Aggregator
விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?
விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

— வீரகத்தி தனபாலசிங்கம் —
இந்தியாவில் கோவில் திருவிழாக்கள், மத ஒன்றுகூடல்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் சன நெரிசலும் உயிரிழப்புகளும் ஒன்றும் புதியவையல்ல. அவை பெரும்பாலும் அடிக்கடி நிகழ்கின்ற அனர்த்தங்கள் என்று கூறலாம். விளையாட்டுப்போட்டிகள், சில திரைப்பட வெளியீட்டு நிகழ்வுகளிலும் கூட நெரிசலில் மக்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.
ஆனால், அரசியல் பொதுக்கூட்டங்களில் மிகவும் அரிதாகவே நெரிசல் மரணங்கள் ஏற்பட்டதாகவும் தமிழ்நாட்டில் கரூரில் நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகரின் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் செப்டெம்பர் 27 சனிக்கிழமை இரவு பெண்கள், குழந்தைகள், உட்பட 41 பேர் பலியான சம்பவமே அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் மரணமடைந்த முதல் சம்பவம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் முதன் முதலாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஆட்சிக்கு வந்த சினிமா நடிகர் என்று வரலாறு படைத்த எம்.ஜி. இராமச்சந்திரனுக்காக மக்கள் மணிக்கணக்காக அல்ல, நாட்கணக்காக இரவுபகலாக காத்திருந்த காலம் ஒன்று இருந்தது. அப்போது கடந்தவாரம் விஜயின் கூட்டத்தில் இடம்பெற்றதைப் போன்ற எந்தவொரு அனர்த்தமும் ஏற்பட்டதில்லை என்று சுட்டிக்காட்டும் இந்திய ஊடகங்கள் எம்.ஜி.ஆரின் கட்சி அமைப்புரீதியாக வலிமையாக இருந்ததும் கிராமங்கள் வரையில் அரசியல் அனுபவமுடைய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இருந்ததுமே அதற்கு காரணம் என்று கூறியிருக்கின்றன.
விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அவரது சினிமாச் செல்வாக்கில் மாத்திரம் நம்பிக்கை வைத்து தொடங்கப்பட்ட கட்சி என்றும் அவருக்கு எந்த அரசியல் சிந்தனையோ அல்லது கோட்பாடோ கிடையாது என்றும் மற்றைய அரசியல் கட்சிகள் செய்துவந்த விமர்சனத்தை கரூர் சம்பவம் நிரூபித்திருக்கிறது என்றும் ஊடகங்கள் மாத்திரமல்ல, பல அரசியல் அவதானிகளும் கூறுகிறார்கள். பெருமளவில் மக்கள் கலந்துகொள்ளும் அரசியல் கூட்டங்களை பாதுகாப்பான முறையில் ஒழுங்குபடுத்தக்கூடிய அனுபவமும் ஆற்றலும் விஜயின் கட்சியினரிடம் இல்லாததையும் தனது இரசிகர்களை கட்டுப்பாடான கட்சித் தொண்டர்களாக மாற்றுவதில் அவர் அக்கறை காண்பிக்காததையுமே மக்கள் பலியானதற்கு பிரதான காரணம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் ஏழு மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மகாநாடுகளிலும் விஜயின் பிரசாரக் கூட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்றுவந்தது மற்றைய கட்சிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. அவரைப் பார்ப்பதற்காக திரளும் மக்கள் கூட்டம் தேர்தலில் வாக்குகளாக மாறப்போவதில்லை என்று வெளிப்படையாகவே அரசியல்வாதிகள் கூறிவந்தார்கள்.
கூட்டணி அமைப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் விஜய் விடுத்த அழைப்பை எந்த அரசியல் கட்சியுமே பொருட்படுத்தவில்லை. அதனால், அவர் தனது பிரசாரக் கூட்டங்களுக்கு பெருமளவில் மக்களை அணிதிரட்டி தனது செல்வாக்கை நிரூபிப்பதில் தீவிர கவனத்தைச் செலுத்தினார் என்று தெரிகிறது. ஆயிரக் கணக்கில் மக்கள் கூடும் வரை பிரசாரக் கூட்ட அரங்குகளுக்கு வருவதை தாமதிக்கும் ஒரு யுக்தியை அவர் கடைப்பிடித்தார் என்பது வெளிப்படையானது.
அனர்த்தத்தில் முடிந்துபோன கரூர் கூட்டத்துக்கு முன்னதாக அவரின் சில பிரசாரக் கூட்டங்களில் நினைத்துப் பார்க்க முடியாதளவு மக்கள் திரண்டதால் சனநெரிசல் ஏற்பட்டு குழப்பநிலை ஏற்பட்டதற்கு பின்னரும் கூட அத்தகைய ஆபத்தான நிலைவரம் மீண்டும் தோன்றுவதை தடுப்பதற்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் உகந்த முன்னேற்பாடுகளைச் செய்வதில் கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, கரூரில் அனர்த்தம் நிகழ்ந்த மறுகணமே விஜய் தனது பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி தனது தனிப்பட்ட விமானத்தில் சென்னைக்கு திருப்பி விட்டார். இறந்தவர்களின் குடும்பத்தவர்களைச் சந்தித்து அவரோ அல்லது அவரது கட்சி முக்கியஸ்தர்களோ ஆறுதல் கூறவில்லை என்பது மாத்திரமல்ல காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு சென்று பார்வையிடவுமில்லை.
நான்கு மணித்தியாலங்களுக்கு பிறகு சமூக ஊடகத்தில் தனது அனுதாபத்தை தெரிவித்த விஜயின் செயல் அவர் இன்னமும் ஒரு சினிமா நடிகராக இருக்கிறாரே தவிர மக்களின் நலன்களில் அக்கறைகொண்ட அரசியல் தலைவராக தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை வெளிக்காட்டியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது அமைச்சர்கள் மற்றைய கட்சிகளின் தலைவர்கள் உடனடியாகவே வைத்தியசாலைகளுக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்ட அதேவேளை, விஜய் தனது பிரசாரங்களை இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தாரே தவிர, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை. மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை முதலமைச்சர் அறிவித்த பிறகு 20 இலட்சம் ரூபா இழப்பீட்டு அறிவிப்பு விஜயிடமிருந்து வந்தது.
கரூரில் அவரைப் பார்ப்பதற்காக பகல் பூராவும் உணவோ தண்ணீரோ இன்றி சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்த மக்களுக்கு நேர்ந்த அனர்த்ததுக்கு பின்னர் விஜய் நடந்து கொண்ட முறை அவரது அரசியல் தலைமைத்துவ ஆற்றல் எதிர்நோக்கிய முதல் பரீட்சையிலேயே அவர் தோல்வி கண்டுவிட்டார் என்பதை நிரூபித்திருக்கிறது. தன்னில் தவறு இருப்பதாக அவர் இன்னமும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை. மக்களிடம் மன்னிப்பும் கேட்கவில்லை. தன்னைப் பார்க்க வந்த மக்கள் வீதிகளில் மயங்கி வீழ்ந்து கொண்டிருந்த வேளையில் சினிமா படப்பிடிப்பு ஒன்றை இடையில் நிறுத்திவிட்டு வீடு திரும்புபவர் போல அவர் நடந்துகொண்டது பாரதூரமான நிலைவரங்களை கையாளுவதிலும் முதிர்ச்சியான தீர்மானங்களை எடுப்பதிலும் அவரின் அனுபவமின்மையை வெளிக்காட்டியது.
விவேகமும் மக்களின் நலன்களில் அக்கறையும் கொண்ட ஒரு அரசியல்வாதியாக இருந்திருந்தால், தான் நடந்துகொண்ட விதத்துக்கு முற்றிலும் மாறாகவே விஜய் நிச்சயமாக நடந்து கொண்டிருப்பார். அனர்த்தம் நிகழ்ந்த இடத்தில் குழப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் தனது கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து விஜய் முயற்சி செய்திருக்க வேண்டும்.
சம்பவத்துக்கு பிறகு புத்திசாலிகளாக பேசுவது சுலபம். அரசியல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தற்போது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அறிவுரை கூறிவருகிறார்கள்.
கரூரில் இடம்பெற்றதைப் போன்று பொது நிகழ்வுகளில் சனநெரிசல் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்வதற்கு விதிமுறைகளை வகுக்க அரசியல் கட்சிகளுடனும் பொது அமைப்புக்களுடனும் கலந்தாலோசனை நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கும் முதலமைச்சர் ஸ்ராலின் கரூர் அனர்த்தம் குறித்து விசாரண செய்வதற்கு ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்ட தனிநபர் ஆணையம் ஒன்றை நியமித்திருக்கிறார். அந்த ஆணையம் கையளிக்கும் அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே ஐந்து மாவட்டங்களில் தனது கட்சி பிரசாரக் கூட்டங்களை நடத்தியபோது நிகழாத அசம்பாவிதங்கள் கரூரில் மாத்திரம் எவ்வாறு நேர்ந்தது என்று கேள்வி எழுப்பியிருக்கும் விஜய், சதி ஒன்று இடம்பெற்றிருக்கிறது என்பது போன்று சந்தேகத்தைக் கிளப்புகிறார். விஜயின் கட்சி தங்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமையாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஏனைய கட்சிகளும் கரூர் அனர்த்தத்தை தங்களால் இயன்ற அளவுக்கு பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை விஜய் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதிலும் அவரது அரசியல் எதிரிகள் அனர்த்தத்தை எவ்வாறு தங்களது அரசியல் அனுகூலத்துக்காக பயன்படுத்தப் போகிறார்கள் என்பதிலுமே அவரின் எதிர்கால வாய்ப்புக்கள் தங்கியிருக்கின்றன.
குழப்பகரமான அரசியல் நிலைப்பாடு:
நெருக்கடியான சூழ்நிலைகளை கையாளுவதில் விஜயின் அனுபவமின்மையும் பொறுப்புணர்வின்மையும் ஒருபுறமிருக்க, அவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நாட்களில் (2024 பெப்ரவரி) இருந்து தனது அரசியல் கொள்கையை பொறுத்தவரையிலும் கூட குழப்பகரமான கருத்துக்களையே கூறிவருகிறார்.
மத்தியில் பாரதிய ஜனதாவும் மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் தனது அரசியல் எதிரிகள் என்று கூறிய அவர், தனது கோட்பாட்டு வழிகாட்டிகளில் ஒருவராக பெரியார் ஈ.வெ. இராமசாமியை குறிப்பிட்டார். அம்பேத்காரின் கொள்கைகளையும் புகழ்ந்து பேசும் விஜய் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நீண்டகால நேசக்கட்சியான காங்கிரஸிடமிருந்து தூரவிலகியிருந்தாலும், காமராஜரின் இலட்சியங்களை பின்பற்றுவதாக உறுதியளித்தார்.
2025 ஆகஸ்ட் 21 ஆம் திகதி மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் மகாநாட்டு அரங்கை முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாத்துரையினதும் எம்.ஜி.ஆரினதும் பிரமாண்டமான ‘கட் அவுட்கள்’ அலங்கரித்தன. திராவிட கட்சிகள் பாதைமாறிப் போய்விட்டதால் தமிழ்நாட்டுக்கு புதியதொரு பாதையை காட்டப்போவதாக அவர் கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து அண்ணாத்துரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் 1967 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததையும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடித்து எம்ஜி.ஆர். 1977 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததையும் உதாரணங்களாக சுட்டிக்காட்டும் விஜய், அதேபோன்று 2026 சட்டசபை தேர்தலிலும் வரலாறு திரும்பப் போகிறது என்று பேசுகிறார்.
நீண்டகால அரசியல் போராட்டங்கள் மற்றும் அனுபவங்களுக்கு பிறகு முதலமைச்சர்களாக பதவிக்குவந்து அண்ணாத்துரையும் எம்.ஜி. ஆரும் படைத்த சாதனையை தன்னாலும் நிகழ்த்திக்காட்ட முடியும் என்று ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அரசியலில் பிரவேசித்த விஜய் கூறுவது மிகவும் நகைப்புக்கிடமானதாக இருக்கிறது. வெறுமனே அரசியல் சுலோகங்கள் வரலாற்றைத் திருப்பி எழுதுவதில்லை. தனது கட்சியிடம் தெளிவான அரசியல் நிகழ்ச்சி நிரலோ அல்லது மாற்றுத்திட்டமோ இல்லாமல் இன்னும் ஏழு மாதங்களில் முதலமைச்சராக வருவதற்கு அவர் கனவு காண்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் சினிமா நட்சத்திரங்கள் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான பக்தியின் விளைவாக மாநில அரசியலில் ஆழமாக வேரூன்றிவிட்ட ஆரோக்கியமற்ற ஒரு கலாசாரத்தையும் கரூர் அனர்த்தம் மீண்டும் அம்பலப்படுத்தியிருக்கிறது.
பொருளாதாரத்திலும் கல்வி மற்றும் சமூகநீதியிலும் பாரிய முன்னேற்றங்களை கண்டிருப்பதாக பெருமை பேசுகின்ற ஒரு மாநிலத்தில் சினிமா கவர்ச்சி தொடர்ந்தும் அரசியலைத் தீர்மானிக்கின்ற போக்கு துரதிராஷ்டவசமானது. எவரும் அரசியலில் பிரவேசிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் மாத்திரமே திரைப்படங்களில் மக்களைப் பாதுகாப்பவர்களாகவும் நீதிக்காக உயிரைக் கொடுத்துப் போராடுபவர்களாகவும் வேடங்களில் நடிப்பவர்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கும் முதலமைச்சராக வருவதற்கும் தங்களுக்கு உரிமையும் அருகதையும் இருப்பதாக நினைக்கிறார்கள்.
என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா
என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா
என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா

கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதை அரசாஙம் ஆயிரம் மடங்கு சிறந்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க தற்போதைய அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்கள் ஊழல் வலையமைப்பை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று கட்டுப்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக, நாட்டில் ஊழல் எல்லைகளை உடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறிய குறைபாடுகள் இருந்தபோதிலும், இந்த அரசாங்கம் முந்தைய அரசாங்கங்களை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று நான் முழு மனதுடன் கூறுகிறேன்.
ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க இந்த அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதால், முந்தைய எந்தவொரு அரசாங்கத்தையும் விட தற்போதைய அரசாங்கம் சிறந்தது.
ஒரு திருடன் கடந்த காலத்தில் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவனிடம் பணம் இருந்தால், அவனிடம் குண்டர் சக்தி இருந்தால், பின் கதவு வழியாக அதிலிருந்து தப்பிக்க முடியும். எந்தவொரு மோசடியிலிருந்தும் அவன் தப்பிக்க முடியும்.
எனினும், மோசடி செய்பவர்கள் பின் கதவு வழியாக தப்பிக்கும் வாய்ப்பை இந்த அரசாங்கம் குறைந்தபட்சம் தடுத்து நிறுத்தியுள்ளது. சட்டத்தை செயல்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இது நூறு வீதம் வெற்றிபெறவில்லை என்றாலும், முந்தைய அரசாங்கங்களை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று நான் அச்சமின்றி சொல்ல முடியும்.
இந்த ஊழல் வலையமைப்பை இந்த நாட்டில் ராஜபக்சேக்கள் சர்வதேச அளவில் முன்னெடுத்துச் சென்று கட்டுப்படுத்தி வருகின்றனர்.
சகோதரர்கள், சகோதரிகள், தந்தைகள், மாமாக்கள் மற்றும் மகன்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஊழல் வலையமைப்பை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்கள்.
அதனால்தான் இந்த நாட்டில் ஊழல் வேலிகளை உடைத்தெறிந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.