புதிய பதிவுகள்2

திருகோணமலை கடற்கரையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது

3 months ago
மீண்டும் தனது இடத்தை வந்தடைந்த புத்த பெருமான். காணொளி: 👉 https://www.facebook.com/reel/1161565916114299 👈 ---------------------------------------------------------- நேற்று (16) பாதுகாப்பின் நிமிர்த்தமாக கொண்டு செல்லப்பட்ட கூறப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இன்று (17) மதியம் அதே இடத்தில் நிறுவப்பட்டது. 15.11.2025 - இரவு குறித்த பகுதியில் கட்டுமானப் பொருட்கள் இரவோடு இரவாக இறக்கப்பட்டு பெயர்ப்பலகையும் நடப்பட்டது. 16.11.2025 - காலை புத்தர் சிலை வைப்பதற்கான வேலைகளும் கட்டுமானப் பணிகளும் இடம்பெற்றன. கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. கட்டுமானத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்தும் கட்டுமானம் இடம்பெற்றது. இரவு புத்தர் சிலை வைக்கப்பட்டது. நள்ளிரவு புத்தர் சிலை அகற்றப்பட்டது (பாதுகாப்பிற்காக கொண்டு செல்லப்பட்டது) பலரினால் பலருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. பலரினால் உரிமை கோரப்பட்டன. 17.11.2025 - பாராளுமன்றில் புத்தர் சிலை தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றன. மீண்டும் புத்தர் சிலை வைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் உறுதி வழங்கப்பட்டது. 12 மணியளவில் மாவட்ட செயலகத்தில் கூட்டம் இடம்பெற்றது. மதியம் மீண்டும் பொலிஸாரினால் குறித்த பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. ஜசிந்தன் அருண் அடங்காதமிழன்

நாட்டில் சில இனவாத, மதவாத பிசாசுகள் உள்ளன - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

3 months ago
17 Nov, 2025 | 12:51 PM (ஸ்டெப்னி கொட்பிறி) நாட்டில் சில இனவாத,மதவாத பிசாசுகள் உள்ளன. மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரை கோபுரத்தில் இன்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். திருகோணமலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட புத்தர் சிலை குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட பெளத்த வணக்கஸ்தலத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அங்கிருந்து அகற்றப்பட்டது. நாட்டில் சில இனவாத,மதவாத பிசாசுகள் உள்ளன. அவர்கள் தான் இதனை செய்கின்றனர். மக்கள் மத்தியில் இனவாத மற்றும் மதவாத பிரச்சினைகளை கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230553

குச்சவெளி புனிதபூமி - நூற்றுக்கணக்கான விகாரைகளை கட்டிய மகிந்த - பெளத்த அதிகாரத்தின் அதியுச்ச ஆக்கிரமிப்பு!

3 months ago
பெளத்த அதிகாரத்தின் அதியுச்ச ஆக்கிரமிப்பு! நூற்றுக்கணக்கான விகாரைகளை கட்டிய மகிந்த மகிந்த ராஜபக்ச நீண்டகாலமாக புத்தசாசன அமைச்சராக செயற்பட்ட நிலையில் குச்சவெளியை புனிதபூமியாக மாற்றி நூற்றுக்கணக்கான விகாரைகளை கட்டியதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ரஜீவன் தெரிவித்துள்ளார். புனித பூமி என்கின்ற ஆக்கிரப்பு உறுதிகளை ஆதாரமாக காட்டி பெளத்த அதிகாரத்தின் அதி உச்ச ஆக்கிரமிப்பின் வடிவத்தினை வெளிப்படுத்துவதாகவும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குச்சவெளி புனிதபூமி மகிந்த ராஜபக்ச நீண்டகாலமாக புத்தசாசன அமைச்சராக செயற்பட்ட நிலையில் குச்சவெளியை புனிதபூமியாக மாற்றி நூற்றுக்கணக்கான விகாரைகளை கட்டினார்கள்.விரும்பிய பிக்குகள் விரும்பிய இடத்தை கேட்டு வாங்கக்கூடிய நடைமுறை இருந்தது. இந்த ஊழல் விசாரனை செய்யப்படாதது.பெளத்தம் என்று வந்துவிட்டால் நீங்கள் அனைவரும் ஒரே ஊழல்வாதிகள் தான். மக்களின் தலைகளை தவிர மிகுதி அனைத்து இடங்களிலும் புத்தர் சிலைகளை வைத்துவிட்டு சோத்துக்கு பிச்சை எடுங்கள்.இது பெளத்த அதிகாரத்தின் அதியுச்ச ஆக்கிரமிப்பு என்றும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/mahinda-built-hundreds-of-temples-1763365143

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

3 months ago
புத்தர் சிலையால் வந்த வில்லங்கம்! திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றைய தினம் மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த_விஜயபால, புத்தர்சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான் திரும்ப கொண்டு சென்றதாகவும் இன்றைய தினம் அதே இடத்தில் வைக்கப்படும் என்ற கருத்தினை வெளியிட்டிருந்தார். இன்று காலை நிலவரம் திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் அனுமதி பெறாது, சட்டவிரோதமான முறையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றதுடன் அதனை பார்வையிட சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளுக்கும் பௌத்த துறவிகளுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்துள்ள நிலையில் இன்று காலையும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. இதேவேளை இன்றையதினம் பிற்பகல் 12 மணியளவில் திருகோணமலை மாவட்ட செயலத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசாண் அக்மீமனவிற்கு எதிரான பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். நேற்று மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் அமைச்சரின் உத்தரவிற்கு அமைய நேற்றிரவே அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தது. முன்னதாக கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டபோதும் நேற்று இரவு 8 மணி வரை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது. பொலிசார் சிலையை அகற்றமுற்பட்டபோது பௌத்த பிக்குகள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் பொலிசாரையும் தாக்கியிருந்தனர். குறிப்பாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இதன் பிரகாரமே பொலிஸாரினால் தற்காலிகமாக கட்டுமான பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் கட்டுமான பணிகளை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளைத் பொலிஸார் இன்று நீதிமன்றம் மூலம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை குறித்த பகுதியில் சட்ட அனுமதியற்ற சிற்றுண்டிச்சாலை தமது திணைக்களத்தால் உடைத்து அகற்றப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூல வளங்கள் திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால இதேவேளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவிற்கு அமைய கட்டுமான பணிகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் ஆனந்த விஜேயபால கீழ் கண்டவாறு கருத்து வெளியிட்டிருந்தார். இன்று அந்த புத்தர் சிலையை குறித்த விகாரையில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளோம். அத்தோடு அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால், அங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கடை ஒன்று தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பின்படியே செயற்பட வேண்டியுள்ளது. இந்த காணி தொடர்பிலான பிரச்சினையை நீதிமன்றத்திலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் நீதிமன்றத்திற்கு காரணங்களை சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கு பின்னர் திருகோணமலையில் எந்த பிரச்சினையும் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை தடுத்து நிறுத்தியதாக நேற்றிரவு தெரிவித்த அமைச்சர் இன்று சபையில் முரணாக கருத்து வெளியிட்டார். சபையில் சஜித் கேள்வி புனித பூமிவளாகத்திற்குள் புத்தர்சிலை வைப்பதை பொலிஸார் இன்று தீர்மானிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினால் இந்த சமூகத்தில் இனவாதம் தலைதூக்கும் நிலை ஏற்படும். நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில் செயற்படும் குழுவினர் இந்த சம்பவத்தை ஒருகருவியாக பயன்படுத்த நேரிடும் இதனால் நாட்டினுள் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படும். ஏதேனும் பிரச்சினை இருந்தால். விடயத்துக்கு பொறுப்பாக மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் அதனை விடுத்து இரவோடு இரவாக பொலிஸார் அங்கு அனுப்பி ஒரு புனித பூமிக்குள் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களில் பொலிஸார் எவ்வாறு தலையீடு செய்ய முடியும். யாருடை ஆணையின் பேரில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன? அரசாங்கத்திடம் நாம் ஒரு விடயத்தை தெளிவாகக் கூறிக்கொள்கிறோம். நாட்டில் சட்டங்கள் தொடர்பாக புரிதல் இல்லாவிடின் அதனை கற்றுக்கொள்ள வேண்டும். எனவே தற்போது சூடு பிடித்துள்ள இனவாத மதவாத தீப்பிழம்பினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நீதியை நிலைநாட்டுமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். புனித பூமிக்குள் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களில் பொலிஸார் எவ்வாறு தலையீடு செய்ய முடியும் – என்று சஜித் கேள்வி எழுப்பினார். சாணக்கியன் கடும் கண்டனம் திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட அவர்கள் பௌத்த இனத்தின் எந்தவொரு பௌத்த சின்னங்களும் அவர்களால் அழிக்கப்படவில்லை என்றும் அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டார். இன்றைய சபை அமர்வின்போது அவர் இது குறித்து கடும் தொனியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் – சுமந்திரன் அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது. எனவே, அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிசாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும் என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசும் முன்னைய அரசுகளைப் போலவே ஒரு இனவாத, சிங்கள பெளத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது. இக் கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும், திருகோணமலை உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா உட்பட, உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1453006

நயினாதீவு படகு சேவையில் நேர மாற்றம்

3 months ago
17 Nov, 2025 | 12:27 PM யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு - குறிகாட்டுவான் படகு சேவையின் இறுதி படகின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நயினாதீவில் இருந்து இறுதி படகு சேவை மாலை 05 மணிக்கும், குறிகாட்டுவானில் இருந்து இறுதி படகு சேவை மாலை 5.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது. அதேநேரம் வழமையான ஏனைய சேவை நேரங்களில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/230551

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும்

3 months ago
இந்தியாவுக்கு பாக்கு நீரிணை நிரந்தர எதிரி. சிங்கள பௌத்த அரசுக்கு பாக்கு நீரிணை நிரந்தர நண்பன், அது வரமும் சாபமும் கலந்த நண்பன் அல்லது அமிர்தமும் நஞ்சும் நிறைந்த நண்பன் அல்லது அமுதமும் நஞ்சும் கலந்த நண்பன். ஈழத் தமிழருக்கு பாக்கு நீரிணை அரை நண்பன். அமிர்தம் என்பது தேவர்கள் அருந்துவதாக கூறப்படும் ஒரு புராண உணவு. அமுதம் என்பது ஈயத்தை தங்கமாக மாற்றும் அழியாமையைக் தரும் ஒரு கற்பனைத் திரவம். இங்கு நஞ்சை கழைந்து அமிர்தத்தை கடைந்தெடுக்கும் அரசியல் வித்தை சிங்கள தலைவர்களுக்கு தெரியும். இந்திய அரசுக்கு பாக்கு நீரிணை எப்போதும் அதன் முழு எதிரியாய் உள்ளது. ஆதலாற்தான் தனுஷ்கோடி -- தலைமன்னார் தரைப்பாலத்தை அமைப்பதன் வாயிலாக அந்தப் பாக்கு நீரிணையை தனது நண்பனாக்க இந்தியா முயல்கிறது. சிங்களவிற்கு வெள்ளிடை மலையென ஒன்று தெரியும். பாக்கு நீரிணை அதாவது அந்தப் பாக்கு நீரிணைதான் இந்தியாவின் தொடர் நிலப்பரப்பிலிருந்து இலங்கையை பிரித்து ஒரு தீவாக்கியது. இதன் மூலம் பாக்கு நீரிணைதான் இலங்கையை ஒரு நாடாக்கியது. அதுதான் இலங்கையை ஒரு தனி அரசாக்கியது. இந்த வகையில் பாக்கு நீரிணை சிங்கள பௌத்தத்துக்கு ஒரு வரம். பௌத்தம் பிறந்த இந்தியாவிலேயே இந்து மதப் பிரிவுகளினால் பௌத்தம் அழிக்கப்பட்ட போதிலும் பௌத்தம் புகுந்த இலங்கைத் தீவில் அந்தப் பாக்கு நீரிணையால் அந்த பௌத்தமும் பௌத்த அரசும் பாதுகாக்கப்படுகிறது. ஒருவேளை கிமு 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இந்திய பேரரச ஆதிக்க விருத்தியின் ஒரு வடிவமாக பௌத்தம் இலங்கைக்கு சமாதானபூர்வமாக கொண்டுவரப்பட்ட போதிலும் அனுராதாபுரம் மன்னன் தீசன் மௌரியப் பேரரசர் அசோகத் சக்கரவர்த்தியின் கட்டளைப்படி மீள் முடி தரிக்கப்பட்டார் என்று மகாவம்சம் கூறுகிறது. மேலும் சக்கரவர்த்தி அசோகரின் பட்டப்பெயரான "தேவநம்பிய" என்பது தீசனுக்கான முடிக்குரிய பேராக்கப்பட்டு தீசன் தேவநம்பிய தீசன் என அரச பட்டப் பெயர் சூட்டப்பட்டார். இது இந்திய பேரரச ஆதிக்கப் படர்ச்சியின் தெளிவான அரசியல் வடிவம். ஆயினும் சிங்கள அரச பௌத்த சமூக உருவாக்கமானது இலங்கை அனுராதபுரத்தில் தோன்றி வளர்ந்து வந்த ஒரு அரச சமூக வளர்ச்சியின் கழுத்தில் ஒரு கூரிய இந்திய ஆதிக்க வாளாக பௌத்தம் இலங்கையை அணுகிய போது அனுராதபுரத்தில் முகிழ்ந்து எழுந்து வந்த உயர அரச குழாம் கழுத்துக்கு ஓங்கப்பட்ட அந்த வாளை தமது தலைக்கும் நெஞ்சுக்குமான கவசமாக மாற்றிக் கொண்டனர். இது ஒரு பொழுதில் நிகழ்ந்தது அல்ல. பௌத்த அரச பண்பாடு தொடர் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இவ்வாறு முகிழ்ந்தெழுந்து. இந்நிலையில் சிங்கள அரசு, பௌத்த மகா சங்க நிறுவனம், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்று திரட்டிய ஒரு வடிவமாய் சிங்கள பௌத்த அரச பண்பாட்டு வாழ்வு முதிர்ச்சி அடைந்தது. அரசை பௌத்த நிறுவனத்தினாலும் மக்களாலும் என ஒன்றுடன் ஒன்றாய் மூன்றையும் திரட்டி எடுத்தனர். சிங்கள பௌத்த இலங்கை அரசு என்பதன் தெளிவான திரட்சி பெற்ற வடிவம். மேற்படி மூன்றுக்கும் அச்சாணியாயும் அரணாயும் விளங்குவது பாக்கு நீரிணையாகும். இந்தியாவிலிருந்து இலங்கையை பிரித்து பாதுகாப்பு அளிக்கும் இந்த பாக்கு நீரிணை என்ற அரணை எப்படி ஒரு பாலத்தின் மூலம் இந்தியாவோடு இணைக்கத் தயாராகுவார்கள். ஆனால் அப்பக் கோப்பைத் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு பாக்கு நீரிணை என்ற மந்திர வித்தை இன்னும் தெரிந்து கொள்ளப்பட்டதாய் இல்லை. ஒருவேளை அவர்கள் அதைத் தெரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை, அப்படி ஒரு பொருள் இருப்பதாக திரும்பி பார்ப்பதும் இல்லை. வானத்து வெள்ளியை அண்ணாந்து பார்த்துக் கொண்டு, பாம்பு புதருக்குள் காலூன்றி நடக்கும் நிலையிற்தான் தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியல் போக்கு உண்டு. பாலம் கட்டுவது தொடர்பாக புத்திசாலித்தனமான சிங்கள தலைவனை கேட்டால் அதற்கு "ஆம்" என்று பதில் சொல்வான், ஆனால் பாலம் கட்டமாட்டான். ஆம் என்று சொல்வதற்கு காரணம் தூணேறிய சிங்கமாக ஒருபுறமும் காராம் பசுவாக மறுபுறமும் உள்ள இந்தியாவின் முன் அதன் கவனத்தை ஈர்ந்து ஆடிப் பாடிப் பால் கறப்பதற்கு. அதேவேளை பாலம் கட்டுவது பற்றி ஒரு அடிமட்ட சாதாரண சிக்கள மகனிடம் கேட்டால் கட்டவேண்டாம் என்று சொல்லுவான் கட்டவிடவும் விட மாட்டான். சிங்கள புத்திசாலியின் "ஆம்" என்ற தந்திரம் துணேறிய சிங்கத்தை திசை திருப்பவும் உதவும் காராம் பசுவில் பால் கறக்கவும் உதவும். வைஷ்ணவ கடவுளாகக் கொள்ளப்படும் இராமபிரானின் ஆணைப்படி இலங்கை மீது படையெடுப்பதற்காக தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ஹனுமானால் கட்டப்பட்டது இராமர் பாலம் என்கிறது இதிகாசம். "சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்" என்றார் இந்திய தேசிய கவிஞர் பாரதியார். எனவே மத நம்பிக்கையின் படியும் இலங்கைக்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று இந்தியா எதிர் பார்க்கிறது. இலங்கைக்கு ஒரு பாலம் இந்திய தேசிய சிந்தனையின்படியும் இலங்கைக்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று இந்திய தேசியம் எதிர்பார்க்கிறது. முழு இந்தியாவையும் கூடவே அத்துடன் இலங்கைத்தீவையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே "சிந்து நதியின் மிசை நிலவினிலே ..." என்று தொடங்கும் பாரதியாரின் கவிதை ஆகும். சிங்கள பௌத்த அரசையும் சிங்கள பௌத்த மதத்தையும் பொறுத்தவரை பாக்குநீரிணை சிங்கள பௌத்த அரசுக்கு ஓர் அரணாகும். பாக்கு நீரிணைதான் புவியியல் ரீதியாக இந்தியாவுடன் இருந்துவந்த நிலத் தொடரைத் துண்டித்து இலங்கையை ஒரு தீவாயும், ஒரு நாடாயும், ஒரு தனியரசாயும் ஆக்கியது. பௌத்தம் பிறந்த இந்தியாவில் அது இந்து மதப் பிரிவுகளால் இந்தியாவை விட்டு துரத்தப்பட்ட போது இலங்கை என்ற தீவிற்தான் அது தரித்துப் பாதுகாக்கப்பட கூடியதாக இருந்தது. அந்த வகையில் பாக்கு நீரிணை சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு வரமும் கொடையுமாகும். அதேவேளை பாக்கு நீரிணையின் ஒரு புறத்தில் ஈழத் தமிழரும் அதன் மறுபுறத்தில் தமிழகத் தமிழரும் வாழ்ந்து வரும் நிலையில் ஈழத் தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் இடையேயான உறவை சிங்கள பௌத்த அரசு கசப்புடன் பார்த்து வருவதுடன் அத்தகய கசப்பினதும் பயத்தினதும் பின்னணியில் சிங்கள பௌத்த அரசு ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்து வருகின்றது என்பதும் கண்கூடு. மேலும் ஈழத் தமிழரை இந்திய ஆதிக்க படர்ச்சியின் கருவிகளாகவும் இந்திய அரசின் ஆதிக்க படர்ச்சிக்கான ஓர் ஏதுவாகவும் ஈழத் தமிழரை சிங்கள அறிஞர்களும், வரலாற்றாளர்களும், தலைவர்களும், பௌத்த மத நிறுவனமும் ஆழமாக நம்பியும், கருதியும் வருகின்றனர். கூடவே கி.மு 3 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்தமும் இந்திய பேரரச ஆதிக்கப் படர்ச்சியின் ஒரு பகுதியாகவே நிகழ்ந்ததை சிங்கள பௌத்த தரப்பினர் உணரத் தவறவில்லை. இந்த வகையில் ஒட்டுமொத்த இந்திய ஆதிக்க பரவலை பெரிதும் தடுப்பதற்கு இயற்கையாக காணப்படும் பாக்கு நிரிணையை ஒரு வரமாகவே கருதும் சிங்கள பௌத்த தரப்பினர் செயற்கையாக 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு தரைவழிப் பாலம் அமைக்கப்படுவதை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் சிங்களவரின் கண்ணில் இராமர் கட்டிய பாலம் இலங்கை மீதான இந்தியாவின் படையெடுப்புகானது. இந்துமா கடலின் மையத்தில் இந்தியாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள இலங்கைதீவு வெளி வல்லரசுகளின் ஆதிக்கத்துக்கோ அன்றி செல்வாக்குக்கோ உள்ளாகும் போது இந்தியாவை பெரிதும் பாதிக்கும் என்ற நிலையில் ஒரு பாலம் அமைப்பதன் மூலம் வெளி வல்லரசுகளுக்கான வாய்ப்பை துண்டித்து விடலாம் என இந்திய அரசு நம்புகிறது. இத்தகைய பின்னணியில் மேற்படி பாலம் அமைப்பது பற்றிய அவாவும் கற்பனையும் இந்திய தரப்பில் எழுவது இயல்பு. அதன்படி இந்தியா அதற்கான முயற்சிகளை கற்பனை கலந்த ரசனையுடன் மேற்கொள்கிறது. 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்படி பாலம் கட்டுவதற்கான வாக்குறுதிகளை வானளாவ நட்சத்திரங்கள் என பறக்க விட்டார். நிச்சயம் அவருக்குத் தெரியும் தான் புளுகுப் பெட்டிகளை அவிழ்த்து விடுகிறேன் என்பது. அவருக்கு இருந்த அரசியல் நெருக்கடியில் இந்தியாவின் வாயில் அல்வாவை வைத்து காராம் பசுவிடமிருந்து கறக்க வேண்டியவற்றை கறப்பதற்காக அப்படி அவர் இந்திய மண்ணில் நின்று செயல்பட்டார். தொடர்ந்து இலங்கை இந்திய அமைச்சர்கள் மட்டத்திலான கலந்து உரையாடல்களும் கருத்து பரிமாற்றங்களும் திட்டமிடல் பணிகளும் இடம்பெற்றன. ஆசிய வங்கியில் இதற்காக இந்திய அரசு 22 ஆயிரம் கோடி ரூபாக்களைக் கடன் கோரியும் இருந்தது. அந்தளவுக்கு திட்டம் நடைமுறை சார்ந்து இந்திய தரப்பில் நம்பிக்கை உடன் மேற்கொள்ளப்பட்டது. சிங்கள தரப்பை பொறுத்தவரையில் அதிகாரத்தில் உள்ளஒரு புத்திசாலியிடம் கேட்டால் அவன் பாலம் அமைக்க "ஓம்" என்று சொல்வான், ஆனால் கட்டமாட்டான். ஓர் அப்பாவின் சிங்களமகனை கேட்டால் அவன் பாலம் கட்ட வேண்டாம் என்று சொல்லுவான். இங்கு புத்திசாலியோ அப்பாவியோ இருவரும் பாலம் கட்ட மாட்டார்கள் என்பது உறுதி. இதில் ரணில் முதலாவது தரத்தைச் சேர்ந்தவர். இதுதான் சிங்கள பௌத்த யதார்த்த நிலை. சிங்கள தரப்பை பொறுத்தவரையில் அரசனோ ஆண்டியோ, ஞானியோ பாமரனோ எவரும் பாலம் கட்டுவதில்லை என்பதில் உறுதியானவர்கள். இந்நிலையில் இப்போது பதவி இருக்கும் ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இந்தப் பாலத்தை கட்ட மாட்டாது. கட்டப்பட உள்ளதாக இருப்பது கற்பனை; கட்டப்படாமல் இருக்கப் போவதே யதார்த்தம். https://tamilwin.com/article/is-the-thalaimannar-dhanushkodi-flyover-feasible-1763327912

கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!

3 months ago
17 Nov, 2025 | 04:19 PM வடக்கு மாகாணத்தில் நீடித்து வரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் 'கழிவிலிருந்து மின்சார உற்பத்தி' (Waste-to-Energy) திட்டத்தை நிறுவுவதற்கான உதவியை இலங்கைக்கான கொரியக் குடியரசுத் தூதுவர் லீ மியோனிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்துள்ளார். இன்றைய தினம் திங்கட்கிழமை (17) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கொரியத் தூதுவர் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்துக்கான திட்டம் ஒன்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்காக நிதி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளதாகவும் கொரியத் தூதுவர் தெரிவித்தார். வடக்கு மாகாணத்திலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஆளுநர் வரவேற்றதோடு, மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் திண்மக் கழிவகற்றலில் எதிர்கொள்ளும் சவால்களை அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுச்சூழல் சமநிலை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட மங்குரோவ் நடுகை ஊக்குவிப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் யோசனையையும் தூதுவர் முன்வைத்தார். மேலும், கொரியாவின் சர்வதேச சுகாதார அறக்கட்டளை (Korea Foundation for International Healthcare) ஊடாக இலங்கையில் 11 சுகாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதனுள் வடக்கு மாகாணமும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரிக்காக கொய்கா (KOICA) திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கட்டட வசதிகளுக்காக ஆளுநர் நன்றியைத் தெரிவித்தார். தற்போதைய தேவைகளுக்கேற்ப தொழில்நுட்ப உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் கட்டட மேம்பாட்டு தேவைகளைவும் அவர் சுட்டிக்காட்டினார். கொய்கா திட்டம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையிலும் இவற்றை கவனத்தில் கொள்ளுவதாக தூதுவர் உறுதியளித்தார். கொரியா தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உலகளவில் முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டதோடு, வடக்கு மாகாண இளையோருக்கான தொழில்துறை வேலை வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகளை அறிமுகப்படுத்துவதற்கான முதலீடுகளை ஊக்குவிக்குமாறு அவர் கோரினார். மேலும், கொரிய மொழிப் பயிற்சி மையம் அல்லது மொழிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குவதற்கான உதவியையும் அவர் கேட்டுக்கொண்டார். கொரியாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பச்சை வீட்டு (Greenhouse) விவசாயம் மற்றும் நுண்ணறிவு பாசன முறைகள் (Smart Irrigation) பற்றியும் ஆளுநர் கூறி, வடக்கு மாகாணத்தில் ஒரு கிராமத்தைத் தெரிவு செய்து இத்திட்டங்களைப் பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்துவதற்கான ஒத்துழைப்பைத் தூதுவரிடம் கோரினார். வடக்கு மாகாண விவசாயிகள் கடின உழைப்பாளர்களாக இருந்தாலும், பாரம்பரிய முறைகளால் உற்பத்தி செலவு அதிகரித்து விளைச்சல் குறைந்து வருவதாக அவர் எடுத்துக்காட்டினார். இத்திட்டங்கள் அறிமுகமானால் குறைந்த செலவில் அதிக உற்பத்தி பெற முடியும் என ஆளுநர் வலியுறுத்தினார். இதனைத் தூதுவர் சாதகமாக ஆராய்வதாகத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/230585

முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர்

3 months ago
இந்தியா, பாகிஸ்தான் பார்வையற்ற பெண்கள் கைகுலுக்கி கிரிக்கெட் உணர்வை வெளிப்படுத்தினர் Published By: Digital Desk 3 17 Nov, 2025 | 02:04 PM (நெவில் அன்தனி) உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய - பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி கிரிக்கெட் ஆர்வத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தினர். அவர்கள் குறைபார்வை உடையவர்களாக இருந்தபோதிலும் விளையாட்டில் ஆழமான பற்றுடன்கூடிய பண்பான பார்வை இருப்பதை எடுத்துக் காட்டினர். பார்வையற்ற இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப் போட்டி நடுநிலையான கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலைய மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, நேபாளம், வரவேற்பு நாடான இலங்கை ஆறு நாடுகள் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுகின்றன. போட்டிகள் யாவும் இலங்கையில் நடைபெற்றுவருகின்றன. இந்திய - பாகிஸ்தான் போட்டி முடிவில் இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் அரசியல் பதட்டங்களை புறந்தள்ளி வைத்துவிட்டு கைலாகு கொடுத்து தங்களது அதிசிறந்த விளையாட்டுப் பண்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர். கடந்த மே மாதம் இரண்டு நாடுகளுக்கு இடையில் கொடிய இராணுவ மோதல் இடம்பெற்ற பின்னர் கிரிக்கெட் மைதானத்திற்கு வேளியேயும் களத்திலும் பதற்றம் அதிகமாக இருந்துவருகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆடவர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இறுதிப் போட்டி உட்பட மூன்று தடவைகள் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றையொன்று எதிர்த்தாடிய போதிலும் அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் இரண்டு அணியினரும் கைகுலுக்கல்களைத் தவிர்த்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியின்போதும் தோஹாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் போட்டியின்போதும் இரண்டு அணியினரும் வாழ்த்துக்களைப் பரிமாறாததுடன் கைகுலுக்கவும் இல்லை. இந் நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பார்வையற்ற மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டிக்கான நாணய சுழற்சி நடைபெற்றபோது கைகுலுக்கல் இடம் பெறாததால் இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் போட்டி முடிவில் பார்வை உடைய தங்களது வீர, வீராங்கனைகளின் நடத்தையைப் பிரதிபலிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டி முடிவில் பார்வையற்ற இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் அன்பை பரிமாறிக்கொண்டதுடன் கைகளை குலுக்கி பாராட்டுதல்களையும் பகிர்ந்து சிறந்த குணாம்சங்களை வெளிப்படுத்தினர். கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற பார்வையற்ற மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு இந்தியா 10.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பார்வையற்ற பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவி நிம்ரா ரஃபீக் இந்தியாவின் பெரிய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார், அதே நேரத்தில் பார்வையற்ற இந்திய மகளிர் அணித் தலைவி ரி.சி. தீபிகா, பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியதாகக் கூறினார். பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் அணிகள் களம் இறங்கும்போது ஒவ்வொரு அணியிலும் முழுமையான பார்வையற்ற நான்கு வீராங்கனைகள் இடம்பெறுவர். மற்றைய ஏழு வீராங்கனைகள் குறைபார்வை உடையவர்களாவர். https://www.virakesari.lk/article/230567

திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!

3 months ago
அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..! Published By: Digital Desk 3 17 Nov, 2025 | 04:55 PM திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் #ஆனந்த_விஜயபால அவர்கள் புத்தர்சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான் திரும்ப கொண்டு சென்றதாகவும் இன்றைய தினம் அதே இடத்தில் வைக்கப்படும் என்ற கருத்தினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்போது பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததோடு பொதுமக்கள் மற்றும் பௌத்தபிக்குகள் கலந்து கொண்டு இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/230599

முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை!

3 months ago
முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை! கடந்த ஆண்டு மாணவர் எழுச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மரண தண்டனை விதித்துள்ளது. ஹசீனா இல்லாத நிலையில் நடத்தப்பட்ட பல மாத கால விசாரணையைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆகஸ்ட் 5, அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்தபோது நாடுகடத்தப்பட்டு டெல்லியில் வசித்து வரும் 78 வயதான அவாமி லீக் கட்சித் தலைவர், வன்முறையைத் தூண்டுதல், போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவு பிறப்பித்தல் மற்றும் மாணவர்கள் தலைமையிலான கிளர்ச்சியின் போது அட்டூழியங்களைத் தடுக்கத் தவறுதல் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயம், ஒரு கொடிய அடக்குமுறையை ஏற்பாடு செய்வதில் ஹசீனாவின் பங்கை விவரித்தது. நிராயுதபாணியான மாணவர் போராட்டக்காரர்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தூண்டும் வகையில் உத்தரவுகளை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களை “அழிக்க” கொடிய ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நேரடி கட்டளைகளை அவர் பிறப்பித்ததாகவும் நீதிமன்றம் கண்டறிந்தது. கூடுதலாக, அரசுப் படைகளால் நடத்தப்பட்ட கொலைகள், சித்திரவதைகள், காணாமல் போதல்கள் மற்றும் தீ வைப்புகளுக்கும், அவரது நிர்வாகத்திற்குள் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கும் ஹசீனா பொறுப்பேற்றார். பெப்ரவரியில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின்படி, கலவரத்தின் போது 1,400 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஹசீனா இந்த புள்ளிவிவரங்களை மறுத்து, சுயாதீன விசாரணையைக் கோரியிருந்தார். https://athavannews.com/2025/1452968

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

3 months ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 45A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 45 A / பின் இணைப்பு - தீபவம்சம் / 'ஏன் அசோகனால் புத்த சமயம் பரப்பிய தமிழ் நாடுகளின் பெயர்கள், இலங்கை பண்டைய நூல்களில் குறிப்பிடப்படவில்லை?' அத்தியாயம் 8, மொகாலிபுத்தாவால் [Moggaliputta] புத்தரின் நம்பிக்கையைப் பரப்புவதற்காக அண்டை நாடுகளுக்கு தூதுகளை அனுப்புவது பற்றியது. அசோகரின் பேரரசின் பரப்பளவு பற்றிய விபரத்தை, கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பார்க்கவும். தமிழ் நாடுகளான சேர, சோழ, பாண்டிய நாடுகள் அசோகரின் பேரரசுக்கு தெற்கில் உள்ள அண்டை நாடுகளாகும், இதை அசோகர் தனது பதின்மூன்றாவது அரசாணையில் தெளிவுபடுத்தியுள்ளார். அசோகர் அண்டை நாடுகளுக்கு தரும தூதுகளை [பௌத்தத்தில் , தர்மம் (பாலி: தம்மம்) என்பது புத்தரின் போதனைகளைக் குறிக்கிறது. / Dhamma missions] அனுப்பியதாக பதின்மூன்றாவது சாசனத்தில் கூறுகிறார். அசோகரின் பேரரசுக்கு, இலங்கை அண்டை நாடாக இருக்கவில்லை. கிரேக்கம், கந்தாரா (இன்றைய ஆப்கானிஸ்தான்) மற்றும் தமிழ் நாடுகளான சோழ, பாண்டிய, கேரளம் மற்றும் சத்யபுத்ரா [Greek, Ghandara (present day Afghanistan), and various other places, including Tamil countries Chola, Pandya, Kerala, Satyaputra and Tamraparni] உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தூதுவர்கள் அனுப்பப்பட்டனர் என்று குறிக்கப்பட்டுள்ளது. இதில, சத்யபுத்திரர்கள் யார் என்ற கேள்விக்கு விடையாக ஒரு பிராமி கல்வெட்டு கிடைத்தது. தென் இந்தியயாவின், திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் ஊரில் பொது வருடங்களுக்கு முன்பான முதலாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ் பிராமியில் இருந்த இந்தக் கல்வெட்டில், “ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி” என்று காணப்பட்டது, அதாவது, அதியன் நெடுமான் அஞ்சி கொடுத்த பாழி (இருப்பிடம்) என்பதைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவன் சத்யபுத்திரர் பரம்பரையில் வந்தவன் என்று பதிவுசெய்து, சத்யபுத்திரர் யார் என்று கேள்விக்கு விடையளித்தது இந்தக் கல்வெட்டு. அதாவது, தகடூரை ஆண்ட அதியமான்களே சத்யபுத்திரர் என்று சொல்லுகிறது. எனினும், இந்த தீபவம்ச அத்தியாயத்தில் இந்த தமிழ் நாடுகள் குறிப்பிடப்படவில்லை. இந்த புறக்கணிப்பில் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரல் கட்டாயம் இருக்க வேண்டும் அல்லது இந்த தமிழ் நாடுகள் ஏற்கனவே பௌத்த மதத்தை பின்பற்றி வருகின்றன என்பதை ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும். பௌத்தம் கிமு 300 முதல் 250 வரையான காலப்பகுதியில் தமிழ் நாடுகளுக்கு வந்தது என வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல, இலங்கையில் பௌத்தம், இந்தியாவின் பேரரசர் அசோகனிடமிருந்து நேரடியாக வரவில்லை என்று அறிஞர்கள் வாதிடுகின்றனர். மகிந்தா (அசோகரின் மகன்) மற்றும் சங்கமித்தா (அசோகரின் மகள்) ஆகியோர் பௌத்தத்தை தீவுக்கு கொண்டு வந்ததாக இலங்கை நூல்கள் கூறினாலும், இவர்கள் உண்மையான வரலாற்று நபர்களாக இருக்க முடியாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். வி. ஏ. ஸ்மித் & ஓல்டன்பெர்க்கின் பார்வை [V. A. Smith & Oldenberg's View]: வி. ஏ. ஸ்மித் என்ற வரலாற்றாசிரியர், பௌத்தத்தின் வருகையைப் பற்றிய இலங்கை வரலாற்றுக் கணக்குகள் கட்டுக்கதைகள் என்று நம்பிய மற்றொரு அறிஞரான ஓல்டன்பெர்க்கைக் குறிப்பிடுகிறார். அசோகரின் கல்வெட்டுகளில் (கல்லில் செதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ எழுத்துக்களில்) இலங்கை, மகிந்தா அல்லது சங்கமித்தாவைப் பற்றி சிறிதளவாவதும் குறிப்பிடவில்லை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் இலங்கை பாரம்பரியக் கதைகள் கூறுவதை விட, மெதுவான, குறைவான வேகத்தில் தான் பௌத்தம் இலங்கையில் பரவியிருக்கலாம் என்று இது அறிவுறுத்துகிறது என்றாலும் மேற்கூறிய பார்வையில் சிறு திருத்தம் பின்னர், வரலாற்று ரீதியாக காணப்படுகிறது. V. A. ஸ்மித் தனது புத்தகத்தின் பிற்கால பதிப்பில் (1924), இலங்கையில் பௌத்தத்தை பரப்ப அசோகர் உதவியதாக அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் அது அவரது ஆட்சியின் பிற்பகுதியில் நடந்தது என்று கூறுகிறார். சந்தேகத்திற்கான காரணங்கள்: அசோகரின் பாறைக் கல்வெட்டுகள் பௌத்த தூதுவர்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புவதைப் பற்றி பேசுகின்றன, ஆனால் அவை இலங்கை, மகிந்தா அல்லது சங்கமித்தாவைக் குறிப்பிடவில்லை. தம்பபண்ணி (Thambapanni) அல்லது தாமிரபரணி (Tamraparni) என்ற பெயர் அசோகரின் எழுத்துக்களில் காணப்படுகிறது, ஆனால் சில அறிஞர்கள் இது தென்னிந்தியாவில் உள்ள ஒரு நதியைக் குறிக்கிறது என்று நினைக்கிறார்கள், இலங்கை அல்ல. காரணம் அசோகனின் பேரரசுக்கு இலங்கை அயல்நாடு அல்ல. இலங்கை பாரம்பரிய கதை, மகிந்தா அன்னம் போல காற்றில் பறந்து இலங்கை மன்னனையும் 40,000 மக்களையும் உடனடியாக மதம் மாற்றினான் என்கிறது. அறிஞர்கள் இதை நம்புவதற்கு கடினமாகக் கருதுகின்றனர் மற்றும் பௌத்தம் படிப்படியாக பரவியிருக்கலாம் என்று கருதுகின்றனர். அடிப்படையில், முக்கிய வாதம் என்னவென்றால், பௌத்தம் இலங்கையை ஆரம்பத்தில் சென்றடைந்தாலும், அது இலங்கை வரலாற்று நூல்கள் விவரிக்கும் படி கட்டாயம் நடந்திருக்காது. References: [1 Ind. Ant. 1918, pp. 48-9 ; Asoka (R. I. Series, 1919) pp. 47-8. 2 Intro. to the Vinayapitakam, by Oldenberg, vol. I, pp. lii-lv. 3 Imp. Gaz. of India (1908), sub. voc. Tambraparni, pp. 215-16 ; Hultzsch, JRAS.(1910), p. 1310, n.4. Hultzsch, Corpus Ins. Ind. (vol. I), p. xxxix ;p.3, n. 10. Although he revises his opinion and takes Tamraparni to mean Ceylon, he still maintains that it was the name of a river in S. India. Apparently he keeps the problem open. 4 V. Smith, Asoka, p. 50.] இந்த அத்தியாயத்தின்படி, மஜ்ஜந்திகா தேரர் [Majjhantika (also known as Madhyantika was the Indian Buddhist monk of Varanasi who was deputed by Ashoka to spread Buddhism in the regions of Kashmir and Gandhara.] காந்தார தேசத்திற்குச் சென்று கோபமடைந்த நாகர்களை சமாதானப்படுத்தினார். இது இலங்கை முதல் காந்தாரம் வரை நாகர்கள் இருந்ததற்கான அறிகுறியாகும். மகிந்த தேரரும் இலங்கைக்கு வந்தது, இதே புத்த சமய நம்பிக்கையை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்வதற்காகவே. மகிந்த தேரர் இலங்கைக்கு விசுவாசத்தை நிலைநாட்ட வந்தபோது அவருக்கு வயது சுமார் 32. இந்த அத்தியாயம் மகிந்த தேரரின் 8 - 13 வருகையைத் தவிர, இலங்கையில் நடந்த மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல. Part: 45 A / Appendix – Dipavamsa / 'Why Tamil countries are not mentioned?' Chapter 8 is about sending missions to the neighbouring countries to propagate the Buddha’s Faith by Moggaliputta. Lanka was not a neighbouring country to the Asoka’s empire. See the map of extent of the Asoka’s empire is given below. Tamil countries, Chera, Chola and Pandya are the neighbouring countries in the South to the Asoka’s empire, and Asoka made this clear in his Thirteenth Edict. Asoka says in the Thirteenth Edict that he sent Dhamma missions to neighbouring countries. Lanka was not a neighbouring country to Asoka’s empire. Missions were sent to Greek, Ghandara (present day Afghanistan), and various other places, including Tamil countries Cola, Pandya, Kerala and Satyaputra. However, these Tamil countries are not mentioned in this chapter. There must be a hidden agenda in this omission or that the author must have been aware that these Tamil countries were already following the Buddhist faith. The Buddhism came to Tamil countries about 300 to 250 B. C. As per this chapter, Thera Majjhantika went to Gandhara and appeased the enraged Nagas. This is an indication that Nagas existed from Lanka to Gandhara. Mahinda Thera came to Ceylon for this purpose of introducing and propagating the Faith. Mahinda Thera was about 32 years of age when he came to Lanka to establish the Faith. This chapter is also not about human historical events that took place in Lanka, except the alleged arrival of Mahinda Thera, 8 - 13. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 45 B தொடரும் / Will follow துளி/DROP: 1903 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 45A https://www.facebook.com/groups/978753388866632/posts/32412676671714227/?

தமிழரின் தனித்துவத்தைக் காப்பதற்கு மாகாணசபை அதிகாரங்கள் அவசியம்; நீதியரசர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு!

3 months ago
அய்யா முதலமைச்சராக ரெடியாகிறார்...அய்யாவை கனடாவில் சந்தித்து எமாந்த சோணகிரியில் நானும் ஒருவன்..அய்யா குடித்த எக்ஸ்ராலாச் ..ரிம்கோட்டன் கோப்பியைகண்டு நானே அசந்திட்டன் ...அவ்வளவுடன் சரி...

திருகோணமலை கடற்கரையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது

3 months ago
அனுரவுக்கு சேர்ட்டிபிக்கட் கொடுத்த நம்ம சிவப்பு செம்மல்கள் எங்கை போயிட்டினம் ...கனடாவில் கதறல் அதிகம் ...முகப்புத்தகம் பார்க்க முடியவில்லை..

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months ago
வணக்கம் வன்னியர் .....உங்களைக் கண்டது சந்தோசம் ........ சென்னை மேம்பாலம் எல்லாம் எந்த மட்டில் இருக்கின்றது ....... கொஞ்சம் தகவல்களைப் போடுறது ..........! 🙂 "அதிகமாய் குரைக்கிற நாயும் அதிகமாய் பேசுற வாயும் அடி வாங்காமல் போகாது (நான்தான் )" ....... நீங்கள் இருவரும் எனக்கு இருட்டடி வாங்கித் தராமல் ஓய மாட்டீங்கள் என்று நினைக்கிறேன் . ......... அதுவும் அவர் ஒரு மட்டு, குட்டு குட்டென்று குட்டப்போறார் ..........! 😂

தமிழரின் தனித்துவத்தைக் காப்பதற்கு மாகாணசபை அதிகாரங்கள் அவசியம்; நீதியரசர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு!

3 months ago
தமிழரின் தனித்துவத்தைக் காப்பதற்கு மாகாணசபை அதிகாரங்கள் அவசியம்; நீதியரசர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு! மாகாணசபைத் தேர்தல் மட்டுமே தமிழர்களுக்கு ஒரு சில பெற்றுக்கொடுக்கக்கூடியது. அது இல்லாவிட்டால் சிங்களவரிடம் இருந்து கிடைக்கப்போவது மாகாண சபை முறைமையிலும் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு முறைமையே. இதனை வலியுறுத்த தமிழ்க்கட்சிகள் ஒற்றுமைப்படாது. இந்தியா அதுபற்றிப் பேசவில்லை எனக் கூறுவது மடமையே. இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தல்கள் வேண்டுமா? இல்லையா? என்று முதலில் முடிவெடுக்கவேண்டியவர்கள் தமிழ்த் தேசியக்கட்சிகளே. அவர்களுள் ஒற்றுமை இல்லாத போது இந்தியா அது பற்றிப் பேசாதிருப்பதை நாம் பிழையென்று கூறமுடியாது. முதலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து தற்போதைக்கு மாகாணசபைத் தேர்தல் உடனே நடத்தப்படவேண்டும் என்ற முடிவை எடுக்கவேண்டும். இன ரீதியாக இந்த நாட்டை ஆள நினைக்கும் ஒரு மனித அலகு தமது அதிகாரத்தைக் குறைக்கும் அளவுக்கு நடந்துகொள்வார்களா? என்று நாம் சிந்திக்கவேண்டும். மாகாணசபைகள் கலைக்கப்பட்டு ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு ஜனநாயக நாடு எனப்படும் இந்த நாட்டில், மாகாண சபைத் தேர்தல் முறைமை எவ்வாறு அமையவேண்டும் என்ற கேள்வியை எழுப்பி, தேர்தல்கள் ஏழு வருடங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெற்று எமது தனித்துவம் வலியுறுத்தப்படாவிட்டால் நாம் சிங்கள மேலாதிக்கத்தின்கீழ் தொடர்ந்திருக்க நேரிடும். காலக் கிரமத்தில் எமது தனித்துவம் அழிந்துபோய்விடும். சிங்களக் கட்சியொன்று வடக்கு-கிழக்கில் தேர்தல்களில் வெல்ல முடியாது என்று இறுமாப்புடன் சொன்ன எங்களுக்கு அண்மையில் நடந்த கதி என்ன? ஆகவே இருப்பதைக் கைவசம் வைத்து எமது உரிமைகளை விரிவுபடுத்திச் செல்வதே எமக்கிருக்கும் ஒரேயொரு வாய்ப்பு. எனவே இப்போதுள்ள நிலையில் மாகாணசபைத் தேர்தல் மட்டுமே தமிழர்களுக்கு ஒரு சில உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பது. அது இல்லாவிட்டால் சிங்களவரிடம் இருந்து கிடைக்கப்போவது மாகாணசபை முறைமையிலும் குறைந்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு முறைமையேயாகும் - என்றார். https://newuthayan.com/article/தமிழரின்_தனித்துவத்தைக்_காப்பதற்கு_மாகாணசபை_அதிகாரங்கள்_அவசியம்;
Checked
Tue, 02/17/2026 - 12:49
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed