வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு!

வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு!
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர் ஒருவர் பணியின்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெளிநாட்டில் பணியாற்றும் போது மரணம் ஏற்பட்டால், குடும்பத்தினருக்கு 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மேலும் 14 இலட்சம் ரூபாய் சேர்த்து மொத்தம் 20 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வெளிநாட்டு ஊழியர்களின் கணவர் அல்லது மனைவி தொழில் தொடங்குவதற்காக கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் சிறுவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் வரை வெளிநாட்டு தொழிலாளர்கள் 5.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை நாட்டிற்கு அனுப்பியிருப்பதாகவும், ஆண்டு இறுதிக்குள் இது 7.2 பில்லியன் டொலர்கள் வரை உயரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது 226,240 இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருவதாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 3 இலட்சத்தை அண்மிக்கும் என்றும் கோசல விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
