Aggregator
2025 ஆம் ஆண்டிற்கான வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார் லக்ஷித!
2025 ஆம் ஆண்டிற்கான வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார் லக்ஷித!
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் Wildlife Photographer of the Year (WPY) போட்டியில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்ஷித கருணாரத்ன மீண்டும் ஒரு விருதை வென்று இலங்கைக்கு பெறுமை சேர்த்துள்ளார்.
“வனவிலங்கு புகைப்படக் கலைஞரின் ஆஸ்கார் விருதுகள்” என்று அழைக்கப்படும் இந்தப் போட்டியில், அவர் இரண்டு தடவைகள் வெற்றி பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 61 ஆண்டுகால WPY வரலாற்றில் இது ஒரு முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.
1965 முதல் நடைபெற்று வரும் இந்தப் போட்டிக்கு, இந்த ஆண்டு மட்டும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 60,636 புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 100 புகைப்படங்கள் மட்டுமே விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளன.
லக்ஷிதவின் விருது பெற்ற ‘Toxic Tip’ எனும் தலைப்பிலான புகைப்படம், அம்பாறை மாவட்டத்தில் எடுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக மனித-யானை மோதல்கள் மற்றும் தவறான கழிவு மேலாண்மை தொடர்பான தகவல்களை சேகரித்து வந்த அவர், உணவுக்காக ஒரு பெரிய குப்பைக் கிடங்கில் தேடும் தனி யானையின் புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்த படம், இலங்கையில் பிளாஸ்டிக், பொலிதீன், மைக்ரோபிளாஸ்டிக் போன்ற கழிவுகளை உட்கொள்வதால் யானைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை வெளிப்படுத்துகிறது. இத்தகைய கழிவுகள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு, யானைகளின் ஆயுட்காலத்தையும் குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இலங்கை, ஆசியாவில் மனித-யானை மோதல்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 400 யானைகளும், 100க்கும் மேற்பட்ட மனிதர்களும் இந்த மோதல்களில் உயிரிழப்பதாக தரவுகள் கூறுகின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக லக்ஷித கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கையில்”
“இந்த விருது எனக்கானதல்ல; நமது வாழ்க்கை முறை மற்றும் கழிவு மேலாண்மை வனவிலங்குகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான ஒரு எச்சரிக்கை. யானைகள் நமது கலாசார அடையாளத்தின் பகுதியாக உள்ளதால், அவற்றைப் பாதுகாப்பது நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு சமம்,” எனக் கூறினார்.
இந்த வெற்றி, இலங்கையை உலக வனவிலங்கு புகைப்படத் துறையில் மீண்டும் உயர்த்தி நிறுத்திய பெருமையான தருணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரணிலின் உடல்நிலை கவலைகளால் ஐ.தே.க.வின் ஆண்டு விழா ஒத்திவைப்பு!
ரணிலின் உடல்நிலை கவலைகளால் ஐ.தே.க.வின் ஆண்டு விழா ஒத்திவைப்பு!
ரணிலின் உடல்நிலை கவலைகளால் ஐ.தே.க.வின் ஆண்டு விழா ஒத்திவைப்பு!
எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று (02) கூடிய கட்சியின் நிர்வாகக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுக்கோரல தெரிவித்தார்.
இந்த மாத இறுதியில் நிகழ்வு மீண்டும் திட்டமிடப்படும்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் கட்சி குழு உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?
காணொளியிலுள்ள சில விடையங்களை பேச்சு சிங்களத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்க உதவுங்கள்...
Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary
49ஆவது தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில் அசத்திய வடக்கு, மலையக, கிழக்கு வீர, வீராங்கனைகள்
49ஆவது தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில் அசத்திய வடக்கு, மலையக, கிழக்கு வீர, வீராங்கனைகள்
Published By: Vishnu
02 Sep, 2025 | 09:08 PM
(நெவில் அன்தனி)
விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 49ஆவது தேசிய விளையாட்டு விழா காலி தடெல்ல மைதானத்தில் கடந்த வார இறுதியில் நிறைவடைந்தது.
விளையாட்டு விழாவில் மிகவும் முக்கியமானதும் கடைசியுமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு, மலையக, கிழக்கு வீர, வீராங்கனைகள் பதக்கங்கள் வென்று அசத்தியிருந்தனர்.
கோலூன்றிப் பாய்தலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரனும் நேசராசா டக்சிதாவும் தத்தமது சொந்த சாதனைகளை முறியடித்து புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதங்கங்களை சுவீகரித்து பலத்த பாராட்டுதல்களைப் பெற்றனர்.
மெய்வல்லுநர் போட்டிகளில் இந்த இருவர் மாத்திரமே புதிய சாதனைகளை நிலைநாட்டினர்.
ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் 5.12 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனையைப் படைத்தார்.
கடந்த வருடம் தன்னால் நிலைநாட்டப்பட்ட 5.11 மீற்றர் என்ற சாதனையை முறியடித்தே புவிதரன் இம் முறை புதிய சாதனையைப் படைத்தார்.
பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் டக்சிதா 3.52 மீற்றர் உயரம் தாவி, 2024இல் நிலைநாட்டப்பட்ட 3.51 மீற்றர் என்ற தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்தார்.
மிதுன்ராஜுக்கு 2 தங்கப் பதக்கங்கள்
ஆண்களுக்கான தட்டு எறிதல் (48.08 மீற்றர்), குண்டு எறிதல் (15.40 மீற்றர்) ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் வெற்றியீட்டிய எஸ். மிதுன்ராஜ் 2 தங்கப் பதக்கங்களை வட மாகாணத்திற்கு பெற்றுக்கொடுத்தார்.
வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான இளங்கோ விகிர்தன் ஒரு தங்கப் பதக்கத்தையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தார்.
ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 31 நிமிடங்கள், 36.02 செக்கன்களில் நிறைவுசெய்த விகிர்தன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அதற்கு முன்னர் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் (15:02.45) வெள்ளிப் பதக்கத்தை விகிர்தன் வென்றிருந்தார்.
பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி (3.10 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
வக்சனுக்கு தங்கம் உட்பட 2 பதக்கங்கள்
மத்திய மாகாணம் சார்பாக போட்டியிட்ட மலையக விளையாட்டுத்துறை நட்சத்திர மைந்தர்களில் ஒருவரான விக்னராஜ் வக்சனுக்கு ஒரு தங்கப் பதக்கத்துடன் ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.
ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்கள், 00.72 செக்கன்களில் நிறைவு செய்த தலவாக்கொல்லையைச் சேர்ந்த வக்சன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் (3:55.48) வக்சனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் சுவீகரித்த கே. ஷண்முகேஸ்வரனுக்கு 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய நேரிட்டது.
அப் போட்டியை 32 நிமிடங்கள், 10.40 செக்கன்களில் நிறைவுசெய்த ஷண்முகேஸ்வரன் 2ஆம் இடத்தைப் பெற்றார்.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய மத்திய மாகாண வீரர் சாத் பலீல், அப் போட்டியை 10.68 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
அதிவேக வீராங்கனை ஷபியா யாமிக்
தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளில் அதிவேக ஓட்ட வீராங்கனை என்ற கௌரவத்தை மத்திய மாகாண வீராங்கனை பாத்திமா ஷபியா யாமிக் பெற்றுக்கொண்டார்.
பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 24.33 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்த ஷபியா யாமிக், 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.87 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாவது தங்கப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
கிழக்கு மாகாணம் சார்பாக பிரகாசித்த ரதுசன், நிப்ராஸ்
கிழக்கு மாகாணம் சார்பாக போட்டியிட்ட தமிழ் பேசும் வீரர்களான ரதுசன் வெள்ளிப் பதக்கத்தையும் ஆர். எம். நிப்ராஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 70.47 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த ஆர். ரதுசன் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள், 55.48 செக்கன்களில் நிறைவுசெய்த ஆர்.எம். நிப்ராஸுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!
வடக்கில் நினைவேந்தலுக்கு அனுமதியளித்துவிட்டு இராணுவத்தினரை அரசாங்கம் வேட்டையாடுகிறது - நாமல்
வடக்கில் நினைவேந்தலுக்கு அனுமதியளித்துவிட்டு இராணுவத்தினரை அரசாங்கம் வேட்டையாடுகிறது - நாமல்
02 Sep, 2025 | 06:16 PM
(இராஜதுரை ஹஷான்)
வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதியளித்து விட்டு இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் நிலைமை இராணுவ அதிகாரிகளுக்கும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிர்காலத்தில் ஏற்படலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இராணுவத்தினரை பாதுகாப்பதற்கு நிபந்தனையற்ற வகையில் நாங்கள் முன்னிலையாவோம். இந்த அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை பழிவாங்கும் வகையில் செயற்படுகிறது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருத்திப்படுத்துவதற்காக இராணுவத்தினர் வேட்டையாடப்படுகிறார்கள்.
இராணுவத்தினரை பாதுகாக்கும் எமது செயற்பாட்டுக்கு மகாநாயக்க தேரர்களின் ஒத்துழைப்பை முழுமையாக எதிர்பார்க்கிறோம். ஏனெனில் அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு மகாநாயக்க தேரர்களுக்கு உண்டு.
முன்னாள் கடற்படைத்தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார். இவருக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிர்காலத்தில் ஏற்படலாம்.
இராணுவத்தினரை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இராணுவத்தை காட்டிக்கொடுக்கக்கூடிய திட்டத்திற்கு எதிர்ப்பு
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இராணுவத்தை காட்டிக்கொடுக்கக்கூடிய திட்டத்திற்கு எதிர்ப்பு
02 Sep, 2025 | 05:29 PM
(எம்.ஆர்.எம்.வசீம்)
நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் போது நாட்டை பாதுகாத்த படைவீரர்களை காட்டிக்கொடுக்கும் சதித்திட்டம் ஒன்று இடம்பெறவுள்தாக தெரியவருகிறது. அரசாங்கம் அதற்கு இடமளிக்கக்கூடாது என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார்.
இந்த மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (2) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தா்ர.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் இந்த மாதம் இடம்பெற இருக்கிறது. மனித உரிமைகள் தொடர்பில் எமக்கு கற்றுக்கொடுப்பதற்கு வெள்ளையர்களு்கு முடியுமா என்ற கேள்வி எமக்கு இருக்கிறது. நாங்கள் கால்நடைகளின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த ஒரு இனமாகும். அவ்வாறு இருக்கையில் மனித உரிமை தொடர்பில் எங்களுக்கு ஆலாேசனை வழங்க வெள்ளைக்கார்களுக்கு முடியுமா?
அத்துடன் எமது நாட்டை பயங்கரவாத யுத்தத்தில் இருந்த மீட்ட படை வீரர்களை காட்டிக்கொடுக்கும் சதித்திட்டம் ஒன்றை வெள்ளையர்கள் மேற்கொண்டுவருகிறார்கள் என்பதை எங்களுக்கு தெரிந்துகொள்ள கிடைக்கிறது. அதனால் மக்களின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி, சமூகத்துக்கு நல்ல பணிகளை செய்ய இருந்த மனிதர்களையும் அதற்குள் இழுத்துக்கொண்டு, செயற்படுவதாகவே தெரியக்கூடியதாக இருக்கிறது.
இந்த அரசாங்கத்தின் கீீழ் இருக்கும் பெரும்பான்மையானவர்கள், எம்முடன் இணைந்து, நாட்டுக்காக நாட்டுப்பற்றுடன் செயற்பட்டவர்கள்.
அதனால் நாட்டை மீட்ட இராணுவத்தினருக்கு நாங்கள் தெரிவித்த விடயங்கள் என்ன என்பதை இந்த அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். அதனால் ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடரில் எமது இராணுவ வீரர்களை காட்டிக்கொடுக்கும் எந்த விடயங்களுக்கும் அரசாங்கம் துணைபோகக்கூடாது என்றார்.
விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளருக்கு என்ன நடந்தது? 16 ஆண்டுகளாக தொடரும் பாசப் போராட்டம்
படக்குறிப்பு, வலுவான உடலமைப்பைக் கொண்டிருந்த கோபிநாத், உடல் தகுதியைப் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
கட்டுரை தகவல்
சம்பத் திஸாநாயக்க & ஷெர்லி உபுல் குமார, கிளிநொச்சியில் இருந்து
பிபிசி சிங்கள சேவை
3 செப்டெம்பர் 2025, 01:43 GMT
புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்
''பிள்ளைகளுக்கு மாத்திரம் என்ன நடந்தது என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் உயிருடன் அல்லவா கையளித்தோம். சடலத்தைக் கொடுக்கவில்லையே'' என கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார்.
செல்வதுரை கோபிநாத் என்ற அவரது மகன், பள்ளி ஆசிரியராக இருந்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆங்கில செய்தி வாசிப்பாளராகக் கடமையாற்றினார்.
சுமார் 16 வருடங்களுக்கு முன்னர் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தருணத்தில் தனது மகனை ராணுவத்திடம் ஒப்படைத்த போதிலும், அவருக்கு என்ன நடந்தேறியது என்பது தொடர்பில் எந்தவிதத் தகவலும் இல்லை என கோபிநாத்தின் தாய் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் இந்தச் சம்பவமானது, நாட்டில் தீர்க்கப்படாதுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் பட்டியலில் மற்றுமொரு சம்பவமாகவும் இருக்கக்கூடும்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைகளின் பிரகாரம், உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அதிகளவானோர் காணாமல் போன நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. இராக் முதல் இடத்தில் உள்ளது.
கிளிநொச்சி நகருக்கு அருகிலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் வசித்து வந்த செல்வதுரை கோபிநாத், தனது 27வது வயதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
படக்குறிப்பு, அவரது தந்தையின் கூற்றுப்படி, கோபிநாத் விருப்பமின்றித்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்திகளை வழங்கச் சென்றார்.
மா, வாழை, தென்னை போன்ற மரங்கள் நிரம்பிய தோட்டத்திற்கு மத்தியில் மிகவும் அமைதியான சூழலில் அவரது வீடு அமைந்துள்ளது. நாங்கள் அவரது வீட்டை நெருங்கிய சந்தர்ப்பத்தில், அவரது தாயார் செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி வரவேற்றார்.
அதன் பின்னர், அவரது கணவர் சுப்ரமணியம் செல்வதுரை எங்களிடம் பேசத் தொடங்கினார். 73 வயதான அவருக்கு, கடந்த ஒரு வார காலமாக காது கேட்கும் திறன் குறைந்துள்ளது.
முச்சக்கரவண்டி (ஆட்டோ) ரிப்பேர் வேலைகளைச் செய்தல், வாகனங்களின் ஆசனங்களுக்கு மேலுறை தயாரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்த அவர், உடல்நலக் குறைவு காரணமாகத் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
''எமது மகன் செல்வதுரை கோபிநாத் ஒரு ஆசிரியர். அக்கராயன் மகா வித்தியாலயத்தில் அவர் ஆசிரியராக வேலை செய்தார். அவர் ஆங்கில ஆசிரியர். அவருக்கு ஆங்கலம் நன்றாகத் தெரியும்.''
''நிதர்சனம் என்ற விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி சேனல் ஒன்று இருந்தது. எனது மகன் 1:15 மணிக்கு விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தியை வாசிக்கச் சொன்னார்கள். செய்தியை வாசிக்க வேண்டும். 10,000 ரூபா சம்பளம் கொடுத்தார்கள்'' என சுப்ரமணியம் செல்வதுரை தெரிவித்தார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் செல்வதுரை சொல்லும் விதத்தில், தனது இரண்டாவது மகனான கோபிநாத், விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளராகச் சென்றமையானது, தனது சுய விருப்பத்திற்கன்றி, வேறு மாற்று வழி இல்லாமையே அவர் அங்கு சென்றார் எனப் புரிகிறது.
ஆங்கில செய்தி வாசிப்பாளராகப் பணியாற்ற வேண்டுமென்ற தனது விருப்பத்தைத் தெரிவிக்காத பட்சத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொள்வதற்காகத் தன்னை அழைத்துச் செல்வார்கள் என்ற அச்சத்திலேயே அவர் அதற்கு விருப்பம் தெரிவித்து இருந்ததாக கோபிநாத்தின் பெற்றோர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தனர்.
படக்குறிப்பு, தாயார் இன்னும் கோபிநாத்தின் டூத்பிரஷை பத்திரமாக வைத்துள்ளார்.
''என்னை இவ்வாறு அழைக்கின்றார்கள் என்ன சொல்வது என்று எனது மகன் கேட்டார். எங்களுக்கு இந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்வதற்கான வழி இல்லை. அதனால், செய்தி வாசிக்குமாறு நான் கூறினேன். அப்படி இல்லையெனில், விடுதலைப் புலிகள் அழைத்து செல்வார்கள்தானே!''
"கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்தே அவர் ஆரம்பித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் மாவீரர் தினத்திற்கான நேரடி ஒளிபரப்பிற்காக முதலில் அவரை அழைத்துச் சென்றார்கள். அவர் செய்தியை மொழிபெயர்ப்பு செய்வார். வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு இந்த இடத்திலிருந்தே அவரை அழைத்து சென்றார்கள்" என்று விவரித்தார் அவரது தந்தை.
"வாகனத்தில் இருவர் வருகை தந்தார்கள். அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெரியவர்கள் என நினைக்கின்றேன். பிரபாகரன் ஐயாவின் நேரடி ஒளிபரப்பை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் எனச் சொன்னார்கள். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. போகுமாறு கூறினோம்.''
''பின்னர் 9 மணியளவில் வீட்டிற்கு அழைத்து வந்து இறக்கி விட்டார்கள். அவர் பள்ளிக்குச் சென்று வருவார். அன்றுதான் இது ஆரம்பமானது. நீங்கள் நன்றாகச் செய்தி வாசிக்கின்றீர்கள் என மக்கள் சொன்னார்கள். ஆளுமை நன்றாக இருக்கின்றது என்றார்கள். அதனால் நீங்களே செய்தி வாசிக்க வேண்டும் என்றார்கள்.
அவருக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால், எதுவும் செய்ய முடியாது. செல்ல வேண்டும். அழைப்பது பெரியவர்கள், அவர்களுடன் எம்மால் மோத முடியாது, எதுவும் செய்ய முடியாது என்பதால் போகச் சென்னோம். அதன் பின்னர் 9:15 மணி செய்தியை வாசித்தார். ஒன்பது முப்பது அல்லது 10 மணி போல வீட்டிற்கு வருவார். அவர் வரும் வரை நாங்கள் வீதியைப் பார்த்துக் கொண்டிருப்போம்.''
கடந்த 2009-ஆம் ஆண்டு தொடர்ச்சியாக ''குண்டுகள் விழ ஆரம்பித்தன. நாங்கள் முள்ளிவாய்க்கால் - வள்ளிபுரம் கிராமத்திற்குச் சென்றோம்.''
கோபிநாத்திற்கு மூத்த மற்றும் இளைய சகோரர்கள் இருக்கின்றார்கள். யுத்தம் கடுமையானதை அடுத்து, சுப்ரமணியம் செல்வதுரை தனது குடும்பத்தினருடன் கிளிநொச்சியை விட்டு வெளியேறி, முள்ளிவாய்க்கால் நோக்கி இடம்பெயர்ந்திருந்தார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுபட்டு, இந்த குடும்பத்தினர் வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வந்துள்ளனர்.
''விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்பித்து ராணுவத்திடம் சென்றோம். அவர்கள் எங்களை ஓர் இடத்தில் தங்கச் சொன்னார்கள். அதன் பின்னர் பிரிந்து இருக்குமாறு சொன்னார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று நாங்கள் அழுதோம். நாங்கள் அழுது கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ராணுவத்தினர் வந்து மகன்கள் இருந்தால் வருமாறு கூறினார்கள். ஏன் வரச் சொல்கிறீர்கள் எனக் கேட்டேன். என்னால் அதை விவரிக்க முடியவில்லை, கவலையாக இருக்கின்றது'' என செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி கூறினார்.
படக்குறிப்பு, "எங்கள் மகனுக்கு என்ன ஆனது எனச் சொல்லுங்கள். நாங்கள் அவனை உயிருடன்தானே கொடுத்தோம், சடலமாக அல்லவே!" என்று அவர் சற்று சீற்றத்துடன் கேள்வியெழுப்பினார்.
விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளராக வேலை செய்தமையால், எனது மகனை பலரும் அடையாளம் கண்டு கொண்டிருந்தனர் என்பதாலேயே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டு இருக்கலாம் என கோபிநாத்தின் தந்தை தெரிவிக்கின்றார்.
''நான் தப்பு செய்யவில்லை. அம்மா எந்தவித பொய்யையும் சொல்ல வேண்டாம். உண்மையைச் சொல்லுங்கள்' என்று அவர் எந்நேரமும் சொன்னார்'' என அவரின் தாய் கூறுகின்றார்.
''மகன் பள்ளியில் தங்கியிருப்பார். வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு வருவார். வெள்ளிக்கிழமை வருகை தந்து மாலை 6 மணியளவில் செய்தி வாசிப்பதற்காகச் செல்வார். இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வருவார். வாரத்தில் இரண்டு தினங்கள் மாத்திரமே செய்தி வாசிப்பதற்காக அவர் செல்வார்.''
''அம்மா என்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது என அவர் சொன்னார். அப்பாவுக்கு கண் தெரியவில்லை என அவர்கள் வந்தால் கூறுங்கள். அதையும் செய்து, இதையும் செய்ய முடியாது எனச் சொல்லுங்கள். நாங்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு தொகையை அவர்களுக்கு வழங்குவதாகச் சொல்லுங்கள். எமது சம்பளத்தில் ஒரு தொகையைத் தருகின்றேன். வேறு ஒருவரை எடுக்குமாறு கூறுங்கள்'' என்று அவர் கூறியதாகவும் தாயார் கூறினார்.
அதோடு, ''முள்ளிவாய்க்கால் செல்லும் வரை அவர் எம்முடனேயே இருந்தார். எமது மகன் தவறு செய்யவில்லை என பேருந்தில் ஏறும்போது சொன்னேன். மகனும் தகவல்களைச் சொன்னார்.''
"எனது மகன் தவறு செய்யவில்லை என ராணுவத்திடம் நான் சொன்னேன்.''
''இல்லை, இல்லை. அவரிடம் தகவல்களைப் பெற்றதன் பின்னர் அனுப்புவோம் என அவர்கள் கூறினார்கள்.'' 'இவரிடம் தகவல்களை பெற வேண்டும் என மற்றுமொருவர் கூறினார்.''
''இல்லை, இல்லை அவரைப் பாதுகாப்பாக அழைத்து வந்து கையளிப்போம். எதுவும் செய்ய மாட்டோம். பயப்பட வேண்டாம். உங்கள் மகனை நாங்கள் அனுப்புவோம் என்று சொன்னார்கள்''
''அதன் பின்னர், "அம்மா அழுக வேண்டாம். அடையாள அட்டையைத் தாருங்கள். சென்று வருகின்றேன் அம்மா. அழுக வேண்டாம் அம்மா' என்று எனது மகன் சொன்னார். பேருந்தில் ஏறும்போதும் சென்று வருகின்றேன் என்றார்.''
படக்குறிப்பு, கோபிநாத்தின் தாயார் செல்வதுரை பத்மா பிரியதர்ஷினி, எங்களை வீட்டிலுள்ள ஓர் அறைக்கு அழைத்துச் சென்று, கோபிநாத் பயன்படுத்திய பொருட்களைக் காட்டினார்.
தனது மனதில் ஏதோ ஒருவித சந்தேகத்தில் வாழ்கின்ற போதிலும், தனது மகன் இன்னும் வாழ்கின்றார் என்ற பெரும் நம்பிக்கையுடன் வாழ்வதாகவே பத்மா பிரியதர்ஷனி. ''மகன் இருக்கின்றார் என்று நம்புகின்றேன். ஆண்டவனுக்குத்தான் தெரியும்.''
ராணுவம், போலீஸ் மற்றும் சிறைச்சாலைகளுக்குச் சென்று எந்தவித தகவல்களும் கிடைக்காத நிலையில் சோர்வடைந்த இந்தப் பெற்றோர், ஜோதிடம் பார்க்கும் இடங்களுக்கும் சென்றுள்ளனர். இந்தியாவில் உள்ள ஜோதிடம் சொல்லும் கோவிலுக்குக் கூட சென்றுள்ளனர்.
அவர்கள் மாத்திரமன்றி, அவர்கள் தேடிச் சென்ற ஜோதிடர்கள்கூட, தனது மகன் உயிருடன் இருப்பதாகக் கூறியுள்ள போதிலும், அவர் தொடர்பில் இன்று வரை எந்தவிதத் தகவலும் இல்லை என சுப்ரமணியம் செல்வதுரை கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
கோபிநாத்தின் தாயான பத்மா பிரியதர்ஷனி எம்மை வீட்டின் அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று, தனது மகனின் பொருட்களைக் காண்பித்தார்.
''எனது தங்க நகைகளை விட்டுவிட்டு, எனது மகனின் பொருட்களை மீண்டும் எடுத்து வந்தேன். இது அவர் பயன்படுத்திய பொருட்கள்'' கூறியவாறு பெட்டியொன்றைத் திறந்து எமக்குக் காண்பித்தார்.
வலுவான உடல் கட்டமைப்பைக் கொண்டிருந்த கோபிநாத், உடற்பயிற்சிகளைச் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளதாக அவர்களது பெற்றோர் தெரிவிக்கின்றனர். அவர் உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட தருணத்தில் எடுக்கப்பட்ட பழைய படமொன்றையும் அவர்கள் எம்மிடம் காண்பித்தனர்.
இந்தப் புகைப்படங்களைப் பார்த்து மீண்டும் உணர்ச்சிவசப்பட்ட அவரது தாய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஏனைய இளைஞர், யுவதிகள் தொடர்பிலும் கவலை தெரிவித்தார்.
''படலந்த தொடர்பில் சொல்லும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது. எமது பிள்ளைகளுக்கும் ஏதேனும் நடந்தேறியிருக்கும் என நினைத்துக் கவலையாக இருக்கின்றது.''
''யுத்தம் முடிவடைந்த பின்னர் நாங்கள் எமது பிள்ளைகளை உயிருடன் கையளித்திருந்தோம். யுத்தம் முடிவடைந்ததன் பின்னரே நாங்கள் அவர்களைக் கையளித்திருந்தோம். அவர்கள் என்ன கூறி அழைத்துச் சென்றார்கள்? தகவல்களைப் பெற்று மீண்டும் அனுப்புவதாகச் சொன்னார்கள் அல்லவா? அதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். எமது பணமோ காணியோ ஒன்றுமே வேண்டாம். பிள்ளைகளுக்கு மாத்திரம் என்ன நடந்தது என்பதை எங்களிடம் கூறுங்கள். உயிருடன் கையளித்தோம். சடலத்தைக் கையளிக்கவில்லை அல்லவா!'' என உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசினார்.
'கவலையில் இருக்கும் தந்தை'
வேறொரு முகாமில் இருந்த தனது நெருங்கியவர்கள், தனது மகனைக் கண்டுள்ளதாகக் கூறுகிறார் கவலையில் இருக்கும் தந்தை.
''ராமநாதன் என்ற பெயரில் முகாமொன்று இருந்தது. பெரும்பாலானோருக்கு எம்மை நன்றாகவே தெரியும் அல்லவா? உங்களின் மகனைக் கண்டோம் என்று அவர்கள் சொன்னார்கள். நன்றாக இருக்கின்றார். தண்ணீர் எடுக்கும் குழாய் அருகில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார். சிவப்பு நிற டிசர்ட் அணிந்து, கறுப்பு நிற கால் சட்டை அணிந்திருந்தார். நான்கு பேர் இருந்தார்கள். கையில் காயம் இருந்தது எனக் கூறினார்கள். சிறு குழந்தை ஒன்றும் அதேபோலக் கூறியது. நான் மாமாவை கண்டேன் என்று சொன்னது'' என்கிறார் அவர்.
அதன் பின்னர், இந்தக் குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு இருந்த முகாமில், வெளியில் நடமாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டதை அடுத்து, உறவினர்களைப் பார்வையிடுவதற்காக அனுமதிப் பத்திரத்தை பெற்று கோபிநாத்தின் தந்தை முகாமை விட்டு வெளியில் சென்றிருந்ததாக அவரது தந்தை கூறினார்.
அந்தச் சந்தர்ப்பத்தில், தான் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில், வவுனியா - மணிகூட்டு கோபுரத்திற்கு அருகில் வெள்ளை நிற வேன் ஒன்றில் நான்கு பேருடன் தனது மகன் நின்று கொண்டிருந்ததை அவதானித்ததாக சுப்ரமணியம் செல்வதுரை தெரிவிக்கின்றார்.
அவர்கள் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் என சுப்ரமணியம் செல்வதுரை கூறிய போதிலும், அதைச் சுயாதீனமாக எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.
பேருந்தில் இருந்து இறங்கி அந்த இடத்திற்குச் சென்ற போதிலும், அந்த இடத்தில் இருந்து குறித்த வேன் வெளியேறியிருந்ததாக அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.
''அநுராதபுரம் சிறைச்சாலையில் கோபிநாத் என்ற நபர் ஒருவர் இருக்கின்றார் என்று பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. நான் அங்கு சென்றேன். அவர் இல்லை. அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர்'' என கோபிநாத்தின் தந்தை கூறினார்.
'ஜனாதிபதி ஐயாவை பார்க்க வேண்டும்'
''மகன் இருக்கின்றார் என்று அனைவரும் கூறுகின்றார்கள்''
''மகன் வருவார் என்று உயிர் இருக்கும் வரை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம். மகனின் எந்தவொரு பொருளையும் அழிக்கவில்லை. நான் அனைத்து இடங்களுக்கும் அதை எடுத்துச் சென்று, இங்கு கொண்டு வந்துள்ளேன். எனது தங்க நகைகளையும் கைவிட்டுவிட்டேன். மகனின் பொருட்கள், புத்தகங்கள், ஆடைகளைக் கொண்டு வந்தேன். அவரது டுத் பிரஷையும் கொண்டு வந்தேன். பாதணியையும் கொண்டு வந்து வைத்துள்ளேன்.''
''நாங்கள் ஜனாதிபதி ஐயாவை பார்க்க வேண்டும். அவரிடம் இவ்வாறு இருப்பதைக் கதைக்க வேண்டும். எத்தனை ஜனாதிபதிகள் பதவிக்கு வந்த சென்றுள்ளார்கள்? ஆனால் எங்களுக்கு விடுதலை இல்லை. இந்தப் பிரச்னைக்கு ஏதேனும் ஒரு முடிவு தேவைப்படுகிறது. எதுவும் நடக்கவில்லை.''
''நான் மாத்திரம் இதைக் கதைக்கவில்லை. அனைவரும் கையளிப்பதாகச் சொல்லிச் செல்கின்றார்கள். நாங்கள் வந்தவுடன் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று இந்த ஜனாதிபதி கூறினார், கதைப்பதாகவும் கூறினார். ஆனால், இன்னும் கதைக்கவில்லை. அவர் பதவிக்கு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் கதைக்கவில்லை.''
''எங்களுக்குப் பணம் தேவையில்லை. எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது? உயிருடன் நாங்கள் கையளித்தோம்'. அம்மா என்று சொல்லி, அடையாள அட்டையைப் பெற்றுச் சென்றார்.''
''அவர் சாப்பிடும் உணவுகளை நாங்கள் வீட்டில் சமைக்க மாட்டோம். அவர் நினைவு வரும் என்பதற்காகவே சமைப்பது இல்லை.''
'பெற்றோர் என்பதை வைத்துக்கொண்டு மாத்திரம் பதில் சொல்ல முடியாது'
யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள இந்தத் தருணத்தில், வடக்கில் மாத்திரமன்றி, தெற்கிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்பானவர்களின் அரவணைப்பின்றி கவலையுடன் வாழந்து வருகின்றனர்.
முழு அளவில் மாற்றுத்திறனாளி ஆனவர்கள் நிர்க்கதி ஆகியுள்ளதுடன், பகுதியளவில் மாற்றுத்திறனாளி ஆனவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது வாழ்வை முன்னோக்கிக் கொண்டு செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், சில தரப்பினர் எந்தவித வழக்கு விசாரணைகளும் இன்றி, தொடர்ந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஊடக பிரதானி தயா மாஸ்டர் மற்றும் சர்வதேச நிதி தொடர்பான பிரதானியாகக் கடமையாற்றி கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஆகிய விடுதலைப் புலிகளின் முன்னிலை செயற்பாட்டாளர்கள், சட்டக் கட்டுப்பாடுகள் இன்றி இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, "நாங்கள் புனர்வாழ்வு அளித்து, அவர்களில் ஒரு தொகுதியினரை ராணுவத்தில் இணைத்துக்கொண்டோம்" என்கிறார் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே. (கோப்புப் படம்)
இவ்வாறான பின்னணியில் ராணுவத்தின் பொறுப்பிற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கோபிநாத்திற்கு என்ன நடந்தது? அவர் ராணுவம், குற்றப் புலனாய்வு திணைக்களம், பயங்கரவாதத் தடுப்பு பிரிவு ஆகிய நிறுவனங்களின் பொறுப்பிற்கு எடுக்கப்பட்டாரா என்பது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்தோம்.
இதன்படி, முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வருகை தந்து ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செல்வதுரை கோபிநாத் தொடர்பில் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகேவிடம் பிபிசி சிங்கள சேவை முதலில் வினவியது.
அதற்கு அவர், ''பெற்றோர் கூறுகின்ற விதத்தில் மாத்திரம் தன்னால் பதில் கூற முடியாது. எம்மிடம் ஒப்படைக்கப்பட்டாரா? நாங்கள் பொறுப்பேற்றோமா? என்பது தொடர்பில் தகவல் இல்லை'' என பதிலளித்தார்.
''ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நாங்கள் புனர்வாழ்வு அளித்தோம். ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட எந்தவொரு நபரும் காணாமல் போகவில்லை'' என்றும் அவர் தெரிவித்தார்.
'ராணுவ பொறுப்பிற்கு எடுக்கப்பட்ட அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர்'
அவ்வாறான 15,000 திற்கும் அதிகமானோர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
''ராணுவத்திடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர்'' என்று கூறுகிறார் அவர்.
''அவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் தேவை எமக்கு இருக்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் புனர்வாழ்வு அளித்து, அவர்களில் ஒரு தொகுதியினரை ராணுவத்தில் இணைத்துக்கொண்டோம்.''
''முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ராணுவத்தில் இணைந்து கொண்டு கடமையாற்றினார்கள். குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பகுதிகளில் ராணுவத்தில் இணைந்து சேவையாற்றியிருந்தனர்.''
''அவர்கள் சுயவிருப்பத்துடன் ராணுவத்தில் இணைந்து கொண்டார்கள். புனர்வாழ்வின் பின்னர் எம் மீது எழுந்த நம்பிக்கை காரணமாக அவர்கள் எம்முடன் இணைந்தார்கள்.''
''எம்மிடம் சரணடைந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட எந்தவொரு நபரும் காணாமல் ஆக்கப்பட்டதாக எந்த வகையிலும் குற்றச்சாட்டு இல்லை.''
''அந்தப் பெற்றோர் சொல்கின்றமை தொடர்பில் இதையே கூற வேண்டும். நாங்கள் பொறுப்பேற்ற அனைவருக்கும் உரிய வகையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். எம்மிடம் தற்போது யாரும் இல்லை'' என ராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பதில்
செல்வதுரை கோபிநாத் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளர் நாயகம் மிரான் ரஹீமிடம் பிபிசி சிங்கள சேவை வினவியது.
பிபிசி சிங்கள சேவை வழங்கிய தகவலுக்கு அமைய, கிளிநொச்சி அலுவலக அதிகாரிகளை கோபிநாத்தின் தந்தையுடன் தொடர்புபடுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி, அடுத்தகட்ட விசாரணைகளில் இந்தச் சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
'உலகில் அதிகமானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இலங்கை 2வது இடம்'
இந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 29வது அமர்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை குறித்து ஆராயப்படவுள்ளது.
இதற்கு முன்னர் சர்வதேச மன்னிப்பு சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் ஆயிரக்கணக்கானோர் உண்மை மற்றும் நீதியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அதிகளவில் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிக்கின்றது. முதலாவது இடத்தில் இராக் உள்ளது.
வலிந்து அல்லது தன்னிச்சையாக காணாமல் போதல்கள் தொடர்பான ஐ.நா செயற்குழுவில், இன்னும் நிலுவையில் உள்ள வழக்குகளின் பிரகாரம், 2024ம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் 6,264 வலிந்து காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 1980ம் ஆண்டு காலப் பகுதி முதல் 2017ம் ஆண்டு வரையான காலப் பகுதி வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களாகக் குறைந்தது 60,000 முதல் 100,000 வரை பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை கணிப்பிட்டுள்ளது.
கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையான சுமார் 30 ஆண்டுக் காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில், இலங்கை அரசாங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் ஆகியவற்றில் தண்டனைகளின்றி மீறியுள்ளதுடன், சட்டத்திற்குப் புறம்பாக இடம்பெற்ற கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் பொதுமக்களை இலக்கு வைத்து கண்மூடித்தனமான தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், சிறுவர்கள் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டமை போன்ற மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளருக்கு என்ன நடந்தது? 16 ஆண்டுகளாக தொடரும் பாசப் போராட்டம்
சம்பூர் பகுதியில் மனித எச்சங்களை ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக பட்ஜட் மன்றில் சமர்ப்பிப்பு
'தமிழ்நாட்டில் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பாதிப்பு' - டெட் தேர்ச்சி கட்டாயம் என்ற தீர்ப்பால் என்ன சிக்கல்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
கட்டுரை தகவல்
விஜயானந்த் ஆறுமுகம்
பிபிசி தமிழ்
2 செப்டெம்பர் 2025
'ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' என செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லையென்றால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம்' எனவும் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 'நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள்' என, ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.
"ஆசிரியர்களை அரசு கைவிடாது" என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படுவதால் என்ன பிரச்னை?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் என்ன உள்ளது?
'இந்தியாவில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித் தேர்வு அவசியமா?' என்பது குறித்து மூன்று உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன.
அஞ்சுமன் இசாத்-இ-தலீம் அறக்கட்டளை (ANJUMAN ISHAAT-E-TALEEM TRUST) எதிர் மகாராஷ்டிரா அரசு மற்றும் இதர மாநில அரசுகளை இணைத்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது.
வழக்கின் விசாரணையில், 'கட்டாய கல்வி உரிமைச் சட்டப் பிரிவு 23, துணைப் பிரிவு 1ன்கீழ் 2011, ஜூலை 29 அன்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக புதிதாக சேர்க்கப்பட்ட விதிமுறையின்படி ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபான்கர் தத்தா மற்றும் மன்மோகன் அமர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) நடத்துவதற்கான காரணம் குறித்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) 2011, பிப்ரவரி 11 அன்று வெளியிட்ட அறிவிப்பை மேற்கோள் காட்டியுள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு டெட் தேர்ச்சி பெறுவது கட்டாய நிபந்தனை எனக் கூறப்பட்டுள்ளது.
டெட் தேர்வு குறைந்தபட்ச தகுதி அளவுகோல்களின் முக்கிய பகுதியாக உள்ளது.
டெட் தேர்வின் மூலம் தேசிய தரநிலைகள் மற்றும் ஆசிரியர் தரத்துக்கான அளவுகோல் கொண்டு வரப்படுகிறது.
மாணவர்களின் செயல் திறனின் தரத்தை மேலும் மேம்படுத்துவதை ஊக்குவிக்கும். ஆசிரியருக்கான தரத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தும்போது அது அனைத்து தரப்பிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதனைக் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், 'தொடக்கக் கல்வியை வழங்கும் நிறுவனங்களுக்கு, சீரான கற்பித்தல் தரத்தை உறுதி செய்வது நோக்கமாக உள்ளது. தகுதித் தேர்வு என்பது கட்டாய கல்வித் தகுதி மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ஏ படி தரமான கல்வி உரிமைக்கான தேவையும் ஆகும்' எனத் தெரிவித்துள்ளது.
'ஆசிரியர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142ன்கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் டெட் தகுதி பெறாமல் ஓய்வு பெறும் வயதை அடையும் வரை பணியில் தொடரலாம்' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அவர்கள் பதவி உயர்வுக்கு விரும்பினால் டெட் தேர்ச்சி பெறாமல் தகுதி உடையவராக கருதப்பட மாட்டார் எனத் தெளிவுபடுத்துவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்தவகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பின்படி,
1 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியில் தொடர்வதற்கு டெட் தேர்வு கட்டாயம்.
டெட் தேர்வு எழுத விருப்பம் இல்லாத ஆசிரியர்கள், பணியில் இருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது ஓய்வுகால சலுகைகளைப் பெற்றுக்கொண்டு விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம்.
அதேநேரம், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு டெட் தேர்வு பொருந்துமா என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதற்கு பரிந்துரை செய்யப்படுவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆசிரியர் சங்கங்கள் கூறுவது என்ன?
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட உள்ளதாகக் கூறுகிறார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளதால் ஓய்வுபெறும் வயதில் உள்ளவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் போன்ற பதவி உயர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது" எனக் கூறுகிறார்.
'பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி அவசியம்' என்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதாகக் கூறும் தாஸ், "தற்போது ஆசிரியர்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளில் டெட் தேர்ச்சி பெறுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. இவர்களில் 90 சதவிகிதம் பேர் ஆசிரியைகளாக உள்ளனர். அவர்களுக்கு இருக்கும் பணிச் சூழலால் தேர்வை எழுதுவது சிரமம்" எனக் கூறுகிறார்.
தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் அரசின் கணக்குப்படி 62,979 ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 49,547 ஆசிரியர்களும் உயர்நிலைப் பள்ளிகளில் 31,531 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 82 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில் ஐந்தாண்டுகளில் ஓய்வு பெறும் ஆசிரியர்களைத் தவிர்த்துப் பார்த்தால் சுமார் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு மேல் டெட் தேர்வு எழுத வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ்.
இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது. இதனைக் குறிப்பிட்டுப் பேசும் தாஸ், "2011 ஆம் ஆண்டு முதல் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2022 வரை மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முன்னரே அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தால் அனைவரும் தேர்வை எழுதியிருப்பார்கள்" என்கிறார்.
படக்குறிப்பு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட உள்ளதாகக் கூறுகிறார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ்
யாருக்கெல்லாம் பொருந்தும்? என்ன பாதிப்பு?
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் தகுதியை தீர்மானிப்பதற்கு தகுதித் தேர்வு நடத்தப்படும் என, 2010, ஆகஸ்ட் 23 அன்று அறிவிக்கப்பட்டது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் என்பது 1 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக கொண்டு வரப்பட்டது. அதன்படி, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியில் சேரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) என்பது கட்டாயமாக உள்ளது.
"உயர்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றால் தான் தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வுக்கு செல்ல முடியும்" எனக் கூறுகிறார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் எனவும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
"கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வர மாட்டார்கள் என்பதால், இந்தச் சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது" எனக் கூறுகிறார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன்.
"கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கூறுகிறது. இதனை ஏற்க முடியாது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றம் தனக்குரிய 142வது சிறப்புப் பிரிவை பயன்படுத்தி தீர்ப்பளித்துள்ளதாகக் கூறியுள்ள அவர், "தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்" என்கிறார்.
"பல ஆண்டுகளாக தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அதே பாடத்தை சொல்லித் தருகின்றனர். அவர்களுக்கு பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தைப் படித்து தேர்வு எழுதுமாறு கூறுவது சாத்தியமில்லாதது" என்கிறார், அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் யாரும் எட்டாம் வகுப்பு வரை பாடம் சொல்லித் தரப் போவதில்லை. தலைமை ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்தாலும் ஐந்தாம் வகுப்புக்கு மட்டுமே பாடம் எடுப்பார்கள்" என்கிறார்.
"எந்த வகுப்பு வரை பாடம் எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதற்கேற்ப தேர்வு வைக்கலாம். தவிர, பணி நெருக்கடியில் இருந்தவாறு தேர்வு எழுதுவது என்பது சிரமமானது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தீர்ப்பு பொருந்தும் என்பது தான் சரியானதாக இருக்கும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆதரவும் எதிர்ப்பும்
படக்குறிப்பு, தரமான கல்வி என்பது முக்கியமானது என்கிறார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி
"டெட் தேர்வை கட்டாயமாக்குவதில் எந்த தவறும் இல்லை. தரமான கல்வி என்பது முக்கியமானது. தொழில்நுட்பத்துடன் இணைந்த கல்வியை ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் எவ்வாறு பெறப் போகின்றனர் என்பது முக்கியமானது" எனக் கூறுகிறார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கல்வித்தரம் தொடர்பாக எடுக்கப்படும் எந்த சீர்திருத்தங்களும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மாணவர்களின் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும்" என்கிறார்.
"தற்போதுள்ள ஆசிரியர்களில் எத்தனை பேர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பாடம் எடுப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பும் ஜெயப்பிரகாஷ் காந்தி, "நான்கு பேர் பாதிப்பதால் நல்ல விஷயங்களை வரவேற்காமல் இருக்க முடியாது" எனத் தெரிவித்தார்.
இதனை மறுத்துப் பேசும் தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ், "இத்தனை ஆண்டுகாலம் மருத்துவம், பொறியியல் உள்பட பல்வேறு படிப்புகளில் தரமான மாணவர்களை உருவாக்கியது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான். இதே அளவுகோலை பிற துறைகளுக்கும் வைக்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
"சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் ஆசிரியரிடம் தேர்வு எழுதுமாறு கூறுவது சரியானதல்ல" என்கிறார், கல்வியாளர் நெடுஞ்செழியன்.
"ஆசிரியர்களின் திறனை அவர்கள் பாடம் நடத்தும் முறை உள்பட பல்வேறு அளவுகோல்களில் மதிப்பிடலாம். தேர்வை மட்டுமே அடிப்படையாக வைத்து ஆசிரியர்களை வெளியேற்றுவதை ஏற்க முடியாது" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
படக்குறிப்பு, ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் வழங்கலாம் என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்
"தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சிகளைக் கொடுத்து அவர்களை மேம்படுத்தலாம். அவர்களுக்கு தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசத்தை வழங்கலாம்" என்கிறார், நெடுஞ்செழியன்.
இதனை தனது தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. வழக்கில் அடிப்படை எதார்த்தம் மற்றும் நடைமுறை சவால்களை கவனத்தில் கொள்வதாகக் கூறியுள்ள நீதிபதிகள், "கட்டாய கல்வி உரிமைச் சட்டம் வருவதற்கு முன்னரே பணியில் இணைந்த மற்றும் 2 அல்லது 3 தசாப்தங்களாக பணியில் உள்ள ஆசிரியர்களும் உள்ளனர்" எனக் கூறியுள்ளனர்.
அவர்கள் தங்கள் திறனுக்கு ஏற்ப மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருவதாகக் கூறியுள்ள நீதிபதிகள், "டெட் தகுதி பெறாத ஆசிரியர்களால் மாணவர்கள் தங்கள் வாழ்வில் பிரகாசிக்கவில்லை என்பதல்ல. அவர்களைப் பணியில் இருந்து நீக்குவது என்பது சற்று கடுமையானதாக தோன்றும். ஆனால், சட்டத்தின் செயல்பாட்டை ஒருபோதும் தீமையாக கருத முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையின் பதில் என்ன?
படக்குறிப்பு, ஆசிரியர்கள் யாரையும் கைவிட்டுவிடாமல் அரவணைப்பதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வோம் என்கிறார், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட உள்ளதால், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஆசிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளதாக பிபிசி தமிழிடம் கூறிய தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ், "பதவி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த வேளையில் இப்படியொரு தீர்ப்பு வந்துள்ளது" என்கிறார்.
தீர்ப்பை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நேற்று (செப்டம்பர் 1) தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளருடன் கலந்தாலோசித்தோம். முழுமையான தீர்ப்பு வந்த பிறகு சட்ட ஆலோசகர்கள் மூலம் ஆலோசித்து முடிவெடுப்போம்" எனக் கூறினார்.
ஆசிரியர்களுக்கு அரணாக பள்ளிக்கல்வித்துறை உள்ளதாகக் கூறியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஆசிரியர்கள் யாரையும் கைவிட்டுவிடாமல் அரவணைப்பதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வோம். அரசாங்கம் யாரையும் கைவிட்டுவிடாது" எனவும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு