அபத்தமான அமைதி திட்டத்திற்கு நோபல் பரிசு கேட்கும் டிரம்ப்!
-ச.அருணாசலம்

நோபல் விருது பெறும் கனவிலுள்ள அதிபர் டிரம்ப் காசா போரை முடிவுக்கு கொண்டு வர தந்துள்ளது அமைதி திட்டமா? டிரம்பின் அமைதி திட்டம் காசாவை கபளீகரம் செய்யும் சூழ்ச்சியா? அமைதி நாயகன் வேடம் டிரம்புக்கு பொருந்துகிறதா? தீராப் பழியிலிருந்து நேதன்யாகு விடுபடும் முயற்சி பலிக்குமா? ஒரு அலசல்;
அமைதி திட்டத்தின் முக்கிய கூறுகள் என்ன?
# தாக்குதலை நிறுத்துதல். ஹமாஸ் இஸ்ரேல் இரு தரப்பும் பிணைக்கைதிகளை விடுவித்தல். ஆனால், காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின் வாங்கப்படாதாம்.
# மேற்படிக்கு ஒத்துக் கொண்டால் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்குமாம்.
# அமைதிக்கான சர்வதேசக் குழுமத்தை (International Board of Peace) ஏற்படுத்தி அக் குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காசா பகுதியை கொண்டு வருவதாம். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைவராம்! டோனி பிளேர் போன்ற உலகத் தலைவர்கள் இதில் உறுப்பினர்களாம்!
# இத்தகைய ஆட்சிமுறை , புதிதாக ஏற்படுத்தவுள்ள சீரமைக்கப்பட்ட பாலத்தீன குழு முதிர்ச்சி பெறும் வரை – கால வரையிரை இன்றி தொடருமாம்!
# ஹமாஸ் அமைப்பிற்கு இனி மேல் காசாவை நிர்வகிப்பதில் எந்த பங்கும் அளிக்கப்பட மாட்டாதாம். அவர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, தங்களது அமைப்புகளை கலைத்து விட்டால், அவர்களுக்கு உயிர்பிச்சை தருவார்களாம்.
# காசா பகுதியை பொருளாதார ரீதியாக வளர்த்தெடுக்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு வெளிநாட்டு முதலாளிகளின் கீழ் காசா மக்கள் உழைத்து பிழைக்கலாமாம்.

# பாதுகாப்பிற்காக சர்வதேச உறுதிப்படுத்தும் படைகள் (International Stabilisation Force) உருவாக்கப்படுமாம். இந்த படை காசாவின் எல்லைகளையும் உள்ளூர் காவல் கடமைகளையும் நிறைவேற்றுமாம்.
இந்த படைகள் வந்தாலும் இஸ்ரேலிய படைகள் தற்போது விலகாதாம்.
# அடுத்து அமைதியை நிரந்தரமாக்க சக வாழ்வையும் ஒற்றுமை உணர்வையும் தூண்ட உரையாடல்களை(dialogue) இரு பிரிவு மக்களிடையே இத்திட்டம் ஊக்குவிக்குமாம். காசா பகுதி இன்றிருக்கும் பின்னடைவிலிருந்து மீளும் பொழுது அமெரிக்காவின் தலைமையில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களிடையே அரசியல் பேச்சு வார்த்தைகள்- பாலத்தீனர்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் அரசை ஏற்படுத்துதல் குறித்து பேச்சு வார்த்தைகள் – நடத்தப்படும். பாலத்தீனீய அதிகார அமைப்பு அத்தகைய பேச்சு வார்த்தைகளை நடத்துமளவிற்கு சீரமைக்கப்பட்டு பக்குவமும் அடைந்திருக்க வேண்டுமாம்….என்று இத் திட்டம் நீட்டி முழக்குகிறது!

சொல்லமறந்த அல்லது தவிர்த்துவிட்ட அம்சங்கள்என்னென்ன?
# இந்த அமைதி திட்டம் ஐ நா சபை யின் முயற்சியிலோ, அதன் கண்காணிப்பிலோ நடைமுறைக்கு வரும் திட்டமல்ல. இத்திட்டத்தில் ஐ நா விற்கு எந்த பங்கும் இல்லை!
இத்திட்டம் இதுவரை இஸ்ரேல் நடத்திய போர் குற்றங்களுக்கு எந்தவித தண்டனையையும் அளிக்கவில்லை.
# இஸ்ரேல் இதுவரை பறித்த உயிர்களுக்கும், அழித்த சிறார் மற்றும் மகளிர்களுக்கும், சிதைத்த கட்டிடங்களுக்கும் அமைப்பு முறைகளுக்கும் இழப்பீடோ, நிவாரணமோ, இஸ்ரேல் கொடுக்க வேண்டுமென்று கூறவில்லை.
# இவ்வளவு கொடுமைகளையும் அரங்கேற்றிய இஸ்ரேலின் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தாமல் உதவிகள் வழங்குவதைக் கூட இத்திட்டத்தை ஏற்றால் தான் வழங்குவோம் என்று கூறுகிறது இந்த அமைதி திட்டம்.
# அடுத்து, இத் திட்டம் உடனடியாகவோ அல்லது நீண்ட காலத்திலோ காசா மக்கள் இத் திட்டத்தில் பங்கு கொள்ள எந்த வகையான ஜனநாயக வழி முறைகளையும்வழங்கவில்லை. உண்மையில் அவர்களுக்கு அவர்களதுதலைவிதியை நிர்ணயிப்பதில் எந்தவித பங்கையும்அளிக்கவில்லை இந்த திட்டம்.

ஆயுதங்களை கீழே போடும் பாலத்தீனர்களுக்கு எந்தவிதபாதுகாப்பையும் வழங்க மறுக்கும் இத்திட்டம் , இஸ்ரேலியகுடியமர்த்தல்களுக்கும் தடை விதிக்கவில்லை, பாலத்தீனர்களின் நிலங்கள் உடமைகள்பறிக்கப்படுவதையும் தடுக்கவில்லை.
இத்தகைய திட்டம் உண்மையில் அமைதிக்கான திட்டமா அல்லது உலகத்தினரின் கண்களில் மண்ணைத் தூவும் முயற்சியா?
ஒருபுறம் எப்படியும் சமாதான நாயகன் என்ற பட்டத்தை பெற்றுவிட துடிக்கும் தலைக்கனமிக்க கோமாளி டிரம்ப், மறுபுறமோ, கடந்த இரண்டு ஆண்டுகளில் 65,00 மக்களை கொன்று குவித்தாலும் பிணைக் கைதிகளை போரின் மூலம் மீட்கவோ, ஹமாஸ் அமைப்பை ராணுவரீதியாக முறியடிக்கவோ முடியாத நெத்தன்யாகு ஆகிய இரு நபர்களும் தங்களின் கொடூரங்களை தொடரவும் அதற்கான பழியை ஹமாஸ் மீது போடவும் துணிந்தே இத்தகைய நகைப்பிற்கிடமான திட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த அடிமை சாசனத்தை ஹமாஸ் அமைப்பு ஒரு போதும் ஏற்காது என்ற துணிச்சலில் தான் எத்தன் நெத்தன்யாகு டிரம்ப்பின் இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளான் . இதை ஹமாஸ் நிராகரித்தால் நெத்தன்யாகு , நான் அமைதிக்கு முயற்சி செய்தேன். ஆனால், ஹமாஸ் ஒத்துக் கொள்ளவில்லை என பழியை ஹமாஸ் அமைப்பின் மீது போட்டுவிட்டு தனது இனப்படுகொலையை தொடர்ந்து நடத்துவான். அதே நேரத்தில் தன் மீதான இஸ்ரேலிய மக்களின் கோபத்தை மடைமாற்றி தப்பித்து கொள்ளவே இந்த அமைதி திட்டம்.

நேதன்யாகுவிற்கு எதிராக அமைதியை விரும்பும் யூத மக்கள்
இத்தகைய மோசடி திட்டத்தை, இந்தியப் பிரதமர் மோடி வரவேற்று அறிக்கை விட்டுள்ளார். இந்திய அரசின் நீண்ட நாள் கொள்கையும் , சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரால் ஐநா சபையில் அறிவிக்கப்பட்ட இரண்டு அரசு தீர்வுகளும் ( Two State Solution to Palestine) என்னவாயிற்று? அக் கொள்கையை அடைய இத்திட்டம் வழிவிடவில்லையே என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து பதிலில்லை. நெத்தன்யாகு இஸ்ரேலிய மக்களை ஏமாற்றுவது போலவே, மோடி இந்திய மக்களை ஏமாற்றுகிறார்.
அமைதி திட்டத்திற்கு ஆதரவு என்ற போர்வையில் இந்தியாவின் நெடுநாளைய கொள்கையானபாலத்தீன சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல், இஸ்ரேல்ஆக்கிரமித்துள்ள பாலத்தீன பகுதிகளில் இருந்துவெளியேறுதலை வற்புறுத்துதல், பாலத்தீன அரசிற்குஅங்கீகாரம் அளித்தல் , பாலத்தீன அரசு , இஸ்ரேல் அரசு எனஇரண்டு சுதந்திரமான அரசுகளே பாலத்தீனபிரச்சினைக்கான உண்மையான தீர்வு என்றகொள்கைநிலையை மறந்துவிட்டு தனது இஸ்லாமிய வெறுப்பை காட்டும் வண்ணம் இந்த திட்டத்தை ஆதரித்துள்ளார் மோடி.
டிரம்ப் அறிவித்துள்ள இத்திட்டத்திற்கு அரபு நாடுகளான சௌதி அரேபியா, யு ஏ இ, கத்தார், எகிப்து, ஜோர்டான் துருக்கி போன்ற நாடுகள் ‘ஆரம்ப கட்ட’ ஆதரவை தெரிவித்துள்ளன. பல் பிடுங்கப்பட்ட, சோரம் போன , பொம்மை அரசான பாலத்தீனிய அதிகார அமைப்பும் (Palestine Authority) இத்திட்டத்தை வரவேற்றுள்ளது என்றாலும், ஹமாஸ் அமைப்பு தனது இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.

சர்வதேச நீதிமன்றத்தால் போர்க்குற்றவாளி என பிரகடனப்படுத்தப்பட்ட நெத்தன்யாகு தனது இனப் படுகொலையை இந்தப் போர் நிறுத்த்தின் மூலமாக நிறுத்துவான் என்பது பகல் கனவு. உலகெங்கிலுமுள்ள மக்களின் கோபத்திற்கு பயந்து ஐரோப்பிய நாடுகள் பல – பிரித்தானியா, பிரான்சு, ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஸ்பெயின் போன்றவை- பாலத்தீன அரசை இப்பொழுது அங்கீகரித்து உள்ளன.
அமைதி திட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றுவதற்காக , காசா பகுதியை செல்வங் கொழிக்கும் ரியல் எஸ்டேட் ரிவர்ரியாக மாற்றவே இத்திட்டம் முன் வைக்கப்படுகிறது எனலாம் . ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க டிரம்ப் முயல்கிறார்.
ஐநா சபை தீர்மானங்களை, ஐ நா வின் வழிகாட்டுதல்களை, சர்வதேச நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்களை இஸ்ரேல் மதித்தது உண்டா? இத்தகைய தான்தோன்றிதனத்தை ஊக்குவிக்கும் அமெரிக்காவிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா ?

ஹமாஸ் தலைவர்களும், பாலஸ்தீன மக்களும்
நீதி என்பதை யாரிடமும் யாசகமாகப் பெற முடியாது, அது போராடி பெரும் வெற்றியின் விளைவாக கிட்டும் கனியே ஒழிய தோற்றவனுக்கு வழங்கப்படும் பிச்சையல்ல. ஹமாஸ் இயக்கம் பாலத்தீன மக்களின் நாடி நரம்பு என்பதை உலகம் புரிந்து கொள்ளும்நாள் விரைவில் வரும்.
இஸ்ரேலையும் உள்ளடக்கிய பரந்த பாலத்தீனத்தில் இன்றும் யூத இன மக்களின் எண்ணிக்கைக்கு சற்றும் குறையாமல் பாலத்தீனர்கள் வாழ்வதை மறந்து விட்டு, பாலத்தீனம் முழுமையுமே யூத இனத்திற்கு கடவுள் அளித்த புண்ணிய பூமி என்று கதையளக்கும். யூதமதவெறித் தனத்தை (ஜியோனிசத்தை) கைவிட்டு யூதர்களுக்கான தேசமாக இஸ்ரேல் அரசும் , பாலத்தீனர்களுக்கான பாலத்தீன அரசும் ஏற்படுத்தி சுதந்திரமாக இயங்க (Two States) இஸ்ரேல் ஒத்துக் கொள்ள வேண்டும்.
அல்லது
பரந்த பாலத்தீனத்தில் அனைத்து மக்களுக்கும்( யூதர்கள்,பாலத்தீன இஸ்லாமியர்கள், ட்ரூஸ் கிறித்தவர்கள், ஜொராஸ்ட்ரிய மத்த்தினர்) இயைந்து வாழும் ஒற்றை மத சார்பற்ற அரசை ஏற்படுத்த (One Secular State) இஸ்ரேல் முன்வரவேண்டும்.
இழப்பதற்கு ஏதுமற்ற பாலத்தீன மக்கள் தங்களது அடையாளத்திற்காக தங்களது கண்ணியத்திற்காக களத்தில் நிற்பார்கள் என்பது உறுதி!
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
https://aramonline.in/22927/trump-peace-plan-for-gaza/