Aggregator
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடல்!
18 Dec, 2025 | 05:28 PM
![]()
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை (17) ஆராயப்பட்டது.
இக்கூட்டம் நேற்று காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவேண்டிய மீள்கட்டியெழுப்புப் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ஆகியவை தொடர்பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
சட்டவிரோத மணல் அகழ்வால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றைத் தடுக்கும் வகையில் உரிய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மக்களின் நலன், மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தி மற்றும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டிய அவசியம் என்பதே இக்கூட்டத்தின் மையக் கருத்தாக அமைந்தது.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடல்! | Virakesari.lk
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
உடைந்த நாயாறு பாலம் புனரமைப்பு
யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்!
யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்!
18 Dec, 2025 | 05:44 PM
![]()
யாழ்ப்பாணம் கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் புதைந்திருக்கலாம் என்பதால் தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கல் இடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் முற்றவெளி மைதானத்திற்குள் நுழைய முடியாதவாறு எல்லைக்கல் நாட்டப்படுவதாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ரத்னம் சதீஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எல்லைக் கல்லின் அளவிற்கு குறித்த எல்லையை இடுமாறு நாங்கள் கோரினோம். அதற்கு அவர்கள், அது தங்களுக்குரிய பிரதேசம் என்றும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாநகர சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அனுமதி எடுத்த பின்னரே இவ்வாறு எல்லைக் கல் நாட்டுவதாக கூறினர்.
வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபியில் நாங்கள் நினைவேந்தல் செய்வது வழமை. அந்த வளாகத்திற்கு உள்ளே சென்று நாங்கள் நினைவேந்தல் செய்ய வேண்டும். ஆகையால் அந்த பகுதியை விட்டு எல்லை இடுமாறு கோரினோம்.
அதன்படி வாயிலின் சிறிய பகுதியை விட்டுவிட்டு, எல்லைக்கல் நாட்டப்படுகிறது. வாயிலுக்கு கதவு போடுமாறு அவர்கள் கூறினர்.
இது தொல்பொருள் திணைக்களத்தின் பகுதி, ஆகையால் யாரும் இதனை தடுக்க முடியாது என்று கூறுகின்றனர். யாழ். மாநகர சபை இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கிறதா என பார்ப்போம் என்றார்.

யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்! | Virakesari.lk
வடக்கு, கிழக்கு புகையிரத சேவைகள் 2026 முதல் மீண்டும் ஆரம்பம் - போக்குவரத்து பிரதி அமைச்சர்
வடக்கு, கிழக்கு புகையிரத சேவைகள் 2026 முதல் மீண்டும் ஆரம்பம் - போக்குவரத்து பிரதி அமைச்சர்
18 Dec, 2025 | 05:56 PM
![]()
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சேதமடைந்த புகையிரத பாதைகள் வெகுவாக புனரமைக்கப்படுகின்றன. 2026.01.01ஆம் திகதியில் இருந்து வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படும். 2026 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
தித்வா சூறாவளி தாக்கத்தினால் மத்திய மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று போக்குவரத்து அமைச்சும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான மற்றும் சிறு வீதிகள், பாலங்கள்,புகையிரத வீதிகள், பாலங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன.
நாடளாவிய ரீதியில் உள்ள ஏ மற்றும் பி கட்டமைப்பிலான வீதிகள் சேதமடைந்துள்ளன. அண்ணவளாக 1450. 6.4 கிலோமீற்றர் தூர வீதிகள் சேதமடைந்துள்ளன. மத்திய மாகாணத்தில் பெருமளவிலான வீதிகள் சேதமடைந்துள்ளன. மலைகளுக்கு நடுவில் வீதிகளை அமைத்ததன் விளைவையே நாடு இன்று எதிர்கொண்டுள்ளது. வீதி அபிவிருத்தியின் போது எதிர்க்கால திட்டமிடல் குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும். சேதமடைந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 69 பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சூறாவளி தாக்கத்தால் புகையிரத திணைக்களம் பில்லியன் கணக்கில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. புகையிரத பாதைகள், பாலங்கள், சமிஞ்சை கோபுரங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மலையக புகையிரத பாதையில் புகையிரத வீதியின் இருப்புகள் மாத்திரமே மிகுதியாகியுள்ளன. புகையிரத பாலங்களை புனரமைப்பதற்கு மாத்திரம் 6 பில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சேதமடைந்த புகையிரத பாதைகளை விரைவாக புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் 2026.01.01 ஆம் திகதி முதலும், தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் 2026 பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்தும் முழுமையாக ஆரம்பிக்கப்படும்.
மலையகத்துக்கான புகையிரத சேவையை ஆரம்பிக்கும் பணிகள் துரிதப்படுதப்படுத்தப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு மற்றும் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த நெருக்கடியான நிலைமையில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் அதனை விடுத்து அரசியல் இலாபம் தேடக்கூடாது என்றார்.
வடக்கு, கிழக்கு புகையிரத சேவைகள் 2026 முதல் மீண்டும் ஆரம்பம் - போக்குவரத்து பிரதி அமைச்சர் | Virakesari.lk
தலகல ஓயா நீரோடை பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது - மாநகர முதல்வர்
தலகல ஓயா நீரோடை பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது - மாநகர முதல்வர்
18 Dec, 2025 | 06:55 PM
![]()
மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா நகரில் பெய்த அதிக மழை காரணமாக நுவரெலியா பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும் தலகலஓயா நீரோடை பெருக்கெடுத்தமையே கடந்த மாதம் 27ஆம் திகதி நுவரெலியா நகரில் வெள்ள நிலைமை ஏற்படக் காரணமாகும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வணிகசேக்கர தெரிவித்தார்.
நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது உபாலி வணிகசேக்கர இதனை தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் பிரதி நகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா, மாநகர ஆணையாளர், மாநகர செயலாளர் உட்பட மாநகர சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அங்கு மாநகர முதல்வர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா மாநகர சபை கட்டுப்பாட்டில் உள்ள நுவரெலியா கிரகரி வாவியின் அணைக்கட்டு வான்கதவுகள் திறக்கப்படாததால் நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியதாக ஒரு சில ஊடகங்களில் நுவரெலியா பொது மக்கள் கூறியதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. அதில் எந்தவித உண்மையும் இல்லை.
நுவரெலியா நகரம் நீரில் மூழ்வதற்கு முன்பே நுவரெலியா கிரகரி வாவியின் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து மூன்று நாட்களும் இடைவிடாது பெய்த கன மழையினால் பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும் தலகல ஓயா நீரோடையில் நீர் பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது.
அத்துடன் நுவரெலியாவில் அதிகரித்த சட்டவிரோத கட்டடங்கள், கால்வாய்கள் குறுகியதாக மாறியிருப்பது மற்றும் கிரகரி வாவியின் மதகை அகலமாக்காமை என்பனவே இதற்குக் காரணமாக அமைந்ததாக தெரிவித்தார்.
மேலும், நுவரெலியா நகரில் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் செல்லும் வீதி, நுவரெலியா குதிரைப்பந்தய திடல் (ரேஸ்கோஸ்) நுவரெலியா கொல்ப் மைதான லயம், நுவரெலியா யுனிக் கிராமம் உட்பட பல இடங்களில் இயற்கை அனர்த்தத்தால் மழை நீர் நிரம்பியும் மண்சரிவு ஏற்பட்டும் பல பாதிப்புகள் ஏற்பட்டன. அவர்களுக்கு தேவையான நிவாரண பணிகளை நுவரெலியா மாநகர சபை முன்னின்று செய்து வருகிறது.
மேலும் நுவரெலியா நகரில் பாதிக்கப்பட்ட விவசாயத்துறையையும், சுற்றுலாத் துறையையும், பாதிக்கப்பட்ட வர்த்தகத் துறையையும் அபிவிருத்தி செய்து மீண்டும் பழைய நிலைக்கு நுவரெலியாவை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் நுவரெலியா நகரில் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்கு நுவரெலியா மாநகர சபை தயாராக இருப்பதாகவும் மாநகர சபை முதல்வர் மேலும் தெரிவித்தார்.
தலகல ஓயா நீரோடை பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது - மாநகர முதல்வர் | Virakesari.lk