Aggregator
“கெப்பெட்டிபொல பூதயா”வுடன் 18 பேர் கைது!
16 Oct, 2025 | 04:28 PM
![]()
பதுளை - கெப்பெட்டிபொல பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட “கெப்பெட்டிபொல பூதயா” என்பவருடன் மேலும் 18 பேர் கெப்பெட்டிபொல பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய கெப்பெட்டிபொல பொலிஸாரால் நீண்ட நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைகளழனட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஊவபரனகம மெதவெல பிரதேசத்தில் வசிக்கும் “கெப்பெட்டிபொல பூதயா” என்பவர் இரத்தினபுரியில் இருந்து ஹேரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை கொண்டு வந்து ஈசி கேஸ் மூலம் பல்வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
“கெப்பெட்டிபொல பூதயா” என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைய ஏனைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கெப்பெட்டிபொல, ஹக்கல, பொரகஸ், நுவரெலியா, நாவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் 4 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியானது என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். பருத்தித்துறை வாள் வெட்டுத் தாக்குதல் ; பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை கோரல்
16 Oct, 2025 | 04:55 PM
![]()
போதைப்பொருள் கடத்தும் குழு என்று சந்தேகிக்கப்படும் குழுவினரால், அண்மையில் பருத்தித்துறையில் அரங்கேற்றப்பட்ட தந்தையும் மகனும் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றைக் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரௌடிகள் தொடர்பாக மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு வர அச்சப்படும் சூழ் நிலை காணப்படுகிறது. பொலிஸாருக்கு வழங்கும் தகவல்கள் குற்றவாளிகளுக்கு உடனேயே கடத்தப்படுகிறது என்ற விடயம் தொடர்பாக விளக்கம் கோரினேன்.
பருத்தித்துறையில் நடைபெறும் அனைத்து குற்றச் செயல்களும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரினேன். இந்த விடயங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து விடயங்களை தெரிவிக்க உள்ளேன்.
பல விடயங்களில் பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர் என மக்கள் எனக்கு தந்த முறைப்பாடுகளையும் தெரிவித்தேன் என தெரிவித்தார்.
யாழ். பருத்தித்துறை வாள் வெட்டுத் தாக்குதல் ; பொலிஸார் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை கோரல் | Virakesari.lk
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது
16 Oct, 2025 | 05:05 PM
![]()
மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவதினமான இன்றையதினம் அதிகாலை சிறுமி வீட்டின் அறையில் இருந்து காணாமல் போயுள்ளார். சிறுமியை தேடிய பெற்றோர் வீதியில் இளைஞன் ஒருவருடன் இருப்பதை கண்டு இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவனை கைது செய்ததுடன், குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது | Virakesari.lk
'ஏர் பேக் மீது மோதி சிறுவன் பலி': காப்பாற்ற வேண்டிய ஏர் பேக் உயிரையே பறிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
கட்டுரை தகவல்
மோகன்
பிபிசி தமிழ்
16 அக்டோபர் 2025, 10:13 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கார் மோதி விபத்து ஏற்பட்டு ஏர் பேக் வெடித்ததில், முன் இருக்கையில் தந்தையின் மடியில் அமர்ந்திருந்த 7 வயது சிறுவன் காயங்களால் உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வீராமுத்து. இவர் தனது 7 வயது மகன் கெவின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இருவருடன் வாடகை காரில் பழைய மகாபலிபுரம் சாலை வழியாக சென்னையை நோக்கி பயணித்துள்ளார்.
''திருப்போரூரைக் கடந்து சென்றபோது முன்னே சென்ற வாகனம் வலதுபுறம் திரும்ப உடனடியாக நின்றதால் பின்னே வந்த இவர்களின் கார் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் உள்ள ஏர் பேக் உடனடியாக வேலை செய்யவே முன்னே தந்தையின் மடியில் அமர்ந்திருந்த கெவினுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.'' என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
காவல்துறையினர் அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கெவின் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். முன்னே சென்ற வாகனத்தின் ஓட்டுநரான சுரேஷ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏர் பேக் பயன்பாடு, வாகனத்தில் சிறுவர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்ல பாதுக்காப்பான முறைகள் பற்றி ஆட்டோமொபைல் துறை வல்லுநரான த முரளியிடம் பிபிசி பேசியது.
தற்போது இந்தியாவில் விற்கப்படும் பெரும்பாலான கார்களில் முன்புறம் இரண்டு, முன் இருக்கைக்கு பின் புறம் இரண்டு பக்கவாட்டில் இரண்டு என மொத்தம் 6 ஏர் பேக்குகள் இருக்கும் எனத் தெரிவிக்கிறார் முரளி.
ஏர் பேக் மற்றும் சீட் பெல்ட் சென்சார்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.
சீட் பெல்டின் அவசியம்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
ஆட்டோமொபைல் துறையில், சீட் பெல்ட் மிகவும் முக்கியமான அம்சமாக இடம்பெறுகிறது. சீட் பெல்டின் அவசியம் கருதியதால்தான் அதற்கு காப்புரிமை பெறப்படவில்லை என்கிறார் முரளி
அமெரிக்காவில் 1987 முதல் 2017 வரையிலான 30 ஆண்டு காலத்தில் 50,457 உயிர்கள் சீட் பெல்ட் அணிந்ததால் பாதுகாக்கப்பட்டதாக அமெரிக்க போக்குவரத்துறை தெரிவிக்கிறது.
கார் என்று வருகையில் சீட் பெல்டும் ஏர் பேக்கும் இரு அவசியமான, இன்றியமையாத அம்சங்கள் எனக் கூறும் முரளி, "சீட் பெல்ட் அணிந்தால்தான் ஏர் பேக் சரியாக வேலை செய்யும்." என்றார்.
ஏர் பேக்கிற்கு முந்தைய முதல் கட்ட பாதுகாப்பு சீட் பெல்ட்தான் என்கிறார் முரளி
"கார் திடீரென இடது அல்லது வலது புறம் திரும்பினாலோ அல்லது மெதுவாக எங்காவது மோதினாலோ ஏர் பேக் வேலை செய்யாது. தீவிர விபத்துகளின்போது ஏர் பேக் உடனடியாக வெளிவரும். அத்தகைய சூழல்களில் சீட் பெல்ட்தான் முதல் கட்ட பாதுகாப்பு." என்றார்.
ஏர் பேக் எப்போது வேலை செய்யும்?
வாகனம் நேராக மோதினால் முன் பக்கம் உள்ள நான்கு ஏர் பேக் மட்டுமே திறக்கும். பக்கவாட்டில் மோதினாலோ அல்லது வாகனம் தடம் புரண்டாலோ தான் பக்கவாட்டில் உள்ள ஏர் பேக் திறக்கும்.
"வாகனம் விபத்துக்கு உள்ளாகிறபோது உடல் முன்னே தள்ளப்படும். அப்போது சீட் பெல்ட் தான் உடனடியாக உடலை பின்னுக்கு இழுக்கும். ஏர் பேக்கும் மைக்ரோ நொடிகளில் திறந்துவிடும். அப்போது உடல் பின்னே இருக்க வேண்டும், இல்லையென்றால் ஏர் பேக்கால் பலன் இருக்காது." எனத் தெரிவித்தார்.
இருக்கையில் உள்ள ஹெட் ரெஸ்டை நீக்கக்கூடாது எனக் கூறும் அவர் அதற்கான காரணத்தையும் விளக்கினார்.
"தற்போது பலரும் ஹெட் ரெஸ்டை நீக்கிவிட்டு பயணிக்கின்றனர். முன் இருக்கையில் தான் தாக்கம் அதிகமாக இருக்கும். உடல் முன்னே சென்று பின்னுக்கு வருவது, ஏர் பேக் திறப்பது என அனைத்துமே சில மைக்ரோ விநாடி இடைவெளியில் நடக்கக்கூடியவை. உடல் இருக்கையில் பின் வந்துமோதுகிறபோது ஹெட் ரெஸ்ட் இல்லையென்றால் முதுகெலும்பு உடைந்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது." எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
குழந்தைகளுக்கு உள்ள கட்டுப்பாடு என்ன?
குழந்தைகள், அவர்களுக்கு என்ன வயது என்றாலும் நாம் செய்யக்கூடாத முதல் விஷயம் மடியில் அமர வைத்து பயணிப்பதுதான் என்கிறார் முரளி.
மேலும் "குழந்தைகளை பின் இருக்கையில்தான் அமர வைக்க வேண்டும்." என்றார்.
"உயிரைப் பாதுகாக்கும் ஏர் பேக்காலும் காயங்கள் ஏற்படும். உரிய இடைவெளியில் அமர்ந்திருந்தால்தான் ஏர் பேக் பயனுள்ளதாக இருக்கும்." என்றும் தெரிவித்தார் முரளி.
சிறுவயதுள்ள குழந்தைகளுக்கு என ஐசோபிக்ஸ் என்கிற பிரத்யேக இருக்கை இருக்கிறது. இதனை பின் இருக்கையில் பொருத்திக் கொள்ள முடியும். அதை நிறுவி, குழந்தைகளை அதில் அமர்த்தி முறையாக சீட் பெல்ட் அணிந்தால் தான் ஏர் பேக் வேலை செய்யும் என்கிறார் முரளி.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
பின் இருக்கையிலும் குழந்தைகளை மடியில் அமர வைக்கக்கூடாது எனக் கூறும் முரளி அந்தச் சூழலில் ஏர் பேக் குழந்தைகளுக்கு கிடைக்காது. வாகனம் மோதுகிற வேகத்தில் அவர்கள் தூக்கி வீசப்படுவார்கள். குழந்தைகளாக இருந்தாலும் சீட் பெல்ட் அணிந்து இருக்கையில் அமர்த்தி பயணிப்பது தான் பாதுகாப்பானது எனத் தெரிவித்தார்.
"முன்னர் கார்களில் 4 சீட் பெல்ட் மட்டுமே இருக்கும். தற்போது விதிகள் கடுமையாக்கப்பட்டு அனைத்து இருக்கைகளிலும் சீட் பெல்ட் இடம்பெறுகிறது. அதனை முறையாக பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
வாகனங்களில் பம்பர்களை தவிர்க்க வேண்டும் எனக் கூறும் முரளி, "வாகனம் அதிர்வை உணர்ந்தால் தான் ஏர் பேக் திறக்கும். பம்பர் மாற்றினால் ஏர் பேக் திறக்காது. அது மிகவும் ஆபத்தானது." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
தாமும் பாதிக்கப்பட்டதாகக் கூறும் ஜனாதிபதி நாம் நிராகரித்த பொறிமுறையையே பலப்படுத்துகிறார்; வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா அதிகாரிகளிடம் கடும் அதிருப்தி
15 Oct, 2025 | 03:07 PM
![]()
(நா.தனுஜா)
வலிந்து காணாமலாக்கப்படல்களால் தாமும் பாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்ற போதிலும், அவர் ஆட்சிபீடமேறியதன் பின்னர் எம்மை சந்தித்து எமது நிலைப்பாட்டைக் கேட்டறியவில்லை. மாறாக நாம் நிராகரித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையே அவர் முன்னெடுக்கிறார் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரி மற்றும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக ஐ.நாவின் கிளை அமைப்புக்களில் ஒன்றான வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் செப்டெம்பர் 26 - 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி மற்றும் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் சர்வதேச மன்னிப்புச்சபையினாலும், வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிங்களப்பெண்கள் இருவர் மற்றும் தமிழ் பெண்கள் இருவர் என மொத்தமாக நால்வர் சுவிஸ்லாந்து தூதரகத்தினாலும் ஜெனிவாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
அதன்படி மேற்கூறப்பட்டவாறு இலங்கை விவகாரம் ஆராயப்படுவதற்கு முன்னைய தினம் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையில் இருந்து சென்ற பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது மறுநாள் இலங்கை அரசாங்கத்திடம் கேட்கப்படவேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கருதும் கேள்விகள் தொடர்பில் ஐ.நா அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டனர்.
அவ்வதிகாரிகளிடம் தம்மால் முன்வைக்கப்பட்ட பல கேள்விகள் மறுநாள் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான குழுவினரிடம் வினவப்பட்டதாக சுட்டிக்காட்டிய லீலாதேவி, இருப்பினும் இறுதிக்கட்டப்போரின்போது படையினரிடம் சரணடைந்தோரின் பெயர்ப்பட்டியல் மற்றும் குறிப்பாக பலர் சரணடைந்த 4 இடங்களுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தல் என்பன தொடர்பில் தாம் முன்மொழிந்த கேள்வி அரசாங்கத்திடம் கேட்கப்படாமை தமக்கு மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.
அதேவேளை மேற்குறிப்பிட்ட கூட்டத்துக்கு அப்பால், பாதிக்கப்பட்ட தரப்பினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலக அதிகாரியையும், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் என்ற ரீதியில் தமது கோரிக்கைகள், உள்ளகப்பொறிமுறை மீதான நம்பிக்கை இழப்பு மற்றும் தற்போதைய அரசாங்கம் இவ்விவகாரத்தைக் கையாளும் விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவ்வதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.
அதுமாத்திரமன்றி தாமும் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்ற போதிலும், அவர் ஆட்சிபீடமேறியதன் பின்னர் தம்மை சந்தித்து தமது நிலைப்பாட்டைக் கேட்டறியவில்லை எனவும், மாறாக தாம் நிராகரித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையே அவர் முன்னெடுக்கிறார் எனவும் அவ்வதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட தரப்பினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.