தமிழ்த்தேசியப் பயணத்துக்கு தமிழரசு இணக்கப்பாடில்லை! - கஜேந்திரகுமார்
தமிழ்த்தேசியப் பயணத்துக்கு தமிழரசு இணக்கப்பாடில்லை!

ஐ.நா.வுக்கான கடித விவகாரத்தில் பொய்யுரைப்பு; கஜேந்திரகுமார் தெரிவிப்பு!
ஐ. நா.வுக்குக் கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழரசுக் கட்சியே பொய்யுரைத்துள்ளது. தமிழ்க் கட்சிகளிடையே இப்போது இணக்கப்பாட்டை ஏற்படுத்தத் தவறினால் தமிழ்த் தேசியம் அழியும் நிலை ஏற்படும். இணக்கப்பாட்டை ஏற்படுத்த நாங்கள் தொடர்ந்தும் முயற்சிப்போம்.
இவ்வாறு யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடத்திய ஊடக சந்திப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி தமிழ்த் தேசியக்கட்சிகள், சிவில் அமைப்புகள் எனப்பலரும் ஒன்றிணைந்து இணக்கத்துடன் கடிதத்தைத் தயாரித்து ஐ.நா.வுக்கு அனுப்பியுள்ளோம்.
இந்தக் கடிதத்தில் உள்ள விடயங்களில் தமிழரசுக் கட்சியும் இணக்கம் தெரிவித்து தாமும் கையொப்பம் வைப்பதாகத் தெரிவித்திருந்தது. அதற்கமைய ஆரம்பகட்டப் பேச்சுகளும் நடைபெற்றன. எனினும் இறுதியில் தமிழரசுக் கட்சி பொய்களைக் கூறியுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக இந்தக் கடிதத்துடன் தான் இணங்குவதாகவும் கட்சித்தலைவரே குழம்புகிறார் என்றும் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூட் டத்தில் பேசி ஒரு முடிவுக்குக் கொண்டுவருவோம் என்றும் அந்தக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் கூறினார்.
அதன்படி, இந்தக் கடிதத்தை மேலும் பலப்படுத்துவதாக இருந்தால் பரவாயில்லை எனவும் அதில் வெட்டித் திருத்தம் செய்வதென்றால் தாமதம் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் கடிதத்தின் தரத்தைக் குறைக்க முடியாது, தரத்தைக் கூட்டுவதாக இருந்தால் தாமதித்தாலும் பரவாயில்லை என எமது தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் முடிவடைந்த பின்னர் நடத்திய ஊடக சந்திப்பின் போது இதுவரையும் எங்ளுக்குள் பேசப்பட்ட விடயங்களுக்கு மாறாக அப்பட்டமான பொய்களை சுமந்திரன் சொல்லியுள்ளார்.
அதற்குப் பிற்பாடும் 7ஆம் திகதி கொழும்பில் 5 மணிக்கு எனது இல்லத்தில் சந்திக்க இணங்கியிருந்தோம். தொடர்ந்தும் சந்திக்க விருப்பம் என்றால் அடுத்த வாரம் யாழில் சந்திக்கலாம் என்றும் நாங்கள் கூறினோம். நாங்கள் வெளிப்படைத்தன்மையாக நேர்மையுடன் இயங்க விரும்புகிறோம். ஆனால் அவர்களே திட்டமிட்ட பொய்களைக் கூறி வருகின்றனர். தமிழ்த்தேசியம் பாதுகாக்கப்பட்டு முன்னோக்கிப் பயணிக்கவேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சி உட்பட நாம் அனைவரும் கட்டாயம் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்றார்.
https://newuthayan.com/article/தமிழ்த்தேசியப்_பயணத்துக்கு_தமிழரசு_இணக்கப்பாடில்லை!#google_vignette








