Aggregator

சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!

2 months 3 weeks ago

பெரும் மக்கள் கூட்டத்தையும் பெரும் கல்விசமூகத்தையும் கொண்டிருக்ககூடிய வடக்கு -கிழக்கு பிரதேசங்களில் யாழ், வன்னி மாவட்டங்களில் தமிழரசுக்கட்சியின் தெரிவு அல்லத அதில் உள்வாங்கியவர்கள் மீது மக்கள் கொண்ட அதிருப்தியே தேசிய மக்கள் சக்தியின் வெற்றியாக மாறியதாக கருதப்படுகின்றது.

இந்தநிலையில் தமிழர் பகுதிகளில தமிழ் கட்சிகள் வென்றிருந்தால் ஐ.நா ஆணையாளரின் வருகை கூட மாறியிருக்கும் என்று பிரித்தானிய தமிழர்பேரவையின் மனிதஉரிமைகள் இணைப்பாளர் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஐ.நாவில் தமிழ் மக்களுக்கான பின்னடைவிற்கான முழுபொறுப்பையும் தமிழரசுக்கட்சி ஏற்க வேண்டும்.

தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த சம்பந்தன் பல விடயங்களை கட்டுப்படுத்தியிருந்தால் தமிழினத்திற்கு இவ்வாறான விடயங்கள் நடைபெற்றிருக்காது என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பிலும், சுமந்திரனின் நிலைபாடு தொடர்பிலும் அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு...


https://tamilwin.com/

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

2 months 3 weeks ago
அவுஸ்ரேலியா சிமி பின‌லில் தோத்து வெளிய‌ போனால் இந்தியா ம‌ற்ற‌ அணிக‌ள் எதுவாயினும் வென்று விடுவின‌ம்.........................அவுஸ்ரேலியா பின‌லுக்கு வ‌ந்தாலும் க‌ட‌ந்த‌ கால‌ பிழைக‌ளை இந்தியா ச‌ரி செய்து கோப்பைய‌ வெல்ல‌னும்.................இதுவ‌ரை ஒரு உல‌க‌ கோப்பைய‌ கூட‌ இந்தியா வென்ற‌து கிடையாது.................இப்போது இருக்கும் அணி கோப்பை வெல்ல‌ த‌குதியான‌ அணி........................

மகளிர் கிரிக்கெட்டின் வரலாறு

2 months 3 weeks ago
2017ம் ஆண்டு இங்லாந்தில் ந‌ட‌ந்த‌ ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பையில் பின‌லில் இந்தியா வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருந்த‌து கிட்ட‌ த‌ட்ட‌ வெற்றிக்கு அருகில் வ‌ந்து விட்டின‌ம் , இங்லாந் மக‌ளிர் க‌ட‌சி சில‌ ஓவ‌ர்க‌ளில் சிற‌ப்பாக‌ ப‌ந்து வீசி வென்று விட்டின‌ம் இந்த‌ முறை ந‌ல்ல‌ வாய்ப்பு இருக்கு வெல்ல‌🙏👍.........................

மகளிர் கிரிக்கெட்டின் வரலாறு

2 months 3 weeks ago
ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல; மகளிர் கிரிக்கெட்டின் தலையெழுத்து மாறியது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் மிதாலி ராஜ் (கோப்புப் படம், 2017) கட்டுரை தகவல் தினேஷ்குமார் பிபிசி தமிழுக்காக 4 அக்டோபர் 2025 நடப்பு மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. ஒருகாலத்தில் இந்திய ஆடவர் அணியின் நிழலில் ஒதுங்கியிருந்த இந்திய மகளிர் அணி, இன்று உலகின் வலிமையான அணிகளுள் ஒன்று. விராட் கோலி, ரோஹித் சர்மாக்களுக்கு இணையாக இன்று, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளனர். ஆடவர் கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அதேயளவு மிதாலி ராஜும் ஆதர்சமாக திகழ்கிறார். எள்ளி நகையாடப்பட்ட இந்திய மகளிர் அணி எழுச்சி பெற்றது எப்படி? இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை புரிந்துகொள்வதற்கு, மகளிர் கிரிக்கெட்டின் ஆதிவரலாற்றை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அது எப்படி இந்தியாவில் உள்வாங்கப்பட்டது என்பதையும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் என்னவென்பதையும் அதன் முன்னத்தி ஏர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் ஆதியிலே பெண்கள் இருந்தார்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸ்மிருதி மந்தனா கிரிக்கெட்டும் ஆதியில் சமத்துவத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த யோகன் டி கிரிஸின் (Johann de Grise) ஓவியங்கள் அதற்கு இன்றளவும் சான்றாக உள்ளன. கிராமங்களில் வளர்ந்த ஆட்டம் என்பதால், ஒருசில கட்டுப்பாடுகள் தவிர்த்து அனைத்துத் தரப்பு மகளிரும் பொழுதைப் போக்கும் ஆட்டமாகத்தான் கிரிக்கெட் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. அதுநாள் வரை மகளிர் கிரிக்கெட் என்பது சேவல் சண்டையைப் போல, பாதுகாப்பு கவசங்கள் இல்லாத குத்துச் சண்டையைப் போல, குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மகளிர் ஆடும் ஒரு சாகச ஆட்டம்; அவ்வளவுதான். பாதுகாப்பற்ற எக்குத்தப்பான களங்களில் மகளிர் ஆடுவதாலே அது ஒரு அதிசாகச ஆட்டமாக வர்ணிக்கப்பட்டது. அதனால் இயல்பிலேயே சூது, குடி உள்ளான கேளிக்கைகளுக்கு ஏற்றதாகவும் தீவிர அபிமானம் கொண்ட ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு ஏதுவான பேசுபொருளாகவும் அது அமைந்தது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆங்கில ஆட்டமாக இருக்கவில்லை. விக்டோரிய யுகத்தில்தான் யார்யார் மட்டைப் பிடிக்க வேண்டுமென்ற எழுதப்படாத விதி ஒன்று உருவானது. சொல்லி வைத்தது போல அப்போதுதான் எம்சிசி (MCC) அமைப்பும் ஆட்டம் தொடர்பான விதிகளும் உருப்பெறத் தொடங்கின. உயர்குடி அல்லாத மகளிர் குறித்தான அந்தக் காலத்திய மதிப்பீடு 'அற்பத்தனமானது ; வளர்ச்சிக்கு வழியில்லாதது ; நன்நெறிகளுக்கு உட்படாது' என்றே இருந்தது என்கிறார் Playing the Game புத்தகத்தை எழுதிய காத்லீன் இ.மேக்ரோன். 1998இல் தான் எம்சிசி நிறுவனம் மகளிர் கிரிக்கெட்டை முழுமையாக அங்கீகரித்தது. ஆண்களின் குறுகிய உலகம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (இடமிருந்து முதலில் இருப்பவர்) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார். காலப்போக்கில் இந்த சமத்துவமின்மை மகளிர் கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. ஆனாலும் ஆண்மயக் கண்ணோட்டத்திலிருந்து அது பார்க்கப்படுவது தொடர்ந்தபடியே இருந்தது. கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (Len Hutton) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார். கிரிக்கெட் எழுத்தின் மணிமகுடம் என சொல்லத்தக்க 'The Art and science of Cricket' புத்தகத்தை எழுதிய பாப் ஊல்மர் அவன்/அவள் சிக்கல் தொடர்பான அரசியல் சரித்தன்மையை நியாயப்படுத்தும் பொருட்டு தனது முன்னுரையில் இப்படி எழுதுகிறார். "இந்தப் புத்தகம் அனைவருக்கும் பயன்படக் கூடியது என்றாலும் ஆடவர் கிரிக்கெட்டை மட்டுமே முன்னிறுத்தி எழுதப்பட்டது." இதே அர்த்தம் தொனிக்குமான ஒரு உரையை தனது 'On Form' புத்தகத்தில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பிரயர்லியும் எழுதுகிறார். மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆண் வர்க்கம் தொடர்ந்து முட்டுக் கட்டைகளை – தெரிந்தோ தெரியாமலோ – ஏற்படுத்தினாலும் அது ஆரம்ப காலம் தொட்டே ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டி வந்துள்ளது. அது டபிள்யூ.ஜி.கிரேஸிடமிருந்து (W. G. Grace) தொடங்குகிறது. நவீன பேட்டிங்கில் பெரும் தாக்கத்தை செலுத்திய கிரேஸின் கிரிக்கெட் குரு வேறு யாருமல்ல; அவருடைய தாய் மர்தா கிரேஸ்தான். இன்னும் கொஞ்சம் காலத்தை பின்னோக்கி நகர்த்தினால் 1820களில் கிறிஸ்டியானோ பந்தை தூக்கிப் போட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் கிரிக்கெட்டில் தற்போது நடைமுரையில் உள்ள 'Overarm' பாணியில் முதல்முறையாக பந்துவீசியவர். ஆனால் வழக்கம் போல வரலாற்றில் அவர் பெயர் மறைக்கப்பட்டு அவருடைய சகோதரரான ஜான் வைல்ஸின் (John Willes) கல்லறையில் 'Overarm பந்துவீச்சின் பிதாமகன்' என பொறிக்கப்பட்டது. ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நடத்துவதற்கு முன்னுதாரணமாக நின்று வழிகாட்டியவர் கேப்டன் ரேச்சல் ஹேஹோ பிளின்ட் (Rachael Heyhoe Flint). இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனான அவர் 1973இல் முதல் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார். பேட்டிங் திறன் அடிப்படையில் அவரை மகளிர் கிரிக்கெட்டின் முதல் உச்ச நட்சத்திரம் என சொல்லலாம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டபிள்யூ.ஜி.கிரேஸ் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் 18ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் கிரிக்கெட் நுழைந்தாலும், மகளிர் கிரிக்கெட் முழுமையான வடிவம் எடுக்க 250 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973இல் தான் The Women's Cricket Association of India தொடங்கப்பட்டது. அக்காலத்திய மகளிர் கிரிக்கெட் என்பது பம்பாய், டெல்லி, கல்கத்தா மாதிரியான பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. அன்றைய இந்திய மகளிர் கிரிக்கெட்டின் போக்கிற்கும் வர்க்க பார்வைக்கும் சரியான உதாரணமென பம்பாயின் 'த அல்பீஸ் கிளப்'பை (The Albees Club) சொல்லலாம். பெரு மதிப்பு வாய்ந்த அந்த கிளப்பின் வீரர்களில் ஒருவர் நூதன் கவாஸ்கர். இவர் லிட்டில் மாஸ்டர் சுனில் காவஸ்கரின் தங்கை. 70களில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. அதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவும் ஒரு முக்கிய பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது. அன்றைய காலகட்டத்தில் நட்சத்திர வீரர்கள் என இருவரை அறுதியிட்டு சொல்ல முடியும். ஒருவர் சாந்தா ரங்கஸ்வாமி. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முதல் ஆல்ரவுண்டர் இவர்தான். இன்னொருவர் இடக்கை சுழலரும் அதிரடி மட்டையாளருமான டயானா எடுல்ஜி (Diana Edulji). குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிட்டினாலும் கூட 90களின் இறுதிவரை வரை உச்ச நட்சத்திரம் என சொல்லும்படியான ஒரு ஆட்டக்காரர் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் உருப்பெறவில்லை. 2006இல் தான் The Women's Cricket Association of India அமைப்பு பிசிசிஐ உடன் முறையாக இணைக்கப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கபில் தேவுடன் சாந்தா ரங்கஸ்வாமி (நடுவில்) ஒப்பீடு என்னும் இழிவு மகளிர் கிரிக்கெட்டில் போய் ஆடவர் கிரிக்கெட்டை தேடாமல் இருக்க வேண்டும். அதுதான் மகளிர் கிரிக்கெட்டை ரசிப்பதற்கான அடிப்படை பால பாடம். இந்தப் புரிதல் இல்லாமல் போகும் போதுதான், அது வேகமில்லாத, ஆக்ரோஷம் குறைவான, சுறுசுறுப்பு இல்லாத ஆட்டமாக மட்டுப்படுகிறது. மகளிர் கிரிக்கெட், காணும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான உணர்வெழுச்சியை உண்டாக்கவல்லது. ஒரு கலை வடிவத்தைப் போல. ஆடவர் கிரிக்கெட்டின் போலி தேசியவாத சலம்பல்களுக்கு மத்தியில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆறுதல் என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் முகுல் கேசவன். மகளிர் கிரிக்கெட்டை புரிந்துகொள்ள திறந்த மனதும் அறிவுசார்ந்த நேர்மையான கற்பனை வளமும் தேவை என்கிறார் கார்த்திகேய தத்தா. இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்டர் சாரா டெய்லர், தனது ஆட்டத்திறனை விஸ்தீகரிக்கும் பொருட்டு ஓர் உள்ளூர் ஆடவர் அணியில் இணைந்து மட்டையாடினார். ஆனால் இது போன்ற முயற்சிகள் எல்லாம் மகளிர் கிரிக்கெட் மீதான கடந்த காலக் கற்பிதங்களை உறுதிப்படுத்துவதற்குத்தான் உதவும். ஒருமுறை மிதாலியிடம் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் எனக் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் அவர் சொன்ன பதில் "ஒரு ஆண் கிரிக்கெட் வீரரிடம் உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் எனக் கேட்பீர்களா?" பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜெமிமா ரோட்ரிக்ஸ் WPL என்னும் கேம் சேஞ்சர் ஒருகாலத்தில் கிரிக்கெட்டை பின்தொடரும் பெண்களுக்கு இருந்த பிரச்னை, மகளிர் கிரிக்கெட்டில் அவர்களுக்கு என்று ரோல் மாடல்கள் இருக்கமாட்டார்கள். ஆடவர் கிரிக்கெட்டில் இருந்து தங்களுக்கான ரோல் மாடல்களை அவர்கள் வரித்துக்கொண்டாக வேண்டும். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. மிதாலி ராஜை தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் நாடறிந்த பிரபலங்கள் உள்ளனர். மகளிர் கிரிக்கெட்டின் நிலை தற்போது நிறையவே மாறியிருக்கிறது என்கிறார் இந்திய முன்னாள் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன். தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான இவர், மகளிர் டெஸ்ட், மகளிர் ஒருநாள், மகளிர் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். "முன்பு மகளிர் கிரிக்கெட்டர்கள் பெரும்பாலும் ஆடவர் கிரிக்கெட்டில் இருந்துதான் ரோல் மாடல்களை தேடுவார்கள். நான் 10 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டேன். எங்கள் தெருவில் உள்ள பையன்களுடன் சேர்ந்து விளையாடுவேன். எனக்கு அப்போது சச்சின்தான் ஆதர்சம். மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான மிதாலி ராஜ் குறித்து அப்போது நான் அறிந்திருக்கவிலை. கிரிக்கெட்டில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்ற பிறகுதான், மிதாலி ராஜ் யார் என்பது எனக்கு தெரியவந்தது. பிறகு அவருடன் இணைந்து விளையாடியதுடன், நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பெற்றேன். ஆனால், இன்று அப்படியில்லை. ஸ்மிருதி மந்தனா இன்று வெளியே சென்றால், அவரை காண்பதற்கு ஒரு மிகப்பெரிய கூட்டம் காத்திருக்கிறது" என்கிறார். முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது. முன்னர் ரயில்வே அணியில் இருந்து பெரும்பாலான மகளிர் கிரிக்கெட்டர்கள், இந்திய அணிக்கு தேர்வானதை குறிப்பிட்டாக வேண்டும். வேலை உத்தரவாதம் கிடைப்பதால், தத்தமது மாநில அணிகளை விட ரயில்வே அணிக்கு விளையாடவே மகளிர் கிரிக்கெட்டர்கள் விரும்பினர். ஆனால், இன்று சூழல் வெகுவாக மாறியிருக்கிறது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன். திருப்புமுனை தந்த 2017 உலகக்கோப்பை "2017 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி பைனல் வரைக்கும் முன்னேறியது. இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில், அதுவொரு திருப்புமுனை தருணம் என்றே சொல்லவேண்டும். அதன்பிறேகே மகளிர் கிரிக்கெட்டை ரசிகர்கள் பெரியளவுக்கு பின்தொடர ஆரம்பித்தனர். 2022இல் ஆடவருக்கும் மகளிருக்கும் சரிசமமான ஊதியம் என்பதை பிசிசிஐ உறுதிசெய்தது. ரோஹித் சர்மாவுக்கு எவ்வளவு ஊதியமோ, இன்று அதேயளவு ஹர்மன்பிரீத் கவுரும் பெறுகிறார். WPL அறிமுகமான பிறகு, பெண்களுக்கு கிரிக்கெட் விருப்பம்(passion) என்பதை கடந்து ஒரு கரியராகவும்(career) மாற்றமடைந்துள்ளது. நல்ல ஊதியம் கிடைப்பதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பயிற்சி முறைகள், டயட் போன்றவை முன்னேற்றம் அடைந்துள்ளன. இது களத்தில் இந்திய அணியின் வெற்றிகளில் எதிரொலிக்கிறது" என்கிறார். சரிசமமான ஊதியம், WPL போன்றவை வளர்ச்சிக்கு வித்திட்டாலும், ஆடவர் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் லைம்லைட், பெருந்திரள் ரசிகர் கூட்டத்தில் பாதியை கூட மகளிர் கிரிக்கெட் எட்டவில்லை. ஆனால், இந்த வாதத்தை முழுவதுமாக நிரஞ்சனா நாகராஜன் மறுக்கிறார். "நீங்கள், மகளிர் கிரிக்கெட்டை ஆடவர் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுவதே தவறு. மரபியல்ரிதியாக இரு தரப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக மகளிர் ஆட்டத்திலும் இப்போது பெரிய சிக்சர்கள் எல்லாம் பறக்கின்றன. ஊடக வெளிச்சம், ரசிகர்கள் ஆதரவு இல்லை என்பதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நடப்பு உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தை காண 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்(22,843) கவுகாத்தி மைதானத்தில் குவிந்தனர். இந்த எண்ணிக்கையை கடந்த காலங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது." என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹர்மன்பிரீத் கவுர் அடுத்த பத்தாண்டுகள் எப்படி இருக்கும்? மகளிர் கிரிக்கெட்டின் சமீபத்திய வளர்ச்சிக்கு பிசிசிஐ அளித்த பங்களிப்பை மறுக்க முடியாது என்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் வித்யுத் சிவராமகிருஷ்ணன். CSK அணிக்காக தோனி தலைமையில் விளையாடிய வித்யுத், 11வது வீரராக களமிறங்கி ரஞ்சி கோப்பையில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். "கடந்த காலங்களில் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கு சரியான கட்டமைப்பு கிடையாது. ஊதியமும் மிகவும் சொற்பம் என்பதால், யாரும் கிரிக்கெட்டை ஒரு கரியர் வாய்ப்பாக பார்க்கவில்லை. ஆனால், WPL, ஆடவருக்கு இணையான ஊதியம் போன்றவற்றால் நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பீல்டிங், உடற்தகுதி போன்றவை கடந்த பத்தாண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் பங்கேற்கும் WPL, இந்திய மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். சமீப காலமாக நட்சத்திர வீராங்கனைகள் மட்டுமன்று உள்ளூர் கிரிக்கெட்டர்களும் WPL இல் முத்திரை பதித்துவருகின்றனர்." என்றார். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா நிறைய உலகக்கோப்பைகளை கைப்பற்றும் என்று வித்யுத் சிவராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவிக்கிறார். "நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்ற அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. பிசிசிஐ தரும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, நவீன கிரிக்கெட்டுக்கு இன்றியமையாத அம்சங்களான பவர் ஹிட்டிங் (power hitting) உள்ளிட்டவற்றை இந்திய மகளிர் கிரிக்கெட்டர்கள் மேம்படுத்திக் கொண்டுவருகிறார்கள்" என்றார். அங்கீகாரம் மறுக்கப்பட்டது அந்த காலம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கிரிக்கெட் இதழாளராக உள்ள ஆர். மோகனிடம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிப் போக்கு பற்றி பேசினோம். 2006 இல் இந்திய மகளிர் கிரிக்கெட்டை பிசிசிஐ அமைப்பின் கீழ் முறையாக கொண்டுவந்த பிறகே நிலைமை மாறத் தொடங்கியது என்று கூறினார். "70–80களில் எல்லாம் மகளிர் கிரிக்கெட்டை யாரும் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். சாந்தா ரங்கஸ்வாமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கிரிக்கெட் வட்டாரம் அறிந்திருந்தது. ஆனால், அவர்களுக்கு பெரியளவில் வாய்ப்புகளை அங்கீகாரமோ கிடைக்கவில்லை. கவாஸ்கர் போன்றவர்கள் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்குவிக்க வேண்டுமென விரும்பினர். ஆனால், நிறுவனங்களின் துணையின்றி தனிநபர்களால் ஓரளவுக்கு மேல் முடியவில்லை. உலகளவில் மகளிர் கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், 2006 இல் பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை அரவணைக்க வழிவகுத்தன. WPL, சரிசமமான சம்பளம் என தற்போது அது உச்சத்தை எட்டியுள்ளது" என்றார். நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால், அது இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படும். ரசிகர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யுமா இந்திய அணி? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5yqv93q634o

மகளிர் கிரிக்கெட்டின் வரலாறு

2 months 3 weeks ago

ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல; மகளிர் கிரிக்கெட்டின் தலையெழுத்து மாறியது எப்படி?

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் மிதாலி ராஜ் (கோப்புப் படம், 2017)

கட்டுரை தகவல்

  • தினேஷ்குமார்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 அக்டோபர் 2025

நடப்பு மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. ஒருகாலத்தில் இந்திய ஆடவர் அணியின் நிழலில் ஒதுங்கியிருந்த இந்திய மகளிர் அணி, இன்று உலகின் வலிமையான அணிகளுள் ஒன்று.

விராட் கோலி, ரோஹித் சர்மாக்களுக்கு இணையாக இன்று, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளனர். ஆடவர் கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அதேயளவு மிதாலி ராஜும் ஆதர்சமாக திகழ்கிறார். எள்ளி நகையாடப்பட்ட இந்திய மகளிர் அணி எழுச்சி பெற்றது எப்படி?

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை புரிந்துகொள்வதற்கு, மகளிர் கிரிக்கெட்டின் ஆதிவரலாற்றை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அது எப்படி இந்தியாவில் உள்வாங்கப்பட்டது என்பதையும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் என்னவென்பதையும் அதன் முன்னத்தி ஏர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டில் ஆதியிலே பெண்கள் இருந்தார்கள்

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்மிருதி மந்தனா

கிரிக்கெட்டும் ஆதியில் சமத்துவத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த யோகன் டி கிரிஸின் (Johann de Grise) ஓவியங்கள் அதற்கு இன்றளவும் சான்றாக உள்ளன.

கிராமங்களில் வளர்ந்த ஆட்டம் என்பதால், ஒருசில கட்டுப்பாடுகள் தவிர்த்து அனைத்துத் தரப்பு மகளிரும் பொழுதைப் போக்கும் ஆட்டமாகத்தான் கிரிக்கெட் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது.

அதுநாள் வரை மகளிர் கிரிக்கெட் என்பது சேவல் சண்டையைப் போல, பாதுகாப்பு கவசங்கள் இல்லாத குத்துச் சண்டையைப் போல, குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மகளிர் ஆடும் ஒரு சாகச ஆட்டம்; அவ்வளவுதான். பாதுகாப்பற்ற எக்குத்தப்பான களங்களில் மகளிர் ஆடுவதாலே அது ஒரு அதிசாகச ஆட்டமாக வர்ணிக்கப்பட்டது.

அதனால் இயல்பிலேயே சூது, குடி உள்ளான கேளிக்கைகளுக்கு ஏற்றதாகவும் தீவிர அபிமானம் கொண்ட ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு ஏதுவான பேசுபொருளாகவும் அது அமைந்தது.

எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆங்கில ஆட்டமாக இருக்கவில்லை. விக்டோரிய யுகத்தில்தான் யார்யார் மட்டைப் பிடிக்க வேண்டுமென்ற எழுதப்படாத விதி ஒன்று உருவானது.

சொல்லி வைத்தது போல அப்போதுதான் எம்சிசி (MCC) அமைப்பும் ஆட்டம் தொடர்பான விதிகளும் உருப்பெறத் தொடங்கின. உயர்குடி அல்லாத மகளிர் குறித்தான அந்தக் காலத்திய மதிப்பீடு 'அற்பத்தனமானது ; வளர்ச்சிக்கு வழியில்லாதது ; நன்நெறிகளுக்கு உட்படாது' என்றே இருந்தது என்கிறார் Playing the Game புத்தகத்தை எழுதிய காத்லீன் இ.மேக்ரோன்.

1998இல் தான் எம்சிசி நிறுவனம் மகளிர் கிரிக்கெட்டை முழுமையாக அங்கீகரித்தது.

ஆண்களின் குறுகிய உலகம்

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (இடமிருந்து முதலில் இருப்பவர்) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார்.

காலப்போக்கில் இந்த சமத்துவமின்மை மகளிர் கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. ஆனாலும் ஆண்மயக் கண்ணோட்டத்திலிருந்து அது பார்க்கப்படுவது தொடர்ந்தபடியே இருந்தது.

கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (Len Hutton) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார். கிரிக்கெட் எழுத்தின் மணிமகுடம் என சொல்லத்தக்க 'The Art and science of Cricket' புத்தகத்தை எழுதிய பாப் ஊல்மர் அவன்/அவள் சிக்கல் தொடர்பான அரசியல் சரித்தன்மையை நியாயப்படுத்தும் பொருட்டு தனது முன்னுரையில் இப்படி எழுதுகிறார். "இந்தப் புத்தகம் அனைவருக்கும் பயன்படக் கூடியது என்றாலும் ஆடவர் கிரிக்கெட்டை மட்டுமே முன்னிறுத்தி எழுதப்பட்டது." இதே அர்த்தம் தொனிக்குமான ஒரு உரையை தனது 'On Form' புத்தகத்தில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பிரயர்லியும் எழுதுகிறார்.

மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆண் வர்க்கம் தொடர்ந்து முட்டுக் கட்டைகளை – தெரிந்தோ தெரியாமலோ – ஏற்படுத்தினாலும் அது ஆரம்ப காலம் தொட்டே ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டி வந்துள்ளது.

அது டபிள்யூ.ஜி.கிரேஸிடமிருந்து (W. G. Grace) தொடங்குகிறது. நவீன பேட்டிங்கில் பெரும் தாக்கத்தை செலுத்திய கிரேஸின் கிரிக்கெட் குரு வேறு யாருமல்ல; அவருடைய தாய் மர்தா கிரேஸ்தான்.

இன்னும் கொஞ்சம் காலத்தை பின்னோக்கி நகர்த்தினால் 1820களில் கிறிஸ்டியானோ பந்தை தூக்கிப் போட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் கிரிக்கெட்டில் தற்போது நடைமுரையில் உள்ள 'Overarm' பாணியில் முதல்முறையாக பந்துவீசியவர்.

ஆனால் வழக்கம் போல வரலாற்றில் அவர் பெயர் மறைக்கப்பட்டு அவருடைய சகோதரரான ஜான் வைல்ஸின் (John Willes) கல்லறையில் 'Overarm பந்துவீச்சின் பிதாமகன்' என பொறிக்கப்பட்டது.

ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நடத்துவதற்கு முன்னுதாரணமாக நின்று வழிகாட்டியவர் கேப்டன் ரேச்சல் ஹேஹோ பிளின்ட் (Rachael Heyhoe Flint). இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனான அவர் 1973இல் முதல் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார். பேட்டிங் திறன் அடிப்படையில் அவரை மகளிர் கிரிக்கெட்டின் முதல் உச்ச நட்சத்திரம் என சொல்லலாம்.

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டபிள்யூ.ஜி.கிரேஸ்

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்

18ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் கிரிக்கெட் நுழைந்தாலும், மகளிர் கிரிக்கெட் முழுமையான வடிவம் எடுக்க 250 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

1973இல் தான் The Women's Cricket Association of India தொடங்கப்பட்டது. அக்காலத்திய மகளிர் கிரிக்கெட் என்பது பம்பாய், டெல்லி, கல்கத்தா மாதிரியான பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கான ஒன்றாகவே பார்க்கப்பட்டது.

அன்றைய இந்திய மகளிர் கிரிக்கெட்டின் போக்கிற்கும் வர்க்க பார்வைக்கும் சரியான உதாரணமென பம்பாயின் 'த அல்பீஸ் கிளப்'பை (The Albees Club) சொல்லலாம். பெரு மதிப்பு வாய்ந்த அந்த கிளப்பின் வீரர்களில் ஒருவர் நூதன் கவாஸ்கர். இவர் லிட்டில் மாஸ்டர் சுனில் காவஸ்கரின் தங்கை.

70களில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. அதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவும் ஒரு முக்கிய பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது.

அன்றைய காலகட்டத்தில் நட்சத்திர வீரர்கள் என இருவரை அறுதியிட்டு சொல்ல முடியும். ஒருவர் சாந்தா ரங்கஸ்வாமி. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முதல் ஆல்ரவுண்டர் இவர்தான். இன்னொருவர் இடக்கை சுழலரும் அதிரடி மட்டையாளருமான டயானா எடுல்ஜி (Diana Edulji).

குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிட்டினாலும் கூட 90களின் இறுதிவரை வரை உச்ச நட்சத்திரம் என சொல்லும்படியான ஒரு ஆட்டக்காரர் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் உருப்பெறவில்லை. 2006இல் தான் The Women's Cricket Association of India அமைப்பு பிசிசிஐ உடன் முறையாக இணைக்கப்பட்டது.

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கபில் தேவுடன் சாந்தா ரங்கஸ்வாமி (நடுவில்)

ஒப்பீடு என்னும் இழிவு

மகளிர் கிரிக்கெட்டில் போய் ஆடவர் கிரிக்கெட்டை தேடாமல் இருக்க வேண்டும். அதுதான் மகளிர் கிரிக்கெட்டை ரசிப்பதற்கான அடிப்படை பால பாடம். இந்தப் புரிதல் இல்லாமல் போகும் போதுதான், அது வேகமில்லாத, ஆக்ரோஷம் குறைவான, சுறுசுறுப்பு இல்லாத ஆட்டமாக மட்டுப்படுகிறது.

மகளிர் கிரிக்கெட், காணும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான உணர்வெழுச்சியை உண்டாக்கவல்லது. ஒரு கலை வடிவத்தைப் போல. ஆடவர் கிரிக்கெட்டின் போலி தேசியவாத சலம்பல்களுக்கு மத்தியில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆறுதல் என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் முகுல் கேசவன்.

மகளிர் கிரிக்கெட்டை புரிந்துகொள்ள திறந்த மனதும் அறிவுசார்ந்த நேர்மையான கற்பனை வளமும் தேவை என்கிறார் கார்த்திகேய தத்தா. இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்டர் சாரா டெய்லர், தனது ஆட்டத்திறனை விஸ்தீகரிக்கும் பொருட்டு ஓர் உள்ளூர் ஆடவர் அணியில் இணைந்து மட்டையாடினார். ஆனால் இது போன்ற முயற்சிகள் எல்லாம் மகளிர் கிரிக்கெட் மீதான கடந்த காலக் கற்பிதங்களை உறுதிப்படுத்துவதற்குத்தான் உதவும்.

ஒருமுறை மிதாலியிடம் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் எனக் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் அவர் சொன்ன பதில் "ஒரு ஆண் கிரிக்கெட் வீரரிடம் உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் எனக் கேட்பீர்களா?"

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெமிமா ரோட்ரிக்ஸ்

WPL என்னும் கேம் சேஞ்சர்

ஒருகாலத்தில் கிரிக்கெட்டை பின்தொடரும் பெண்களுக்கு இருந்த பிரச்னை, மகளிர் கிரிக்கெட்டில் அவர்களுக்கு என்று ரோல் மாடல்கள் இருக்கமாட்டார்கள். ஆடவர் கிரிக்கெட்டில் இருந்து தங்களுக்கான ரோல் மாடல்களை அவர்கள் வரித்துக்கொண்டாக வேண்டும்.

ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. மிதாலி ராஜை தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் நாடறிந்த பிரபலங்கள் உள்ளனர்.

மகளிர் கிரிக்கெட்டின் நிலை தற்போது நிறையவே மாறியிருக்கிறது என்கிறார் இந்திய முன்னாள் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன். தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான இவர், மகளிர் டெஸ்ட், மகளிர் ஒருநாள், மகளிர் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

"முன்பு மகளிர் கிரிக்கெட்டர்கள் பெரும்பாலும் ஆடவர் கிரிக்கெட்டில் இருந்துதான் ரோல் மாடல்களை தேடுவார்கள். நான் 10 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டேன். எங்கள் தெருவில் உள்ள பையன்களுடன் சேர்ந்து விளையாடுவேன். எனக்கு அப்போது சச்சின்தான் ஆதர்சம்.

மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான மிதாலி ராஜ் குறித்து அப்போது நான் அறிந்திருக்கவிலை. கிரிக்கெட்டில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்ற பிறகுதான், மிதாலி ராஜ் யார் என்பது எனக்கு தெரியவந்தது.

பிறகு அவருடன் இணைந்து விளையாடியதுடன், நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பெற்றேன். ஆனால், இன்று அப்படியில்லை. ஸ்மிருதி மந்தனா இன்று வெளியே சென்றால், அவரை காண்பதற்கு ஒரு மிகப்பெரிய கூட்டம் காத்திருக்கிறது" என்கிறார்.

முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது. முன்னர் ரயில்வே அணியில் இருந்து பெரும்பாலான மகளிர் கிரிக்கெட்டர்கள், இந்திய அணிக்கு தேர்வானதை குறிப்பிட்டாக வேண்டும். வேலை உத்தரவாதம் கிடைப்பதால், தத்தமது மாநில அணிகளை விட ரயில்வே அணிக்கு விளையாடவே மகளிர் கிரிக்கெட்டர்கள் விரும்பினர். ஆனால், இன்று சூழல் வெகுவாக மாறியிருக்கிறது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன்.

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன்.

திருப்புமுனை தந்த 2017 உலகக்கோப்பை

"2017 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி பைனல் வரைக்கும் முன்னேறியது. இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில், அதுவொரு திருப்புமுனை தருணம் என்றே சொல்லவேண்டும். அதன்பிறேகே மகளிர் கிரிக்கெட்டை ரசிகர்கள் பெரியளவுக்கு பின்தொடர ஆரம்பித்தனர்.

2022இல் ஆடவருக்கும் மகளிருக்கும் சரிசமமான ஊதியம் என்பதை பிசிசிஐ உறுதிசெய்தது. ரோஹித் சர்மாவுக்கு எவ்வளவு ஊதியமோ, இன்று அதேயளவு ஹர்மன்பிரீத் கவுரும் பெறுகிறார். WPL அறிமுகமான பிறகு, பெண்களுக்கு கிரிக்கெட் விருப்பம்(passion) என்பதை கடந்து ஒரு கரியராகவும்(career) மாற்றமடைந்துள்ளது.

நல்ல ஊதியம் கிடைப்பதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பயிற்சி முறைகள், டயட் போன்றவை முன்னேற்றம் அடைந்துள்ளன. இது களத்தில் இந்திய அணியின் வெற்றிகளில் எதிரொலிக்கிறது" என்கிறார்.

சரிசமமான ஊதியம், WPL போன்றவை வளர்ச்சிக்கு வித்திட்டாலும், ஆடவர் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் லைம்லைட், பெருந்திரள் ரசிகர் கூட்டத்தில் பாதியை கூட மகளிர் கிரிக்கெட் எட்டவில்லை. ஆனால், இந்த வாதத்தை முழுவதுமாக நிரஞ்சனா நாகராஜன் மறுக்கிறார்.

"நீங்கள், மகளிர் கிரிக்கெட்டை ஆடவர் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுவதே தவறு. மரபியல்ரிதியாக இரு தரப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக மகளிர் ஆட்டத்திலும் இப்போது பெரிய சிக்சர்கள் எல்லாம் பறக்கின்றன. ஊடக வெளிச்சம், ரசிகர்கள் ஆதரவு இல்லை என்பதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நடப்பு உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தை காண 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்(22,843) கவுகாத்தி மைதானத்தில் குவிந்தனர். இந்த எண்ணிக்கையை கடந்த காலங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது." என்றார்.

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹர்மன்பிரீத் கவுர்

அடுத்த பத்தாண்டுகள் எப்படி இருக்கும்?

மகளிர் கிரிக்கெட்டின் சமீபத்திய வளர்ச்சிக்கு பிசிசிஐ அளித்த பங்களிப்பை மறுக்க முடியாது என்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் வித்யுத் சிவராமகிருஷ்ணன். CSK அணிக்காக தோனி தலைமையில் விளையாடிய வித்யுத், 11வது வீரராக களமிறங்கி ரஞ்சி கோப்பையில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.

"கடந்த காலங்களில் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கு சரியான கட்டமைப்பு கிடையாது. ஊதியமும் மிகவும் சொற்பம் என்பதால், யாரும் கிரிக்கெட்டை ஒரு கரியர் வாய்ப்பாக பார்க்கவில்லை. ஆனால், WPL, ஆடவருக்கு இணையான ஊதியம் போன்றவற்றால் நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது.

உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பீல்டிங், உடற்தகுதி போன்றவை கடந்த பத்தாண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் பங்கேற்கும் WPL, இந்திய மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். சமீப காலமாக நட்சத்திர வீராங்கனைகள் மட்டுமன்று உள்ளூர் கிரிக்கெட்டர்களும் WPL இல் முத்திரை பதித்துவருகின்றனர்." என்றார்.

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா நிறைய உலகக்கோப்பைகளை கைப்பற்றும் என்று வித்யுத் சிவராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

"நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்ற அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. பிசிசிஐ தரும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, நவீன கிரிக்கெட்டுக்கு இன்றியமையாத அம்சங்களான பவர் ஹிட்டிங் (power hitting) உள்ளிட்டவற்றை இந்திய மகளிர் கிரிக்கெட்டர்கள் மேம்படுத்திக் கொண்டுவருகிறார்கள்" என்றார்.

அங்கீகாரம் மறுக்கப்பட்டது அந்த காலம்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக கிரிக்கெட் இதழாளராக உள்ள ஆர். மோகனிடம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிப் போக்கு பற்றி பேசினோம். 2006 இல் இந்திய மகளிர் கிரிக்கெட்டை பிசிசிஐ அமைப்பின் கீழ் முறையாக கொண்டுவந்த பிறகே நிலைமை மாறத் தொடங்கியது என்று கூறினார்.

"70–80களில் எல்லாம் மகளிர் கிரிக்கெட்டை யாரும் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். சாந்தா ரங்கஸ்வாமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கிரிக்கெட் வட்டாரம் அறிந்திருந்தது. ஆனால், அவர்களுக்கு பெரியளவில் வாய்ப்புகளை அங்கீகாரமோ கிடைக்கவில்லை. கவாஸ்கர் போன்றவர்கள் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்குவிக்க வேண்டுமென விரும்பினர். ஆனால், நிறுவனங்களின் துணையின்றி தனிநபர்களால் ஓரளவுக்கு மேல் முடியவில்லை. உலகளவில் மகளிர் கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், 2006 இல் பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை அரவணைக்க வழிவகுத்தன. WPL, சரிசமமான சம்பளம் என தற்போது அது உச்சத்தை எட்டியுள்ளது" என்றார்.

நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால், அது இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படும். ரசிகர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யுமா இந்திய அணி?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c5yqv93q634o

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 3 weeks ago
நாளைக்கு பெரும்பாலும் என‌க்கு முட்டை😁 தென் ஆபிரிக்காவை நியுசிலாந் வெல்ல‌ அதிக‌ வாய்பு இருக்கு நியுசிலாந் அணி அவுஸ்ரேலியா வெல்லா விட்டாலும் நியுசிலாந் அணி ந‌ம்பிக்கை த‌ரும் ப‌டி விளையாடின‌வை.........................................

விசேட தேவையுடைய சிறுவர்களின் வாழ்வை மாற்றியமைக்கும் “நம்பிக்கை” நிலையம் அயத்தி

2 months 3 weeks ago

Published By: Digital Desk 3

05 Oct, 2025 | 12:06 PM

image

“வாழ்க்கையே முடிந்தது என எண்ணினேன்…” – விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர்களின் உணர்வுபூர்வ பகிர்வுகள்!

(சரண்யா பிரதாப்)

இலங்கையின் சுகாதார மற்றும் சமூகத் தளத்தில் ஒரு மைல்கல்லாக, விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்ட முதலாவது தேசிய நிலையமான “அயத்தி” (Ayati), பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறது. சமஸ்கிருதத்தில் “நம்பிக்கை” எனப் பொருள்படும் இந்த நிலையம், சவால்களை எதிர்கொள்ளும் சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையம் 2016 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக நிறுவப்பட்டு, 2020 முதல் செயல்பட்டு வருகிறது. களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இராணுவத்தின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையம், இலங்கையின் விசேட தேவையுடைய சமூகத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இந்த நிலையம் கம்பஹா மாவட்டத்தில், ராகமையில் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்குள் அமைந்துள்ளது.

ayati-centre-1.jpg

அயத்தி நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் சேவைகள்

இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஏதேனும் ஒரு விசேட தேவையுடையவராக உள்ளார். உரிய நேரத்தில் கண்டறியப்படாததால், இந்தச் சிறுவர்கள் கல்வி மற்றும் சமூக வாய்ப்புகளில் பின்தள்ளப்படுகிறார்கள். அயத்தி நிலையம் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு , பல்துறை பராமரிப்பை வழங்குவதோடு, இவர்களுக்காக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அயத்தி நிலையத்தில், வைத்திய நிபுணர்களால் ஆரம்ப பரிசோதனைகள், பேச்சு மற்றும் மொழி சிகிச்சை, ஒலியியல் (audiology), இயன்முறை மருத்துவம் (physiotherapy) மற்றும் தொழிற்பாட்டு சிகிச்சை (occupational Therapy) எனப் பல்துறை சிகிச்சை வழங்கப்படுகிறது. இங்கு இலங்கையின் முதலாவது உணர்திறன் அறை மற்றும் நவீன மறுவாழ்வு வசதிகள் உள்ளன. தலைமை நிறைவேற்று அதிகாரியன பிரபல வரத்தகர் தனஞ்சய் ராஜபக்ஷ கூறுகையில், இதுவரை 14,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயனடைந்துள்ளனர். எனினும், மருத்துவர்களின் புலம்பெயர்வு, மருத்துவ உபகரணங்களின் அதிக செலவு போன்ற சவால்களை எதிர்கொள்வதாகவும், அவசர தேவைகளுக்கு 30 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பெற்றோர்களின் மனமுருகும் அனுபவங்கள்

அயத்தி நிலையம், விசேட தேவையுடைய குழந்தைகளின் பெற்றோர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சில பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

“எனது மகள் ஆன்யா, 33 வாரத்தில் பிறந்தாள். வைத்தியர்கள் அவளுக்கு மூளை வாதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். அப்போது என் வாழ்க்கை முடிந்தது போல உணர்ந்தேன். கடும் மன அழுத்தத்துக்குள்ளானேன். குழந்தையைக் கொன்றுவிட்டு நானும் இறந்துவிடலாம் என நினைத்தேன்.” என தாயாரான டான்யா அரச குலசேகர கூறினார். ஆனால் 2019ல் ஆன்யாவை ‘அயத்தி’க்கு கொண்டு சென்றபின், அவள் ஓரளவு முன்னேற்றம் அடைந்தாள். இன்று ஆன்யா படுக்கையிலேயே இருப்பாள் என நினைத்த இடத்திலிருந்து, நிகழ்வுகள், திருமணங்களில் கலந்துகொள்கிறாள். குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் அவளது நிலையை புரிந்து ஆதரவு வழங்குகின்றனர்; அவளை ஒரு சாதாரணக் குழந்தையாகவே நடத்துவதாக தெரிவித்தார்.

2.jpg

ராகமையில் வசிக்கும் சானிக்கா ருவன்குமாரி, தனது மகள் நிஷாலி ஏஞ்சலி. அவளுக்கு தற்போது 8 வயது. அவள் விசேட தேவையுடைய குழந்தை தெரிந்து, அயத்தி நிலையத்துக்கு வந்ததாகவும், இங்குள்ள வைத்தியர்கள் அளித்த ஊக்கம் மிகுந்த உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார். சமூகத்தில் களங்கம் ஏற்படுத்துவது போன்று பேசுவது இன்னும் சவாலாக உள்ளன. “சில நேரங்களில் பலர் கேள்விகள் கேட்கிறார்கள் அல்லது கருத்துகள் தெரிவிக்கிறார்கள். அப்போது, அவளுக்கு சிறிய நோய் உள்ளது என நாங்கள் விளக்குகிறோம். அவள் சாதாரண வாழ்க்கையிலேயே வாழ்கிறாள்; அதைப் பாதுகாக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.”தற்போது என் மகள் முன்பள்ளிக்குச் செல்கிறாள், அங்கே இரண்டு பதக்கங்களையும் வென்றுள்ளாள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

தனது மூன்றாவது மகள் செலோமி செமாயா, மனவளர்ச்சி குன்றி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தபோது கவலை அடைந்ததாக வினிதா நில்மினி தெரிவித்தார். ஆனால், அயத்தியிலுள்ள வைத்தியர்கள் ஆறுதல் கூறியதாகவும், அது தனக்கு நம்பிக்கையை அளித்ததாகவும் தெரிவித்தார். “என் பிள்ளையை சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என ஒரு தந்தை அறிவுரை வழங்கினார். அப்போதுதான், பிள்ளைகளை வீட்டுக்குள் மட்டும் வைத்திருக்கக் கூடாது, அவர்கள் சமூகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்,” என்றார்.

ராகமையில் வசிக்கும் தரிந்து சேனாதித், தனது 5 வயது மகள் லிடியா யொஹானி, தனது ஆறாவது குழந்தை என்றும், ஏனைய  ஐந்து குழந்தைகளும் பிறந்து இறந்ததாகவும் தெரிவித்தார். தனது மகள் மனவளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தபோது மிகவும் மனமுடைந்ததாகவும், ஆனால் அயத்தியில் பெற்ற சிகிச்சைகள் மற்றும் மனதளவில் கிடைத்த ஆதரவு, அவளை தற்போது சுயமாகச் செயல்பட வைத்துள்ளது என்றும் தெரிவித்தார். “அயத்தியின் பணியாளர்கள் எங்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள். நாங்கள் சந்திக்கும் மன அழுத்தங்களை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். சிகிச்சையளிக்கும் நிபுணர்களுடன் உள்ள உறவு மிகவும் வலிமையானதும் முக்கியமானதுமாக உள்ளது. எங்களுக்கும் எங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு அவர்கள் முழுமையாக பாடுபடுகிறார்கள் என்றார்.

இந்த உணர்வுபூர்வமான பகிர்வுகள், அயத்தி நிலையத்தின் தேவை, அதன் முக்கியத்துவம் மற்றும் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும் சக்தி ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. மன அழுத்தம், சமூகத் தயக்கம், மற்றும் களங்கம் போன்ற சவால்களை இந்த மையம் பெற்றோர்களிடமிருந்து களைகிறது. இந்த முயற்சிகள், இலங்கையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதோடு, உள்ளடங்கிய சமூகத்தையும் உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளன.

பலவகையான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக அயத்தி நிலையம் திகழ்வதோடு, சுமார் 200 இளங்கலை மாணவர்கள் தற்போது மருத்துவப் பயிற்சியை பெறுகின்றனர். அயத்தி நிலையத்துக்கு தூர பிரதேசங்களில் இருந்து சிகிச்சைக்கு வருகை தருபவர்களுக்கு போக்குவரத்து செலவு மற்றும் உணவு வழங்கப்படுகிறது. இதேவேளை, அயத்தி நிலையத்தை புனரமைத்தல் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக தற்போது 30 மில்லியன் ரூபா தேவைப்படும் நிலையில், அயத்தி நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து உதவியை எதிர்பார்த்து நிற்கின்றது.

மேலதிக தகவல்களுக்கு ; www.ayati.lk

தொடர்புகளுக்கு ; +94 11 7878501

https://www.virakesari.lk/article/226933

விசேட தேவையுடைய சிறுவர்களின் வாழ்வை மாற்றியமைக்கும் “நம்பிக்கை” நிலையம் அயத்தி

2 months 3 weeks ago
Published By: Digital Desk 3 05 Oct, 2025 | 12:06 PM “வாழ்க்கையே முடிந்தது என எண்ணினேன்…” – விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர்களின் உணர்வுபூர்வ பகிர்வுகள்! (சரண்யா பிரதாப்) இலங்கையின் சுகாதார மற்றும் சமூகத் தளத்தில் ஒரு மைல்கல்லாக, விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்ட முதலாவது தேசிய நிலையமான “அயத்தி” (Ayati), பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வருகிறது. சமஸ்கிருதத்தில் “நம்பிக்கை” எனப் பொருள்படும் இந்த நிலையம், சவால்களை எதிர்கொள்ளும் சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையம் 2016 ஆம் ஆண்டு அறக்கட்டளையாக நிறுவப்பட்டு, 2020 முதல் செயல்பட்டு வருகிறது. களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், மாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இராணுவத்தின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையம், இலங்கையின் விசேட தேவையுடைய சமூகத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த நிலையம் கம்பஹா மாவட்டத்தில், ராகமையில் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்குள் அமைந்துள்ளது. அயத்தி நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் சேவைகள் இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஏதேனும் ஒரு விசேட தேவையுடையவராக உள்ளார். உரிய நேரத்தில் கண்டறியப்படாததால், இந்தச் சிறுவர்கள் கல்வி மற்றும் சமூக வாய்ப்புகளில் பின்தள்ளப்படுகிறார்கள். அயத்தி நிலையம் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு , பல்துறை பராமரிப்பை வழங்குவதோடு, இவர்களுக்காக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அயத்தி நிலையத்தில், வைத்திய நிபுணர்களால் ஆரம்ப பரிசோதனைகள், பேச்சு மற்றும் மொழி சிகிச்சை, ஒலியியல் (audiology), இயன்முறை மருத்துவம் (physiotherapy) மற்றும் தொழிற்பாட்டு சிகிச்சை (occupational Therapy) எனப் பல்துறை சிகிச்சை வழங்கப்படுகிறது. இங்கு இலங்கையின் முதலாவது உணர்திறன் அறை மற்றும் நவீன மறுவாழ்வு வசதிகள் உள்ளன. தலைமை நிறைவேற்று அதிகாரியன பிரபல வரத்தகர் தனஞ்சய் ராஜபக்ஷ கூறுகையில், இதுவரை 14,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயனடைந்துள்ளனர். எனினும், மருத்துவர்களின் புலம்பெயர்வு, மருத்துவ உபகரணங்களின் அதிக செலவு போன்ற சவால்களை எதிர்கொள்வதாகவும், அவசர தேவைகளுக்கு 30 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பெற்றோர்களின் மனமுருகும் அனுபவங்கள் அயத்தி நிலையம், விசேட தேவையுடைய குழந்தைகளின் பெற்றோர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சில பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். “எனது மகள் ஆன்யா, 33 வாரத்தில் பிறந்தாள். வைத்தியர்கள் அவளுக்கு மூளை வாதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். அப்போது என் வாழ்க்கை முடிந்தது போல உணர்ந்தேன். கடும் மன அழுத்தத்துக்குள்ளானேன். குழந்தையைக் கொன்றுவிட்டு நானும் இறந்துவிடலாம் என நினைத்தேன்.” என தாயாரான டான்யா அரச குலசேகர கூறினார். ஆனால் 2019ல் ஆன்யாவை ‘அயத்தி’க்கு கொண்டு சென்றபின், அவள் ஓரளவு முன்னேற்றம் அடைந்தாள். இன்று ஆன்யா படுக்கையிலேயே இருப்பாள் என நினைத்த இடத்திலிருந்து, நிகழ்வுகள், திருமணங்களில் கலந்துகொள்கிறாள். குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் அவளது நிலையை புரிந்து ஆதரவு வழங்குகின்றனர்; அவளை ஒரு சாதாரணக் குழந்தையாகவே நடத்துவதாக தெரிவித்தார். ராகமையில் வசிக்கும் சானிக்கா ருவன்குமாரி, தனது மகள் நிஷாலி ஏஞ்சலி. அவளுக்கு தற்போது 8 வயது. அவள் விசேட தேவையுடைய குழந்தை தெரிந்து, அயத்தி நிலையத்துக்கு வந்ததாகவும், இங்குள்ள வைத்தியர்கள் அளித்த ஊக்கம் மிகுந்த உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார். சமூகத்தில் களங்கம் ஏற்படுத்துவது போன்று பேசுவது இன்னும் சவாலாக உள்ளன. “சில நேரங்களில் பலர் கேள்விகள் கேட்கிறார்கள் அல்லது கருத்துகள் தெரிவிக்கிறார்கள். அப்போது, அவளுக்கு சிறிய நோய் உள்ளது என நாங்கள் விளக்குகிறோம். அவள் சாதாரண வாழ்க்கையிலேயே வாழ்கிறாள்; அதைப் பாதுகாக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.”தற்போது என் மகள் முன்பள்ளிக்குச் செல்கிறாள், அங்கே இரண்டு பதக்கங்களையும் வென்றுள்ளாள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார். தனது மூன்றாவது மகள் செலோமி செமாயா, மனவளர்ச்சி குன்றி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தபோது கவலை அடைந்ததாக வினிதா நில்மினி தெரிவித்தார். ஆனால், அயத்தியிலுள்ள வைத்தியர்கள் ஆறுதல் கூறியதாகவும், அது தனக்கு நம்பிக்கையை அளித்ததாகவும் தெரிவித்தார். “என் பிள்ளையை சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என ஒரு தந்தை அறிவுரை வழங்கினார். அப்போதுதான், பிள்ளைகளை வீட்டுக்குள் மட்டும் வைத்திருக்கக் கூடாது, அவர்கள் சமூகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்,” என்றார். ராகமையில் வசிக்கும் தரிந்து சேனாதித், தனது 5 வயது மகள் லிடியா யொஹானி, தனது ஆறாவது குழந்தை என்றும், ஏனைய ஐந்து குழந்தைகளும் பிறந்து இறந்ததாகவும் தெரிவித்தார். தனது மகள் மனவளர்ச்சியில் பின்தங்கி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தபோது மிகவும் மனமுடைந்ததாகவும், ஆனால் அயத்தியில் பெற்ற சிகிச்சைகள் மற்றும் மனதளவில் கிடைத்த ஆதரவு, அவளை தற்போது சுயமாகச் செயல்பட வைத்துள்ளது என்றும் தெரிவித்தார். “அயத்தியின் பணியாளர்கள் எங்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள். நாங்கள் சந்திக்கும் மன அழுத்தங்களை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். சிகிச்சையளிக்கும் நிபுணர்களுடன் உள்ள உறவு மிகவும் வலிமையானதும் முக்கியமானதுமாக உள்ளது. எங்களுக்கும் எங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு அவர்கள் முழுமையாக பாடுபடுகிறார்கள் என்றார். இந்த உணர்வுபூர்வமான பகிர்வுகள், அயத்தி நிலையத்தின் தேவை, அதன் முக்கியத்துவம் மற்றும் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும் சக்தி ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. மன அழுத்தம், சமூகத் தயக்கம், மற்றும் களங்கம் போன்ற சவால்களை இந்த மையம் பெற்றோர்களிடமிருந்து களைகிறது. இந்த முயற்சிகள், இலங்கையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதோடு, உள்ளடங்கிய சமூகத்தையும் உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளன. பலவகையான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக அயத்தி நிலையம் திகழ்வதோடு, சுமார் 200 இளங்கலை மாணவர்கள் தற்போது மருத்துவப் பயிற்சியை பெறுகின்றனர். அயத்தி நிலையத்துக்கு தூர பிரதேசங்களில் இருந்து சிகிச்சைக்கு வருகை தருபவர்களுக்கு போக்குவரத்து செலவு மற்றும் உணவு வழங்கப்படுகிறது. இதேவேளை, அயத்தி நிலையத்தை புனரமைத்தல் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக தற்போது 30 மில்லியன் ரூபா தேவைப்படும் நிலையில், அயத்தி நன்கொடையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து உதவியை எதிர்பார்த்து நிற்கின்றது. மேலதிக தகவல்களுக்கு ; www.ayati.lk தொடர்புகளுக்கு ; +94 11 7878501 https://www.virakesari.lk/article/226933

கேரளாவில் 9 மாதங்களில் 21 உயிர்களைப் பறித்த மூளையைத் தின்னும் அமீபா: பிபிசி தமிழ் களஆய்வு!

2 months 3 weeks ago
படக்குறிப்பு, அமீபா பாதிப்பால் உயிரிழந்த ராம்லா மற்றும் ஷாஜி கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வந்ததும், வீட்டிலிருந்து நடந்து சென்றுதான் அதில் ஏறினார். அங்கே நடந்த பரிசோதனையில்தான் இந்த தொற்று பாதிப்பு தெரியவந்தது. பல நாட்கள் நினைவு திரும்பாமலே இருந்த அவர் அங்கேயே இறந்து விட்டார். நடந்து சென்றவரை சடலமாகத்தான் திரும்பக் கொண்டுவந்தோம்!'' அதற்கு மேல் பேசமுடியாமல் வெடித்து அழத்தொடங்கினார் பிந்து. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று பாதிப்பால் செப்டம்பர் 10-ஆம் தேதி இறந்துபோன 48 வயது கூலித்தொழிலாளி ஷாஜியின் மனைவி அவர். கடந்த ஆண்டில் அமீபா தொற்று பாதிப்புக்கு 39 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் இறந்தநிலையில், இந்த ஆண்டில் 9 மாதங்களுக்குள் (செப்டெம்பர் 30 வரை) 80 பேர் பாதிப்புக்குள்ளாகி 21 பேர் உயிரிழந்துள்ளனர். நீர்நிலைகளில் உருவாகும் இந்த ஒற்றை அணு உயிரியான அமீபா, அசுத்தமான நீரைப்பயன்படுத்தும்போது மூக்கின் வழியாக உடலில் நுழைந்து, மூளையைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர். இதுதொடர்பாக கேரளாவில் பிபிசி களஆய்வு செய்ததில், இந்த தொற்று பாதித்ததை உடனடியாக அறியாத காரணத்தால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. படக்குறிப்பு, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தொற்று பாதிப்பைத் தடுக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தொற்று பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை வேகப்படுத்தி உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். உலகில் இதுவரை சுமார் 400 வகையான அமீபாக்களை கண்டறிந்துள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதில் ஆறு வகைகள் மட்டுமே மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றில் நேக்ளீரியா ஃபவ்லெரி மற்றும் எகாந்தாமீபா என்கிற இரண்டும் மூளைத்தொற்றை உண்டாக்கக் கூடியவை என்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள். மூளையை தின்னும் நேக்ளீரியா ஃபவ்லெரி அமீபா –ஒரு விளக்கம்! படக்குறிப்பு, நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை உலகளவில் 1962 முதல் இன்று வரை 488 நபர்களுக்கு மட்டுமே மூளையை தின்னும் அமீபா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக சயின்ஸ் டிரைக்ட் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. அதிலும் அமெரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில்தான் அதிகபட்சமாக இதில் 95 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்று இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. பிபிசி தமிழிடம் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் பகிர்ந்த தகவலின்படி, நேக்ளீரியா ஃபவ்லெரி (Naegleria fowleri), எகாந்தாமீபா (Acanthamoeba), சாப்பினியா (Sappinia), பாலமுத்தியா (Balamuthia), வெர்மீபா (Vermeeba) என 5 வகையான அமீபா பாதிப்புகள் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நேக்ளீரியா ஃபவ்லெரி எனப்படும் அமீபாதான், உயிரிழப்பை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் கேரளாவில் 39 பேருக்கு இந்தத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு 9 பேர் இறந்தனர். உயிரிழப்பு விகிதம் 23 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் செப்டம்பர் 30 வரை, 80 பேர் இந்த தொற்று பாதிப்புக்குள்ளானதில் 21 பேர் இறந்துள்ளதாக பிபிசி தமிழிடம் கேரள சுகாதாரத்துறை தகவல் தந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 25 சதவீதம் என்ற அளவிலேயே இருப்பினும், நீர்நிலைகள் சார்ந்த இந்த அமீபா தொற்று பாதிப்பும், அதனால் ஏற்படும் மரணங்களும் உலகளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த ஆண்டு எகாந்தாமீபா பாதிப்பு தான் அதிகமாக உள்ள நிலையில் நேக்ளீரியா ஃபவ்லெரி தொற்று ஏற்பட்டவர்களில் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிபிசி கள ஆய்வில் தெரிய வந்தது என்ன? படக்குறிப்பு, மருத்துவ அலுவலர் மருத்துவர் ரேணுகா இந்நிலையில் கேரளாவில் இந்த தொற்று நோயின் பாதிப்பு குறித்து அறிவதற்காக பிபிசி தமிழ் களஆய்வு மேற்கொண்டது. மலப்புரம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் இந்த தொற்று காரணமாக இறந்தவர்கள் மற்றும் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசியது. கேரளாவில் 14 மாவட்டங்கள் இருக்கும் நிலையில், மலப்புரம் மாவட்டத்தில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 17 பேர் இந்த தொற்று பாதிப்புக்கு உள்ளானதில் 5 பேர் மரணமடைந்திருப்பதாக மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் ரேணுகா தெரிவித்தார். அவர்களில் ஒருவர்தான் மலப்புரம் மாவட்டம் கண்ணமங்கலம் கிராம ஊராட்சிக்குட்பட்ட வேங்கரா என்ற பகுதியைச் சேர்ந்த ரம்லா (வயது 52). பிபிசி தமிழிடம் பேசிய ரம்லாவின் மகள் ரெஹானத், ''அம்மாவுக்கு தலைவலி, ஜலதோஷம் அதிகமாக இருந்தது. காய்ச்சலும் வந்தது. முதலில் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடமும், அதன்பின் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றோம். ஜலதோஷம் குறையாததால் கோழிக்கோடு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குப் பரிந்துரைத்தனர்.'' என்றார். படக்குறிப்பு, ரம்லாவின் மகள் ரெஹானத் ''ஆகஸ்ட் 5 அன்று அங்கு சேர்த்தோம். தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்து ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் என பல பரிசோதனைகள் எடுத்தனர். ஆனால் சிஎஸ்எஃப் டெஸ்ட் எடுத்த பின்பே இது உறுதி செய்யப்பட்டது. தொற்று நீக்க மருந்தை உட்கொண்டதும் அவருக்கு வாந்தி, நடுக்கம் ஏற்பட்டதால் மருந்து நிறுத்தப்பட்டது. மீண்டும் சிஎஸ்எஃப் டெஸ்ட் எடுத்து, மருந்தைத் தொடர்ந்தனர். ஆனால் கடைசி பாட்டில் மருந்து ஏறும்போதே இதயத்துடிப்பு அதிகமாகி, ஆகஸ்ட் 30 அன்று இரவு உயிரிழந்து விட்டார்.'' என்றார். ரம்லாவுக்கு லேசான இதய பாதிப்பு இருந்ததையும், வீட்டிற்கு அருகிலுள்ள குளத்தில் குளிப்பது, துவைப்பது போன்ற செயல்களில் அன்றாடம் ஈடுபட்டு வந்ததையும் அவருடைய குடும்பத்தினர் உறுதி செய்தனர். காப்பில் குளம் என்ற அந்த குளத்தை பிபிசி தமிழ் நேரில் பார்த்தபோது, அங்கு கண்ணமங்கலம் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் ஓர் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில், ''மூக்கின் வழியாக உடலுக்குள் சென்று உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அமீபா இக்குளத்தில் இருப்பதாக சுகாதாரக்குழு கண்டறிந்துள்ளது. அதனால் இங்கே குளிப்பது, முகம் கழுவுவது, மீன் பிடிப்பது, வாகனம் கழுவுவது, கால்நடைகளை குளிக்க வைப்பது போன்ற செயல்களைத் தவிர்க்கவும். அப்படிச் செய்தால் உடலுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு, மயக்கநிலை போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும்.'' என்று கூறப்பட்டுள்ளது. ''அச்சமும் வேண்டாம்; அஜாக்கிரதையும் வேண்டாம்!'' படக்குறிப்பு, ரம்லாவின் கணவர் முகம்மது பஷீர் அச்சம் வேண்டாமென்றும் அதே நேரத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்றும் மக்களுக்கு அந்த அறிவிப்பு அறிவுறுத்தியுள்ளது. ரம்லாவுக்கு மூளை தின்னும் அமீபா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்பே, அந்த எச்சரிக்கை வைக்கப்பட்டதாக தெரிவித்த கிராமத்தினர், அதற்கு முன்பு வரையிலும் அதில்தான் எல்லோரும் குளித்து, துவைத்து வந்ததையும் வீடியோக்களுடன் பகிர்ந்தனர். பிபிசி தமிழிடம் பேசிய ரம்லாவின் கணவர் முகம்மது பஷீர், ''நாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும் காலத்திலிருந்து இந்த குளத்து நீரைத்தான் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தி வந்தோம். இரவு வரையிலும் அங்கே குழந்தைகள் குளிப்பார்கள். எனது மனைவி அந்த குளத்திலும், குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்காலிலும் துணி துவைப்பார். அவருக்கு மட்டும் இந்த அமீபா தொற்று பாதிப்பு எப்படி வந்தது என்பதை எங்களால் அறியமுடியவில்லை.'' என்றார். இந்த உயிரிழப்புகளால் கேரளா முழுவதும் நீர்நிலைகள் மீதான அரசின் கவனம் திரும்பியுள்ளது. அரபிக்கடலும், மேற்குத் தொடர்ச்சி மலையும் பின்னிப் பிணைந்துள்ள அழகான இயற்கை அமைப்பைக் கொண்டுள்ள கேரளாவிலுள்ள குளங்களும், கிணறுகளும் பெரும்பான்மையான கேரள மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகமுக்கிய அங்கம் வகிக்கின்றன. மொத்தம் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ள கேரளாவில் 55 ஆயிரம் குளங்களும், 55 லட்சம் கிணறுகளும் இருக்கின்றன. குளிப்பது, துவைப்பது, மீன் பிடிப்பது என லட்சக்கணக்கான மக்கள் இவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் பல இடங்களில் உள்ள நீர்நிலைகள் மாசடைந்திருப்பதால் இத்தகைய அமீபாக்கள் தோன்றுவதாகக் கூறப்பட்டாலும் இவையனைத்தையும் 'ஆபத்தான நீர்நிலைகள்' என்று தடை செய்வது சாத்தியமில்லை என்றனர் பிபிசியிடம் பேசிய கேரள உள்ளாட்சிப் பிரதிநிதிகள். படக்குறிப்பு, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவு இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தில் 27 லட்சம் கிணறுகள் குளோரின் மூலமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. பொது சுகாதாரச் சட்டத்தின்படி நீச்சல் குளங்கள், வாட்டர் தீம் பார்க் மற்றும் மேல்நிலை நீர்த்தொட்டிகளை குளோரினேஷன் செய்வதற்கும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் குளங்களில் மீன்கள் இருப்பதால் குளோரினேஷன் தவிர்க்கப்படுகிறது. கேரளாவில் 5 வகையான அமீபாக்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மண்ணிலும் இருக்கும் எகாந்தாமீபா தொற்று பாதிப்பே அதிகமிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ''தேங்கிய அசுத்தமான தண்ணீரில்தான் இந்த அமீபா உற்பத்தியாகிறது. அதில் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் இந்த அமீபா மூக்கின் வழியே மூளைக்குள் சென்று உயிருடன் இருந்து மூளையிலுள்ள திசுக்களை அழிக்கிறது. கிணற்றில் குளித்தவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சிலருக்கு முகத்தில் வேகமாகத் தண்ணீரை அடித்துக்கழுவும் பழக்கம் உள்ளது. அதேபோன்று மாற்று மருத்துவமுறையில் மூக்கின் ஒருபுறத்தில் உப்புத்தண்ணீரை ஊற்றி மறுபுறத்தில் வெளியேற்றி சுத்தம் செய்வதும் வழக்கமாகவுள்ளது. இவையிரண்டுமே ஆபத்தானவை.'' என்றார் மாவட்ட மருத்துவ அலுவலர் ரேணுகா. மூளையை தின்னும் அமீபா தொற்று பாதிப்பின் அறிகுறிகள்! படக்குறிப்பு, கேரள நீர் நிலைகள் பிபிசி தமிழிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அலுவலர்கள் பலரும், இதுவரை காதின் வழியாக இத்தகைய அமீபா உடலுக்குள் சென்றதாக எந்தத் தகவலும் இல்லை என்றனர். அதேபோன்று இந்த அமீபா தொற்று பாதிப்பின் அறிகுறிகளையும் அவர்கள் விளக்கினர். இந்த தொற்று பாதித்த 5லிருந்து 10 நாட்களுக்குள் இத்தகைய அறிகுறிகள் ஏற்படுமென்கின்றனர். கடுமையான தலைவலி ஏற்படும்; கழுத்தைத் திருப்பவே முடியாது. வெளிச்சத்தைப் பார்க்கமுடியாது. வாந்தி, காய்ச்சல் வரும். உடல் சோர்வு அதிகமாக இருக்கும். வலிப்பு, நடுக்கம் சிலருக்கு ஏற்படும். இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளால் சாப்பிடவே இயலாது. குளம், கிணறுகளில் மட்டுமின்றி அசுத்தமான நீர் எங்கிருந்தாலும் அது அமீபா ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார் தொற்றுநோய் நிபுணர் அனீஷ். மலப்புரம் மாவட்டம், சேலேம்பரா புள்ளிப்பரம்பாவைச் சேர்ந்த ஷாஜி (48) என்ற கூலித் தொழிலாளியும் இதே அமீபா தொற்று பாதிப்பால் கடந்த செப்டம்பர் 10 அன்று மரணமடைந்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய ஷாஜியின் மனைவி பிந்து, ''ஆகஸ்ட் 9 அன்று அவருக்கு வலிப்பு வந்தது. ஆம்புலன்ஸ் வந்தபோது, அவரே நடந்து சென்று ஏறினார். கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்த பின் அவருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் சிஎஸ்எஃப் டெஸ்ட்டில் அமீபா தொற்று உறுதியானது. நினைவிழந்த நிலையில் ஆகஸ்ட் 14 அன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு இறுதிவரை நினைவு திரும்பவேயில்லை.'' என்றார். ஷாஜியின் தாயார் விஜயகுமாரி, தன் மகனுக்கு இந்த தொற்று பாதிப்பு எப்படி வந்தது என்பதே தெரியவில்லை என்கிறார். கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்தான் இந்த நோய்க்கான சிகிச்சை வசதிகள் அதிகமிருப்பதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அந்த மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். அங்கு அமீபா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு வார்டு (எண்:43) செயல்படுவதை பிபிசி தமிழ் நேரில் கண்டறிந்தது. அந்த வார்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, ஷாஜியின் தாயார் விஜயகுமாரி அமீபா தொற்று பாதிப்பை கண்டறியும் சிஎஸ்எஃப் பரிசோதனை! மூளையை தின்னும் அமீபாவான நேக்ளீரியா ஃபவ்லெரியைக் கண்டறிவதற்கு, சிஎஸ்ஃஎப் எனப்படும் பரிசோதனை முறை ((CSF-Cerebrospinal fluid) கையாளப்படுகிறது. இதில் தண்டுவடத்திலுள்ள நீரை மாதிரியாக எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. திரூரில் உள்ள ஷிகாப்தங்கள் கூட்டுறவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கண்காணிப்பாளர் மற்றும் அவசர மருந்துகள் பிரிவின் தலைவர் அல்தாப் கன்னத், இதைப்பற்றி பிபிசியிடம் விளக்கினார். ''தண்டுவடத்திலுள்ள நீர் மாதிரியை எடுத்து அதிலிருந்து பல்வேறு உடற்கூறு பாதிப்புகளை அறியமுடியும். இந்த தொற்று பாதித்தவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும். குளுக்கோஸ் அளவு குறையும். சிலருக்கு புரோட்டீன் அளவு அதிகரிக்கும். இந்த பாதிப்பு வந்ததும் 5 நாட்களுக்குள் வந்து விட்டால் சிகிச்சையை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.'' என்றும் மேலும் விளக்கினார் மருத்துவர் அல்தாப் கன்னத். ''இந்த அமீபா, கேரளாவில் அதிகமாகவுள்ள குளங்கள், கிணறுகள், ஆறுகள் போன்ற இடங்களில் வெப்பம் நிறைந்த தேங்கிய நீரில்தான் உற்பத்தியாகிறது. குறிப்பாக குழந்தைகளையும், இளம் மற்றும் நடுத்தர வயதினரை இது அதிகம் பாதிக்கிறது. இந்த தொற்று பாதித்தால் 97 சதவீதம் மரணம் சம்பவிக்க வாய்ப்புள்ளதால் வருமுன் இதைத்தடுப்பதே சிறந்தது. தொற்று பாதிப்பில் 3 கட்டங்கள் உள்ளன. அதில் முதற்கட்டத்தில் கண்டறிந்து விட்டால் சிகிச்சையளித்து காப்பாற்ற முடியும்.'' என்றார் மருத்துவர் அல்தாப். பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியைச் சேர்ந்த 28 வயது சிவில் இன்ஜினியர் ஸ்ரீஹரிக்கு, இந்த தொற்று பாதிப்பு தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சிஎஸ்எஃப் பரிசோதனையில் உடனே கண்டறியப்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு உடனே இதற்கான சிகிச்சையைத் துவக்கியதால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். படக்குறிப்பு, ஸ்ரீஹரியின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீஹரியின் சகோதரர் கோபாலகிருஷ்ணன், ''எனது தம்பிக்கு ஒரு நாள் கடுமையான தலைவலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்குச் சென்று மாத்திரை சாப்பிட்டதும் வலி குறைந்தது. மறுநாளும் தலைவலித்தது. மறுநாளும் அதே மருந்து எடுக்கப்பட்டது. மூன்றாவது நாளில் தலைவலியுடன் வாந்தியும் வந்தது. உடனே வாணியம்குளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கே இந்த அமீபா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின் கோழிக்கோடு மருத்துவமனையில் உடனே சேர்த்து சிகிச்சை அளித்ததில் அவர் தற்போது நலமாக இருக்கிறார்.'' என்றார் கோபாலகிருஷ்ணன். இதுவரை இந்த தொற்று பாதிப்பால் 21 பேர் இறந்திருந்தாலும், கேரளா மக்களிடம் பரவலாக இதுகுறித்த அச்சமும், விழிப்புணர்வும் இல்லை என்பது, பல்வேறு பகுதி மக்களிடமும் பேசியதில் தெரியவந்தது. கோழிக்கோடு ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், மக்களுக்கு இதைப்பற்றி எதுவும் தெரிவதுமில்லை, அச்சமும் இல்லை என்றனர். திரூரைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரியாஸ், ''டிவி செய்திகளில் பார்த்தே மக்கள் இதைப்பற்றித் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் மக்களுக்கு இதுபற்றி விழிப்புணர்வு எதுவுமில்லை.'' என்றார். அமீபா தொற்று பாதிப்பும் கேரள அமைச்சரின் பதிலும்! மூளையை தின்னும் அமீபா தொற்று பாதிப்பைக் கண்டறியும் வழிமுறை, இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான சிகிச்சை நெறிமுறைகள், விரைவாக தொற்று பாதிப்பைக் கண்டறிவதில் உள்ள சவால்கள், அமீபா உற்பத்தியாகும் இடங்களைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜிடம் சில கேள்விகளை பிபிசி முன் வைத்தது. அதற்கு பதிலளித்த அமைச்சர் வீணா ஜார்ஜ், ''கடந்த 2 ஆண்டுகளில் கேரளாவில் 115 பேருக்கு அமீபா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டதில் 11 பேருக்கு மட்டுமே நேக்ளீரியா ஃபவ்லேரி அமீபா காரணமாக இருந்தது. மற்றவர்களுக்கு எக்காந்தாமீபாவே காரணமாயிருந்தது. நேக்ளீரீயா ஃபவ்லெரி ஊடுருவும் காலம் (incubation) 7லிருந்து 14 நாட்களுக்குள் என்பதால் இந்த பாதிப்பை விரைவாகக் கண்டறியமுடியும்.'' என்றார். ''கடந்த 2024 ஜூலை மாதம் கேரள அரசு வெளியிட்ட அமீபிக் மென்னிங்கோஎன்செப்லைடிஸ் (Amoebic meningoencephalitis) நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை தொழில்நுட்ப வழிகாட்டுதலின் அடிப்படையில் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவாக தொற்று பாதிப்பைக் கண்டறிந்து உடனே சிகிச்சையைத் துவங்குவதே இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் முக்கிய அம்சமாகவுள்ளது.'' என்றும் அவர் மேலும் விளக்கினார். கடந்த ஆண்டில் அரசுக்குக் கிடைத்த தரவுகளின்படி, அனைத்து அமீபா தொற்று நோயாளிகளுக்கும் குளம் போன்ற நீர்நிலைகளில் நீந்திய அனுபவமில்லை என்று தெரியவந்ததால், வழக்கமான ஆபத்து அறிகுறிகள் இல்லாவிடினும் அமீபா தொற்று பாதிப்பு சந்தேகத்துக்கிடமாகவுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் அமீபா பரிசோதனை கட்டாயமாக்கும் முறையில் மாநில வழிகாட்டுதல் நெறிமுறைகள் திருத்தப்பட்டதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். மாநிலத்திலுள்ள சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் சிகிச்சைக் கண்காணிப்பு முறை (active surveillance) சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ''சிஎஸ்எஃப் பரிசோதனையில் மூளைச்சுரப்பியில் உயிருடன் ஒற்றை உயிரணு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், மூலக்கூறு பரிசோதனைகள் (molecular methods) மூலம் அதன் வகைத்தன்மை உறுதி செய்யப்பட்டு, அதற்கேற்ப சிகிச்சை திட்டம் மாற்றப்படுகிறது.'' என்றார். கோவிட், நிஃபா, பறவைக்காய்ச்சல், அமீபா என அடுத்தடுத்து தாக்குதலுக்குள்ளாகும் கேரளா இவற்றை எப்படி எதிர்கொள்கிறது என்ற கேள்விக்கு, ''கேரளாவின் பலம், சுகாதாரத்துறையின் செயல்திட்டங்களில் உள்ள கண்காணிப்பும் (proactive surveillance) புதிய தொற்றுகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் திறனும் சுகாதாரக் கட்டமைப்பும்தான்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crkjp6n6lk6o

சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது

2 months 3 weeks ago
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்! Published By: Vishnu 05 Oct, 2025 | 06:40 PM யாழ்ப்பாணம் - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் ஞாயிற்றுக்கிழமை (5) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு, கைகளில் கறுப்பு கொடிகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன், பொதுமக்கள் மற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226977

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

2 months 3 weeks ago
பாகிஸ்தானுக்கு 248 ரன்கள் இலக்கு; கைகுலுக்க மறுத்த கேப்டன்கள் - பெண்கள் உலகக் கோப்பையில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி 247 ரன்களை சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்காதது சர்ச்சையானதை அடுத்து இன்றைய போட்டியிலும் இது பிரதிபலிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேநிலை மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலும் நீடித்தது. ஆண்கள் அணியைப்போலவே பெண்கள் அணிகளின் கேப்டன்களும் டாஸ்-க்கு பிறகு கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கும், பாத்திமா சனா பாகிஸ்தானுக்கும் கேப்டனாக உள்ளனர். 100 ரன்களை கடந்த இந்தியா: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பிறகு, பேட்டிங் செய்ய வந்த பிரதிகா ராவல், 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த நிலையில் 22 ஓவர் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எட்டியது. அதன்பின் அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் ஹர்லீன் தியோல், ஜெமிமா களத்தில் நிலையாக ஆட்டத்தை வெளிப்படுத்து வந்தனர். அதன்பின் 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 136 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி. அதன்பிறகு விக்கெட் இழப்பின்றி ஆடி வந்தது. ஹர்லீன் தியோல் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையூட்டி வந்தார். இந்த நிலையில் 33வது ஓவரின் முதல் பந்தில் அவரும் விக்கெட்டை பறிகொடுத்தார். 65 பந்துகளில் 46 ரன்களை சேர்த்திருந்தார். ரமீன் ஷமாம் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது நஷ்ரா சாந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த கட்டத்தில இந்திய அணி 154 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது. இடையில் நிறுத்தப்பட்ட போட்டி: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மைதானத்தில் பூச்சிகள் பறந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் மைதானத்தில் வீரர்களின் தலைகளுக்கு மேலே அதிகளவில் பூச்சிகள் பறந்து கொண்டே இருந்ததால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பிறகு மீண்டும் தொடங்கியது. அதன்பின் களமிறங்கிய வீரர்கள் மைதானத்திற்கு திரும்பி ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜெமிமா, தீப்தி சர்மா பார்னர்ஷிப்பில் இந்திய அணி விளையாடி வந்த நிலையில், ஜமிமா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். நஷ்ரா சந்து வீசிய பந்தில் LBW முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவருக்கு பதிலாக வளது கை பேட்டர் சினே ராணா களத்திற்கு வந்தார். 35வது ஓவர் சற்று இந்திய அணிக்கு சற்று சவாலானதாகவே அமைந்தது. ரமாம் வீசிய இந்த ஓவரில் இந்திய அணி 1 ரன் மட்டுமே எடுத்தது. 36வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இந்திய அணி. இதனைத் தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா இணைந்து அணிக்காக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இருவரும் போராடி 43வது ஓவரில் 190 ரன்களை கடக்க உதவினர். இதற்கிடையில் கிரீஸ் கோட்டிற்குள் செல்ல முயன்ற ராணாவிற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 200 ரன்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தீப்தி சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா நிதானமாக விளையாடி வந்த நிலையில் 44.1வது ஓவரில் ராணா அவுட்டானார். 33 பந்துகளில் 20 ரன்கள் விளாசிய நிலையில் ஃபாத்திமா சனா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். பின் அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் களமிறங்கினார். அந்த சமயத்தில் களத்திற்கு ஏற்றவாறு தன்னை ஈடுபடுத்தி கொண்ட தீப்தி சர்மாவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். டையானா வீசிய பந்தை அடிக்க முயன்றபோது சித்ரா நவாஸ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். எனினும் இந்திய அணி 46 ஓவர்களில் 200 ரன்களை கடந்திருந்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. பரபரப்பான இறுதிகட்டம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்தார். பின் ரிச்சா கோஷ் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாச ஆட்டம் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஸ்ரீ சரணி அவுட்டாக அவருக்கு பதிலாக கிராந்தி கவுட் களமிறங்கினார். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார். பின் இன்னிங்ஸின் இறுதியில் ரிச்சாவும் பவுண்டரி விளாச, இவர்களின் பாட்னர்ஷிப் நன்றாகவே அமைந்தது. கடைசி ஓவரை வீச பாகிஸ்தான் அணியில் இருந்து பெய்க் வந்தார். அவர் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கி அனுப்பினார் ரிச்சா. அவர் வீசிய 2வது பந்தை ரிச்சா தூக்கி அடித்தபோது விக்கெட்டுக்கான வாய்ப்பு தென்பட்டது. கேட்சாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு பாகிஸ்தான்ல வீரங்கனைகள் மோதி கேட்சை தவறவிட்டனர். இதனால் ரிச்சாவின் விக்கெட் காப்பாற்றப்பட்டது. ஆனால் இந்த சந்தோஷனம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அதற்கடுத்த சில பந்துகளிலேயே கிராந்தி அவுட்டாக, அதன்பின் வந்த ரேணுகா சிங்கும் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்களை சேர்த்தது. ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்திருந்தார். ப்ளேயிங் XI பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்களை சேர்த்தது. இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் பாகிஸ்தான் அணி: முனீபா அலி, சதாப் ஷம்ஸ், சித்ரா அமீன், அலியா ரியாஸ், நடாலியா பர்வேஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், டயானா பெய்க், சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), நஷ்ரா சந்து, சாடியா இக்பால் -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62qeejmmlmo

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை மாற்றுத்திறனாளி சிறுவன் நீந்தி சாதனை!

2 months 3 weeks ago
பாக்கு நீரிணையை நீந்தி சாதனைப் படைத்த மாற்றுத்திறனாளி சிறுவன்! இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (3) இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனைப் படைத்துள்ளார். பாக்கு நீரிணை பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். இராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் . இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பாக்கு நீரிணையை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மாரத்தான் முறையில் பாக்கு நீரிணையை நீந்தி கடந்துள்ளனர். இந்நிலையில் சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பெரியார் செல்வன், பத்மபிரியா தம்பதியினரின் 12 வயதான புவி ஆற்றல் என்ற சிறுவன் முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவனான புவி ஆற்றல், 2022 ஆண்டு சென்னை, செனாய் நகரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதலோடு தன்னுடைய நீச்சல் பயற்சியை தொடங்கினார். 2024 ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். தலைமன்னார் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக இந்திய - இலங்கை இரு நாட்டு அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். அனுமதி கிடைத்த நிலையில், நீந்துவதற்கு ஊனம் தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கை-தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரினையை கடலை நீந்தி கடப்பதற்காக, சிறுவன் புவி ஆற்றல் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை (3) மதியம் ஒரு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், வைத்தியர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர். இலங்கை தலைமன்னாரில் இருந்து இன்று சனிக்கிழமை அதிகாலை 2.45க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 12 மணி அளவில் தனுஷ்கோடிக்கு சென்றனர். இவர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 9 மணி நேரம் 11 நிமிடத்தில் நீந்தி கடந்தார். அரிச்சல்முனை வந்தடைந்த சிறுவன் புவி ஆற்றல், அவரது தாய் கண்ணீர் மல்க முத்தமிட்டு வரவேற்றார். அதனை தொடர்ந்து சுங்கதுறை கண்காணிப்பாளர், இந்திய மரைன் பொலிஸார் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையிலான பாக்கு நீரிணை 20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.facebook.com/Deranatamil/posts/1362504709212139?ref=embed_post -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmgdg74x300ubo29nl1il8lkg

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

2 months 3 weeks ago

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

Shyamsundar IUpdated: Sunday, October 5, 2025, 10:07 [IST]

TVK Vijay

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, நடிகர் விஜய்யின் கட்சிக்கு பாஜக ஆதரவுக்கரம் நீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பலத்தைப் பயன்படுத்தி வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட நேரத்தில்தான் விஜய்க்கு ஆதரவாக பாஜக களமிறங்க திட்டமிட்டு உள்ளதாம். விஜய் தனியாக இல்லை என்று தமிழக வெற்றிக் கழக (TVK) தலைமைக்கு ஒரு மூத்த பாஜக தலைவர் தகவல் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜகவும் விரும்புவதாகவும், அதற்கு தவெக துணை இருந்தால் சிறப்பாக இருக்கும். இதனால் பொறுமையாக இருக்குமாறு விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சட்ட ரீதியாக சிக்கல்

விஜய்க்கு இந்த வழக்கில் சட்ட ரீதியாக கடுமையாக சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் பாஜக தரப்பு எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் பிரச்சனையை பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் அதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். எங்களுடன் கூட்டணி இல்லை என்றால் நாங்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம், என்று விஜய்க்கு டெல்லி பாஜக தெரிவித்து உள்ளதாம்.

விஜய் முடிவு என்ன?

2026 தேர்தலில் TVK தனித்துப் போட்டியிடும் என்று விஜய் முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால், இந்த புதிய நிகழ்வுகள் அவரது வியூகங்களை மாற்றியமைக்கக்கூடும். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக பாஜக பொறுப்பாளர் ஜே பாண்டா அக்டோபர் 6 ஆம் தேதி மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது அவர் மூத்த கட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்களை சந்திப்பார். அப்போது பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்.

முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை நேற்று டெல்லியில் இருந்தார். அவர் கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அதன் சாத்தியமான விளைவுகள் குறித்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். இதன்பின் வரும் வாரமே கூட்டணியில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

வரவிருக்கும் தேர்தலில் திமுகவுக்கு எதிரான ஆட்சி எதிர்ப்பு அலை உருவாகும் என்று பாஜக தலைமை நம்புகிறது. எனவே, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை ஒருங்கிணைக்க அது முயற்சிக்கிறது. இதில் TVK-க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

திமுக இந்தச் சம்பவத்திற்கு தவெகவை முழுமையாகக் குறை கூறி வரும் நிலையில், மற்ற கட்சிகள் விஜய் மீது மென்மையாக அணுகியுள்ளன. விஜயை கடுமையாக விமர்சனம் செய்யாமல் அவரை சாந்தமாக அணுக டெல்லி பாஜக திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் அவரை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முடிவு எடுத்துள்ளதாம்.

விஜய்யின் பேச்சாற்றல் மற்றும் செல்வாக்கு காரணமாக, தவெக வாக்காளர்களை ஈர்க்கும் என்றும், தேர்தலுக்கு முன்னதாக ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்றும் பாஜகவின் மதிப்பீடு கூறுகிறது. DMDK மற்றும் நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகளில் இருந்து வாக்காளர்கள் TVK-வை நோக்கி நகரலாம் என்றும் பாஜக கருதுகிறது.

ஆனால், அதிமுகவுடனான தனது கூட்டணியைக் குலைக்க விரும்பாததால், பாஜக கவனமாக செயல்பட விரும்புகிறது. அதிமுகவின் வலுவான அமைப்புடன் விஜய் இணைந்தால், NDA-வின் தமிழ்நாடு டார்கெட் வெற்றிபெறும் என்று டெல்லி பாஜக கருதுகிறதாம்.

https://tamil.oneindia.com/news/chennai/tvk-vijay-alliance-with-bjp-and-aiadmk-is-almost-confirmed-nda-twist-in-tamil-nadu-740691.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

விஜையின் கொள்கை விளக்கத்தை பார்த்து, அதனால் ஈர்க்கபட்டு, திமுக, அதிமுக, சாதிகட்சிகள், பாஜக ஏ டீம், பாஜக பி டீம் தவிர்ந்த ஒரு அரசியல் சக்தி தமிழகத்தில் உருவாக வாய்புள்ளது என கருதிய கோஷான் போன்றோரின் தற்போதைய பரிதாப நிலை 👇🤣

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

2 months 3 weeks ago
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி! Shyamsundar IUpdated: Sunday, October 5, 2025, 10:07 [IST] சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, நடிகர் விஜய்யின் கட்சிக்கு பாஜக ஆதரவுக்கரம் நீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பலத்தைப் பயன்படுத்தி வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட நேரத்தில்தான் விஜய்க்கு ஆதரவாக பாஜக களமிறங்க திட்டமிட்டு உள்ளதாம். விஜய் தனியாக இல்லை என்று தமிழக வெற்றிக் கழக (TVK) தலைமைக்கு ஒரு மூத்த பாஜக தலைவர் தகவல் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜகவும் விரும்புவதாகவும், அதற்கு தவெக துணை இருந்தால் சிறப்பாக இருக்கும். இதனால் பொறுமையாக இருக்குமாறு விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்ட ரீதியாக சிக்கல் விஜய்க்கு இந்த வழக்கில் சட்ட ரீதியாக கடுமையாக சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் பாஜக தரப்பு எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் பிரச்சனையை பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் அதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். எங்களுடன் கூட்டணி இல்லை என்றால் நாங்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம், என்று விஜய்க்கு டெல்லி பாஜக தெரிவித்து உள்ளதாம். விஜய் முடிவு என்ன? 2026 தேர்தலில் TVK தனித்துப் போட்டியிடும் என்று விஜய் முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால், இந்த புதிய நிகழ்வுகள் அவரது வியூகங்களை மாற்றியமைக்கக்கூடும். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக பாஜக பொறுப்பாளர் ஜே பாண்டா அக்டோபர் 6 ஆம் தேதி மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது அவர் மூத்த கட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்களை சந்திப்பார். அப்போது பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார். முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை நேற்று டெல்லியில் இருந்தார். அவர் கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அதன் சாத்தியமான விளைவுகள் குறித்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். இதன்பின் வரும் வாரமே கூட்டணியில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் தேர்தலில் திமுகவுக்கு எதிரான ஆட்சி எதிர்ப்பு அலை உருவாகும் என்று பாஜக தலைமை நம்புகிறது. எனவே, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை ஒருங்கிணைக்க அது முயற்சிக்கிறது. இதில் TVK-க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திமுக இந்தச் சம்பவத்திற்கு தவெகவை முழுமையாகக் குறை கூறி வரும் நிலையில், மற்ற கட்சிகள் விஜய் மீது மென்மையாக அணுகியுள்ளன. விஜயை கடுமையாக விமர்சனம் செய்யாமல் அவரை சாந்தமாக அணுக டெல்லி பாஜக திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் அவரை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முடிவு எடுத்துள்ளதாம். விஜய்யின் பேச்சாற்றல் மற்றும் செல்வாக்கு காரணமாக, தவெக வாக்காளர்களை ஈர்க்கும் என்றும், தேர்தலுக்கு முன்னதாக ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்றும் பாஜகவின் மதிப்பீடு கூறுகிறது. DMDK மற்றும் நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகளில் இருந்து வாக்காளர்கள் TVK-வை நோக்கி நகரலாம் என்றும் பாஜக கருதுகிறது. ஆனால், அதிமுகவுடனான தனது கூட்டணியைக் குலைக்க விரும்பாததால், பாஜக கவனமாக செயல்பட விரும்புகிறது. அதிமுகவின் வலுவான அமைப்புடன் விஜய் இணைந்தால், NDA-வின் தமிழ்நாடு டார்கெட் வெற்றிபெறும் என்று டெல்லி பாஜக கருதுகிறதாம். https://tamil.oneindia.com/news/chennai/tvk-vijay-alliance-with-bjp-and-aiadmk-is-almost-confirmed-nda-twist-in-tamil-nadu-740691.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards விஜையின் கொள்கை விளக்கத்தை பார்த்து, அதனால் ஈர்க்கபட்டு, திமுக, அதிமுக, சாதிகட்சிகள், பாஜக ஏ டீம், பாஜக பி டீம் தவிர்ந்த ஒரு அரசியல் சக்தி தமிழகத்தில் உருவாக வாய்புள்ளது என கருதிய கோஷான் போன்றோரின் தற்போதைய பரிதாப நிலை 👇🤣

சுன்னாகம் பகுதியில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு!

2 months 3 weeks ago
📌👉யாழ்ப்பாணம் ஏழாலையில் சோகம்: வாய்த்தகராறு கத்திக்குத்தாக மாறியதில் கடை உரிமையாளர் பலி‼️‼️‼️ யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் உள்ள வாணிப நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வாய்த்தகராறு கத்திக்குத்தில் முடிவடைந்ததில், கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (அக்டோபர் 04) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்த விபரம் ஏழாலை கிழக்கு பகுதியில் உள்ள வாணிப நிலையத்திற்கு, மதுபோதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் (உணவுப் பண்டம்) கேட்டுள்ளனர். அப்போது கடை உரிமையாளர், மிக்சருக்கான பணத்தை முதலில் தருமாறு கேட்டுள்ளார். இதன் காரணமாக மிக்சர் வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்தத் தர்க்கம் முற்றிய நிலையில், இளைஞர்கள் கடை உரிமையாளர் மீது கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டனர். இதில் படுகாயமடைந்த கடை உரிமையாளர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிங்காராவேல் தானவன் (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் கைது உயிரிழந்தவரின் சடலம் தற்போது தொல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுன்னாகம் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நம்ம யாழ்ப்பாணம்