Aggregator
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
யாழ். விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல்!
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும் — வீரகத்தி தனபாலசிங்கம் —
டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும் — வீரகத்தி தனபாலசிங்கம் —
டொனால்ட் ட்ரம்பின் போரும் சமாதானமும்

— வீரகத்தி தனபாலசிங்கம் —
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த மே மாதத்தில் மூண்ட போரை நிறுத்தியது தானே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையறாது கூறிவருகிறார். இரு நாடுகளினதும் இராணுவ உயர்மட்டங்களில் இடம்பெற்ற தொடர்பாடல்களை அடுத்தே அன்று மோதல்களை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக புதுடில்லி திட்டவட்டமாக கூறிவருகின்ற போதிலும், ட்ரம்ப் அதைப் பொருட்படுத்துவதாக இல்லை.
இரு தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான மோதலை நிறுத்தியதாக இதுவரையில் அமெரிக்க ஜனாதிபதி சுமார் 70 தடவைகள் கூறியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. அவர் இறுதியாக கடந்த புதன்கிழமை பென்சில்வேனியா மாநிலத்தின் நகரொன்றில் நிகழ்த்திய உரையில் அதை கூறியிருக்கிறார். இரண்டாவது தடவையாக பதவிக்கு வந்த பின்னரான 10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியிருப்பதாக அவர் பெருமையுடன் உரிமை கோருகிறார்.
மத்திய கிழக்கில் காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான இரு வருடகாலப் போர், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர், தென்கிழக்காசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான போர், ஆர்மேனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையிலான போர், எகிப்துக்கும் எதியோப்பியாவுக்கும் இடையிலான போர், சேர்பியாவுக்கும் கொசோவோவுக்கும் இடையிலான போர் மற்றும் ஆபிரிக்க நாடுகளான ருவாண்டாவுக்கும் கொங்கோ ஜனநாயக குடியரசுக்கும் இடையிலான போர் ஆகியவையே ட்ரம்ப் நிறுத்தியதாகக் கூறும் போர்களாகும்.
இந்த போர்களை பெரும்பாலும் வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக அல்லது அதிகரிக்கப்போவதாக அச்சுறுத்தியதன் மூலமே நிறுத்தியதாகவும் கூறிய அவர் இந்த சர்வதேச மோதல்களை நிறுத்தி உலகில் சமாதானத்துக்காக பாடுபடுவதற்காக தனக்கு 2025 நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் தானாகவே கேட்டார். அவருக்கு அந்த சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அதற்கு நியமனங்களை செய்வதற்கான காலஅவகாசம் கடந்த ஜனவரியில் முடிவடைந்த பிறகு சிபாரிசு செய்தவர்களில் போர்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு பிறகு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவும் ஒருவர்.
ஆனால், இறுதியில் ட்ரம்பினால் சர்வதேச உதைபந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத்தின் சமாதானப்பரிசை மாத்திரமே பெறக்கூடியதாக இருந்தது. அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலக உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் வாஷிங்டனில் நடைபெற்ற விமரிசையான நிகழ்வில் வைத்து வழங்கப்பட்ட அந்த பரிசும் கூட சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதிக்கு சமாதானப் பரிசை வழங்கியதன் மூலம் அரசியல் நடுநிலை தொடர்பிலான சம்மேளனத்தின் ஆட்சிக்குழுவின் விதிமுறைகளை மீறியதாக அதன் தலைவர் கியானி இன்பான்ரினோ மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு சம்மேளனத்தின் ஒழுங்கு கட்டுப்பாட்டுக் குழுவிடம் கேட்கப்பட்டிருக்கிறது.
தன்னால் நிறுத்தப்பட்டதாக ட்ரம்ப் கூறிய எந்தவொரு போரிலும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையிலான பதற்றநிலை இன்னமும் தணிந்ததாக இல்லை.
காசாவிலும் சூடானிலும் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள், உக்ரெயின் மீது ரஷ்யா தொடர்ந்து மேற்கொண்டுவரும் தாக்குதல்கள், கொங்கோவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெறும் சண்டைகள், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள், மியன்மார் இராணுவத்தின் விமானக்குண்டு வீச்சுக்கள் மற்றும் அமெரிக்காவில் அதிகரித்துவரும் அரசியல் வன்முறைகளை அலட்சியம் செய்தால் மாத்திரமே ட்ரம்ப் உலகில் சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று எம்மால் கற்பனை செய்துபார்க்க முடியும்.
கடந்த ஜூலையில் இராணுவ மோதல்களை நிறுத்திய தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் கடந்த வாரம் மீண்டும் மோதல்கள் மூண்டிருந்தன. ட்ரம்பின் உதவியுடன் பிரகடனம் செய்யப்பட்ட போர் நிறுத்தம் எந்தளவுக்கு சஞ்சலமானதாக இருக்கிறது என்பதை இந்த புதிய மோதல்கள் வெளிக்காட்டுகின்றன. இரு தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையில் மீண்டும் சண்டை மூண்டிருப்பது குறித்து பென்சில்வேனியா உரையில் குறிப்பிட்ட ட்ரம்ப் மோதல்களை நிறுத்துவதற்கு அவற்றின் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசவிருப்பதாக அறிவித்தார். ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் போரை நிறுத்தப் போவதாக வேறு எவரினால் கூறமுடியும் என்றும் அவர் கேட்டார். தன்னைத் தவிர வேறு எவரினாலும் அவ்வாறு செய்ய முடியாது என்று அவர் மார்தட்டுகிறார்.
தனது முதலாவது பதவிக்காலத்தில் உலகின் எந்த பாகத்திலும் போருக்கு அமெரிக்கப்படைகளை அனுப்பவில்லை என்று பெருமையாகக் கூறிய ட்ரம்ப் தற்போது இரண்டாவது பதவிக்காலத்தில் தனது தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் மூலமாக பல பிராந்தியங்களில் பதற்றநிலை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறார்.
டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான கிறீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதற்கும் பனாமா கால்வாயை அமெரிக்காவுக்கு சொந்தமாக்குவதற்கும் படைகளை அனுப்புவதற்கான சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை என்று முன்னர் கூறிய அவர், தற்போது எண்ணெய் வளமிக்க தென்னமெரிக்க நாடான வெனிசூலாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற போர்வையில் இராணுவத் தாக்குதலுக்கு தயாராகிறார். போதைப் பொருளுக்கு எதிரான போரில் மெக்சிக்கோவிற்குள் தாக்குதல் நடத்துவது குறித்தும் அவர் ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரானவை என்று கூறிக்கொண்டு கரிபியன் மற்றும் பசுபிக் கடற்பிராந்தியங்களில் கடந்த சில வாரங்களாக தாக்குதல்களை நடத்துவதன் மூலமாக வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மடுரோ மீது அமெரிக்கா நெருக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. 1989 ஆம் ஆண்டில் பனாமா ஆக்கிரமிப்பிற்கு பிறகு கரிபியன் கடற்பரப்பில் பெருமளவில் அமெரிக்கப் படைக்குவிப்பு தற்போதுதான் இடம்பெற்றிருக்கிறது.
வெனிசூலாவின் வான்பரப்பு முற்றாக மூடப்பட்டுவிட்டதாக கருதப்பட வேண்டும் என்று இரு வாரங்களுக்கு முன்னர் ட்ரம்ப் கூறினார். கரிபியன் கடற்பரப்பில் வெனிசூலா மீது தாக்குதல் நடத்தக்கூடிய தூரத்திற்குள் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தரித்துநிற்கின்றன. போதைப்பொருளை கடத்திச்செல்வதாக கூறப்படும் படகுகள் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதல்களில் அண்மைய வாரங்களில் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று வாஷிங்டனால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குழுமம் ஒன்றின் தலைவராக ஜனாதிபதி மடுரோ செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டும் அமெரிக்க அரசாங்கம் அதற்கு திட்டவட்டமான சான்று எதையும் இதுவரை முன்வைக்கவில்லை.
வெனிசூலாவுக்கு எதிரான தடைகளை ட்ரம்ப் விரிவுபடுத்தியிருப்பதுடன் ஏற்றுமதிக்கு தடைசெய்யப்பட்ட எண்ணெயை ஏற்றிச் சென்றதாக குற்றஞ்சாட்டி வெனிசூலா கரையோரமாக கப்பல் ஒன்றை அமெரிக்கா டிசம்பர் 10 ஆம் திகதி கைப்பற்றியது. கரிபியனில் ‘கடற்கொள்ளை யுகம்’ ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி தோற்றுவிக்கிறார் என்று மடுரோ குற்றஞ்சாட்டியிருக்கிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற வெனிசூலாவின் வலதுசாரி எதிர்க்கட்சி தலைவியான மரியா கொரினா மச்சாடோ முழுமையாக ஆதரிக்கிறார்.
ஹியூகோ ஷாவேஸின் மறைவைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் இருந்து வெனிசூலாவின் ஜனாதிபதியாக பதவியில் இருந்துவரும் (சோசலிசவாதி என்று தன்னைக்கூறிக்கொள்ளும் ) மடுரோ 2024 ஜனாதிபதி தேர்தலில் மோசடிகளைச் செய்து வெற்றிபெற்றதாகக் குற்றச்சாட்டப்படுகிறது.
அவரது ஆட்சியில் பொருளாதாரம் படுமோசமான பின்னடைவைக் கண்டதையடுத்து இலட்சக்கணக்கில் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். வெனிசூலாவின் இன்றைய நிலைமைக்கு மடுரோ பொறுப்பு என்ற போதிலும், வாஷிங்டன் விதித்திருக்கும் தடைகளும் அந்த நிலைமைக்கு பெருமளவில் பங்களிப்பைச் செய்திருக்கின்றன.
மடுரோவின் அரசாங்கத்தை மலினப்படுத்தும் ஒரு முயற்சியாக அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி முக்கியஸ்தரான ஜுவான் குவாய்டோவையே ஜனாதிபதியாக அங்கீகரித்திருந்தன.
மடுரோ ஜனநாயக விரோதமாக எதேச்சாதிகார ஆட்சி நடத்துகிறார் என்று குற்றஞ்சாட்டி அவருக்கு எதிரான போராட்டத்தை அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் துணிச்சலாக முன்னெடுக்கிறார் என்பதற்காகவே எதிர்க்கட்சி தலைவி மச்சாடோவுக்கு நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட்டது. கடந்த அக்டோபரில் சமாதானப்பரிசு அறிவிக்கப்பட்ட உடனடியாகவே அதை அமெரிக்க ஜனாதிபதிக்கு சமர்ப்பணம் செய்வதாக மச்சாடோ அறிவித்தார். மடுரோ ஆட்சிக்கு எதிரான ஜனநாயகப் போராட்ட இயக்கத்துக்கு ட்ரம்ப் தீர்க்கமான ஆதரவை வழங்கிவருவதற்காக அவருக்கு மச்சாடோ நன்றி தெரிவித்தார்.
கடந்த வருட தேர்தலுக்கு பிறகு மச்சாடோ தலைமறைவாக இருந்து வருகிறார். தனது மறைவிடத்தில் இருந்து இரகசியமாக கடல் மார்க்கமாக வெளியேறி நோர்வேக்குச் சென்று நோபல் சமாதானப் பரிசை தானே நேரடியாக சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி ஒஸ்லோவில் நடைபெற்ற வைபவத்தில் பெறுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.
உரிய நேரத்துக்கு மச்சாடோவினால் ஒஸ்லோவைச் சென்றடைய முடியவில்லை. அதனால் அவரின் மகளே பரிசைப் பெற்றுக்கொண்டார். ஆனால் காலந்தாழ்த்தியேனும் ஒஸ்லோ சென்ற மச்சாடோவுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது நாட்டில் இருந்து வெளியேறி ஐரோப்பாவுக்கு வருவதற்கு அமெரிக்கா செய்த உதவிக்காக அவர் நன்றிகூறினார்.
வெனிசூலாவுக்குள் அமெரிக்க இராணுவத்தை அனுப்பி மடுரோவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ட்ரம்பின் திட்டத்துக்கு அமெரிக்க காங்கிரஸுக்குள் எதிர்ப்பு இருக்கிறது. கடந்த வாரம் எண்ணெய்க்கப்பல் கைப்பற்றப்பட்ட சம்பவத்துக்கு பிறகு கருத்து தெரிவித்த ஜனநாயக கட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள் ட்ரம்ப் ‘நித்திரையில் போருக்குள் நடந்துசெல்கிறார்’ என்று வர்ணித்திருந்தார்கள்.
கரிபியன் கடற்பரப்பில் அமெரிக்கப்படைகள் நடத்திவரும் தாக்குதல்களில் குடிமக்கள் பலர் கொல்லப்படுவது அப்பட்டமான சர்வதேச சட்டமீறலாகும். மடுரோவின் ஆட்சியில் தன்மை எத்தகையதாக இருந்தாலும், அவருக்கு எதிரான ட்ரம்ப் நிருவாகத்தின் அச்சுறுத்தல்கள் வெனிசூலாவின் சுயாதிபத்தியத்தின் மீதான தாக்குதல்களேயாகும்.
கடந்த காலத் தவறுகளில் இருந்து அமெரிக்கா படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதே இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாகும்.
வியட்நாம் போர்க்காலத்தில் ஒரு கட்டத்தில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த றொபேர்ட் மக்னமாரா (பிறகு அவர் உலகவங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார்) ஜேர்மன் தத்துவஞானி ஹெகலின் கூற்று ஒன்றை நினைவு கூர்ந்தார் ; “வரலாற்றில் இருந்து எவரும் படிப்பினைகளைப் பெறுவதில்லை என்பதே வரலாற்றில் இருந்து பெறக்கூடியதாக இருக்கும் படிப்பினையாகும்.”
9/ 11 தாக்குதல்களுக்கு பிறகு 2001 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்குள் படையெடுத்த அமெரிக்கா இருபது வருடக்களுக்கு பிறகு தலிபானகளுடன் இணக்கப்பாடொன்றுக்கு வந்து வெளியேறுவதை தவிர வேறு மார்க்கம் இருக்கவில்லை. சதாம்ஹுசெயன் பேரழிவுதரும் ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு 2003 ஆம் ஆண்டில் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பிறகு இடம்பெற்றவை உலகில் இடம்பெற்றிருக்கக்கூடிய படுமோசமான மனிதப் பேரவலங்களில் ஒன்றாக அமைந்தது.
தற்போது பல போர்களை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறி நோபல் சமாதானப் பரிசுக்கு ஆசைப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் வெனிசூலாவில் அதே தவறைச் செய்வதற்கு தயாராகும் அபத்தத்தைக் காண்கிறோம்.