1 month 3 weeks ago
சௌதியில் இந்தியர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலி - என்ன நடக்கிறது? பட மூலாதாரம், Raj K Raj/Hindustan Times via Getty படக்குறிப்பு, கோப்புப் படம் 17 நவம்பர் 2025 (இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) சௌதி அரேபியாவுக்கு புனித யாத்திரை சென்ற இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் இறந்துவிட்டதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜனார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மொத்தம் 54 பேர் ஹைதராபாத்தில் இருந்து ஜெட்டாவுக்கு நவம்பர் 9ம் தேதி கிளம்பியிருக்கிறார்கள். அதில் நான்கு பேர் மெக்காவிலேயே இருந்துவிட்டனர். இன்னும் நான்கு பேர், கார் மூலம் ஞாயிற்றுக்கிழமை மதினா சென்றடைந்தனர். மீதமிருந்த 46 பேர் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள்" என்று கூறினார். அவர்கள் மெக்காவிலிருந்து மதினா சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து ஆயில் டேங்கர் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்து மதினாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் நடந்திருக்கிறது. "பேருந்தில் சென்றவர்களில் ஒருவர் தவிர 45 பேர் இறந்துவிட்டனர். காயமடைந்த ஒரேயொரு பயணி மொஹம்மது அப்துல் ஷோயப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்" என்று தெரிவித்தார் வி.சி.சஜனார். இவர்கள் அனைவரும் வரும் 23ம் தேதி ஜெட்டாவில் இருந்து ஹைதராபாத் திரும்புவதற்கு விமான டிக்கட் பதிவு செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், PTI ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகமும் விபத்தை உறுதி செய்திருக்கிறது. அத்துடன், பேருந்து விபத்து தொடர்பான தகவல்களை அது வழங்கியுள்ளது. "ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் சௌதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் மற்றும் பிற உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளன. அவர்கள் சம்பந்தப்பட்ட உம்ரா நடத்துபவர்களுடனும் தொடர்பில் உள்ளனர்" என்று அதன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்திய சமூகத்தைச் சேர்ந்த துணைத் தூதரக ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்கள் பல மருத்துவமனைகளிலும் சம்பவ இடத்திலும் உள்ளன. ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் முழு உதவியை வழங்கி வருகின்றன" என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஒரு கட்டுப்பாட்டு அறையையும் அமைத்திருக்கிறது. "சௌதி அரேபியாவின் மதீனா அருகே இந்திய யாத்ரீகர்கள் பயணம் செய்த பேருந்து துயர விபத்தை சந்தித்தது. இதையடுத்து, ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது" என்று துணை தூரதகம் அறிவித்திருக்கிறது. உதவி எண்: 8002440003 மெக்காவில் இருந்து மதீனா சென்றபோது இந்தப் பேருந்து விபத்துக்குள்ளானதாகவும், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்களும் அதில் இருந்தனர் என்றும் தகவல்கள் சொல்லப்பட்டிருப்பதாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இதுதொடர்பாக அனைத்து தகவல்களையும் விரைந்து பெறுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை டிஜிபி-க்கு (DGP) உத்தரவிட்டுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சௌதி அரேபியா தூதரகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்குமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தியுள்ளார். பட மூலாதாரம், Stefan Wermuth/Bloomberg via Getty படக்குறிப்பு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சௌதி அரேபியா தூதரகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்குமாறு அதிகாரிகளை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார் ஹைதராபாத் எம்பி-யும் ஏஐஎம்ஐஎம் தலைவருமான அசாதுதின் ஒவைசியும் இந்தச் சம்பவம் குறித்துப் பேசியிருக்கிறார். "ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் நான் பேசினேன். இதுபற்றி தகவல்கள் பெற்றுவருவதாக அவர்கள் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்துமாறும், இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் இந்திய அரசையும், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரையும் கேட்டுக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உரிய தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார். இந்த விபத்துடன் தொடர்புடைய தகவல்களை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்குவதற்கும், மீட்பு பணிகளை கண்காணிப்பதற்கும், தெலங்கானா தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை மொபைல் எண்கள்: +91 79979 59754 +91 99129 19545 பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன? சௌதி அரேபியாவின் மதீனாவில் உம்ரா பயணத்திற்காக இந்தியர்கள் பயணம் செய்த பேருந்து விபத்து குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். "சௌதி அரேபியாவின் மதீனாவில் இந்திய குடிமக்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் நான் மிகவும் வருத்தமடைந்தேன். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முழு உதவியை வழங்கி வருகின்றன" என்று எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறினார். குடும்பத்தினர் கோரிக்கை பட மூலாதாரம், Getty Images இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஒருவரின் உறவினரான முகமது மன்சூஃப் கூறுகையில், "என்னுடைய மூத்த சகோதரர் முகமது மன்சூர், தாய் ஷோஹ்ரத் பேகம், என்னுடைய அண்ணி ஃபர்ஹீன் பேகம் மற்றும் உடன்பிறந்தவரின் மகன் ஷாஹீன் ஆகிய நால்வரும் மெதீனாவுக்கு சென்றனர்." என்றார். அவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், தனது குடும்பத்தினர் குறித்து தகவல் அளிக்கப்பட வேண்டும் எனவும், தாங்கள் அங்கு செல்ல ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெலங்கானா அரசு ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும், மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது அசாருதீன் தலைமையிலான அரசுக் குழுவை அனுப்பவும் அமைச்சரவை திட்டமிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxr3p9d3yno
1 month 3 weeks ago
வீரர்களை தக்க வைப்பதில் ஆச்சர்யம் தந்த சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 17 நவம்பர் 2025 ஐபிஎல் 2026 தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அபு தாபியில் நடக்கிறது. இதற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை சனிக்கிழமை (நவம்பர் 15) வெளியிட்டன. 11 ஆண்டுகளாக தங்கள் அணியின் முக்கிய அங்கமாக இருந்த ஆண்ட்ரே ரஸலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் வெளியே விட்டிருக்கிறது. வெங்கடேஷ் ஐயர், கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டன், ரவி பிஷ்னாய் போன்ற பல முன்னணி வீரர்கள் தங்கள் அணிகளிலிருந்து கழற்றி விடப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மதீஷா பதிரானா, டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா என அவர்களின் அங்கமாக இருந்த பல வீரர்களை வெளியே விட்டிருக்கிறார்கள். டிரேட் செய்யப்பட்ட ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் தவிர்த்து 10 வீரர்களை ரிலீஸ் செய்திருக்கிறது சிஎஸ்கே. சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்ன திட்டத்தோடு அவர்கள் ஏலத்தில் களமிறங்குவார்கள்? தக்கவைத்த வீரர்கள் யார்? ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் யார்? தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் (டிரேட்), ஆயுஷ் மாத்ரே, டெவால் பிரெவிஸ், ஷிவம் தூபே, ஊர்வில் பட்டேல், நூர் அஹமது, நாதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், கலீல் அஹமது, ராமகிருஷ்ணா கோஷ், முகேஷ் சௌத்ரி, ஜேமி ஓவர்டன், குர்ஜப்னீத் சிங், அன்ஷுல் கம்போஜ். ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள்: ரவீந்திர ஜடேஜா (டிரேட்), ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, சாம் கரண் (டிரேட்), டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, மதீஷா பதிரானா, கமலேஷ் நாகர்கோட்டி, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, விஜய் சங்கர் இதுவரை பார்க்காத சிஎஸ்கே வழக்கமாக இப்படி மினி ஏலத்துக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யாது. அதிகபட்சம் 4 அல்லது 5 வீரர்களை மட்டும் ரிலீஸ் செய்வார்கள். அவர்களும்கூட பெரும்பாலும் போட்டிகளில் விளையாடாத இளம் வீரர்களாகவோ, சோபிக்காத வெளிநாட்டு வீரர்களாகவோ தான் இருப்பார்கள். ஆனால், இம்முறை மெகா ஏலத்தில் ரீடெய்ன் செய்திருந்த வீரர் உள்பட பலரையும் சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ரிலீஸ் செய்திருப்பது ஆச்சர்யமான ஒரு விஷயமாக கிரிக்கெட் வட்டத்தில் பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் உணர்வுகளைக் கடந்து யோசிக்கத் தொடங்கிவிட்டது என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஐபிஎல் அணிகள் தங்களின் பழைய சென்ட்டிமென்ட்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு இம்முறை முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இது மிகவும் நல்ல விஷயம். இப்போது சென்டிமென்ட் எல்லாம் பார்க்காமல் எதிர்காலத்துக்கு என்ன முக்கியம், கோப்பை வெல்ல என்ன முக்கியம் என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்" என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிஎஸ்கே-வின் அணுகுமுறைக்கு ஏற்ற வீரர்கள் என்று கருதப்பட்ட ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா போன்றவர்களும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள் "மற்ற அணிகள் நிறைய வீரர்களை ரிலீஸ் செய்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அப்படிச் செய்ததில்லை. அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று வீரர்களை ரிலீஸ் செய்வார்கள். எப்போதும் குடும்பம் என்ற அந்த உணர்வை அவர்கள் கடைபிடிப்பார்கள். ஆனால், கடந்த 2 சீசன்களில் அதன் செயல்பாடு அனைத்தையும் மாற்றியுள்ளது. அதேசமயம், நல்ல செயல்பாட்டைக் காட்டிய வீரர்களைத் தக்கவைத்துவிட்டு, மற்றவர்களை ரிலீஸ் செய்து மிகச் சரியான முடிவை எடுத்திருக்கிறார்கள்" என்றும் அவர் கூறினார். 2024 சீசனில் முதல் முறையாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கிய சூப்பர் கிங்ஸ். அப்போது ஐந்தாவது இடமே பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அடுத்த சீசனோ, இன்னும் மோசமாக அமைந்தது. 14 போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்ற சிஎஸ்கே, கடைசி இடமே பிடித்தது. காயத்தால் கேப்டன் ருதுராஜ் பாதியில் விலக, அதன்பின் தோனி அந்தப் பதவியை ஏற்று அணியை வழிநடத்தினார். ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு சீசன்கள் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாதது இதுவே முதல் முறை. இதனைத் தொடர்ந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை இல்லாத அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறது என்று கருதப்படுகிறது. ஜடேஜா - சாம்சன் டிரேட் குறித்துப் பேசிய அந்த அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் கூட, "எதிர்காலத்தை மனதில் வைத்து ஜடேஜாவை டிரேட் செய்யும் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டியதாகிவிட்டது" என்று கூறியிருந்தார். பேட்டிங்: இளைஞர்கள் கொடுத்த நம்பிக்கை கடந்த ஆண்டு சூப்பர் கிங்ஸின் பேட்டிங் பெரும் விமர்சனங்களை சந்தித்தது. 180 ரன்களை சேஸ் செய்வது அவர்களால் இயலாத காரியமாக இருந்தது. பெரும்பாலான வீரர்கள் மற்ற அணிகளைப் போல் வேகமாக ரன் குவிக்கத் தடுமாறினார்கள். கான்வே, ரச்சின், திரிபாதி, ஹூடா, விஜய் சங்கர் என பெரும்பாலான பேட்டர்கள் வெளியே அனுப்பப்பட அது முக்கியக் காரணமாக இருக்கும். இவர்கள் எல்லோருமே 'சிஎஸ்கே பிராண்ட் ஆஃப் கிரிக்கெட்டர்ஸ்' என்று கருதப்பட்டவர்கள். தடாலடி அதிரடி பேட்டர்களை விட கொஞ்சம் நிதானம், கொஞ்சம் அதிரடி என்று ஆடும் இவ்வகை பேட்டர்களையே சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகம் நம்பியிருந்தது. ஆனால், இவர்கள் கடந்த சீசன் சொதப்பியதும், மற்ற அணிகள் அதிரடி வீரர்களை வைத்து அடுத்த தளத்தை நோக்கிப் பயணித்ததும் சிஎஸ்கேவின் மாறாத அணுகுமுறை மீது கேள்வியெழுப்பியது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த ஆண்டு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரெவிஸ் இப்போது முக்கிய வீரராக உருவெடுத்திருக்கிறார் அதுமட்டுமல்லாமல், சீசனின் இறுதி கட்டத்தில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர்களே பழைய அணுகுமுறையிலிருந்து மாறி புதிய பாதையை நோக்கிப் பயணிப்பதற்கான உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார் நானீ. "கடந்த சீசன் இறுதியில் மாற்று வீரர்களாக வந்த இளம் பேட்டர்களான மாத்ரே, ஊர்வில், பிரெவிஸ் ஆகியோர் தங்கள் அநாயச அதிரடி ஆட்டத்தால் போட்டிகளின் போக்கையே மாற்றினார்கள். அவர்கள் புதிய அணுகுமுறையின் தேவையை உணர்த்தியிருக்கிறார்கள். அதுதான் இந்த மாற்றத்துக்கான காரணம்" என்று கூறிய அவர், இந்த இளம் வீரர்களோடு சஞ்சு சாம்சன் இணைவது சூப்பர் கிங்ஸின் பேட்டிங்கை நன்கு பலப்படுத்தியிருக்கிறது என்கிறார். இப்போது தக்க வைத்திருக்கும் பேட்டர்களைப் பார்க்கும்போது, மாத்ரே, சாம்சன், ருதுராஜ், துபே, பிரெவிஸ் என சூப்பர் கிங்ஸின் டாப் 5 முழுமையாக இருக்கிறது. கேப்டன் ருதுராஜை சுற்றி, முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டும் வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். அதனால் புதியதொரு பேட்டிங் அணுகுமுறையை சிஎஸ்கேவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். பந்துவீச்சு: நிறைய கேள்விகள் இருக்கின்றன இங்குதான் சென்னை சூப்பர் கிங்ஸ் மீது நிறைய கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக ஜடேஜாவை டிரேட் செய்துவிட்டு இன்னொரு முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவையும் விடுவித்தது இரண்டு பெரிய ஓட்டைகளை ஏற்படுத்திவிட்டது. மெகா ஏலத்துக்கு முன்னதாக 13 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டிருந்தார் பதிரானா. சூப்பர் கிங்ஸின் எதிர்காலமாகப் பார்க்கப்பட்ட அவர், அதற்குள் விடுவிக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பந்துவீச்சு முறை மாறியது, அவரது செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்தியது. அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் நானீ. "பதிரானாவின் பௌலிங் ஆக்ஷன் மாறிவிட்டது. இப்போது அவர் இலங்கை அணியில் கூட அதிகம் ஆடுவதில்லை. தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவில் நடந்த லீக்குகளிலும் அவர் சோபிக்கவில்லை. அதனால் இந்த முடிவை புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல் 13 கோடி ரூபாய் என்ற தொகையும் இந்த முடிவுக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம். இப்போது வெளியே விட்டுவிட்டு, ஏலத்தில் குறைந்த தொகைக்கு எடுக்க நினைத்திருப்பார்கள். நிச்சயம் அவரை சென்னை அணி எடுக்கும் என்றே நான் நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார். இன்னொருபக்கம் எல்லிஸ் சமீபமாக சிறப்பாக செயல்படுவதால், அவர் பிரதான வேகப்பந்துவீச்சாளராக கருதப்படுவார் என்று கூறப்படுகிறது. ஆனாலும், பதிரானாவை சிஎஸ்கே மீண்டும் எடுக்கக் கூடும் என்று நானீ நம்புகிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜடேஜா, அஷ்வின் இருவருமே இல்லாததால் சூப்பர் கிங்ஸின் சுழற்பந்துவீச்சு சற்று பலவீனமடைந்துள்ளது "கடந்த 2 ஆண்டுகளாக சேப்பாக்கம் முன்பு போல் சுழலுக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கவில்லை. அதனால் வேகப்பந்துவீச்சுக்கு உகந்த ஆடுகளங்களை அமைத்து, அதற்கு ஏற்ப அணியை கட்டமைப்பது சாதகமான விஷயமாக இருக்கும். அது சாம்சன் போன்ற சிஎஸ்கே பேட்டர்களுக்குமே கூட உகந்ததாக இருக்கும். அப்படி செய்தால் இரண்டாவது வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரும் தேவை" என்கிறார் அவர். சேப்பாக்கத்தின் தன்மை குறித்தும், அதைச் சார்ந்த சூப்பர் கிங்ஸ் கட்டமைப்பு குறித்தும் கடந்த சீசனில் அதிகம் விவாதிக்கப்பட்டது. சிஎஸ்கே அணிக்கு சுழல் தான் வெகுகாலம் அடையாளமாக இருந்தது. அதற்கு ஏற்ப கடந்த மெகா ஏலத்தில் ஒரு பெரும் சுழல் கூட்டணியை அவர்கள் உருவாக்கினார்கள். ஏற்கெனவே ஜடேஜாவை ரீடெய்ன் செய்திருந்தவர்கள், நூர் அஹமது மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வினை வாங்கினார்கள். ஆனால், நூர் அஹமது தவிர்த்து மற்ற இருவராலும் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் தோனியைப் போல் ருதுராஜ் கெய்க்வாட் சுழலை பெருமளவு பயன்படுத்தவும் யோசிக்கிறார். 2024 சீசனில் சேப்பாக்கத்தில் ஒருசில போட்டிகளில் 17-18 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சாளர்களையே அவர் பயன்படுத்தினார். இப்போது அவரே அணியின் கேப்டன் என்று சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், நானீ சொல்வதைப் போல் மாற்றம் நடக்கக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அஷ்வின் ஓய்வு பெற்றுவிட, ஜடேஜாவும் டிரேட் செய்யப்பட்டுவிட நூர் அஹமது மட்டுமே அணியின் முன்னணி ஸ்பின்னராக இருக்கிறார். இவர்போக, ஷ்ரேயாஸ் கோபால் மட்டுமே இப்போது தக்கவைக்கப்பட்டிருக்கும் ஒரே ஸ்பின்னர். அவர் கடந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட பயன்படுத்தப்படவில்லை. இந்த மினி ஏலத்தில் ராகுல் சஹார், ரவி பிஷ்னாய் போன்ற வெகுசில அனுபவ ஸ்பின்னர்களே இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரை வாங்கினாலும், அதிகபட்சம் 2 பிரதான ஸ்பின்னர்களோடு மட்டுமே சிஎஸ்கே களமிறங்கக்கூடும். இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே கேமரூன் கிரீனை வாங்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தால் அது ஹிட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சை பலப்படுத்தும். பேட்டிங் அணுகுமுறையில் இன்னும் நேர்மறை எண்ணத்தை வலுப்படுத்தும். அதேசமயம் அவருக்குப்பதில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களான மேக்ஸ்வெல், கூப்பர் கானொலி, லியாம் லிவிங்ஸ்டன் போன்ற யாரையேனும் வாங்கும் பட்சத்தில் அது சுழற்பந்துவீச்சை ஓரளவு பலப்படுத்தலாம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை அறியப்பட்ட அணுகுமுறையில் இருந்து மாறி வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை இந்த ரிடன்ஷன் பட்டியல் உணர்த்துகிறது. டிசம்பர் 16-ஆம் தேதி நடக்கும் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி அதிரடியாக சில வீரர்களை வாங்கக்கூடும். அதற்கான பெரும் தொகை அவர்களிடம் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgyqpk15pwo
1 month 3 weeks ago
இன்றைய வானிலை 18 Nov, 2025 | 06:27 AM இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, தென் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எ நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். https://www.virakesari.lk/article/230639
1 month 3 weeks ago
இனவாதம், மதவாதத்தை கடந்து இலங்கையில் ஒன்றும் செய்ய முடியாது என்பதையே இந்தச்செயல் காட்டி நிற்கின்றது. தமிழரும் சிங்களவரும் ஒன்று சேர்ந்தால்; இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. இருபத்தோராந்திகதி பேரணிக்கு அச்சாணி பூட்டியாயிற்று. இதை பிடுங்கினால்; இவர்களது எதிர்ப்பு பூதாகரமாக மாறும். இதற்கு அடிபணிந்தால் எல்லா அடாவடியும் இந்த முறையிலேயே அரங்கேறும். இதற்கு செய்ய வேண்டியது; மக்களுக்கு விழிப்புணர்வு, விசேடமாக புத்தரை வைத்து அரசியல் நடத்தும், வயிறு விளக்கும் பிக்குகளுக்கு மத அறிவை போதிப்பது. அன்பை போதிக்கும் பௌத்தம் அடாவடியை வளர்க்கிறது. அதை எதிர்பார்த்து தூபமிட்டது யார்? அடுத்தவன் காணியில், தேவையற்ற இடத்தில், காரணமில்லாமல் சிலை வைப்பது, விகாரை எழுப்புவதுதான் சஜித்தின் நல்லிணக்கமா? அதை கேட்டால் நல்லிணக்கம் கெடுகிறது கேட்காவிட்டால் நாடுமுழுவதும் விகாரை எழுப்புவது, பின் இது சிங்கள பௌத்தநாடு என வரலாறு திரிப்பது. அது சரி சாணக்கியன் அண்மையில் ஒரு கதை எழுதினாரே, அதற்கு என்ன நடந்தது? இதே சஜித்துக்கு செம்பு தூக்கிய சுமந்திரன் இப்போ அருண் ஹேமச்சந்திரா பதவி விலகவேண்டுமென கூவி தன்னை மறைக்க பாக்கிறாரா? அல்லது சஜித் சொன்னவை சரியென்கிறாரா? இவர் ஒரு சட்ட மேதை என்று சிலர் கூவுகின்றனரே, எங்கே தன் சட்டத்திறமையை நிரூபித்து அந்த புத்தரை வெளியேற்றட்டும் பாப்போம்! ம், இன்று பதினெட்டாந்திக்காதி, இன்னும் மூன்று நாள் இருக்கிறது, தமக்கு சார்பாக மக்களை திரட்டி பேரணியை நடத்துவதற்கு. அதற்கு, கேவலம் மதத்தை பயன்படுத்துவதும், பிக்குகள் அடாவடி செய்வதும் உண்மையான மதமா? எனக்கென்னவோ இதற்குப்பின்னால் சஜித் இருப்பதுபோல் தோன்றுகிறது. நீதிமன்ற உத்தரவு வரும்வரை புத்தர் சிலை நிறுவுவதை நிறுத்தியிருக்கலாம், அதற்காக அடாவடிக்கு அடிபணிந்து எல்லாவற்றுக்கும் அடிபணியும் தோத்துப்போன அரசியலே நடைபெற வாய்ப்புள்ளது. அடாவடிகள் இதே அடாவடியை, தந்திரத்தை பாவித்து தமது காரியத்தை நிறைவேற்றுவார்கள்.