Aggregator
கருத்து படங்கள்
அரச சேவையில் டிஜிட்டல் கையொப்ப முறைமை அறிமுகம்
16 Sep, 2025 | 11:12 AM
![]()
(எம்.மனோசித்ரா)
அரசாங்க உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கடமைகளை இலகுபடுத்துவதையும் வினைத்திறனாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, அரச சேவையில் டிஜிட்டல் கையொப்ப முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தி புதிய பாதைக்கு இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான டிஜிட்டல் முறை கையொப்பங்களை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கும் நிகழ்வில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒரு வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதே தனது நோக்கம் எனவும், இந்த தொழில்நுட்பத்தை கிராம அலுவலர்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
இந்த முயற்சிக்கு அமைவாக, இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டம் இல. 19, 2006 இன் ஏற்பாடுகளின் கீழ் உள்நாட்டலுவல்கள் பிரிவின் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அதிகாரிகளின் கையொப்பங்களை இலக்கமயமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டத்துக்கு அமைவாக, டிஜிட்டல் முறைமை கையொப்பங்களை வழங்குவதற்கான அதிகாரியாக லங்கா பே நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறைமை உத்தியோகபூர்வ கடிதப் பரிமாற்றங்களைச் செயற்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, விரைவான, மிகவும் வினைத்திறன் மிக்க, பயனுள்ள அரச சேவையை வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மந்துவில் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல்
உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மந்துவில் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல்
16 Sep, 2025 | 11:06 AM
![]()
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு திங்கட்கிழமை (15) விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய 26 ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் திங்கட்கிழமை (15) தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இன்றைய நாளில் 24 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அதன் 26வது ஆண்டு வலிதீரா நினைவு மந்துவில்லில் இறந்தவர்களின் உறவுகளாலும் மக்களாலும் சுடரேற்றி மலர்தூவி கண்ணீருடன் நினைவு கூரப்பட்டது.
குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில் சந்தி வளாகத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது
தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பின் தலைவர் த.லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.யூட் பிரசாத் தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.சத்தியரூபன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்!

ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்!
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு, இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திருச்சியில் நேற்று நடைபெற்ற ம.தி.மு.க மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இராமேஸ்வரம் அருகே, பாம்பனிலிருந்து விசைப்படகில், கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 10 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்கள் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்தக் கடற்றொழிலாளர்களுக்கு, தலா 5 கோடி ரூபாய் வீதம் 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் தமிழகக் கடற்றொழிலாளர்களை,
இலங்கை கடற்படை கைது செய்வதும், அபராதம் விதிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என்றும் குறித்த மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை அரசின் இத்தகைய செயற்பாடுகளைத் தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது கடற்றொழிலாளர் சமூகத்தைக் கொந்தளிக்கச் செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்
மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்
September 16, 2025

Photo, NY TIMES
தெற்காசியாவில் மூன்று வருடங்களில் மூன்று அரசாங்கங்களை மக்கள் கிளர்ச்சிகள் பதவி கவிழ்த்திருக்கின்றன. முதலாவதாக, 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இரண்டாவதாக, 2024 ஆகஸ்டில் பங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி பிரதமர் ஷேய்க் ஹசீனாவின் அரசாங்கத்தை கவிழ்த்தது. மூன்றாவதாக, கடந்த வாரம் அதேபோன்ற மக்கள் கிளர்ச்சி நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கத்தை வீழ்த்தியிருக்கிறது.
இலங்கையினதும் பங்களாதேஷினதும் கிளர்ச்சிகளின்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் ஷேய்க் ஹசீனாவும் நாட்டை விட்டு தப்பியோடினார்கள். ஆனால், கடந்த வாரம் பதவியில் இருந்து விலகிய நேபாளப் பிரதமர் இராணுவத்திடம் பாதுகாப்பைத் தேடிக் கொண்டார். நாட்டை விட்டு வெளியேறிய கோட்டபாய சில வாரங்களில் நாடுதிரும்பிய அதேவேளை, ஷேய்க் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். அவரை பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணைக்கு உட்படுத்துவதற்காக நாடுகடத்துமாறு பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் கோரிக்கை விடுத்திருக்கின்ற போதிலும், இந்தியா அதற்கு இணங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை.
இலங்கையில் மக்கள் கிளர்ச்சிக்கு இரு வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற தேசிய தேர்தல்களில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மக்களின் பேராதரவுடன் பதவிக்கு வந்ததன் மூலம் அதிகார மாற்றம் அமைதியான முறையில் இடம்பெற்றது. அந்த மாற்றம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடதுசாரிக்கட்சி ஒன்று ஜனநாயக தேர்தல்கள் மூலம் முதன் முதலாக அதிகாரத்தைக் கைப்பற்றிய ‘சாதனையாக’ பதிவாகியிருக்கிறது. பங்களாதேஷில் நோபல் சமாதானப் பரிசாளரான முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவிருக்கிறது. கடந்த வாரத்தைய கிளர்ச்சியை அடுத்து நேபாளத்திலும் இடைக்கால அரசாங்கம் ஒன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறது.
தெற்காசியாவின் இந்த மூன்று மக்கள் கிளர்ச்சிகளையும் பொறுத்தவரை, பங்களாதேஷிலோ அல்லது நேபாளத்திலோ இடம்பெற்ற படுமோசமான வன்முறைகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் கிளர்ச்சி பெருமளவுக்கு அமைதியான முறையிலேயே முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தெற்காசியப் பிராந்தியத்தில் மக்கள் கிளர்ச்சி மூலம் அரசாங்கத்தை கவிழ்த்த முதல் நாடாக இலங்கை வரலாற்று முக்கியத்துவம் ஒன்றைக் கொண்டிருக்கிறது.
சகல கிளர்ச்சிகளிலும் மாணவர்களும் இளைஞர்களுமே முன்னரங்கத்தில் நிற்பது இயல்பு. ஆனால், கடந்த வாரத்தைய நேபாளக் கிளர்ச்சியில் இளைஞர்களின் பங்கேற்பு முன்னென்றும் இல்லாத வகையில் ஒரு குறிப்பிட்ட தலைமுறை இளைஞர்களின் போராட்டமாகவே முதலில் அடையாளப்படுத்தப்பட்டது. 1900 களின் பிற்பகுதிக்கும் 2010 களின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்த இளைஞர்கள் ‘இஸற்’ தலைமுறையினர் என்று வர்ணிக்கப்படுகின்றனர். குறிப்பாக 1997ஆம் ஆண்டுக்கும் 2012ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்த இவர்கள் 13 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
நேபாளத்தில் இடம்பெற்ற கிளர்ச்சி ‘ஜென் இஸற் இயக்கம்’ ( Gen. Z movement) என்றே பிரபல்யமாக அழைக்கப்படுகிறது. அந்தத் தலைமுறையினரின் சார்பில் பரந்தளவிலான அரசியல் சீர்திருத்தங்களை வேண்டிநிற்கும் ‘ஹமி நேபாள்’ (நாங்கள் நேபாளியர்கள்) என்ற இயக்கமே போராட்டத்துக்கு தலைமை வகித்தது. நேபாளம் ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் புதிய நாடு அல்ல. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலமாக மாவோவாத கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் புரட்சியினால் பெரும் இழப்புக்களையும் அழிவுகளையும் நேபாளம் சந்தித்தது.
ஆனால், குறிப்பிட்ட வயதைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் நேபாளத்தின் வீதிகளில் தற்போது எதற்காக இறங்கினார்கள்?
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) தலைமையிலான அரசாங்கம் சகல சமூக ஊடகங்களையும் (2023 சமூக ஊடக பயன்பாட்டு ஒழுங்கு விதிகளின் கீழ்) ரெலிகோம் அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒருவார காலக்கெடு விதித்து ஆகஸ்ட் 28ஆம் திகதி அறிவித்தது. முக்கியமான சமூக ஊடகளில் எதுவும் அந்த அறிவிப்பை கருத்தில் எடுக்காத நிலையில் செப்டெம்பர் 4ஆம் திகதி அரசாங்கம் (பேஸ்புக், எக்ஸ், வட்ஸ்அப் உட்பட ) 26 சமூக ஊடகங்களை தடைசெய்தது. சுமார் மூன்று கோடி சனத்தொகையை கொண்ட நேபாளத்தில் ஒரு கோடியே 65 இலட்சம் பேர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது.
சமூக ஊடகங்கள் மீது அரசாங்கம் விதித்த தடையை மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் ஒரு தணிக்கையாகவும் தகவல்களைப் பெறுவதற்கான ஒரு கட்டுப்பாடாகவுமே பார்த்தார்கள். சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் இணையத்தை பெருமளவுக்கு பயன்படுத்துகின்ற ஒரு நாட்டில் இத்தகைய தடைவிதிப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் முன்கூட்டியே சிந்தித்துப் பார்க்கவில்லை.
செப்டெம்பர் 8ஆம் திகதி வீதிக்கு இறங்கிய இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் எடுத்த நடவடிக்கைகளில் 19 பேர் பலியானதுடன் நூறுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தார்கள். அதையடுத்து தலைநகர் காத்மண்டுவில் மாத்திரமல்ல, நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினார்கள்.
செப்டெம்பர் 9ஆம் திகதி சமூக ஊடகங்கள் மீதான தடையை அரசாங்கம் நீக்கிய போதிலும் போராட்டங்கள் தணியவில்லை. நேபாளத்தில் கடந்தகாலப் போராட்டங்களின்போது இடம்பெறாத அளவுக்கு படுமோசமான வனமுறைகள் கடந்த வாரம் இடம்பெற்றன. அரசியல் தலைவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, உயர்நீதிமன்றம் உட்பட பெருவாரியான அரசாங்கச் சொத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தார்கள். சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு எதிராக இளைய தலைமுறையினர் அமைதியான முறையில் முன்னெடுத்த போராட்டம் இறுதியில் அரசாங்கத்தை கவிழ்த்த மாபெரும் மக்கள் வன்முறைக் கிளர்ச்சியாக மாறியது.
வன்முறைகள் தீவிரமடைந்து சிறையுடைப்புச் சம்பவங்களும் இடம்பெற்றன. ஆனால், நேபாள இராணுவம் ஓரிரு நாட்களில் அராஜக நிலைவரத்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. கடந்த வார வன்முறைகளில் குறைந்தது 51 பேர் பலியானதாகவும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தாகவும் செய்திகள் தெரிவித்தன. முன்னாள் பிரதமர் ஒருவரின் மனைவி உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவமும் இடம்பெற்றது.
அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களான நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சியின் தலைவர் (பிரதமர்) கே.பி. சர்மா ஒலி, நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷெர் பகதூர் டியூபா மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் (மாவோவாத நிலையம்) கட்சியின் தலைவர் பிரசண்டா ஆகியோருக்கு எதிராக ஏற்கெனவே கடுமையாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தன. கோட்பாடுகளைப் பொறுத்தவரை, பெருமளவுக்கு ஒத்துப்போகாத இந்தத் தலைவர்களை ஊழலே பிணைத்து வைத்திருந்தது என்று கூட விமர்சனங்கள் வெளியாகின.
ஆட்சியாளர்களின் குடும்பங்கள் ஆபாசத்தனமான ஆடம்பரத்தில் வாழ்வதைக் கண்டு கொதித்துக் கொண்டிருந்த இளைஞர்களும் மக்களும் அரசாங்கத்தை விரட்டுவதற்கு எடுத்த முடிவை எவராலும் தடுக்க முடியவில்லை. முடியாட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அரசியல் தலைவர்கள் ஜனநாயகத்தை குடும்ப அதிகாரமாகவும் ஆட்சிமுறையை தனிப்பட்ட நலன்களுக்கான சாதனமாகவும் மாற்றியதைக் கண்டு சீற்றமடைந்த ஒரு தலைமுறையின் முழக்கம் நேபாளத்தை உலுக்கியிருக்கிறது.
நேபாள அரசியல் தலைமைத்துவம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலமைப்பின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டாட்சி (சமஷ்டி) ஜனநாயக குடியரசின் புதிய அரசியல் முறைமை மக்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்தது. ஆனால், இறுதியில் மக்கள் அரசியல் உறுதிப்பாடின்மை, மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் ஊழலையே சந்தித்தார்கள். கடந்த 15 வருட காலப்பகுதியில் நேபாளத்தில் 17 அரசாங்கங்கள் பதவியில் இருந்தன. மாவோவாத ஆயுதக்கிளர்ச்சிக்குத் தலைமைதாங்கிய தலைவர்களும் மற்றைய கம்யூனிஸ்ட் தலைவர்களும் கூட பிரதமர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் பெரிய வெளி இருந்தது.
முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மக்கள் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஆட்சிகளினால் நேபாள மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாமல் போனமையும் இறுதியில் அவர்களுக்கு எதிராகவே மக்கள் கிளர்ந்தெழுந்து அதிகாரத்தில் இருந்து அவர்களை விரட்டியிருப்பதையும் ‘அறகலய ‘ மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை மாற்றங்களின் விளைவாக தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிக்குவந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவனத்தில் எடுப்பது அவசியம்.
பங்களாதேஷைப் போன்றே அடுத்த கட்ட அரசியல் செயன்முறைகளை தீர்மானிப்பதில் நேபாளத்தில் இராணுவம் தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கிறது. இளைய தலைமுறையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவத்துடன் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு நேபாளத்தின் முன்னாள் பிரதம நீதியரசரான 73 வயதான சுசீலா கார்கி இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக வெள்ளிக்கிழமை ( செப்டெம்பர் 12) பதவியேற்றிருக்கிறார்.
நேபாளத்தின் முதல் பெண் பிரதம நீதியரசரான கார்கி (2016 – 2017), அந்த நாட்டின் நிருவாகத்துக்கு தலைமை தாங்கும் முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்ற இளைய தலைமுறை இயக்கத்தின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணங்கிக் கொண்டதன் பின்னரே கார்கியின் நியமனம் சாத்தியமாகியது. இடைக்கால நிருவாகத்தில் ‘ஹமி நேபாள்’ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இடைக்கால அரசாங்கம் ஆறு மாத காலத்திற்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டியிருக்கிறது.
முடியாட்சியின் முடிவுக்குப் பின்னரான கடந்த சுமார் 20 வருடகால ஜனநாயக பரீட்சார்த்தம் கண்டிருக்கும் தோல்வி நேபாளத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து குழப்பம் தரும் கேள்விகளை எழுப்புகிறது. தற்போதைய நெருக்கடியை நேபாளத்தின் குழப்பகரமான ஜனநாயக மாற்றத்தின் பரந்த பின்புலத்திலேயே விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இரண்டு வெற்றிகரமான மக்கள் போராட்ட இயக்கங்கள் (1990 & 2006) விரிவான அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை மற்றும் கூட்டாட்சி குடியரசு ஆட்சிமுறை ஆகியவற்றுக்குப் பின்னரும் கூட சாதாரண மக்களுக்கு அர்த்தபுஷ்டியான மாற்றத்தை நேபாளம் கொண்டுவரவில்லை. இத்தகைய சூழ்நிலையை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற முடியாட்சிக்கு ஆதரவான சக்திகளும் இருக்கின்றன.
தெற்காசியாவின் மூன்று மக்கள் கிளர்ச்சிகளையும் பொறுத்தவரை, இலங்கையில் மாத்திரமே இடைக்கால அரசாங்கங்கள் நியமிக்கப்படவில்லை.கோட்டபாய நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் இருந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பிறகு அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். பிறகு 2024 செப்டெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியது. ஜனாதிபதியாக திசாநாயக்க பதவியேற்று இன்னமும் சில நாட்களில் ஒரு வருடம் நிறைவடையப்போகிறது.
பங்களாதேஷில் அடுத்த வருட முற்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அந்தத் தேர்தல்கள் அமைதியான அதிகார மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேபாளத்தில் தற்போது வெளிக்கிளம்புகின்ற அரசியல் மாற்றுச் சக்திகள் புதிய நெருக்கடியை கையாளுவதற்கு கடைப்பிடிக்கக்கூடிய அணுகுமுறைகளிலேயே அந்த நாட்டின் எதிர்கால அரசியல் தசைமார்க்கம் தங்கியிருக்கிறது.
பொதுவில் மக்கள் அரசியல் வர்க்கத்தின் மீது கடுமையாக வெறுப்படைந்திருக்கிறார்கள் என்பதையே இந்த தெற்காசியக் கிளர்ச்சிகள் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன.
வீரகத்தி தனபாலசிங்கம்
”பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம்” - மீனவர் சங்க பிரதிநிதிகள்
”பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம்” - மீனவர் சங்க பிரதிநிதிகள்
”பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம்”
யாழ்ப்பாணம், பருத்தித்துறை சுப்பர்மடம் மக்கள் சார்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள், பருத்தித்துறை நகர பிதா மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து பருத்தித்துறை துறைமுகம் அமையும் பட்சத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எடுத்துக் கூறி மகஜர்களையும் கையளித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் நேற்று யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதால் எமது கிராமமே அழிவடைந்து போகும் அபாயம் உள்ளது. துறைமுகம் அமைக்கப்படும் போது அதற்கு மேற்கு பக்கமாக ஏற்படும் கடலரிப்பிற்கு முகம்கொடுத்து அழிவை சந்திக்கும் முதல் கிராமமாக எமது சுப்பர்மடம் மீனவ கிராமமே காணப்படுகிறது.
1000 கோடி ரூபா செலவில் இந்திய அரசாங்கம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2018 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முற்பட்ட போது எமது சங்கம் உள்ளிட்ட பல சமூக மட்ட அமைப்புக்களின் குறிப்பாக பருத்தித்துறை துறைமுக சூழலில் காணப்படும் பிரபல பாடசாலைகளின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது.
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை தாம் ஒருபோதும் நடைமுறப்படுத்த மாட்டோம் என ஆசிய அபிவிருத்தி வங்கி சார்பில் கலந்துரையாடிய அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்திருந்தனர். அவ்வாறு மக்கள், சமூக மட்ட அமைப்புகள், பாடசாலை சமூகம் என்பவற்றின் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட துறைமுக திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த இந்திய அரசு முயல்கிறது.
அருகில் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடவில்லை, எமக்கு எவருக்குமே அறிவிக்காது தன்னிச்சையாக கூட்டம் கூடி முடிவுகளை எடுத்துவிட்டு அபிவிருத்திக்காக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செயற்பாடு எமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை நாம் எதிர்க்கிறோம் என்றனர்
உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
adminSeptember 16, 2025

உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் உள்ளிட்ட உலக வங்கியின் பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கை சென்றுள்ள உலக வங்கியின் குழு நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதாரத் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்த உலக வங்கி பிரதிநிதிகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.
டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சி உள்ளிட்ட குறுகிய காலத்தில் பயனடையக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன் அரசாங்கத்தால் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்திற்கான உதவியை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான சட்ட கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் பொருளாதார வளர்ச்சியை அடையவும் அரசாங்கம் பாடுபடுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சர்வதேச அளவில் ஊழல் நிறைந்த நாடாக முத்திரை குத்தப்பட்ட இலங்கை, தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான திட்டத்தின் காரணமாக படிப்படியாக பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நிலையானதாக மாறி வருவதாக கூறியுள்ளார்.