புதிய பதிவுகள்2

ஸ்வர்ணலதாவின் 10 சிறந்த பாடல்கள் - பட்டியலிட்ட பி.எச்.அப்துல் ஹமீத்

2 weeks 5 days ago
ENS ரங்கீலா படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றது. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 11 செப்டெம்பர் 2025 தமிழ் சினிமா மாத்திரமன்றி தெலுங்கு, கன்னடம், உருது, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி வரவேற்பை பெற்றவர் ஸ்வர்ணலதா. கேரளாவின் பாலக்காடு பகுதியில் 1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி ஸ்வர்ணலதா பிறந்தார். ஸ்வர்ணலதாவின் தந்தை பிரபல இசை கலைஞர் என்ற ரீதியில், ஸ்வர்ணலதாவிற்கும் இசை மீது அபூர்வ ஆர்வம் சிறு வயதிலிருந்தே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதனின் ஊடாக திரை இசைத்துறைக்குள் ஸ்வர்ணலதாகால் தடம் பதித்தார். பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினத்தை (செப்டம்பர் 12) ஒட்டி, தனக்கு பிடித்த 10 ஸ்வர்ணலதா பாடல்களை இலங்கையை சேர்ந்த மூத்த மற்றும் புகழ்வாய்ந்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் பிபிசி தமிழுக்கு பட்டியலிட்டார். இதில் அவர் எழுதிய பாடலும் இடம்பெற்றுள்ளது. 1. போறாளே பொன்னுத் தாயி Rajshri Tamil ஏ.ஆர்.ரகுமானின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல். 1994-ஆம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தில் இந்த பாடல் வெளியாகியிருந்தது. ஏ.ஆர்.ரகுமானின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவான இந்த பாடலை, ஸ்வர்ணலதா பாடியிருந்தார். இந்த பாடலை பாடியமைக்காக ஸ்வர்ணலதாவிற்கு 1994-ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழக அரசு விருதும், இந்தியாவின் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. இந்த பாடல் அன்று முதல் இன்று வரை பலரது பாடல்கள் விருப்ப பட்டியலில் உள்ளமை விசேட அம்சமாகும். 2. மாலையில் யாரோ Ayngaran பானுப்பிரியாவின் காட்சிகளுக்கு ஸ்வர்ணலதாவின் குரல் பொருந்திப் போயிருந்தது. 1990-ஆம் ஆண்டு வெளியான சத்ரியன் திரைப்படத்தில் ''மாலையில் யாரோ'' பாடலும் பலரது விருப்பத்திற்குரிய பாடலாக அமைந்துள்ளது. வாலியின் வரிகளில், இளையராஜாவின் இசையில் உருவான இந்த பாடலை, ஸ்வர்ணலதா பாடியிருந்தார். திரையில் பானுப்பிரியாவின் காட்சிகளில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு, காட்சிகளை விடவும், ஸ்வர்ணலதாவின் மெல்லிய குரலே உயிரை வழங்கியிருந்தது. 3. ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் FB/KSChithra 2010-ஆம் ஆண்டு செப். 12-ஆம் தேதி ஸ்வர்ணலதா காலமானார்(வலம்). ஊரெல்லாம் உன் பாட்டு திரைப்படத்தில் வெளியான பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. கே.ஜே.யேசுதாஸின் குரலில் தனியாக இந்த பாடல் வெளியாகியிருந்ததுடன், ஸ்வர்ணலதாவின் குரலில் வேறொரு பாடல் தனியாக உருவாக்கப்பட்டிருந்தது. வாலியின் வரிகளில் எழுதப்பட்ட இந்த பாடலுக்கு, இளையராஜா இசை அமைத்திருந்தார். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் பாடல், அந்த காலப் பகுதியில் ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்திருந்தது. 4. என்னுள்ளே என்னுள்ளே Sun Music என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ரஜினிகாந்த், பிரியா ராமன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் வள்ளி. 1993-ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது. என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கான வரிகள் வாலி எழுதியிருந்ததுடன், இளையராஜா இசையமைத்திருந்தார். ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலித்த இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் இன்று வரை வரவேற்பு காணப்படுகின்றது. 5. ஹய் ராமா 1995ம் ஆண்டு வெளிவந்த படமே ரங்கீலா. இந்த படத்திற்கான இசையை ஏ.ஆர்.ரகுமான் வழங்கியிருந்தார். ரங்கீலா திரைப்படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றிருந்தது. ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். ஸ்வர்ணலதாவின் பாடல்கள் வரிசையில் இந்த பாடலுக்கும் இன்று வரை முக்கிய இடம் இருக்கின்றது என்பதே உண்மை. 6. பூங்காற்றிலே Track Musics India 'உயிரே' படத்தில் ஏ.ஆ.ரஹ்மான் இசையில் உருவான பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல். உயிரே திரைப்படம், சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் வெளியான பாடல்கள் வரிசையில் பூங்காற்றிலே பாடல் மிக மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. உன்னிமேனன் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோரின் குரல்களில் பதிவு செய்யப்பட்ட இந்த பாடலுக்கான வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார். பாடலுக்கான இசை ஏ.ஆர்.ரகுமான் வழங்கியிருந்தார். மணிரத்னத்தின் இயக்கத்தின் 1998-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், இன்றும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. 7. காதல் எனும் தேர்வெழுதி API Tamil Songs காதலன் தினம் படத்தின் பாடல்களுக்குமான வரிகளை வாலி எழுதியிருந்தார். காதலர் தினம் திரைப்படம் 1999-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. அறிமுக கதாநாயகன் குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே ஆகியோரின் நடிப்பில், கதிரின் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பிடித்திருந்த நிலையில், அனைத்து பாடல்களுக்கும் சிறந்த வரவேற்பு கிடைத்திருந்தது. அனைத்து பாடல்களுக்குமான வரிகளை வாலி எழுதியிருந்ததுடன், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் வெளியான ''காதல் எனும் தேர்வெழுதி'' பாடல் இன்றும் இளைஞர் யுவதிகளின் உதடுகளில் முனுமுனுக்கும் பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலுக்கு ஈடாக ஸ்வர்ணலதாவின் குரலும் அமைந்திருந்த அதேவேளை, இந்த பாடலின் காட்சிகளுக்கு அந்த குரல்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது என்பது மிகையாகாது. 8. திருமண மலர்கள் Star Hits ஜோதிகாவின் காட்சிகளுக்கு ஸ்வர்ணலதா தனது மெல்லிய குரலில் உயிர் கொடுத்திருந்தார். அஜித் மற்றும் ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே பூவெல்லாம் உன் வாசம். குடும்ப நண்பர்கள் எப்படி காதல்களாக மாறி இணைகின்றார்கள் என்பதே இந்த திரைப்படத்தின் கதையாக அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தில் 6 பாடல்கள் இடம்பிடித்திருந்ததுடன், அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார். பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிபதிவு செய்யப்பட்ட ஒரேயொரு பாடலாக திருமண மலர்கள் தருவாயா பாடல் அமைந்துள்ளது. ஜோதிகாவின் காட்சிகளுக்கு, ஸ்வர்ணலதாவின் குரல் அவ்வாறே இணைந்ததாக காணப்படுவதுடன், அந்த காட்சிகளுக்கு ஸ்வர்ணலதா தனது மெல்லிய குரலில் உயிர் கொடுத்திருந்தார். 9. மயிலிறகே மயிலிறகே 2002- ஆம் ஆண்டு வெளியான திரைப்படமே தென்காசி பட்டணம். இந்த திரைப்படத்தில் மயிலிறகே மயிலிறகே பாடலை, மனோ மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து பாடியிருப்பார்கள். இந்த பாடலுக்கு பீட்டர்ஸ் இசையமைத்திருந்ததுடன்,பாடலுக்கான வரவேற்பு இன்று வரை அவ்வாறே காணப்படுகின்றது. 10. சிஞ்ஞோரே சிஞ்ஞோரே API Tamil Songs 'சிஞ்ஞோரே சிஞ்ஞோரே' பாடலை, மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்தே எழுதியுள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், இலங்கை போர் களத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு திரைப்படமாக காணப்படுகின்றது. மணிரத்னத்தின் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், பிரகாஷ்ராஜ் ஆகியோரின் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு, 2002-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற்றிருந்த போதிலும், பி.எச்.அப்துல் ஹமீத்திற்கு இந்த பாடல் அவரது வாழ்க்கையில் மிக மிக முக்கியமான பாடலாக விளங்குகின்றது. காரணம் அவரே இப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். தமிழ் வரிகளுடன், சிங்கள வரிகள் அடங்களாக எழுதப்பட்ட இந்த பாடலை, ஸ்வர்ணலதாவின் குரலிலும் கேட்கும் போது, அனைவருக்குமே ஆச்சரியம் தருகின்றது. பி.எச்.அப்துல் ஹமீத் எழுதிய சிஞ்ஞோரே சிஞ்ஞோரே பாடலுக்கு ஸ்வர்ணலதா குரல் கொடுத்திருந்தார் ஸ்வர்ணலதா உலகை விட்டு விடை பெற்று 15 வருடங்கள் இந்திய சினிமாத்துறையில் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற ஸ்வர்ணலதா, 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி தனது 37வது வயதில் காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். 1987-ஆம் ஆண்டு இசை ரசிகர்களுக்கு தனது குரலில் விருந்து வழங்கிய ஸ்வர்ணலதாவின் குரல் 2010-ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டாலும், அந்த குரலின் பதிவுகள் என்றென்றும் ரசிகர்களின் காதுகளில் ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c07vkydy3jyo

iPhone 17-ன் புதிய அம்சங்கள் என்ன?

2 weeks 5 days ago
12 செப்டெம்பர் 2025, 04:48 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் iPhone 17 சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே உள்ள பிற ஐபோன்களை விட வடிவத்தில், தோற்றத்தில் பெரிய வித்தியாசங்கள் கொண்டிருக்கவில்லை. செல்போனின் பின்புறம் கேமராவுக்கான கூடுதல் லென்ஸ் அமைக்கும் வகையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதை தவிர தோற்றத்தில் வேறு மாற்றங்கள் இல்லை. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பல புதிய அம்சங்களை இந்த செல்போன் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்கும் போது, எத்தனை பேர் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஃப்ரேம் சரி செய்துக் கொள்ளப்படும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இது தான் மிகவும் ஒல்லியான ஐஃபோன் என்று கூறப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் சார்ஜ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8jvn60ym4o

சிறிதரன்: தவறுகளும் மீளலும் — கருணாகரன் —

2 weeks 5 days ago
சிறிதரன்: தவறுகளும் மீளலும் September 11, 2025 — கருணாகரன் — தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனைப் பற்றிய ‘படங்காட்டுதல் அல்லது சுத்துமாத்துப் பண்ணுதல்‘ என்ற கட்டுரை, அவரைத் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாக அமைந்திருக்கிறது என்று சிலர் குற்றம் சாட்டினர். அவர்களுடைய கேள்விகளில் முக்கியமானவை – 1. சிறிதரன் மட்டும்தான் இப்படி (கட்டுரையில் குறிப்பிட்டவாறு கல்வி, மருத்துவம், விவசாயம், சூழல் விருத்தி, கடற்றொழில், பனை தென்னை வளத் தொழில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான ஆதாரம், மாற்றுத் திறனாளிகளின் எதிர்காலத்துக்கு, முன்னாள் போராளிகளின் வாழ்க்கைக்கு – பிரதேசங்களின் அபிவிருத்திக்கு, இளைய தலைமுறையினரின் திறன் விருத்திக்கு, தொழில் வாய்ப்புகளுக்கு, பண்பாட்டு வளர்ச்சிக்கு, வரலாற்றுத்துறைக்கு, இலக்கிய மேம்பாட்டுக்கு – சமூக வளர்ச்சிக்கு….) பங்களிப்புச் செய்யாத ஒருவரா? அவரையும் விட நீண்ட காலமாக செல்வம் அடைக்கலநாதன் வன்னியில்(மன்னாரில்) பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரைப்போல வேறு ஆட்களும் உள்ளனர். அவர்களைப் பற்றியெல்லாம் எழுதாமல், சிறிதரனை இலக்கு வைத்து தாக்குவது ஏன்? அதாவது தெரிவு செய்யப்பட்ட இலக்காக ஒருவரைக் கொள்வது ஏன்? என்பது. 2. இவ்வாறான குற்றச்சாட்டுகளை வைத்தாலும் சிறிதரனுக்குத் தொடர்ச்சியாக மக்கள் ஆதரவு உள்ளதே! அதனால்தானே அவர் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார். அப்படியென்றால், மக்களின் உணர்வையும் தெரிவையும் தவறு என்று சொல்கிறீர்களா? மக்களின் தெரிவை (ஏற்பை) மறுதலிப்பதற்கான அதிகாரம் உங்களுக்கு இல்லையே! என்பது. 3. நீங்கள் (கட்டுரையாளர்) ஒரு அரசியற் சார்பில் நின்று கொண்டு, அதற்கெதிரான தரப்பில் நிற்கும் சிறிதரனை இலக்கு வைக்கிறீர்கள். இது அரசியற் போட்டியின் விளைவான காழ்ப்புணர்ச்சி வெளிப்பாடாகும் என்பது. ஏனைய குற்றச்சாட்டுகள் பொருட்படுத்தக் கூடியன அல்ல. இதேவேளை வேறு பலர் பாராட்டினார்கள். அவர்கள் பாராட்டியதற்குக் காரணம் – 1. பேச வேண்டிய – குறிப்பிடப்பட வேண்டிய விடயத்தைத் துணிச்சலோடு பேசியுள்ளீர்கள். உரியவர்களுக்குரிய(சிறிதரனுக்கும் அவரை ஆதரிப்போருக்கும்) பொறுப்பைச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். ஒரு எழுத்தாளர் அல்லது அரசியல் விமர்சகருக்கு இந்தத் துணிச்சலும் பக்கம் சாராமையும் அவசியமாகும். பொருத்தமான காலத்தில் அதைச் சுட்டிக்காட்டுவது முக்கியமானது. அது இங்கே(குறித்த கட்டுரையில்) உள்ளது என்பது. 2. போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதிநிதி ஒருவர் ஆற்றியிருக்க வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுள்ளீர்கள். அது முக்கியமானது. ஏனென்றால், அதில் ஒரு துறையில் கூட எந்த வகையான முன்னேற்றத்துக்கோ வளர்ச்சிக்கோ மாற்றங்களுக்கோ இவர்(சிறிதரன்) எத்தகைய பங்களிக்கவும் இல்லை என்பதைச் சவாலுக்கு உட்படுத்தியுள்ளீர்கள். நியாயமாக நடப்பவர்களாக இருந்தால், நிச்சயமாக இதைக் குறித்துச் சிந்திப்பார்கள் என்பது. 3. தனிப்பட்ட ரீதியில் சிறிதரன் குற்றம் சாட்டப்படவில்லை. அதாவது அரசியற் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளில்லை. வெளிப்படையாக, சிறிதரனையும் அவரை ஆதரிப்போரையும் சேர்த்தே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கேள்விக்குட்படுத்துவது, விமர்சிப்பது வேறு. குற்றம் சாட்டுவதும், அவதூறு செய்வதும் வேறு. இங்கே கட்டுரையில் செய்யப்பட்டிருப்பது கேள்விக்குட்படுத்தியதும் விமர்சனம் செய்திருப்பதுமேயாகும். ஆகவே இதற்கான பதிலை அவர்கள் தரவேண்டும். அது இந்தக் கட்டுரைக்கு(உங்களுக்கு அல்லது அதைப் பிரசுரித்த ஊடகத்துக்கு) நேரடியான பதிலாகவும் இருக்கலாம். அல்லது தங்களுடைய முன்னேற்றகரமான எதிர்காலச் செயற்பாடுகளின் வழியாகவும் அந்தப் பதில் இருக்கலாம் என்பது. 4. சிறிதரனின் மீதான குற்றச்சாட்டு என்பது அவரை ஆதரிக்கும் மக்களையும் மக்களின் ஆதரவைத்திரட்டிக் கொடுப்போரையும் கேள்விக்கு உட்படுத்தாத ஊடகங்களையும் புத்திஜீவிகளையும் சாரும். இத்தகைய கேள்விகளை எழுப்புவது மக்களை விழிப்புணர்வு அடையச் செய்வது மட்டுமல்ல, கேள்வி கேட்கக் கூடிய ஜனநாயக வீரியத்தையும் துணிச்சலையும் உருவாக்கும். அது எவரை நோக்கியும் கேள்வி கேட்கக் கூடிய – எவரையும் விமர்சிக்கக்கூடிய முன்னேற்றகரமான ஒரு பண்பியல் வளர்ச்சியை மக்களிடம் உருவாக்கும். அதற்கு இந்தக் கட்டுரை பங்களிக்கிறது. இப்படியான ஒரு விழிப்புணர்வு தென்னிலங்கையில் ஏற்பட்டபடியால்தான் அங்கே ஒரு ஆட்சி மாற்றம் நிகழ முடிந்தது. பாரம்பரிய ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பயனில்லாதவர்கள் சமூகத்துக்குச் சுமையல்லவா என்பது. 5. ஒரு மாவட்டத்தின் முன்னேற்றத்தை – வளர்ச்சியைக் குறித்துச் சிந்திப்பவரின் ஆதங்கமும் கருத்தும் கோபமும் இப்படித்தான் வெடித்து வெளிப்படும். இது இப்பொழுது ஒரு பத்திரிகையாளருக்குள் நிகழ்ந்திருக்கிறது. எதிர்காலத்தில் இந்த வெடிப்பும் கொந்தளிப்பும் மக்களிடத்திலும் ஏற்படும். அதைக் கட்டியமாகச் சொல்லியுள்ளது அந்தக் கட்டுரை. அதைப்போலப் போரினால் ஏற்பட்ட பாதிப்பைச் சொல்லியும் எடுத்தற்கு எல்லாம் அரசாங்கத்தை திட்டியும் தொடர்ந்தும் அரசியல் நடத்த முடியாது. மக்களைத் துயரங்களிலிருந்தும் அவலங்களிலிருந்தும் மீட்பதே அவர்களுடைய போராட்டகாலப் பங்களிப்புகளுக்கும் பாதிப்புக்கும் செய்யும் நீதியாகும். அதையும் கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது. பொதுவான வாசகர்களித்திலும் கூட இத்தகைய கொந்தளிப்பும் வெடிப்பும் நிச்சயமாக நிகழும். அது அவசியமாகும் என்பது. இப்படி வேறும் சில கருத்துகள் வந்தன. இவை போதும் என்பதால் அவை தவிர்க்கப்பட்டுள்ளன. . சரி, இனி குறித்த விடயத்துக்கு வருவோம். முதலில், குற்றம்சாட்டியோரின் நியாயத்தைக் குறித்துப் பார்க்கலாம். குற்றம்சாட்டியோர் எதையும் முறையாக விவாதிக்கவும் பரிசீலிக்கவும் தயாராக இல்லை. அப்படியாக இருந்திருந்தால் அது ஆரோக்கியமான விவாதமாகவும் அறிவார்ந்த செயற்பாடாகவும் பயனுள்ள விடயமாகவும் இருக்கும். ஒரு மக்கள் பிரதிநிதியைத் தொடர்ந்து வெற்றியடையச் செய்யும் ஆதரவாளர்களிடமிருந்து ஒரு நல்ல பதில் கூட வரவில்லை; வரமுடியாமலிருக்கிறது என்பது அவருடைய வீழ்ச்சியையும் அந்தத் தரப்பின் இயலாமையுமே காட்டுகிறது. இவ்வளவுக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர் சிறிதரன். அந்தப் பொறுப்பேற்புத் தொடர்பான விவகாரம் கூட வழக்கில் உள்ளது. இருந்தும் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட சிறிதரனுடைய மக்கள் பணிகளின் குறைபாடுகள், அரசியல் அணுகுமுறை போன்றவற்றைக் குறித்து முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனத்துக்கு கட்சிக்குள்ளிருந்து கூட எந்தக் குரலும் எழுவதில்லை. பாராளுமன்றத்தில் உச்சக் குரலில் பேசுவது வேறு. பாராமன்றத்தையும் அரசியல் வெளியையும் கையாள்வது வேறு. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது, ஜனாதிபதி அநுரகுமாரவுடன் சாணக்கியன் பேச்சுகளை மேற்கொண்டு, மக்களுக்கான பல விடயங்களைச் சாதமாக்கியுள்ளார். இப்படி முன்னரும் சில விடயங்களை அவர் சாத்தியப்படுத்தினார். ஒரே கட்சியில், அதுவும் இளைய பிரதிநிதி ஒருவர் அப்படிச் சாதிக்க முடியுமாக இருக்கும்போது, அந்தக் கட்சியில் தொடர்ந்து வெற்றியீட்டிய மூத்த பிரதிநிதியினால் அது முடியாமலிருப்பது ஏன்? காரணம், எளிது. இதற்கொரு அண்மைய உதாரணம். தற்போது ஆட்சியலிருக்கும் NPP யின் பா. உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கடந்த வாரம் பளை – வேம்போடுகேணி பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வுக்குச் சென்றிருந்தார். அதே நிகழ்வில் இன்னொரு அழைப்பாளராகச் சிறிதரனும் சென்றிருந்தார். ரஜீவனைக் கண்டதும் சிறிதரன் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் திரும்பி விட்டார். இவ்வாறான தவறுகளே மக்களுக்கான அரசியல் பெறுமானங்களை சிறிதரனால் உருவாக்க முடியாதிருப்பதற்கான காரணமாகும். தவிர, இலங்கையிலுள்ள முன்னணி அரசியற் கட்சிகளின் குறைபாடுகள், தவறுகள், பொறுப்பின்மைகள், மக்கள் விரோதச் செயற்பாடுகள் போன்றவற்றைப் பற்றி வெளிப்படையாகவே பேசப்பட்டு வந்துள்ளது. மட்டுமல்ல, அவற்றின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளோரின் செயற்பாடுகள், நடவடிக்கைகள், நடைமுறைகள் பற்றிய விமர்சனங்களும் தொடர்ந்து செய்யப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிட்டே அவை செய்யப்பட்டுள்ளன. யாரும் விலக்கல்ல. தனிப்பட்ட முறையில் யாரும் குறி வைத்து விமர்சிக்கப்படவுமில்லை. அப்படிச் செய்வது மக்களிடமிருந்து கட்டுரையும் குறித்த ஊடகமும் விலக்கம் செய்யப்படக் கூடிய சூழலையே உருவாக்கும். கட்டுரையைப் படிக்கும்போது வாசகர்களுக்கு இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதனைப்போல, வேறு பலருடைய முகங்களும் நினைவுக்கு வரலாம். ஏன் இதைப்போல பிற சமூகங்களில் உள்ள அரசியல்வாதிகளைப் பற்றிக் கேள்விகளும் எழலாம். அப்படி நிகழுமானால், அது கட்டுரையின் வெற்றியாகும். மக்களை விழிப்படையச் செய்வதுதானே இத்தகைய கட்டுரைகளின் (எழுத்துகளின்) நோக்கமாகும். அதேவேளை தம்மீதான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதில்களை அவர்கள் காண முற்பட வேண்டும். அதனையே கட்டுரை விரும்புகிறது. நோக்கமும் அதுதான். தவிர, தனிப்பட்ட ரீதியில் சிறிதரன் விமர்சிக்கப்படவில்லை. அதாவது அவரைக் குறித்து சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் மக்களிடத்திலும் பேசப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள், சொத்துக் குவிப்புப் போன்றவற்றையெல்லாம் கட்டுரை அக்கறைப்படவில்லை. அத்தகைய குற்றச்சாட்டுகளை சிவில் செயற்பாட்டாளரான சஞ்சய் மஹாவத்த என்பவர் சட்டரீதியாக ஊழலுக்கு எதிரான குற்றப்புலனாய்வுப்பிரிவில் முறையிட்டு ஆவணப்படுத்தியுள்ளார். இருந்தும் அவை இன்னும் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாக மாறவில்லை என்பதால் இந்தக் கட்டுரையில் அவை எடுத்துக் கொள்ளப்படவில்லை. இங்கே மக்களுக்கு (சமூகத்துக்கு) தேவையான வேலைகளைச் செய்யவில்லை. அதற்குப் பொறுப்புக் கூறவேண்டும். அதற்கான கடப்பாடு குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் அவரை ஆதரித்து நிற்போருக்கும் உண்டு என்பதே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தது – ஒருவருக்கு தொடர்ந்தும் மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதற்காக அவருடைய அரசியற் செயற்பாடுகள் சரியானவை, ஏற்றுக் கொள்ளத் தக்கவை என்று கொள்ள முடியாது. கடந்த கால ஆட்சியாளர்களை தொடர்ந்தும் மக்கள் ஆதரித்து வந்தனர். அப்படி வந்தபடியால்தான் அவர்கள் 30, 40, 50 ஆண்டுகளாக அரசியலிலும் பாராளுமன்றத்திலும் வெற்றிகரமாக இருந்திருக்க முடிகிறது. ஆனால், அவர்கள் செய்ததெல்லாம் என்ன? நாட்டுக்கும் மக்களுக்கும் தீமைகளைத்தானே! அதனால்தானே நாடு இவ்வாறான வங்குரோத்து நிலைக்குள்ளானது? ஆகவே மக்களின் தொடர்ச்சியான ஆதரவைப் பெற்றவர்கள் என்பதற்காக அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்? கேள்வி கேட்க முடியாதவர்கள் என்றில்லை. அவர்கள் மீதான பொறுப்புக் கூறலைக் கோர முடியாது என்று யாரும் கூறவும் முடியாது. அப்படி யாராவது கூற முற்பட்டால், அது ஜனநாயகத்துக்கு மாறானது. ஜனநாயக விழுமியம் என்பது எவரைப்பற்றிய நியாயமான விமர்சனங்களையும் எழுப்பலாம். எவரைக் குறித்தும் கேள்வி எழுப்பலாம் என்பதே. அதுதான் மக்களாட்சிச் சிறப்பாகும். மட்டுமல்ல, கேள்விகளும் விமர்சனங்களும்தான் மக்களைச் சிந்திக்க வைக்கும். இல்லையெனில், மக்கள் தொடர்ந்தும் தவறானவர்களையே – பயனற்றவர்களையே தெரிவு செய்து கொண்டிருப்பார்கள். அதனால்தான் குறித்த நபர்கள் தொடர்ந்தும் சுலபமாக வெற்றி பெற முடிகிறது. அடுத்த விடயம், அரசியற் காழ்ப்புணர்ச்சியினால் சார்பு நிலைப்பட்டு கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்பது தொடர்பாக – கட்டுரையானது மக்களின் நிலை நின்றே பேசுகிறது. எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களும் மக்களின் நிலையிலானவையே. அங்கே பக்கச்சார்பு எதுவும் இல்லை. கட்டுரையாளரிடம் ஏதாவது அரசியற் சார்புகள் இருந்தால், அதற்கான ஆதாரங்களோடு எதிர்வினையை யாரும் ஆற்றலாம். அது அவசியமானது. இனி, தொடர்ந்து பேச வேண்டியதைப் பார்க்கலாம். நம்முடைய அரசியற் சூழலில் மட்டுமல்ல, நிர்வாகம், பொது அமைப்புகள், சமூகச் சூழல் போன்ற பல இடங்களிலும் நிலவுகின்ற குறைபாடுகள், தவறுகள் பற்றிப் பலரும் அறிந்திருப்பார்கள். அந்தக் குறைபாடுகளும் தவறுகளும் அவர்களுக்குப் பாதிப்பைக் கூட ஏற்படுத்தியிருக்கலாம். அதனாலும் அப்படித் தமக்குத் தனிப்பட்ட பாதிப்புகள் ஏதுமில்லாதபோதும் தார்மீக ரீதியில் இவற்றைக் குறித்து அவர்களுக்கு கோபமும் விமர்சனமும் உருவாகியிருக்கும். ஆனால், அவர்கள் அதை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. சிலர் மட்டும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவர். அதுவும் பட்டும் படாமலும். ஏனையோர் தமக்கிடையில் பேசிக்கொள்வதும் குமைந்து கொள்வதுமே நடக்கிறது. அவ்வாறான சூழலில்தான் இத்தகைய விமர்சனங்கள் வரும்போது அது மக்களுக்கு உற்சாகமாகவும் பாராட்டக் கூடியதாகவும் இருக்கிறது. ஆனால், உண்மையில் தாமறிந்த உண்மையை எல்லோரும் தயக்கமின்றிச் சொல்லத் துணிய வேண்டும். அதுவொரு சமூகக் கடமையாகும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு மேல் அதே மாவட்டத்தில் அல்லது அதே பிரதேசத்தில் பதவியில் உள்ளார் என்றால், அவர், அந்த மாவட்டத்தில் பல பணிகளைத் திட்டமிட்டுச்செய்திருக்க முடியும்; செய்திருக்க வேண்டும். 2010 இல் முதற்தடவையாகச் சிறிதரன் தேர்வு செய்யப்பட்டபோது அவருக்குப் பல நெருக்கடிகள் இருந்தன என்பது புரிந்து கொள்ளக் கூடியது. 1. சிறிதரன் அப்பொழுதுதான் அரசியலுக்கே புதியவராக இருந்தார். பாராளுமன்றத்துக்கும் புதியவர். ஆகவே தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு அவகாசம் வேண்டியிருந்தது. ஆனால், அதற்கு ஓராண்டு காலம் ஓரளவுக்குப் போதுமானது. தவிர, ஒருவர் ஒரு பணிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுதான், அதில் இறங்க வேண்டும் என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். இருந்தாலும் அவருடைய அனுபவத்துக்காக அந்தக் காலப்பகுதியை நாம் மேலும் நீட்டியும் கொள்ளலாம். 2. அது போர் முடிந்திருந்த சூழல். மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலம். ஜனநாயகச் சூழல் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அந்தச் சூழலில் சிறிதரன் போன்றவர்கள் தமது அரசியல் நடவடிக்கையை – மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து, தேவைகளை நிறைவேற்றுவதற்கு நெருக்கடிகள் இருந்தன. ஆனால், மறுவளத்தில் அரசியல் ரீதியாக (அரச எதிர்ப்பைச் பேசி) தம்மை வளர்த்துக் கொள்வதற்கு அந்தச் சூழல் தாராளமாக வாய்ப்பளித்தது. 3. ஆனால், சிறிதரன் கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்தவர். அந்த மக்களின் கூடுதல் ஆதரவைப்பெற்றிருந்தவர். அந்த மாவட்டத்தில் படித்து, ஆசிரியப் பணியை ஆற்றியவர் என்பதால், அந்த மாவட்டத்தின் தேவைகள், பிரச்சினைகளைப் பற்றி மற்றவர்களை விடவும் அதிகமாகத் தெரிந்தவர். அத்துடன், நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருந்தோரும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தோரும் பரஸ்பரம் அறிமுகமானவர்கள். மட்டுமல்ல, அப்போதிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறிதரனுக்கே புலம்பெயர் சமூகத்தில் பேராதரவு இருந்தது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர், புலிகளின் தளபதிகளில் ஒருவரான தீபனின் குடும் உறவினர் போன்ற காரணங்கள் இந்த ஆதரவைப் பெருக்கக் காரணமாக இருந்தன. ஆகவே மாவட்டத்தை மீளக் கட்டியெழுப்புவதில் அவருக்கு அதிக வாய்ப்புகளிருந்தன; சிரமங்களிருக்கவில்லை. தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களின் மீதான கரிசனையோடு முறையாகச் செயற்பட்டிருந்தால், தேவையான கட்டமைப்புகளை உருவாக்கியிருக்க முடியும். ஏற்கனவே இருந்த சமூக அமைப்புகளை நெறிப்படுத்தி, வினைத்திறன் மிக்கவை ஆக்கியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இப்பொழுது கிளிநொச்சி மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கும். இப்போது கிளிநொச்சியின் நிலை – 1. போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினர் இன்னும் கையேந்தும் நிலையிலேயே உள்ளனர். ஆனால், பெருமளவு புலம்பெயர் நிதி வந்தது. அரச நிதியும் அரச சார்பற்ற நிதியும் பொருத்தமற்ற முறையில் அதிகாரிகளின் முறையற்ற திட்டமிடற் குறைபாடும் 2. நகருக்கு அப்பால் எந்த இடமும் எத்தகைய வளர்ச்சியையும் பெறவில்லை. கிராமங்கள் பாழடைந்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக அக்கராயன். ஸ்கந்தபுரம், உருத்திரபுரம், வன்னேரிக்குளம், கோணாவில், பாரதிபுரம், செல்வாநகர், சாந்தபுரம், மலையாளபுரம், பொன்னகர், அம்பாள்குளம், மருதநகர், ஊற்றுப்புலம், கல்மடு, புதுமுறிப்பு போன்றவற்றோடு பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகள் முற்றாகவே பின்தங்கிய நிலைக்குள்ளாகியுள்ளன. இங்கே கல்வி, சமூக வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் எல்லாமே பெரும் பிரச்சினையாக உள்ளன. இதனால், இந்தப் பிரதேசங்களில் குற்றச்செயல்களும் தவறான நடத்தைக்களும் அதிகரித்துள்ளன. சட்டவிரோத மது உற்பத்தி(கசிப்பு) விற்பனை, மணல் அகழ்வு, மரம் தறித்தல் அல்லது காடழிப்பு, போதைவஸ்து வியாபாரமும் பாவனையும் திருட்டு, பாலியல் பிறழ்வு, குடும்ப வன்முறைகள் எனப் பல சீரழிவு நிலை உருவாகியுள்ளது. பொலிஸ், நீதிமன்றப் பதிவுகளும் சமூக சேவைகள் திணைக்களம், சிறுவர் நன்னடைத்தைப் பிரிவு போன்றவற்றின் புள்ளிவிவரங்களும் இதைக் காட்டுகின்றன. இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் (13 – 35 வயதுக்குட்பட்ட) இளைய தலைமுறையினரே ஆகும். 3. தொழில்துறை மேம்பாட்டுக்கான ஏற்பாடுகள் எதுவுமே உருவாக்கப்படாத காரணத்தினால் வசதியுள்ளோர் வெளிநாடுகளை நோக்கிச் செல்கின்றனர். ஏனையோர் சமூகச் சீரழிவுச் செயற்பாடுகளில் ஈடுபட்டு அழிகின்றனர். 4. 2010 க்குப் பிறகு கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களில் உள்ள அரச காணிகள் பலவும் செல்வாக்குள்ளோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதில் நாமல் ராஜபக்ஸ, டக்ளஸ் தேவானந்தா,அங்கயன் இராமநாதன் போன்றோரின் செல்வாக்கு அதிகமுண்டு. ஆனால், இதை சிறிதரன் எதிர்த்திருக்க முடியும். அதைச் செய்யவில்லை. மட்டுமல்ல, அந்தத் தவறுக்கு சிறிதரனின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேச சபைகள் தாராளமாக ஒத்துழைத்துள்ளன. இதற்குக் காரணம், சிறிதரனின் அணியினரும் இந்தக் காணி அபகரிப்பில் பயன்பெற்றுள்ளனர். 5. கமக்காரர் மற்றும் விவசாய அமைப்புகள் உளுத்துப்போய் விட்டன. அவை விவசாயிகளின் மேம்பாட்டுக்கு எத்தகைய பயனையும் விளைக்கவில்லை என்பதோடு தொடர்ந்தும் ஒரே தரப்பினரே 10 ஆண்டுக்கும் மேலாக பதவிகளில் உள்ளனர். 6. கிளிநொச்சியிலிருந்து இதுவரையிலும் ஒரு சட்டநிபுணரோ, பேராசிரியரோ, விஞ்ஞானத்துறையில் அறியப்பட்டவரோ, சிறந்த இசைக்கலைஞர்களோ, பேச்சாளர்களோ, சமூகத் தலைவர்களோ, பத்திரிகையாளர்களோ, நாடகவியலாளர்களோ, மருத்துவ நிபுணர்களோ உருவாகவில்லை. ஏன் ஒரு இசை, ஓவிய, நடன, நாடகக் கல்லூரி கூட இல்லை. கூட்டுறவுத்துறை படுத்து விட்டது. கரைச்சி கிழக்கு (வட்டக்கச்சி) ப.நோ.கூ. சங்கம் மூடப்பட்டு விட்டது. கிராமப்புறப் பாடசாலைகளின் கல்வி நிலையும் பெற்றோர் பாடசாலைகளோடு கொள்ளும் உறவு நிலையும் சீரற்றிருக்கிறது. 7. பருவ முதிர்ச்சியைப் பெறாத பெண் பிள்ளைகளும் குடும்பப் பிறழ்வுக்கான பெண்களும் அதிகமாகக் கர்ப்பம் தரிக்கும் நிலை கூடியுள்ளது. இவ்வாறானவர்களைப் பரிமரித்துப் பாதுகாத்துக் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்ற கட்டமைப்பு ஒன்று 2010 க்குப் பிறகு (கனகபுரத்தில்) உருவாக்கப்பட்டுள்ளது. அங்கே வரவரக் கூடுதலானோர் புனர்வாழ்வு பெற வருகின்றனர். 8. சிறார் இல்லங்கள் பெருகியுள்ளன. சிறார் இல்லங்களுக்கு வருகின்ற சிறார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. போர்க்காலத்தில் இவ்வாறான நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இது போர் முடிவுக்குப் பிறகான காலமாகும். இந்தக் காலத்தில் இவை குறைவடைந்திருக்க வேண்டும். மட்டுமல்ல, அதிகரித்த மதுப்பாவனை, போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டோருக்கான புனர்வாழ்வு நிலையமும்(தருமபுரத்தில்) உருவாக்கப்பட்டுள்ளது. 9. இந்த நிலையும் இந்த அமைப்புகளும் பெருகுவதற்குப் பதிலாகக் குறைவடைந்திருக்க வேணும். அல்லது மூடப்பட வேண்டும். பதிலாக அறிவையும் தொழிற்திறன்களையும் ஆற்றச் சிறப்பையும் வளர்க்கக்கூடிய – பெருக்கக்கூடிய புதிய நிறுவனங்களும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான திறன் அமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தால்(செயற்பட்டிருந்தால்) சீரழிவுகளும் குற்றச்செயல்களும் பாதிக்குமேல் குறைவடைந்திருக்கும். 10. மாவட்டத்தின் வளங்களான மணல், காடு, ஆறுகள், குளங்கள், காணி அல்லது நிலம் சிதைக்கப்பட்டுள்ளது. அபகரிக்கப்பட்டுள்ளது.அழிக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். பதிலாக இவற்றைச் செய்வோர் சிறிதரனின் பகிரங்கமான ஆதரவாளர்களாக உள்ளனர். இதைக்குறித்த வெளிப்படையான சமூக வலைத்தளப் பதிவுகளும் நீதி மன்ற, பொலிஸ் ஆவணங்களும் ஊடக அறிக்கைகளும் ஆதாரமாக உண்டு. 11. கோயில்களிலும் தலைமைத்துவப்போட்டியும் ஊழலும் பெருகியுள்ளது. காரணம், அங்கும் அரசியலே. இவற்றைத் தவிர, ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வினைத்திறனோடு இயங்க வைத்திருக்கலாம். கரைச்சி தெற்குப் ப.நோ. கூ சங்கத்துக்கு 2012 இல் 15 மில்லியன் ரூபாய் செலவில் (பல தரப்பின் நிதிப்பங்களிப்போடு) உருவாக்கப்பட்ட மிகப் பெரியதொரு அரிசி ஆலை போதிய இயக்கமின்றி உள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் சமாச அரிசி ஆலை தனியாருக்கு விடப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் சீராக இயங்க வைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டிருக்க முடியும். இப்படிப் பல. பழம் பதனிடும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. நன்னீர் மீன்பிடியில் முன்னேற்றம் எட்டப்படவில்லை. பனை, தென்னைவள உற்பத்திகள் மேம்படுத்தப்படவில்லை. குறைபாடுகளின் பட்டியல் நீண்டது. அதைச் சொல்வதால் பயனில்லை. செய்யக் கூடியவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம். கிளிநொச்சியை ஒரு விவசாயப் பொருளாதார நகரமாக உருவாக்கியிருக்க முடியும். அதற்கான கருத்திட்டத்தை நிபுணர்கள் குழுவொன்று மக்கள் சிந்தனைக் களத்தின் மூலம், கிளிநொச்சி பொறியியற் பீடம், விவசாய பீடம் ஆகியவற்றில் நடந்த ஆய்வரங்கில் முன்வைத்திருந்தனர். அதை அல்லது அவ்வாறான ஒன்றை ஆரம்பித்திருக்கலாம். கிளிநொச்சியில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை வெளியே அப்படியே அனுப்பாமல், அதை முடிவுப் பொருளாக்கி (அரிசி, மா, அவல் போல) சந்தைக்கு அனுப்புவதற்கான தொழில் முயற்சிக்கு வித்திட்டிருக்கலாம். இதைப் பற்றிப் பலரும் தொடர்ந்து பேசி வருகின்றனர். கிளிநொச்சியில் 09 நீர்ப்பாசனக் குளங்கள் உண்டு. சிறுகுளங்கள் 400 வரையில் உண்டு. இவற்றில் நன்னீர் மீன்பிடி நடக்கிறது. நன்னீர் மீன்வளர்ப்பும் சிறிய அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதை துறைசார்ந்தவர்களுடன் இணைந்து சிறப்பான கட்டமைப்பாக்கம் செய்து, இந்தத் தொழிலை விரிக்க வேண்டும். பனம்பொருட்கள் இன்று உச்ச விலைப் பெறுமானத்தை அடைந்துள்ளன. ஆனால், உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. பனை அபிவிருத்திச் சபை, பனை, தென்னை வளச் சங்கங்கள், சமாசங்கள், இணையங்கள் எல்லாம் உள்ளன. இவற்றை ஒரு வலையமைப்பின் கீழ் கொண்டு வந்து உற்பத்தியை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பனை, தென்னை மதுசார உற்பத்தியை சிறப்பாகச் செய்யலாம். அதுவொரு வலுவான பொருளாதார நடவடிக்கையாகும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். பழப்பொருட்களைப் பதனிடும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை மீள்நிலைப்படுத்துவதன் மூலம் சிறப்பாக பழ உற்பத்தியும் பழப்பொருள் உற்பத்தியும் கிடைக்கச் செய்ய முடியும். கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேசங்களில் அபிவிருத்தி வலயங்களை உருவாக்கியிருக்க முடியும். அதற்கான அடிப்படைகள் அங்கே தாராளமாக உண்டு. அரசாங்கம் அதற்கு அனுமதிக்காது என்று எளிதாகச் சொல்லித் தப்பி விட முடியாது. கார்கில்ஸ், நோர்த் லங்காபோன்ற நிறுவனங்கள் கிளிநொச்சியிலும் இயக்கச்சியிலும் பால் பதப்படுத்துதலை அமைத்து, கால்நடை மேம்பாட்டில் முதலீடு செய்துள்ளன. வேளாண் பொருட்கள் பதனிடலையும் செய்ய முடியும். கிளிநொச்சியில் (தம்புள்ளவுக்கு முதல்) 1970, 80 களில் இருந்த பெரும்சந்தையை வடக்கின் பெரும் சந்தையாக உருவாக்க முடியும் – உருவாக்க வேண்டும். பல்வேறு வழிகளிலும் பலர் முதலீடுகளைச் செய்வதற்குத் தயாராக இருந்தனர்; இருக்கின்றனர். இயக்கச்சியில் ReaCha சுற்றுலா மையம், பூநகரி – கௌதாரிமுனையில் சுற்றாலாத் தளம் போன்றவற்றைப்போல வெவ்வேறு வாய்ப்புகள் தாராளமாக உள்ளது. இவற்றையெல்லாம் தனியொருவராக அவரால் செய்ய முடியாது என்றால், யாரையெல்லாம் இணைத்துக் கொள்ள வேண்டுமோ, அவர்களை இணைத்துச் செயற்படுத்தியிருக்கலாம். மக்களுக்கான பணிகளைச் செய்வதற்கு உலகமெங்கும் பல்வேறு தரப்பினர் உள்ளனர். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இணையக் கூடிய புள்ளிகள் நிறைய உண்டு. ஆனால், அப்படிப் பலரையும் இணைத்துச் செயற்படுவதற்கு சிறிதரனின் இயல்பு (குணாம்சம்) தடையாக உள்ளது. இன்று தமிழ்த்தேசியப் பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளில் ஒரு சிலரைத் தவிர, வேறு எவரும் சிறிதரனோடு உறவில் இல்லை. ஏன், தமிழரசுக் கட்சிக்குள்ளேயே அவர் தனிமையாகிக் கொண்டே போகிறார். மக்களுடைய அரசியல் பிரதிநிதியாக இருப்பவர் சொந்த விருப்பு வெறுப்புகளையும் தனி நலன்களையும் ஓரங்கட்ட வேண்டும். முடிந்தளவுக்கு இறங்கியும் இணைந்தும் செயற்பட வேண்டும். இந்தப் பண்பு இல்லாதிருப்பதே சிறிதரனின் தோல்வியாகும். இந்தக் குறைபாட்டை விலக்கவில்லை என்றால், தேர்தல்களில் அவர் தொடர்ந்து வெற்றியீட்டலாம். வரலாற்றில் தோல்வி கண்ட அரசியல்வாதியாகவே அவர் மதிப்பிடப்படுவார். வரலாற்றின் நாயகர்கள் யாரென்றால் சமூக வளர்ச்சியை, சமூக மாற்றத்தை உருவாக்கியவர்களே. அவர்களுக்கே வரலாறுண்டு. https://arangamnews.com/?p=12313 முந்தைய கட்டுரை

இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க

2 weeks 5 days ago
இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க September 12, 2025 10:13 am இரண்டு மாதங்களுக்குள் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில் தான் குடியிருக்க தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் ஒரு வீட்டை அடையாளம் கண்டுக்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விதிமுறைகளின்படி, அரசாங்க வீட்டில் வசிக்கும் எவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன் மூன்று மாத அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், அரசாங்க வீட்டை விட்டு வெளியேற இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகாது எனவும் அவர் வலயுறுத்தியுள்ளார். சீரமைப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிந்தால் அதற்கும் குறைவான காலப்பகுதியில் அரசாங்க வீட்டில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்பு செய்து கொண்டு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலிருந்து தான் குணமடைந்து வருவதாகக் கூறிய அவர், மேல் மாடியிலிருந்து கூட கீழே நகர முடியவில்லை என்றார். “சில புதுப்பித்தல் பணிகள் செய்ய வேண்டிய ஒரு சிறிய வீட்டைக் கண்டுபிடித்தேன். என் மகன் ஒரு வாரம் வந்து எனக்கு உதவுவதாகச் கூறியுள்ளார். இதற்கிடையில், மூன்று வாரங்களுக்கு முன்பு, நான் விழுந்து என் இடுப்பு எலும்பு முறிந்தது. எனக்கு இடுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய அறுவை சிகிச்சை. எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பிசியோதெரபி செய்ய வேண்டியுள்ளது. எனவே, அந்த புதிய வீட்டில் தற்போது என்னால் நகரவோ அல்லது எந்த வேலையும் செய்யவோ முடியாது,” என்று அவர் கூறினார். புதிய சட்டம் இயற்றப்படும் வரை, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை செலுத்தி தனது வாழ்நாள் முழுவதும் தற்போதைய இடத்தில் வாழ அனுமதி கேட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார். எனினும், அது மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ஓய்வு பெற்ற பிறகு அது தனது அதிகாரப்பூர்வ இல்லமாக ஒதுக்கப்பட்ட பிறகு, அதைப் புதுப்பித்தல், பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்காக ஏற்கனவே 14 மில்லியன் ரூபாய் செலுத்திவிட்டதாகவும் கூறினார். “நான் இங்கு வந்தபோது, இங்கே ஒரு புல் கூட இருந்திருக்கவில்லை. அது வெறும் சரளைக் கற்கள் மட்டுமே. நான் நிலத்தோற்றப் பணிகளைச் செய்து முடித்தேன். அந்த நேரத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதற்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டது,” என்று சந்திரிக்கா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான எனது கடிதப் பரிமாற்றத்தில், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தற்போதைய அரசாங்கத்தால் விசாரிக்கப்படாத ஒரே நபர் தான் என்று அவர் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார். “நான் எந்தத் தவறும் செய்யவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “எனக்கு கொழும்பில் வீடு இல்லை. என்னுடைய ஒரே வீடு ரோஸ்மீட் பிளேஸில் இருந்தது. நான் அதை விற்றுவிட்டேன். அந்தப் பணத்தில் நான் வாழ்கிறேன். நான் ஊழலில் ஈடுபடவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார் https://oruvan.com/i-will-move-out-of-the-house-in-two-months-chandrika-kumaratunga/

இனி பாலஸ்தீன நாடு கிடையாது : அந்த நிலம் எங்களுடையது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

2 weeks 5 days ago
இனி பாலஸ்தீன நாடு கிடையாது : அந்த நிலம் எங்களுடையது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு 12 Sep, 2025 | 11:05 AM மேற்குக் கரையில் சர்ச்சைக்குரிய குடியேற்றத் திட்டமான “E1” விரிவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். "இந்த இடம் எங்களுக்கு மட்டுமே சொந்தமானது" என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேற்கு கரையில் உள்ள மாலே அடுமிம் குடியேற்றப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய நெதன்யாகு, "நமது வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இருக்காது. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாச்சாரம், நிலம் மற்றும் பாதுகாப்பு பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாக்கப்படும்" என்று கூறினார். சர்வதேச எதிர்ப்பால் பல ஆண்டுகளாக முடங்கியிருந்த “ E1 ” திட்டம், மேற்குக் கரையில் சுமார் 3,000 புதிய இஸ்ரேலிய வீடுகளைக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டது. இந்தத் திட்டம், மேற்கு கரையை பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேமிலிருந்து துண்டிக்கும் என்பதால், எதிர்காலத்தில் சாத்தியமான பாலஸ்தீன நாடு உருவாவதை இது முற்றிலுமாகத் தடுக்கும் என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச அமைப்புகள், E1 குடியேற்றத் திட்டம் குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளன. இந்தத் திட்டம் இரண்டு - அரசு தீர்வுக்கு (Two-State Solution) ஒரு "அச்சுறுத்தல்" என ஐ.நா. தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை என்று ஐ.நா. தொடர்ந்து கூறி வருகிறது. தற்போது, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள சுமார் 700,000 இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் வசித்து வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் ஏற்கனவே நிலவிவரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224880

ஆளுநர்கள், பிரதம செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

2 weeks 5 days ago
ஆளுநர்கள், பிரதம செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு 12 Sep, 2025 | 10:30 AM அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் சிறந்த ஒருங்கிணைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். அரசியல் அதிகாரம் தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களை பயன்படுத்தும் கலாச்சாரம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முடிவுக்கு வந்துள்ளது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய திட்டத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக மத்திய அரசு மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும் 2025 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீளாய்வு செய்வதற்காகவும் வியாழக்கிழமை (11) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். கல்வி, சுகாதாரம் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற துறைகளுடன் தொடர்புடைய அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பான தீர்வுகள் மற்றும் முன்மொழிவுகளும் இங்கு ஆராயப்பட்டன. வெளிநாட்டு கடன்கள் மற்றும் உதவிகளின் கீழ் நாட்டிற்கு கிடைக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் விசேட திட்ட அலுவலகங்களை நிறுவி அதற்காக பாரிய நிர்வாக செலவுகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பிற்குள் செயல்பட்டு, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்து, மக்களுக்கு அதன் நன்மைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். பாடசாலை கட்டமைப்பை நெறிப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. வலய மட்டத்தில் ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று அவற்றை நெருக்கமாக ஆராய்ந்து , அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கான சிறந்த தீர்வை முன்வைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார். மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர்கள் ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார, அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/224875

அருண் தம்பிமுத்துக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு

2 weeks 5 days ago
அருண் தம்பிமுத்துக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு 12 Sep, 2025 | 10:44 AM அருண் தம்பிமுத்துக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் மாதம் 09ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த பணத்தினை தனது சொந்த தேவைக்காக மோசடி செய்தமைக்காக பணம் வழங்கிய புலம்பெயர் தமிழர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் முதலீடுகளை செய்ய முனையும் புலம்பெயர் தமிழர்களை இவ்வாறு ஏமாற்றி மோசடி செய்வது எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்பவர்களை அச்சமடைய செய்யும் என குறித்த வழக்கினை தாக்கல்செய்த புலம்பெயர் தொழிலதிபரான கிறிஸ்டி குணரெட்னம் தெரிவித்தார் https://www.virakesari.lk/article/224876

“ஜனாதிபதி தமிழர் முகங்களில் கரிபூசியுள்ளார்”

2 weeks 5 days ago
“ஜனாதிபதி தமிழர் முகங்களில் கரிபூசியுள்ளார்” முருகானந்தன் தவம் கடந்த 1ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு இரு நாள் விஜயம் செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் 3ஆவது கட்டத்தின் பணிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத் திறப்பு ,யாழ்ப்பாணம், மண்டை தீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள நவீன கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் ,உலக தென்னை தினத்தை முன்னிட்டு புதுகுடியிருப்பில் ‘கப்துரு சவிய’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் போன்ற அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளதுடன் சர்ச்சைக்குரிய கச்சத்தீவுக்கும் அதிரடி விஜயம் செய்து அங்குச் சென்ற முதல் ஜனாதிபதி என்ற பெயரையும் வரலாற்றில் பதிவு செய்துகொண்டார். செப்டம்பர் 1 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு இரு நாள் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிப்புக்கள் வெளியான நிலையில், இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி நாட்டினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ள செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்திற்குச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் தமிழ் அரசியல் தரப்புக்களிடமும் ஏற்பட்டிருந்தது. ஜனாதிபதி செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்திற்கு வருகை தர வேண்டுமென்ற வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி உரையாற்றும் போது, “செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் எவ்வித மாற்றமும் இல்லை. செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது” என தமிழ் மக்களுக்கு உறுதியளித்த நிலையில் அவர் எப்படியும் செம்மணிக்கு வந்து மனிதப் புதைகுழிகளை பார்வையிடுவார் என்றும் இதன்மூலம் தனக்கும் தனது கட்சிக்கும் பெருமளவில் வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர் ஒரு செய்தியைச் சொல்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஜனாதிபதி அனுரகுமார செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்திற்கு விஜயம் செய்வார் என முன்னதாக, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் கூறியிருந்தார். அதுமட்டுமன்றி அரச தரப்பின் பல்வேறு தரப்பினராலும் உறுதியுமளிக்கப்பட்டிருந்தது. ஆனால், யாழ்ப்பாணத்திற்குக் குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாளே வந்து விட்ட ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கிநின்றபோதும் செம்மணி வீதியை ஜனாதிபதி வாகனத் தொடரணியாக கடந்து பயணித்த போதிலும், செம்மணி மனித புதைகுழியைச் சென்று பார்வையிடவில்லை.செம்மணிப் பகுதியில் வாகனத்தை மெதுவாகச் செலுத்திக் கூட அப்பகுதியைப் பார்க்க அவர் விரும்பவில்லை. ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அமைச்சர்,எம்.பிக்கள் ஏற்கெனவே செம்மணி மனிதப் புதைகுழியைச் சென்று பார்வையிட்ட நிலையில், இலங்கையில் செம்மணி மட்டுமன்றி, கொக்குத்தொடுவாய், மண்டைதீவ, மன்னார், கொழும்பு துறைமுகம் என பல இடங்களில் மனிதப் புதைகுழிகள் உள்ளநிலையில், இந்த புதைகுழிகளின் உரிமையாளர்கள் ரணில் மற்றும் ராஜபக்‌ஷக்களே தவிர நாம் அல்ல. இந்த புதைகுழிகள், காணாமல் ஆக்கப்பட்டோருடன் தொடர்புடைய சிலர் வடக்கிலும் உள்ளனர். செம்மணி மனிதப் புதைகுழியுடன் தொடர்புடையவர்கள் வடக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவாகியுள்ளனர். இந்த மனிதப் புதைகுழிகள் தொடர்பிலான, விசாரணைகள் போன்றவற்றுக்கு நாம் போதியளவு நிதியை ஒதுக்கி வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செம்மணி மனிதப் புதைகுழியைச் சென்று பார்வையிட்டிருக்க முடியும். ஆனால், தமக்கோ, தமது கட்சிக்கோ, தமது அரசுக்கோ தொடர்பில்லாத செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அனுரகுமார பார்வையிடாததற்கு இனவாத சிந்தனையும் சிங்களவர்களை மட்டும் திருப்திப்படுத்தும் அரசியலுமே பிரதான காரணம். இந்த செம்மணி மனிதப் புதைகுழி புறக்கணிப்பு மூலம் சிவப்பு சட்டைக்காரர்களான ஜே .வி.பியினர் இன்னும் இனவாதத்திலிருந்து மாறவில்லை அவர்கள் ஒருபோதுமே மாறப்போவதில்லை.’மாற்றம்’, ‘புதிய திசை’ என்பதெல்லாம் வெறும் கோஷம் என்பதையே ஜனாதிபதி அநுரகுமாரவின் யாழ்ப்பாண விஜயம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார தனது பயண நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத அல்லது உள்ளடக்கப்பட்டும் இறுதிவரை வெளிப்படுத்தப்படாத கச்சத்தீவு பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் இந்தியாவைப் பகைக்க நேரிடும், அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் அரசியல் ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தும் என தெரிந்தும் சிங்கள, தமிழர்களைத் திருப்திப்படுத்த, எமது நிலத்தின் ஒரு அங்குலத்தையேனும் விட்டுக்கொடுக்க நாம் தயாரில்லையென்பதனை வெளிப்படுத்தவே சிங்கள, தமிழ் அரசியல் ஆதாயத்திற்காக ஜனாதிபதி கச்சத்தீவுக்குக் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வரலாற்றுப்பதிவை ஏற்படுத்தினார். அதே ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்குள் உள்ள செம்மணி மனித புதைகுழிப் பகுதிக்கும் விஜயம் செய்திருந்தால், இலங்கையில் அகழப்படும் மனிதப் புதைகுழிப் பகுதியைச் சென்று பார்வையிட்ட முதல் ஜனாதிபதி என்ற வரலாற்றுப் பதிவிலும் ஜனாதிபதி அனுரகுமார இடம்பிடித்திருப்பார். தமிழ் மக்கள் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்திருப்பார். ஆனால், சிங்களவர்களினால், சிங்கள படைகளினால் ஏற்படுத்தப்பட்ட மனிதப் புதைகுழியைப் பார்வையிட்ட ஜனாதிபதி என சிங்களவர்களினால் புறக்கணிக்கப்பட்டிருப்பார், வெறுக்கப்பட்டிருப்பார், விமர்சிக்கப்பட்டிருப்பார். ஆகவே, தான் சிங்களவர்களே முதல் விருப்பத் தெரிவு, அவர்களைப் பகைக்க முடியாது என்ற அடிப்படையில்தான் ஜனாதிபதி அனுரகுமார செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடத்திற்குச் செல்லவில்லை. அரசுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும் ஜே.வி.பியினர் ஒன்றும் புனிதமானவர்களோ மாற்றமானவர்களோ அல்ல. அவர்களும் பக்கா இனவாதிகள்தான். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அழிக்க 50,000 சிங்கள இளைஞர்களை இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்து கொடுத்தவர்கள். அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான நோர்வே அனுசரணையிலான சமாதான முயற்சிகளைச் சீர்குலைத்து யுத்தத்துக்குத் தூண்டியவர்கள் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சுனாமி பொதுக் கட்டமைப்பை கடுமையாக எதிர்த்து மக்களைத்தூண்டி போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பயனாக இணைக்கப்பட்ட தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கு மாகாணங்களை வழக்கு தாக்கல் செய்து பிரித்தவர்கள். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்க ஆட்சி பீடமேறிய அனைத்து அரசுகளுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியவர்கள். ஆகவே, என்னதான் தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியைப் போட்டு ‘மாற்றம்’ ஏற்படுத்த வந்தவர்களாக, புதிய திசையில் நாட்டையும் மக்களையும் பயணிக்க வைக்க வந்தவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ள ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா தலைமையிலான ஜே.வி.பியினர் என்ற இனவாதிகள் மாறு வேடத்தைப் போட்டாலும், ‘போக்கிரி’ படத்தில் வரும் வடிவேலு போல் ‘மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டியே’ என்ற கதையாகவே தமது இனவாத சிந்தனையிலிருந்து அவர்கள் மாறவே இல்லையென்பதனையும் மாறப்போவதில்லை என்பதனையும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அண்மைய யாழ்ப்பாண விஜயமும் செம்மணி மனிதப் புதைகுழி விடயமும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், இலங்கையின் ஆட்சியாளர்கள் அனைவரும் ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ தான் என்பதனை தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் நிரூபித்து தமிழர் முகங்களில் கரிபூசியுள்ளார். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதி-தமிழர்-முகங்களில்-கரிபூசியுள்ளார்/91-364440

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!

2 weeks 5 days ago
பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்! நாட்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள நிலையில் பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளதாவது” ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போதும் நாட்டுக்குள் வரும் போதும் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்வதற்கு விசேட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள 556 பேரை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏதேனும் பகுதியில் குற்றச்செயல்கள் இடம்பெற்றால் துரிதரகமாக செயற்படுவதற்கு சகல பொலிஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினரை ஒன்றிணைந்து வட்சப் செயலி ஊடாக விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புக்கள் சோதனை சாவடிகள் போடப்பட்டு வாகனங்கள் சோதிக்கப்படுகின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களை கைது செய்வதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாகவே அண்மையில் இந்தோனேசியாவில் பிரதான நிலை போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 11 பேர் சிவப்பு பிடியாணை ஊடாக கைது செய்யப்பட்டு நாட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 105 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதுடன், இச்சம்பவங்களுடன் தொடர்புடைய 34 துப்பாக்கிதாரிகளும், ஒத்தாசை வழங்கியவர்கள் உட்பட 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ரி56 ரக துப்பாக்கிகள் 58 உட்பட 1698 துப்பாக்கி மற்றும் ஏனைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாதாள குழுக்களின் உறுப்பினர்கள் டுபாய், இத்தாலி, பிரான்ஸ், சுவிஸ்ர்லாந்து, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இரகசியமான முறையில் பதுங்கியுள்ளார்கள். இவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு அமைச்சு, மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சு கூட்டாக இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களுக்கும் கடந்தகால அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புண்டு என்பது குற்றப்புலனாய்வு பிரிவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்குரிய விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய கம்பஹா பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மல்லாவி பாலைநகர் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தீவிரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது. பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல நாம் இடமளிக்கடாட்டோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446907

’முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்து விட்டனர்’ - வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன்

2 weeks 5 days ago
’முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்து விட்டனர்’ - வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் குற்றம் சாட்டினார் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) அன்று இடம்பெற்ற தேசிய கணக்காய்வு திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டினார். மேலும், முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக தங்களுடைய பூர்வீக வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்தனர். சுமார் 400 தமிழ்க் குடும்பங்களே இவ்வாறான இடப்பெயர்வைச் சந்தித்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு அவர்களுடைய சொந்த இடமான முள்ளிக்குளத்தில் மீள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறு தமது சொந்த இடத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு அக்காலப்பகுதியில் 150 நிரந்தர வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மொத்தமாக 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேறி வாழ ஆரம்பித்தனர். அது நீடிக்கவில்லை. மீள் குடியேறி வெறுமனே ஐந்து வருடங்களிலேயே கடந்த 2007ஆம் ஆண்டு மீளவும் இடம்பெயர வேண்டிய அவலநிலைக்கு முள்ளிக்குளம் கிராம மக்கள் தள்ளப்பட்டனர்.இவ்வாறான சூழ்நிலையில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முள்ளிக்குளம் மக்கள் தமது பூர்வீக வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்து இரண்டு தசாப்த காலங்களை அண்மித்துள்ள நிலையில் இதுவரை முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்களுடைய சொந்த இடத்தில் மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராம மக்கள் அயல் கிராமங்களான மலைக்காடு மற்றும் காயாக்குழி உள்ளிட்ட கிராமங்களில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக மலைக்காடு, காயாக்குழி ஆகிய கிராமங்களில் 250 இற்கும் மேற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் அகதி என்னும் அவல வாழ்வை வாழ்கின்றனர். இது தவிர 175 வரையான குடும்பங்கள் இந்தியாவின் அகதி முகாம்களில் வாழ்வதாகவும் மேலும் பல குடும்பங்கள் ஆங்காங்கே சிதறி வாழ்வதாகவும் முள்ளிக்குளம் கிராம மக்கள் முறையிடுகின்றனர். இவ்வாறாக முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ள நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக முள்ளிக்குளம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் மக்களுக்குரிய நெற் செய்கைக்குரிய காணிகள், தோட்டக் காணிகள், குடியிருப்புக்காணிகள், நீர்ப்பாசனக்குளங்கள் உள்ளடங்கலாக 1500க்கும் அதிகமான ஏக்கர்கள் வனவளத்திணைக்களத்தாலும் கடற்படையாலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனக் குளங்களைப் பொறுத்தவரையில் சின்னத்தனக்கன் குளம், பெரியதனக்கன்குளம், பரவெளிக்குளம், பாலடிக்குளம், செட்டியார்குளம், அரக்குளம், புதுக்குளம் உள்ளிட்டவை முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன. அதேவேளை, தமிழ் மக்களுடைய காணிகள் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தோட்டப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்கு 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட வீடுகளில் கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முள்ளிக்குளம் மக்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த இடங்களும் முற்றாக அபகரிக்கப்பட்டுள்ளன . இத்தகைய சூழலில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் கிராமத்தை விடுவிப்புச் செய்வதுடன் தம்மை மீள் குடியமர்த்துமாறும் முள்ளிக்குளம் கிராம மக்கள் தொடர்ச்சியாகக் கோரிவருகின்றனர். குறிப்பாக தம்மை மீள் குடியமர்த்துமாறும் முள்ளிக்குளம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் கடந்த 2017 ஆண்டு காலப்பகுதியில் இரண்டுமாத காலம் தொடர்ச்சியாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் பலனாக அப்போதைய ஆளுநர் வருகை தந்து காணிகள் விடுவிப்புச் செய்வதாக உத்தரவாதமளிக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் 77 ஏக்கர் காணிகளை விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு காணிகளும் மக்களால் துப்புரவாக்கப்பட்டுள்ளன. மக்களால் துப்புரவு செய்யப்பட்ட பகுதிகளைத் தீயிட்டு கொளு த்துவதற்கு கடற்படையினர் இடையூறு ஏற்படுத்தியதையடுத்து அந்தக் காணிகள் துப்புரவு செய்வதும் கைவிடப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் அந்தக் காணிகளில் மீள் குடியேறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன . இவ்வாறாக முள்ளிக்குளம் கிராமத்தில் மக்கள் எவரும் மீள் குடியமர்த்தப்படாத நிலையிலும் அங்கு பாடசாலை இயங்கி வருகின்றது. அங்குள்ள தேவாலயத்திற்கும் மக்கள் சென்று வருகின்றனர். முள்ளிக்குளம் பகுதியில் இயங்கிவருகின்ற முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் 42 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மலைக்காட்டுப் பகுதியில் வசிக்கின்ற முள்ளிக்குளத்தை சேர்ந்தவர்களுடைய பிள்ளைகளே முள்ளிக்குளம் பாடசாலைக்குக் காலையில் சென்று மாலையில் திரும்புகின்றனர். அதேபோல், முள்ளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பரலோகமாதா தேவாலயத்துக்கும் மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறாக தமது சொந்த இடத்துக்குச் சுற்றுலாப் பயணிகளைப் போல, சென்று வருகின்ற அவலத்தைச் சுமந்து அகதி வாழ்க்கையை முள்ளிக்குளம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தாம் வாழ்ந்த, தவழ்ந்த, விளையாடிய, பயிர்செய்த நிலங்கள் அனைத்தும் கண்முன்னே ஆக்கிரமிக்கப்பட்டு இருக்க தமது நிலத்தில் மீள் குடியேற்ற முடியாத நிலையில் உள்ள முள்ளிக்குளம் கிராம மக்களின் அகதி என்னும் அவல வாழ்வுக்கு முடிவு கட்டப்படவேண்டும். அந்த மக்கள் உடன் மீள் குடியமர்த்தப்பட வேண்டும். முள்ளிக்குளம் மக்களை மீள் குடியமர்த்துவதற்கு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். https://www.tamilmirror.lk/செய்திகள்/முள்ளிக்குளம்-கிராமத்தை-முற்றாக-அபகரித்து-விட்டனர்/175-364454

2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா!

2 weeks 5 days ago
2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா! அரசாங்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் 4,418,404 பாடசாலை மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட இணக்கப்பாடுகளுடன் சீருடைகளைப் பரிமாறும் நிகழ்வு நேற்று (11) பத்திரமுல்ல கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது. கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, சீன தூதுவர் கிவ் ஸெங்க்ஹொங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதன் போது 2026ஆம் ஆண்டுக்கான பிள்ளைகளை வழங்குவதற்கு இணக்கத்தை தெரிவிக்கும் சான்றிதழை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ மற்றும் சீன தூதுவர் கிவ் ஸெங்ஹொங் இடையே இடம்பெற்றது . இங்கு கருத்து தெரிவித்த கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுரை சனவரி “2025ஆம் ஆண்டுக்காக 11.82 மில்லியன் மீட்டர் துணி சீனாவிடம் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனால் முழு தேசிய அவசியத்தவையும் பூரணப்படுத்துவது போல் நாடு முழுவதும் உள்ள 4.6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு நன்மை கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 5.17 வில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி பங்களிப்பு, சிறுவர்கள் முதல் தேசிய பரீட்சைக்காக மாணவர்கள் வரை ஒவ்வொரு பிள்ளைக்கும் கௌரவம் மற்றும் சமத்துவத்துடன் கல்வி கற்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்காக இவ்வாறான பங்களிப்பை வழங்கியமை வரவேற்கப்பட வேண்டும்” இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் 2026 ஆம் ஆண்டுக்கான சீருடைகளை வழங்குவது தொடர்பாக விரைவாக பதில் அளித்த இலங்கை மற்றும் சீன அரசாங்கங்களுக்கிடையே காணப்படும் அந்நியோன்ய நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஏற்பாடாகவும் இது காணப்படுகிறது. இந்நிகழ்வில் சீன தூதுவராலயத்தின் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1446908

கட்டுநாயக்கவில் உயிருள்ள ஆறு பாம்பு குட்டிகள் மீட்பு!

2 weeks 5 days ago
கட்டுநாயக்கவில் உயிருள்ள ஆறு பாம்பு குட்டிகள் மீட்பு! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஆறு உயிருள்ள வெளிநாட்டுப் பாம்புகள் பயணி ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலமாக இலங்கையை வந்தடைந்த பயணியிமிருந்தே இந்த பாம்புகள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினால் இந்த மீட்பு மேற்கொள்ளப்பட்டது. 40 வயதுடைய அந்தப் பெண் பயணி, தனது பொதிகளில் பாம்புகளை மறைத்து வைத்திருந்தார். https://athavannews.com/2025/1446891

தமிழ் டயஸ்போராக்களுக்காக மஹிந்தவின் மாளிகை பறிப்பு; புரளியைக் கிளப்புகிறார் சரத் வீரசேகர!

2 weeks 5 days ago
தமிழ் டயஸ்போராக்களுக்காக மஹிந்தவின் மாளிகை பறிப்பு; புரளியைக் கிளப்புகிறார் சரத் வீரசேகர! பிரிவினைவாதத் தமிழ் டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார் . மஹிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- மஹிந்த ராஜபக்சவை அரச மாளிகையில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் பிரிவினைவாதத் தமிழ் டயஸ்போராக்களே திருப்தியடைவார்கள். அவர்களுக்கே இன்றைய நாள் மகிழ்ச்சியைத் தரும் நாளாகும். அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ச என்பவர் சாதாரண நபர் கிடையாது. முழு உலகமுமே தோற்கடிக்க முடியாது எனக் கூறிய புலிகள் அமைப்பைத் தோற்கடித்து 30 வருடகாலப் போரை முடிவுக்கு கொண்டுவந்தவர். மக்களுக்கு வாழும் உரிமையை வழங்கிய தலைவர் அவர் .நாட்டில் அபிவிருத்திகளை ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட தலைவருக்கு இவ்வாறா நன்றிக்கடன் செலுத்துவது- என்றார். https://newuthayan.com/article/தமிழ்_டயஸ்போராக்களுக்காக_மஹிந்தவின்_மாளிகை_பறிப்பு;

நாமலின் மின்சாரக் கட்டணம் தொடர்பான மனுவைத் தொடர அனுமதி!

2 weeks 5 days ago
நாமலின் மின்சாரக் கட்டணம் தொடர்பான மனுவைத் தொடர அனுமதி! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பறையில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு (CEB) 2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதன் மூலம் இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மனுவை சட்டத்தரணி விஜித குமார தாக்கல் செய்துள்ளார். இதில், CEB உள்ளிட்ட ஒரு குழு பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று (11) தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதிபதி அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இலங்கை மின்சார சபையின் அசாதாரண நடவடிக்கை இலங்கையில் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்று நீதிமன்றத் தீர்ப்பைக் கோரி சட்டத்தரணி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். https://athavannews.com/2025/1446888

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2 weeks 5 days ago
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை! இராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என்று தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு மேற்கண்ட தண்டனையை வழங்கியது. 2022 தேர்தலில் இடதுசாரி போட்டியாளரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், ஆட்சியில் தொடர்ந்தும் இருப்பதை நோக்காக் கொண்டு ஒரு சதித்திட்டத்தை வழிநடத்தியதற்காக அவர் குற்றவாளி என்று அவர்கள் தீர்ப்பளித்தனர். நான்கு நீதிபதிகள் அவரை குற்றவாளி எனக் கண்டறிந்தனர், ஒருவர் அவரை விடுவிக்க வாக்களித்தார். போல்சனாரோவின் சட்டத்தரணிகள் இந்த தண்டனை அபத்தமானது எனக் கூறியுள்ளதுடன், மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு, 2033 வரை அவர் பொதுப் பதவிக்குப் போட்டியிடுவதையும் தடை செய்தது. வெளிநாடு தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட போல்சனாரோ, இந்த இறுதி கட்ட விசாரணையில் நேரில் கலந்து கொள்ளவில்லை. இந்த தீர்ப்பின் மூலமாக 70 வயதான போல்சனாரோ, இப்போது தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்கும் துரதிர்ஷ்டவசமான வாய்ப்பை எதிர்கொள்கிறார். அவரது சட்டத்தரணிகள் அவரை சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று வாதிடுவார்கள் – அதே போல் குறைந்த தண்டனைக்கு வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது கடினமாக இருக்கலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இது பொதுவாக ஐந்து நீதிபதிகளில் இருவர் விடுவிக்க வாக்களித்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். போல்சனாரோ ஐந்து குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இவை அனைத்தும் 2022 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள முயன்றது தொடர்பானது. ஆனால், 2026 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க இது வடிவமைக்கப்பட்டதாக அவர் கடந்த காலத்தில் கூறியிருந்தார். ஏற்கனவே தனித்தனி குற்றச்சாட்டுகளின் பேரில் பொதுப் பதவியில் இருந்து அவர் தடை செய்யப்பட்டுள்ளார். சதித் திட்டம் தொடர இராணுவத்திடம் போதுமான ஆதரவைப் பெறத் தவறிய போதிலும், ஜனவரி 8, 2023 அன்று போல்சனாரோவின் ஆதரவாளர்களால் அரசாங்க கட்டிடங்களைத் தாக்குவதில் மும்முரமாக இருந்தனர். இதன்‍போது சுமார் 1,500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். https://athavannews.com/2025/1446881
Checked
Wed, 10/01/2025 - 13:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed