3 months 2 weeks ago
‘`இந்தத் தலைமுறையைவிட, எங்கள் தலைமுறை, குறைவாகவே மூடநம்பிக்கை கொண்டிருந்தது. நகரத்தில் வாழும் மக்கள், டெக்னாலஜி அணுகல் உள்ள மக்கள் அனைவரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். ஜோதிடத்திலும், சாமியார்கள் மீதும் இன்றைய தலைமுறையின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மீடியாவை எடுத்துக் கொள்ளுங்கள். சூரிய கிரகணம் என்றால், அவர்கள் வானியல் அறிஞர், ஜோதிடர் என இருவரிடமும் பேசுகிறார்கள். ஆனால், ஜோதிடருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!’’ - சமீபத்தில் மறைந்த, இந்தியாவின் தலைசிறைந்த வானியற்பியல் அறிஞர் ஜயந்த் விஷ்ணு நர்லிகரின் (Jayant Vishnu Narlikar) வார்த்தைகள் இவை. அந்த வருத்தம் அவருக்கு இருந்ததால்தான், தனது அறிவியல் ஆராய்ச்சிகள் தாண்டியும், மக்களின் மூட நம்பிக்கைகளைக் களையெடுத்து பகுத்தறிவை வளர்க்கவும், அடிப்படை அறிவியல் ஊட்டவும் அவர் அதிக ஆர்வம் காட்டினார். அறிவியலை தனது கட்டுரைகள், புத்தகங்கள், உரைகள், மீடியாவின் மூலம் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணி, அப்படியே வாழ்ந்தார். ‘ஜோதிடம், திருமண ஜாதகப் பொருத்தம் எல்லாம் பொய்’ என ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டு அடித்து நொறுக்கிய இவருடைய பகுத்தறிவுவாதி முகம், வலிமை வாய்ந்தது. அதனால்தான், இந்தியாவில் வானியற்பியல் மற்றும் அண்டவியல் (Cosmology) உலகில் தனக்கென ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்ற அவர், சமீபத்தில் (மே 20) தனது 87 வயதில் மறைந்தபோது, அறிஞர்கள் வட்டம் தாண்டி, பகுத்தறிவுவாதிகளும் பொதுமக்களும் பகிர்ந்துவருகின்றனர் அவருக்கான புகழஞ்சலியை. மகாராஷ்டிரா டு கேம்பிரிட்ஜ் பட்டம்! 1938-ம் வருடம் மகாராஷ்டிராவில் பிறந்த நர்லிகர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். புகழ்பெற்ற வானியலாளர் ஃபிரெட் ஹோய்ல் (Fred Hoyle)-ஐ தன் மென்டாராக ஏற்று, அவருடன் இணைந்து பணியாற்றினார். இவர்கள் உருவாக்கிய ஸ்டடி ஸ்டேட் கோட்பாடு’ (Steady State Theory), அவர்களை உலகப் புகழ் பெற வைத்தது. அதாவது, பிரபஞ்சம் பிறந்தது, வளர்ந்தது என்றில்லாமல், எப்போதும் அது ஒரே நிலைமை மற்றும் அடர்த்தியில் இருக்கிறது’ என்றனர். ஜயந்த் நர்லிகர் தலைமைப் பண்பும், தன்னிச்சை ஆய்வுகளும்! இந்தியா திரும்பிய நர்லிகர், டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தில் இணைந்து, கோட்பாட்டு வானியற்பியல் குழுவை தனது தலைமையில் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தினார். தொடர்ந்து, வானியல் மற்றும் வானியற்பியலுக்கான இன்டர் - யுனிவர்சிட்டி மையத்தின் (IUCAA - The Inter-University Centre for Astronomy and Astrophysics) நிறுவன இயக்குநரானார். நர்லிகர், தன்னிச்சையான பல ஆய்வுகளை மேற்கொண்டார். சார்பியல் கோட்பாடுகள், கருந்துளைகள், காந்தக் களங்கள், கோள்களின் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானக் கொள்கைகளில் இவர் மேற்கொண்ட ஆய்வுகள், `நேச்சர்' (Nature) உள்பட பல சிறப்பான அறிவியல் ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன. மூடநம்பிக்கைக்கு எதிராக... ஆய்வு! பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற நர்லிகர், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்பு உணர்வை சமூகம் அடைய வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதற்காக பேசியது, எழுதியதோடு நிறுத்தவில்லை அவர். ஜோதிட மூட நம்பிக்கையைத் தகர்க்க, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பகுத்தறிவு செயற்பாட்டாளரான மருத்துவர் நரேந்திர தபோல்கருடன் இணைந்து, முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு, முடிவுகள் வெளியிட்டு, ஜோதிடப் பொய்களை வெளிப்படுத்தினார். ஜாதகம் பொருந்தியவர்கள் எல்லாம் சூப்பராக வாழ்கிறார்களா?! நம் இந்திய திருமணங்களில், ஜாதகப் பொருத்தம் பெரும் பங்கு வகிக்கும் ஒன்று. உண்மையில், ஜாதகம் பார்த்து திருமணம் செய்துவைக்கப்படும் தம்பதிகள் அனைவரும் அந்தப் பொருத்தங்கள் உறுதிப்படுத்தும் சிறப்பான வாழ்வை வாழ்கிறார்களா என்று, நர்லிகரும் நரேந்திர தபோல்கரும் சேர்ந்து பல தம்பதிகளிடம் ஆய்வு நடத்தினர். முடிவில், ஜாதகப் பொருத்தம் உள்ள தம்பதிகள், அந்தப் பொருத்தம் இல்லாத தம்பதிகள் என இரு தரப்புமே ஒரே சதவிகிதத்தில்தான் சேர்ந்து வாழ்கின்றனர் என்று தரவுகளுடன் வெளியிட்டனர். அதாவது, கணவனும் மனைவியும் இணைந்து வாழ ஜாதகப் பொருத்தம் அவசியமில்லை எனத் தரவுகளுடன் நிரூபித்தனர். அதேபோல, திருமண முறிவு ஏற்பட்ட தம்பதிகளின் ஜாதகத்தைப் பரிசோதித்து, ஜாதகப் பொருத்தம் உள்ளவர்களும் இல்லாதவர்களும் சற்றேறக்குறைய அதே சதவிகிதத்தில்தான் திருமண முறிவு செய்து கொள்கின்றனர் என்றும் ஆதாரபூர்வமாக இவர்கள் நிறுவினார்கள். குணம், திறன், முன்னேற்றம்... ஜாதகத்தின்படி அமையாது! அடுத்தாக இந்த ஜோடி, ஒருவரின் ஜாதகத்தின் அடிப்படையில் அவரது குணம், திறன், முன்னேற்றம் அமையும்’ என்ற மூட நம்பிக்கைகளையும் உடைத்தது. இந்த ராசி, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்றாகப் படிப்பார்கள்... அதுவே இந்த ராசி, நட்சத்திரம் உடையவர்களுக்குப் படிப்பே வராது’ என்று ஜோதிடர்கள் சொல்வது உண்டு. அதை நம்பி, சிலர் அதீத தன்னம்பிக்கையில், ‘எல்லாம் நம்ம ஜாதகம் பார்த்துக்கும்’ என உரிய உழைப்பைக் கொடுக்காமல் இருப்பார்கள். சிலரோ, ‘என்ன பண்ணுறது, கட்டம் சரியில்ல...’ என்று தங்கள் முன்னேற்ற மின்மைக்கு ஜாதகத்தை சாக்குச் சொல்லி உழைப்பு, முனைப்பில் இருந்து விலகுவார்கள். `ஜாதகம் ஒருவரின் அறிவை தீர்மானிப்ப தில்லை’ என்பதை புள்ளி விவரங்களுடன் வெளிப்படுத்த, நர்லிகரும் நரேந்திர தபோல்கரும் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். அறிவார்ந்த மாணவர்கள் மற்றும் படிப்பில் சுணக்கமாக உள்ள மாணவர்கள் என 200 மாணவர்களின் ஜாதகங்கள் தொகுக்கப்பட்டு, 53 ஜோதிடர்களிடம் அவை கொடுக்கப் பட்டன. அவர்கள் ’சூப்பராக படிப்பார்கள்’, ‘சுமாராகப் படிப்பார்கள்’ என்று கணித்த ஜாதகங்கள், முரணாக இருந்தன. இவ்வாறு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தாங்கள் ஏற்படுத்தி வந்த பகுத்தறிவு விழிப்புணர்வும், பிரசாரமும் அவர்களுக்குப் பல எதிர்ப்புகளையும், அச்சுறுத்தல்களையும் பெற்றுத்தந்தன. 2013-ம் ஆண்டு அடிப்படைவாத கொடூர்களால் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். வாஸ்து நன்மை, தீமை... எந்த லாஜிக்கும் இல்லை! நர்லிகர், வாஸ்து சாஸ்திர மூட நம்பிக்கைகளுக்கும் எதிராகப் பேசினார். ‘`வாஸ்து என்பது வீட்டின் உள்கட்டமைப்பை அதன் சூழலுடன் இணைக்கும் விதிகளால் ஆனது. ஆனால், அதனால் வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படும், தீமைகள் விளையும் என்று சொல்லப்படுவதில் எந்த லாஜிக்கும் இல்லை’’ என்று விளக்கினார். வழி காட்டும் ஒளி! நர்லிகர், மாணவர்களுடன் தான் உரையாடும் சந்தர்ப்பங்களை மிகுந்த விருப்பத்துடன் உருவாக்கிக்கொண்டார். அவர்களின் கடிதங்கள், இ-மெயில்களுக்கு பதில் அளிப்பது, பள்ளி கண்காட்சிகளில் கலந்துகொண்டு அவர்களுடன் உரை யாடுவது, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் உரை நிகழ்த்துவது என... எதிர்கால இந்தியாவின் மீது அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அறிவியல் ஆசிரியர்கள், மாணவர்கள், பகுத்தறிவு வாதிகள் எனப் பலருக்கும் அவரது ஆராய்ச்சிகளும் கருத்துகளும்... வழி காட்டும் ஒளி! Vikatan Plus - 08 June 2025 - ``ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர் | discussion about astrology