Aggregator
யாழில் வாய்பேச முடியாத இளம் பெண் மீது பலாத்கார முயற்சி
வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (14) நள்ளிரவு 11.30 மணியளவில் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார்.
எனினும் அவரிடம் இருந்து அந்த பெண் தப்பிச் சென்று தமது உறவினர்களுக்கு அறியப்படுத்திய நிலையில், பெண்ணின் உறவினர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர் தலைமறைவாகியிருந்ததுடன் அவரை தேடி பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே சந்தேகநபர் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
-யாழ். நிருபர் பிரதீபன்-
'QR கோடு ஏடிஎம், மாத வருமானம் ரூ1.5 லட்சம்' - கோவையில் புதிய ஏடிஎம் மோசடியா?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
கட்டுரை தகவல்
சேவியர் செல்வகுமார்
பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
கோவையில் ஏடிஎம் உரிமம் வழங்குவதாகக் கூறி ஒரு கும்பல் பல கோடி ரூபாயை வசூலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டிலேயே இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர், கடுமையாகப் போராடி பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
இன்னும் பலருக்கு பணம் கிடைக்காத நிலையில், வரும் டிசம்பருக்குள் பிரச்னையை சரி செய்துவிடுவோம் என காவல் நிலையத்தில் நிறுவன இயக்குநர்கள் எழுதிக்கொடுத்திருப்பதாக காவல்துறை தரப்பில் பதில் தரப்படுகிறது.
கவர்ச்சி விளம்பரம்
உலகத்தின் முதல் யுபிஐ, க்யூ ஆர் கோடு ஏடிஎம் என்று கூறுகிறது அந்த சமூக ஊடக விளம்பரம். சிடிஎம் மற்றும் ஏடிஎம் நிறுவுவதற்கு ரூ.3.54 லட்சம் செலுத்தினால் மாதம் ஒரு லட்ச ரூபாய் மற்றும் பராமரிப்புத் தொகை ரூ.50 ஆயிரம் கிடைக்குமென்றும் கூறுகிறது.
கோவை நவஇந்தியாவில் ஒரு முகவரியில் இயங்கிவந்த IZET E-PAYMENT PVT LTD என்ற நிறுவனம்தான் இந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் சார்பில் நிறுவப்படும் பணம் செலுத்தும் CDM இயந்திரம் மற்றும் பணம் எடுக்கும் இயந்திரத்தை (ztm atm) நிறுவ இடம் கொடுப்பவர்களுக்குதான் இந்த வருமானம் வாய்ப்பு என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது.
இன்ஸ்டராகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வெளியான இந்த விளம்பரத்தைப் பார்த்து, பல மாநிலங்களிலிருந்தும் பலரும் பணம் செலுத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
'முதலீடு ரூ.3.54 லட்சம் மாத வருமானம் ரூ.1.5 லட்சம்'
பணம் செலுத்தியவர்களிடம் ஒன்று அல்லது 2 இயந்திரங்கள், பிரீமியம் ஜோன் எனப்படும் மினி வங்கி போன்றவை அமைத்துத்தருவதாகக் கூறி, ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.9 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் பெரும்பாலானவர்களின் இடங்களில் இந்த இயந்திரங்கள் நிறுவப்படவில்லை. நிறுவிய சில இடங்களிலும் அவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. நிறுவப்பட்ட சில இயந்திரங்களும் முறையாக இயங்கவில்லை.
கோவை நவஇந்தியாவில் இயங்கி வந்த அந்த அலுவலகங்கள் மூடப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன. தொடர்பு எண் என்று அவர்கள் கொடுத்த எந்த எண்ணிலும் யாரையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.
இந்நிலையில்தான் பணம் செலுத்தி ஏமாந்த பலரும் பீளமேடு காவல் நிலையத்தில் புகார்கள் கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில் அக்டோபர் 13 ஆம் தேதியன்று பலரும் ஒன்று கூடி வந்து மாநகர காவல் ஆணையரிடம் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.
ஏடிஎம் இயந்திரம் நிறுவுவதற்காக பணம் செலுத்தி ஏமாந்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சிவகிரி, ''ஃபேஸ்புக் விளம்பரத்தைப் பார்த்து கடந்த 2024 மார்ச் மாதத்தில் அந்த நிறுவனத்தை அணுகினேன். இன்றே பணம் செலுத்தினால் மாதம் ரூ.49 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்குமென்றனர். அதை நம்பி அன்றே ரூ.50 ஆயிரம் செலுத்தி இணைந்தேன். நிறுவன இயக்குநர் ரம்யா நேரில் வந்து இடத்தைப் பார்த்தார். சேலத்தில் ஏடிஎம் இயங்குவதைக் காண்பித்தனர். கடை எடுத்துத் தயார் செய்தபின் பல மாதங்களாக மெஷின் வரவேயில்லை.'' என்றார்.
ஏழெட்டு மாதங்கள் கழித்து இவருடைய இடத்தில் ஏடிஎம் இயந்திரம் வைத்துள்ளனர். அதிலும் பணம் போட்டு எடுக்கும் சோதனை மட்டுமே நடந்துள்ளது. ஆனால் பணம் எடுக்க முடியவில்லை.
அதன்பின் மெஷினை மாற்றுவதாகக் கூறியுள்ளனர். அதை எடுக்க வந்ததை இவர் தடுத்தபோது நிர்வாக இயக்குநர் துரைசாமியே வந்ததாகக் கூறுகிறார் சிவகிரி.
அதன்பின் விசாரித்தபோது அலுவலகம் இயங்காததையும், ஏடிஎம் இயந்திரம் எங்குமே இயங்கவில்லை என்பதையும் கண்டறிந்த பின்பே போலீசில் புகார் அளித்ததாகக் கூறுகிறார்.
இவரைப் போலவே கோவையைச் சேர்ந்த ஜீவானந்தன், இந்த நிறுவனத்தில் ரூ.3 லட்சம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இவருக்கு எந்த இயந்திரமும் பெயரளவுக்குக் கூடத்தரப்படவில்லை.
இவர்கள் பணம் செலுத்தியபோது, 45 நாட்களில் ஏடிஎம் இயந்திரத்தை கொடுப்பதாகவும், அதில் எந்த வங்கி ஏடிஎம் கார்டுகளை வைத்தும் பணம் எடுக்கலாம், செலுத்தலாம் என்றும், UPI மூலமும் பணத்தை ஆன்லைனில் செலுத்தி விட்டு பணமாக எடுக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
இயந்திரத்தில் பணத்தை தங்கள் நிறுவனமே வந்து லோடு செய்யும் என்றும், மினி வங்கி போன்ற செட்டப் உள்ள பிரீமியம் ஜோன் வைக்க இடம் கொடுப்பவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமென்றும் விளக்கியுள்ளனர்.
இதை நம்பி தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் பல நுாறு பேர் பல கோடி ரூபாய் ஏமாந்திருக்க வாய்ப்புள்ளதாக பிபிசி தமிழிடம் பேசிய பலரும் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
வங்கியில் லோன் போட்டு ரூ.9 லட்சம் செலுத்திய இளைஞர்!
புகார் அளிக்க வந்தவர்களில் அதிகபட்சமாக பணம் செலுத்தி ஏமாற்றமடைந்தவர், நெய்வேலியைச் சேர்ந்த பிரேம்குமார்.
இவர் வங்கியில் ரூ.10 லட்சம் பெர்சனல் லோன் பெற்று, அதில் 9 லட்ச ரூபாயை இந்த நிறுவனத்தில் செலுத்தியுள்ளார்.
கடந்த டிசம்பர் 13 அன்று சமூக ஊடக விளம்பரத்தைப் பார்த்து, டிசம்பர் 19 அன்று ரூ.3 லட்சம் செலுத்திய இவர், தன் பெயரில் ஏடிஎம் உரிமமும், தன் தாயார் பெயரில் பிரீமியம் ஜோன் அமைக்கவும் இந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
முழுத்தொகையையும் செலுத்திய பின்பே இவை செய்து தரப்படுமென்று கூறியதால் 2025 ஏப்ரலுக்குள் மொத்தம் ரூ.9 லட்சத்தைச் செலுத்தியிருக்கிறார்.
இதை நம்பி 2 கடைகளை வாடகைக்குப் பிடித்து, அவற்றில் சில உள் அலங்கார வேலைகளையும் இவர் செய்துள்ளார். ஆனால் இவருக்கு இறுதிவரை இயந்திரமே வரவில்லை.
இவர் உட்பட பலரும் கோவையில் வந்து பணம் செலுத்தி, ஒப்பந்தம்போட்ட போது, 2 அலுவலகங்களில் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றியதைப் பார்த்துள்ளனர்.
இவர்களுக்கு ஆர்எஸ்புரம் பகுதியில் இயங்கி வந்த ஒரு ஏடிஎம் இயந்திரமும் நேரடியாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரலில் முழுப்பணம் செலுத்திய பின்னும் பிரேம்குமாருக்கு ஆகஸ்ட் மாதம் வரையிலும் ஏடிஎம் இயந்திரம் வரவில்லை என்பதால் கோவைக்கு நேரில் வந்து பார்த்தபோது, முன்பு பார்த்த அந்த அலுவலகம் மூடிக்கிடந்துள்ளது.
அங்கு விசாரித்தபோது, அலுவலகத்தில் பணியாற்றிய பலருக்கும் பல மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை என்பதும், அந்த அலுவலகக் கட்டடத்துக்கான வாடகையும் பல மாதங்களாக செலுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்ததாக பிரேம்குமார், ஜீவானந்தன், அரவிந்த் உள்ளிட்ட பலரும் பிபிசியிடம் தகவல் பகிர்ந்தனர்.
நிர்வாகிகளை தொடர்புகொண்டு பேசிய இவர்களுக்கு, பக்கத்து கட்டடத்தில் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பெயரே இல்லாத அலுவலகத்தில் நான்கைந்து பேர் பணியாற்றியுள்ளனர். அவர்களும் சரியான பதில் தராத நிலையில், சில நாட்களில் அந்த அலுவலகமும் மூடப்பட்டுள்ளது.
''பணம் செலுத்தியபின் எந்த பதிலும் இல்லாததால் நான் சண்டை போடும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் வந்து கட்டடத்தை அளந்து சென்றனர். கடந்த ஆகஸ்ட்டில் போலீஸ் புகார் கொடுப்பதாகச் சொன்னபோது, கான்ஃபரன்ஸ் காலில் துரைசாமி பேசினார். ஆகஸ்ட் 15க்கு மேல் மெஷின் வரும் என்றார். ஒரு வாரத்தில் கடை வாடகை தருவதாகக் கூறினர். எதுவும் வரவில்லை. அப்போது கோவை வந்தபோதுதான் அலுவலகம் மூடப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.'' என்றார் பிரேம்குமார்.
''என்னிடம் கஸ்டமர் கேர், சப்போர்ட் டீம், எச்ஆர் என எல்லா எண்களிலும் பேசியதும் துரைசாமியின் மனைவி ரம்யா என்று தெரிந்துகொண்டேன். இதைப் பற்றிக் கேட்டதும் சுத்தமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. இறுதியாக செப்டடெம்பர் 28 அன்று மெஷின் வர இன்னும் 6 மாதமாகும் என்று மெயில் வந்தது. நான் ஆன்லைனில் பணத்தைத் திருப்பிச் செலுத்தச் சொல்லி மெயில் போட்டதற்கு எந்த பதிலும் வரவேயில்லை.'' என்றார்.
கடந்த மாதம் ஆயுதபூஜையன்று, பீளமேடு காவல் நிலையத்தில் இவரும், பாதிக்கப்பட்ட ரகுராம் என்பவரும் இணைந்து புகார் கொடுக்கச் சென்றுள்ளனர். அன்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் துரைசாமி, அவரின் மனைவி ரம்யா இருவரும் வந்துள்ளனர்.
அப்போது அவரிடம் பெர்சனல் லோன் வாங்கிக் கொடுத்துவிட்டு, இப்போது தற்கொலை செய்யும் நிலையில் இருப்பதாக தான் சொன்னபோது, எல்லோருமே லோன் வாங்கிக் கொடுத்தால் நாங்கள் என்ன செய்வது என்று துரைசாமி கேட்டதாகத் தெரிவித்தார் பிரேம்குமார்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
கவர்ச்சிகரமான வாக்குறுதிகளால் பலரும் நம்பி பணத்தைச் செலுத்தியுள்ளனர் என்று குற்றம்சாட்டுகிறார் வழக்கறிஞர் சினேகா.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள இவர், இதற்கு முன்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்.
சிலர் அளித்த புகாருக்கு சிஎஸ்ஆர் மட்டும் போட்டுவிட்டு, அதையும் மறுநாளே கேன்சல் செய்து விட்டதாகக் கூறுகிறார் சினேகா.
பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சினேகா, ''பீளமேடு காவல்நிலையத்தில் ஏராளமானவர்கள் புகார் கொடுத்துள்ளனர். ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை. அதனால்தான் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தோம்.நாங்கள் சிவில் வழக்கை முன்னெடுக்கிறோம். ஆனால் கிரிமினல் புகாரின் மீது நடவடிக்கை எடுத்தால்தான் வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் போன்றவற்றை முடக்கி பணத்தை மீட்க முடியும்.'' என்றார்.

கட்டிய பணத்தை திரும்பவும் முழுமையாக வாங்கிய கேரள இளைஞர்
பணம் கொடுத்து பலரும் ஏமாற்றமடைந்த நிலையில், கேரளா மாநிலம் வாளையாரைச் சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர், ரூ.5 லட்சத்து 54 ஆயிரம் செலுத்தி, ஏடிஎம் நிறுவுவதற்கு கட்டட வாடகைக்கும் சேர்த்து மொத்தம் ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் வரை செலவழித்து அதைத் திரும்பப் பெற்றுள்ளார்.
இவருக்கும் பணம் செலுத்தியபின் ஏடிஎம் இயந்திரம் தராமல், கப்பலில் மெஷின் வரத்தாமதம் என்று இழுத்தடித்துள்ளனர். இவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பின், ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளனர். அதில் யார் கை வைத்தாலும் திறக்கும் வகையில் பாதுகாப்பின்றியும் இருந்துள்ளது. அதில் நிறுவனம் செலுத்திய ஓரிரு லட்ச ரூபாய் பணத்தை எடுப்பதிலும் பல பிரச்னை இருந்துள்ளது.
முதலில் சமூக ஊடக விளம்பரத்தில் காண்பித்த ஏடிஎம் இயந்திரமும் இதுவும் வேறு வேறாக இருப்பதை வைத்து, வீடியோ எடுத்து தான் நடத்தும் யூடியூப் சேனலில் கார்த்தி வெளியிட்டுள்ளார். அதன்பின் இவரிடம் நிறுவனத்திலிருந்து சமாதானம் பேச அழைத்துள்ளனர்.
அதன்பின் நடந்ததை பிபிசி தமிழிடம் விளக்கிய கார்த்தி, ''நான் கடுமையாக சண்டையிட்டதும், அந்த அலுவலக ஊழியர் ஒருவரை வைத்து என்னிடம் பேசி கோவைக்கு வரவைத்து, என்னை பீளமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, நான்தான் தவறான தகவலைப் பரப்பும் புகாரில் அக்யூஸ்ட் என்று கூறிவிட்டனர். ஆனால் நான் அதற்கு முன்பே, கோவை மாநகர காவல்துறைக்கு ஆன்லைன் புகார் அளித்திருந்தேன்.'' என்றார்.
''அதையும் பிற ஆதாரங்களையும் வைத்து மீண்டும் ஒரு புகார் தருவதாகக் கூறினேன். சிவில் வழக்கு, நுகர்வோர் கோர்ட் வழக்கு தொடர்வேன் என்று கூறினேன். அதன்பின் ரூ.5.54 லட்சம் திரும்பத்தருவதாகப் பேசினர். ஆனால் நான் கூடுதலாகச் செலவழித்த தொகையையும் தராவிடில் யூடியூபில் நடந்த அனைத்தையும் ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்று கூறியதால் ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்துக்கு செக் கொடுத்தனர். அதையும் இறுதிநாளில் திரும்பத்தரக்கூறினர். நான் கிரிமினல் வழக்குத் தொடுப்பேன் என்று கூறிய பின், அந்த செக்கிற்கான பணத்தைச் செலுத்தினர். என்னைப் போல சிலரும் பணத்தைத் திரும்ப வாங்கியுள்ளனர்.'' என்றார் கார்த்தி.

படக்குறிப்பு, நிறுவனத்தின் இயக்குநர்கள் துரைசாமி அங்கமுத்து, தமிழ்மணி ஆகியோரை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் பலனிக்கவில்லை.
இந்த நிறுவனத்திடம் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ள பலரும் பீளமேடு காவல் நிலையம், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகார்கள் அளித்தும் இப்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இதுகுறித்து பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜூனிடம் கேட்டபோது, ''அங்கேயும் இங்கேயும் புகார் கொடுத்துள்ளனர். தங்கள் நிறுவனத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் தவறாக விளம்பரம் செய்ததால் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக கோர்ட்டில் அவர்கள் புகார் அளித்து நீதிமன்ற உத்தரவின்படி, அதை விசாரிக்கிறோம். மற்ற புகார்களையும் விசாரிக்கிறோம். எந்த சிஎஸ்ஆரையும் நாங்கள் கேன்சல் செய்யவில்லை. வரும் டிசம்பருக்குள் பிரச்னையை சரி செய்வோம் என்று எழுதிக் கொடுத்துள்ளனர்.'' என்றார்.
ஏடிஎம் இயந்திரம் தருவதாகக் கூறி, பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படும் நிறுவனத்தின் இயக்குநர்கள் துரைசாமி அங்கமுத்து, ரம்யா துரைசாமி, தமிழ்மணி ஆகியோரை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் பலனிக்கவில்லை.
இந்த நிறுவன விளம்பரத்தில் விசாரணைக்குரிய எண் என்றும், நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டதாக பழைய அலுவலகத்தின் முன்பு ஒட்டப்பட்ட நோட்டீசிலும் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணையும் தொடர்பு கொண்டபோது அது 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது.
இந்த நிறுவனத்தின் பதிலை மெயில் மூலமும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
'QR கோடு ஏடிஎம், மாத வருமானம் ரூ1.5 லட்சம்' - கோவையில் புதிய ஏடிஎம் மோசடியா?
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தின் முதல் கொடி ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவிக்கப்பட்டது
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தின் முதல் கொடி ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவிக்கப்பட்டது
15 Oct, 2025 | 04:09 PM
![]()
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு முதல் கொடி, அடையாள ரீதியாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கு இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது.
இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் தலைவி நில்மினி சமரவீர, கொடியை ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவித்தார்.
பின்னர், வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் வெள்ளைப் பிரம்புகளை வழங்கி வைத்தார்.
கொடி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பார்வையற்றோர் சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்று சம்மேளனத்தின் தலைவி தெரிவித்தார்.
இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலந்துரையாடியதுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் உதவிச் செயலாளர் சமீர புபுது குமார உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





“ஜென் Z” போராட்டங்கள்; அரசாங்கத்தை கலைத்தார் மடகஸ்கார் ஜனாதிபதி
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்
பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமர் நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் தனது விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், "நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்" என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.