Aggregator
யானைகளை கொல்ல உத்தரவிட்ட ஜிம்பாப்வே - இந்த புத்திசாலி விலங்கால் என்ன பிரச்னை?
யானைகளை கொல்ல உத்தரவிட்ட ஜிம்பாப்வே - இந்த புத்திசாலி விலங்கால் என்ன பிரச்னை?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, ஜிம்பாப்வேயில் 84,000-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது
கட்டுரை தகவல்
எழுதியவர், பிரியா சிப்பி
பதவி, பிபிசி உலக சேவை
8 மணி நேரங்களுக்கு முன்னர்
யானைகளின் எண்ணிக்கை அதீதமாக உயர்ந்துவிட்டது என்று சொல்ல முடியுமா? ஜிம்பாப்வே அரசை பொருத்தவரை யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக யானைகளை கொல்ல அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.
விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடைமுறை, அவற்றின் ஒரு பகுதியைக் 'கொல்லுதல்' ஆகும். அதாவது அதிகளவில் இருக்கும் விலங்குகளை, ஒரு குறிப்பிட்ட அளவில் அழிப்பதன் மூலம் அந்த விலங்கினத்தின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டில் (2024), இருநூறுக்கும் மேற்பட்ட யானைகளை கொல்ல அனுமதி கொடுத்ததற்காக ஜிம்பாப்வே அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது.
இப்படிப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில், தெற்கு ஜிம்பாப்வேயில் உள்ள சேவ் பள்ளத்தாக்கு பாதுகாப்புப் பகுதியில் வசிக்கும் யானைகளில் குறைந்தது 50 யானைகளை கொல்லும் திட்டத்தை அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது.
யானைகளை கொல்லும் திட்டங்கள் ஏற்கனவே அமலில் இருப்பதாக தேசிய வனவிலங்கு ஆணையமான ஜிம்பார்க்ஸின் செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவோ கூறுகிறார்.
தேசிய பூங்காவில் தற்போது 2,550 யானைகள் உள்ளன, ஆனால் அங்கு 800 யானைகளை 'பராமரிக்கும் திறன்' மட்டுமே உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
யானைகளை கொன்று அதிலிருந்து கிடைக்கும் மாமிசம், உள்ளூர் மக்களின் உணவுக்காக கொடுக்கப்படும் என்றும், யானைத் தந்தங்கள் தேசிய பூங்காவின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
"நமது வாழ்விடத்தைப் பாதுகாக்க, விலங்கு அதிகரிப்புப் பிரச்னையை நாம் சமாளிக்க வேண்டும்." என்று ஃபராவோ பிபிசியிடம் தெரிவித்தார்.
"அதீத அளவிலான யானைகள், தாங்கள் வாழும் வாழ்விடத்தையே அழித்துவிடுகின்றன. அது, யானைகளுக்கே ஆபத்தாக மாறி வருகிறது. இப்போது இருக்கும் பெருமளவிலான யானைகளின் எண்ணிக்கையை நமது சுற்றுச்சூழல் அமைப்பால் சமாளிக்க முடியாது," என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, ஜிம்பாப்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, யானைகளின் எண்ணிக்கையை குறைக்கும் பணி ஏற்கனவே நடைபெற்று வருகிறது
'பாதுகாக்கும் அணுகுமுறையால் அரசு எதிர்கொள்ளும் விமர்சனம்'
ஜிம்பாப்வேயில் 1980களின் பிற்பகுதி வரை அமலில் இருந்த யானை அழிப்பு திட்டம் அதன்பிறகு 2024ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படவில்லை.
ஜிம்பாப்வேயில் அதிக அளவிலான யானைகள் உள்ளன. உலகில் அதிகளவிலான யானைகளைக் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே இரண்டாம் இடம் வகிக்கிறது. 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வான்வழி கணக்கெடுப்பின் அடிப்படையில், நாட்டில் 84,000க்கும் மேற்பட்ட யானைகள் இருந்ததாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
KAZA அமைப்பு 2022இல் நடத்திய யானை கணக்கெடுப்பு மற்றொரு எண்ணிக்கையை காட்டியது. அதன்படி, ஜிம்பாப்வேயில் சுமார் 65,000 யானைகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1,31,000-க்கும் அதிகமான யானைகளைக் கொண்ட போட்ஸ்வானா, உலகில் அதிகளவிலான யானைகள் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
யானையின் எண்ணிக்கையை குறைக்கும் புதிய திட்டங்களுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
"இது பாதுகாப்பிற்கான மிகவும் மோசமான அணுகுமுறை," என்று ஜிம்பாப்வேயை தளமாகக் கொண்ட இயற்கை வள நிர்வாக மையத்தின் இயக்குனர் ஃபராய் மகுவு கூறுகிறார்.
"யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வனவிலங்கு வழித்தடங்களை உருவாக்கி, அவை இயல்பான முறையில் வாழ்வதற்கான பிற பகுதிகளில் சுதந்திரமாக வாழவிடலாம்," என்று அவர் கூறுகிறார்.
"அதேபோல, யானைகள் குறைவாக உள்ள பகுதிகளுக்கு அவற்றை இடமாற்றம் செய்யலாம்."
யானைகளை இடமாற்றம் செய்வது செலவு அதிகம் பிடிக்கும் செயல்முறை என்றும், அது அதீத எண்ணிக்கை என்ற பிரச்னையை தீர்க்காது என்றும் ஜிம்பாப்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
"இடமாற்றம் என்பது அதிக செலவு பிடிக்கும் செயல்முறை. நம்மிடம் வளங்கள் குறைவாகவே உள்ளன. அத்துடன், ஜிம்பாப்வே ஒரு நாடாக பெரிய அளவில் வளராவிட்டாலும், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் மட்டற்ற அளவில் அதிகரித்து வருகிறது, இது வாழ்விடத்திற்கான போட்டியை உருவாக்குகிறது," என்று ஃபராவோ கூறுகிறார்.
ஆனால், யானைகளை இடமாற்றுவதும் வழக்கத்தில் இல்லாதது அல்ல.
பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் இடமாற்ற முயற்சிகளில் மிகப்பெரிய ஒன்றில், அண்மையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 70 வெள்ளை காண்டாமிருகங்கள் ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டன.
இந்த முயற்சி வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும், இனப்பெருக்கம் செய்ய புதிய இடம் ஒன்றை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
விலங்குகளின் அதிக எண்ணிக்கை, நீர் மற்றும் உணவு போன்ற வளங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், யானைகளை கொல்வது என்பது மனிதர்கள்-வனவிலங்கு மோதலை மோசமாக்கும் என்று மகுவு எச்சரிக்கிறார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, அண்மையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 70 வெள்ளை காண்டாமிருகங்கள் ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டன
"யானைகள் மிகவும் புத்திசாலியானவை மற்றும் உணர்ச்சிபூர்வமான உயிரினம்," என்று அவர் கூறுகிறார்.
"ஒரு யானையைக் கொன்றால், பிற யானைகள் வழக்கமாக தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடரும் என்று நினைக்காதீர்கள், தங்களுடன் இருந்த சக உயிரினங்களின் இழப்பால் அவை பெரும் துக்கத்திற்கு ஆளாகின்றன. யானைகளின் துக்கத்தின் எதிரொலியை அருகிலுள்ள சமூகங்கள் மூர்க்கமாக எதிர்கொள்ள நேரிடும்" என அவர் எச்சரிக்கிறார்.
அண்டை நாடான நமீபியாவிலும் யானைகளை கொல்லும் நடைமுறை வழக்கில் உள்ளது.
மேய்ச்சல் நிலங்கள் குறைவாக இருப்பதால் ஏற்படும் தாக்கங்களை குறைக்கவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கவும், யானைகள் உட்பட 700க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை கடந்த ஆண்டில் நமீபியா அரசாங்கம் கொன்றது.
யானைகளை கொல்வது என்பது "வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத 'யானை தந்தங்களின்' வர்த்தகத்தை மீண்டும் தூண்டும்" என்று வோர்ல்ட் அனிமல் ப்ரொடெக்ஷன் போன்ற விலங்கு உரிமை அமைப்புகள் முன்னெச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
அதே நேரத்தில் விலங்குகளை துன்புறுத்துவதை எதிர்க்கும் பீட்டா (PETA) அமைப்பு, இத்தகைய நடைமுறைகளை "கொடூரமானது" மற்றும் "ஆபத்தான, குறுகிய பார்வை கொண்டது" என்று விவரித்துள்ளது.
வேறு எங்கு யானைகளை கொல்லும் போக்கு இருக்கிறது?
நோய்கள் பரவுவதைத் தடுக்க விலங்குகள் கொல்லப்படும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.
பிரிட்டனில் போவைன் காசநோயின் பரவலைத் தடுக்கும் வகையில், ஒரு தசாப்தத்தில் 230,000க்கும் மேற்பட்ட வளைக்கரடிகள் (badgers), 278,000 க்கும் மேற்பட்ட பல்வேறு கால்நடைகள் கொல்லப்பட்டன.
இருப்பினும் இந்த விலங்குகள் கொல்லப்படுவது, 2029ஆம் ஆண்டில் நிறுத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்தது. இதற்கு பதிலாக வளைக்கரடிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.
2020ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில், ஸ்பெயினில் ஒரு பண்ணையில் இருந்த பல விலங்குகளுக்கு தொற்று பாதித்ததை அடுத்து, கிட்டத்தட்ட 1,00,000 மிங்க் எனும் கீரிகளைக் கொல்ல ஸ்பெயின் உத்தரவிட்டது.
இதற்கிடையில், டென்மார்க்கில், கொரோனா வைரஸ் பாதித்த லட்சக்கணக்கான மிங்க் கீரிகளைக் கொல்லும் திட்டத்திற்கு அரசியல் ரீதியிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.
ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு மாகாணமும் எவ்வளவு கங்காருக்களை கொல்லலாம் என்பதற்கான 'எண்ணிக்கை' அளவு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நிலத்தைப் பாதுகாக்கவும் வறட்சியின் போது வெகுஜன இறப்பு அபாயத்தைக் குறைக்கவும் விலங்குகளை அழித்தல் அவசியம் என்று அரசாங்கம் கூறுகிறது.
விலங்குகளை அழித்தல் திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்று சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
"கொலை செய்வது என்பது மிகவும் வெறுப்பூட்டும் விஷயமாக தோன்றினாலும், அதனை முற்றிலும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளும் ஏற்படுவதை நாங்கள் அறிவோம்," என்று சூழலியல் நிபுணரும் எழுத்தாளருமான ஹக் வார்விக் கூறுகிறார்.
"தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ விலங்குகளை தீவுகளில் மனிதர்கள் விட்டுவிட்டதால், இது அந்த இடத்தின் சூழலை மிக அதிகமாக மாற்றி, அங்குள்ள உள்ளூர் விலங்குகள் வாழ முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.''
தெற்கு ஜார்ஜியாவின் தொலைதூர தீவில் எலிகளை ஒழிக்கும் ஒரு திட்டத்தை வார்விக் மேற்கோள் காட்டுகிறார், அங்கு விடப்பட்ட எலிகள் உள்ளூர் விலங்குகளை அழித்துவிட்டன.
"இந்த முயற்சி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது, இது தார்மீக ரீதியாக நியாயமானது என்றும் தோன்றுகிறது," என்று அவர் கூறுகிறார்.
எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு விலங்குகளின் பாதுகாப்பை அளவிடுவதைவிட, ஒரு சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் அவை செழித்து வளரும் திறனால் அளவிட வேண்டும் என்று வார்விக் கருதுகிறார்.
"ஜிம்பாப்வேயில், 'விலங்கு அழிப்பு' திட்டம் வெற்றி பெறலாம், ஆனால் போதுமான வாழ்விடங்கள் இல்லாததால் யானைகள் தங்கள் வாழ்க்கைப் போரில் தோற்றுப் போகின்றன."
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, பிரிட்டனின் சில பகுதிகளில், வனவிலங்கு அதிகாரிகள் வளைக்கரடிகளை அழிப்பதற்குப் பதிலாக தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளனர்
வேறு ஏதேனும் விருப்பத்தெரிவுகள் உள்ளனவா?
யானைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, தென்னாப்பிரிக்கா பிறப்பு கட்டுப்பாட்டு திட்டம் ஒன்றை ஒரு தசாப்தத்திற்கு முன்பு தொடங்கியது. கருத்தடை மருந்துகளை காற்றின் மூலமாக யானைகளின் மீது பாய்ச்சும் முறையாகும்.
தாய்லாந்தில் மனிதர்கள்-யானைகள் மோதல் அதிகரித்து இருக்கும் நிலையில், காட்டுப் யானைகளில் பெண் யானைகளுக்கு பிறப்பு கட்டுப்பாட்டைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்த ஆண்டு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நோயுற்ற விலங்குகள், மனிதர்கள் அல்லது பிற விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக மாறும் நிலையில், இதே போன்ற நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் வார்விக் சுட்டிக்காட்டுகிறார்.
"பிரிட்டனில் பூர்வீக சிவப்பு அணில்கள் மற்றும் இடம்பெயர்ந்து வந்த சாம்பல் அணில்களுக்கும் இடையிலான பிரச்னையை, விலங்கு பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களில் ஒன்றாக சொல்லலாம். சிவப்பு அணில்களைக் கொல்லும் ஒரு நோய், சாம்பல் அணில்களிடம் உள்ளது," என்று அவர் கூறுகிறார்.
"சிவப்பு அணில்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது அல்லது சாம்பல் அணில்களுக்கு கருத்தடை முறைகளைக் கண்டுபிடிப்பது ஒரு உத்தியாக இருக்கலாம்" என்று அவர் கூறுகிறார்.
பாதுகாப்புப் பிரச்னைகள் மிகவும் சிக்கலானவை என்றும், கொலை செய்வது பெரும்பாலும் விரைவான மற்றும் எளிமையான தீர்வாகக் கருதப்படுகிறது என்றும் வார்விக் கூறுகிறார்.
"இந்த சிக்கலுக்கு மாற்று வழிகளைக் காண்பதே முதல் தெரிவாக இருக்கவேண்டும். இடமாற்றம் அல்லது சமூக மேலாண்மை தொடர்பானதாக இருந்தாலும் மாற்று வழிகள்தான் சிறந்தது, விலங்குகளை அழிப்பது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்."
யானைகளுக்கு பிறப்பு கட்டுப்பாட்டு செய்வது குறித்து ஜிம்பாப்வே அரசின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம்.
"ஒரு பூங்காவிலோ சிறிய இடத்திலோ பிறப்புக் கட்டுப்பாடு முயற்சிகள் சாத்தியப்படலாம், ஆனால் பல்லாயிரக்கணக்கான யானைகளைக் கொண்ட மாபெரும் இடத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், அங்கு பிறப்பு கட்டுப்பாடு முறைகளை நிர்வகிப்பது கடினம்" என்று ஃபராவோ பதிலளிக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
இரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? போர்க்கப்பல், போர் விமானங்கள் நகர்வு
யாழில் திட்டமிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏன்?
இரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? போர்க்கப்பல், போர் விமானங்கள் நகர்வு
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஜனாதிபதியிடம் கோரிக்கை
இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஜனாதிபதியிடம் கோரிக்கை
19 JUN, 2025 | 04:01 PM
பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்த கடற்படையின் உதவியைப் பெறுதல், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள் போன்ற பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அதன்படி, நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கினார்.
இதன்போது ஜனாதிபதி தெரிவிக்கையில்,
என்னால் இந்த கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்ட கோரிக்கைகளாவன :
கிழக்கு மாகாண காணிகளை விடுவித்தல் தொடர்பாக...
மட்டக்களப்பு மாவட்டத்தின் காயன்கேணி பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அருகில் இராணுவத்தினர் ஓய்வு விடுதி ஒன்றை நிர்மாணித்துள்ளதோடு, இது தொடர்பில் நாம் வினவியபோது, அந்த ஓய்வு விடுதியை அகற்ற முடியாது என இராணுவம் அறிவித்ததாக அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முறக்கொட்டாஞ்சேனையில் உள்ள பாடசாலை, பாலயடிவத்தை பிரதேசத்தில் உள்ள வர்த்தக சந்தை, குருக்கள் மடம் பகுதியில் உள்ள பாடசாலை இன்றளவிலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் மயானம் அமையப்பெற்றுள்ள காணியிலும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் தனியாருக்கு சொந்தமான காணியிலும் அமையப்பெற்றுள்ளது.
வாகரை பிரதேசத்தில் கடற்படையினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் அளவு எவ்வளவு என்பது தொடர்பாகவும் அதில் எவ்வளவு காணி பயன்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாகவும் சரியான புரிதல் இல்லை என்பதுடன், வாகரை பிரதேசத்தில் அதிகளவான காணிகள் கடற்படையினருக்கு சொந்தமாக காணப்படுவதால், அந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்தேன்.
இந்தக் காணிகள் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டும் என்பதால் இது தொடர்பான விசேட குழுவொன்றை நியமிக்குமாறு கேட்டிருந்தேன்.
ஆலையடி பிரதேசத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையும் இராணுவ முகாமிற்குள் அமைந்து காணப்படுவதுடன், இராணுவ முகாமிற்குள் அமைந்துள்ள சில பாடசாலைகளுக்கு பதிலாக மாற்றுப் பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும் அவை கிராமத்திற்கு வெளியில் அமைந்துள்ள காரணத்தினால் பல சிக்கல்களை மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் சந்திக்கின்றனர்.
அனைத்து இராணுவ முகாம்களும் அமைந்துள்ள காணிகள் குறித்து மீளப் பரிசீலனை செய்து அறிக்கை ஒன்றினை வழங்குமாறு அறிவித்துள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் அதன் அடிப்படையில் மீண்டும் கலந்துரையாடல் நடாத்தப்படும் எனவும் சபையில் கௌரவ தவிசாளர் தெரிவித்தார் எனக் கூறினார்.
மொசாட் அமைப்பின் வெற்றிகளும் தோல்விகளும் - வரலாற்றில் இடம்பெற்ற 14 முக்கிய ஆபரேஷன்கள்
மொசாட் அமைப்பின் வெற்றிகளும் தோல்விகளும் - வரலாற்றில் இடம்பெற்ற 14 முக்கிய ஆபரேஷன்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES/BBC
கட்டுரை தகவல்
எழுதியவர், பிபிசி நியூஸ் அரபிக்
பதவி,
9 மணி நேரங்களுக்கு முன்னர்
சமீபத்திய தொடர்ச்சியான தாக்குதல்களின் மூலம், இஸ்ரேல் இரானிய அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளை குறிவைத்துள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் நாட்டின் மேற்குப் பகுதியிலும் தலைநகர் டெஹ்ரானைச் சுற்றியும் நடந்துள்ளன.
தாக்குதல்கள் வான்வழியாக நடந்திருந்தாலும், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட், இலக்குகளைக் கண்டறிந்து தரையிலிருந்து நடவடிக்கைகளை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
உதாரணமாக, மொசாட் உளவாளிகள் இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க நாட்டிற்குள் கடத்தப்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
முன்னதாக தங்கள் பாதுகாப்புப் படைகளில் இஸ்ரேலிய உளவுத்துறை ஊடுருவியிருக்கலாம் என சந்தேகிப்பதாக இரானிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
ஜூன் 13 அன்று இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான முக்கிய இரானிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குறிவைக்கப்பட்டுள்ளனர், இது இஸ்ரேல் அவர்களின் இருப்பிடம் குறித்து உளவுத்துறை தகவல்களைப் பெற்றிருப்பதைக் குறிக்கிறது.
இந்த நிகழ்வுகளில் மொசாட்டின் பங்கை மதிப்பிடுவது எளிதல்ல. இஸ்ரேல் அந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது மற்றும் உளவுத்துறையின் பிற பிரிவுகளும் உள்ளன.
ஆனால் மொசாட் அமைப்பின் குறிப்பிடத்தக்க கடந்தகால செயல்பாடுகள் பற்றி நாம் அறிந்தவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
மொசாட்டின் வெற்றிகள்
பட மூலாதாரம்,ANADOLU VIA GETTY
படக்குறிப்பு, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (இடது) டெஹ்ரானுக்கு விஜயம் செய்தபோது, இரானிய புரட்சிகர காவல்படையின் தளபதி ஹொசைன் சலாமி (வலது) அவரை வரவேற்கிறார். இருவரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை
ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஜூலை 31, 2024 அன்று டெஹ்ரானில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது கொல்லப்பட்டார்.
இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் ஆரம்பத்தில் பொறுப்பேற்கவில்லை, ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு அதன் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இந்தக் கொலைக்குப் பின்னால் இஸ்ரேல் இருந்ததை ஒப்புக்கொண்டார்.
ஹனியேவின் மரணத்தைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கான பதில் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஹனியேவை, ஒரு ஏவுகணை 'நேரடியாக' தாக்கியதாக ஹமாஸின் மூத்த அதிகாரி கலீல் அல்-ஹய்யா ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஹனியேவுடன் இருந்த சாட்சிகளை மேற்கோள் காட்டி அவர் இதைக் கூறினார்.
ஆனால் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஏழு அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி, ஹனியே தங்கியிருந்த கட்டடத்திற்குள், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மறைத்து கொண்டுசெல்லப்பட்ட ஒரு வெடிகுண்டு மூலம் அவர் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசியால் இந்தக் கூற்றுகளில் எதையும் சரிபார்க்க முடியவில்லை.
2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலால் கொல்லப்பட்ட பல ஹமாஸ் தலைவர்களில் ஹனியேவும் ஒருவர்.
இதில் காஸாவின் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், அவரது சகோதரர் முகமது, ஹமாஸின் ராணுவப் பிரிவின் தலைவர் முகமது டெய்ஃப் மற்றும் அவருக்கு அடுத்த இடத்தில இருந்த தலைவர் மர்வான் இசா ஆகியோர் அடங்குவர்.
ஹெஸ்பொலா அமைப்பின் சாதனங்கள் வெடித்த நிகழ்வு
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, வெடித்துச் சிதறிய தகவல் தொடர்பு சாதனத்தால் கொல்லப்பட்ட ஹெஸ்பொலா உறுப்பினரின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
செப்டம்பர் 17, 2024 அன்று, லெபனான் முழுவதும் முக்கியமாக வலுவான ஹெஸ்பொலா இருப்பு உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. இந்த வெடிப்புகள் பயனர்களையும் அருகிலுள்ள சிலரையும் காயப்படுத்தின அல்லது கொன்றன.
மறுநாள் வாக்கி-டாக்கிகள் அதே பாணியில் வெடித்தன. நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர், காயமடைந்தனர்.
தாக்குதல் நடந்த நேரத்தில், இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் ஒரு மோதலில் ஈடுபட்டிருந்தன. இது அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களுக்கு ஒரு நாள் கழித்து, இஸ்ரேலிய நிலைகள் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியதின் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலின் ஒரு பகுதியாகும்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேல்தான் இதற்குப் பொறுப்பு என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டதாக அப்போது இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ்ஸுக்கு இரண்டு முன்னாள் மொசாட் ஏஜென்ட்கள் அளித்த பேட்டியில், இந்த நடவடிக்கையின் விவரங்களை வெளியிட்டனர்.
மொசாட் வாக்கி-டாக்கிகளை இயக்கும் பேட்டரிகளுக்குள் ஒரு வெடிக்கும் சாதனத்தை மறைத்து வைத்திருந்ததாகவும், பொதுவாக இந்த வாக்கி-டாக்கிகள் ஒருவரின் இதயத்திற்கு அருகில் இருக்குமாறு உடையில் பொருத்தப்படும் என்றும் கூறினர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போலி நிறுவனத்திடமிருந்து 'நல்ல விலைக்கு' 16,000க்கும் மேற்பட்ட வாக்கி-டாக்கிகளை ஹெஸ்பொலா அறியாமல் வாங்கியதாகவும், பின்னர் 5,000 பேஜர்களையும் வாங்கியதாகவும் ஏஜென்ட்கள் தெரிவித்தனர் என சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வெடிப்புகள் லெபனான் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின, பல்பொருள் அங்காடிகள் உட்பட எல்லா இடங்களிலும் பேஜர்கள் கொண்டு செல்லப்பட்டபோது வெடிப்புகள் நிகழ்ந்தன.
மருத்துவமனைகள் மனித உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிந்தன, அவர்களில் பலர் உடல் உறுப்புகளை இழந்திருந்தனர்.
ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் இந்தத் தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என்று அழைத்தார்.
மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை
பட மூலாதாரம்,EPA
படக்குறிப்பு, இரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் கொலைக்குப் பின்னால் மொசாட் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
நவம்பர் 2020இல், இரானின் மிக முக்கியமான அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை ஏற்றிச் சென்ற ஒரு வாகனத் தொடரணி, தலைநகர் டெஹ்ரானுக்கு கிழக்கே உள்ள அப்சார்ட் நகரில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானது.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கியால் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டார்.
"பொதுமக்கள் யாரும் உயிரிழக்காமல், ஒரு நகரும் இலக்கை நோக்கி இதுபோன்ற 'சர்ஜிக்கல்' முறையில் படுகொலை செய்வதற்கு, களத்திலிருந்து நிகழ்நேர உளவுத் தகவல்கள் தேவைப்படும்" என்று பிபிசி பாரசீக செய்தியாளரான ஜியார் கோல் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
ஏப்ரல் 2018இல், இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பானதாகக் கூறப்படும் பல ஆவணங்களைக் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காட்சிப்படுத்தினார். இது பல மாதங்களுக்கு முன்பு, ஒரு இரானிய 'சேமிப்பு கட்டடத்தில்' மொசாட் அமைப்பு நடத்திய துணிச்சலான நடவடிக்கையில் திருடப்பட்டதாக அவர் கூறினார். இந்த கட்டிடம் டெஹ்ரானில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது. (இது பின்னர் இரானிய அதிபர் ஹசன் ரூஹானியால் உறுதிப்படுத்தப்பட்டது).
ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ஆவணங்களை வழங்கிய இஸ்ரேலிய பிரதமர், அறிவிக்கப்படாத ஒரு அணு ஆயுதத் திட்டத்திற்காக மொஹ்சென் ஃபக்ரிஸாதே பணியாற்றுகிறார் எனக் கூறினார்.
"மொஹ்சென் ஃபக்ரிஸாதே... அந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள்," என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
2010 மற்றும் 2012க்கு இடையில், நான்கு இரானிய அணு விஞ்ஞானிகளை இஸ்ரேல் கொன்றதாக இரான் முன்பு குற்றம் சாட்டியிருந்தது.
கழுத்து நெரித்து கொல்லப்பட்ட மஹ்மூத் அல்-மபூஹ்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, மஹ்மூத் அல்- மபூஹ் மீது முதலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. பின்னர் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார்
2010 ஆம் ஆண்டு, ஹமாஸின் மூத்த ராணுவத் தலைவரான மஹ்மூத் அல்-மபூஹ் துபை நாட்டின் ஹோட்டல் ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில், இது ஒரு இயற்கை மரணம் போல் தோன்றியது. ஆனால் துபை காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பின்னர், இறுதியில் கொலையாளிகளை அடையாளம் காண முடிந்தது.
அல்-மபூ முதலில் மின்சாரத்தால் தாக்கப்பட்டு பிறகு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார் என்பதை காவல்துறை பின்னர் கண்டறிந்தது.
இந்த நடவடிக்கை மொசாட்டால் திட்டமிடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதாண்மை ரீதியிலான சீற்றத்தைத் தூண்டியது.
இருப்பினும், இஸ்ரேலிய தூதர்கள், மொசாட்டை தாக்குதலுடன் தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினர்.
மொபைல் போன் வெடிப்பில் கொல்லப்பட்ட யஹ்யா அய்யாஷ்
பட மூலாதாரம்,EPA
படக்குறிப்பு, யஹ்யா அய்யாஷின் படம்
1996 ஆம் ஆண்டு, ஹமாஸின் முக்கிய வெடிகுண்டு தயாரிப்பாளரான யஹ்யா அய்யாஷ், 50 கிராம் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட மோட்டோரோலா ஆல்ஃபா மொபைல் போன் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
ஹமாஸின் ராணுவப் பிரிவில் ஒரு முக்கிய தலைவரான அய்யாஷ், குண்டுகளை உருவாக்குவதிலும், இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக சிக்கலான தாக்குதல்களை திட்டமிடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.
2019 இன் பிற்பகுதியில் இந்தக் கொலையின் சில விவரங்களை வெளியிடுவதற்கான தடைகளை இஸ்ரேல் நீக்கியது. மேலும் இஸ்ரேலின் 'சேனல் 13' தொலைக்காட்சி அய்யாஷ் மற்றும் அவரது தந்தை இடையேயான இறுதி தொலைபேசி அழைப்பின் பதிவை ஒளிபரப்பியது.
ஆபரேஷன் பிரதர்ஸ்
பட மூலாதாரம்,RAFFI BERG
படக்குறிப்பு, எத்தியோப்பிய யூதர்கள் பயணித்த வாகனத்திற்கு அருகில் நிற்கும் ஒரு மொசாட் ஏஜென்ட்.
1980களின் முற்பகுதியில், பிரதமர் மெனகெம் பிகின் அறிவுறுத்தலின் பேரில் மொசாட் அமைப்பு 7,000 க்கும் மேற்பட்ட எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த யூதர்களை சூடான் வழியாக இஸ்ரேலுக்கு அழைத்து சென்றது. இதற்காக ஒரு போலி டைவிங் ரிசார்ட்டை மொசாட் பயன்படுத்தியது.
அரபு நாடுகள் கூட்டமைப்பில் உள்ள சூடான், இஸ்ரேலுக்கு எதிரி நாடு. எனவே ரகசியமாக செயல்பட்ட மொசாட் ஏஜென்ட்களின் குழு சூடானின் செங்கடல் கடற்கரையில் ஒரு ரிசார்ட்டை அமைத்து அதை தங்கள் தளமாக பயன்படுத்தினர்.
அந்த ஏஜென்ட்கள் பகலில் ஹோட்டல் ஊழியர்களாக பணிபுரிந்தனர். அண்டை நாடான எத்தியோப்பியாவிலிருந்து வந்த யூதர்களை இரவு நேரத்தில் அவர்கள் ரகசியமாக தங்கள் இடத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த ஆபரேஷன் குறைந்தது ஐந்து ஆண்டுகள் நீடித்தது. அது கண்டுபிடிக்கப்படுவதற்குள் மொசாட் ஏஜென்ட்கள் தப்பி ஓடிவிட்டனர்.
ம்யூனிக் ஒலிம்பிக் தாக்குதலுக்கு பதிலடி
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, பாலத்தீன ஆயுதக்குழுவால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மியூனிக் ஒலிம்பிக் மைதானத்தில் இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
1972-ஆம் ஆண்டு ஒரு பாலத்தீன ஆயுதக்குழு ம்யூனிக் ஒலிம்பிக்கின் போது இஸ்ரேல் ஒலிம்பிக் குழுவின் இரு உறுப்பினர்களை கொன்றது. ஒன்பது பேரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றது.
பின்னர் மேற்கு ஜெர்மன் படையினரின் மீட்பு முயற்சி தோல்வியடைந்ததால், இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, 1972-ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஒலிம்பிக் குழுவைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.
அடுத்து வந்த ஆண்டுகளில், மியூனிக் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட மெஹ்மூத் ஹம்ஷாரி உள்ளிட்டோருக்கு மொசாட் குறிவைத்தது
மெஹ்மூத் ஹம்ஷாரி, பாரிஸில் இருந்த அவரது வீட்டில் தொலைபேசியில், வெடிக்கும் சாதனம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த குண்டுவெடிப்பில் ஹம்ஷாரி ஒரு காலை இழந்து இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆபரேஷன் என்டெபி
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, என்டெபி பணயக்கைதிகள் ஒரு வாரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.
1976-ஆம் ஆண்டில் உகாண்டாவில் நடத்தப்பட்ட ஆபரேஷன் என்டெபி என்பது இஸ்ரேலின் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு 'மொசாட்' அமைப்பு உளவுத் தகவல்களை வழங்கியது.
பாரிஸுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தை பாலத்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் அவர்களது இரண்டு ஜெர்மன் கூட்டாளிகளும் கடத்தினர். அவர்கள் விமானத்தை உகாண்டாவிற்கு திருப்பினார்.
என்டெபி விமான நிலையத்தில் கடத்தல்காரர்கள் பயணிகளையும், விமானக்குழுவையும் பணயக்கைதிகளாக வைத்திருந்தனர்.
இஸ்ரேலிய கமாண்டோக்கள் விமான நிலையத்துக்குள் புகுந்து, 100 இஸ்ரேலிய மற்றும் யூத பணயக்கைதிகளை மீட்டனர்.
இந்த அதிரடி நடவடிக்கையின்போது மூன்று பணயக்கைதிகள், கடத்தல்காரர்கள், பல உகாண்டா ராணுவ வீரர்கள் மற்றும் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சகோதரர், மூத்த கமாண்டோ யோனாதன் நெதன்யாகு ஆகியோர் கொல்லப்பட்டனர்.
நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை தேடி கண்டுபிடித்தது
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, இஸ்ரேலில் நடந்த விசாரணையின் போது அடால்ஃப் ஐக்மேன்
1960-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் இருந்து நாஜி அதிகாரி அடால்ஃப் ஐக்மேன்னை கடத்தியது மொசாட்டின் மிகவும் பிரபலமான உளவு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்களால் 60 லட்சம் யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதில் ஐக்மேன் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படுகிறார்.
தான் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக பல நாடுகளுக்கு தப்பி சென்று கொண்டே இருந்த ஐக்மேன் இறுதியில் அர்ஜென்டினாவில் குடியேறினார்.
14 மொசாட் ஏஜென்ட்கள் கொண்ட குழு அவரைக் கண்டுபிடித்து கடத்தி இஸ்ரேலுக்குக் கொண்டு வந்தது. அங்கு விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
குறிப்பிடத்தக்க தோல்விகள்
பல வெற்றிகரமான நடவடிக்கைகளை நடத்தியுள்ள போதிலும் மொசாட் பல தோல்விகளையும் சந்தித்துள்ளது.
7 அக்டோபர் 2023- ஹமாஸ் நடத்திய தாக்குதல்
பட மூலாதாரம்,AFP
படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
2023 அக்டோபர் 7 அன்று காஸா எல்லைக்கு அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல், மொத்த நாட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தாக்குதலை முன்னறிவிப்பதில் மொசாட்டின் தோல்வி பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தடுப்புக் கொள்கையில் உள்ள பலவீனத்தை இது பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. சுமார் 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், காஸா பகுதியில் ஒரு போரைத் தொடங்கியது. இதில், 40,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யோம் கிப்பூர் போர்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, 1973 அரபு இஸ்ரேலியப் போரின் போது சூயஸ் கால்வாயைக் கடக்கும் இஸ்ரேலியப் படைகள்.
கிட்டத்தட்ட சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேல் இதேபோன்ற ஒரு எதிர்பாராத தாக்குதலை சந்தித்தது.
அக்டோபர் 6, 1973 அன்று, சினாய் தீபகற்பம் மற்றும் கோலன் குன்றுகளை மீட்பதற்காக எகிப்தும் சிரியாவும் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தின.
யோம் கிப்பூர் எனப்படும் யூதர்களின் பாவநிவிர்த்தி தினத்தன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இஸ்ரேலை ஆச்சரியப்படுத்தியது. எகிப்தியப் படைகள் சூயஸ் கால்வாயைக் கடந்தன. அதே நேரத்தில் சிரியா படைகள் இஸ்ரேலிய நிலைகளைத் தாக்கி கோலன் குன்றுப்பகுதியில் நுழைந்தன.
அந்த நேரத்தில் சோவியத் யூனியன் சிரியா மற்றும் எகிப்துக்கு பொருட்களை வழங்கியது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா அவசரகால உதவிகளை வழங்கியது.
பின்னர் இஸ்ரேல் படைகள் எதிர்ப்பை முறியடிப்பதில் வெற்றி பெற்றன. சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஐ.நா தீர்மானத்திற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 25-ஆம் தேதி சண்டை முடிவுக்கு வந்தது.
ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்-ஜஹரின் படுகொலை முயற்சி தோல்வி
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, மொசாட் அமைப்பால் தீவிரமாக தேடப்படும் ஹமாஸ் தலைவர்களில் ஒருவர் மஹ்மூத் அல்-ஜஹர்.
2003-ஆம் ஆண்டு காஸா நகரில் உள்ள ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல்-ஜஹரின் வீட்டை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
அல்-ஜஹர் தாக்குதலில் இருந்து தப்பிய போதிலும் அவரது மனைவி, மகன் காலித் மற்றும் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் அவரது வீட்டை முற்றிலுமாக அழித்தது. மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை அது எடுத்துக்காட்டியது.
ஹமாஸ் அரசியல் தலைவர் காலித் மெஷால்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,காலித் மெஷால் 1996 மற்றும் 2017 க்கு இடையில் ஹமாஸின் அரசியல் தலைவராக பணியாற்றினார்.
1997-ஆம் ஆண்டு ஜோர்டானில், ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவரான காலித் மெஷாலை விஷம் கொடுத்து இஸ்ரேல் கொலை செய்ய முயற்சித்தது. இஸ்ரேல் - ஜோர்டான் இடையே மிகப் பெரிய தூதாண்மை நெருக்கடியைத் தூண்டிய நடவடிக்கைகளுள் இது ஒன்றாகும்.
இஸ்ரேலிய ஏஜென்டுகள் பிடிபட்ட போது இந்த ஆபரேஷன் தோல்வியடைந்தது. மெஷாலின் உயிரைக் காப்பாற்ற அவருக்கு விஷமுறிவு மருந்தை வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டது.
மொசாட்டின் அப்போதைய தலைவர் டேனி யாடோம், மெஷாலுக்கு சிகிச்சை அளிக்க ஜோர்டன் சென்றார்.
இந்த கொலை முயற்சி ஜோர்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை மோசமாக்கியது.
லவோன் விவகாரம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, சூயஸ் கால்வாயை தேசியமயமாக்குவதாக அறிவிக்கும் எகிப்து அதிபர் கமல் அப்தெல் நாசர்.
1954 இல் எகிப்திய அதிகாரிகள் 'ஆபரேஷன் சுசன்னா' என அழைக்கப்படும் இஸ்ரேலிய உளவு நடவடிக்கையை முறியடித்தனர்.
சூயஸ் கால்வாயில் தனது படைகளை நிறுத்த பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எகிப்தில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் நிலைகளில் குண்டுகள் வைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.
இந்த சம்பவம் இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த பின்ஹாஸ் லாவோனின் பெயரால் 'லாவோன் விவகாரம்' என்று அறியப்பட்டது.
இந்த நடவடிக்கையை திட்டமிடுவதில் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது
19 JUN, 2025 | 03:33 PM
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாகவும், அதன் பிறகு ஏகே 47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தி வருகிறார். எனவே, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது , இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு மனு அளித்த 15 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் தர வேண்டாமா என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. இதையடுத்து, வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.