Aggregator
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிவாரணக் குழுக்களுக்கு பொலிஸ் விடுத்துள்ள அறிவிப்பு
Published By: Digital Desk 3
02 Dec, 2025 | 09:54 AM
![]()
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் இருப்பது, தற்போதைய வீதி மறுசீரமைப்பு பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர்,
இந்த நிவாரணக் குழுக்கள் வழங்கும் மதிப்புமிக்க சேவைகளுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகள்.
எனினும், தற்போது வீதி மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் மாவட்டங்களுக்குள் வாகனங்கள் அதிக அளவில் வருவது, மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இடையூறாக உள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவும், வீடியோக்களை பதிவு செய்யவும் நிறுத்தி வைக்கப்படும் சில மோட்டார் சைக்கிள் சாரதிகளால் இந்தப் பகுதிகளில் செயல்படும் பணியாளர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட வலயங்களுக்குள் நுழைபவர்களுக்கும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது.
அதன்படி, பொதுமக்களுக்கான நிவாரணங்களை விநியோகிப்பதற்கு முறையாக ஒருங்கிணைக்க, அனைத்து நிவாரணக் குழுக்களும் அந்தந்த பொலிஸ் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளை (OIC) தொடர்பு கொள்ளுஙங்கள்.
நிவாரணங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய அனர்த்த செயல்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
பொலிஸ் சிறப்பு செயல்பாட்டு மைய தொடர்பு இலக்கங்கள்:
071-8595884
071-8595883
071-8595882
071-8595881
071-8595880
வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடன் உதவுங்கள் - கனேடியத் தமிழர் பேரவை அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தல்
வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடன் உதவுங்கள் - கனேடியத் தமிழர் பேரவை அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தல்
Published By: Vishnu
02 Dec, 2025 | 04:12 AM
![]()
(நா.தனுஜா)
வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடியத் தமிழர் பேரவை அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கனேடியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இவ்வனர்த்தத்தில் பெருமளவானோர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலர் தமது இருப்பிடங்களைவிட்டு தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரையான காலத்தில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான வெள்ளப்பெருக்கு இதுவென அனர்த்த முகாமைத்துவக் கண்காணிப்புக்கள் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்களின் தீவிரத்தன்மையானது உடனடி சர்வதேச உதவிகளுக்கான தேவைப்பாட்டினை உணர்த்துகின்றன.
இந்த மிகமோசமான காலநிலையினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவும் உள்ளடங்குகின்றன. இந்த மாவட்டங்கள் வறிய மற்றும் பின்தங்கிய மாவட்டங்களாகவும் இருக்கின்றன.
அதேபோன்று அடிக்கடி அதிக மழைவீழ்ச்சி மற்றும் மண்சரிவு என்பவற்றுக்கு முகங்கொடுக்கும் மலையகமும் இவ்வனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட தரப்பினரைச் சென்றடைவதை உறுதிசெய்யக்கூடியவகையில் நம்பத்தகுந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளிகள் ஊடாக தொடர் மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத்தயார் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அறிவிப்பு
இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத்தயார் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அறிவிப்பு
இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத்தயார் - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அறிவிப்பு
Published By: Vishnu
02 Dec, 2025 | 03:58 AM
![]()
(நா.தனுஜா)
மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பில் கவலையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் மீட்சிக்கும் மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள், இலங்கைக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றன.
அதற்கமைய இலங்கை உள்ளடங்கலாக பாரிய அனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகள் தொடர்பில் கவலையை வெளிப்படுத்தி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
'மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்கள் தொடர்பில் மிகுந்த கரிசனை அடைகிறோம்' என அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இவ்வனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளை, இந்நாடுகளின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.