தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்.
அன்பார்ந்த தமிழீழ மக்களே!
சிறிலங்காப் பேரினவாத அரசு தமிழீழ மண்ணையும் மக்களையும் அடக்குமுறைக்குள்ளாக்கி, தமிழின அழிப்பைத் தொடர்ந்தமையால், அதற்கெதிராக வீறுகொண்டெழுந்த எரிமலை வெடிப்பே தமிழீழ விடுதலைப்போராட்டமாகும். உலகின் அசைவியக்கத்தில் சுயமாக உருவாகிய எதனையும் எவரும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த பேராண்மையை, தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளே உள்வாங்கிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், இயல்பாகவே உருவாகிய தலைவர்! இவர், உருவாக்கப்பட்டவர் அல்ல! தமிழினத்தின் வழிகாட்டியும் தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும் இவரே. இந்த ஒப்புவமையற்ற எமது தேசியத்தலைவரை வீரச்சாவு என அறிவித்து, விளக்கேற்றி, தமிழீழக் கோட்பாட்டிற்குச் சாவுமணி அடிக்கவேண்டுமென்ற அறிவிப்பின் ஊடாக, தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம் இழந்துவிட்டது என தமிழ்மக்களின் ஆழ்மனங்களில் பேரிடியாக இறக்கி, அவர்களின் உளவுரணைச் சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும். இதற்குச் செயல்வடிவம் கொடுக்கச் சில குழுக்கள் களமிறக்கப்பட்டு, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி, எதிரிகளின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்கான நாளாக ஆகஸ்து 2 இனை, தெரிவுசெய்து அறிவிப்புச்செய்துள்ளனர்.
தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்இ உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை சிறிலங்காவும் எம்மை அழிக்க நினைக்கும் வல்லரசுகளும் பலவிதமானப் புலனாய்வுச்சதிவலைப்பின்னல்களை உருவாக்கியே வந்திருக்கிறார்கள். ஆனால், தேசியத்தலைவரின் தீர்க்கதரிசனத்தின் முன்னே அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. துரோகத்தனங்கள் யாவும் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன. எமது தலைமையின் நிதானமான துணிச்சலான போராட்ட நகர்வுகள், எதிரிகளையும் துரோகிகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் திக்கித் திணறவைத்திருந்தன. 2009 மே 18 உடன், விடுதலைப்புலிகளின் சரித்திரம் முடிந்துவிட்டது என சிறிலங்காவும் பிராந்திய வல்லரசும் ஏகாதிபத்தியமும் பகற்கனவுகள் கண்டன. ஆனால், முள்ளிவாய்க்கால் ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழம் என்ற கோட்பாட்டை இவர்களால் சிதைக்க முடியவில்லை. தொடர்ந்தும், தமிழர்கள் எவ்வாறு பலமாக ஒருங்கிணைந்து போராடுகிறார்கள், இவர்களின் பலம் எது எனப் பகுப்பாய்வு செய்தபோது, மேதகு வே.பிரபாகரன் என்னும் ஒற்றைச் சொல்தான் தமிழர்களின் மாபெரும் உந்துசக்தி என இவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள். எனவே, தமிழீழம் என்ற கோட்பாட்டைச் சிதைத்து அழிக்கவேண்டுமாயின்இ எங்கள் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் என்னும் தமிழீழ விடுதலைக்கவசத்தை முதலில் அழிக்கவேண்டும். மேதகு வே.பிரபாகரன் என்னும் மாபெரும் பலம், மக்கள் மனதிலிருந்து அகற்றப்பட்டால், தமிழீழம் என்னும் இலக்கு நோக்கிய பயணம் தகர்ந்துவிடும். இதுவே, தமிழீழ விடுதலைப்போராட்டத்தை அழிக்க அவர்கள் தீட்டிய திட்டமாகும். இதன்படியே, கடந்த மூன்று ஆண்டுகளாக எதிரும்புதிருமாக இரு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
• ஒன்று தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்.
• இரண்டாவது, அவர் 2009 மே 17, 18,19 ஆகிய நாட்களில் வீரச்சாவடைந்துவிட்டார் என்ற அறிவித்தல்கள் வெளியிடப்படுகின்றன.
இதில் வேதனையான விடயம் என்னவென்றால், யாரை எதிர்த்து நாம் போரிட்டோமோ, அந்த சிங்கள இராணுவத்தளபதிகளை மேற்கோள்காட்டி, இன அழிப்புக் குற்றவாளிகளின் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு, எமது தேசியத்தலைவருக்கு "விளக்கேற்றி", வீரவணக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அதில், மே 17, 18, 19 என தெளிவில்லாமல் சிறு குழுக்களால் வீரச்சாவு நாட்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஆகஸ்து 2ம் நாள்தான் வணக்க நிகழ்வு என அறிவித்துள்ளார்கள். ஆனால், சிங்கள இராணுவத்தளபதி கமால் குணரட்ணவின் " Road to nanthikkadal " என்னும் நூலினை ஆதாரமாக வைத்து, மே 18 என முடிவு எடுத்துள்ளனர். இதற்கு, தேசியத்தலைவர் உயிரோடு இருக்கிறார் என்னும் பொய்ப்பரப்புரையை நிறுத்த வேண்டுமாயின் வீரவணக்க நிகழ்வைச் செய்தேயாக வேண்டுமெனவும் இதன் ஏற்பாட்டாளர்கள் நியாயப்படுத்துவதானது அர்த்தமற்றதாகும்.
அன்பிற்குரிய தமிழீழ மக்களே! இரு குழல் துப்பாக்கியின் இலக்கு ஒன்றுதான்.
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைதான், 2009 மே 18 ஆயுத மெளனிப்பிற்குப் பின்னரும் தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தை வழிநடாத்துகின்றது, என்பதை எதிரிகள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். எனவே, தமிழர்களின் மனங்களிலிருந்து, அந்த வாழும் தமிழீழ விடுதலைச் சித்தாந்தத்தைத் துடைத்து அழிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, தேசியத்தலைவர் இருக்கிறார், அவர் இல்லை என்ற இரண்டு நாசகார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. "விழிப்பே விடுதலையின் முதற்படி" என்னும் தேசியத்தலைவரின் சிந்தனையின் வழியில், தமிழினம் இவ்விரு சவால்களையும் எதிர்கொண்டு, மாவீரர்களின் சக்தியின் துணைகொண்டு மீண்டுவரும். எமது தேசியத்தலைவரின் சிந்தனையானது எமைத்தொடர்ந்தும் வழிநடத்தும். எனவே, தமிழின விடுதலைச் சிந்தனையினைக் குழிதோண்டிப் புதைக்கநினைக்கும் நாசகாரச் சக்திகளினால், ஆகஸ்து 2ஆம் நாளில் சுவிற்சர்லாந்தில் திட்டமிடப்பட்டுள்ள "விளக்கேற்றல்" நிகழ்வினை உறுதியோடு புறக்கணிப்போம்.
பேரன்புமிக்க எமது மக்களே!
காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை, நாம் கண்டறிந்துஇ முறியடித்து வருகின்றோம். எனவே, தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்படும் உண்மைக்குப் புறம்பான கதையாடல்களைப் புறந்தள்ளி, விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
தமிழீழத் தேசியத்தலைவர் என்னும் பேராளுமைச் சிந்தனையின் வழிகாட்டலில், தமிழீழ விடுதலையை நோக்கித் தொடர்ந்தும் பயணிப்போம். அது, எந்நிலையிலும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களில் அகப்படமாட்டாது. எனவே, தமிழினத்தை அழிப்பதற்கான எதிரிகளின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்காமல், மாவீரர்கள் காட்டிய வழித்தடத்தில், தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் ஒளிரும் சிந்தனைப் பாதையில் உறுதியுடன் வழிநடந்து, தமிழீழ விடுதலை நோக்கித் தொடர்ந்தும் போராடுவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக!
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.


https://www.thaarakam.com/news/f0f42314-88cc-4b93-946b-a623da5dec8a