1 month 3 weeks ago
“இந்த தீர்ப்பு பாரபட்சமானது ; அரசியல் உள்நோக்கம் கொண்டது” - ஷேக் ஹசீனா 17 Nov, 2025 | 06:02 PM டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது என நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் 2024ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களின்போது ஷேக் ஹசீனா தனது அரசியல் மற்றும் பதவி பலத்தை பிரயோகித்து பிறப்பித்த கடுமையான உத்தரவுகளால் பல வன்முறைகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக இன்று (17) டாக்கா நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்பட்டது. அத்துடன் அவர் பதவி நீக்கப்பட்டது முதல் இந்தியாவில் தலைமறைவாகியிருக்கிறார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளின்போதும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் தலைமறைவாக இருக்கின்ற இச்சந்தர்ப்பத்திலேயே இவ்வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு எதிராக டாக்கா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விதித்த மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “நான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை. எனக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தீரப்பு, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு மோசடி தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாரபட்சமானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது. கடந்த ஆண்டு போராட்டம் நடந்தபோது நாங்கள் கட்டுப்பாட்டை இழந்தோம். எனவே, அதனை குடிமக்கள் மீதான முன்கூட்டிய திட்டமிட்ட தாக்குதல் என்று வகைப்படுத்த முடியாது” என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230607
1 month 3 weeks ago
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை Nov 17, 2025 - 06:45 PM இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மூன்று படகோட்டிகள் உள்ளிட்ட 31 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் நீரியல்வளத்துறை அதிகாரிகள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த வழக்கு இன்று (17) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழக மீனவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டனர். இலங்கை கடற்பரப்பினுள் படகினை செலுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக, படகோட்டிகள் மூவருக்கும் 19 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படகில் இருந்த ஏனைய 28 மீனவர்களுக்கும் 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அதுவும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10 வருட காலப்பகுதிக்குள் மீண்டும் எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால், கைது செய்யப்படும் காலப்பகுதியில் விதிக்கப்படும் தண்டனையுடன், 18 மாத சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படகின் உரிமையாளர்களுக்கு படகு தொடர்பான வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் மே மாதம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 31 மீனவர்களும் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் ஊடாக மீரிகம முகாமிற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmi363s8201puo29nc77e8eh5
1 month 3 weeks ago
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - இந்தியாவுக்கு வங்கதேசம் விடுத்த கோரிக்கை பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தார் 17 நவம்பர் 2025, 09:45 GMT வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், (Bangladesh International Crimes Tribunal) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி எனக் கண்டறிந்ததாகவும், அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது. டாக்கா நீதிமன்ற உத்தரவுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், அந்த உத்தரவு "ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக உந்தப்பட்டது" என தெரிவித்துள்ளார். இதனிடையே, ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திற்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேசம் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கு இந்திய அரசும் பதிலளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், அவர் மீதான வழக்கு அவர் இல்லாத நேரத்தில் (in absentia) நடத்தப்பட்டது. விசாரணைகள் முடிவடைந்த நிலையில் 453 பக்க தீர்ப்பை வாசித்த நீதிபதி முகமது குலாம் முர்தாசா மஜும்தார், இது ஆறு பகுதிகளாக வழங்கப்படும் என்று கூறினார். தீர்ப்பு அறிவிப்பு வங்கதேச தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஜூன் மாதம் வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உட்பட மூன்று பேர் மீது அரசு தரப்பு அதிகாரப்பூர்வமாக ஐந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. இதன் அடிப்படையில், ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோருக்கு எதிராகவும் தீர்ப்பாயம் கைது வாரண்டுகளை பிறப்பித்தது. கடந்த ஆண்டு, வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது தொடர்ச்சியான வன்முறைகள் நடந்தன. அப்போது, பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால், ஷேக் ஹசீனா ஆட்சியை இழக்க வேண்டியிருந்தது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டிலிருந்து தப்பிக்க நேர்ந்தது. அப்போதிலிருந்து அவர் இந்தியாவில் வசித்து வருகிறார். படக்குறிப்பு, திங்கள் கிழமை தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 'உடனடியாக ஷேக் ஹசீனாவை அனுப்புக' - இந்தியாவுக்கு கோரிக்கை தற்போது இந்தியாவில் வசித்து வரும் ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோரை நாடு கடத்துமாறு வங்கதேசம் கோரியுள்ளது. வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த முடிவைத் தொடர்ந்து, வங்கதேச வெளியுறவு அமைச்சகம் திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது . அதில், "சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தப்பியோடிய ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோர் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டது" என்று எழுதப்பட்டுள்ளது. "மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இந்த நபர்களுக்கு எந்த நாடு அடைக்கலம் வழங்கினலும் அது நட்பற்ற நடத்தையாகவும், நீதியை அவமதிக்கும் ஒரு செயலாகவும் இருக்கும்." "இந்திய அரசாங்கம் உடனடியாக இரு குற்றவாளிகளையும் வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான நாடுகடத்தல் ஒப்பந்தத்தின்படி இது இந்தியாவின் பொறுப்பாகும்" என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்கதேசம் அதிகாரப்பூர்வமாக பல கடிதங்களை அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த கோரிக்கைகளுக்கு இந்தியா பதிலளிக்கவில்லை. பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வங்கதேச வெளியுறவு ஆலோசகர், அவர்களை திருப்பி அனுப்பக் கோரி வங்கதேசம் பலமுறை கடிதங்களை அனுப்பியதாகவும், ஆனால் இந்தியாவிடமிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். இந்திய அரசின் பதில் என்ன? இதுதொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குறித்து அந்நாட்டின் "சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்" வழங்கிய தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். நெருங்கிய அண்டை நாடாக, இந்தியா அமைதி, ஜனநாயகம், நிலைத்தன்மை உள்ளிட்ட வங்கதேச மக்களின் நலன்களுக்கு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, இந்தியா எப்போதும் அனைத்து தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நிலவிய சூழல் டாக்காவில் உள்ள பிபிசி செய்தியாளர் அருணோதய் முகர்ஜி நீதிமன்றத்தில் நிலவிய சூழல் குறித்து விவரித்துள்ளார். அதன்படி, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்பு, நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த பலர் கொண்டாடியுள்ளன. சிலர் அவரை "தூக்கில் போட வேண்டும்" என முழக்கமிட்டதை பிபிசி செய்தியாளர் பார்த்துள்ளார். இது சில நொடிகள் நீடித்த நிலையில், பின்னர் அவர்களை கண்ணியம் காக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள் கடந்த ஜூன் மாதத்தில் ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அரசின் தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம், "கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 25,000 பேர் காயமடைந்தனர்" என வாதிட்டார். இறந்தவர்களின் பட்டியலையும் அரசு தரப்பு தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது. ஷேக் ஹசீனா உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக 747 பக்க ஆவணமும் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மூன்று பேரின் மீதும் கொலை, கொலை முயற்சி, சதி, உதவி செய்தல், உடந்தையாக இருத்தல் என ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. "ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியில் இருந்தபோது, கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், மாணவர்களை 'ரசாக்கர்களின் மகன்கள் மற்றும் பேரன்கள்' என்று கூறி ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டார்" என்று அரசு வழக்கறிஞர் கூறினார். வங்கதேசத்தில், ரசாக்கர் என்பது தேசதுரோகி அல்லது துரோகி என்று பொருள்படும் ஒரு இழிவான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்து கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை குறிப்பிட பயன்படுகிறது. படக்குறிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதே தீர்ப்பாயத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில், "குற்றம் சாட்டப்பட்ட அசாதுஸ்ஸாமான் கான் கமல் மற்றும் சவுத்ரி அப்துல்லா அல் மாமூல் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலும், உதவியுடனும், சட்ட அமலாக்க முகமைகளும் அவாமி லீக்கின் ஆயுதமேந்திய ஆட்களும் கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் அப்பாவி மற்றும் நிராயுதபாணியான மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பெரியளவில் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் துன்புறுத்த உதவினர்." என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் இந்தக் குற்றங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தே செய்யப்பட்டவை என்று கூறுகிறது. ஷேக் ஹசீனா உட்பட மூன்று பேர் மீது, ரங்பூரில் உள்ள பேகம் ரோகையா பல்கலைக்கழக மாணவர் அபு சயீத்தை தூண்டுதலின்றி கொலை செய்ததாகவும், தலைநகரில் உள்ள சங்கர் புல்லில் ஆறு பேரைக் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தவிர, அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நாளில் அஷுலியாவில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றதாகவும், அவர்களின் உடல்களை எரித்ததாகவும், ஒருவரை உயிருடன் எரித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஷேக் ஹசீனா கூறியது என்ன? நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஷேக் ஹசீனா ஐந்து பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். "அவாமி லீக்கை ஒரு அரசியல் சக்தியாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கு இடைக்கால அரசாங்கம் பயன்படுத்தும் வழிமுறையே மரண தண்டனை" என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த வழக்கு ஓர் 'கேலிக்கூத்து' என்று கூறி, தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். மேலும், "சாட்சியங்களை உண்மையின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சோதிக்கக்கூடிய ஒரு முறையான நீதிமன்றத்தில் என் மீது குற்றம் சாட்டுபவர்களை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார். நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறும் அவர் இடைக்கால அரசுக்கு சவால் விடுத்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gw1yn0037o
1 month 3 weeks ago
17 Nov, 2025 | 01:57 PM

(ஸ்டெப்னி கொட்பிறி)
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாமரை கோபுரத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு நவம்பர் 21 ஆம் திகதி மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மீன்பிடித்துறையையும் நீரியல் வளத்தையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், நவம்பர் 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பில் உள்ள தாமரை கோபுர வளாகத்தில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 'அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எமது நாட்டில் உள்ள மீன் வளத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்கத்தில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசமாகும். சர்வதேச ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் மிகவும் விலையுயர்ந்த மற்றும் அரிய வகை மீன்களை மக்கள் பார்வையிட முடியும்.
நாட்டின் நீரியல் துறையை அபிவிருத்தி செய்வதற்கும் மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எடுக்கும் முயற்சியின் ஒரு பங்காக இந்த கண்காட்சி உள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
https://www.virakesari.lk/article/230563