 

அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்ற 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையிலேயே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். 

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும்  7ஆவது இந்து சமுத்திர மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று ஆரம்பமான நிலையில் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை  “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டொக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்ட இந்து சமுத்திர நாடுகளின் பிரதிநிதிகள் , இந்திய மன்றத்தின் ராம் மாதவ் உள்ளிட்ட பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

 

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விரிவான பிராந்திய திட்டமொன்று அவசியம் என்றும்,  அதனை இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA தலைவர்களினால் மட்டுமே செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடல் மற்றும் விமான போக்குவரத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்காத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள்,  காலநிலை நெருக்கடியை கையாள்வது மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு தொடர்பான வழிகாட்டல் விதிமுறைகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.   

மேலும், வர்த்தகப் போக்குவரத்துகளுக்காக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் உள்ளிட்டவை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது. எனவே, பிராந்தியத்தின் விநியோக மையம்  என்ற வகையில் இலங்கை தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.  

 

அதேபோல், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதேபோன்றே காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கண்டறிவதிலும்  கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். 

இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, 5 வருடங்களுக்குள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான பாலஸ்தீன அரசை நிறுவி, இஸ்ரேல் அரசன் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளின் மூலம் காஸா பகுதியில் போர் மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

https://www.virakesari.lk/article/175994

தமிழ் மக்கள் நலன் கருதிய இலக்கானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலத்திலேயே எட்டப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

3 months 1 week ago

எமது மக்கள் நலன் கருதிய இலக்கானது எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது காலத்திலேயே எட்டப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (09) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இச்சாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் -

எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, அரசியல் தீர்வுப் பிரச்சினையாக இருந்தாலும் சரி. இந்த காலகட்டத்ததை நாம் தவற விடுவோமானால், மீளவும் இத்தகையதொரு பொன்னான காலத்தை நினைத்துப் பார்க்க இயலாது என்றே கருதுகிறேன்.

தேர்தல்களில் நாங்கள் தனித்தனியே போட்டியிடுவோம். நாட்டைக் கட்டி எழுப்புவதில் ஒன்றிணைவோம் என்ற ஜனாதிபதி அவர்களது அழைப்பினையே நான் மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்த நாடு அனைத்து நிலைகளிலும் வீழ்ந்திருந்த நிலையில், இந்த நாடு இத்தனைக் குறுகிய காலத்துள் இந்தளவு எழுந்திருக்கும் என எவரும் எண்ணியிருக்க மாட்டார்கள். அது இன்று சாத்தியமாக்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய சாதனையை நிகழ்த்திக் காட்டி வருகின்ற ஜனாதிபதி அவர்களால், எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்றில்லை.

அவருக்கு எமது அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்புகள் முழுமையாக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் அவை அனைத்தும் சாத்தியமாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.

அந்த நம்பிக்கையை நிறைவேற்ற அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது தமிழ் மக்கள் நலன் கருதிய இலக்கானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலத்திலேயே எட்டப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து! | Virakesari.lk

Checked
Sun, 05/19/2024 - 00:35
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr