கணினி வளாகம்

இனி சிம் கார்டுகளின் அவசியம் இருக்காதா?!

2 days 6 hours ago

இனி சிம் கார்டுகளின் அவசியம் இருக்காதா? - புதிய ஐஃபோன் 17 ஏன் இவ்வாறு உள்ளது?

விரல் நுனியில் சிம்கார்டு இருப்பது போன்ற ஒரு படம்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • கிரஹாம் ஃப்ரேசர்

  • தொழில்நுட்ப செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஸ்மார்ட்ஃபோன்களின் விஷயத்தில், ஆப்பிள் என்ன செய்தாலும் மற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் அதையே பின்பற்றும். எனவே, இந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் பாரம்பரிய சிம் கார்டு இல்லாத ஐபோனை அறிமுகப்படுத்தியிருப்பது, அனைவரும் அறிந்த இந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

அனைத்து ஃபோன் பயனர்களுக்கும், தங்கள் சாதனங்களைச் செயல்பட வைக்க செருக வேண்டிய சிறிய பிளாஸ்டிக் கார்டுகளை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள்,

ஆனால், ஐபோன் ஏர்-ஐ வாங்குபவர்களுக்கு அது பழங்கால விஷயமாகிவிடும்.

இந்த ஐபோன் இ-சிம் உடன் மட்டுமே இயங்கும். இது பயனர்கள் தங்கள் நெட்வொர்க்கை அல்லது திட்டங்களை மாற்ற, சிம் கார்டு ட்ரே-ஐத் திறக்க ஒரு குண்டூசியைக் கொண்டு குடைந்து சிரமப்படத் தேவையில்லை.

CCS இன்சைட் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கெஸ்டர் மான், பிபிசி செய்தியிடம், ஆப்பிளின் இந்த அறிவிப்பு "பொருள்ரீதியான சிம் கார்டின் முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது" என்று கூறினார்.

ஆனால், நாம் அனைவரும் நமது சிறிய சிப் உள்ள பிளாஸ்டிக் துண்டுகளை நிரந்தரமாகக் கைவிட எவ்வளவு காலம் ஆகும்? அது நமது ஃபோன்களைப் பயன்படுத்தும் விதத்தில் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?

'சிம் கார்டு ட்ரே மறைந்துவிடும் என எதிர்பார்க்கலாம்'

போனில் சிம் கார்டு பொருத்தும் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல ஆண்டுகளாக சிம் கார்டுகள் ஸ்மார்ட்ஃபோன்களுடன் இணைந்ததாக இருந்துள்ளன.

சிம் என்பதன் விரிவாக்கம் Subscriber Identity Module (பயனர் அடையாள மாதிரி) என்பதாகும். இந்தச் சிப் உங்கள் ஃபோனின் ஒரு முக்கியப் பகுதியாகும். இது உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநருடன் இணைய, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பயன்படுத்த, உங்கள் டேட்டாவை இயக்க உதவுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், இ-சிம் ஒரு மாற்று வழியாக உருவெடுத்துள்ளது. புதிய ஃபோன்களில் பயனர்களுக்கு ஒரு பாரம்பரிய சிம் அல்லது இ-சிம் இரண்டையும் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

செவ்வாய்க்கிழமை, ஆப்பிள் குடும்பத்தின் புதிய, மற்றும் மிக மெல்லிய தயாரிப்பான புதிய ஐபோன் ஏர் பற்றிய அறிவிப்பில், அது இ-சிம்-ஐ மட்டுமே கொண்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று அந்த தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனம், கூறியது.

இ-சிம் மட்டுமே கொண்ட ஐபோன் உலகம் முழுவதும் கிடைப்பது இதுவே முதல்முறை. அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்கள் 2022 முதல் இ-சிம் மட்டுமே கொண்ட ஐபோன்களைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், ஆப்பிள் நிறுவனம் கூட வழக்கமான சிம் கார்டை முழுமையாகக் கைவிடவில்லை.

இந்த வாரம் அது அறிவித்த மற்ற புதிய ஐபோன்களான – 17, 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை சில சந்தைகளில் இ-சிம் மட்டுமே கொண்டவையாக இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், பெரும்பாலான நாடுகளில் அவை வழக்கமான சிம் கார்டு ஸ்லாட்டுகளைத் தக்கவைத்துக் கொள்ளும்.

சாம்சங் மற்றும் கூகிள் போன்ற பிற பெரிய உற்பத்தியாளர்களும், இ-சிம்களை ஒரு தேர்வாக ஏற்றுக்கொண்டாலும், பெரும்பாலான இடங்களில் வழக்கமான சிம் கார்டுகளை இன்னும் பராமரித்து வருகின்றனர்.

இருப்பினும், முன்னேற்றம் எந்த திசை நோக்கி இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

CCS இன்சைட்டின் சமீபத்திய கணிப்பின்படி, 2024 இறுதிக்குள் 1.3 பில்லியன் இ-சிம் ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்பாட்டில் இருந்தன. இந்த எண்ணிக்கை 2030 க்குள் 3.1 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"காலப்போக்கில், சிம் ட்ரே முற்றிலும் மறைந்துவிடும் என எதிர்பார்க்கலாம்," என்று PP ஃபோர்சைட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆய்வாளர் பாலோ பெஸ்காடோர் கூறினார்.

ஐபோன் ஏர் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்பிள் ஐபோன் ஏர், இதுவரை உருவாக்கப்பட்ட மிக மெல்லிய ஐபோன் ஆகும்.

இ-சிம்-ன் நன்மைகள் என்ன?

இ-சிம்-க்கு மாறுவது "பல நன்மைகளை" வழங்குவதாக பெஸ்காடோர் கூறினார். மிக முக்கியமாக, ஃபோனின் உட்புறத்தில் சிறிது இடத்தை மிச்சப்படுத்துவதால், பெரிய பேட்டரிகளைச் பயன்படுத்த முடியும்.

பிளாஸ்டிக் சிம் கார்டுகள் பயன்படுத்தப்படாததால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகளையும் அவர் வலியுறுத்தினார். மேலும், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் மக்கள் இ-சிம்-ஐப் பயன்படுத்தும்போது அதிக சேவை வழங்குநர் விருப்பங்கள் கிடைக்கும் என்றும் "கட்டண அதிர்ச்சிகள்" இருக்காது என்றும் அவர் நம்புகிறார்.

இது புதிய வாடிக்கையாளர் நடத்தைகளைக் கொண்டுவரும் என்றும், "மக்கள் தங்கள் மொபைல் வழங்குநருடன் தொடர்புகொள்ளும் விதத்தை மெதுவாக மாற்றும்" என்றும் கெஸ்டர் மான் கூறினார்.

உதாரணமாக, சில வாடிக்கையாளர்கள் தங்கள் வழங்குநருடன் சிம் குறித்துப் பேச, ஒரு கடைக்குச் செல்லத் தேவையில்லை.

ஒரு கடைக்கு நேரடியாக செல்லும் நேரத்தை மிச்சப்படுத்த விரும்புபவர்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கலாம்.

ஆனால், எல்லா மாற்றங்களைப் போலவே, இது அனைவராலும் வரவேற்கக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

"இந்த மாற்றம் வயதானவர்கள் அல்லது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நம்பிக்கையில்லாதவர்களுக்கு குறிப்பாக முக்கியமானது. இ-சிம்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்கத் தொழிற்துறை கடினமாக உழைக்க வேண்டும்" என்று மான் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c15kq82vqweo

iPhone 17-ன் புதிய அம்சங்கள் என்ன?

3 days 17 hours ago

12 செப்டெம்பர் 2025, 04:48 GMT

புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்

iPhone 17 சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே உள்ள பிற ஐபோன்களை விட வடிவத்தில், தோற்றத்தில் பெரிய வித்தியாசங்கள் கொண்டிருக்கவில்லை. செல்போனின் பின்புறம் கேமராவுக்கான கூடுதல் லென்ஸ் அமைக்கும் வகையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதை தவிர தோற்றத்தில் வேறு மாற்றங்கள் இல்லை. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பல புதிய அம்சங்களை இந்த செல்போன் கொண்டுள்ளது.

செல்ஃபி எடுக்கும் போது, எத்தனை பேர் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஃப்ரேம் சரி செய்துக் கொள்ளப்படும் தொழில்நுட்பம் இதில் உள்ளது.

இது தான் மிகவும் ஒல்லியான ஐஃபோன் என்று கூறப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் சார்ஜ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp8jvn60ym4o

உங்கள் ஸ்மார்ட் போன் கால் செட்டிங் திடீரென மாறிவிட்டதா? இதுதான் காரணம்

3 weeks 2 days ago

ஒருவரை அழைக்கும்போதோ அல்லது ஆண்ட்ராய்டு போனில் இருந்து அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

பட மூலாதாரம், X

கட்டுரை தகவல்

  • ஓமர் சலிமி

  • பிபிசி உருது

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் என்றால், சில நாட்களுக்கு முன்பு உங்கள் போனில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம்.

ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் பலரும் கேள்விகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

சிலர் இது குறித்த தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆண்ட்ராய்டு போனில் இருந்து நீங்கள் ஒருவரை அழைக்கும்போதோ அல்லது அழைப்பைப் பெறும்போதோ, போனின் காட்சி மற்றும் வடிவமைப்பு மாறியதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

எந்த அமைப்புகளையும் மாற்றாமல், இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என பலரும் குழப்பமடைந்துள்ளனர். சிலர் தங்களது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிக்கும் பலரும் இது குறித்த தகவல்களை பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

உலகம் முழுவதிலுமிருந்து ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிப்பவர்கள் தங்கள் தொலைபேசிகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த மாற்றங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளன. ஆப்பிள் போன்களில் இந்த மாதிரியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதால், அந்த போன்களைப் பயன்படுத்துபவர்கள் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.

ஆனால், ஆண்ட்ராய்டு போன்களில் மட்டும் இந்த மாற்றங்கள் ஏற்பட்டதற்கு என்ன காரணம்?, இந்த அமைப்புகள் எவ்வாறு மாற்றப்பட்டன, அவற்றை பழைய படி மாற்ற முடியுமா என்பதற்கான பதில்களைத் தேட முயற்சித்தோம்.

'ஹேக்கிங்' செய்யப்பட்டதா? உண்மையான காரணம் என்ன?

ஆண்ட்ராய்டு போன்களை உபயோகிக்கும் பலரும் இந்த பிரச்னைக்கு பதில்களைத் தேடியுள்ளனர்.

சிலர் இதை 'ஹேக்கிங்' என்று கூறியுள்ளனர், மற்றவர்கள் இந்த மாற்றம் அரசு நிறுவனங்களின் கண்காணிப்பு முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

"வாழ்த்துக்கள், உங்கள் தொலைபேசி அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. ஒரு மென்பொருளும் தானாகவே நிறுவப்பட்டுள்ளது" என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் "உங்கள் கையில் இருக்கும் மொபைல் போனின் அமைப்புகள் திடீரென்று மாறிவிட்டன. நீங்கள் உண்மையிலேயே பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறீர்களா?" என்ற கேள்வியை ஒருவர் எழுப்பியுள்ளார்.

டயலர் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், GOOGLE

படக்குறிப்பு, பலர் தங்கள் தொலைபேசிகளில் அழைப்பு மற்றும் டயலர் அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

ஆனால், போனின் காட்சி அமைப்புகள் மாறியுள்ளதால், அதற்கு 'ஹேக்கிங்' என்றோ, அல்லது அந்த நிறுவனம் உங்கள் புகைப்படங்கள் அல்லது செய்திகளைத் திருடுகிறது என்றோ அர்த்தமல்ல என மற்றொருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மொபைல் போன் நிறுவனங்கள் அவ்வப்போது தொலைபேசிகளைப் புதுப்பிக்கின்றன. இதனால் அவை முன்பை விட சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் மாறுகின்றன என்பது தான் அவரது கருத்து.

இந்த மாற்றம் நிகழ்ந்தது எப்படி ?

அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான மென்பொருளும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது, அதே நிறுவனத்தால் புதுப்பிக்கவும் படுகிறது (அப்டேட் செய்யப்பட்டுள்ளது ).

'மே 2025' இல், 'மெட்டீரியல் 3D எக்ஸ்பிரசிவ்' என்ற புதிய அமைப்பை வெளியிடுவதாக கூகுள் அறிவித்தது. இது கடந்த சில ஆண்டுகளில் வந்த மிகப்பெரிய அப்டேட்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது, தொலைபேசியின் மென்பொருளையும், அமைப்பையும் எளிதாகவும், வேகமாகவும், பயன்படுத்த உதவும் வகையில் மாற்றும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

தொலைபேசியின் மென்பொருளையும் காட்சியையும் எளிதாகவும், வேகமாகவும், பயன்படுத்த உதவும் வகையில்  மாற்றும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, அனைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கான மென்பொருளும் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது

முன்னதாக, எங்கள் ஆண்ட்ராய்டு போன்கள் 'மெட்டீரியல் 3D' என்ற வடிவமைப்பில் இயங்கியது. 'இதன் வழக்கமான பயன்பாட்டின் காரணமாக பில்லியன் கணக்கான நபர்கள் அதற்குப் பழக்கமாகிவிட்டனர்' என கூகுள் கூறியது.

புதிய அப்டேட்டில் அறிவிப்புகள், வண்ண தீம்கள், புகைப்படங்கள், ஜிமெயில் மற்றும் வாட்ச் போன்ற பல விஷயங்கள் மாற்றப்பட்டு வருவதாக கூகிள் தெரிவித்துள்ளது. புதிதாக செய்யப்பட்ட மாற்றங்களும் அதில் ஒரு பகுதியாகும்.

பயனாளர் அனுமதியின்றி எவ்வாறு மாற்றப்பட்டன?

'மெட்டீரியல் 3D எக்ஸ்பிரஸிவ்' என்ற அப்டேட்டின் கீழ், ஆண்ட்ராய்டு போனின் அழைப்பு செயலியுடைய வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த அப்டேட் முதலில் ஜூன் மாதத்தில் சிலருக்கு மட்டும் வெளியிடப்பட்டது. பின்னர் அது படிப்படியாக பரவலாக வெளியிடப்பட்டது.

அழைப்பு மேற்கொள்ளும் செயலியை மேலும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுவது தான் இதன் நோக்கம் என கூகுள் கூறியது.

'சமீபத்திய' (சமீபத்திய அழைப்புகள்) மற்றும் 'முக்கிய எண்கள்' போன்றவற்றை நீக்கிய கூகுள், அவற்றை 'முகப்பு' என்ற பகுதியில் ஒன்றிணைத்துள்ளது. எனவே இப்போது நீங்கள் அழைப்பு செயலியைத் திறக்கும் போது, 'முகப்பு' மற்றும் 'கீபேட்' என்ற இரண்டு பகுதிகளை மட்டுமே காண்பீர்கள்.

ஒரே எண்ணிலிருந்து வரும் அனைத்து அழைப்புகளும் இனி ஒன்றாகவோ அல்லது ஒரே இடத்திலோ காட்டப்படாது.

யாரை எந்த நேரத்துக்கு அழைத்தீர்களோ அந்த வரிசைப்படி தனித்தனியாகக் காட்டப்படும். இதனால் நீங்கள் அந்த தொடர்பை மீண்டும் மீண்டும் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

தங்கள் அழைப்பு வரலாற்றை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த மாற்றம் உதவும் என்று கூகிள் கூறுகிறது.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, பல மொபைல் போன்களில் அழைப்பு மற்றும் டயல் அமைப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தால் பயனர்கள் குழப்பமடைந்தனர், பலர் சமூக ஊடகங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.

தங்கள் அழைப்பு வரலாற்றை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த மாற்றம் உதவும் என்று கூகிள் கூறுகிறது.

எத்தனை தவறவிட்ட அழைப்புகள் உள்ளன அல்லது எத்தனை அழைப்புகள் பெறப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, ஒவ்வொரு எண்ணையும் தனித்தனியாகத் திறக்க வேண்டிய அவசியமில்லை என்று கூகுள் விளக்கியுள்ளது.

இதற்குப் பிறகு, மொபைல் போன் உபயோகிப்பவர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் 'அழைப்பு' மற்றும் 'இன்-கால்' வடிவமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன.

புதிய வடிவமைப்பின்படி, அழைப்பின் வடிவமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போனை உபயோகிப்பவர்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து தொலைபேசியை எடுக்கும்போது தற்செயலாக அழைப்புகளைப் பெறவோ அல்லது துண்டிக்கவோ மாட்டார்கள்.

கூகுளின் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வரும் எதிர்வினைகளைப் பார்க்கும்போது, பலருடைய தொலைபேசி செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் பலருடைய தொலைபேசியில் இந்த அப்டேட்கள் இடம்பெறவில்லை.

போன் செயலியை டயலர் செயலியாக அமைத்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

பட மூலாதாரம், GOOGLE

படக்குறிப்பு, கூகுள், போன் செயலியை டயலர் செயலியாக அமைத்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

சிலர் தங்கள் தொலைபேசிகளில் கூகிள் பிளே ஸ்டோரில் ஆட்டோமேட்டிக் அப்டேட்கள் (தானியங்கி புதுப்பிப்புகளை) ஆன் செய்திருப்பதால், சில செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்படுகின்றன என கூகுள் வலைப்பதிவில் ஒருவர் கூறியுள்ளார்.

மொபைல் போனை உபயோகிப்பவர்கள், இந்த ஆட்டோமேட்டிக் அப்டேட்டகளுக்கான அனுமதியை ஆப் செய்துவிட்டு, தொலைபேசி செட்டிங்ஸ்க்கு சென்று 'Uninstall Updates' என்பதை கிளிக் செய்து, தொலைபேசி அழைப்பின் காட்சி அமைப்புகளை பழைய நிலைக்கு மாற்றி அமைக்கலாம் என்று அவர் கூறினார்.

பிரபல மொபைல் நிறுவனமான ஒன்பிளஸும் இதே விளக்கத்தைத் தான் வழங்கியுள்ளது.

"ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, "இது ஒன்பிளஸ்ஸிலிருந்து அல்ல, கூகுள் போன் செயலியின் அப்டேட்டில் இருந்து வந்தது. உங்கள் தொலைபேசியில் இருந்த பழைய முறையே பிடித்திருந்தால், அப்டேட்களை நீக்கவும்"என நிறுவனம் பதில் அளித்தது.

எனவே, நீங்களும் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்திருந்தால் குழப்பமடைய வேண்டாம்.

பழைய முறையிலேயே உங்களது போன் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த புதிய அப்டேட்களை விரும்பவில்லை என்றால், 'Uninstall Updates'-இன் மூலம் பழைய முறையையே நீங்கள் தேர்வு செய்யலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cev2p79depno

மோசடிகளுடன் தொடர்புடைய 6.8 மில்லியன் கணக்குகள் நீக்கம் - வட்ஸ் அப்

1 month 1 week ago

Published By: DIGITAL DESK 3

06 AUG, 2025 | 03:29 PM

image

இவ்வருடத்தின் முதல் பாதியில் உலகெங்கிலும் உள்ள மக்களை குறிவைத்து மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட 6.8 மில்லியன் கணக்குகளை வட்ஸ்அப் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுப்படும் மோசடி மையங்களுடன் பலர் பிணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் செயல்பாடுகளில் கட்டாயப்படுத்தி உழைப்பை பெற்றுள்ளதாக மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளம் தெரிவித்துள்ளது.

பயனர்களை அவர்களின் தொடர்பு பட்டியலில் இல்லாத நபர் குழு ஒன்றில் இணைக்கும் போது ஏற்படும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிய மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளை வட்ஸ்அப் அறிமுகப்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, குற்றவாளிகள் வட்ஸ்அப் கணக்குகளை அபகரிப்பது அல்லது போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் பிற மோசடிகளை ஊக்குவிக்கும் குழு அரட்டைகளில் பயனர்களைச் சேர்ப்பது அதிகரித்து வரும் பொதுவான தந்திரத்தை இலக்காகக் கொண்டுள்ளது.

மோசடி மையங்கள் அவற்றைச் செயல்படுத்துவதற்கு முன்பே கணக்குகளை கண்டறிந்து அவற்றை நீக்கியதாக வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

ஒரு சந்தர்ப்பத்தில், போலியான ஸ்கூட்டர் வாடகை பிரமிட் திட்டத்தை விளம்பரப்படுத்த, சமூக ஊடக இடுகைகளில் லைக்குகளுக்கு பணத்தை வழங்கிய கம்போடிய குற்றவியல் குழுவுடன் தொடர்புடைய மோசடிகளை முறியடிக்க வட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டா, ChatGPT-டெவலப்பரான OpenAI உடன் இணைந்து பணியாற்றியுள்ளது.

மோசடி செய்பவர்கள் ChatGPT ஐப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளை உருவாக்கியதாக வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

பொதுவாக, மோசடி செய்பவர்கள், உரையாடலை சமூக ஊடகங்கள் அல்லது தனியார் செய்தியிடல் செயலிகளுக்கு மாற்றுவதற்கு முன்பு, குறுஞ்செய்தி ஒன்றின் மூலம் சாத்தியமான இலக்குகளைத் தொடர்புகொள்வார்கள் என வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

இந்த மோசடிகள் பொதுவாக பணம் பெறுதல் அல்லது கிரிப்டோகரன்சி தளங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளது.

மக்களிடம் பில்லியன் கணக்கான டொலர்களை ஏமாற்றி பெற்றுக்கொள்ள மியன்மார், கம்போடியா மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து மோசடி மையங்கள் செயல்படுவதாக அறியப்படுகிறது.

இந்த மையங்கள் மக்களுக்கு வேலை த’ருவதாக கூறி அவர்களை மோசடிகளைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றன.

மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், தங்கள் கணக்குகள் திருடப்படாமல் பாதுகாக்க வட்ஸ்அப்பின் இரண்டு-படி சரிபார்ப்பு அம்சம் போன்ற மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும் பிராந்திய அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில், செய்தியிடல் பயன்பாடுகளில் பயனர்கள் பெறும் எந்தவொரு அசாதாரண கோரிக்கைகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸாரினால் கூறப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/221957

Checked
Mon, 09/15/2025 - 22:38
கருவிகள் வளாகம் Latest Topics
Subscribe to கணினி வளாகம் feed