18 JUN, 2025 | 02:54 PM

(எம்.நியூட்டன்)
வடக்கு மாகாணத்திற்கு ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி சுற்றுலாத்துறை ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை முன்வைத்தார்.
வடமாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, புதன்கிழமை (18) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த பரிந்துரைகளை முன்வைத்தார்.
கொழும்பில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில், வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கருத்து தெரிவிக்கையில்,
வடமாகாணமே, இலங்கையின் அடுத்தபட்ட சுற்றுலா மையமாக வளரக்கூடிய வளமான பகுதி. யாழ்ப்பாணம் –கிளிநொச்சி பகுதிகள் பண்பாட்டு பாரம்பரியம், இயற்கை அழகு மற்றும் ஆன்மீக ஆழம் கொண்டவை.
திறமையான திட்டமிடலும், சரியான விளம்பர முயற்சிகளும், முதலீடுகளும் இடம்பெற்றால், இது இலங்கையின் வடக்கு சுற்றுலா மையமாக மாறும்.
தற்போது வடக்கு மாகாணம், இலங்கையில் வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் சுமார் 3-5% மட்டுமே ஈர்க்கிறது.
இது கொழும்பு, கண்டி, காலி, நுவரெலியா, தம்புள்ளை போன்ற பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.
இவ்வாறு ஒப்பீட்டளவில் பின்னடைவில் இருக்கும் வடமாகாணத்தின் சுற்றுலா துறையை முன்னேற்ற, பல தளங்களில் மேம்பாட்டு நடவடிக்கைகள் அவசியம்.
குறிப்பாக ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தனியார் முதலீடுகளுடன் ஹோட்டல் மற்றும் விடுதி வசதிகள், நவீன விளம்பரங்கள், சமூக ஊடக விளம்பரங்கள், சிறப்பான இளைஞர் பயிற்சிகள், கிராமப்புற அனுபவத்துடன் வீட்டு விடுதிகள், யாழ் உணவுப் பாதைகள், நல்லூர் திருவிழா போன்ற திருவிழாக்களை சர்வதேச நாட்காட்டியில் இணைத்தல் போன்றவற்ரை நடைமுறைப்படுத்தவேண்டும் இவை யாவும் இணைந்து மேற்கொள்ளப்பட்டால், 2030ஆம் ஆண்டுக்குள் யாழ் மற்றும் வடமாகாணத்தில் மொத்த சுற்றுலா பங்கு 15-18% வரை உயரலாம்.
மேலும் வடமாகாணத்தில் தற்போதைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு விசேட உபக்குழுவை அமைத்து வடக்கு அபிவிருத்திக்காக திட்டமிட வேண்டும் என்றார்.
குறித்த விடயங்களை கேட்டறிந்த அமைச்சர் இவை தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
https://www.virakesari.lk/article/217826