Aggregator
தாலிபான்கள் இணையத்தை துண்டித்ததால் ஆப்கானிஸ்தானில் தொலைத்தொடர்பு முடக்கம்
தாலிபான்கள் இணையத்தை துண்டித்ததால் ஆப்கானிஸ்தானில் தொலைத்தொடர்பு முடக்கம்
Published By: Digital Desk 3
30 Sep, 2025 | 11:08 AM
![]()
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கம், ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்புகளைத் (fibre-optic internet connections) துண்டிக்கத் தொடங்கிய சில வாரங்கள் கழித்து, நாடளவிய ரீதியில் தொலைத்தொடர்புகளை முடக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தற்போது "முழுமையான இணைய முடக்கத்தை" சந்தித்து வருவதாக, இணைய கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ் தெரிவித்துள்ளது.
தலைநகர் காபூலில் உள்ள அலுவலகங்களுடனான தொடர்பை சர்வதேச செய்தி நிறுவனங்கள் துண்டித்துள்ளதாகக் கூறுகின்றன.
ஆப்கானிஸ்தான் முழுவதும் கையடக்க தொலைபேசிக்கான இணைய வசதி மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
முடக்கத்திற்கான உத்தியோகபூர்வ காரணத்தை தலிபான்கள் இன்னும் தெரிவிக்கவில்லை. 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் விளக்கத்தின்படி தாலிபான்கள் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
தொலைத்தொடர்பு முடக்கம் மறு அறிவித்தல் வரும் வரை நீடிக்கும் என தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனியார் ஆப்கானிய செய்தி சேனலான டோலோ நியூஸ், அதன் தொலைக்காட்சி மற்றும் வானொலி நெட்வொர்க்குகளில் இடையூறுகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், புதுப்பிப்புகளுக்கு அதன் சமூக ஊடக பக்கங்களைப் பின்தொடருமாறு மக்களைக் கேட்டுக் கொண்டது.
காபூல் விமான நிலையத்திலிருந்து விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான கண்காணிப்பு சேவையான Flightradar24 இன் படி, செவ்வாய்க்கிழமை காபூல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட அல்லது வந்தடைய திட்டமிடப்பட்ட குறைந்தது எட்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
காபூலில் உள்ள பலர் ஃபைபர்-ஆப்டிக் இணையம் வேலை நாளின் முடிவில், உள்ளூர் நேரப்படி மாலை 17:00 மணியளவில் முடங்கியதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, வங்கி சேவைகள் மற்றும் பிற வணிகங்கள் மீண்டும் தொடங்கவிருக்கும் செவ்வாய்க்கிழமை காலை வரை பலர் தாக்கத்தை கவனிக்க மாட்டார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.