Aggregator
அரசும் அரசாங்கமும்
அரசும் அரசாங்கமும்
அரசும் அரசாங்கமும்
அரசாங்கம் (government), என்பதும் அரசு (state) என்பதும் ஒன்றல்ல. தமிழ் ஊடகங்கள் அதை மாத்தி மாத்திப் பாவிப்பதால் பலரும் குழப்பமடைகிறார்கள். அரசின் நிகழ்ச்சி நிரலை மக்களிடம் கொண்டுசென்று செயற்படுத்தும் முக்கியமான நிர்வாக அலகுதான் அரசாங்கம். அரசாங்கத்துக்கும் அதன் தலைவர் அல்லது ஜனாதிபதிக்கும் அதிகாரங்கள் இருக்கிறதுதான். அவர்களுக்கான பலமாக அரசியல் யாப்பும் இருக்கிறது. அதன் எல்லைக்குள் அவர்கள் செயற்படுகிறபோது எந்தச் சிக்கலும் அரசு(state) க்கு இருப்பதில்லை. மக்கள் எழுச்சியும்கூட அப்படித்தான் கையாளப்படுகிறது.
அரசின் இனவாதத்தை செவ்வனே செயற்படுத்திய ராஜபக்ச பரம்பரையை ஆட்டங்காணச் செய்த காலிமுகத் திடல் போராட்டத்தின் போது ராஜபக்சக்களை கைவிட அரசு தயாராக இருந்தது. புதிதாக அந்த இடத்தை நிரப்ப அரசியல்வாதிகள் உண்டு என அரசுக்குத் தெரியும். அரசமாளிகையை முற்றுகையிட்டு உள்ளே புகுந்து விளையாடுற எல்லைவரை -தனது இராணுவத்தை வாபஸ் பெறச் செய்து- போராட்டக்காரரை அனுமதித்தது. தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்திருந்து அந்தக் காட்சிகளை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதே போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தினுள் புக முயற்சித்த நேரத்தில், அந்த வன்முறை இயந்திரங்கள் கடுமையான தடுப்புகளைப் போட்டு வீரியமாக எதிர்கொண்டன. அதையும் உடைத்து அன்று போராட்டக்காரர் பாராளுமன்றத்தினுள் உள்நுழைந்திருந்தால் ஒரு படுகொலையோடு அந்தப் போராட்டம் முடிவடைந்திருக்கும் சாத்தியமே இருந்தது.
அரசாங்கங்கங்கள் தேர்தலின் மூலம் மாறலாம். அரசு கட்டமைப்பு அரசாங்க மாற்றத்தோடு சேர்ந்து மாறாது. அது தனது தொடர்ச்சியை பேணியபடி இருக்கும். அரசு என்பது புலப்படும் மற்றும் புலப்படாத (visible & invisible) கட்டமைப்பைக் கொண்டது. அதன் வன்முறை இயந்திரங்களான இராணும் பொலிஸ், உளவுப்படை, நீதிமன்றம் போன்றவை புலப்படும் நிலையில் உள்ளவை. அரசின்; கருத்தியல் என்பது புலப்படாத நிலையில் இருப்பது. இந்த நிறுவனங்களில் பதவி மாற்றங்களை அரசாங்கம் நிகழ்த்தலாம். இந்த சில்லறை மாற்றங்கள் அரச கட்டுமானத்தையோ அதன் கருத்தியலையோ மாற்றாது. இலங்கையில் எல்லா அரசாங்கங்களும் அரச கட்டுமானத்தைப் போலவே அரச கருத்தியலையும் கையாள்வதில் இதுவரை பிசகின்றி சேர்ந்தே நடந்திருக்கின்றன.
இந்த முட்டுச் சந்தியில்தான் என்.பி.பி அரசாங்கமும் விடப்பட்டிருக்கிறது. இதுவரையான அரசாங்கங்கள் இனவாதத்தைப் பேசிப் பேசியே ஆட்சியை அமைக்க இலகுவான வழியாக அதைத் தேர்ந்தெடுத்தார்கள். அரச கட்டுமானத்தின் கருத்தியல் பௌத்த மேலாதிக்கமாக கண்ணுக்குப் புலப்படாத அதிகாரத்துடன் செயற்பட்டு வருகிறது. ஓர் அரசின் மிக முக்கிய அங்கங்கள் மக்கள் திரளும், நிலமும், கருத்தியல் நிறுவனங்களும், வன்முறை இயந்திரங்களும் ஆகும். இவை எல்லாவற்றையும் நிர்வகிக்கும் நிறுவனமாக அரசாங்கம் இருக்கிறது என்றபோதும், அரசாங்கமானது அரசின் அதிகாரத்தை தடாலடியாக மீறிச் செயற்படுவது என்பது இலகுவானதல்ல.
அரசு தனது மக்கள் திரளை ஒன்றிணைத்து இந்த மீறல்களை சுலபமாக எதிர்கொள்ள கருத்தியல் ஆயுதத்தை பயன்படுத்தும். இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பான்மையானவரை அதாவது சிங்கள மக்களை மொழி மற்றும் (பௌத்த) மத அடிப்படையில் ஒன்றிணைக்க இலகுவாக இருக்கிறது. சிங்கள மக்களில் மிகப் பெரும்பாலானோரும் பௌத்த மதத்தை கடைப்பிடிப்பது இன்னும் அதிகார சக்திகளுக்கு இலகுவாகப் போயிருக்கிறது. எனவே இனவாதம் என்பது மொழி, இனம் என்ற இரண்டு தளங்களிலும் செழிப்பாக இருக்கிறது. மொழியைப் பொறுத்தவரை “இலங்கையில் மட்டுமே சிங்கள மொழி இருக்கிறது. தமிழ் அப்படியல்ல. இந்தியாவில் பல கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். எனவே சிங்கள மொழியைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை எமக்கு உண்டு” என கிளம்ப ஒரு கருத்தியல் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இலகுவாக மாறா நிலையிலுள்ள அரச கட்டுமானத்தை மாறும் நிலையிலுள்ள அரசாங்கங்கள் கையாள்வதற்கு அரசியல் யாப்புத்தான் ஒரு பாதையை திறந்து வைத்திருக்கிறது. இந்த அணுகுமுறைக்கு மக்கள் நலன்மேல் அக்கறையுடைய ஓர் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு தன்னை முதலில் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. இன்றைய என்பிபி அரசாங்கம் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆனால் என்பிபி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்தும், அரசியல் சட்டத்தில் கைவைக்க தயங்குவதற்கான ஒரே காரணம் அரச வடிவத்தின் சிங்கள பௌத்த மேலாதிக்க கருத்தியல் வடிவம்தான். நீருக்குள் இறங்காமல் நீச்சல் பழக முடியாது. காலம் தேவைப்படலாம். முயற்சி அதைவிட முக்கியம் என்பதை என்பிபி அரசாங்கத்துக்கு சொல்லிவைக்கலாம்.
70 வருட இனவாத கருத்தியலில் கட்டப்பட்டு தொடர்ச்சியுறும் அரசாங்க பாரம்பரியத்திலிருந்து, தாம் சொல்வதுபோல தம்மை என்பிபி யினர் எவ்வாறு முறித்துக் கொள்ளப் போகிறார்கள். இதை அவர்கள் நேர்மையாக முன்வைக்கும் பட்சத்தில், அது அவர்களிடமிருந்து செயல் வடிவத்தைக் கோருகிறது. இனவாதமற்ற, மதவாதமற்ற ஓர் நாட்டை கட்டியமைப்போம் என்ற அவர்களின் குரல் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தார்கள். இந்தக் குரலையும் மேவிய என்பிபி யின் குரலானது ஊழலையும் போதைவலையமைப்பையும் தகர்த்து இல்லாமலாக்குவோம் என்பது. அதுவே இன்று நடைமுறையில் பரபரப்பாக செயற்படுகிறது. இனவாத ஒழிப்புக்கான நடைமுறையல்ல.
அதிகாரப் பகிர்வு என்பது பற்றி பேசவே தயங்குகிற சூழல் அவர்களது. “சட்டம் எல்லோருக்கும் பொதுவானது, எல்லோரும் சம உரிமை கொண்ட மக்கள், எல்லா பிரதேசங்களும் சமமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்” என்றெல்லாம் பொதுமையாகப் பேசுவது அரச இனவாதக் கட்டமைப்புக்கோ அதன் கருத்தியல் நிறுவனங்களுக்கோ எந்த அச்சத்தையும் விளைவிக்காது. இவற்றை நடைமுறைப் படுத்துகிறபோது தான், அவர்கள் சட்டையைக் கொழுவிக் கொண்டு களமாடப் புறப்படுவார்கள்.
உண்மையில் என்பிபி தான் பேசுபவற்றை நடைமுறையாக்க தயாராகுமானால், சிங்கள முற்போக்கு சக்திகளோடு தமிழ் முஸ்லிம் மலையக மக்களும் அதற்கு உந்துதலாகவும் ஆதரவாகவும் செயற்பட வேண்டும். அல்லது அரசாங்கத்தை படிப்படியாக இனவாதத்துக்கு எதிரான செயல் வடிவத்துள் தள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை எதிர்நிலையில் நின்று செய்வது சாத்தியமில்லை. வெளியில் அரசாங்கத்தை மீண்டும் இனவாத அலகால் கௌவிப் பிடிக்க அலையும் வல்லூறுகள் இந்த 70 வருடமும் மாறிமாறி ஆட்சி நடத்திய இனவாதிகள் என்பதை கவனம் கொள்ள வேண்டும். இதற்கான பக்குவமோ, முதிர்ச்சியோ, அரசியல் சிந்தனையோ, அணுகுமுறையோ தமிழ் முஸ்லிம் மலையக கட்சிகளுக்குக் கிடையாது. அவர்களுக்கு அரசியல் என்பது பழக்க தோசம். அது பேரினவாதத்தை எதிர்க்கும் சிறுபான்மை (எதிர்)இனவாத மனக்கட்டமைப்பிலிருந்து எழுவது. அதுவே திருகோணமலை புத்தர் விவகாரத்தில் என்பிபி தமிழ் எம்பிக்களை பதவி விலக வேண்டும் என பழுத்த தமிழ் அரசியல்வாதியான சுமந்திரனை சொல்ல வைக்கிறது. இனப்படுகொலையை செயற்படுத்திய மகிந்த பரம்பரையோடு ஒத்துழைக்கக் கூட தயாராக இருக்கிறார்கள் அவர்கள். நாட்டின் இனவாத பிரச்சினையை இவர்கள் அணுகுகிற அழகு இது.
எனவே என்பிபி அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்தான விடயத்துக்கு மட்டுமல்ல, இந்த பௌாத்த மேலாதிக்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அரசியல்யாப்பில் திருத்தங்களை கொண்டுவர முயல வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளை சட்ட நுணுக்கங்கள் மூலம் வரையறுக்க வேண்டும். உதாரணமாக சுவிஸில்ஒரு ஊரில் ஒரு பாதையை போட அல்லது பாலத்தைக் கட்டக் கூட அந்த பிரதேச மக்களிடம் வாக்கெடுப்பின் மூலம் அபிப்பிராயம் பெறப்படுகிறது. அதை அங்கீகரிக்கவோ மறுக்கவோ அந்த மக்களுக்கு உரிமை இருக்கிறது. அதை மீறி அரசாங்கம் செயற்படாது. இவ்வாறான நடைமுறை மூலம் காணி ஆக்கிரமிப்புகள் புத்தர் பயிரிடல் என்பவற்றை -இன மத எல்லையைத் தாண்டி- சட்ட ரீதியில் அணுக முடியும்.
இதற்கு மதச் சார்பின்மையான அரசாங்கமாக இருத்தல் முக்கியமானது. மதம் எளிய மனிதர்களுக்கான ஆத்ம பலத்தைத் தரலாம். ஆனால் அதுவே ஆன்மீக நிலையிலிருந்து அதிகார நிலைக்கு மாறுகிறபோது பெரும் ஆபத்து நிகழ்கிறது. அதே எளிய மக்களை அதன் கருத்தியலால் ஒன்றிணைத்து மனிதவிரோத செயல்களை செய்ய முடிகிறது. இந்தியாவில் சங்கிகளும், இலங்கை மியன்மார் போன்ற இடங்களில் காவிகளையும் இந்த போர்க்களங்களில் காண முடியும். எனவே அரச கட்டமைப்பின் கருத்தியலாக இருக்கும் பௌத்த மேலாதிக்க கருத்தியலை என்பிபி அரசாங்கள் அரசியல் சட்ட திருத்தங்களினூடாக அணுக தயாராக வேண்டும். அதற்கு என்பிபி தயாராக இருக்கிறதா என்ற கேள்வி முக்கியமனானது. தயாராகுமெனின், அதற்கு பக்கபலமாக தமிழ் முஸ்லிம் மலையக அரசியல்வாதிகளும் மக்களும், சிங்கள முற்போக்குவாதிகளும் செயற்பட வேண்டும். இச் சந்தர்ப்பத்தை அவர்கள் தவறவிடக் கூடாது.
பலஸ்தீனப் பிரச்சினை குறித்து மட்டுமல்ல, ட்றம்பின் வரிப்போர், நெத்தன்யாகுவின் மனிதவிரோதம் என்பவற்றுக்கு எதிராக உலக நாடுகளில் பலவற்றிலும் இளஞ் சந்ததி சளைக்காத போராட்டங்களையும் குரலையும் எழுப்பி வருகிறது. அவளவுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி இளைஞர் சமூகத்திடம் மேலோங்குகிற உலக சூழல் தோன்றியிருக்கிறது. ஆனால் இவளவு காலமாக தொடர்ச்சியுறும் மக்கள் விரோத இனவாத செயற்பாடுகளை எதிர்க்க சிங்கள சமூகம் உட்பட எல்லா இன இளஞ் சந்ததிகளும் தயாராக இருக்கிறதா? இருக்குமெனின், இலங்கையில் இனவாதத்தை பலவீனமாக்கும் மாற்றத்தை நிகழ்த்த அரசாங்கங்கள் மறுபுறத்தில் நிர்ப்பந்திக்கப்படும் இயங்குநிலை உருவாகும். இதில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கும் பங்கு உண்டு என்பது மட்டுமல்ல முக்கியமாக, இளஞ் சந்ததியிடம் சிந்தனை மாற்றம் செழுமையுறுவதும் அவசியமானது.
சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இனவாதத்தால் கட்டமைக்கப்பட்ட அரச வடிவமும் அதை செவ்வனே செய்து இனவாத்தை வளர்த்துவிட்ட அரசாங்கங்களும் என தொடர்ந்த இரு கட்சிகளின் மேலாதிக்க பாரம்பரியத்துக்கு வெளியே மூன்றாவது கட்சியாக ஜேவிபி யை மேலே கொணர்ந்ததும் இளஞ் சந்ததியின் காலிமுகத் திடல் போராட்டம்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறு மேல்நிலைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு வரலாற்று முறிவை பழங்கஞ்சி அரசியலால் அணுக முடியாது. இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முற்படும் இனவாத கும்பலோடு கூட்டுச் சேரும் அரசியல் களங்கள் நிராகரிக்கப்பட வேண்டியது.
https://sudumanal.com/2025/11/18/அரசும்-அரசாங்கமும்/#more-7497
நீரில் மிதக்கும் பனிக்கட்டி? - நிலாந்தன்
நீரில் மிதக்கும் பனிக்கட்டி? - நிலாந்தன்
நீரில் மிதக்கும் பனிக்கட்டி? - நிலாந்தன்
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மாமியார், கடந்த புதன்கிழமை,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் இயற்கை எய்தினார். ஆனந்த சுதாகரனின் பிரிவினால் நோயாளியாகிய அவருடைய மனைவி 2018ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய தாயார் கமலாதான் பேரப்பிள்ளைகளைப் பராமரித்து வந்தார். அவரும் இப்பொழுது இறந்து விட்டார். ஆனந்த சுதாகரன் 17 ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான திருமதி.லக்மாலி அண்மையில் கொழும்பில் நடந்த ஊடக விவாத நிகழ்ச்சியொன்றில் பின்வருமாறு வாதிட்டதை முகநூல் பதிவொன்றில் காண முடிந்தது. ”சிறையில் இருப்பவர்கள் அரசியல் கைதிகள் அல்லர். நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். தலதா மாளிகை சம்பவம் உட்பட பாரிய குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள். தமிழ் மக்கள் இதனை விளங்கிக் கொண்டுதான் இப்போது எமது அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். ”
சிறையில் இருப்பவர்கள் தண்டிக்கப்பட்ட கைதிகள் என்று கூறுவதன்மூலம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று லக்மாலி கூறுகிறார். அதாவது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் என்று பொருள்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கப் போவதாக கடந்த ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்பாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இன்றுவரையிலும் அதை அவர்கள் செய்யவில்லை. இப்பொழுது அந்தச் சட்டத்தைத் திருத்தி ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வரப் போவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் எனப்படுவது தமிழ் மக்களின் அரசியல் எதிர்ப்பை பயங்கரவாதமாக சட்ட வியாக்கியானம் செய்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான ஒரு சட்டச்சூழலை எப்பொழுதும் பேணுவது. அதாவது தமிழ்மக்களின் எதிர்ப்பை பயங்கரவாதமாகச் சித்தரிக்கக்கூடிய வாய்ப்புகளை எப்பொழுதும் பேணுவது. இந்தவிடயத்தில் கடந்த காலங்களில் இலங்கைத்தீவை ஆண்டு வந்த மேட்டுக்குடி அரசியல்வாதிகளின் அதே அணுகுமுறையைதான் தேசிய மக்கள் சக்தியும் கொண்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
அரசியல் கைதிகளின் விடயத்தில் மட்டுமல்ல, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றுவதில் மட்டுமல்ல, தொல்லியல் விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழுவை நியமித்தபோது மட்டுமல்ல, திடீரென்று முளைக்கும் புத்தர் சிலைகளைக் கையாளும் விடயத்திலும் என்.பி.பி அரசாங்கமானது முன்னைய மேட்டுக்குடி அரசியல்வாதிகளைப் போலவே சிந்திக்கிறது என்பதைத்தான் கடந்த வாரம் திருக்கோணமலையில் நடந்த புத்தர் சிலை விவகாரம் நமக்குக் காட்டுகிறதா ?
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் எனப்படுவது சிலையிலிருந்து தொடங்கவில்லை. அது அந்தச் சிலை வைக்கப்பட்ட காணிக்குள் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த ஒரு ரெஸ்ரோரண்டில் இருந்து தொடங்குகிறது. அந்த ரெஸ்ரோரன்ட் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கிறது என்று அதில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தரப்புகளும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சித்த ஒரு பின்னணியில், கடந்த வாரத்துக்கு முதல் வாரம் அந்த ரெஸ்ரோரண்டின் மையப் பகுதியை வைத்துக்கொண்டு ஏனைய பகுதிகளை அகற்றுவதற்கு அங்கிருந்த பௌத்த மதகுரு ஒப்புக்கொண்டார்.
ஆனால் அவர் ஒப்புக்கொண்டபடி நடக்காமல் அந்த விடயத்தை உணர்ச்சிகரமான விதத்தில் திசைதிருப்பும் நோக்கத்தோடு புத்தர் சிலையை உள்ளே கொண்டு வந்திருக்கிறார். அதாவது சட்டவிரோதக் கட்டுமானம் ஒன்றை அகற்றுவதைத் தவிர்ப்பதற்கு புத்தர் சிலை ஒரு திசை திருப்பும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது சட்டவிரோதமானது என்பதனால்தான் போலீசார் முதலில் அதனை அகற்றினார்கள். ஆனால் அதே போலீசார் அந்த சிலையை மீண்டும் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் போலீசார் சட்டவிரோதமான ஒரு சிலையை சட்டபூர்வமானது ஆக்கியிருக்கிறார்களா?
புத்தர் சிலைக்கு ஒரு சட்டம்; தமிழ் மக்களுக்கு இன்னொரு சட்டம். ஏற்கனவே திருமலை மறை மாவட்டத்தின் ஆயர் இதுபோன்ற விடையங்களை முன்வைத்துத்தான் இலங்கைத் தீவில் இரண்டு சட்டங்கள் இருக்கின்றனவா என்று கேட்டிருந்தார்.
புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கும் காணிக்குள் காணப்படும் ரெஸ்ரோரண்டை அகற்ற வேண்டும் என்று போராடி வருபவர்களில் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரொஷான் அக்கீமனவும் ஒருவர். அந்த வளவிலிருந்து குறிப்பிட்ட கட்டுமானத்தை அகற்றக்கோரி போராடியவர்கள் மத்தியில் அவர் முன்பு காணப்பட்டார். ஆனால் இப்பொழுது எல்லாத் தரப்புக்களையும் சமாளிக்கப் பார்க்கிறார். அவர் மட்டுமல்ல திருகோணமலையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் உதவி வெளிவிவகார அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரவும் எல்லாத் தரப்புக்களையும் சமாளிக்க முயல்கிறார்.
அவர் பதவி விலக வேண்டும் என்று சுமந்திரன் கேட்கிறார். ஆனால் சிலையை வைத்து இனவாதத்தைக் கிளப்பும் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டவர் சுமந்திரன். அதற்குப் பிராயசித்தமாக அவரும் தன் பொறுப்புகளைத் துறக்க வேண்டும்.
2015இல் ஆட்சிக்கு வந்த ரணில் மைத்திரி அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவின் பொறுப்பின் கீழ்தான் புத்தசாசன அமைச்சு காணப்பட்டது. அக்காலகட்டத்தில்தான் தையிட்டியில் விகாரையைக் கட்டத் தொடங்கினார்கள். நாடு முழுவதும் ஆயிரம் விகாரைகளைக் கட்டுவதற்கு 500 மில்லியன் ரூபாயை ஒதுக்குவோம் என்று சிங்கள மக்களுக்கு வாக்குறுதி அளித்தவர்களில் சஜித்தும் ஒருவர். எனவே அப்படிப்பட்ட சஜித்தை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்குமாறு கேட்ட சுமந்திரன் இப்பொழுது அருண் ஹேமச்சந்திர ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனக்கு முன்னிருந்த ஆட்சிகளில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டும்போது சுட்டிக்காட்டும் வேறுபாடுகளில் ஒன்று, தாங்கள் இனவாதத்துக்கு தலைமை தாங்கவில்லை என்பது. ஆனால் இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல,அரசியல் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டம், தொல்லியல் விவகார ஆலோசனைக் குழு,புத்தர் சிலைகள் போன்ற விடயங்களில் இந்த அரசாங்கத்துக்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் உண்டா?
புத்தர் சிலையை வைத்து எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கிளப்புகின்றன அதன் மூலம் நுகேகொடவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை திரட்டும் உணர்ச்சிகரமான அரசியல் சூழலை உருவாக்க முயற்சிக்கின்றன என்று அரசாங்கம் எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டியது.
எதிர்க்கட்சிகளை இனவாதக் கட்சிகள் அல்லது இனவாதத்தை வைத்துப் பிழைத்த கட்சிகள் என்று குற்றச்சாட்டும் இந்த அரசாங்கமானது,தான் இனவாதி அல்ல என்பதனை நிரூபிப்பதற்கு கடந்த ஓராண்டுக்கு மேலான காலத்தில் என்ன செய்திருக்கிறது ?
தாங்கள் இனவாதிகள் அல்ல என்று கூறிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. நடைமுறையில் தாங்கள் இனவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை நிரூபிக்கத் தேவையான அர்ப்பணிப்பும் துணிச்சலும் அவர்களிடம் உண்டா என்பதுதான் இப்பொழுதுள்ள கேள்வி.
இனவாதிகள் தலையெடுக்கக்கூடாது என்றால் இந்த அரசாங்கத்தை எப்படியாவது பாதுகாக்கவேண்டும். இந்த அரசாங்கம் தோல்வியுற்றால் இனவாதிகள் மீண்டும் தலையெடுத்து விடுவார்கள் என்று அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள், குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள சில விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இது ஒன்றும் புதிய தர்க்கம் அல்ல. இந்த நாட்டை இதுவரையிலும் ஆண்ட இனவாதக் கட்சிகள் மத்தியில் ஒப்பீட்டளவில் லிபரல்களாகத் தோன்றும் பலரும் அப்படித்தான் கூறிவந்தார்கள். அதாவது இனவாதத்தை தோற்கடிப்பதற்கு குறிப்பிட்ட லிபரல் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று. ஆனால்,யதார்த்தத்தில் என்ன நடந்தது என்றால்,வெளிப்படையான இனவாதத்துக்கு எதிராக முகமூடி அணிந்த இனவாதம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு தந்திரமாகவே அது காணப்பட்டது. இதன் மூலம் முகமூடி அணிந்த இனவாதம் தமிழ்,முஸ்லிம் வாக்குகளையும் கைப்பற்றிக் கொண்டது.
“அரகலய” போராட்டம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் அந்தப் போராட்டத்தின் பின்னணியில் நின்ற அமைப்புகளில் ஒன்றாகிய முன்னிலை சோசிலிச கட்சியின் தலைவராகிய குமார் குணரட்ணத்தோடு உரையாடக் கிடைத்தது. சுமார் 5 மணித்தியால உரையாடல். அந்த உரையாடலின் ஒரு கட்டத்தில் அவர் சொன்னார்,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள முடியாது; சமஸ்டியை ஒரு வெளிப்படையான தீர்வாக முன்வைக்க முடியாது என்ற பொருள்பட. நாங்கள் இதை வெளிப்படையாக உங்களுக்குச் சொல்கிறோம். ஆனால் ஜேவிபி அதை வெளியில் சொல்லாமல் அரசியல் செய்கிறது. அவர்கள் அதை வெளிப்படையாகச் சொன்னால் தென்னிலங்கையில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் என்று.
இந்த விடையத்தில் முன்னைய லிபரல் அரசாங்கங்களைப் போலவே என்பிபியும் இனவாதத்தை எதிர்த்துத் தியாகம் செய்யத் தயாரில்லை என்பதைத்தான் கடந்த ஓராண்டுக்கு மேலான அவர்களுடைய ஆட்சிக் காலம் நிரூபித்திருக்கிறது. அதாவது இனவாதத்தை எதிர்த்து நின்று அழிய அவர்கள் தயாராக இல்லை. மாறாக இனவாதம் அருட்டப்பட்டுவிடும் என்று கூறி தமிழ் எதிர்ப்பைத் தணிக்கப் பார்ப்பார்கள். இதைத்தான் லிபரல் இனவாதிகளும் செய்கிறார்கள்; சில வெளிநாட்டுத் தூதரகங்களும் செய்கின்றன.
சந்திரிகா “வெண்தாமரை” இயக்கத்தைத் தொடங்கி சமாதானத்துக்கு சிங்கள மக்களைத் தயார்படுத்தப் போவதாகக் கூறினார். ஆனால் அந்த இயக்கம் நடைமுறையில் படையினருக்கும் படையினரின் குடும்பங்களுக்கும் தொண்டு செய்யும் ஒரியக்கமாகவே மாறியது.
என்பிபியின் அடித்தளமாகக் காணப்படும் ஜேவிபியில் உறுப்பினராக இருந்து, பின்னர் விலகிச் சென்ற ஒருவர் கூறுவார், ”மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையான இனவாதி. ஆனால் ஜேவிபி சமூக நீதியின் பின் பதுங்கும் இனவாதி”என்று. இக்கூற்று பிழையானது என்பதை நிரூபிப்பதற்குக் கிடைத்த கடந்த ஓராண்டுக்கு மேலான காலத்தை ஜேவிபி பயன்படுத்தவில்லை. எனவே இதற்கு முன்பு ஆட்சிசெய்த லிபரல் முகமூடி அணிந்த, ஆனால் இனவாதத்துக்கே தலைமை தாங்கிய ஆட்சியாளர்களைப் போலவே என்பிபியும் அதே குட்டையில் ஊறிய மட்டைதானா ?
எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தின் சில புத்திஜீவிகளைப்பற்றிச் சொல்லும்போது ஒர் உதாரணத்தை எடுத்துக்காட்டுவார். ”நீரில் மிதக்கும் பனிக்கட்டிகள்” என்று. அதாவது அவர்களும் யாழ்ப்பாணிகள்தான். ஆனால் தங்களை முற்போக்கானவர்களாகக் காட்டிக்கொண்டு கொஞ்சம் மேலே மிதப்பார்கள். நீரில் மிதக்கும் பனிக்கட்டியைப் போல. ஆனால் பனிக்கட்டியும் நீரும் அடிப்படையில் ஒரே பண்பிலிருந்து வந்தவைதான். இது இப்பொழுது என்பிபிக்கும் பொருந்துமா?


