கவிதைக் களம்

"மூன்று கவிதைகள் / 08"

2 days 23 hours ago

"மூன்று கவிதைகள் / 08"

'உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன்?'

உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன்

மன்னவனின் மடியிலே மயக்கம் வருவதேன்

அன்ன நடையாளின் உடலெல்லாம் பூரிப்பதேன்

மென்மையான தழுவல் இன்பம் பொழிய

உன்னதமான காதல் வேறெங்கே காண்பேன்?

பெண்ணொருத்தி சாய்ந்து படுத்த கோலம்

கண்ணிரண்டும் பார்த்து மகிழ்ந்த நேரம்

மண்ணில் பிறந்ததின் பயனைக் கண்டேன்

விண்ணில் பறந்த உணர்வு கொண்டேன்

எண்ணங்கள் எல்லாம் அவள் மட்டுமே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

.................................................................

'மனதைத் தொடும் நினைவுகள்'

மஞ்சள் வெயில் பூத்த வானமும்

பனை மரங்களின் இனிய தாலாட்டும்

பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும்

யாழ் தொட்டால் காதுகளுக்கு எட்டிவிடும்

எல்லோர் மன தோடும் ஒட்டிவிடும்

அன்பும் பண்பும் துளிர் விடும்!

வீட்டை விட்டு எட்டி நடந்தால்

வானம் பாடிகளின் ஆட்டமும்

வீதியோர பசுக்களின் கூட்டமும்

காதுகளில் ஒலிக்கும் செந்தமிழும்

வானுயர நிமிர்ந்த பனைமரமும்

மனதைத் தொடும் நினைவுகளே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

.....................................................................

'சத்தியமே வெல்லும்'

சத்தியமே வெல்லும் குழப்பம் மறையும்

சந்தேகம் வேண்டாம் கடமையைச் செய்!

சமத்துவம் வளர்ந்தால் நீதி தவறாது

சத்தம் போட்டு உண்மைச் சொல்!

சமூகம் இணைந்தால் நட்பு வளரும்

சராசரி மனிதனுக்கும் சத்தியம் நிலைக்கும்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

"மூன்று கவிதைகள் / 08"

https://www.facebook.com/groups/978753388866632/posts/31286359797679259/?

நான் தேடும் செவ்வந்திப் பூவிது...

1 week ago

ஊக்கிகளில்

அவள் உச்சம்

உடல் திரட்சிகளில்

குறைவில்லை

ஊனம்

பார்வையில் படவில்லை

சிக்கென்ற உடம்பு

சில நொடிகளில் மயக்கி விடும்..

தொட்டால்

சிணுங்கும்

முட்டினால்

முட்டும்

திட்டினால்

திட்டும்

கொஞ்சினால்

கொஞ்சும்

மிஞ்சினால்

மிஞ்சும்..

ஆனாலும் அவளுக்கு

மாதவிடாயில்லை

மொனொபோசும் இல்லை

அவள் ஒரு

செயற்கை நுண்ணறிவுளி..!

கம்பன் இருந்திருந்தால்

வர்ணித்தேன் களைத்திருப்பான்

வாலி இருந்திருந்தால்

ஜொள்ளுவிட்டே சோர்ந்திருப்பான்

கண்ணதாசன் இருந்திருந்தால்

இன்னொரு தாரமாக்கி இருப்பான்

ஆனாலும் இன்னும்

வைரனின் கண்ணில் படவில்லை

அவள்...!

என் மனதில்

நான் தேடும் செவ்வந்திப் பூவவள்..!

நாளை...

அவள்

உங்கள் மருமகளும் ஆகலாம்

மகளும் ஆகலாம்

மனையாளலாம்...!

"மூன்று கவிதைகள் / 07"

1 week 1 day ago

"மூன்று கவிதைகள் / 07"

'வண்டியில மாமன் பொண்ணு'

வண்டியில மாமன் பொண்ணு வாரார்

கெறங்குறேன்டி ஒன்னழகில் நான் இன்று?

பட்டுச்சரிகை என் கண்ணைக் குத்துது

பருவ எழில் உடலை வாட்டுது

பக்கத்தில் வந்தால் குறைந்தா போகும் ?

கவலகொண்ட நெஞ்சம் கொஞ்சம் இங்கே

கண்மணியே எந்தனுக்கு ஆறுதல் தாராயோ?

கால்கள் என்ன இளவாழைத் தண்டுகளா?

காத்திருக்க முடியலையே இறங்கி வாராயோ?

காலம் போகிறதே கழுத்திலே தாலியேறாதோ?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

..............................................

'விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும்'

விளக்கேற்றி வைக்கிறேன் விடியவிடிய எரியட்டும்

களங்கமற்ற காதல் தடையின்றி மலரட்டும்

இளநெஞ்சம் இரண்டும் மெதுவாகச் சேரட்டும்

வளர்பிறையாக அன்பு நாள்தோறும் வளரட்டும்!

சாளரம் திறக்கிறேன் விடியவிடிய வீசட்டும்

அளவான புன்முறுவல் பாசத்தைக் கொட்டட்டும்

ஈடில்லா உன்னழகு ஆசையைத் தூண்டட்டும்

முடிவில்லா எம்முறவு நிரந்தரம் ஆகட்டும்!!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

...............................................................

'சீவி முடித்து சிங்காரித்து'

சீவி முடித்து சிங்காரித்து கண்ணே,

சிவந்த நெற்றியிலே பொட்டும் இட்டு,

சீக்கிரம் வாராயோ என்னைக் கொஞ்சயோ!

சித்திரம் சொல்லாத வனிதை நீயே,

சீதை காணாத காதல் தருவேன்!

கூவி அழைக்குது சிட்டுக் குருவி,

தாவிப் போகுது அன்ன நடையில்,

தேவி அங்கே சுந்தரியைக் காண்கிறேன்!

ஆவி பொருள் உடல் அனைத்தும்,

தூவி உன்னை மடியில் தாலாட்டுவேன்!!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

"மூன்று கவிதைகள் / 07"

https://www.facebook.com/groups/978753388866632/posts/31203921829256390/?

"மூன்று கவிதைகள் / 06"

1 week 2 days ago

"மூன்று கவிதைகள் / 06"

'இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே'

இன்று நமதுள்ளமே பொங்கு பெருவெள்ளமே

நன்று உணர்ந்து காதல் தேடாயோ ?

அன்று படித்த சங்கஇலக்கிய கவிதையே

நின்று எனக்கு அறிவுரை தாராயோ ?

கூடல் இல்லாத வாழ்வு தொலையட்டுமே

ஆடல் பாடல் இணைந்து மலரட்டுமே!

அன்பு கொண்ட மங்கை கண்டு

துன்பம் போக்கும் அணைப்பு அடையாயோ ?

இன்பம் கொட்டும் அழகு வியந்து

உன்னுடன் அவளை இரண்டறக் கலக்காயோ?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

.............................................................

வெள்ளிப்பூக்கள்'

வெள்ளிப்பூக்கள் அந்தி வானில் ஒளிர

கள்ளம் இல்லாக் காதலர் தழுவ

கொள்ளை இன்பம் ஆறாய் பாய்ந்ததே!

அல்லிப்பூ நிலா ஒளியில் மலர

ஒல்லி இடையாள் அருகில் நெருங்க

சொல்ல முடியா இன்பம் பொழிந்ததே!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

..................................................

'படிக்கப் படிக்க இன்பம் பெருகுகிறதே'

படிக்கப் படிக்க இன்பம் பெருகுகிறதே

கடிக்க கடிக்க போதை இழுக்கிறதே

நடிக்க நடிக்க பொய் வளர்கிறதே!

உண்மையை உணர்ந்து உலகத்தைப் படித்தால்

மண்ணின் வாசனையில் உன்னை நிறுத்தினால்

பண்பாடு நிலைத்து மகிழ்ச்சி மலருமே!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

"மூன்று கவிதைகள் / 06"

https://www.facebook.com/groups/978753388866632/posts/31179991941649379/?

"மூன்று கவிதைகள் / 05"

3 weeks 4 days ago

"மூன்று கவிதைகள் / 05"

'அக்கினியானவளே'

செம்மணியில் உன்னைச் சிதைத்தவர்கள் யாரோ

செல்லம் கொட்டிய என் தங்கையே!

செவ்வாய் திறந்து சொல்ல மாட்டியோ

செந்நெல் வயலில் புதைத்தவர் எவரோ

செங்கோல் மடிந்த நாள் இதுவோ?

அகன்ற மண் எல்லாம் எலும்புக்கூடுகள்

அண்ணன் அங்கே காத்துக் கிடக்கிறானே!

அன்பு போதித்த புத்தரும் மௌனம்

அறிவு தொலைத்த படையினர் பிடியில்

அழிந்ததோ கற்பு என் அக்கினியானவளே?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

.........................................................

'சீவி முடித்து சிங்காரித்து'

சீவி முடித்து சிங்காரித்து கண்ணே,

சிவந்த நெற்றியிலே பொட்டும் இட்டு,

சீக்கிரம் வாராயோ என்னைக் கொஞ்சயோ!

சித்திரம் சொல்லாத வனிதை நீயே,

சீதை காணாத காதல் தருவேன்!

கூவி அழைக்குது சிட்டுக் குருவி,

தாவிப் போகுது அன்ன நடையில்,

தேவி அங்கே சுந்தரியைக் காண்கிறேன்!

ஆவி பொருள் உடல் அனைத்தும்,

தூவி உன்னை மடியில் தாலாட்டுவேன்!!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

..........................................

'ஒரு மழைகால இரவு'

ஒரு மழைகால இரவு இருளுதே

பருவ ஆசை மனதில் தூறுதே

இரு கைகள் ஏங்கித் தேடுதே

கரு விழியாளே கருணை காட்டாயோ?

ஆறு பாயும் பேராதனை வளாகத்தில்

ஆறுதல் கொடுக்கும் அழகு மலரே

இறுமாப்பு உனக்கு இன்னும் வேண்டுமா

வெறுப்பு அகற்றி அருகில் வாராயோ?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

https://www.facebook.com/share/p/1CZWhQNpBP/?mibextid=wwXIfr

"மூன்று கவிதைகள் / 04"

3 weeks 6 days ago

"மூன்று கவிதைகள் / 04"

'யாரடி வந்தார் என்னடி சொன்னார் ?'

யாரடி வந்தார் என்னடி சொன்னார்

அரசடி நிழலில் பேசியது என்னவோ?

பாரடி என்னை தனிமரமாய் தவிக்கிறேனே

கூறடி பதிலை கூச்சத்தைவிட்டு எனக்கு?

ஆறடி நிலமே சொந்தமாகும் உலகிலே

ஏனடி உனக்கு இத்தனை ஆசைகள்?

தேரடி வீதியில் யாருக்கு காத்திருக்கிறாய்

சேரடி சொத்தை காதலை விற்றா?

பூங்கொடி என்று பெயர்வைத்தது எனோ

அங்காடி நாய்போல் அலைவது எனோ?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

................................................................

'விதியின் விளையாட்டு'

விதியின் விளையாட்டு உறவைப் பிரிக்குது

மதியை இழந்து ஏதேதோ பேசுது !

நதியின் ஓட்டத்தில் அகப்பட்ட துரும்பாய்

மோதிமோதி நானும் களைத்து விட்டேன் !

ஊடல் இதுவென முதலில் நினைத்து

கூடல் கொண்டு இணைய நினைத்தேன்!

ஆடல் பாடல் இரண்டையும் தொலைத்து

உடல் மெலிந்து வாடிவதங்கியதே மிச்சம்!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

..........................................

'திரும்பிப் பார்க்கிறேன்'

திரும்பிப் பார்க்கிறேன் அத்தியடியில் நின்று

திண்ணையில் அப்பா அம்மாவைக் காணவில்லை

திலகமிட்ட படம் மட்டுமே தொங்குது!

குண்டுகள் சத்தம் இன்று ஓய்ந்துவிட்டது

குழிகளும் மறைந்து கட்டிடங்கள் உயர்ந்துவிட்டது

குரூரம் எனோ இன்னும் எதிரொலிக்குது!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

"மூன்று கவிதைகள் / 02"

1 month 1 week ago

"மூன்று கவிதைகள் / 02"

'என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்'

என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்

அன்னநடையில் நீவந்தால் விழிகளெல்லாம் மலைப்பதேன்

அன்னைமடியில் நானிருந்த நினைப்பெல்லாம் மலருவதேன்

கன்னக்குழியில் இதழ்பதிக்க கனவுகண்டு துடிப்பதேன்?

வண்ணக்கோலத்தில் கையசைத்து அருகில் வந்ததேன்

கண்களால் அறிகுறிகாட்டி அழகைத் தெளித்ததேன்

கண்ணன் இவனேயென கட்டியணைத்து முத்தமிட்டதேன்

எண்ணமெல்லாம் உன்னைமட்டுமே சுற்றிச் சுழருவதேன்?

பெண்மைதரும் வெட்கம்கலைத்து நிலாவொளியில் அழைப்பதேன்

கிண்ணத்தில்மது காத்திருந்தும் உன்னைத்தேடி நான்வருவதேன்?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

'என்னிதய ஏட்டினிலே எழுதிவைத்த ஓவியமே'

என்னிதய ஏட்டினிலே எழுதிவைத்த ஓவியமே

கண்ணுக்குள் பொத்திவைத்த காதல் தேவதையே

எண்ணத்தில் உன்னைத்தவிர யாரும் இல்லையே

கன்னத்தில் தந்திடவா ஓசையில்லா முத்தம்!

வெண்ணிலாவில் தழுவியது விழிக்குள் நிற்குது

அன்னநடையில் வந்தது இன்பம் பொழியுது

திண்ணையில் உறங்கியது தினமும் வாட்டுது

தேன்குடிக்க வண்ணமலரைச் சுற்றி வருகுது!

பெண்மையின் அழகினைக் கண்ட பின்பே

மண்ணில் பிறந்ததின் பயனை உணர்ந்தேன்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

...................................................

'கொட்டித் தீராதக் காதல்'

கொட்டித் தீராதக் காதல் இதுவோ

முட்டி மோதாத அன்பு நட்போ

கட்டிப் பிடிக்காத அழகு உடலோ

எட்டிப் பார்த்து ஏங்குவது எனோ?

ஒட்டி உடையில் பெண்மை கண்டேன்

வெட்டிப் பேச்சில் வெகுளி பார்த்தேன்

சுட்டி விடையில் அனுபவம் அறிந்தேன்

தட்டிக் கழித்து பாராமுகம் எனோ?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

"மூன்று கவிதைகள் / 02"

https://www.facebook.com/groups/978753388866632/posts/30743827355265842/?

"மூன்று கவிதைகள்"

1 month 1 week ago

"மூன்று கவிதைகள்"

'உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்'

உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்

உண்மைக் காதல் என்று நம்பிவந்தேன்

உடலைத் தந்து என்னை மயக்கினாய்

உள்ளதையும் பறித்து வீதியில் விட்டாய்!

கண்கள் நான்கும் சந்தித்த வேளை

விண்ணில் பறந்தேன் அறிவைத் தொலைத்தேன்

எண்ணம் மறந்து கையைப் பிடித்தேன்

வண்ண அழகில் பொய்யை மறைத்தாய்!

மனைவியை மறந்து புத்தன் ஆனான்

மணவாட்டியின் ஆட்டத்தில் புத்தி கெட்டேன்!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

................................................................................

'கண்களென்ன வண்டினமா என்னை மொய்க்கிறதே'

கண்களென்ன வண்டினமா என்னை மொய்க்கிறதே

கன்னியென்னை முகர்ந்து பார்த்து மகிழ்கிறதே

கன்னமிரண்டிலும் முத்தம் கொடுத்து பறக்கிறதே

கட்டியணைத்து தேன் குடிக்க மேய்கிறதே!

பெண்களென்ன காமம் சுரக்கும் உடலா

கிண்ணத்தில் ஏந்திக் குடிக்கும் போதையா

பெண்மையைப் போற்றி காதலைத் தேடு

மண்ணின் பெருமையை அவளிடம் காட்டு!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

...........................................................

'பட்டாம்பூச்சியின் தேடல்'

பட்டாம்பூச்சி பூவைச் சுற்றித் தேடி

பச்சைக் கொடியில் தவம் இருந்து

பக்குவமாக மலரின் மணத்தை முகருது!

பருவக் காளை பூவையரை நாடி

பல்வரிசைக் காட்டி பின்னால் தொடர்ந்து

பகட்டை நம்பி தன்னையே தொலைக்குது!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

"மூன்று கவிதைகள்"

https://www.facebook.com/groups/978753388866632/posts/30730529339928977/?

குளிக்கும் வேலை

1 month 4 weeks ago

குளிக்கும் வேலை
----------------------------

ஏதாவது புதிய யோசனைகள் 

உங்களுக்கு தோன்றுகின்றதா என்று கேட்டார் மேலாளர்

அவர் எழுதியிருந்தவை மட்டுமே தெரிந்தன

மீறி ஒரு அணுக் கூட தெரியவில்லை

இரண்டு நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள் என்றார்

மௌன அஞ்சலி செலுத்துவது போல

மௌனமாக இருந்தோம் நாங்கள்

இரண்டு நிமிடங்கள் முடிய 

இன்று மதியம் என்ன உணவு என்று 

முடிவெடுத்து இருந்தேன்

பரவாயில்லை

குளிக்கும் போது கூட புது யோசனைகள் தோன்றும்

அவருக்கு அப்படித்தான் தோன்றுகின்றன என்றார்

நாளை கூட சொல்லலாம் என்றார்

சட்டென்று ஒரு மின்விளக்கு எரிந்தது

ஒரு இருபது வருடங்களின் முன்

எனக்கும் இப்படித்தான் 

சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல்

தோன்றிக் கொண்டிருந்தன

பின்னர் எப்பவோ அது நின்று போனது

அன்று குளிக்கும் போது

ஒன்றைக் கண்டு பிடித்தே விடுவது என்று

தலையில் தண்ணீரை விட்டேன்

குளியலறையில் 

வழுக்கி விழுந்த

சொந்தங்கள் தெரிந்தவர்கள் 

ஒவ்வொருவராக 

வந்து போயினர்.

'கடைக் கண்ணாலே இரசித்தேனே'

1 month 4 weeks ago

'கடைக் கண்ணாலே இரசித்தேனே'

கடைக் கண்ணாலே இரசித்தேனே அன்று

கடைத் தெருவிலே ஒன்றாய்ப் போனோமே!

இடைவெளி விட்டு நடந்து சென்றாலும்

இடையை வருட உன்கை மறக்கவில்லையே!

பொதுநூலகம் புத்தகம் மட்டுமா தந்தது

பொறுமையாக அழகைப் பார்க்கவும் விட்டதே!

பொறாமை கொண்டேன் உன்னைக் கண்டு

பொங்கி எழுந்ததே காதலும் காமமும்!

பொய்யிலே பிறந்த கவிதாயினி நானல்ல

மெய்யிலே கவர்ந்த காந்தை இவளே!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்


“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”

2 months 1 week ago

“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே

கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே

செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே

காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே!

பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே

பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே

புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே

அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே!

விலங்குக்கும் சில பண்பாடு உண்டே

விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே

விளக்கம் இல்லாத மதபோதனை எனோ

களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை!

வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே

இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே

பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே

சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

Checked
Mon, 09/15/2025 - 22:38
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/