ஸ்வர்ணலதாவின் 10 சிறந்த பாடல்கள் - பட்டியலிட்ட பி.எச்.அப்துல் ஹமீத்
ENS ரங்கீலா படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றது.
கட்டுரை தகவல்
ரஞ்சன் அருண் பிரசாத்
பிபிசி தமிழுக்காக
11 செப்டெம்பர் 2025
தமிழ் சினிமா மாத்திரமன்றி தெலுங்கு, கன்னடம், உருது, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி வரவேற்பை பெற்றவர் ஸ்வர்ணலதா.
கேரளாவின் பாலக்காடு பகுதியில் 1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி ஸ்வர்ணலதா பிறந்தார்.
ஸ்வர்ணலதாவின் தந்தை பிரபல இசை கலைஞர் என்ற ரீதியில், ஸ்வர்ணலதாவிற்கும் இசை மீது அபூர்வ ஆர்வம் சிறு வயதிலிருந்தே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதனின் ஊடாக திரை இசைத்துறைக்குள் ஸ்வர்ணலதாகால் தடம் பதித்தார்.
பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினத்தை (செப்டம்பர் 12) ஒட்டி, தனக்கு பிடித்த 10 ஸ்வர்ணலதா பாடல்களை இலங்கையை சேர்ந்த மூத்த மற்றும் புகழ்வாய்ந்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் பிபிசி தமிழுக்கு பட்டியலிட்டார். இதில் அவர் எழுதிய பாடலும் இடம்பெற்றுள்ளது.
1. போறாளே பொன்னுத் தாயி
Rajshri Tamil ஏ.ஆர்.ரகுமானின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல்.
1994-ஆம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தில் இந்த பாடல் வெளியாகியிருந்தது.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் உருவான இந்த பாடலை, ஸ்வர்ணலதா பாடியிருந்தார்.
இந்த பாடலை பாடியமைக்காக ஸ்வர்ணலதாவிற்கு 1994-ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் சிறந்த பின்னணி பாடகிக்கான தமிழக அரசு விருதும், இந்தியாவின் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது.
இந்த பாடல் அன்று முதல் இன்று வரை பலரது பாடல்கள் விருப்ப பட்டியலில் உள்ளமை விசேட அம்சமாகும்.
2. மாலையில் யாரோ
Ayngaran பானுப்பிரியாவின் காட்சிகளுக்கு ஸ்வர்ணலதாவின் குரல் பொருந்திப் போயிருந்தது.
1990-ஆம் ஆண்டு வெளியான சத்ரியன் திரைப்படத்தில் ''மாலையில் யாரோ'' பாடலும் பலரது விருப்பத்திற்குரிய பாடலாக அமைந்துள்ளது.
வாலியின் வரிகளில், இளையராஜாவின் இசையில் உருவான இந்த பாடலை, ஸ்வர்ணலதா பாடியிருந்தார்.
திரையில் பானுப்பிரியாவின் காட்சிகளில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலுக்கு, காட்சிகளை விடவும், ஸ்வர்ணலதாவின் மெல்லிய குரலே உயிரை வழங்கியிருந்தது.
3. ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்
FB/KSChithra 2010-ஆம் ஆண்டு செப். 12-ஆம் தேதி ஸ்வர்ணலதா காலமானார்(வலம்).
ஊரெல்லாம் உன் பாட்டு திரைப்படத்தில் வெளியான பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.
கே.ஜே.யேசுதாஸின் குரலில் தனியாக இந்த பாடல் வெளியாகியிருந்ததுடன், ஸ்வர்ணலதாவின் குரலில் வேறொரு பாடல் தனியாக உருவாக்கப்பட்டிருந்தது.
வாலியின் வரிகளில் எழுதப்பட்ட இந்த பாடலுக்கு, இளையராஜா இசை அமைத்திருந்தார்.
ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் பாடல், அந்த காலப் பகுதியில் ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்திருந்தது.
4. என்னுள்ளே என்னுள்ளே
Sun Music என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
ரஜினிகாந்த், பிரியா ராமன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் வள்ளி.
1993-ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது.
என்னுள்ளே என்னுள்ளே பாடலுக்கான வரிகள் வாலி எழுதியிருந்ததுடன், இளையராஜா இசையமைத்திருந்தார்.
ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலித்த இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் இன்று வரை வரவேற்பு காணப்படுகின்றது.
5. ஹய் ராமா
1995ம் ஆண்டு வெளிவந்த படமே ரங்கீலா.
இந்த படத்திற்கான இசையை ஏ.ஆர்.ரகுமான் வழங்கியிருந்தார்.
ரங்கீலா திரைப்படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றிருந்தது.
ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.
ஸ்வர்ணலதாவின் பாடல்கள் வரிசையில் இந்த பாடலுக்கும் இன்று வரை முக்கிய இடம் இருக்கின்றது என்பதே உண்மை.
6. பூங்காற்றிலே
Track Musics India 'உயிரே' படத்தில் ஏ.ஆ.ரஹ்மான் இசையில் உருவான பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடல்.
உயிரே திரைப்படம், சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக இருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் வெளியான பாடல்கள் வரிசையில் பூங்காற்றிலே பாடல் மிக மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.
உன்னிமேனன் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோரின் குரல்களில் பதிவு செய்யப்பட்ட இந்த பாடலுக்கான வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார்.
பாடலுக்கான இசை ஏ.ஆர்.ரகுமான் வழங்கியிருந்தார்.
மணிரத்னத்தின் இயக்கத்தின் 1998-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், இன்றும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது.
7. காதல் எனும் தேர்வெழுதி
API Tamil Songs காதலன் தினம் படத்தின் பாடல்களுக்குமான வரிகளை வாலி எழுதியிருந்தார்.
காதலர் தினம் திரைப்படம் 1999-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.
அறிமுக கதாநாயகன் குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே ஆகியோரின் நடிப்பில், கதிரின் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்த திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பிடித்திருந்த நிலையில், அனைத்து பாடல்களுக்கும் சிறந்த வரவேற்பு கிடைத்திருந்தது.
அனைத்து பாடல்களுக்குமான வரிகளை வாலி எழுதியிருந்ததுடன், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் வெளியான ''காதல் எனும் தேர்வெழுதி'' பாடல் இன்றும் இளைஞர் யுவதிகளின் உதடுகளில் முனுமுனுக்கும் பாடலாக அமைந்துள்ளது.
இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலுக்கு ஈடாக ஸ்வர்ணலதாவின் குரலும் அமைந்திருந்த அதேவேளை, இந்த பாடலின் காட்சிகளுக்கு அந்த குரல்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது என்பது மிகையாகாது.
8. திருமண மலர்கள்
Star Hits ஜோதிகாவின் காட்சிகளுக்கு ஸ்வர்ணலதா தனது மெல்லிய குரலில் உயிர் கொடுத்திருந்தார்.
அஜித் மற்றும் ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே பூவெல்லாம் உன் வாசம்.
குடும்ப நண்பர்கள் எப்படி காதல்களாக மாறி இணைகின்றார்கள் என்பதே இந்த திரைப்படத்தின் கதையாக அமைந்திருந்தது.
இந்த திரைப்படத்தில் 6 பாடல்கள் இடம்பிடித்திருந்ததுடன், அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தார்.
பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிபதிவு செய்யப்பட்ட ஒரேயொரு பாடலாக திருமண மலர்கள் தருவாயா பாடல் அமைந்துள்ளது.
ஜோதிகாவின் காட்சிகளுக்கு, ஸ்வர்ணலதாவின் குரல் அவ்வாறே இணைந்ததாக காணப்படுவதுடன், அந்த காட்சிகளுக்கு ஸ்வர்ணலதா தனது மெல்லிய குரலில் உயிர் கொடுத்திருந்தார்.
9. மயிலிறகே மயிலிறகே
2002- ஆம் ஆண்டு வெளியான திரைப்படமே தென்காசி பட்டணம்.
இந்த திரைப்படத்தில் மயிலிறகே மயிலிறகே பாடலை, மனோ மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோர் இணைந்து பாடியிருப்பார்கள்.
இந்த பாடலுக்கு பீட்டர்ஸ் இசையமைத்திருந்ததுடன்,பாடலுக்கான வரவேற்பு இன்று வரை அவ்வாறே காணப்படுகின்றது.
10. சிஞ்ஞோரே சிஞ்ஞோரே
API Tamil Songs 'சிஞ்ஞோரே சிஞ்ஞோரே' பாடலை, மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்தே எழுதியுள்ளார்.
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், இலங்கை போர் களத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு திரைப்படமாக காணப்படுகின்றது.
மணிரத்னத்தின் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், பிரகாஷ்ராஜ் ஆகியோரின் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு, 2002-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.
இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற்றிருந்த போதிலும், பி.எச்.அப்துல் ஹமீத்திற்கு இந்த பாடல் அவரது வாழ்க்கையில் மிக மிக முக்கியமான பாடலாக விளங்குகின்றது. காரணம் அவரே இப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
தமிழ் வரிகளுடன், சிங்கள வரிகள் அடங்களாக எழுதப்பட்ட இந்த பாடலை, ஸ்வர்ணலதாவின் குரலிலும் கேட்கும் போது, அனைவருக்குமே ஆச்சரியம் தருகின்றது.
பி.எச்.அப்துல் ஹமீத் எழுதிய சிஞ்ஞோரே சிஞ்ஞோரே பாடலுக்கு ஸ்வர்ணலதா குரல் கொடுத்திருந்தார்
ஸ்வர்ணலதா உலகை விட்டு விடை பெற்று 15 வருடங்கள்
இந்திய சினிமாத்துறையில் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற ஸ்வர்ணலதா, 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி தனது 37வது வயதில் காலமானார்.
நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
1987-ஆம் ஆண்டு இசை ரசிகர்களுக்கு தனது குரலில் விருந்து வழங்கிய ஸ்வர்ணலதாவின் குரல் 2010-ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டாலும், அந்த குரலின் பதிவுகள் என்றென்றும் ரசிகர்களின் காதுகளில் ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு