1 month 3 weeks ago
1. ஆளில்லா விமானம் --------------------------------- அன்று ஒரு நீண்ட வார விடுமுறையின் நடுநாள். பலரும் அன்று விமானப் பயணமோ அல்லது எந்தப் பயணமுமோ செய்ய மாட்டார்கள் என்பதை அனுமானித்தேயிருந்தோம். ஆனாலும் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில், திருவிழா முடிந்து வெறுமனே காற்று வாங்கும் கோயில் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரின் நடமாட்டமே இருந்தது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. தேர்த் திருவிழா போல எப்போதும் உள்ளேயும், வெளியேயும் கூட்டமும், இரைச்சல்கள் நிறைந்திருக்கும் இடம் இது. இந்த விமான நிலையத்தால் வந்து போகும் வெளிநாட்டவர்கள் நிறையவே குறைகள் சொல்லுவார்கள். அதனால் நான் சொல்லாமல் விடுகின்றேன், அத்துடன் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. எங்கள் கண்களுக்கு தெரிவது போல காகங்களின் இறகுகள் கறுப்பு அல்ல, அவை வண்ணங்கள் நிறைந்தவை என்று சமீபத்தில் ஒரு கட்டுரை வாசித்திருக்கின்றேன். வண்ணங்கள் எங்களின் கண்களுக்கு தெரியவில்லை என்பதே உண்மை என்கின்றார்கள். உள்ளவற்றில் குறைவான விலையில் உள்ள விமான பயணச் சீட்டை நாங்கள் வாங்கியிருந்தோம். ஆதலால் அவர்களே இருக்கைகளை தெரிவு செய்து கொடுப்பார்கள். கொடுத்தார்கள். மூன்று இருக்கைகள் ஒன்றாகவும், மற்றைய இருக்கை அந்த வரிசைக்கு பின் வரிசையிலும் இருந்தன. ஒரு பொல்லாப்பும் இல்லை. நான் பின் வரிசையில் இருக்கலாம், மற்ற மூவரும் ஒன்றாக இருங்கள் என்றேன். அப்படியான ஒரு முடிவையும் உடனேயே எடுக்கத் தேவையில்லை என்றது குடும்பம். இன்றைய உலகம் எந்த அவசர உடன்படிக்கைக்கும் தயாராக இல்லாதது. காத்துக் கொண்டிருக்கும் போது 'பயணிகள் கவனிக்கவும்.................' என்று ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது. பாலகுமாரனின் ஒரு நாவலின் தலைப்பு இது. அவரை விழுந்து விழுந்து வாசித்த ஒரு காலம் இருந்தது. அது பதின்ம வயதுகள். அன்று வாசித்த அவரின் கதைகள் பலவும் இன்றும் சாராம்சமாக ஞாபகத்தில் இருக்கின்றன. சாராம்சமாக இருப்பதால் எல்லாமே ஒரே ஒரு கதை தான் என்றும் தோன்றுகின்றது. பின்னர் பெரிய இடைவெளி. அந்த இடைவெளியில் அவர் ஒரு சித்தர் ஆக மாறியிருந்தார். எழுத்துச் சித்தரோ அல்லது அப்படி ஏதோ ஒன்று சொன்னார்கள். புஷ்பா தங்கத்துரை கூட ஒரு பக்தி இதழில் எழுதுவதாகவும் பார்த்திருந்தேன். நாங்கள் ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகள் வாழ்ந்து தான் முடிப்போம் போல. 'விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால்.............' என்று தொடர்ந்தது அறிவிப்பு. வீட்டுக்கு திரும்பி போகச் சொல்லப் போகின்றார்களா என்று படபடத்தோம். சில வாரங்களின் முன் கனடா போகும் பொழுதும் இதே டெல்டா விமான நிறுவனம் தான். அவர்கள் எங்கேயோ மழையோ புயலோ என்று அன்று எங்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஒரு நாள் பிந்தியே கனடா போயிருந்தோம். ஆஸ்திரேலியா பயணத்தை மிகக் குறுகியதாகவே திட்டமிட்டிருந்தோம். அதில் ஒரு நாள் அநியாயமாகப் போய் விடுமோ என்பதே படபடக்க வைத்தது. பிரபஞ்சத்தில் ஒளியின் வேகமே மிக அதிகமானது என்கின்றார்கள். ஆனால் மனதின் வேகம், எண்ணங்களின் வேகம் ஒளியின் வேகத்தை விட மிகவும் அதிகம் என்பதே என் அனுபவம். பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், விமானம் மேலே எழும்பும் போதும், அது கீழே இறங்கும் போதும், விமானத்தின் சமநிலையைப் பேணுவதற்காக எல்லோரும் ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலேயே இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் சொன்னார்கள். இருக்கைகள் அந்த ஒழுங்கிலேயே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் சொன்னார்கள். மேலும் சில வரிசைகள் இதன் காரணமாக முற்றிலும் வெறுமனே இருக்கும் என்றார்கள். இது புதிது, நான் முன்பின் அறிந்திராதது. விமானம் கிடையாக பறக்க ஆரம்பித்த பின் எங்கேயும் இருக்கலாம் என்றார்கள். எங்கள் நால்வரில் யார் பின் வரிசையில் இருப்பது என்ற உடன்படிக்கை ஏறக்குறைய தேவை இல்லை என்றாகியது. அந்த வரிசையில் வேறு எவருமே இல்லை. எல்லாமே எங்களுக்கு மட்டும் தான் என்றாகியது. அந்த அதிகாலைப் பொழுதில் சிட்னி விமான நிலையத்தில் ஆட்களையும் பார்க்கவில்லை, கொண்டு போகும் பொருட்களையும் எவரும் பார்க்கவில்லை. ஒரே ஒரு அதிகாரி வெளியேறும் வாசலில் நின்றார். ஏதாவது தடைசெய்யப்பட்ட பொருட்கள் எடுத்துக் கொண்டு போகின்றீர்களா என்று கேட்டார். நாங்கள் நால்வரும் மொத்தமாக நான்கு பெரிய பொதிகளும், நான்கு சிறிய பொதிகளும் வைத்திருந்தோம். கனடா மில்லில் அரைக்கப்பட்ட மஞ்சள் தூள் மற்றும் சில பொருட்களும் இருந்தன. சிட்னி விமான நிலையத்தில் முன்னரும் பல விதமான அனுபவங்கள் எங்களுக்கு இருக்கின்றன. இருபது வருடங்கள் அல்லது அதற்கு முன்னர் முதல் தடவையாக அங்கு போயிருந்த போது, எங்கள் நால்வரையும் ஒரு அதிகாரி விசேடமாகப் பார்த்தார். எங்களின் கடவுச்சீட்டுகளின் மீதே அவருக்கு பெருத்த சந்தேகம் இருந்தது போல. அதன் பின்னரும் சில அனுபவங்கள். ஆஸ்திரேலியாவை மிகவும் சிரமப்பட்டே காப்பாற்றுகின்றார்கள் என்று தெரிந்தது. காற்றே புகாத இடத்தில் கூட இலங்கையர்களும், இந்தியர்களும், சீனர்களும் புகுந்து விடுவார்கள் என்ற தகவல் இவர்களுக்கு காலம் பிந்தியே தெரிய வரும். சிட்னிக்கும், லாஸ் ஏஞ்சலீஸூக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. சீதோசன நிலை முக்கியமான ஒன்று. பெரும்பாலும் குளிர் இல்லாத இடங்கள் இந்த இரு நகரங்களும். மேலும் சிட்னி அமெரிக்க நகர்களின் சாயலிலேயே அமைக்கப்பட்டும் இருக்கின்றது. உதாரணமாக சியாட்டில் நகரம். சிட்னி விமான நிலையத்தில் இருந்து சிட்னி முருகன் கோவில் இருக்கும் பகுதிக்கு போவதற்கு நேரடியாக ஒரு பெருந்தெரு இப்பொழுது இருக்கின்றது. இது முன்னர் இருக்கவில்லை. கட்டணம் உண்டு, ஆனால் ஒரு இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்களில் வீட்டுக்கு போய்விட்டோம். ' பெருந் தெருக்களை கட்டு, போய் வர கட்டணம் அறவிடு................' என்பது அண்ணன் காட்டிய வழி போல. வழி நெடுகிலும் பல புதிய உயர்ந்த குடியிருப்புகள் புதுதாகத் தோன்றியிருந்தன. ஏராளமானவை. பல வருடங்களின் முன் கனடாவில் நம்மவர்கள் இருக்கும் பகுதிகளில் இப்படி இருந்தன. ஆஸ்திரேலியாவில் இந்தக் குடியிருப்புகளில் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டேன். 'இந்தியர்கள்...........புதிதாக வந்தவர்கள்.........' என்று சொன்னார்கள். காற்றுப் புக முடியாத இடமென்றாலும், நல்ல இடமென்றால் நாங்கள் குடியேறி விடுவோம் என்பது சரிதானே. சிட்னி விமான நிலையத்தில் எங்களை ஏன் அதிகாரிகள் எந்தச் சோதனைகளும் இல்லாமலேயே வெளியே விட்டார்கள் என்பதும் புரிந்தது. அந்த அதிகாரிகள் வேறு யாருக்காகவோ காத்துக் கொண்டு நிற்கின்றார்கள் போல. (தொடரும்...............) ** செயற்கை நுண்ணறிவிடம் ஒரு படம் வரையச் சொன்னேன். அதன் பூகோள அறிவு கொஞ்சம் அப்படி இப்படித்தான் போல. அதன் தவறைச் சுட்டிக்காட்டினேன். அதன் பிறகு அதனிடம் இருந்து வந்தது இன்னும் கொடுமை............. அதனால் இதுவே போதும், மனிதர்கள் புரிந்து கொள்வார்கள் என்று அப்படியே இங்கு போட்டுள்ளேன்.