சுவர் முகம்
August 4, 2025 ஷோபாசக்தி
பாரிஸ் நகரக் காவல்துறைத் தலைமையகத்தில் அந்தச் சுவர் இருக்கிறது. சுவரோடு சேர்த்து அய்ந்து மனிதர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய மேலங்கியிலும் வட்டமாக இலக்கத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. மூன்றாவது இலக்கத்தின் பெயரை ‘டேவிட்’ என வைத்துக்கொள்வோம். வயது 46. கருப்பு நிறம். உயரம் 5 அடி 8 அங்குலம். தலைமுடி படிய வாரப்பட்டுள்ளது. நரையேறிய தாடி. ஒல்லியான உடல்வாகு. இலங்கையைச் சேர்ந்தவர். 2009-இல் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.
டேவிட் இதற்கு முன்னரும் சிலதடவை இவ்வாறு சுவரோடு நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் பிரான்ஸுக்கு வந்து ஆறு வருடங்கள் முடிந்திருந்தபோது, காவல்துறையிடமிருந்து அவருக்கு ஓர் அழைப்பு வந்திருந்தது. அந்த அழைப்பு தனது அகதி வழக்குச் சம்பந்தமானது என்றுதான் டேவிட் முதலில் நினைத்தார்.
டேவிட் தன்னுடைய அகதி வழக்கு விசாரணையின்போது, பிரான்ஸில் அகதித் தஞ்சம் கோருவதற்கான காரணங்களை விரிவாகச் சொல்லியிருந்தார்.
“அய்யா! நான் <அடைக்கலம்> என்ற சிறிய தொண்டு நிறுவனத்தில் தன்னார்வ ஊழியனாகப் பணியாற்றினேன். இந்த நிறுவனத்தைப் பாதிரியார் செபமாலைநாதர் நடத்திவந்தார். இறுதி யுத்தத்தின்போது, நாங்கள் பத்துப் பேர் ‘மோதல் தவிர்ப்புப் பகுதி’ என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதியில் காயமடைந்தவர்களைப் பராமரிக்கும் தொண்டைச் செய்துவந்தோம். அங்கிருந்த மருத்துவமனையின் மீது இராணுவத்தினர் ஏப்ரல் 10-ஆம் தேதி அதிகாலை தொடக்கம் இரவுவரை தொடர்ச்சியாகப் பலநூறு கொத்துக்குண்டு எறிகணைகளை வீசினார்கள். முந்தைய இரவு கடுமையாக மழை பெய்திருந்ததால், அங்கிருந்த பாதுகாப்புப் பதுங்குகுழிகள் எல்லாமே வெள்ளத்தால் நிறைந்திருந்தன. பதுங்குவதற்கு இடமின்றி 317 நோயாளிகள் எறிகணைகளால் கொல்லப்பட்டார்கள். எங்களது தொண்டு அணியிலும் ஏழுபேர் கொல்லப்பட்டார்கள்.
எல்லாம் முடிந்து இராணுவத்திடம் சரணடையும் நாளும் வந்தது. காயமடைந்திருந்த மூன்று புலிப் போராளிகள் பாதிரியார் செபமாலைநாதர் மூலமாக இராணுவத்திடம் சரணடைய விரும்பினார்கள். அவர்களையும் அழைத்துக்கொண்டு பாதிரியார் தலைமையில் நாங்கள் வெள்ளைக்கொடியை ஏந்தியவாறே இராணுவத்தை நோக்கிச் சென்றோம். எங்களது ஆடைகளைக் களைந்துவிட்டு முழு நிர்வாணமாகச் சரணடையுமாறு இராணுவம் கட்டளையிட்டது. நாங்கள் சரணடையும்போது, சிறு துண்டு வெள்ளைக்கொடியைத் தவிர வேறெந்தத் துணியும் எங்களிடம் இல்லை.
நாங்கள் சரணடைந்த இடத்தில் விமானத் தாக்குதலால் இடிந்துபோன வீட்டின் மொட்டைச் சுவர் மட்டுமே இருந்தது. அந்தத் சுவரோடு சேர்த்து நாங்கள் ஆறுபேரும் நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருந்தோம். பாதிரியார் முதலாவது ஆளாக நின்றிருந்தார். நான் கடைசி ஆளாக நின்றிருந்தேன். எங்கள் மீது பெற்றோல் ஊற்றப்பட்டது. அப்போது எங்களைப் பார்வையிட வந்த இராணுவ அதிகாரி குலத்துங்கே என்னோடு வவுனியாப் பல்கலைக்கழகத்தில் பயின்றவன். அவனால் நான் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டேன். சுவரோடு நிறுத்தப்பட்டிருந்த மீதி அய்ந்து பேரும் என் கண் முன்னாலேயே உயிரோடு தீவைத்துக் கொளுத்தப்பட்டார்கள். இந்தப் படுகொலைக்கு நான்தான் சாட்சி. அப்போது அதிகாரி குலத்துங்கே என்னைக் காப்பாற்றிவிட்டாலும், பின்னர் யுத்தக் குற்ற விசாரணை அது இதுவென்று ஏதாவது வந்தால் சாட்சியான நானும் நிச்சயமாக அரசாங்கத்தால் தேடிக் கொல்லப்படுவேன். அதுதான் இப்போது இலங்கையில் நடந்துகொண்டிருக்கிறது. யுத்த சாட்சிகள் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். அதனால்தான் நான் இலங்கையிலிருந்து தப்பிவந்து உங்களிடம் அரசியல் தஞ்சம் கோருகிறேன்.”
டேவிட் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லியிருந்தாலும், அகதி வழக்கு விசாரணை அதிகாரிகள் இவற்றுக்கான ஆதாரங்களைக் கேட்டார்கள். பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அடையாளமும் ஆதாரமும் பதிவும் இல்லாமல்தானே இறுதி யுத்ததத்தில் அழிக்கப்பட்டன. ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் டேவிட்டின் அகதி வழக்கு இன்னும் முடியாமலேயே இருக்கிறது. பிரான்ஸிலிருந்து வெளியேறுமாறு டேவிட்டுக்குக் காவல்துறை எந்த நேரத்திலும் உத்தரவிடக் கூடும்.
எனவே, பாரிஸ் காவல்துறைத் தலைமையத்திலிருந்து முதற்தடவை அழைப்பு வந்தபோது, டேவிட் நிறையக் குழப்பங்களோடும் சந்தேகங்களுடனும்தான் அங்கே சென்றார். ஆனால், அவர்கள் அழைத்தது அகதி வழக்குக் குறித்தல்ல. காவல்துறைக்கு டேவிட்டிடமிருந்து ஓர் உதவி தேவைப்பட்டது.
நகரத்தில் நடந்த ஒரு கொடூரமான குற்றச் செயலில் சந்தேக நபராக ஒரு தென்னாசிய நாட்டவர் கைதாகியிருந்தார். காவல் நிலையத்தில் அந்த நபர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படயிருந்தார். இவ்வாறான அணிவகுப்பில் அவரை ஒத்த உருவமுள்ள நான்கு பேர் அவருடன் நிறுத்தப்படுவார்கள். பொதுவாக அந்த நான்கு பேரும் நாடக நடிகர்கள் அல்லது தன்னார்வலர்களாக இருப்பார்கள். சந்தேக நபர் டேவிட்டை ஒத்த உருவமுள்ளவர் என்பதால், அந்த அடையாள அணிவகுப்பில் கலந்துகொள்ளுமாறு டேவிட்டிடம் காவல்துறை கேட்டுக்கொண்டது. இந்த வேலைக்குச் சிறியதொரு சம்பளமும் உண்டு.
விஸாவும் வேலையுமில்லாமல் திண்டாடிக்கொண்டிருந்த டேவிட்டுக்கு அந்தச் சிறிய சம்பளம் பெரும் தொகைதான். ஒரு மாதத்தை ஓட்டிவிடுவார். ஆனால், அதைவிடவும் டேவிட்டுக்கு வேறொரு விஷயமே முக்கியமாகப்பட்டது. காவல்துறைக்கு உதவி செய்தால் அது தனது அகதி வழக்குக்குச் சாதகமாக இருக்கலாம் என டேவிட் நினைத்தார். அகதி வழக்கில் வெற்றி பெற்றால், இலங்கையிலிருக்கும் அவருடைய மனைவியையும் குழந்தைகளையும் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்ளலாம்.
இலங்கையில் இவ்வாறான அடையாள அணிவகுப்புகள் சிறைகளில்தான் நடத்தப்படும். அணிவகுப்புக்குச் சிறைக் கைதிகள்தான் பயன்படுத்தப்படுவார்கள். ஆனால், பிரான்ஸில் அடையாள அணிவகுப்பு முறை வேறாக இருந்தது. என்ன குற்றம், யார் சந்தேக நபர் என எதுவுமே அணிவகுப்பில் கலந்துகொள்பவர்களுக்குச் சொல்லப்படுவதில்லை. ஒரே மாதிரியாக உடைகள் அணிவிக்கப்பட்டு அணிவகுப்பில் நிறுத்தப்படும் அய்வருக்கும் ஒருவரையொருவர் முன்பே தெரிந்திருக்கக்கூடாது. குற்றத்தால் பாதிக்கப்பட்ட தரப்புடனோ அல்லது குற்றவாளியை அடையாளம் காட்ட இருப்பவருடனோ இவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருந்திருக்கக் கூடாது. முக்கியமாக இந்த நபர்கள் குற்றம் நடந்த எல்லைப் பிரதேசத்திற்கு அப்பால் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். அணிவகுப்பில் இருக்கும் அய்ந்து நபர்களுக்கும் இலக்கம் கொடுக்கப்படும். சாட்சி இவர்களைப் பார்வையிட்டு எந்த இலக்கமுடையவர் குற்றவாளி என நீதிபதியிடம் இரகசியமாக் கூறுவார். திரும்பத் திரும்ப மூன்றுதடவை இந்த அணிவகுப்பு நடைபெறும். ஒவ்வொரு தடவையும் உடைகளும் இலக்கங்களும் மாற்றப்படும்.
முதல் அணிவகுப்பு நடந்தபோது, டேவிட்டுக்கு நீலக் காற்சட்டையும் வெள்ளைச் சட்டையும் கறுப்புக் காலணிகளும் காவல்துறையால் தனியறையில் வழங்கப்பட்டன. அவற்றை அணிந்ததுகொண்டதும் 5-ஆம் இலக்கம் அவரது சட்டையில் குத்தப்பட்டது. அவரை அதிகாரிகள் அணிவகுப்பு அறைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த சுவரோடு வரிசையாக ஏற்கனவே நான்குபேர் நின்றிருந்தார்கள். அவர்களோடு டேவிட்டும் நிறுத்தப்பட்டார். அணிவகுப்பின் போது உடலை அசைக்கவோ முகத்தில் எந்தவிதப் பாவனையையும் காட்டவோ கூடாது என டேவிட் பலமுறை காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். உண்மையில், சுவரில் புதைந்திருந்த அய்ந்து பொம்மை முகங்கள் போலவே அங்கே இவர்கள் இருந்தார்கள். அந்தக் காட்சி டேவிட்டுக்குப் பெரிய பதற்றத்தை உண்டாக்கிற்று. அவரது மனம் பல்வேறு உணர்ச்சிகளால் கொந்தளித்துக்கொண்டிருந்தது. கால்கள் தரையிலிருந்து வழுவி உடல் சரிந்துவிடப் போவது போல அவர் உணர்ந்தார். எனினும், எந்த உணர்ச்சியையும் காட்டாது முகத்தைக் கறுப்புக் காகிதம் போல வைத்திருந்தார்.
இவர்களுக்கு எதிரே ஒரு கண்ணாடிச் சுவர் இருந்தது. அந்தச் சுவருக்கு அப்பால் இப்போது ஒரு முதிய வெள்ளைக்காரர் தோன்றினார். அவர்தான் குற்றவாளியை அடையாளம் காட்டப் போகிறவர். அந்த முதியவர் அய்ந்து முகங்களையும் பார்ப்பதற்கு நீண்ட நேரத்தை எடுத்துக்கொண்டார்.
காவல்துறை தலைமையத்தில் கையெழுத்துப் போட்டுச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு வரும்போது, பெரும் மன உளைச்சலில்தான் டேவிட் வெளியே வந்தார். நேரே மதுச்சாலைக்குச் சென்று மூக்கு முட்டக் குடித்தார். பின்பு ஒரு பை நிறைய மிட்டாய்களை வாங்கிக்கொண்டு போதையில் தள்ளாடியடியே ரயிலைப் பிடித்துத் தனது அறைக்கு வந்து சேர்ந்தார். அவரது அறை பாரிஸின் புறநகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தது.
அந்த அறை ஒரு குப்பைத் தொட்டி போலத்தான் இருக்கும். அறைக்கு வந்ததும் உடைகளைக் கூட மாற்றாமல், உடைந்து கிடந்த கட்டிலில் டேவிட் குப்புறப் படுத்துக்கொண்டார். கட்டில் அங்குமிங்குமாக ஆடிக்கொண்டிருந்தது. அவரது மூளையின் இருள் மடிப்புகளுக்குள் எரிந்துகொண்டிருந்த தீ அவரில் இப்போது முழுமையாகப் பற்றிக்கொண்டது.
சுவரில் முகங்கள் என்ற படிமம் அவரைப் பெருத்த அச்சத்திற்குள் வீழ்த்தியது. முள்ளிவாய்க்காலின் மொட்டைச் சுவரில் வரிசையாக இருந்த அய்ந்து முகங்கள் இங்கே அடையாள அணிவகுப்பில் இருந்ததுபோல மரத்துப்போய் இருக்கவில்லை. ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு உணர்ச்சியைக் காட்டின. ஒருமுகம் பிரார்த்தித்தது. மறுமுகம் கெஞ்சியது. இன்னொரு முகம் அழுதது, அடுத்த முகம் கசப்பைப் காட்டியது. கடைசி முகம் வேதனையோடு புன்னகைத்தது. அந்த முகங்களில் பெற்றோல் ஊற்றப்பட்டபோது, முகங்கள் ஒருசேரக் கண்களை மூடிக்கொண்டன.
நிரம்பிய மதுபோதையில் இருந்த இராணுவவீரன் தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு அய்ந்து முகங்களையும் நெருங்கும்போது அவனின் உதடுகள் ஒரு சிங்களப் பாடலை முணுமுணுத்ததை அந்த அய்ந்து முகங்களும் கேட்டிருக்கலாம். ஒவ்வொரு முகத்திலும் அந்த இராணுவவீரன் கொள்ளி வைத்ததும் எழுந்த கூட்டு ஓலத்தின் போதுகூட அவன் பாடலை முணுமுணுப்பதை நிறுத்தவில்லையே.
தீ வைக்கப்பட்டதும் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையாக ஓடிச் செல்லும் என்றுதான் இராணுவத்தினர் நினைத்திருக்க வேண்டும். ஓடுபவர்களின் கால்களில் துப்பாக்கியால் சுடுவதற்கு அவர்கள் தயாராக நின்றார்கள். ஆனால், தீ வைக்கப்பட்டதும் சொல்லி வைத்ததுபோல அந்த அய்ந்து நிர்வாண உடல்களும் ஒரு துயர நடனக் காட்சி போல அசைந்து ஒன்றையொன்று தழுவிக்கொண்டே, அய்ந்து முகங்களும் ஒருமுகமாகி எரிந்தன. கடைசியில் பின்னியிருந்த அய்ந்து கரிக்கட்டைகள் எஞ்சின. அவற்றை இராணுவத்தினரின் நாய்கள் எந்தத் தடயமுமில்லாமல் தின்று முடித்தன.
சில வருடங்கள் கழித்துக் காவல்துறையிடமிருந்து மீண்டுமொரு அழைப்பு டேவிட்டுக்கு வந்தது. முதலில் போக வேண்டாம் என்றுதான் நினைத்தார். ஆனால், அவருக்குப் பணம் தேவைப்பட்டது. இந்தமுறை சுவரோடு நிறுத்தப்பட்டபோது, டேவிட் பச்சைச் சட்டையும் வெள்ளைக் காற்சட்டையும் அணிந்து முகத்தை மழுங்கச் சிரைத்திருந்தார். அந்த அணிவகுப்பில் 1-ஆம் இலக்கம் டேவிட்டுக்குக் கொடுக்கப்பட்டது. சாட்சி ஒரு கருப்புப் பெண். அவள் தனது முகத்தை மறைத்திருந்தாள்.
சுவரில் இருக்கும் பொம்மை முகங்கள் டேவிட்டை அச்சப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இப்போதெல்லாம் அவர் அச்சத்தைத் தின்று அச்சத்தைக் குடித்து வாழ்க்கிறார். அச்சம் மெல்லிய மனநோயாக மாறிக்கொண்டிருக்கிறது.
மூன்றாவது தடவையாக அவர் காவல்துறைத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டபோது, அவருடைய அகதி வழக்கு விசாரணை முடிவுற்றுத் தீர்ப்புக்காகக் காத்திருந்தார். இந்த முறை அகதி விஸா கிடைத்துவிடும் என்று டேவிட்டின் வழக்கறிஞர் உறுதியாகச் சொல்லியிருந்தார். எனவே, காவல்துறையோடு நெருக்கம் வைத்திருப்பது நல்லது என நினைத்துப் போனதுதான் அவரை உயிர் ஆபத்தில் கொண்டுவந்து நிறுத்தியது. இந்தமுறை சாட்சியாக வந்தவர் ஒரு நடுத்தர வயதுச் சீக்கியர். அவரும் நீண்ட நேரமாகச் சுவர் முகங்களைப் பார்த்தார். அந்தச் சீக்கியரை டேவிட் மறுபடியும் சந்திக்க நேரிட்டது.
அந்த அணிவகுப்பு முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு டேவிட்டுக்கு அகதி விஸா கிடைத்தது. வேலை தேடித் திரிந்துவிட்டு அவர் தனது அறையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தபோது, தன்னை ஒரு வெள்ளை வேன் பின்தொடர்வது போல உணர்ந்தார். டேவிட் வேகமாக நடந்து அடுக்குமாடிக் குடியிருப்பை நெருங்கியபோது, அவருக்குப் பின்னால் வந்த வேன் சட்டென நிறுத்தப்பட்டது. வேனில் இருந்து அந்தச் சீக்கியர் குதித்து இறங்கி ஓடிவந்து டேவிட்டின் சட்டையைப் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார்.
“வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த எனது சின்னஞ்சிறு மகளை நீதான் கடத்திச் சென்று கொன்றாய். நான் ஜன்னல் வழியாக உன்னைப் பார்த்தேன். முட்டாள் காவல்துறை உன்னை விட்டுவிட்டது. ஆனால் நான் விடமாட்டேன்.”
டேவிட் திகைத்துப் போய்விட்டார். குடியிருப்புவாசிகள் அங்கே கூடிவிட்டார்கள். “இவன் சிறுமிகளை நாசம் செய்து கொல்பவன்” என்று அந்தச் சீக்கியர் திரும்பத் திரும்பக் கூச்சலிட்டார். “இல்லை அய்யா… நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நான் அடையாள அணிவகுப்பில் கலந்துகொள்ளக் காவல்துறையால் அழைக்கப்பட்டவன்” என்று டேவிட் கெஞ்சினர்.
இதற்குள் யாரோ காவல்துறையை அழைத்துவிட்டார்கள். அவர்கள் வந்து சீக்கியரை எச்சரித்து விலக்கிவிட்டபோது கூட “உன்னைக் கொல்லுவேன்” எனச் சொல்லியவாறேதான் சீக்கியர் அங்கிருந்து சென்றார். குடியிருப்புவாசிகளில் பலர் டேவிட்டைச் சந்தேகத்துடன் பார்ப்பது போலவே டேவிட் உணர்ந்தார். குடியிருப்பு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறார்களுக்கு மிட்டாய் கொடுப்பது டேவிட்டின் வழக்கம். இலங்கையிலிருக்கும் தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளின் முகத்தைத்தானே இந்தச் சிறுமிகளிடம் அவர் பார்த்தார். இனி எந்த முகத்தோடு அவர் சிறுமிகளுக்கு மிட்டாய் கொடுப்பார்! இவர் கொடுத்தாலும் சிறுமிகள் வாங்க மாட்டார்களே. மூன்று நாட்களாக அவர் அறையைவிட்டு வெளியே வரவேயில்லை.
நான்காவது நாள் டேவிட் காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டபோது மிகுந்த பதற்றத்துடனேயே சென்றார். அந்தச் சீக்கியர் விடுத்த கொலை மிரட்டல் ஏற்கனவே பல வருடங்களாக மன உளைச்சலிலும் அச்சத்திலும் இருந்த அவரது நடுமூளையில் கூரிய ஆணியாக இறங்கியிருந்தது.
காவல்துறை தலைமையகத்தில் அந்தச் சீக்கியரும் இருந்தார். டேவிட்டுக்கு முன்பாகவே அந்தச் சீக்கியரிடம் காவல் அதிகாரி “இந்த மனிதர் காவல்துறைக்கு நீண்டகாலமாக உதவி செய்பவர். இவர் சந்தேக நபர் கிடையாது. நீங்கள் அடையாள அணிவகுப்பில் தவறாக இவரை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்” எனச் சொன்னார்.
“எனது கண்கள் ஒருபோதும் பொய் சொல்லாது” என்றார் அந்தச் சீக்கியர்.
“நீங்கள் மறுபடியும் இந்த மனிதரைத் தொந்தரவு செய்தால் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்வேன்” எனக் காவல் அதிகாரி சீக்கியரை எச்சரித்தார். அப்போது அந்தச் சீக்கியர் டேவிட்டின் கண்களைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே இகழ்ச்சியான புன்னகையொன்றை வீசியபோது, உண்மையில் டேவிட் அச்சத்தால் உயிரோடு செத்துப்போனார். அவரது மூன்று குழந்தைகளதும் முகங்கள் அவரது இருதயத்தில் வரிசையாகத் தோன்றின. அவரது கண்களில் நீர் கொப்பளித்துச் சிதறியது.
தன்னுடைய அறை இருக்குமிடம் சீக்கியருக்குத் தெரிந்திருப்பதால், அறையில் இருப்பதற்கே டேவிட் அஞ்சினார். சீக்கியரின் இகழ்ச்சியான புன்னகை ஒரு பளபளக்கும் கூரிய கத்தி போல அவருக்குத் தோன்றியது. அறையைக் காலி செய்துவிட்டுப் புதிய இருப்பிடம் தேடலாம் என்றால் பணத்திற்கு வழியில்லை. ஆனால், உலகத்தின் எந்த மூலையில் ஒளிந்துகொண்டாலும் சீக்கியரின் கூரிய பார்வை தன்னைக் கண்டுபிடித்துவிடும் என அஞ்சினார்.
நகரத்தில் அவர் வேலை தேடித் திரிந்தபோது, எங்கேயாவது சீக்கியத் தலைப்பாகை தென்படுகிறதா என்பதே அவரது முதல் கவனமாக இருந்தது. அவ்வாறு தலைப்பாகையோடு யாரைப் பார்த்தாலும் உடனேயே அங்கிருந்து நழுவிச் சென்று குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து மறைந்து போனார். ஆனால், பிரான்ஸில் இருக்கும் எல்லாச் சீக்கியர்களும் தலைப்பாகை அணிவதில்லை என்பதையும் அவர்களில் சிலர் மழித்த முகத்தோடு அய்ரோப்பியர்களின் சாயலில் இருப்பதையும் அவர் அறிந்தபோதுதான் தன்மீதும் காவல்துறை மீதும் எல்லாவற்றின் மீதும் அவர் நம்பிக்கையை இழந்தார். தன்னுடைய மரணம் நெருங்கி வருவதை அவர் தெளிவாக உணர்ந்துகொண்டார்.
மதிய நேரத்தில் லூவர் அருங்காட்சியகத்திற்கு அருகேயுள்ள உணவகங்களில் வேலை கேட்டுத் திரிந்துவிட்டு, எப்போதும் போல ஏமாற்றத்துடன் அருங்காட்சியத்தின் வெளி வாசலருகே நின்றிருந்த டேவிட் தனது இடுப்பின் இடதுபுறத்தில் சுருக்கென வலி தோன்றுவதை உணர்ந்து குனிந்து பார்த்தார். இடுப்பிலிருந்து பலூன் போல ஏதோவொன்று ஊதிக்கொண்டு குபுகுபுவென வெளியே வந்தது. அது அவரது குடல். இரண்டு கைகளாலும் குடலை எந்தியவாறே கீழே விழுந்துவிட்டார். அவரைக் கத்தியால் குத்தியவன் அவரை நோக்கிக் குனிந்து எச்சிலைக் கூட்டி அவரது முகத்தில் உமிழ்ந்தான். அவனது முகத்தை ஒருபோதும் டேவிட்டால் மறக்க முடியாது. தலைமுடி ஒட்டவெட்டப்பட்டு, மழுங்கச் சிரைக்கப்பட்ட முகத்துடன் இருந்தான். அவனுக்கு இருபது வயது இருக்கும். அவனது கண்கள் டேவிட்டைப் பார்த்து இழிவாகப் புன்னகைத்த சீக்கியரின் கண்கள் போலவே இருந்தன.
மருத்துவமனையில் டேவிட் ஒன்றரை மாதம் இருந்துவிட்டுத் தனது அறைக்குத் திரும்பியதற்குப் பின்னர் முறை வைத்து மதியத்தில் இரண்டு மணிநேரமும் அதிகாலையில் இரண்டு மணிநேரமும் மட்டுமே தூங்கினார். அது கூட அரை உறக்கம்தான். எந்த நேரமும் தான் கொலை செய்யப்படலாம் என அவர் அஞ்சிக் கிடந்தார். ‘சாவு என்பது ஒரு கடவுள் போன்றது’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். வெளியே செல்லும்போது ஒவ்வொரு முகத்தையும் உற்றுப் பார்த்து விலகி நடந்தார். முதலில் சீக்கிய முகங்களுக்கு அஞ்சியவர் இப்போது உலகிலுள்ள எல்லா முகங்களுக்கும் அஞ்சினார். சுவரில் ஒருமுகம் வரையப்பட்டிருந்தால் கூட அந்தச் சுவரிலிருந்து அச்சத்தோடு விலகி நடந்தார்.
கொல்லப்பட்ட அந்தச் சீக்கியச் சிறுமியின் மூத்த சகோதரனே டேவிட்டைக் குத்தியிருந்தான். மூன்று மாதங்களுக்குப் பின்பாக அந்த இளைஞன் ஸ்பெயினில் வைத்துக் கைது செய்யப்பட்டுப் பாரிஸுக்குக் கொண்டுவரப்பட்டான்.
இந்த முறை கண்ணாடிக்கு இந்தப் பக்கமாகச் சாட்சியாக டேவிட் இருந்தார். எதிரே சுவரில் இருந்த அய்ந்து முகங்களை நிமிர்ந்து பார்க்கவே அவர் அச்சப்பட்டுக் கண்களை மூடியிருந்தார். நீதிபதியும் காவல்துறை அதிகாரிகளும் பெரும் பிரயத்தனத்துடன் டேவிட்டுக்குத் தைரியம் ஊட்டினார்கள். உண்மையில் அவர்களது தொந்தரவாலேயே டேவிட் கண்களைத் திறந்தார். அவரது உள்ளம் அச்சத்தால் இருண்டே இருந்தது.
எதிரே சுவரில் ஒரே மாதிரியாக அய்ந்து முகங்கள். டேவிட்டால் அய்ந்து விநாடி கூட அந்த முகங்களைத் தைரியமாகப் பார்க்க முடியவில்லை. எனினும், தன்னைக் குத்திய இளைஞனை டேவிட் மூன்று முறையும் சரியாகவே அடையாளம் காட்டினார். தான் அடையாள அணிவகுப்பில் கலந்துகொள்ளவோ சாட்சியாகவோ காவல்துறைத் தலைமையத்திற்கு வருவது இதுவே கடைசி முறை என நினைத்துக்கொண்டு அங்கிருந்து திரும்பினார். சீக்கிரமே தெற்குப் பிரான்ஸிலுள்ள சிறு கிராமத்திற்குக் குடிபெயர்ந்து சென்றுவிட்டார். அந்தக் கிராமத்தில் ஒரேயொரு தென்னாசியர் கூடக் கிடையாது. அங்கே விவசாயப் பண்ணையொன்றில் நல்ல வேலையும் கிடைத்தது. சீக்கிரமே மனைவி, குழந்தைகளைப் பிரான்ஸுக்கு அழைத்துக்கொண்டார்.
டேவிட் அச்சத்திலிருந்து மெதுவாக வெளியே வந்துகொண்டிருந்த காலத்தில்தான் காவல்துறை டேவிட்டை மறுபடியும் அடையாள அணிவகுப்பில் நிறுத்தியிருக்கிறது. இம்முறை அவருக்கு 3-ஆம் இலக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சுவரோடு நிறுத்தப்பட்டிருந்த அய்ந்து முகங்களும் ஒரேமாதிரியான தோற்றத்துடனும் தாடியோடும் உடைகளோடும் அய்ம்பது வயதை நெருங்கியவர்களாகவும் இருந்தார்கள். நடுமுகம் டேவிட்டுடையது. கண்ணாடிச் சுவருக்கு அந்தப் பக்கத்தில் சாட்சி வரும்போதே டேவிட் சாட்சியின் முகத்தை அடையாளம் கண்டுவிட்டார். அந்த முகம் முள்ளிவாய்க்காலில் பாதிரியார் செபமாலைநாதருடன் இராணுவத்திடம் சரணடைந்து சுவரோரமாக நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருந்த ஆறாவது முகம். அதிகாரி குலத்துங்கேவால் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்ட முகம். நடந்த யுத்தக் குற்றத்திற்கு ஒரே சாட்சி. அந்தச் சாட்சி எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் அணிவகுப்பின் நடுமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது.
அந்தச் சாட்சியின் முன்னே இரண்டு தடவைகள் அணிவகுப்பு நடந்து முடிந்து மூன்றாவது தடவையாக டேவிட் அணிவகுப்பில் நின்றிருந்தபோது, டேவிட்டின் உதடுகள் ஒரு சிங்களப் பாடலை முணுமுணுத்தன. மொட்டைச் சுவரோடு நிறுத்தப்பட்டிருந்த அய்ந்து முகங்களின் மீதும் டேவிட் பெற்றோலை ஊற்றிக் கொள்ளி வைத்தபோது ‘சாவு ஒரு கடவுள் போன்றது’ என்ற இந்தப் பாடல்தான் டேவிட்டின் நாவில் இருந்தது.
(ஆனந்த விகடன் – ஜூலை 2025)
https://www.shobasakthi.com/shobasakthi/2025/08/04/சுவர்-முகம்/?fbclid=IwQ0xDSwL9gi9leHRuA2FlbQIxMQABHudbGtZFYAu6hJv3wHzCCn6NODHXoaEHgJ5qf4i5ATO1AKFmzL11sxrNMJ_R_aem__IgadcQPKVZeVUMPtzadqA