ஒரு பயணமும் சில கதைகளும்
7. சிரமத்திற்கு மன்னிக்கவும் -------------------------------------------- சிட்னியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸீக்கு திரும்பி வரும் விமானத்தின் புறப்படும் நேரம் காலை ஒன்பது மணி என்றிருந்தது. கிட்டத்தட்ட 14 மணி நேரங்கள் பயணம். இதை விட விமானத்தில் பறப்பதற்கு மோசமான ஒரு நேரத்தை கண்டுபிடிப்பது கடினம். காலைத் தூக்கம் முடிந்து, எழும்பி விமான நிலையம் வந்தால், அதற்குப் பின் பறக்கும் நீண்ட பயணத்தில் தூக்கம் எங்கே வரப் போகின்றது. ஆனாலும் விமானத்தில் விளக்குகளை அணைத்து இருட்டாக்கப் போகின்றார்கள். பலரும் கண்ணை ஒரு மறைப்பால் மறைத்து, மெல்லிய மற்றும் சற்றே கடுமையான சத்தங்களுடன் தூங்கப் போகின்றார்கள். விமானப் பணிப்பெண்கள் இடையிடையே வந்து போகப் போகின்றார்கள். நான் முழித்தே இருக்கப் போகின்றேன் என்பதும் விளங்கியது. எத்தனையோ வருடங்களின் முன் எமிரேட்ஸ் விமானத்தில் இலங்கைக்கு போய்க் கொண்டிருக்கும் போது, விமானத்தில் கடைசியாக படம் பார்த்திருக்கின்றேன். அதன் பின்னர், அந்தப் படத்தால், விமானத்தில் படம் பார்ப்பதில் ஒரு பலத்த ஒவ்வாமை ஏற்பட்டு, பயணம் முழுவதும் முன்னால் இருக்கும் கறுப்புத் திரையே பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்திருந்தேன். விமானப் பயணத்தில் கடைசியாகப் பார்த்த அந்தப் படம் 'தெறி'. சில நண்பர்கள் ஏற்கனவே அந்தப் படத்தை சிலாகித்து சொல்லியிருந்தார்கள். அந்த நண்பர்களின் வரலாறு தெரிந்த நான் தான் கவனமாக இருந்திருக்கவேண்டும். ஆடம்பரமான ஒரு கடைத் தொகுதிக்கும், மலிவு விலை கடைத் தொகுதிக்கும் இருக்கும் வித்தியாசங்கள் என்று சிலவற்றை சொல்லிக் கொள்ளலாம். பொருட்களின் தரத்தில் இருக்கும் வேறுபாடு என்பது மிகப் பொதுவாக சொல்லப்படும் ஒரு வித்தியாசம். உதாரணமாக, அதிக விலையில் விற்கும் இடங்களில் விற்கப்படுபவை சாயம் போகாத, கசங்காத, நீண்டகாலம் நிற்கும் உடுப்புகள் என்று சொல்வார்கள். இங்கு அமெரிக்காவில் தொழில்நுட்பத்துறையில், வேறு பல துறைகளிலும் கூட, அணியும் ஆடைகளுக்கு எந்த மதிப்புமே கிடையாது. ஏதோ ஒன்றை போட்டுக் கொண்டு அலுவலகம் போனால் போதும். ஆள் நூறு, ஆடை பூச்சியம். சாயம் இருந்தாலும் போடலாம், சாயம் இழந்தாலும் போடலாம். போடும் உடுப்பு சாயம் போய், கசங்கி, அத்துடன் தலையையும் இழுக்காமல் அலுவலகம் போனால், ஆள் ஒரு அறிவுஜீவி போல என்று முதல் தோற்றத்தில் நம்புகின்றவர்களும் உண்டு. ஆனால் எது உண்மையோ, அது போகப் போக வெளியே வந்துவிடும். குறைவாகக் கதைப்பதும், கதைத்துக் கொண்டே நடுநடுவே அடிக்கடி கூரையை நிமிர்ந்து பார்ப்பதும் அறிவுஜீவி என்னும் பிம்பத்தை மேலும் சில காலத்துக்கு நீட்ட உதவலாம். இன்னொரு பெரிய வித்தியாசம் என்று சொல்லப்படுபவது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் இருக்கும் வேறுபாடுகள் என்கின்றனர். மலிவு விலைக் கடைகள் ஒரு அரச திணைக்களம் போல செயல்படுவார்கள். தியானத்தில் இருப்பவர்கள் போலக் கூட அங்கே சிலர் இருப்பார்கள். லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். உலகில் உள்ள மோசமான விமான நிலையங்கள் என்ற பட்டியலில் இது இருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் சிட்னி விமான நிலையத்தில் பொதிகளைப் போடும் இடம் 'வேற லெவல்' என்றே சொல்லவேண்டும். சிட்னி விமான நிலையத்தின் அந்தப் பகுதிக்கு அரச திணைக்களங்களே பல மடங்கு பரவாயில்லை என்று சொல்லலாம். வரிசையில் காத்திருக்கும் ஒருவரின் அலுவல்கள் முடிவதற்கே பத்து அல்லது இருபது நிமிடங்கள் போய்விடுகின்றது. ஐந்து அல்லது ஆறு பேர்களே எங்களுக்கு முன்னால் நின்றார்கள். ஆனால் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் அங்கே போனது. இதுவே வேறொரு விமான நிலையம் என்றால் ஒரு பத்து நிமிடங்களில் முடித்திருப்பார்கள். லாஸ் ஏஞ்சலீஸில் பொதிகளை எங்கள் கண் முன்னாலேயே தூக்கித் தூக்கி எறிந்திருப்பார்கள். பொதியின் உள்ளே இருக்கும் மஞ்சள் தூளும், மிளகாய் தூளும் கலந்து, நல்ல கறித்தூள் கிடைப்பதற்கு கூட சாத்தியங்கள் உண்டு. விமான நிலையத்தில் முற்றிலும் எழுந்தமானமாகவே ஓரிருவரை முழுச் சோதனைக்கு தெரிவு செய்கின்றார்கள் என்கின்றனர். அப்படித் தெரிவு செய்யப்படுபவர்களைப் பார்த்தால் அவர்கள் சொல்லும் எழுந்தமானம் பொய்யென்றே தெரியும். ஒரு கூட்டத்தில் எவர் எவரையெல்லாம் தெரிவு செய்வார்கள் என்றே சொல்லிவிடலாம். என்னைத் தெரிவு செய்தார்கள். காலணியை ஆராய்ந்தார்கள். நான் சிட்னிக்கு ஒரே ஒரு காலணியை மட்டுமே எடுத்துப் போயிருந்தேன். அங்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தில் அதே காலணியுடனேயே அநேக நாட்களில் ஓடியும் இருக்கின்றேன். திரும்பி வரும் பயணத்திற்கு முந்திய நாளில் கூட, பெரிய மழை ஒன்றின் பின் வந்த சிறிய மழைக்குள் ஓடியிருந்தேன். காலணி கொஞ்சம் உப்பியே இருந்தது. பின்னர் கைப் பொதியை திறந்து பார்த்தார்கள். 'எல்லாமே சாக்லெட்................' என்றார்கள். 'இங்கிருந்து வேறு என்ன கொண்டு போவது என்று தெரியவில்லை......................' என்றேன். இறுதியாக 'சிரமத்துக்கு மன்னிக்கவும், சுகமாக போய் வீடு சேருங்கள்.............' என்று சொன்னார்கள். எத்தனை தடவை தான் சிரமத்துக்கு மன்னிப்பது. 9/11 அனர்த்தம் நிகழ்ந்த அடுத்த அடுத்த நாட்களில் ஒரு நாள். வேலையில் மதியம் சாப்பிட்டு விட்டு, வழமை போலவே நடந்து கொண்டிருந்தேன். வீதியைக் கடந்து அடுத்த பக்கம் வந்தால் கடற்கரைக்கு செல்லும் ஒரு குறுக்கு வீதி இருக்கின்றது. அந்தக் குறுக்கு வீதியில் கடற்கரைக்கு செல்லும் முன்பே ஒரு சிறிய மேம்பாலம் உள்ளது. மேம்பாலத்தின் கீழே இன்னொரு வீதி கடற்கரையை ஒட்டிச் செல்லுகின்றது. நான் அந்த மேம்பாலத்தில் நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று சில போலீஸ் வாகனங்கள் என்னை மறித்து எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து நின்றன. 'எங்கே போகின்றீகள்...............' 'கடற்கரைக்கு...................' 'ஏன்.........................' 'தினமும் மதியம் போவேன்..............' 'எங்கே வேலை செய்கின்றீர்கள்..............' அங்கிருந்து பார்க்கும் போதே நான் வேலை செய்யும் அந்த உயர்ந்த கட்டிடம் தெரியும். அதைக் காட்டினேன். அடையாள அட்டை ஏதாவது இருக்கின்றதா என்றார்கள். கொடுத்தேன். ஒருவர் அதை எடுத்துக் கொண்டு அவர்களின் ஒரு வாகனத்துக்குப் போனார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தார். சிரமத்திற்கு மன்னிக்கவும், நீங்கள் போகலாம் என்றார்கள். அங்கே அப்படியே நின்று கொண்டிருந்தேன். முன்னர் சிறிது காலம் திருகோணமலையில் தங்கியிருந்த போது, ஒரு நாள் அங்கே தெருவில் நாங்கள் பலர் நின்று கதைத்துக் கொண்டிருந்தோம். சற்றுத் தள்ளி வேறு சிலரும் கூட்டமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இராணுவத்தினர் அவர்களின் மோட்டார் சைக்கிளை சடாரென்று நிற்பாட்டி விட்டு, அருகே கதைத்துக் கொண்டு நின்ற ஒருவரை ஏதோ கேட்டு விட்டு, இரு கன்னங்களிலும் அறைந்து விட்டுப் போனார்கள். கையாலாகாத நிலையின் ஒரு உச்சத்தில் நாங்கள் அங்கே நின்று கொண்டிருந்தோம். இங்கு நான் மேம்பாலத்தின் மேல் அப்படியே நிற்பதைப் பார்த்த ஒரு காவலர் திரும்பி வந்தார். 'ஆர் யு ஓகே...............' 'ம்............ ஒன்றுமில்லை.............' 'நான் மிகவும் வருந்துகின்றேன்............' என்றவர், யாரோ ஒருவர் அவர்களின் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் அழைத்து, மேம்பாலத்தின் மேலே ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நிற்கின்றார் என்று அவசரத் தகவல் தெரிவித்ததாலேயே தாங்கள் இங்கே வந்ததாகச் சொன்னார். இது என்ன புதிதா எங்களுக்கு. (தொடரும்.......................)