Aggregator
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தைத் தேடி மட்டக்களப்பு காயங்குடா காணியில் விசேட அதிரடிப்படையினர் அகழ்வு நடவடிக்கை!
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணியொன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி, விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை (29) நீதிமன்ற உத்தரவுக்கமைய அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்துள்ளது.
அந்த காலப்பகுதியில் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து, மறைத்து வைத்துள்ளதை அகழ்ந்து எடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற உத்தரவு பெற்று மண் அகழ்வும் இயந்திரமான பக்கோ இயந்திரம் மூலம் அகழ்வுப் பணியை இன்று முன்னெடுத்தனர்.
இதன்போது வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்லடி விசேட அதிரடிப்படை பொறுப்பாளர், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப் பணியை இன்று காலை 9 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை மேற்கொண்டபோதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதையடுத்து, அங்கிருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேறினர்.
இதேவேளை குறித்த பகுதி கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளதுடன் அங்கு அக்காலகட்டத்தில் புலிகளின் முகாம் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தைத் தேடி மட்டக்களப்பு காயங்குடா காணியில் விசேட அதிரடிப்படையினர் அகழ்வு நடவடிக்கை! | Virakesari.lk
குட்டிக் கதைகள்.
2014 முதல் 2022 வரை இலங்கை மின்சார சபைக்கு ரூ.594,368 மில்லியன் நஷ்டம் – கோப் குழுவில் தெரிவிப்பு
2014 முதல் 2022 வரை இலங்கை மின்சார சபைக்கு ரூ.594,368 மில்லியன் நஷ்டம் – கோப் குழுவில் தெரிவிப்பு
2015ஆம் ஆண்டு தவிர 2014 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் ரூ.594,368 மில்லியன் என்பது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) தெரியவந்தது.
இலங்கை மின்சார சபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர அதன் தலைவர் தலைமையில் புதன்கிழமை (24) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரியவந்தது.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நஷ்டத்திற்குப் பல காரணங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய கோப் குழு, நிறுவனத்தில் ஊழியர்கள் இருக்கும்போது சபையின் சில செயற்பாடுகள் வெளித்தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது. இதுபோன்ற தொடர்ச்சியான நஷ்டங்கள் காரணமாக 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணங்கள் அதிகளவில் அதிகரித்ததாகவும், இதன் காரணமாக மக்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இருப்பினும், 2023க்குப் பின்னர் மின்சார சபை இலாபம் ஈட்டும் நிலைக்குச் சென்றது என்பதும் இங்கு தெரியவந்தது.
கடந்த காலத்தில் சுமார் 18 மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டதற்கு கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணம் அல்ல என்றும், மாறாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் செலுத்தவேண்டிய கடன் செலுத்த முடியாமையே காரணம் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
2014ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணம் போதுமானளவு திருத்தத்திற்கு உள்ளாகாமையால், திடீரென மின் கட்டணத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என்றும் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 24 மணிநேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எல்.ரி.எல் நிறுவனத்தின் பங்குகள் பிரிக்கப்பட்ட விதம் தெளிவாக இல்லை என்றும், இந்த நிறுவனத்தை மறுசீரமைக்கும்போது இது மேலும் சிக்கலாக அமையலாம் என்றும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
எல்.ரி.எல். நிறுவனம் (லங்கா ட்ரான்ஃபோமர் நிறுவனம்), வெஸ்ட் கோஸ்ட் நிறுவனம் மற்றும் ஈசொட் (Esot) நிறுவனம் ஆகிய நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் செயல்பாடு குறித்து சிக்கல்கள் இருப்பதாக தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிறுவனத்தின் பங்குப் பிரிப்புக்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் மிகவும் தெளிவற்றதாக இருப்பதாகக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
எனவே, சட்டப் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குழு தெிவித்தது.
அத்துடன் ஒக்டோபர் 24ஆம் திகதி எல்.ரி.எல். நிறுவனத்தை கோப் குழுவிற்கு அழைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
புத்தளம் அனல் மின் நிலையத் திட்டத்திற்காக ரூ. 124.30 மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 6 வாகனங்களை ஒப்பந்ததாரர் இன்னும் வழங்கவில்லை என்பதும் தெரியவந்தது. தொடர்புடைய ஒப்பந்தத்தின்படி, திட்டம் முடிந்த பிறகு இந்த வாகனங்கள் மின்சார சபையிடம் ஒப்படைக்கப்படவிருந்த போதும், அவை இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை. இதனால், பொதுச் சொத்து தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது
மேலும், இலங்கை மின்சார சபை ஊழியர் சேமலாப நிதிய விதிகளுக்கு முரணாக ரூ.64 மில்லியன் கல்விக் கடன் மற்றும் ரூ.6,618.3 மில்லியன் சொத்துக் கடன்களாக 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருப்பதாகவும் புலனானது. இந்தக் கடன்கள் பணிப்பாளர் சபை, தொழிலாளர் ஆணையாளர் மற்றும் உள்நாட்டரசிறை ஆணையாளர் நாயகம் ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் 2003ஆம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதி விதிமுறைகளைத் திருத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாமல் இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், 11 மாதங்களாக பதில் உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவர் பணியாற்றி வருகின்றமை குறித்தும் கோப் குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இலங்கை மின்சார சபையில் குறிப்பாக அதிக அளவு பணம் புழக்கத்தில் உள்ள ஒரு நிறுவனமாக, நிரந்தர உள்ளகக் கணக்காய்வாளர் இல்லாதது வருந்தத்தக்கது என்று குழு சுட்டிக்காட்டியது. இந்தப் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்கள் எதிர்காலத்தில் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அனுமதி இல்லாமல் வழங்கப்பட்ட பல கொடுப்பனவுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. பதவியணி ஆணைக்குழு மற்றும் பொதுநிர்வாக சேவை ஆணைக்குழு ஆகியவற்றின் ஒப்புதல் இல்லாமல் 2008 ஏப்ரல் 9 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளின் பட்டியலில் சேர்க்கப்படாத கொடுப்பனவுகளுக்காக 2023ஆம் ஆண்டில் ரூ. 507.47 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. தொழில்முறை கொடுப்பனவைப் பெற உரிமையுள்ள அதிகாரிகளுக்கு தக்கவைப்பு கொடுப்பனவு வழங்கப்படக்கூடாது என்றாலும், தொழில்முறை கொடுப்பனவைப் பெற உரிமையுள்ள 517 அதிகாரிகளுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான தக்கவைப்பு கொடுப்பனவாக ரூ. 99.85 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குழு சுட்டிக்காட்டியது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க குழு பரிந்துரைகளையும் வழங்கியது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹ்மான், சுஜீவ சேனசிங்க, அசித நிரோஷன எகொட விதான, சந்திம ஹெட்டியாராச்சி, சட்டத்தரணி நிலாந்தி கொட்டஹச்சி, ருவன் மாபலகம, எம்.கே.எம். அஸ்லம், திலின சமரகோன், ஜகத் மனுவர்ண, தர்மப்பிரிய விஜேசிங்க, தினேஷ் ஹேமந்த, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2014 முதல் 2022 வரை இலங்கை மின்சார சபைக்கு ரூ.594,368 மில்லியன் நஷ்டம் – கோப் குழுவில் தெரிவிப்பு | Virakesari.lk
மன்னார் மக்கள் மீதான வன்முறை அடக்குமுறையானது தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு - ஸ்ரீகாந்தா
மன்னார் மக்கள் மீதான வன்முறை அடக்குமுறையானது தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு - ஸ்ரீகாந்தா
29 Sep, 2025 | 05:35 PM
![]()
(எம்.நியூட்டன்)
மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிரான அம்மாவட்ட மக்களது உண்மையான நீதியான போராட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது சட்ட விரோதமானது என கருதியிருந்தால் அதில் ஈடுபட்ட மக்களை சட்ட ரீதியாக கைது செய்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்களை தாக்குவதற்கும் காயங்களை ஏற்படுத்துவதற்கும் அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்க முடியாது.
அனுர தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவுக்கு வரும் இந்த சூழ்நிலையில், அரசு நடத்தியிருக்கிற இந்த காட்டு தர்பார் என்பது அரசுக்கு எதிரான ஜனநாயக ரீதியான போராட்டங்கள், பாரிய அளவில் பரந்து விரிவடையும் பொழுது அரசு அவை தொடர்பிலே எத்தகைய அணுகுமுறையை கையாளும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகவே நாங்கள் கருதுகிறோம்.
அத்துடன் இந்த அடாவடியை அங்கீகரிக்கவோ அல்லது ஆமோதிக்கவோ ஜனநாயகத்தை மக்களது அடிப்படை உரிமைகளை மதிக்கின்ற எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்கள் கடந்த காலத்தில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், காற்றாலை திட்டம் தொடர்பில் ஒரு பரந்த அளவிலானதும் அந்த திட்டத்திற்கு எதிராக மன்னார் தீவில் எழுந்திருந்த நிலையில், 80 நாட்களாக இந்த போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், அதை நசுக்க இந்த அரசு முயற்சிக்கின்றது.
இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வரை சென்று போராடும் மக்கள், இந்த திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த பின்னணியிலே அரசாங்கம் இந்த பிரச்சினையை நிதானமாக கையாள இந்த அரசு முனைந்திருக்க வேண்டும்.
உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்திருக்க வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை இரவிரவாக காற்றாலை உபகரணங்கள், உதிரிப்பாகங்கள், இயந்திரங்கள் எல்லாம் மன்னார் தீவுக்குள் கொண்டுவரப்பட்ட போது அதற்கு மக்களுடைய எதிர்ப்பலை எழுந்திருந்த நேரத்தில், அதை நிதானமாக கையாள அரசு முயற்சித்திருக்க வேண்டிய நிலையில், அரசு காட்டுமிராண்டித்தனமான முறையில் அந்த மக்களை அடித்து துவைத்திருக்கிறது.
இதனால் சிலர் காயமடைந்து இருக்கிறார்கள். இதன் ஊடாக ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடுகிற மக்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் கூட இந்த அரசாங்க ஒரு செய்தியை சொல்லி இருப்பதாகத்தான் கருத வேண்டி இருக்கிறது.
குறிப்பாக அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் ஒரு எல்லையைத் தாண்டுமாக இருந்தால் அரசாங்கம் தன்னுடைய பலத்தை மக்கள் மீது பிரயோகிக்க தயங்காது என்பதை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.
இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கோருகின்றேன்.
இப்பொழுது கூட நேரம் கடந்து விடவில்லை. அரசாங்கம் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி தன்னுடைய நிலைப்பாட்டில் கூட அவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு நிதானமாக தீர்வுக்கு வர முடியும். ஆனால் நசுக்க முடியும் என்ற எண்ணத்திலே அரசாங்கம் செயற்படுமாக இருக்கின்றது.
குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகள் இந்த உண்மைகளை உணர வேண்டும்.
முழு இலங்கை தீவிலும் வாழ்கிற தமிழ் மக்கள் ஏன் ஜனநாயக உரிமைகளை மதிக்கிற சிங்கள மக்கள் கூட உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த சந்தர்ப்பத்திலே நான் சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார்.
மன்னார் மக்கள் மீதான வன்முறை அடக்குமுறையானது தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதத்தின் வெளிப்பாடு - ஸ்ரீகாந்தா | Virakesari.lk
சிங்கள மக்கள் தமது தலைவரைக் காட்டிக் கொடுத்துள்ளனர் எனது கடவுள் பிரபாகரன் - இராமநாதன் அர்ச்சுனா
சிங்கள மக்கள் தமது தலைவரைக் காட்டிக் கொடுத்துள்ளனர் எனது கடவுள் பிரபாகரன் - இராமநாதன் அர்ச்சுனா
(எம்.மனோசித்ரா)
மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால் எம்மைப் போன்றவர்களை இலக்கு வைக்கின்றனர். எனது கடவுள் பிரபாகரன் என்பதை அச்சமின்றி கூறுகின்றேன். ஆனால் சிங்கள மக்கள் தமக்காக சேவையாற்றிய மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக் கொடுத்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
திங்கட்கிழமை (29) நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரபாகரன் எனது கடவுள் என்பதே எனது நிலைப்பாடாகும். எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன். ஆனால் இந்நாட்டு மக்கள் தமக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக முன்னின்ற தமது தலைவரை காட்டிக் கொடுத்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் தலைவர் அல்ல., ஆனால் அவர் சிங்கள மக்களின் தலைவராவார்.
ஆனால் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக் கொடுத்துள்ளனர். நாமல் உள்ளிட்டோர் கள்வர்கள் எனக் கூறிய போது நானும் அவற்றை நம்பினேன். முழு நாடும் அதை நம்பியது. பொய் கூறியவர்களை மேலாக பாரிய பொய்களைக் கூறுபவர்கள் வந்ததும் அனைவரும் அவர்களை நம்பினர். ஆனால் இறுதியில் அவர்களது பொய்கள் அனைத்தும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
எனக்காக முன்னிலையானமைக்காக நாமலுக்கு மதிப்பளிக்கின்றேன். நாமல் தவறிழைத்துள்ளார் எனில் அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதனை விடுத்து சிறுபிள்ளைத்தனமாக செயற்பட வேண்டாம். தும்புத்தடி எழுந்து பாராளுமன்றத்தில் உரையாற்றுவதாக சில எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். நான் தும்புத்தடியாக இருக்கின்றேனா அல்லது அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் அவ்வாறு இருக்கின்றார்களா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால் எம்மைப் போன்றவர்களை இலக்கு வைக்கின்றனர். ஒன்றில் என்னைக் கைது செய்வர். அல்லது சாமர சம்பத் தசநாயக்கவை கைது செய்வர். நாமிருவரும் இல்லை என்றால் ஆளுங்கட்சிக்கு அரசியலும் இல்லை. பிரபாகரன் எனது தலைவர் என்பதை நான் அச்சமின்றி கூறுகின்றேன். அவர் பயங்கரவாதியா என பல முறை கேள்வியெழுப்பியும் யாரும் அதற்கு பதிலளிக்கவில்லை.
அந்த கேள்விக்கு பதிலளித்தால் வடக்கில் வாக்கு வங்கி வீழ்ச்சியடையும் என்பதை அங்கிருப்போருக்கு தெரியும். என்னை பைத்தியம் என்று கூறுவதால் எனக்கு கவலையில்லை. ஆனால் நான் ஓரினச் சேர்க்கையாளன் அல்ல என்றார்.
சிங்கள மக்கள் தமது தலைவரைக் காட்டிக் கொடுத்துள்ளனர் எனது கடவுள் பிரபாகரன் - இராமநாதன் அர்ச்சுனா | Virakesari.lk