ஊர்ப்புதினம்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கி கப்பல்

3 months ago

Published By: DIGITAL DESK 2

14 JUN, 2025 | 12:37 PM

image

(எம்.மனோசித்ரா)

துருக்கிய கடற்படைக் கப்பலான 'டி.சி.சி. புயுகடா' உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சனிக்கிழமை (14) நாட்டை வந்தடைந்த இக்கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டது.

இக்கப்பலானது 99.56 மீற்றர் நீளமும், மொத்தம் 147 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் அனில் பில்கின் பணியாற்றுகிறார்.

இக்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் பணிக்குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் இக்கப்பல் தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு திங்கட்கிழமை (15) நாட்டிலிருந்து புறப்பட உள்ளதுடன், மேலும் இலங்கை கடற்படைக் கப்பலுடன் மேற்கு கடற்படை கட்டளைப் பகுதியில் கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

NHQ_4086.jpg

NHQ_4089.jpgNHQ_4107.jpgNHQ_4145.jpgNHQ_4118.jpgNHQ_4167.jpgNHQ_4171__1_.jpg

https://www.virakesari.lk/article/217436

யாழ். பொருளாதார மத்திய நிலையம் ஆகஸ்ட் முதல் மீண்டும் இயங்கம் – அமைச்சர் சந்திரசேகர்

3 months ago

Published By: DIGITAL DESK 2

14 JUN, 2025 | 07:55 PM

image

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. நிர்மாணப் பணிகளுக்கென 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது.

எனினும், பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அந்நிலையம் முடங்கி, பறவைகளின் கூடாரமாக மாறியுள்ளது.

இந்நிலையில் மக்களின் கோரிக்கையின் பிரகாரம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்குரிய முயற்சியில் அமைச்சர் தீவிரமாக இறங்கினார்.

இதற்கமைய அமைச்சர் சனிக்கிழமை (14) பொருளாதார மத்திய நிலையத்துக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.

வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்.மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்களப் பணிப்பாளர்கள், பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளைப்பெற்றுக் கொண்டவர்கள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

அதன் பின்னர் மட்டுவிலில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போதே பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை மீள இயற்குவதற்குரிய அனைத்து செயற்பாடுகளும் எமது ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

அத்துடன், வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

அதேவேளை, பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில் எமக்கும் பிரச்சினை உள்ளது. எனினும், பெருமளவு செலவில் அது நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. இது மக்களின் பணம். எனவே, அதனை எவ்வாறு நன்மைக்காக பயன்படுத்துவது என்பதே எமது நோக்கம். வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினதும் கருத்துகளை உள்வாங்கி, ஆகஸ்ட் மாதம் முதல் செயற்பாடுகள் இடம்பெறும் என அமைச்சர் மேலும் கூறினார்.

DSC_5491.jpg

DSC_5511.jpgDSC_5495.jpgDSC_5571.jpgDSC_5521.jpg

https://www.virakesari.lk/article/217464

யாழில். வாள் வெட்டு தாக்குதல் ; இளைஞன் பலி!

3 months ago

யாழில். வாள் வெட்டு தாக்குதல் ; இளைஞன் பலி!

14 JUN, 2025 | 10:15 AM

image

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த கொலை சம்பவம் வெள்ளிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.

இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில்  கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்திய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/217421

தமிழர்கள் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன - பிரித்தானிய தமிழர் பேரவை

3 months ago

தமிழர்கள் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன - பிரித்தானிய தமிழர் பேரவை

14 June 2025

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9+-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+

இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடமான முள்ளிவாய்க்காலுக்கும், புதைகுழிகள் தோண்டப்பட்ட செம்மணிக்கும், செல்லவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

BTF என்ற பிரித்தானியத் தமிழர் பேரவை, இந்த கோரிக்கையை, விடுத்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதத்தில் இலங்கை வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை. 

இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின், சாட்சிய சேகரிப்பு முயற்சிகளின் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த, டர்க்கின் இந்த பயணம் உதவும் என்று, பிரித்தானியத் தமிழர் பேரவை டர்க்குக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. 

கடந்த 7 தசாப்தங்களாக, தமிழர் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்கள் மற்றும் தொடர்ச்சியான தாக்கங்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன. 

அத்துடன், இலங்கையின் தமிழ் சமூகங்கள் அரச அடக்குமுறை மற்றும் முறையான துஷ்பிரயோகங்களின் விளைவுகளைத் தொடர்ந்து எதிர் நோக்கி வருவதாக, பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி. ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், வடக்கு கிழக்கின் பல இடங்களுக்கும் சென்று, தமிழ் பொதுமக்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்றும், பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

https://hirunews.lk/tm/407092/successive-sri-lankan-governments-are-trying-to-cover-up-the-scars-of-atrocities-against-tamils-british-tamil-council#google_vignette

பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம்

3 months ago

பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது. எனவே பாதுகாப்பற்ற சிறுமிகள் எத்தனைபேர் உள்ளனர் எனவே இவர்களை பாதுகாப்பதுடன் இவற்றை தடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஷ்பிரயோகத்தை தடுக்கும் 'சறோஜா'  திட்டம்  ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்டபத்தில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த குழந்தைகள் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முதல் காரணம் அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்கள் அதனால் இவ்வாறான குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய், தந்தை பொலிஸ் நிலையத்துக்கு செல்வதில் வெட்கம் மற்றும் கௌரவம் காரணத்தால் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைப்பதில்லை.

ஒரு பெண் குழந்தைக்கு பாலியஸ் துஸ்பிரயோகம் நடந்த பின்னர் அதனை முறைபாடு செய்வதால் பிரயோசனமில்லை. எனவே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக முதல் பாதுகாப்பது தான் சிறந்தது அதற்கு முதலில் கிராமம் பிரதேசங்களில் எத்தனை பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லமல் இருக்கின்றார்கள் என கண்டறிய வேண்டும்.

சில பிள்ளைகளின் தாயார் வெளிநாடு சென்றிருப்பர் அல்லது தாய் தந்தையினர் மதுபோதைக்கு அடிமையாகி இருப்பர்கள். இவ்வாறு ஏற்படும் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுக்காப்பு இல்லாததால் அவர்கள் இந்த பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

எனவே 'சரோஜா' திட்டமானது பெண் குழந்தைகள் பாதிக்கபடுவதற்கு முன்னர் பாதுகாப்பதே இந்த திட்டம் எனவே மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் உள்ள கிராம சேவர் பிரிவுகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு இந்த பாலியல் துஸ்பிரயோகம் இல்லாமல் செய்யப்படவேண்டும்.

ஏன் என்றால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் இதற்கு சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள். வனிதா சேவா, சிறுவர் உரிமைகள் அமைப்புக்கள் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmbvriynk01u6qpbsinrqo4iq

கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி அறிவிப்பு

3 months ago

கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி அறிவிப்பு

Published By: VISHNU

14 JUN, 2025 | 02:06 AM

image

(நா.தனுஜா)

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரத்துக்கு (ஜனா) எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அக்கூட்டணி அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பன இணைந்து களமிறக்கிய வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மாவட்டக்கிளைத் தலைவர் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு வழிகாட்டலை வழங்கியமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக மேற்குறிப்பிட்டவாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 11,981 வாக்குகளைப்பெற்று 8 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3,894 வாக்குகளைப்பெற்று 6 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 3,894 வாக்குகளைப்பெற்று 2 ஆசனங்களையும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, சுயேட்சைக்குழு 1 மற்றும் சுயேட்சைக்குழு 2 என்பன முறையே 1967, 1286, 809, 1174 வாக்குகளைப்பெற்று தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின. 

இந்நிலையில் அப்பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை (12) நடாத்தப்பட்டது.

இதன்போது 6 ஆசனங்களைக்கொண்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் 2 ஆசனங்களைக்கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்பன இணைந்து களமிறக்கிய தவிசாளர் வேட்பாளருக்கு ஆதரவாக ஒரு ஆசனத்தைப்பெற்ற ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் உறுப்பினர் வாக்களித்தார். அதன்விளைவாக அப்பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது.

 இந்நிலையில் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்டக்கிளைத் தலைவர் என்ற ரீதியில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற வழிகாட்டலை வழங்கினார் எனும் அடிப்படையிலேயே கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

 https://www.virakesari.lk/article/217411

பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு

3 months ago

பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து சுயேட்சை குழு கைப்பற்றியுள்ளது. 

பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளராக திரேஸ குமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

பட்டிப்பளை பிரதேச தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் கோபாலபிள்ளை சுரேந்திரன் (பட்டிப்பளை வட்டாரம்) முன்மொழியப்பட்டார். 

சுயேட்சை குழு (பந்து) சார்பில் இளையதம்பி திரேஸ குமாரன் (அரசடித்தீவு வட்டாரம்) முன்மொழியப்பட்டார். 

வாக்கெடுப்பில் சுயேட்சை குழுவின் இளையதம்பி திரேஸ குமாரன் 9 வாக்குகளை பெற்றுக் கொண்ட நிலையில், தமிழ் அரசு கட்சியின் கோபாலபிள்ளை சுரேஷ்குமார் 6 வாக்குகளை பெற்றார். 

தேசிய மக்கள் சக்தியின் 1 உறுப்பினர் நடுநிலை வகித்தார். 

பிரதி தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சார்பில் கனகநாயகம் கபில்ராஜ் (கொக்கட்டிச்சோலை வட்டாரம்) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். 

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் திரேஸ குமாரன் தலைமையிலான சுயேட்சை குழுவும் இணைந்து பட்டிப்பளை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளன. 

சுயேட்சை குழுவை தலைமை தாங்கியுள்ள திரேஸ குமாரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் (சி. சந்திரகாந்தன்) அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் அவர்களின் சகோதரராவார்.

https://adaderanatamil.lk/news/cmbuyoh6901toqpbsmkybfygk

இசைப்பிரியா பாலசந்திரன் கொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் -சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே பொலிஸ் மாஅதிபருக்கு மனு

3 months ago

13 Jun, 2025 | 04:28 PM

image

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலச்சந்திரன் பிரபாகரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு விசாரணைகளை கோரி தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணி பொலிஸ் மா அதிபருக்கு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது.

சரணடைந்தவர்களை கொன்றது தொடர்பான புகார் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்( இசைப்பிரியா,மற்றும் பாலசந்திரன் பிரபாகரன் உட்பட )

தனுக ரணஞ்சக கஹந்தகமகே ஆகிய நான்  இந்த மனுவை மதிப்பிற்குரிய உங்கள் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்.

இது கடுமையான சர்வதேச மனிதாபிமான சட்டமீறலை குறிக்கின்றது.

இந்த சம்பவங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களின் கீழ் அடங்கும் என்பதுடன் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்.

506359425_1450299516153247_4658774825777

இசைப்பிரியா மற்றும் பாலசந்திரன் தொடர்பான சம்பவங்கள் போர்நேரத்தில் சரணடைந்தவர்களிற்கான மீறல்களை குறிக்கும் முக்கிய எடுத்துக்காட்டுக்கள்.

இவர்களின் இறப்புகள் குறித்து விசாரணை செய்யப்படாமல் விடக்கூடாது.

இலங்கை காவல்துறை உண்மை, பொறுப்பு நியாயத்திற்கு வழிவகுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இசைப்பிரியா பாலசந்திரன் கொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் -சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே பொலிஸ் மாஅதிபருக்கு மனு | Virakesari.lk

திலீபனின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் நல்லூர் பிரதேச சபை தவிசாளர்

3 months ago

13 Jun, 2025 | 05:02 PM

image

நல்லூர் பிரதேச சபை தவிசாளராக தெரிவாகியுள்ள ப. மயூரன், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி ஆசிர்வாதம் பெற்றார். 

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வெள்ளிக்கிழமை (13) பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. 

அதன்போது, மயூரன் தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். 

தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, நல்லூர் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்குச் சென்று, தியாக தீபத்தின் திருவுருவப்படத்திற்கு தீபமேற்றி, மலர் தூபி அஞ்சலி செலுத்தியதுடன், ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டார்.

0__1___3_.jpg

திலீபனின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் | Virakesari.lk

யாழ். செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை!

3 months ago

image

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இன்று (13) மீனவர்களிடையே வன்முறை வெடித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி அங்கு சிலர் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் செம்பியன்பற்று சென் பிலிப் நேரியார் கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு மதுபோதையில் தடிகளுடன் கரைவலை வாடிகளுக்குச் சென்ற கும்பலொன்று அங்கிருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.  

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மீனவர் ஒருவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக  மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். செம்பியன்பற்று பகுதியில் மீனவர்களிடையே வன்முறை! | Virakesari.lk

“ரஜ உப்பு” ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

3 months ago

13 JUN, 2025 | 12:00 PM

image

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீண்டும் அந்த உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் சூட்டப்பட்டது.

குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக விநியோகம் செய்யப்படும் என அறியமுடிகிறது.

1749790817371__1_.jpg

https://www.virakesari.lk/article/217343

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் திரு. த சுதாகரன் தற்காலிகமாக இடைநிறுத்தம்..!

3 months ago

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் திரு. த சுதாகரன் தற்காலிகமாக இடைநிறுத்தம்..!

Vhg ஜூன் 12, 2025

1000524821.jpg

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் படகு சின்னத்தில் கோட்டைக்கல்லாறு (09 ஆம் வட்டாரத்தில்) வெற்றி பெற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த திரு த. சுதாகரன் கட்சியின் கொள்கை விதிகளுக்கு முரணாகவும், கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும் இன்று (12) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச தவிசாளர், மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது செயல்பட்டதன் காரணமாக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்களின்  கையொப்பத்துடன் மேற்படி உறுப்பினரை தற்காலிகமாக இடை நிறுத்தி, அவர் பக்க ஏதுவான காரணங்களை சமர்ப்பிக்க கோரியதான கடிதமானது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

1000524772.jpg

https://www.battinatham.com/2025/06/blog-post_74.html

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை மேம்படுத்த இந்தியா மீண்டும் உதவி

3 months ago

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை மேம்படுத்த இந்தியா மீண்டும் உதவி

General13 June 2025

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் பயணிகள் கப்பல் சேவையை, மேம்படுத்துவதற்காக, இந்திய அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நிதி உதவியை நீடித்துள்ளது. 

இது பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. 

உயர்ஸ்தானிகராலய தகவல்படி, இந்திய செயல்திறன் இடைவெளி நிதியளிப்பு பொறிமுறையின் கீழ், இலங்கைக்கு ஆண்டுதோறும் 300 மில்லியன் இந்திய ரூபாய்க்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

இது, கடந்த ஆண்டைப் போலவே, முக்கிய செயற்பாட்டு செலவுகளை ஈடுகட்டுவதன் மூலம், கப்பல் சேவையின் மலிவு மற்றும் செயற்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதை, இந்த நிதியளிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, 15,000 க்கும் மேற்பட்ட பயணிகளை, குறித்த கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

https://hirunews.lk/tm/407015/india-again-helps-improve-nagapattinam-kankesanthurai-ferry-service

கொவிட் பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சுவாச நோய்கள் அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

3 months ago

Published By: DIGITAL DESK 2

13 JUN, 2025 | 11:07 AM

image

நாட்டில் கடந்த சில வாரங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்கள் அதிகரித்து வந்தாலும், கொவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பாக தொற்றுநோயியலின் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அதுல லியனபத்திரண கருத்து தெரிவிக்கையில்,

“கொவிட்-19 இப்போது பல்வேறு சுவாச நோய்களில் ஒன்றாகவே கண்காணிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரத்தின்படி, கொவிட் நோயாளிகள் தொடர்பான தனித் தரவுகள் சேகரிக்கப்படுவதில்லை. எனினும், நிலைமையின் மீது எங்களது தீவிர கண்காணிப்பு தொடர்ந்தும் காணப்படுகிறது” என்றார்.

மேலும், இந்நேரத்தில் இன்புளுவென்சா மற்றும் பிற சுவாச நோய்களின் பரவல் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுவாச நோய்கள் தொடர்பான கண்காணிப்பு மற்றும் மீள்பார்வை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய சுவாச நோய்கள் அதிகரித்திருக்கும் சூழ்நிலையில், மக்கள் சுவாச நிலையை சீராக வைத்திருக்க ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, இருமல், தும்மலின்போது தொற்றுக்களைத் தடுக்கும் முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.

காய்ச்சல், இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும் தருணங்களில், உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டும்.

இந்த நோய்கள் அதிகமாக பாதிக்கக்கூடியவர்களான வயதானோர், குழந்தைகள் மற்றும் நீண்டநாள் நோயாளிகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

அத்துடன், மருத்துவ ஆலோசனையை தவிர்க்காமல் பெறுவது, நோய் பரவலையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் தடுக்கும் முக்கியமான வழி என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

https://www.virakesari.lk/article/217335

சாவகச்சேரி நகரசபையில் வீடா... சைக்கிளா...இன்று கடும்போட்டி

3 months ago

சாவகச்சேரி நகரசபையில் வீடா... சைக்கிளா...இன்று கடும்போட்டி

1263442200.jpeg

சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார்? என்பது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவைக்கும்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் அமர்வு உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

இதில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தமிழரசுக் கட்சிக்கும். தமிழ் மக்கள் பேரவைக்கும் இடையில் பலப்பரீட்சை நடைபெறவுள்ளது. இருதரப்பினரும், தமக்கு ஆதரவைக் கோரி நேற்று இரவிரவாக பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். 

https://newuthayan.com/article/சாவகச்சேரி_நகரசபையில்_வீடா..._சைக்கிளா...இன்று_கடும்போட்டி

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு : துணை முதல்வரானார் தயாளன்

3 months ago

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு : துணை முதல்வரானார் தயாளன்

13 JUN, 2025 | 09:58 AM

image

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனங்களையும் பெற்றுள்ளனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதல்வர் பதவிக்கு கனகையா ஶ்ரீ கிருஷ்ணாவின் பெரையும் பரிந்துரைந்துரைத்தன.

முதல்வர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. அதன் போது, தமிழரசு கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட மதிவதனி விவேகானந்தராஜாவிற்கு வாக்களித்தனர்.

அதன் மூலம் 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவானார்.

அதேவேளை தேசிய மக்கள் சக்தியினர் நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

துணை முதல்வராக தமிழரசு கட்சியின் உறுப்பினர் இமானுவேல் தயாளன் தெரிவாகியுள்ளார்.

IMG_3336.jpeg

IMG_3340.jpeg

IMG_3330.jpeg

https://www.virakesari.lk/article/217328

எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது உறுதி

3 months ago

எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது உறுதி

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடற்படையும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல் எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். 

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (12) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்: 

நேற்று (11) மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மீன்பிடி அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினோம். இந்தச் சந்திப்பு, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தமிழக மீனவர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய வருகை மற்றும் இதுதொடர்பாக அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவும், வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்தச் சந்திப்பில் மீன்பிடி அமைச்சின் செயலாளரும் கலந்துகொண்டார். 

தமிழக மீனவர்களின் 60 நாள் மீன்பிடித் தடைக் காலம் இம்மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர், அவர்களின் எல்லை தாண்டிய வருகை எமது கடல் பகுதியில் நிச்சயமாக இடம்பெற வாய்ப்புள்ளது. 

இதனை அரசும், மீன்பிடி அமைச்சும் எவ்வாறு தடுக்கத் திட்டமிட்டுள்ளன என்பது குறித்தும், வடபகுதி மீனவர்கள் இதனை எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளனர் என்பது குறித்தும் நாங்கள் ஆழமாக கலந்துரையாடினோம். 

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையையும், சட்டவிரோத மீன்பிடித்தலையும் தடுப்பதற்காக நாங்கள் நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம். தமிழக மற்றும் இந்திய மட்டங்களில் இதுகுறித்து பேசியுள்ளோம். 

பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்துள்ளோம். வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் 2004 ஆம் ஆண்டு முதல் இவ்விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. நெப்சோ (NEPSO) நிறுவனமும் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறது. 

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத் தடுப்பதற்கான திட்டம் குறித்து மீன்பிடி அமைச்சருடன் கலந்துரையாடினோம். இவ்விடயம் தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம். 

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்படுகின்றன. 

கடற்படையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல் எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். வடபகுதி மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை. அரசு தனது செயல்பாடுகளில் உறுதியாக உள்ளது என்று மீன்பிடி அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார். 

அரசாங்கம் அத்துமீறிய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தீவிரமாக உள்ளது என்பதை நாங்கள் அறிகிறோம். இருப்பினும், கடற்படை மற்றும் அரசு இவ்விடயத்தில் கவனக்குறைவாக இருந்தால், எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சம் மீனவர்களிடையே உள்ளது என்பதை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmbtkjp4g01s8qpbs4sakqw11

பலாலி பொலிஸார் நீதிமன்றத்தைக் தவறாக வழிநடத்துகிறார்கள் என சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு

3 months ago

Published By: DIGITAL DESK 2

12 JUN, 2025 | 09:16 PM

image

யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மல்லாகம் நீதவான் நீதிமன்றை தவறாக வழிநடத்துவதாக மன்றில் சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணங்களில் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற கட்டளையை மீறி, தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, போராட்டம் நடத்தியவர் சார்பாக மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, நா.காண்டீபன் ஆகியோர் சமர்ப்பனங்களை முன்வைத்தனர்.

குறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் நடைபெறவிருந்த வேளை சிலரின் பெயர் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவுகளை பெற்று இருந்தன. நீதிமன்றினால் பெறப்பட்ட தடையுத்தரவை , சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்காது, போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை , அங்கு வந்த பொலிஸார் அவர்களின் பெயர் விபரங்களை வாசித்து சென்று இருந்தனர். அதனூடாக சட்டத்தின் ஏற்பாடுகளை திருப்தி படுத்தியுள்ளதாக பொலிஸ் தரப்பு கூற முடியாது என மன்றில் தெரிவித்திருந்தோம்.

அதேவேளை, தையிட்டி விகாரைக்கு பொறுப்பான "அமரபுர நிக்காய பீடம்" விகாரையில் பொசன் நிகழ்வுகளை நடாத்துவது இல்லை என கடந்த மே மாதம் 29ஆம் திகதியே பதில் பொலிஸ் மா அதிபர் , வடமாகாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் பூரணை தின வழிபாட்டிற்கு வருகை தந்த பௌத்தர்களை போராட்டக்காரர்கள் இடை மறித்ததாகவும் , தமிழர்கள் விகாரையை இடித்து அழிக்க போகின்றார்கள் , பௌத்தர்கள் ஒன்றிணைந்து தையிட்டிக்கு செல்ல வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கடும் போக்கு சிங்கள இனவாதிகள் பொய்யான தகவல்களை பரப்பி , இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்று விக்க முயன்றனர். அவர்கள் தொடர்பில் பொலிஸார் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற விடயத்தை மன்றில் சுட்டிக்காட்டி , அதற்கான ஆதாரங்களையும் மன்றில் சமர்ப்பித்துள்ளோம்.

பலாலி பொலிஸ் அதிகாரிகள் பொய்யான தகவல்களை வழங்கி மன்றை தவறாக வழி நடத்துகிறார். என்ற விடயத்தையும் மன்றில் சுட்டிக்காட்டினோம். அதனை அடுத்து குறித்த வழக்கினை நீதவான் கிடப்பில் போட்டுள்ளார் என தெரிவித்தனர்.

அதேவேளை தையிட்டி விகாரையை தமிழர்கள் இடித்து அழிக்க போகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட பொதுபலசேன ராவண பலய, சிங்கள ராவய அமைப்பை சேர்ந்தவர்கள் தையிட்டி விகாரைக்கு வந்திருந்தார்கள் என்றும், அவர்களுக்கு பலாலி பொலிஸார் பாதுகாப்பு வழங்கி இருந்தார்கள் என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/217283

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு ; விகாரையை சூழவுள்ள காணிகள் விடுவிக்கப்படும் - இராமலிங்கம் சந்திரசேகர்

3 months ago

12 JUN, 2025 | 03:20 PM

image

தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை (12) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து, அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலர் பிரதேச செயலர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு காணிகளை கையளிப்பார்.

அதேவேளை தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டிருந்தால், அந்த காணி உரிமையாளர்களுக்கு காணியின் பெறுமதி, நஷ்ட ஈடாக வழங்குவது அல்லது மாற்றுக் காணியை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

விகாரை பிரச்சினையை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது. அதனை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க முடிவெடுத்துள்ளோம் என்றார்.

https://www.virakesari.lk/article/217268

இலங்கையின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்பதற்கான வாய்ப்பு - கீதா கோபிநாத் நம்பிக்கை

3 months ago

Published By: VISHNU

12 JUN, 2025 | 06:12 PM

image

(நா.தனுஜா)

இலங்கையில் நடைபெறவிருக்கும் 'மீட்சிக்கான இலங்கையின் பாதை: படுகடன் மற்றும் ஆளுகை' மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத், இது இலங்கையின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில் கவனம்செலுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நாட்டுக்கு வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத், எதிர்வரும் திங்கட்கிழமை (16) நடைபெறவிருக்கும் 'மீட்சிக்கான இலங்கையின் பாதை; படுகடன் மற்றும் ஆளுகை' மாநாட்டில் கௌரவ அதிதியாகப் பங்கேற்கவுள்ளார்.

நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன இணைந்து நடாத்தவுள்ள இம்மாநாடானது பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், கடன்மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்தல், ஏனைய மறுசீரமைப்புக்கள் தொடர்பில் இலங்கையின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை ஆராய்தல் என்பவற்றைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருக்கும் கீதா கோபிநாத், இம்மாநாடு இலங்கையின் அனுபவங்களில் மற்றும் எதிர்வரும் சவால்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களில் கவனம்செலுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/217294

Checked
Mon, 09/15/2025 - 22:38
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr