புதிய பதிவுகள்2

கொஞ்சம் ரசிக்க

2 weeks 5 days ago
ஐபோன் 17 தொடர் வெளியிட்ட உடனே இந்த மீம் பொருத்தமாக வந்திருக்கு! ஐபோன் 16e புதிது நேற்று என் கைக்கு வந்தது! விலை 140000 ரூபா என்றதும் வடிவாக பார்த்திட்டு திரும்ப பத்திரமாக பெட்டியில் வைத்து கொட்த்துவிட்டேன்!!

கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்'

2 weeks 5 days ago
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 ஆகஸ்ட் 2025 யாழ்ப்பாணம் தங்கத்தால் போர்த்தது போல் இருந்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா தொடங்கியது, தெருக்கள் உயிர்ப்புடன் மலர்ந்தன. விடியற்காலை முதல் மாலை வரை, சங்குகள், மணி ஓசைகள் மற்றும் மேளங்களின் சத்தங்கள் காற்றில் எதிரொலித்தன. ஒவ்வொரு காற்றிலும் மல்லிகை மாலைகள் மற்றும் கற்பூர புகையின் நறுமணம் வீசியது. இலங்கைத் தீவு முழுவதிலுமிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்தோரிடமிருந்தும் பக்தர்கள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட, 'அலங்கார முருகனை' வணங்க ஒன்று கூடினர். அவர்களிடையே, இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும், யாழ்ப்பாணத்தை அடியாகக் கொண்ட, அருண் என்ற இளைஞன் நடந்து வந்தான். அவன் எளிமையான உடையில் - சாதாரண வெள்ளைப் பருத்தி சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி உடன் ஒரு உள்ளூர் வாலிபனாக பார்வைக்கு தோன்றினாலும், அவரது முகம் இன்னும் வெளிநாட்டு நிலங்களின் புத்துணர்ச்சியை பறைசாற்றிக் கொண்டுதான் இருந்தது. அது அவனால் மறைக்க முடியவில்லை. மற்றும் அவனது இதயம், தன் தாய் தந்தை பிறந்த மண்ணின் வாசனையைத் தேடி அலைந்து கொண்டு இருந்தது. முதலில், அவன் தமிழ் கடவுள் முருகனின் முன் உண்மையாக, பக்தியாக, பண்பாடாக வழிபடத் தான் அங்கு வந்தான். என்றாலும் பட்டு, நகைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான, 'அலங்கார கந்தனின்' மீது கண்கள் பதிந்த பொழுது அவன் தடுமாறினான். அந்த தடுமாற்றத்தில் தான், கூட்டத்தில், தன் தோழிகளுடன் நின்றிருந்த ஒரு இளம் பெண், அலங்கரிக்கப்பட்ட தெய்வத்தைக்கூட ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு அழகைக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டான். கோயில் விளக்குகளின் கீழ் அவளுடைய சேலை மின்னியது, அவளுடைய கண்ணாடி வளையல்கள் ஒவ்வொரு அசைவிலும் ஒலித்தன, ஒளிர்ந்தன. அவளுடைய கரும் கூந்தலில் மல்லிகைப் பூக்கள் காற்றோடு நடனமாடின. மேளம் மற்றும் கோயில் மணிகளின் சத்தங்களுக்கு மேலே அவளுடைய சிரிப்பு மின்னியது. அருணுக்கு, அவள் வெறும் பெண் அல்ல - அவள் "அலங்காரக் காந்தை" யாகத் தோன்றினாள்! அன்று மாலை முதல், அருணின் உள்ளம் அவளை அமைதியாகத் தேடி அலையத் தொடங்கியது. அவன் இப்ப அலங்கார கந்தனுக்காக அல்ல, மாறாக அலங்கார காந்தைக்காகத் நல்லூர் வரத் தொடங்கினான். முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே! சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே கண்திறந்து பார்க்காயோ கருணை காட்டாயோ !! திருவிழாவின் பத்தாம் நாள் இன்று. நல்லூரைச் சுற்றி பல பல குளிர்பானங்கள், வளையல்கள், சேலைகள் மற்றும் இனிப்புகளால் கடைகள் நிரம்பி இருந்தது. முருகன் வள்ளி தெய்வானையுடன் பொன் மஞ்சத்தில் வரும் ஆகஸ்ட் ஏழாம் நாள். இந்த 7 ஆம் எண் மதத்தில் - இஸ்லாத்தில் 7 வானங்கள், கிறிஸ்தவத்தில் 7 படைப்பின் நாட்கள், இந்து மதத்தில் 7 சக்கரங்கள் எனவும், இயற்கையில் - வாரத்தில் 7 நாட்கள், வானவில்லில் 7 வண்ணங்கள், 7 இசைக் குறிப்புகள் எனவும் மற்றும் வரலாற்றில் - உலகின் 7 அதிசயங்கள் எனவும் தோன்றுவதால், பல மேற்கத்திய மற்றும் கிழக்கு கலாச்சாரங்களில் 7 என்ற எண் ஒரு அதிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அருண் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துபவன் அல்ல. என்றாலும், இன்று எனோ அது அவனுக்கு ஒரு உற்சாகம் கொடுத்தது. அந்த உற்சகம் கொடுத்த தைரியத்தில், அவன் அவளை அணுகி, "எக்ஸ்க்யூஸ் மீ [Excuse me]" என்றான். பச்சை நிற சுடிதாரில் பச்சைகிளி போல் போஸ் [Pose] கொடுத்துக் கொண்டு, வெள்ளைக் கொடி ஒன்று படர்ந்து, நுனியில் பூக்கள் மலர்ந்தது போல, கொண்டையில் மல்லிகை மாலை சூடிக்கொண்டு, தன் தோழிகளுடன் நின்ற அவள் கண்களில் ஒரு கவர்ச்சி தீபம் எரிந்து கொண்டு இருந்தது. அவள் சற்று தலை நிமிர்ந்து, மென்மையான வார்த்தைகளில் ”சொல்லுங்க… ‘ப்ளீஸ் [Please]’ .. என்ன வேணும்?” என்றாள். அந்த ‘ப்ளீஸ்’ அப்படி ஒரு மென்மை. சினிமா காதல் காட்சியாக… காடு முழுக்க ஆள் உயரக் கம்பி மத்தாப்புகளை நட்டுவைத்து ஒரே நேரத்தில் பற்ற வைத்தது போல் அவன் மனதுக்குள் அத்தனை பிரகாசம்.”ஐ’யம் [I am] அருண் ” என்றான். அவள் கண்களால் ஒரு வித வலை வீசியபடி நான் ”ஆரணி” என்றாள் தயங்கியபடி. பெண்களின் பெயரை அந்தப் பெண்களே உச்சரிக்கக் கேட்கும் போது அது இன்னும் அழகாகிவிடுகிறது! அது மட்டும் அல்ல, ஆலய வளவில், மாகாளி ; பார்வதி போன்ற இறைவிகளின் பெயரைக் கொண்ட அவளில், மேலும் ஒரு தனி விருப்பமும் நம்பிக்கையும் அவனுக்குத் தானாக மலர்ந்தது ”நாம் ரியோ [Rio] வுக்கு போகிறோம், நீங்களும் இணையலாம். ஆறுதலாக அங்கு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்வோம், நீங்கள் பிரீ [free] என்றால்? எங்களுடன் வரலாம்" என்றாள், எந்த தயக்கமும் இன்றி, இதமான வரவேற்பு புன்னகையுடன். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/31263916889923550/?

டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

2 weeks 5 days ago
"சார்லி கேர்க் அமெரிக்காவில் பேச்சுச் சுதந்திரத்தின் பிதாமகன்" என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரை அவரது எண்ணங்களின் வெளிப்பாட்டிற்காக மட்டும் கொலை செய்வது நவீன உலகில் இல்லாதொழிக்கப் பட வேண்டிய ஒரு குற்றம். ஆனால், சார்லி கேர்க் வெளிப்படுத்திய, அமெரிக்க இளையோரிடம் பரப்பிய எண்ணங்களின் உள்ளடக்கத்தை அவர் இறந்த பிறகு திரித்துச் சொல்லக் கூடாது. அவரது எண்ணங்களில் சில இவை: பெண்கள் "பெண்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். அங்கே தங்களுடைய கணவரை அவர்கள் தேடிப் பெறுவதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்" "குழந்தை குடும்பமா, தொழில் வெற்றியா என்று வரும் போது குழந்தை குடும்பம் தான் முன்னுரிமை பெற வெண்டும்" அமெரிக்காவின் பல்லினத்தன்மை The great replacement theory என சில வெள்ளையின மேலாண்மையுடையோர் நம்பும் சதிக் கோட்பாட்டை கேர்க்கும் ஆதரித்துப் பரப்பினார். இதன் அடிப்படை தான், "வெள்ளையின பெண்கள் எவ்வளவு அதிகமாகக் குழந்தைகள் பெற்று வெள்ளைத் தோல், நீலக்கண் குழந்தைகளை உருவாக்க முடியுமோ, அவ்வளவுக்கு அமெரிக்காவிற்கு நல்லது" என்ற போதனை. அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம் சில மாதங்கள் முன்னர் சார்லி கேர்க் சொன்னது :" துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டுமானால், ஒவ்வொரு ஆண்டும் சிலர் துப்பாக்கி வன்முறைக்கு ஆளாகி உயிரிழப்பது தவிர்க்க இயலாதது. அது துவக்கு வைத்திருக்கும் உரிமைக்கு நாம் கொடுக்க வேண்டிய ஒரு விலை" நேற்று அவரது குடும்பமும் அமெரிக்கர்களின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையைப் பேண அவரை விலையாகக் கொடுத்திருக்கிறார்கள். பரப்பிய பொய்த்தகவல்கள் "அமெரிக்காவின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் (mass shootings) ஏராளமானவை பால் மாற்றம் செய்து கொண்டவர்களால் (trans people) தான் நடத்தப் பட்டன" தரவுகள் இல்லாத இந்தப் பொய்யை, நேற்று சுடப் படுவதற்கு 1 நிமிடம் முன்னரும் கூறியிருந்தார். அவர் பேசிய இறுதியான பேச்சே இந்தப் பொய் தான் என்பது பதிவில் இருக்க வேண்டும். கோவிட் தடுப்பூசிகளுக்கு எதிரான போலித் தகவல்களும் பரப்பினார். 2020 தேர்தலில் ட்ரம்ப் தான் வென்றார் என்று இறுதி வரை பேசி வந்தார். எப்படி உருவானார் கேர்க்? 2008 இல் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக ஒபாமா வந்த போது, உறுத்தல் ஏற்பட்ட வெள்ளையின மேலாண்மை கொண்ட ஒரு சிறு பிரிவில் இருந்து உருவானவர் தான் சார்லி கேர்க். 2012 இல் ஒபாமா இரண்டாம் தடவையும் வென்ற பின்னர், கல்லூரிகளில் கறுப்பின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சமவுரிமைத் திட்டத்தை (affirmative action) எதிர்த்து தொலைக்காட்சிகளில் தோன்றிப் பேச ஆரம்பித்தார். இதைக் கேட்ட பலர் "இந்த வெள்ளை இளைஞனுக்கு கறுப்பின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதால் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது" என நம்ப ஆரம்பித்தார்கள். ஆனால், சார்லி கேர்க் எந்தக் கல்லூரிக்கும் தன் தகுதிகளை வைத்து விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதாக தரவுகள் இல்லை. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், அமெரிக்காவின் எந்தக் கல்லூரியிலும் பணம் செலுத்தி, சராசரித் தகுதிகளோடு படித்திருக்கலாம். லோயராக, எஞ்சினியராக வந்திருக்கலாம். அவர் அதைச் செய்யாமல் உள்ளூர் கல்லூரியொன்றில் சேர்ந்து, அங்கேயும் கல்வி கைகூடாமல் படிப்பை இடையில் நிறுத்தி விட்டார். வாய்ப்பேச்சை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது உருவான திட்டம் தான் "Turning Point USA -TPUSA" என்ற அமைப்பின் உருவாக்கம். இந்த TPUSA அமைப்பு மூலம், கல்லூரிகளுக்குச் சென்று திறந்த வெளிக் கூட்டங்களில் "Prove Me Wrong" என்ற தலைப்பில் மேலே இருப்பது போன்ற கருத்துக்களை Sound Bites ஆக தூக்கி வீசுவது தான் அவர் பாணி. கல்லூரி மாணவர்கள் எனும் போது impressionable age உடைய, தகவல்கள் அறியும் ஆர்வமோ நேரமோ இல்லாத பலர் இருப்பார்கள்.அத்தகைய மாணவர்களிடையே, மேலே இருப்பது போன்ற விச விதைகளை விதைத்து, அவர்கள் தகவல் அறியும் முன்னரே வலதுசாரித் தனத்தை Cool Trend ஆக மாற்றி விடுவது தான் சார்லி கேர்க் அணியின் திட்டம்- Play book. அதில் கணிசமாக வெற்றியும் பெற்றார்கள். இந்த கேர்க் வெற்றியின் பலாபலன்: 2017 இல் ட்ரம்ப், 2024 இல் மீண்டும் ட்ரம்ப் 2.0. இதனால் மாற்றியமைக்கப் பட்ட அமெரிக்க உச்ச நீதிமன்றம். சாதாரண, மிதவாதிகளான மக்கள் எங்கும் நிவாரணம் பெற இயலாத நிலை. இப்படி மக்களை மிதவாதிகளாக அல்லாமல், வலதுசாரிகளாக மட்டும் இருக்க வற்புறுத்தும் "பேச்சுச் சுதந்திரத்தின்" பிதாமகன் தான் சார்லி கேர்க். தன் வாய்ப்பேச்சினால் தனது குடும்பத்தினருக்கு ஏராளமான செல்வம் சேர்த்து வைத்து விட்டிருக்கும் அமரர் கேர்க் நித்திய அமைதியில் இளைப்பாறட்டும்! அவர் விதைத்த நச்சு விதைகளை அடுத்த 50 ஆண்டுகளுக்கு அமெரிக்கர்கள் நாம் அறுவடை செய்வோம்!

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

2 weeks 5 days ago
🔴 தினமும் பல லட்சம், ஆண்டுதோறும் பல மில்லியன் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு செலவு, ஏன் விஷேட சலுகை தள்ளுபடி முக்கியம்? நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஷேட சலுகைகள் நீக்கப்படும் சட்டமூலம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கூறுகையில், முன்னாள் அரச தலைவர்களுக்கான பாதுகாப்பு தனியாக நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், அது அப்படியே தொடரும் எனவும் வலியுறுத்தினார். தமது பாதுகாப்புக் குறித்து கவலை கொண்ட எவரும், பாதுகாப்புக் இடர் குழுவிடம் கோரிக்கை சமர்ப்பிக்க முடியும் எனவும், அக்குழுவே தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொறுப்பானது எனவும் அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விரிவான பணியாளர்கள் குறித்தும் இதன்போது அமைச்சர் விஜேபால விவரித்தார். அதன்படி விஷேடமாக, மஹிந்த ராஜபக்சவுக்கு 111 பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். அவர்களில், 9 மருத்துவ ஊழியர்கள் 8 சாரதிகள் 2 எழுதுபவர்கள் 5 இயந்திரப் பணியாளர்கள் 1 கடற்படை உதவியாளர் 46 சிறப்பு நடவடிக்கைப் பணியாளர்கள் 16 சமையல்காரர்கள் 26 மின்சார வல்லுநர்கள் 4 சிவில் பொறியியலாளர்கள் 4 தொழில்நுட்ப பொறியியலாளர்கள் 2 களஞ்சிய காவலர்கள் 3 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் 1 தச்சர் 1 நாய் பராமரிப்பாளர் ஆகியோர் அடங்குவதாக அவர் கூறினார். மேலும், கோட்டாபய ராஜபக்சவுக்கு 60 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில்: 3 மருத்துவ உதவியாளர்கள் 1 பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர் 6 சாரதிகள் 5 எழுதுபவர்கள் 8 பாதுகாப்பு அதிகாரிகள் 13 ஆதரவு பணியாளர்கள் 8 சமையல்காரர்கள் 3 தொழில்நுட்ப வல்லுநர்கள் 1 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் 6 சிறப்பு நிபுணர்கள் 1 நாய் பராமரிப்பாளர் ஆகியோர் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சலுகைகள் சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கும் அவர்களது விதவைகளுக்கும் 2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் ரூபா 98.5 மில்லியன் செலவழித்ததாக அமைச்சர் தெரிவித்தார். அதன் விபரம்: ஹேமா பிரேமதாச – ரூபா 2.687 மில்லியன் சந்திரிகா குமாரதுங்க – ரூபா 16.43 மில்லியன் மஹிந்த ராஜபக்ச – ரூபா 54.62 மில்லியன் மைத்திரிபால சிறிசேன – ரூபா 15.77 மில்லியன் கோட்டாபய ராஜபக்ச – ரூபா 12.28 மில்லியன் ரணில் விக்கிரமசிங்க – ரூபா 3.49 மில்லியன் இவ்வாறு பொதுப்பணத்தை குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கு அதிகபட்சமாக செலவளிப்பதானது நாடு தற்போதுள்ள நிலையில் சிந்திக்கவேண்டியது என்றும் குறிப்பிட்டார். Vaanam.lk

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

2 weeks 5 days ago
அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன்! -மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்காக தனது அரசியலை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கடந்த காலத்தில் அளவிற்கு அதிகமாக வரப்பிரசாதங்களை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் குறைத்து புதிய சட்டம் ஒன்றை நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தது. இப் புதிய சட்டம் நேற்றில் இருந்து அமுலுக்கு வந்த நிலையில் அரச இல்லங்களை இன்று வரை பயன்படுத்தியிருந்த மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா ஆகியோர் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அந்தவகையில் கொழும்பு, விஜேராம வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மனைவியுடன் தங்கல்லையில் அமைந்துள்ள கால்டன் வீட்டுக்கு சென்றார் இதன்போது அவரது ஆதரவாளர்கள் மகிந்தவின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆரவாரம் செய்திருந்தனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ” அரசியலை ஒருபோதும் கைவிடமாட்டேன். அரசியல் நடவடிக்கைகள் தொடரும் நாட்டுமக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எம்மை உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறசொன்னார்கள் அதனால் இங்கிருந்து செல்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று காலை உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்லேறு தரப்பினர் வருகை தந்திருந்தனர். குறிப்பாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் உள்ளிட்ட பல இராஜதந்திரிகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் ”தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்” என மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே இதன்போது தெரிவித்திருந்தார். இது குறித்து மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே கருத்துத் தெரிவிக்கையில் ”பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய நாள் அவருக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒருநாளாக இருந்திருக்கும். இன்றைய நாள் அரசாங்கத்திற்கு மிகவும் சந்தோசமான நாள். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான டயஸ்போராக்களுக்கு சந்தோசமாக இருக்கும் என நினைக்கிறேன். சட்டத்திற்கு மதிப்பளித்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 24 மணிநேரத்திற்குள் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இந்த வீடு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படும். 30வருடகால யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திய தலைவருக்கு அரசாங்கம் கௌரவமளிக்கும் விதத்தினை நாட்டு மக்கள் இன்று கண்முன்பார்க்கக்கூடியதாக இருந்தது. சிங்கம் எங்கிருந்தாலும் சிங்கம்தான். தங்காலையில் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுமாயின் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446859

பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்!; ராமதாஸ் அறிவிப்பு!

2 weeks 6 days ago
"அன்புமணியை நீக்குவதற்கு ராமதாஸுக்கு அதிகாரமில்லை" தீவிரமடையும் பாமகவின் உள்கட்சி மோதல் PMK 11 செப்டெம்பர் 2025, 06:09 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பாமகவிலிருந்து அன்புமணி நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்காத நிலையில், அவர் நீக்கப்படுவதாக அறிவித்தார். ஆனால், அன்புமணியை கட்சியிலிருந்து நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று அன்புமணி தரப்பில் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். பொதுக்குழு தீர்மானத்தின் படியும், தேர்தல் ஆணைய உத்தரவின் படியும் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியே கட்சியின் தலைவர் என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறினார். அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை சுமத்தி அதற்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அவரிடமிருந்து விளக்கம் கேட்டிருந்தது. ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவருக்கு பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அன்புமணி எந்த பதிலும் அளிக்காத நிலையில், மீண்டும் அவருக்கு பதிலளிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் அன்புமணியிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் இன்று காலை அறிவித்திருந்தார். PMK "கட்சி விரோத நடவடிக்கை உள்பட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதில் அளிக்க வழங்கிய அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு இருமுறை அவகாசம் அளித்தும் அன்புமணி பதில் அளிக்கவில்லை. பதில் அளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். அன்புமணி மீதான அனைத்து குற்றச்சாட்டுகள் உண்மையானது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பாமக தொடங்கியதில் இருந்து இதுவரை எவரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கையில் அன்புமணி ஈடுபட்டுள்ளார். அரசியல்வாதி என்பதற்கு தகுதியற்றவர் அன்புமணி. ஆகவே பாமக செயல்தலைவர் உட்பட அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கம் செய்கிறோம். அன்புமணியுடன் பாமகவைச் சேர்ந்த யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அன்புமணியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் பாமகவினரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி நீக்கப்படுவதால் கட்சிக்கு பின்னடைவா என்று சிலர் கேட்கின்றனர். பயிரிடும் போது களைகள் வரும், அதை அகற்றிட வேண்டும், இப்போது களை நீக்கப்பட்டுள்ளது என்றும் ராமதாஸ் பேசினார். அன்புமணி சில தொண்டர்களுடன் தனிக்கட்சி போன்று செயல்படுவதாகவும், அவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னிக்க தயாராக இருப்பதாக ராமதாஸ் கூறினார். "அவர்கள் யார் என்று சொல்ல இந்நேரத்தில் தேவை இல்லை. அன்புமணியோடு இருந்தால் நன்மைகள் இருக்கும் என்று நினைத்து அவருடன் இருக்கலாம். அவர்களும் என்னோடு இருந்தவர்கள் தான், நான் இல்லாமல் அவர்கள் வளர்ந்திருக்க முடியாது. மூத்த தலைவர்கள் சிலர் அன்புமணிக்கு அறிவுரை சொன்ன போது, அவர் எதையும் கேட்காமல், மதிக்காமல் போனார். பழ கருப்பையா கூட தந்தையிடம் மகன் தோற்பது, தோல்வி அல்ல என்று கூறியிருக்கிறார்." என்று ராமதாஸ் பேசினார். 'அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை' அன்புமணி ராமதாஸை பாமகவிலிருந்து நீக்க, ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று, கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாலு, அன்புமணியை நீக்குவதாக கூறுவது கட்சி விதிகளுக்கு விரோதமானது என்று கூறினார். அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தார். அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் பதில் தருவதாக கூறி பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, " பாமக விதிகளின் படி பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், செயலாளருக்கே நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது. கட்சியின் நிறுவனருக்கு அதிகாரம் இல்லை. இன்றைய அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது. கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வருகிறார். ஆகஸ்ட் 9ம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. அதில் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் பொறுப்புகள் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. அது ஒரு மனதாக பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினோம். அதை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக் காலத்தை பொதுக்குழு தீர்மானங்களின் படி நீட்டித்து அறிவித்தது. எனவே, தலைவராக அன்புமணி ராமதாஸ், பொருளாளராக திலகபாமா, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன் தொடர்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார். எனவே கட்சி நிறுவனரின் இன்றைய அறிவிப்பு செல்லாது,ராமதாஸின் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது என்றும் பாலு தெரிவித்தார். "கட்சியின் நிறுவனராக ராமதாஸ் தொடர்கிறார். ஆனால் வேறு பொறுப்புகளில் யாரேனும் நியமிக்கப்பட்டதாக அறிவிப்புகள் வந்தால், அந்த தகவல்களை பாமக நிர்வாகிகள் பகிர வேண்டாம்." என்றும் அவர் வலியுறுத்தினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0m41kkd0r4o

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது

2 weeks 6 days ago
கத்தாரில் இஸ்ரேல் குறிவைத்த ஹமாஸ் தலைவர் எங்கே? - உலக நாடுகளை பகைத்து நடத்திய தாக்குதல் தோல்வியா? Getty Images ஹமாஸின் பேச்சுவார்த்தை குழு தலைவர் கலீல் அல்-ஹய்யா கட்டுரை தகவல் டேவிட் கிரிட்டன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் செவ்வாயன்று தோஹாவில் மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காணாமல் போன இரண்டு பேரைத் தேடி வருவதாகவும், மனித எச்சங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிகவும் சர்ச்சைக்குரிய இந்த தாக்குதல் வெற்றி பெறவில்லை என்ற கவலை இஸ்ரேல் ராணுவ வட்டாரங்களில் உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தெரிவித்த ஐந்து கீழ்மட்ட உறுப்பினர்களில் மூவரின் உடல்களை, கத்தார் உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது, அவர்களோடு ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளார். தனது பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்த இந்த தாக்குதல் தோல்வியடைந்ததாக ஹமாஸ் கூறியுள்ளது. சின்என்-க்கு அளித்த பேட்டியில், ஹமாஸின் தலைமை பேச்சுவார்த்தையாளர் கலீல் அல்-ஹய்யாவின் நிலை குறித்து கத்தார் பிரதமர் எதையும் வெளிப்படுத்தவில்லை. "இதுவரை... எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை," என்று ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி புதன்கிழமை மாலையில் தெரிவித்திருந்தார். இஸ்ரேலின் நடவடிக்கை "அரச பயங்கரவாதம்" எனக் கருதப்பட வேண்டியதாகவும், கத்தாரின் பிராந்திய கூட்டாளிகள் "கூட்டாகப் பதில்" அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் "பயங்கரவாத மூளையாக இருந்தவர்களை" குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் நியாயமானது என்று தெரிவித்தார். அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போரில், காஸாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 64,656 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதியில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. AFP மிகவும் சர்ச்சைக்குரிய இந்த தாக்குதல் வெற்றி பெறவில்லை என்ற கவலை இஸ்ரேல் ராணுவ வட்டாரங்களில் உள்ளது என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் முக்கிய பிராந்தியக் கூட்டாளியாக இருக்கும் கத்தாரில், பெரிய அமெரிக்க விமானத் தளம் அமைந்துள்ளது. 2012 முதல் ஹமாஸ் அரசியல் பணியகம் அங்கு செயல்பட்டு வருகிறது. மேலும், அமெரிக்கா மற்றும் எகிப்துடன் இணைந்து, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகளில் கத்தார் மத்தியஸ்தராகவும் இருந்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் வடக்கு தோஹாவில் நடந்த வான்வழித் தாக்குதல், ஹமாஸ் அரசியல் பணியகத்தின் பல உறுப்பினர்கள் வசித்த குடியிருப்பு வளாகத்தை குறிவைத்ததாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், அமெரிக்கா முன்மொழிந்த சமீபத்திய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தைப் பற்றி ஆலோசித்து வந்தனர். இந்த நடவடிக்கையை "ஆபரேஷன் சம்மிட் ஆஃப் ஃபயர்" என அழைத்த இஸ்ரேலிய அதிகாரிகள், அதன் முடிவுகள் குறித்து தொடக்கத்தில் நம்பிக்கையுடன் இருந்ததாக இஸ்ரேலிய ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். ஆனால் புதன்கிழமை வந்த தகவல்கள், அந்த தாக்குதல் அவர்கள் நினைத்த அளவுக்கு வெற்றிகரமாக அமையவில்லை என்ற சந்தேகங்களை வெளிப்படுத்தின. சில அதிகாரிகள், ஹமாஸ் தலைவர்கள் கட்டிடத்தின் வேறு பகுதியில் இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹமாஸ், இந்த "கொடூரமான குற்றத் தாக்குதலில்" தனது ஐந்து உறுப்பினர்கள் உயிரிழந்ததாகக் கூறியது. கலீல் அல்-ஹய்யாவின் மகன் ஹுமாம், ஹய்யாவின் அலுவலக இயக்குநர் ஜிஹாத் லபாத், மற்றும் பாதுகாப்பு வீரர்கள் மோமன் ஹசௌனா, அப்துல்லா அப்துல் வாஹித், அகமது அல்-மம்லுக் ஆகியோர் தான் அந்த ஐவர். "பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள எங்கள் சகோதரர்களை கொல்லும் முயற்சி தோல்வியடைந்தது," என்று ஹமாஸ் கூறியிருந்தாலும், அதற்கான எந்த ஆதாரத்தையும் அது வெளியிடவில்லை. புதன்கிழமை மாலை, ஹுமாம் அல்-ஹய்யா, லபாத், ஹசௌனா, மேலும் கத்தார் உள்நாட்டு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கார்ப்ரல் பத்ர் அல்-ஹுமைடி ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சகம் அறிவித்தது. "காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு நபர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்றும், "பல்வேறு இடங்களில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கலீல் அல்-ஹய்யாவின் இருப்பிடத்தைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் வெளிப்படவில்லை. அவர் இன்னும் பொதுவெளியிலும் தோன்றவில்லை. கத்தார் ஹமாஸ் தலைவர்களுக்கு "பாதுகாப்பான புகலிடத்தை" வழங்கியதால், அவர்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். "பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் கத்தார் உட்பட அனைத்து நாடுகளுக்கும் நான் கூறுகிறேன், அவர்களை வெளியேற்றுங்கள் அல்லது நீதியின் முன் நிறுத்துங்கள். இல்லையெனில், நாங்களே நடவடிக்கை எடுப்போம்," என்று அவர் எச்சரித்தார். இதற்கு பதிலளித்த கத்தார் பிரதமர் ஷேக் முகமது, "நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியது நெதன்யாகு தான். அவர் தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தேடப்பட்டு வருபவர்," என்று சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். கடந்த ஆண்டு, காஸாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நெதன்யாகுவும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்டும் குற்றவியல் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளதாகக் கூறி, ஐசிசி நீதிபதிகள் இருவருக்கும் கைது வாரண்டுகளை பிறப்பித்தனர். ஆனால் இஸ்ரேலிய அரசும், அந்த இருவரும் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இஸ்ரேலின் சமீபத்தியத் தாக்குதல், காஸாவில் மீதமுள்ள 48 பணயக்கைதிகள் மீதான நம்பிக்கையை "கொன்றுவிட்டது" என தாம் அஞ்சுவதாகவும், அதில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுவதாகவும் ஷேக் முகமது தெரிவித்தார். தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன், ஒரு பணயக்கைதியின் குடும்பத்தினரை சந்தித்ததாகவும், அவர்கள் "இந்த போர்நிறுத்த மத்தியஸ்தத்தையே முழுமையாக நம்பியிருந்தனர், அவர்களுக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை" எனக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலின் நடவடிக்கை "போருக்கு முடிவு காணும் கதவைத் திறக்கக்கூடும்" என்று நெதன்யாகு செவ்வாயன்று கூறினார். மேலும், அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாகவும் உறுதிப்படுத்தினார். அதேசமயம் காஸா மக்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். கத்தார் இப்போது ஹமாஸ் அலுவலகத்தை மூடுமா என்ற கேள்விக்கு, தனது அரசு "எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்து வருகிறது" என்றும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் "விரிவான உரையாடல்" நடத்தி வருவதாகவும் ஷேக் முகமது கூறினார். இந்தத் தாக்குதலின் ஒவ்வொரு அம்சத்திலும் தான் மிகவும் அதிருப்தியடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். "அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியும் இறையாண்மை கொண்ட நாடான கத்தாருக்குள் ஒருதலைப்பட்சமாக குண்டுவீசுவது, அமைதியை நிலைநாட்ட எங்களுடன் கடினமாகவும் துணிச்சலாகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு செயல்படும் ஒரு நாட்டுக்கு எதிராகச் செய்யப்படும் நடவடிக்கை. இது இஸ்ரேலின் இலக்குகளையோ அல்லது அமெரிக்காவின் இலக்குகளையோ முன்னேற்றாது", "ஆனால், காஸாவில் வாழும் மக்களின் துயரத்திலிருந்து லாபம் ஈட்டிய ஹமாஸை ஒழிப்பது ஒரு நியாயமான குறிக்கோள்"என்று டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க ராணுவத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும், வரவிருக்கும் தாக்குதல் குறித்து கத்தாருக்குத் தெரிவிக்குமாறு சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அது "மிகவும் தாமதமாகிவிட்டது" என்றும் டிரம்ப் கூறினார். அமெரிக்கா "தாக்குதல் நடந்த 10 நிமிடங்களுக்குப் பிறகு தான்" கத்தாரைத் தொடர்பு கொண்டதாக ஷேக் முகமது தெரிவித்தார். கத்தாரின் சக அரபு நாடுகளும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதன்கிழமை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஒற்றுமையை வெளிப்படுத்த தோஹாவிற்கு விமானம் மூலம் சென்றார். கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியிடம், இஸ்ரேலின் "குற்றவியல் தாக்குதல்" மத்திய கிழக்கின் "பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் அமைதிக்கான வாய்ப்புகளை" அச்சுறுத்துவதாக கூறியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டபுள்யூஏஎம் (WAM) செய்தி நிறுவனம் தெரிவித்தது. வியாழக்கிழமையன்று தோஹாவுக்கு வரவிருக்கும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத், இஸ்ரேலின் "கொடூரமான ஆக்கிரமிப்பு" நடவடிக்கைக்கு பதில் தேவைப்படுவதாகக் கூறினார். ஷேக் முகமதுவின் கூற்றுப்படி, பிராந்திய ரீதியான பதிலை விவாதிக்க விரைவில் கத்தாரில் ஒரு உச்சிமாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c931lw7e8zwo

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

2 weeks 6 days ago
மஹிந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் Published By: Digital Desk 3 11 Sep, 2025 | 02:24 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார். கொழும்பு, விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள்,வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்லேறு தரப்பினர் வியாழக்கிழமை (11) காலை முதல் வருகை தந்திருந்தனர். இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறவுள்ளதாக வெளியான தகவலையடுத்து அனைவரும் அங்கு சென்றனர். சீனத்தூதுவர் உள்ளிட்ட பல இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்தனர். முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் புதன்கிழமை (9) பாராளுமன்றத்தில் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு நேற்றையதினம் சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்குவந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று வெளியேறுவார் என்ற தகவல் வெளியான நிலையிலேயே அரசியல்வாதிகளும் இராஜதந்திரிகளும் ஆதரவாகளர்களும் அசரைச் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார். இதேவேளை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224815

யாழில் இராணுவ வாகனத்துடன் விபத்து - இளைஞன் படுகாயம்

2 weeks 6 days ago
11 Sep, 2025 | 10:12 AM யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவரங்கால் பகுதியில் நேற்று புதன்கிழமை (10) இரவு இராணுவத்தினரின் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு , அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/224784

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

2 weeks 6 days ago
நாங்கள் பிடிக்காதந கட்டாகாலி மாடுகளா, எத்தனை மாடுகளை பிடித்து கொடுத்து பெடியாள தண்ணி அடிச்சிருப்பம், அப்படியை மாட்டை கலைத்து கொண்டு போய் நான் வலை பிடித்து ஒரு சுற்று சுற்ற மற்றவர் கழுத்தில் கயிறு போட்டு பிடிப்பதே ஒரு திரில்தான், அது ஒரு காலம்

டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

2 weeks 6 days ago
சார்லி கக்: டிரம்பின் கூட்டாளி சுட்டுக் கொலை - 3000 பேர் முன்னிலையில் நடந்த சம்பவம் Reuters கொல்லப்படுவதற்கு முன், யூட்டா பல்கலைகழகத்தில் சார்லி கக் பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் கட்டுரை தகவல் ஜூட் ஷீரின், ஆனா ஃபகே 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் யூட்டா பகுதியில் உள்ள யூட்டா வேலி பல்கலைகழகத்தில், அதிபர் டிரம்பின் கூட்டாளியான சார்லி கக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பல்கலைகழக வளாகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அவர் பேசி வந்தார். பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொலையாளியை தேடும் பணி வீடு வீடாக நடைபெறுவதாக போலீஸார் கூறுகின்றனர். சார்லி கக் இறப்பை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப் பட்டது. அவரது இறப்புக்கு ஜோ பைடன், ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உட்பட முன்னாள் அதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். டிரம்ப் கூறியது என்ன? சார்லி கக் அமெரிக்காவில் மிகவும் முக்கியமான பழமைவாத ஆர்வலர்களில் ஒருவர் , ஊடக பிரபலம், அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பகமான கூட்டாளியாக இருந்தார். யூட்டா கல்லூரியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த 31 வயதான சார்லி கக், நாடு முழுவதும் உள்ள கல்வி வளாகங்களில் திறந்தவெளி விவாதங்களை நடத்தியதற்காக அறியப்பட்டவர். 2012 ஆம் ஆண்டில், 18 வயதில், அவர் தாராளவாத சார்பு கொண்ட அமெரிக்க கல்லூரிகளில் பழமைவாத கருத்துகளை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாணவர் அமைப்பான டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ (TPUSA) ஐ நிறுவினார். அவரது சமூக ஊடக பதிவுகள் மற்றும் தினசரி போட்காஸ்ட் பெரும்பாலும் திருநங்கை அடையாளம், காலநிலை மாற்றம், குடும்பம் போன்றவை குறித்ததாக இருந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு வீடியோ பதிவில், "சார்லி கக்கின் கொடூரமான படுகொலை குறித்து வருத்தமும் கோபமும் கொண்டுள்ளேன்" என்று கூறியுள்ளார் சார்லி கக் - தனது 18 வயதில் டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்ற பழமைவாத குழுவை நிறுவினார், அவர் ஒரு தேசபக்தர், அவரது மரணம் "அமெரிக்காவிற்கு ஒரு இருண்ட தருணம்" என்று டிரம்ப் கூறினார். யூட்டா பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சார்லி கக் பங்கேற்று பேசி வந்தார். யூட்டா பல்கலைகழக காவல் தலைமை அதிகாரி ஜெஃப் லாங், இந்நிகழ்வு திறந்த வெளியில் நடைபெற்றதாகவும், 3 ஆயிரம் பேர் அந்நிகழ்வில் பங்கேற்றதாகவும் ஆறு அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முழுவதும் கட்டடங்களால் சூழப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் சார்லி கக்கின் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்ததாக ஒக்லஹாமா மாகாண பிரதிநி மார்க்வேனே முல்லின்ஸ் கூறினார். சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில் பல்கலைகழக வளாகத்தில் ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து ஒருவர் கிர்கை சுட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. அந்த காட்சிகளை பிபிசி ஆராய்ந்த போது, அந்த கட்டிடம் சார்லி கக் சுடப்பட்ட இடத்திலிருந்து 150 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருப்பது தெரிய வந்தது. எனினும் அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவலை உறுதி செய்ய முடியவில்லை. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நேரில் கண்டவர்கள் கூறியது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அவர் துப்பாக்கிச் சூடுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் போது, சுடப்பட்டதாக கூறுகின்றனர். சுடப்பட்டவுடன், மேடையில் அவர் கீழே விழுந்தார். கூடியிருந்த மாணவர்களும், இளைஞர்கள் அங்கிருந்து ஓட தொடங்கினர். சார்லி கக் சுடப்பட்ட பிறகு, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அலுவலர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். சார்லி கக் சுடப்பட்ட உடனே ஒரு நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று அவர் விடுவிக்கப்பட்டார். சிசிடிவி காட்சிகளில் சுட்டவர் பதிவாகியுள்ளார். அவர் முழுவதும் கருப்பு நிற உடை அணிந்திருப்பதும், பல்கலைகழக வளாகத்தில் ஒரு மேற்கூரையிலிருந்து சுட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. யூட்டா ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ், அமெரிக்கர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார், சார்லி கக்கின் மரணத்தை "அரசியல் கொலை" என்று அவர் குறிப்பிட்டார். தலைவர்கள், முன்னாள் அதிபர்கள் அஞ்சலி சார்லி கக்கின் உயிரிழப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், அமெரிக்க முன்னாள் அதிபர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர், "நாம் திறந்த மனதுடன் விவாதிக்கவும், பயம் இல்லாமல் பேசவும் முடிய வேண்டும். அரசியல் வன்முறையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" என்று கூறியுள்ளார். இத்தாலி பிரதமர் ஜிராஜியா மெலோனி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேய் ஆகியோரும் தங்கள் இரங்கல் செய்திகளை தெரிவித்துள்ளனர். சார்லி கக் யார்? சார்லி கக் அமெரிக்காவில் மிகவும் முக்கியமான பழமைவாத ஆர்வலர்களில் ஒருவர் , ஊடக பிரபலம், அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பகமான கூட்டாளியாக இருந்தார். யூட்டா கல்லூரியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த 31 வயதான கக், நாடு முழுவதும் உள்ள கல்வி வளாகங்களில் திறந்தவெளி விவாதங்களை நடத்தியதற்காக அறியப்பட்டவர். சிகாகோவின் புறநகர்ப் பகுதியான ப்ராஸ்பெக்ட் ஹைட்ஸில் வளர்ந்த ஒரு கட்டிடக் கலைஞரின் மகன் கக். அரசியல் செயல்பாட்டில் தன்னை அர்ப்பணிப்பதற்கு முன்பு சிகாகோவுக்கு அருகிலுள்ள ஒரு சமூகக் கல்லூரியில் பயின்று, பாதியில் நின்று விட்டார். உயர்மட்ட அமெரிக்க ராணுவ அகாடமியான வெஸ்ட் பாயிண்டிற்கு தேர்வாக முயன்று தோல்வியுற்றார். பின்நவீனத்துவம் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் விவாதங்களில் ஈடுபடும்போது கக் கல்லூரி பட்டம் கூட பெறாதவர் என்று குறிப்பிடப்பட்டார். Reuters 2024-ம் ஆண்டு அரிசோனாவில் சார்லி கக் ஒரு மாநாட்டில் பேசினார். 2012 -ல் அதிபர் பராக் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் TPUSA -ல் அவரது பங்களிப்பு தொடங்கியது. லாப நோக்கற்ற அந்த அமைப்பின் நோக்கம் "நிதிப் பொறுப்பு, சுதந்திர சந்தைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகளை மேம்படுத்த" மாணவர்களை ஒழுங்கமைப்பதாகும். TPUSA இப்போது 850 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. கக் குடியரசுக் கட்சி நிகழ்வுகளில் பேசி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார், அதிதீவிர பழமைவாதிகளிடையே பிரபலமாக இருந்தார். அவரது தினசரி பழமைவாத பேச்சு வானொலி நிகழ்ச்சி, சமூக ஊடகங்களில் லட்சக் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தது என்று சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. Getty Images டொனால்ட் டிரம்ப் ஜூனியர், அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜே டி வான்ஸ் ஆகியோருடன் ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சார்லி கக் பங்கேற்றார். ஒரு ஆர்வமுள்ள மேடை பேச்சாளரான, சார்லி கக் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றினார். ட்ரம்பின் மேக் அமெரிக்கா கிரேட் எனும் பிரசாரத்தைக் குறிக்கும் வகையில், அவர் எழுதிய தி மாகா கோட்பாடு 2020 ஆம் ஆண்டின் சிறந்த விற்பனையான நூலாக இருந்தது. கடந்த ஆண்டு தேர்தலில் டிரம்ப் மற்றும் பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் TPUSA முக்கிய பங்கு வகித்தது. பல்லாயிரக்கணக்கான புதிய வாக்காளர்களை பதிவு செய்ய உதவியதற்கும், ட்ரம்புக்கு ஆதரவாக அரிசோனா மாகாணத்தில் நிலைமைகளை மாற்றியதற்கும் அவர் வெகுவாக பாராட்டப்பட்டார். சார்லி கக் ஜனவரி மாதம் வாஷிங்டன் டி.சி.யில் நடந்த டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். டிரம்ப் ஆட்சிக் காலங்களில் வெள்ளை மாளிகைக்கு அவர் அடிக்கடி வருவது வழக்கம். புதன்கிழமை, கக்கின் மரணத்தை அறிவித்த டிரம்ப் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்: "தி கிரேட், மற்றும் லெஜண்டரி, சார்லி கக் இறந்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள இளைஞர்களின் இதயத்தை சார்லியை விட யாரும் புரிந்து கொள்ளவில்லை" என்றார். Reuters 2018-ம் ஆண்டு சார்லி கிர்குடன் அதிபர் டிரம்ப். அதிபரும் அவரது உதவியாளர்களும் டிரம்பின் பிரசாரத்துக்கு சார்லி கக்கின் பங்கை அங்கீகரித்தனர். அவர் குடியரசுக் கட்சி மாநாடுகளில் பேசினார். கக்கின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் அரிசோனாவில் கக் அமைப்பின் மாநாட்டில் உரையாற்றினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் டொனால்ட் டிரம்ப் உடன் கிரீன்லாந்திற்கு பயணம் செய்தார். டிரம்ப் அப்போது ஆர்க்டிக் பிராந்தியத்தை அமெரிக்கா சொந்தமாக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார். சார்லி கக்கின் சுவிசேஷ கிறிஸ்தவ மதம் மற்றும் குடும்பம் அவரது அரசியலில் முக்கிய பங்காற்றியது என்று கூறலாம். அவர் ஒரு முன்னாள் மிஸ் அரிசோனாவை திருமணம் செய்து கொண்டார், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழமைவாத செயல்பாடுகளின் எதிர்காலமாகவும், தீவிர பிரிவினைவாத நபராகவும் பார்க்கப்பட்டார். குடியரசுக் கட்சி அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்குக்கு மிகப்பெரிய பாராட்டு டிரம்பிடமிருந்தே வந்தது என்று கூறலாம். டிரம்பின் இந்த வார்த்தைகள் சார்லி கக்கின் பாட்காஸ்டின் தொடக்கத்தில் ஒலிபரப்பட்டது. அதில் டிரம்ப், "நான் சார்லிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், அவர் ஒரு நம்பமுடியாத இளைஞர், அவரது உணர்வு, இந்த நாட்டின் மீதான அவரது அன்பு, இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த இளைஞர் அமைப்புகளில் ஒன்றை உருவாக்குவதில் அவர் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார்." என்று கூறியுள்ளார். சார்லி கக் தனது நிகழ்வுகள் மற்றும் அவரது பாட்காஸ்ட்களில் பல அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளை விவாதித்துள்ளார் - துப்பாக்கி கட்டுப்பாடு அவற்றில் ஒன்றாகும். சில மாதங்களுக்கு முன்பு, "துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு ஆண்டும் சில துப்பாக்கி இறப்புகள் நிகழ்ந்தாலும், இரண்டாவது சட்டத் திருத்தத்தை (துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை வழங்குகிறது) தக்க வைத்துக் கொள்ள அந்த விலையை கொடுக்க வேண்டியுள்ளது" என்று அவர் பேசியிருந்தார். அவரது சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்டன. அவர் கோவிட் -19 தொற்றுநோய் குறித்து சந்தேகத்தையும் பரப்பினார், திருநங்கைகளுக்கு எதிரான கருத்துக்களையும் பரப்பினார் என்று பிபிசியின் செய்தி கூட்டாளியான சிபிஎஸ் தெரிவித்துள்ளது. 2020 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் தவறான கூற்றையும் அவர் வழிமொழிந்தார். சிபிஎஸ் செய்தியின் படி, வெள்ளை மக்களின் இடத்தை சிறுபான்மையினர் பிடித்துக் கொள்வார்கள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கிரேட் ரிப்ளேஸ்மென்ட் சதி கோட்பாட்டையும் அவர் முன்னிலைப்படுத்தினார். சார்லி கக் சுடப்பட்டது குறித்து பேசும் போது, அவர் வெவ்வேறு கருத்துகள் குறித்த விவாதங்களை ஊக்குவித்தார் என்று சிலர் வலியுறுத்தினர். "அவரது செயல்பாடுகள் பிளவைக் கடந்து மக்களை அணுகுவது, பிரச்னைகளை தீர்க்க வன்முறைக்கு பதில் பேச்சைப் பயன்படுத்து என்ற நோக்கில் இருந்தது. " என பாப்டிஸ்ட் தலைமைத்துவ மையத்தின் நிர்வாக இயக்குனர் வில்லியம் வொல்ஃப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3rvw7434v9o

ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!

2 weeks 6 days ago
இவர்தான் அண்மையில் நாமலை புகழ்ந்து, அடுத்த ஜனாதிபதி அவர் என்றும் முன்புபோல் தமிழருக்கு நடவாதென்றும், தனது அப்பாவை காணாமல் ஆக்கியதை மன்னித்து விட்டதாகவும் கூறியிருந்தார். தேர்தல் காலத்திலேயே மாறி மாறி கதைத்தவர், இவரும் தேர்தலை முன்னிட்டே அப்பப்போ கதையை மாற்றுகிறார். தையிட்டி விகாரை உடைக்கப்படாதென்றும் அதற்காக வேறொரு காணி கொடுக்கப்படலாம் என்றும் கருத்துரைத்தவர், ஆனால் தன் காணிக்கு யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்று விடுவேன், அது யாராகவும் இருக்கலாமென சொன்னவர், நாளைக்கு இன்றைய கருத்தையும் மாற்றிச்சொல்வார். ஒரு கொள்கை இல்லாதவர்கள். இவர்கள் பின்னால் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு அலைகிறார்கள்.

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

2 weeks 6 days ago
ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம் 2025 – இலங்கை அணி அறிவிப்பு Published By: Digital Desk 1 11 Sep, 2025 | 12:54 PM சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டி 2025க்கான இலங்கை மகளிர் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தெரிவு செய்துள்ளது. மகளிருக்கான உலகக் கிண்ணப்போட்டி செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. குவஹாத்தியில் நடைபெறும் ஆரம்ப போட்டியில்; இலங்கை அணி இந்தியாவை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டியின் தலைவராக சாமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், துணைத்தலைவராக அனுஷ்கா சஞ்சீவனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில், ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே,ஹர்ஷித சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலாக்ஷி டி சில்வா, இமேஷா துலானி, தேவ்மி விஹங்கா, பியூமி வத்சலா, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி, உதேசிகா பிரபோதனி, மல்கி மதரா, அச்சினி குலசூரிய ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/224808

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

2 weeks 6 days ago
ஆசிய கோப்பை: இந்தியாவிடம் சண்டையின்றி சரணடைந்தது யுஏஇ - பாகிஸ்தானுக்கு போக்கு காட்டிய அணியை சுருட்டியது எப்படி? Getty Images கட்டுரை தகவல் தினேஷ்குமார்.எஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் இரண்டாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா, யூஏஇ அணிகள் மோதின. நீண்ட காலத்துக்கு பிறகு டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஓப்பனர் இடத்தை கில்லுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய சாம்சன், விக்கெட் கீப்பராக தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். சாம்சனுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜிதேஷ் சர்மாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் விதமாக, ஸ்பெசலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளராக பும்ரா மட்டும் சேர்க்கப்பட்டு, பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டார். துபாய் ஆடுகளத்தில் 175 - 180 ரன்களே வெற்றிக்கு போதுமானது எனக் கூறப்படும் நிலையில், டாஸ் வென்ற சூர்யகுமார் யாதவ் சரியான முடிவெடுத்தார். நெருக்கடி கொடுத்த பும்ரா SAJJAD HUSSAIN/AFP via Getty Images பும்ராவின் பந்து வீச்சு எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது ஹார்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரில் யூஏஇ அணி, 10 ரன்கள் எடுத்து நேர்மறையாக இன்னிங்ஸை தொடங்கியது. முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விளாசிய ஷரஃபு, பும்ரா, அக்சர் படேல் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்சர் அடித்து அதகளப்படுத்தினார். 17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த ஷரஃபு, பும்ராவின் அற்புதமான யார்க்கரில் தனது ஆஃப் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். 2024 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 கிரிக்கெட்டுக்கு திரும்பிய பும்ரா, சில பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தாலும் பிரமாதமாக பந்துவீசினார். யூஏஇ அணியின் டாப் ஆர்டருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பவர்பிளே கட்டத்திலேயே பும்ராவை மூன்று ஓவர்களை சூர்யகுமார் யாதவ் வீசச் செய்தார். ஒரு விக்கெட் மட்டுமே பும்ரா எடுத்தாலும், அவர் ஒருமுனையில் கொடுத்த நெருக்கடியாலே பிற வீரர்கள் விக்கெட் எடுத்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய முகமது ஸோஹைப், வருண் சக்கரவர்த்தியின் முதல் ஓவரிலேயே, அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் ஃபிலைட் செய்து வீசப்பட்ட பந்தை இன்சைட் அவுட் ஆட முயன்று, பாயிண்ட் திசையில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பேட்டிங் வரிசையை நொறுக்கிய குல்தீப் SAJJAD HUSSAIN/AFP via Getty Images அதுவரை பெரும்பாலும் எதிர்முனையிலேயே அமைதியாக நின்றுகொண்டிருந்த கேப்டன் முகமது வாசீம், பும்ரா வீசிய ஆட்டத்தின் ஆறாவது ஓவரில், மூன்று பவுண்டரிகள் அடித்து, இரட்டை இலக்கத்துக்கு நகர்ந்தார். 47 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்த யூஏஇ அணியின் பேட்டிங் முதுகெலும்பை குல்தீப் யாதவ் மொத்தமாக உடைத்துப்போட்டார். இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரில் ராகுல் சோப்ரா, முகமது வாசீம், ஹர்ஷிட் கௌசிக் என மூன்று விக்கெட்களை கைப்பற்றி, 50 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழக்கும் நிலைக்கு யூஏஇ அணியை தள்ளினார். முதலில் அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசிய பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று, லாங் ஆன் திசையில் கில்லிடம் கேட்ச் கொடுத்து சோப்ரா ஆட்டமிழந்தார். அடுத்ததாக, ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்தில் ஸ்வீப் ஷாட் ஆடப் பார்த்து, கேப்டன் வாசீம் எல்பிடபிள்யூ ஆனார். ஓவரின் கடைசி பந்தில் கூக்ளி வீசி, ஹர்ஷிட் கௌசிக்கின் ஸ்டம்புகளை பதம்பார்த்தார். Getty Images குல்தீப் யாதவ் கடைசி கட்டத்தில் அணியை கரைசேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆசிஃப் கான், 2 ரன்கள் மட்டுமே எடுத்து பேட்டிங் ஆல்ரவுண்டர் துபேவின் மிதவேகப் பந்தில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார். அடுத்தடுத்த ஓவர்களில் யூஏஇ அணியின் டெயிலெண்டர்கள் விளையாடிய விதம், அதுவொரு கத்துக்குட்டி அணி என்பதை நிரூபித்தது. எந்தவொரு திட்டமிடலும் இன்றி, மனம்போன போக்கில் பேட்டை சுழற்றி விக்கெட்டை கோட்டைவிட்டனர். இந்திய வம்சாவளி வீரரான சிம்ரன்ஜீட் சிங், 1 ரன்னில் அக்சர் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில், பராசர், ஜுனைட் சித்திக் ஆகியோரின் விக்கெட்டை துபே கைப்பற்ற, கடைசி விக்கெட்டாக ஹைதர் அலியை ஆட்டமிழக்க செய்து இன்னிங்ஸை முடித்துவைத்தார். ஒருகட்டத்தில் 41 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த யூஏஇ அணி, மோசமான பேட்டிங்கால் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் முதல் ஆட்டத்தில், யூஏஇ அணி 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து, 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக குறைந்த ரன் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை யூஏஇ அணி படைத்தது. Getty Images ஜஸ்ப்ரித் பும்ரா சூர்யகுமாரின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் தருணம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்ட சைனாமேன் சுழலர் குல்தீப் யாதவ், 4 விக்கெட்களை கைப்பற்றி, தனது திறமையை நிரூபித்தார். குல்தீப் மட்டுமின்றி, அக்சர், வருண் சக்கரவர்த்தி என அனைத்து சுழலர்களும் விக்கெட் கைப்பற்றி அசத்தினர். பும்ரா, ஹார்திக் பாண்ட்யாவுடன் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கிய துபே, மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். துபே வீசிய இரண்டாவது ஓவரில், கிரீஸுக்கு வெளியே சென்ற ஜுனைட் சித்திக்கை சாம்சன் ரன் அவுட் செய்தார். ஆனால், பந்துவீச ஓடி வருகையில், துபேவின் துண்டு (rag) கீழே விழுந்தால், கவனம் தொலைத்ததாக ஜுனைட் சித்திக் முறையிடவே, அப்பீலை வாபஸ் பெற்றார் சூர்யகுமார் யாதவ். Getty Images வருண் சக்ரவர்த்தி 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய ஓப்பனர்கள் அபிஷேக் சர்மாவும் கில்லும் தொடக்கம் முதலே பேயாட்டம் ஆடினர். ஹைதர் அலி வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய அபிஷேக் சர்மா, சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக பறக்கவிட்டு, புயல் வேகத்தில் இலக்கை விரட்டினார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய டி20 அணிக்கு மறுவருகை நிகழ்த்திய கில்லும் தன் பங்குக்கு, அதிரடியை வெளிப்படுத்தினார். ஜுனைட் சித்திக் பந்தில் பிரமாண்டமான சிக்ஸர் விளாசிய அபிஷேக் சர்மா, அடுத்த பந்திலும் பெரிய ஷாட்டுக்கு முயன்று 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். நெட் ரன் ரேட்டை (NRR) அதிகப்படுத்தும் நோக்கத்துடன் விளையாடிய இந்திய அணி, 4.3 ஓவரில், வெற்றிக்கான ரன்களை எட்டியது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிவேகமான சேஸாக, இந்த ஆட்டம் மாறியது. சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக நம்பிக்கையளிக்கும் விதமாக விளையாடிய யூஏஇ அணி, மோசமான முறையில் ஆசிய கோப்பை தொடரை தொடங்கியுள்ளது. 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்கள் கைப்பற்றிய குல்தீப் யாதவ், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி, 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(செப். 14) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆட்டமான அதில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆதிக்கத்தை பறைசாற்றுமா என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலாக உள்ளது. 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு, இரு அணிகளும் முதல்முதலில் மோதும் கிரிக்கெட் ஆட்டம் என்பதால், உலகம் முழுக்க இந்த ஆட்டத்துக்கு எதிர்பார்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwylwlk5wewo

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

2 weeks 6 days ago
சம்பந்தன் இப்ப உயிருடன் இருந்திருந்தாலும்.... இப்போ... அரச மாளிகையை விட்டு வில்லங்கமாக வெளியேற்றப் பட்டிருப்பார். எதிர்க்கட்சி தலைவர் பதவி பறி போன பின்பும்... ஏழு, எட்டு வருசமாக அடாத்தாக அரச மாளிகையில் இருந்து அனுபவித்து விட்டுத்தான் செத்துப் போன ஆள்.

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

2 weeks 6 days ago
உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் மைத்திரி! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நேற்று (10) ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமைகளை நீக்குதல் சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2025 ஓகஸ்ட் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும். நீக்கப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வதிவிடம் அல்லது செலுத்தப்பட்ட மாதாந்த படி, நீக்கப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலகப் படித்தொகை, வழங்கப்பட்ட அலுவலக போக்குவரத்து மற்றும் அத்தகைய வேறு வசதிகள், நீக்கப்பட்ட சட்டத்தின் 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் என்பன இரத்துச் செய்யப்படும். https://athavannews.com/2025/1446773
Checked
Wed, 10/01/2025 - 10:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed