தாய் சொல்லைத் தட்டாதே
எனக்குப் பதினைந்து வயது இருக்கும்போது, நான் கல்லூரியில் கணிதம் / கணினியியல் / அறிவியல் படிக்க வேண்டும் என என் அம்மா ஆசைப்பட்டார். எனக்கு இலக்கியத்தைத் தவிர எதிலும் நாட்டமில்லை. கல்வி மகிழ்ச்சியானதாக, என் இலக்குடன் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அம்மா என்னென்னமோ காரணம் சொல்லி என்னை ஏற்க வைக்க முயன்றார். படிக்கவே வைக்க மாட்டேன் என்று மிரட்டினார். வயதுக்கே உரிய பிடிவாதத்தால் நான் ஏற்கவில்லை. கல்லூரியில் இலக்கியம் கற்றேன். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து பங்குபெற்றேன். இளங்கலையிலும், முதுகலையிலும் முதலாவது மதிப்பெண் பெற்றேன். தங்கப்பதக்கம் வென்றேன். அப்போது எனக்கு நான் எடுத்தது மிகச்சிறந்த முடிவு எனத் தோன்றியது.
அதன்பிறகு நான் ஆய்வுக் கட்டுரைகளைத் திருத்துவது, தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதுவது போன்ற பணிகளைச் செய்தபோதும், கல்லூரி ஆசிரியர் ஆனபோதும் என் முடிவு மிகவும் சரியானது என்றே நினைத்தேன் - ஏனென்றால் மொழிசார்ந்த பணிகள் எவையும் சிரமமாக இருக்கவில்லை. நான் ஏற்கனவே கற்றிருந்தவையே போதுமானதாக இருந்தது - புதிதாக மெனெக்கெட்டுக் கற்று என்னை வேலையிடத்தில் நிரூபிக்கத் தேவையிருக்கவில்லை. சுலபமாக வேலையில் ஜொலிக்கவும் நற்பெயர் வாங்கவும் முடிந்தது. முனைவர் பட்ட ஆய்வு கூட ஒரு புத்தகம் எழுதுவதைப் போலத்தான் இருந்தது. இப்படி என் பட்டப்படிப்புக்குப் பின் முதல் 10-15 ஆண்டுகள் ‘துளிகூட வியர்க்காமல்’ கழிந்தது. நான் மென்பொருளோ மருத்துவமோ கற்றிருந்தால் பிடிக்காத வேலையைச் செய்து மனம் ஒப்பாமல் நாளைக் கழித்து நிம்மதியற்று இருந்திருப்பேன் என ஒவ்வொரு நாளும் எனக்குச் சொல்லிக்கொண்டேன்.
ஆனால் கடந்த அரைப்பத்தாண்டுகளில் கல்விப்புலத்தில் தனியார்மயமாக்கல் உச்சம் பெற்றது; ஆசிரியப் பணியென்றால் ஆவணமாக்கல், தேர்வுத்தாள் திருத்துதல், மீண்டும் மீண்டும் தோல்வியுறும் மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் மதிப்பெண்களை அளித்தல், சிவாலய ஓட்டம் போலத் தொடரும் எண்ணற்ற கூட்டங்களில் கலந்துகொள்ளுதல் மட்டுமே, கல்வி கற்பித்தம் கட்டக்கடைசியாகச் செய்ய வேண்டியது எனும் நம்பிக்கை வேரூன்றிவிட்டது. குமாஸ்தா பணி! பெரும்பாலான தனியார் உயர்கல்வி ஆசிரியர்கள் கற்பித்தலுக்கும் ஆய்வுக்கும் தொடர்பற்ற பணிகளிலே 90% நேரத்தைச் செலவிட வேண்டிய அழுத்தம் உள்ளது (பள்ளி ஆசிரியர்களின் நிலையும் இதுதான்). இன்னொரு பிரச்சினை ஊதியமும் வேலையுயர்வும் - ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டுமே சாத்தியமில்லை என்றாகிறது. தொழில்நுட்பக் கல்வியில் இளங்கலைக் கற்றவருக்கு உள்ள வாய்ப்புகளில் 1% கூட முனைவர் பட்டம் முடித்தவருக்கு இருக்காது. ஒரு பள்ளிக்கும் இன்னொரு பள்ளிக்கும், ஒரு கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் வித்தியாசம் இல்லாதபடி கல்வி நிறுவன நிர்வாகமும் அதன் மொழியும் நகலெடுக்கப்படுகிறது. எங்கு போனாலும் ஒரே இடத்தில் இருப்பதாகவே தோன்றும்.
இப்போதுதான் எனக்கு வேலையென்பது விரும்பிச் செய்வது அல்ல, சம்பாதிக்கவும் வளரவும் செய்வது எனும் தெளிவு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் நாம் என்னதான் விரும்பிச் செய்தாலும் சூழல் மாறிவிட்டால் டைட்டானிக் கப்பல் மூழ்கும்போது இரண்டு இசைக்கலைஞர்கள் வாசித்துக்கொண்டிருப்பார்களே அப்படித்தான் இருக்க வேண்டும். மரியாதை, அங்கீகாரம், கண்ணியம் எதுவும் கிடைக்காது. மேலும் கணிதமோ மென்பொருளோ கொஞ்சம் பிரயத்தனம் பண்ணியிருந்தால் என்னால் கற்றிருக்க முடியும், நான் பெரிய போராட்டமின்றி படிப்பை முடித்து நல்லவேலையில் அமர்ந்திருக்க முடியும் என இப்போது தோன்றுகிறது. அப்போதிருந்த பிடிவாதம் என் மனதை மூடிவிட்டிருந்ததால் நிறைய விசயங்கள் புரியவில்லை. என் தொழில்வாழ்வு ரெண்டாயிரத்தில் ஆரம்பித்திருந்தால் பல்வேறு வாய்ப்புகளைப் பெற்றிருப்பேன், பொருள் வாழ்வில் சிரமங்கள் இன்றி இருந்திருப்பேன்.
என்னுடன் முதுகலையில் ஒரு நண்பர் படித்தார். அவர் இளங்கலை ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு பி.பி.ஓவில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு முதுகலை படிக்க எங்களுடன் இணைந்தார். அவர் படிப்பில் சுத்தமாக ஆர்வம் காட்ட மாட்டார். நான் ஒருநாளில் 18 மணிநேரமும் படித்துக்கொண்டிருப்பேன். அவர் ஜெயிக்கும் அளவுக்கு மட்டுமே படித்து பட்டம் பெற்றபின்னர் ஒரு பிரசித்தமான வங்கியில் சேர்ந்தார். நான் அவரைப் படிப்பில் ஆர்வமற்ற தெளிவற்றவர் என நினைத்தேன். ஆனால் அவர் இப்போது அந்த வங்கியில் வி.பியாக இருக்கிறார். இன்னொரு சகமாணவர் பிரமாதமான கிரிக்கெட் வீரர். அவரும் படிப்பில் சரியாக கவனம் செலுத்த மாட்டார். முழுநேரமும் மைதானத்திலே இருப்பார். நான் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தபோது அவர் எந்த கிரிக்கெட் கிளப்பிலும் நிலைக்க முடியாமல் ஊருக்குப் போய்விட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். வருத்தமாக இருந்தது. அதன்பிறகு அவர் என்ன செய்தார் என்பதை நான் சில ஆண்டுகளுக்குப் பின்பே தெரிந்துகொண்டேன் - அவர் கடற்பொறியியல் படிக்க அமெரிக்கா சென்றார். அப்படியே அங்கு கப்பற்படையில் வேலை பெற்று, பின்னர் தனியார் கப்பல்களில் சேர்ந்து பணிபுரிந்து பல நாடுகளில் சுற்றித்திரிந்து அமெரிக்கப் பெண்ணொருத்தியை மணமுடித்து செட்டில் ஆகிவிட்டார். இரண்டு பேரும் என் புரிதலில் ஆரம்பத்தில் தோல்வியுற்றவர்கள், ஆனால் நிஜத்தில் அவர்களே வென்றவர்கள். நாம் தீவிரமான நேசிக்கும் ஒன்றையோ திறமையுள்ள ஒன்றையோ அல்ல, சம்பாதிக்க வாய்ப்பைத் தரும் ஒன்றையே கற்றுக்கொள்ள வேண்டும், வேலையாக செய்ய வேண்டும் என்று இளமையிலேயே புரிந்துகொண்டவர்கள். இலக்கியம் கற்றாலும் அதன் பொறியில் சிக்கி அழியாதவர்கள்.
மேலும் இரு நண்பர்களையும் குறிப்பிட வேண்டும். அவர்களும் என்னைப் போலத்தான் - வகுப்பில் ஜொலித்தவர்கள், ஆனால் பின்னர் சாதாரண வேலைகளில் சிக்கி அலைகழிபவர்கள். அன்று என்னிடம் கேட்டிருந்தால் அவர்கள் மிக உயர்ந்த நிலையை எட்டுவார்கள் என்று சொல்லியிருப்பேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதுவே எதார்த்தம்.
அதனாலே passionஐப் பின் தொடர்ந்துப் போகப் போகிறேன் என்று சொல்லும் இளைஞர்களை நான் இப்போதெல்லாம் ஊக்கப்படுத்துவதில்லை. நமது கனவைப் பின் தொடர்வது அல்ல அக்கனவு நம்மை எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதே முக்கியம். போகாத வழியைக் கனவு காண்பதால் பயனில்லை.
என் அம்மா அதிகமாகப் படித்தவர் அல்லர். நான் என் பதின்வயதை எட்டியபோது நான் அவரைவிட பலமடங்கு அதிகமாகக் கற்றிருந்தேன். அதனாலே அவரால் என்னிடம் வாதிட்டு என்னை ஏற்றுக்கொள்ள வைக்க இயலவில்லை. என்னளவுக்கு ஆயிரக்கணக்கான நூல்களை வாசிக்காத ஒருவருடைய சொல்லை நான் ஏன் கேட்க வேண்டும் என்னுடைய ஈகோவும் அவரைப் பொருட்படுத்த என்னை அனுமதிக்கவில்லை. என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள் எனும் மனநிலை கொண்டவர் என் அப்பா. இப்போதுள்ள முதிர்ச்சி அப்போதிருந்தால் அதிகம் படிக்காத என் அம்மா சொல்வதையே கேட்டிருப்பேன். கொஞ்சம் மனம் வைத்துப் படித்தால் சுலபத்தில் எந்த பட்டப்படிப்பையும் என்னால் முடித்திருக்கவும் எந்த வேலையிலும் சிறந்திருக்க முடியும். முனைவர் பட்டம் முடித்து ஆசிரியராகி - ஆசிரியப் பணிக்குச் சம்மந்தமில்லாமல் - குமாஸ்தா வேலையைப் பன்ணிக்கொண்டிருக்க மாட்டேன். எந்த சக-ஆசிரியரிடம் பேசினாலும் அவர்களும் என்னைப் போன்றே புலம்புவதைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டேன். படிப்பு, வேலை விசயத்தில் மட்டுமல்ல உறவுகள் விசயத்திலும்கூட என் அம்மா தந்த அறிவுரைகள் எவ்வளவு சிறப்பானவை என்பதையும் நான் தாமதமாகவே ஒவ்வொரு முறையும் புரிந்துகொள்கிறேன்.
தாய் சொல்லைத் தட்டாதே!
Posted 14 hours ago by ஆர். அபிலாஷ்