3 months 1 week ago
06 JUN, 2025 | 05:00 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நுகர்வோரை பாதிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உப்பை விலை அதிகரித்து விற்பனை செய்ய முற்பட்டால் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹேஷா விதானகே எம்.பியினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் உப்புக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை போக்குவதற்காக உப்பு இறக்குமதிக்கு சந்தையை திறந்துவிட்டோம். அதற்கு இருந்த வரையறையை நீக்கி இருந்தோம். என்றாலும் இறக்குமதி செய்வதற்கு உணவு கட்டுப்பாட்டு பிரிவில் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். உப்பு, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதாக இருந்தால், அதுதான் நாட்டின் சட்டம். அதன் பிரகாரம், இதுவரை இரண்டு இலட்சத்து 68 ஆயிரம் மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அந்தளவு உப்பு இறக்குமதி செய்யும் என நாங்கள் நினைக்கவில்லை. நேற்று முன்தினம் வரை 15ஆயிரத்தி 800 மெட்ரிக்தொன் வரை நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த தொகையில் அயடின் மற்றும் அயடின் அல்லாத இரண்டு வகை உப்பும் வந்திருக்கிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு ஒரு கிலோவின் அதிகபட்ச விலை 84, 85 ரூபாவுக்கும் குறைந்தபட்ச விலை 65 ரூபாவுக்கும் விற்பனை செய்யவே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். என்றாலும் சந்தையில் இந்த உப்பை 120 ரூபாவில் இருந்து 280 ரூபா வரை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். என்றாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள உப்புக்கான தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அதன் மூலம் விலை அதிகரித்து விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம் என இறக்குமதியாளர்களுக்கு தெரிவித்திருக்கிறோம். எனவே இந்த நடவடிக்கையில் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால், அதனை தவிர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/216801
3 months 1 week ago
06 JUN, 2025 | 05:00 PM

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நுகர்வோரை பாதிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உப்பை விலை அதிகரித்து விற்பனை செய்ய முற்பட்டால் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹேஷா விதானகே எம்.பியினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் உப்புக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை போக்குவதற்காக உப்பு இறக்குமதிக்கு சந்தையை திறந்துவிட்டோம். அதற்கு இருந்த வரையறையை நீக்கி இருந்தோம். என்றாலும் இறக்குமதி செய்வதற்கு உணவு கட்டுப்பாட்டு பிரிவில் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். உப்பு, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதாக இருந்தால், அதுதான் நாட்டின் சட்டம்.
அதன் பிரகாரம், இதுவரை இரண்டு இலட்சத்து 68 ஆயிரம் மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அந்தளவு உப்பு இறக்குமதி செய்யும் என நாங்கள் நினைக்கவில்லை. நேற்று முன்தினம் வரை 15ஆயிரத்தி 800 மெட்ரிக்தொன் வரை நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த தொகையில் அயடின் மற்றும் அயடின் அல்லாத இரண்டு வகை உப்பும் வந்திருக்கிறது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு ஒரு கிலோவின் அதிகபட்ச விலை 84, 85 ரூபாவுக்கும் குறைந்தபட்ச விலை 65 ரூபாவுக்கும் விற்பனை செய்யவே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். என்றாலும் சந்தையில் இந்த உப்பை 120 ரூபாவில் இருந்து 280 ரூபா வரை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர்.
என்றாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள உப்புக்கான தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அதன் மூலம் விலை அதிகரித்து விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம் என இறக்குமதியாளர்களுக்கு தெரிவித்திருக்கிறோம். எனவே இந்த நடவடிக்கையில் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால், அதனை தவிர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
https://www.virakesari.lk/article/216801
3 months 1 week ago
Published By: RAJEEBAN
06 JUN, 2025 | 11:19 AM

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிபதி உட்பட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.
நால்வரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் நடவடிக்கைகளை இலக்குவைத்து செயற்பட்ட நீதிபதியொருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான இந்த நால்வரும் அமெரிக்காவையும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலையும் இலக்குவைத்து ஐசிசியின் சட்டவிரோத ஆதாரமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அரசியல்மயமாக்கப்பட்டுள்து என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நீதிமன்றத்தின் முன் விசாரணை மற்றும் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் ரெய்ன் அடிலெய்ட் சோஃபி அலபினி கன்சோ மற்றும் பெட்டி ஹோஹ்லர் ஆகியோர் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை குறிவைத்து
பிடியாணைகளை பிறப்பிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச நீதித்துறை நிறுவனத்தின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தெளிவான முயற்சி என தெரிவித்துள்ள ஐசிசி பொறுப்புக்கூறலிற்காக பாடுபடுபவர்களை இலக்குவைப்பதுமோதலில் சிக்குண்டுள்ள மக்களிற்கு எந்த வகையிலும் உதவாது என தெரிவித்துள்ளது.
ஐ.சி.சியின் மேல்முறையீட்டுப் பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் உகாண்டாவைச் சேர்ந்த சோலோமி பலுங்கி போசா மற்றும் பெருவைச் சேர்ந்த லஸ் டெல் கார்மென் இபனெஸ் கார்ரான்சா ஆகியோர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் அமெரிக்க படையினர் இழைத்ததாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றங்கள் குறித்து ஐ.சி.சி விசாரணையைத் தொடங்க வழி வகுத்த குழுவில் இடம்பெற்றனர்
நவம்பர் 2024 இல் ஐ.சி.சி தலைமை வழக்கறிஞர் கரீம் கான் நெதன்யாகு மற்றும் கேலன்ட் மற்றும் மூன்று மூத்த ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டுகளை பிறப்பித்தார். இந்த நடவடிக்கை பைடன் நிர்வாகத்திடமிருந்து எதிர்ப்புகளைப் பெற்றது முன்னாள் ஜனாதிபதி இதை "மூர்க்கத்தனமானது" என்று அழைத்தார்.
ஐ.நா தலைமையிலான பாலியல் துஷ்பிரயோக விசாரணைக்கு மத்தியில் கான் கடந்த மாதம் தனது பதவியில் இருந்து விலகினார்
ஜனாதிபதி டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் அமெரிக்க அரசாங்கம் ஐ.சி.சி வழக்கறிஞர் ஃபடோ பென்சவுடா மற்றும் மூத்த அதிகாரி ஃபாகிசோ மோச்சோச்சோகோ ஆகியோர் மீது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரித்ததற்காக தடைகளை விதித்தது - பின்னர் பைடன் நிர்வாகத்தால் நீக்கப்பட்டது.
அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்ற ஐ.சி.சி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்தார்.
இந்த நடவடிக்கையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வரவேற்க வாய்ப்புள்ளது - மார்ச் 2023 இல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
ஐ.சி.சி-யை நிறுவிய ரோம் சட்டத்தில் அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ கைச்சாத்திடவில்லை..
https://www.virakesari.lk/article/216747
3 months 1 week ago
டிரம்ப் vs மஸ்க்: அதிகாரமும் செல்வமும் சேர்ந்த சக்தி வாய்ந்த கூட்டணியில் பிரிவு ஏன்? அடுத்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அந்தோணி ஸுர்ச்சர் பதவி, பிபிசி செய்தியாளர் 6 ஜூன் 2025, 08:37 GMT மிகப்பெரிய பணக்காரருக்கும், மிகவும் சக்திவாய்ந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இடையே மோதல்கள் ஏற்படும் போது என்ன நடக்கும்? அத்தகைய ஒரு காட்சியைத் தான் நாம் காண்கிறோம். டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்க் இடையேயான ஒரு கருத்து வேறுபாடு இப்போது வார்த்தைப் போராக மாறியுள்ளது. இருவருமே, தங்களுக்கான சொந்த சமூக ஊடக தளங்களை வைத்திருப்பதால் பரஸ்பரம் எதிர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பல டிரில்லியன் டாலர் வரி விலக்குகள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் டிரம்பின் பட்ஜெட் மசோதாவால் 'ஏமாற்றம்' அடைந்ததாக ஈலோன் மஸ்க் அண்மையில் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, மே மாத இறுதியில், அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (டோஜ்- DOGE) வழிநடத்தும் தனது பதவிக்காலம் 'முடிவுக்கு வருகிறது' என்று ஈலோன் மஸ்க் தெரிவித்தார். பின்னர் தனது எக்ஸ் தளத்தில், டோஜ் துறையை வழிநடத்த வாய்ப்பு அளித்தமைக்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்து, 'சிறப்பு அரசாங்க ஊழியர்' எனும் பொறுப்பிலிருந்து வெளியேறினார். ஆனால், டிரம்பின் பட்ஜெட் மசோதாவை விமர்சித்திருந்த நிலையில், மஸ்க் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் (One big beautiful bill) எனப்படும் அந்த மசோதா டிரம்ப் நிறைவேற்ற நினைக்கும் முக்கியமான மசோதாவாகும். அதன் பிறகு, அந்த மசோதா குறித்தும், டிரம்ப் குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்தார் மஸ்க். இந்த மோதல் நேற்று (ஜூன் 5) உச்சக்கட்டத்தை எட்டியது. டிரம்ப் மிரட்டலுக்கு மஸ்கின் பதிலடி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈலோன்- டிரம்ப் இடையே மீண்டும் இயல்பான சூழல் ஏற்படலாம் என்பதை கற்பனை செய்வது கடினம். அமெரிக்க அரசாங்கத்துடனான மிகப்பெரிய வணிக ஒப்பந்தங்கள் ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் திட்டத்திற்கு உயிர்நாடியாக உள்ளன. இப்போது அவற்றை ரத்து செய்யப் போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். "நமது பட்ஜெட்டில் பில்லியன்கணக்கான டாலர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான எளிதான வழி, ஈலோனின் அரசாங்க மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும்" என்று டிரம்ப் தனது சொந்த சமூக ஊடக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார். டிரம்ப், அமெரிக்க அரசாங்க இயந்திரத்தை மஸ்க்கிற்கு எதிராகத் திருப்பினால், அது மஸ்க்கிற்கு வேதனை தரக்கூடிய ஒரு நகர்வாக இருக்கும். இந்த மோதலைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஜூன் 5) அன்று டெஸ்லாவின் பங்கு விலை 14% சரிந்தது. இருப்பினும், இது ஒரு வழிப் பாதை அல்ல. இந்த வார்த்தை மோதல்களைத் தொடர்ந்து, டிரம்பை பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுத்த மஸ்க், தனது நிறுவனங்களுக்கான நிதியைத் தடுக்க முடியுமென்றால், அதைச் செய்யுமாறு டிரம்புக்கு சவால் விடுத்தார். அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்ல, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலங்களை சார்ந்துள்ளது அமெரிக்கா (நாசா). டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக, நாசாவிற்கான தனது டிராகன் விண்கல சேவையை நிறுத்தும் பணியை துரிதப்படுத்தவிருப்பதாக மஸ்க் தெரிவித்தார். மஸ்க் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்புக்கு பதிலடி தர மஸ்க்கிற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு, அடுத்த வருட தேர்தல்கள் மற்றும் முதன்மைத் தேர்தல்களில், குடியரசுக் கட்சியின் எதிர் தரப்பு வேட்பாளர்களுக்கு அவர் நிதியுதவி அளிக்கலாம். வியாழக்கிழமை பிற்பகலில், தனது எக்ஸ் தளப் பக்கத்தில், 'ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய செய்தியை சொல்ல வேண்டிய நேரம்' என்று பதிவிட்ட மஸ்க் - மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வெளியிடப்படாத கோப்புகளில் டிரம்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது எனக் கூறினார். ஆனால் தனது கூற்றுக்கு ஆதாரங்கள் எதையும் அவர் அளிக்கவில்லை. மஸ்க்கின் கூற்றுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு லேசான மறுப்பை மட்டுமே வழங்கினார். "ஒன் பிக் பியூட்டிஃபுல் மசோதாவின் மீதான ஈலோனின் அதிருப்திக்குக் காரணம், அதில் அவர் விரும்பிய கொள்கைகள் இல்லை என்பது தான். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" என்று கூறினார். டிரம்பின் ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டத்தில் மஸ்க் வெற்றி பெறாமல் போகலாம், ஆனால் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக மிகப்பெரிய இழப்பை அவரால் ஏற்படுத்த முடியும். இதை நன்கு அறிந்த டிரம்ப், நேற்றைய நாளின் (ஜூன் 5) இறுதிக்குள் பதற்றத்தை சற்றே தணித்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற காவல்துறை பாராட்டு நிகழ்வில் பொதுவில் தோன்றியபோது மஸ்க் குறித்து கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்தார். பின்னர் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் "அவருக்கு (மஸ்க்) எதிராகத் திரும்புவதில்" தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், ஆனால் பல மாதங்களுக்கு முன்பே அரசாங்க வேலையிலிருந்து மஸ்க் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அவர் தனது 'ஒன் பிக் பியூட்டிஃபுல்' மசோதா மற்றும் செலவுச் சட்டத்தை ஆதரித்து பேசுவதில் கவனம் செலுத்தினார். இருப்பினும், வியாழக்கிழமை நடந்த மோதல்களைத் தொடர்ந்து, ஈலோன்- டிரம்ப் இடையே மீண்டும் இயல்பான சூழல் ஏற்படலாம் என்பதை கற்பனை செய்வது கடினம். டிரம்ப் குற்றச்சாட்டுக்கு மஸ்க் பதில் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தன்னுடைய 'ஒன் பிக் பியூட்டிஃபுல்' மசோதாவை மஸ்க் விமர்சித்தது குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் டிரம்ப். கடந்த வாரம் தொடங்கிய இந்த மோதல், புதன்கிழமை தீவிரமடைந்து, வியாழன் அன்று அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் உச்சகட்டத்தை எட்டியது. அன்றைய தினம், விருந்தினராக வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த ஜெர்மனியின் அதிபர் ஃபிரீட்ரிக் மெர்ஸ் சங்கடத்துடன் மௌனமாக அமர்ந்திருந்த போது, அதிபர் டிரம்ப் ஒருவித விரக்தியுடன் பேசுவதைக் காண முடிந்தது. தன்னுடைய 'ஒன் பிக் பியூட்டிஃபுல்' மசோதாவை மஸ்க் விமர்சித்தது குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் டிரம்ப். 'மஸ்க்கின் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் நிதியுதவி இல்லையென்றால் கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்றிருப்பார்' என்ற கருத்துக்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். மின்சார வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான குடியரசுக் கட்சியின் அழுத்தத்தால் மஸ்க்கின் கார் நிறுவனமான டெஸ்லா பாதிக்கப்படும் என்பதே மஸ்க் தனக்கு எதிராக திரும்ப காரணம் என டிரம்ப் கூறினார். இதற்கு உடனடியாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிலளித்தார் மஸ்க். அவரை எக்ஸ் தளத்தில் 22 கோடி பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கார் மானியங்களைப் பற்றி தனக்கு கவலையில்லை என்றும், தேசியக் கடனைக் குறைக்க விரும்புவதாகவும், அது நாட்டின் இருப்பு சார்ந்த அச்சுறுத்தல் என்றும் அவர் கூறினார். தனது உதவி இல்லாமல் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் மற்றும் அவரது கட்சியினர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். "டிரம்பிற்கு நன்றியுணர்வு இல்லை" என்று அவர் விமர்சித்தார். பின்னர், நேற்று பிற்பகலில், ஈலோன் மஸ்க் தனது தொடர்ச்சியான எக்ஸ் தள பதிவுகள் மூலம் டிரம்புக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் தாக்குதல்களைத் தொடங்கினார். அதன் பிறகு தான் இந்த மோதல் தீவிரமடையத் தொடங்கியது. மஸ்க் - டிரம்ப் சக்தி வாய்ந்த கூட்டணி பிரிந்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் டிரம்ப், மஸ்க் மஸ்க்கும் டிரம்பும் ஒரு சக்தி வாய்ந்த ஆனால் சாத்தியமற்ற கூட்டணியை உருவாக்கினர். அதன் விளைவாக டிரம்பின் நிர்வாகத்தில் அரசின் பட்ஜெட்டைக் குறைக்கும் திட்டத்தில் ஒரு முக்கிய பதவியைப் பெற்றார் மஸ்க். அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (DOGE) வழிநடத்தும் பொறுப்பு ஈலோன் மஸ்க்கிடம் கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டிரம்பின் 'முதல் 100 நாட்கள்' என்ற பிரசாரத்தில் இந்த செலவுக் குறைப்பு பணிக்குழு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அது பல நிறுவனங்களை மூட வழிவகுத்தது, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. சிறந்த நண்பர்களாக டிரம்பும் மஸ்க்கும் தங்களை காட்டிக்கொண்ட போதும், இந்த இரு ஆளுமைகள் எங்கே, எப்போது வேண்டுமானாலும் மோதிக் கொள்ளக் கூடும் என்பது பற்றிய ஊகங்கள் சமீபத்தில் தான் வெளிவரத் தொடங்கின. அந்த கணிப்புகள் தொடக்கத்தில் தவறாகத் தோன்றின. மஸ்க்கின் புகழ் குறைந்து வந்தாலும், நிர்வாகத்தில் அதிகாரிகளுடன் அவருக்கு பகைமைகள் இருந்தபோதிலும் டிரம்ப் மஸ்க்கிற்கு ஆதரவாகவே இருந்தார். ஒரு பிரிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஒவ்வொரு முறையும், ஓவல் அலுவலகத்திலோ, அமைச்சரவை அறையிலோ அல்லது மார்-எ-லாகோவிற்கு அதிபர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணிக்கும் போதோ மஸ்க் உடனிருப்பார். அமெரிக்க அரசில், மஸ்க் ஒரு "சிறப்பு அரசாங்க ஊழியர்" ஆக நியமிக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் 130 நாட்கள் அரசு வேலையில் பணியாற்ற அவர் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 20-ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்து கணக்கிட்டால், மே மாத இறுதியில் அவரது பணிக்காலம் முடிவடைந்தது. மஸ்க்கிற்கு ஓவல் அலுவலகத்தில் ஒரு ஆடம்பரமான 'ஃபேர்வல்' விழா நடத்திய டிரம்ப் வெள்ளை மாளிகைக்கான தங்கச் சாவியை பரிசளித்தார். மஸ்க் எப்போதாவது திரும்பி வரக்கூடும் என்ற குறிப்பும் வழங்கப்பட்டது. ஆனால், இனி திரும்பி வருவதற்கான அழைப்பு வராது என்பதையும், தங்கச் சாவிக்கு பயன் இருக்காது என்பதையும் நாம் இப்போது சொல்ல முடியும். "ஈலோனுக்கும் எனக்கும் இடையே ஒரு சிறந்த உறவு இருந்தது," என்று டிரம்ப் வியாழக்கிழமை கூறினார். இங்கு அவர் 'இருந்தது' என்ற கடந்த கால வார்த்தையை குறிப்பிட்டது முக்கியமானது. புதன்கிழமை இரவு டிரம்ப் திடீரென அறிவித்த 12 நாடுகளுக்கான புதிய பயணக் கட்டுப்பாடுகள், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மீதான கூடுதல் தடைகள் மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தொடர்பான விசாரணை ஆகியவை மஸ்க்கின் விமர்சனத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சிகள் என்று சிலர் கருதினர். மஸ்க்கின் முந்தைய விமர்சனங்களுக்குப் பிறகு, வெள்ளை மாளிகையும், அதன் ஆதரவாளர்களும் மஸ்க்கை மேலும் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். பின்னர் டிரம்ப் பேசினார், அதற்குப் பிறகு மஸ்க்கிடமிருந்து எதிர்வினைகள் குவிந்தன. அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செலவுக் குறைப்பு பணிக்குழுவை (DOGE) வழிநடத்தும் பொறுப்பிலிருந்து மஸ்க் விலகியபோது, அவருக்கு ஒரு நினைவுப் பரிசை டிரம்ப் அளித்தார் இப்போது மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்தப் பதற்றம் அடுத்து எந்தத் திசையில் செல்லும் என்பதுதான். ஈலோன் மஸ்க்கின் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு மத்தியில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சித் தலைவர்கள் டிரம்பின் மசோதாவை ஆதரிப்பது சற்று கடினம். குறிப்பாக, அவ்வாறு எதிர்ப்பவர்களுக்கு வாய்மொழியாக மட்டுமல்லாது, நிதி பாதுகாப்பையும் மஸ்க் வழங்க முடியும். மஸ்க் உடனான அரசாங்க ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாக டிரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளார். இருப்பினும், அவர் செலவுக் குறைப்பு பணிக்குழுவில் (DOGE) மஸ்க்கின் முன்னாள் நண்பர்களை குறிவைக்கலாம் அல்லது பைடன் அதிபராக இருந்தபோது மஸ்க்கின் நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணைகளை மீண்டும் தொடங்கலாம். தற்போது, அவருக்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இதற்கிடையில், இருவருக்கும் இடையே நடந்து வரும் மோதலைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களால் எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதை இன்னும் தீர்மானிக்க முடியவில்லை. மஸ்க் இதற்கு முன்பு ஜனநாயகக் கட்சிக்கு நன்கொடை அளித்தவர் என்பதைக் கருத்தில் கொண்டாலும், மிகச் சில ஜனநாயகக் கட்சி தலைவர்களே மஸ்க்கை மீண்டும் தங்கள் முகாமிற்கு வரவேற்க விரும்புகிறார்கள். ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்று ஒரு பழைய பழமொழி உண்டு. "ஆனால் இந்த விளையாட்டில் இருவருக்குமே லாபம் இல்லை" என்று ஜனநாயக கட்சியின் மூலோபாய நிபுணர் லியாம் கெர், பொலிட்டிகோ எனும் டிஜிட்டல் நாளிதழிடம் கூறினார். "அவர் ஜனநாயகக் கட்சியினரை நோக்கி எந்த வகையில் காய் நகர்த்தினாலும், அது குடியரசுக் கட்சியினருக்கு தீங்கு விளைவிக்கும்" என்கிறார். இப்போதைக்கு, ஜனநாயகக் கட்சியினர் இந்தப் பிரச்னையில் அமைதியாக இருக்க விரும்புவதாகவும், டிரம்ப்- மஸ்க் இடையிலான மோதல் தொடர்வதை அனுமதிப்பதாகவும் தெரிகிறது. இருவருக்கும் இடையிலான இந்த கூச்சல், குழப்பம் அடங்காத வரை, அமெரிக்க அரசியலில் உள்ள மற்ற அனைத்து விஷயங்களும் இருட்டடிப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மோதல் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்க முடியாது. "டிரம்பின் அதிபர் பதவி என்பது இன்னும் மூன்றரை ஆண்டுகள் தான், ஆனால் எனக்கு இன்னும் 40 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது" என்று எக்ஸ் தளத்தில் மஸ்க் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq85127ewdqo
3 months 1 week ago
ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: RAJEEBAN 06 JUN, 2025 | 01:41 PM ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் கொள்கை ரீதியிலான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றன , நாங்கள் இணங்கியமைக்கான பிரதான காரணம் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்தேசியத்திற்கான ஒரு பெரும் ஆணையை வழங்கியிருந்தார்கள். தனித்தனியாக எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மையை எந்தவொரு சபையிலும் வழங்கியிருக்காவிட்டாலும், தமிழ்தேசிய தரப்பிற்கு தங்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள் தமிழ்தேசியம் பேசி வாக்குகளைகோரிய ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்தேசிய பேரவை தமிழரசுக்கட்சிக்கு மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளை மக்கள் வழங்கியிருந்தார்கள். ஆகவே உண்மையிலே நடக்கவேண்டியது என்னவென்றால் ,எவ்வாறு தமிழரசுக்கட்சியும்ஜனநாயக தேசிய கூட்டணியும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டிற்கு வந்தனவோ அதேபோன்று,தமிழரசுக்கட்சியும் அந்த இணக்கப்பாட்டிற்கு வந்து அதன் ஊடாக ஒவ்வொரு சபையிலும் ஒரு ஸ்திரதன்மையை உருவாக்குவதுதான் பொருத்தமாகயிருக்குமே தவிர,அதனை விட்டுவிட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு நேர்மாறாக, செயற்படுகின்ற தரப்புகளுடன் கூட்டு சேர்வதும், அதுவும் தமிழ் தேசியத்துடன் இருக்ககூடியஈ ஏற்கனவே இருக்ககூடிய ஒரு பலமான கூட்டை தோற்கடிப்பது அதற்காக செயற்படுவது உண்மையிலே பொருத்தமற்றது. இது தமிழ்தேசியத்திற்கு ஒரு பாரிய ஏமாற்றத்தை அளிக்கும், மக்களிற்கும் ஒரு பாரிய ஏமாற்றத்தை அளிக்கும். எம்மை பொறுத்தவரையில் நாங்கள் இந்த கூட்டில் கைச்சாத்திட்டவேளை இலங்கை தமிழரசுக்கட்சிக்கு பகிரங்கமாக ஒரு கோரிக்கை விடுத்திருந்தோம்,எங்கள் கதவுகள் திறந்துதான் இருக்கின்றது, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் ஒன்றிணைந்து இருப்பது,இது தமிழரசுக்கட்சியை ஓரங்கட்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு கூட்டல்ல, மாறாக, இந்த கூட்டின் ஒப்பந்தத்தை படித்து, எவரும் பிழைகண்டுபிடிக்க முடியாத வகையிலேயே அந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது, ஆகவே தமிழரசுகட்சி அதனை ஏற்றுக்கொள்வதற்கு எந்த விதமான தயக்கம் இருக்க முடியாது. உண்மையிலே தமிழ்தேசியத்தை நேசித்து அதற்கு நேர்மையாக நடப்பதாகயிருந்தால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விடயத்தையும் எதிர்க்க முடியாத நிராகரிக்க முடியாத நிலைதான் இருக்கின்றது. இண்டைக்கும் நாங்கள் கேட்கின்றோம், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். https://www.virakesari.lk/article/216765