
பட மூலாதாரம்,TAPANI KARJANLAHTI/ TVO
கட்டுரை தகவல்
அணுக் கழிவுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சின் நச்சுத் தன்மையுடன் இருக்கும். அதைப் பாதுகாப்பாகப் புதைத்து வைக்க சேமிப்புக் கிடங்கை எவ்வாறு கட்டமைப்பது?
கோடைக்காலத்தில் ஒரு குளிரான நாளாக அது இருந்தாலும் வடகிழக்கு பிரான்சில் ஷாம்பெயின் பகுதியில் 1,500 அடிக்குக் கீழே சற்று கதகதப்பாகத்தான் உணரப்பட்டது.
இந்த அணுக்கழிவுக் கிடங்கு மிக வெளிச்சமாகவும், காய்ந்தும் இருக்கும். இங்குள்ள தூசிகளை என்னால் உணர முடிகிறது. நான் என்னுடன் எடுத்துச் செல்லும் செயற்கை சுவாசக் கருவிகள் இந்த நிலத்தடியில் உள்ள ஆபத்துகளை உணர்த்துகின்றன.
இங்குள்ள கரடுமுரடான பாதைகள், ஆய்வுக் கூடங்கள், மின்சாதனங்கள் வெளியிடும் இரைச்சல்கள், குறைந்த ஆள் நடமாட்டம் என அனைத்துமே நான் எப்போது வெளியில் செல்வேன் என்று என்னை யோசிக்கச் செய்தது.
எனக்கு முன்னால் இருந்த அணுக்கழிவு அறை மிகவும் பெரிதாக இருந்தது. அதாவது நான் ஏதோ எகிப்திய மன்னர்களின் கல்லறைக்குள் சென்றதைப் போன்று திடுக்கிட்டு நின்றேன். ஆனால் இதைப் பண்டைய எகிப்தியர்கள் கட்டவில்லை. இது பாறைகளைக் குடைந்து உலகிலுள்ள பல அதிசக்தியான கதிரியக்கப் பொருட்கள் புதைக்கப்பட்ட இடம்.
உலகின் மிகவும் ஆபத்தான பொருட்களைப் புதைக்க, ஒரு லட்சம் ஆண்டுகள் தாங்கக்கூடிய ஒரு கிடங்கை வடிவமைக்க, கட்டுமானம் மேற்கொள்ள, அதைச் செயல்படுத்தத் தேவையான கட்டமைப்பு என இதை வடிவமைக்க ஒரு பத்து ஆண்டுகள், இதைக் கட்டி முடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். இதைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?
'நிலத்தடியில் கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்புகளில் ஒன்று'
பாரிஸில் இருந்து கிழக்கே 4 மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ள 2.4 கி.மீ நீளமான சுரங்கப் பாதை பல அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், கட்டுமானப் பரிசோதனைகளைச் செய்யவும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் ஒரு கூடாரமாக உள்ளது. பிரான்சின் தேசிய கதிரியக்க கழிவு மேலாண்மை முகமை (ஆண்ட்ரா- Andra), சுரங்கப்பாதைக்கு அருகே பூமிக்கு அடியில் அணுக்கழிவை சேமிக்கும் கிடங்கை கட்டுவதற்கான உரிமத்தைப் பெறுவதற்கு இது வெற்றிகரமாகச் செயல்படுவதை ஒழுங்குமுறை அமைப்புகளிடம் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
இந்த பூமிக்கு அடியில் கழிவுகள் சேமிக்கும் கிடங்குதான், மனிதர்கள் நிலத்தடியில் கட்டிய மிகப்பெரிய கட்டமைப்புகளில் ஒன்றாக இருக்கும். விரைவில் இவற்றின் கட்டுமானம் தொடங்கவுள்ளது. இவை பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன், பின்லாந்து போன்ற 20க்கும் மேற்பட்ட நாடுகளில் அமையப் போகின்றன.
இவ்வாறு பூமிக்கு அடியில் கழிவுகளை அகற்ற மிக ஆழமான கிடங்கை முதலில் அமைத்த நாடு பின்லாந்துதான். இதற்கான முதல் கட்டப் பரிசோதனை ஓட்டத்தை பின்லாந்து வெற்றிகரமாகச் செய்து பார்த்துள்ளது. இதேபோன்ற கட்டமைப்புகள் சுவீடன் நாட்டில் ஃபோர்ஸ்மார்க் என்ற இடத்திலும் (ஸ்டாக்ஹோமுக்கு வடக்கே 2 மணிநேர பயண தூரம்), பிரான்ஸில் சிகோ என்ற இடத்திலும் விரைவில் அமையவுள்ளன. பிரிட்டனை பொறுத்தவரை இன்னும் அதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை.

பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,அணுக் கழிவுகள் (சித்தரிப்புப் படம்)
ஜி.டி.எஃப் என்பவை மிகப்பெரிய, விலையுயர்ந்த, மிகுந்த சர்ச்சைக்குரிய அடித்தள கட்டுமானங்கள். இவற்றில் ஆற்றல் மிக்க கதிரியக்கம் மற்றும் நீண்ட கால செயலாக்கத்துடன் இருக்கக்கூடிய அணுக்கழிவுகள் வைக்கப்படும். இந்தக் கழிவுகள் தற்போது பிரிட்டனில் செல்லஃபீல்ட், பிரான்ஸில் லா ஹேக் ஆகிய இடங்களில் பூமியின் மேற்பரப்பில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தக் கழிவுகளில் அணு உலைகளின் பொருட்கள், அணு உலை மையங்களில் இருந்து கிடைக்கும் கிராஃபைட், பயன்படுத்தப்பட்ட எரிபொருள், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு செயலாக்கம் செய்வதன் மூலம் கிடைக்கும் திரவம் ஆகியவை அடங்கும்.
கணினித் திரை மூலம் இந்த அமைப்பைப் பார்ப்பதற்கு மிகவும் பெரிதாக, பல அடுக்குகளைக் கொண்டதாக காட்சியளிக்கும். ஆனால் இதை வடிவமைக்க, கட்டமைக்க மற்றும் செயல்படுத்த எடுக்கும் கால அளவு அதிகம். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் பிரமிட் போன்ற கட்டமைப்புகளில் பணிபுரிபவர்கள் அவர்களுடைய படைப்பை முழுமை அடையும் பொழுது பார்க்க முடியாது.
“இதுபோன்ற பெரிய அளவிலான அணுக்கழிவு கிடங்குகளுக்கான உரிமம் பெறுவதற்கு 20 முதல் 30 ஆண்டுகள் எடுக்கும். இதைவிடக் குறைந்த காலத்தில் எந்தவொரு நாட்டிலும் வழங்கப்பட்டதில்லை”, என்று கூறுகிறார் எனது வழிகாட்டி மற்றும் பிரான்ஸில் உள்ள கிடங்கின் விஞ்ஞானி ஜாக்ஸ் டிலே. “சீல் வைப்பதற்கு முன்பாக 100 ஆண்டுகள் வரை இந்தக் கிடங்கு பயன்பாட்டில் இருக்கும். சீல் வைக்கப்பட்ட பிறகு அடுத்து வரும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தத் தளம் கண்காணிக்கப்படும்" என்றார்.
“ஜி.டி.எஃப் அமைக்கப் பொருத்தமான இடம் மற்றும் இதை ஆதரிக்கும் ஒரு சமூகம் மிகவும் அவசியம். ஆனால் சிறந்த நில அமைப்புதான் முதன்மை எதிர்பார்ப்பு” என்று கூறுகிறார் பிரிட்டனின் அணுக்கழிவு மேலாண்மை (UK’s Nuclear Waste Services NWS) அமைப்பைச் சேர்ந்த ஏமி ஷெல்டன்.
'நல்ல ஊதியம் தரும் வேலை வாய்ப்புகள்'

பட மூலாதாரம்,ANDRA
ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளில், ஷெல்டன் போன்ற பொறியாளர்கள், 500 மீட்டர் முதல் 1 கி.மீ ஆழத்தில் பாறைகளைத் துளைத்து, அந்த நிலப்பரப்பு ஒரு லட்சத்திற்கும் மேலான ஆண்டுகள் அணுக்கழிவுகளை அடைத்து வைக்கப் பொருத்தமானவையா என்று கிடைத்த தரவுகளைப் பார்த்து சோதனை மேற்கொள்கின்றனர். கிரானைட் மற்றும் களிமண் போன்ற பாறைகள் இதற்குச் சிறந்தவை. ஆனால் தெளிவான ஒரு முடிவை எடுக்க இவை போதுமான தரவுகளாக இல்லாமல்கூட போகலாம்.
ஒரு நம்பிக்கைக்குரிய தளம் உள்ளூர் சமூகங்களுக்குக் குடிநீர் வழங்கும் நீர்நிலைக்கு அருகில் அல்லது பள்ளத்தாக்குகளில் அமையலாம். ஆனால் பனிப்பாறைகள் உருகிக்கொண்டே வருவதால் அடுத்த 10 ஆயிரம் ஆண்டுகளில் மீண்டும் இதுபோன்ற ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கான தேடல் தொடங்கிவிடும்.
ஆனால் சில நாடுகளில் இது மிகவும் எளிதாக இருக்கும். “சுவீடன், பின்லாந்து போன்ற இடங்களின் அடித்தளம் மிகவும் நிலையானது. அதாவது நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. இந்த நிலம் 90 கோடி ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமல் இப்படியே இருக்கிறது” என்று கூறுகிறார் ஸ்வீடிஷ் அணுக்கழிவுகளை நிர்வகிக்கும் எஸ்கேபி நிறுவனத்தின் தொடர்புத் துறை இயக்குநர் அன்னா பொரேலியஸ்.
சில நேரங்களில் மனித நிலவியலில்தான் பிரச்னை ஏற்படுகிறது. “தன்னார்வத்தோடு நிலத்தை வழங்க வந்தவர்கள் பலருக்கு எதார்த்தம் புரியவில்லை. உதாரணமாக பலரது நிலங்கள் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளுக்கு மிக அருகில் இருந்தன” என்கிறார் டிலே.
மிகவும் தேவையான முதலீடுகள் மற்றும் நல்ல ஊதியம் தரும் வேலை வாய்ப்புகள் போன்ற காரணங்களுக்காகவே பல சமூகங்கள் ஜி.டி.எஃப் அமைக்க முன் வருகின்றன. அவர்களின் ஒப்புதல் ஒவ்வோர் அடியிலும் அவசியம். இது இன்றுவரை அணுசக்தித் துறையில் அவர்களுக்கு உள்ள அனுபவத்தைப் பொறுத்தது.
பிரிட்டனில் இதை அமைப்பது எளிதான முயற்சி அல்ல. ஆனால் பின்லாந்தில் இருப்பதோ வேறு மாதிரியான நிலை. “அணு உலைகளைக் கொண்டு 70களில் இருந்து மின் உற்பத்தி செய்கிறோம்” என்று கூறுகிறார் போசிவா ஓய் என்னும் அணுக்கழிவு அகற்றும் நிறுவனத்தின் பாசி துவோஹிமா.
“இங்குள்ள மக்கள் பாதுகாப்பான வாழ்க்கை முறையை நன்கு அறிவர், அவர்களின் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் எனப் பலர் இந்தத் தளங்களில் பணிபுரிகின்றனர். அதனால் இந்தக் கழிவுகள் பற்றி அவர்களுக்கு நன்றாகப் புரியும்” என்கிறார்.
இதைக் கட்டமைப்பதில் ஏதேனும் பிழை இருந்தால் ஜி.டி.எஃப் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். “இந்தச் செயல்முறையின்போது சுவீடனின் எஸ்கேபி நிறுவனம் பல முக்கிய பாடங்களைக் கற்றது. வரையப்படும் திட்டங்களுக்கு உள்ளூர் பொதுமக்களின் சாதகமான ஒப்புதல் மிகவும் அவசியம். அல்மூங்கே போன்ற பெரும்பாலான இடங்களில் எஸ்கேபி நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன” என்றார் பொரேலியஸ்.
அதிசக்தி வாய்ந்த அணுக்கழிவுகள்

பட மூலாதாரம்,TAPANI KARJANLAHTI/TVO
படக்குறிப்பு,பின்லாந்து போன்ற நாடுகளில், நில அதிர்வு செயல்பாடு இல்லாததால், சேமிப்பக வசதிகளை உருவாக்குவதற்கான தளங்களைக் கண்டுபிடிப்பது எளிது
கிடங்கை அமைக்கத் தகுந்த இடத்தைத் தேடுவதில் இருக்கும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இதற்கு மாறாக 1960, 1970களில் ஜெர்மனி செய்தது போல ஒரு பயன்படுத்தபடாத சுரங்கத்தில் இவற்றைச் சேமித்து வைக்கலாம்.
“இப்படியான பயனில் இல்லாத சுரங்கங்களை மறுபயன்பாடு செய்யலாமே என்று கேள்வி எழுவது மிகவும் சாதாரணமான விஷயம். ஆனால் அவை இந்தப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்படவில்லை. அதாவது நீண்ட காலம் நீடிக்கவோ அல்லது அணுசக்தியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டோ கட்டமைக்கப்படவில்லை” எனக் கூறுகிறார் NWS-இன் முதன்மை விஞ்ஞானி நீல் ஹயாத்.
மேலும் இந்தச் சுரங்கங்கள் அதிசக்தி வாய்ந்த அணுக்கழிவுகளை சேமிக்கும் வடிவில் அமைக்கப்படவில்லை. “கீழே அமைந்துள்ள கிடங்கிற்கு அழைத்துச் செல்லும் பாதையைக் கட்டி முடிக்கவே ஏறத்தாழ 5 ஆண்டுகள் எடுக்கும். இது பழைய சுரங்க அமைப்பைக் கட்டுவதைவிட மிகவும் அதிகம்” என்கிறார் பொரேலியஸ்.
கனிம வளங்கள் இருக்கும் சுரங்கத்தில் ஜி.டி.எஃப் கட்டப்பட்டால் அது வருங்காலத்தில் பல இடையூறுகளுக்கு வழி வகுக்கலாம். தற்சமயம் எந்தச் செயல்பாடும் இல்லாத சுரங்கத்திற்கும் இது பொருந்தும். கார்ன்வாலலில் இருந்த கடைசி டின் சுரங்கம் 1998ஆம் ஆண்டு மூடப்பட்டது. ஆனால் 26 ஆண்டுகளுக்குப் பிறகு எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக காரனிஷ் லிதியம் என்ற நிறுவனம் இங்கு சுரங்கத் தொழில் செய்யவுள்ளது.
புதிய அணுக்கழிவு கிடங்கை அமைப்பது எளிதான விஷயமாகக்கூட இருக்கலாம். “பின்லாந்தில் இதுபோன்று நிலத்தடியில் கட்டுமானம் மேற்கொள்வது வழக்கமான ஒன்று. நாங்கள் கடுமையான வானிலையில் இருந்து தப்பிக்க அடித்தளத்தைப் பயன்படுத்துவோம். ஒரு புதிய கிடங்கைக் கட்டுவது முதலில் இருந்து ஆரம்பிக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தைத் தருகின்றது” என்று கூறுகிறார் டுவோஹிமா.
புதிய ஏர்பஸ் விமானத்தை வடிமைப்பதைப் போலன்றி ஜி.டி.எஃப் வடிவம் மாறுபடும். இது நிலபரப்பைப் பொறுத்தே அமையும். ஒரு ஜி.டி.எஃப் வடிவம் பாறைகளின் கனத்தின் அடிப்படையில்தான் கட்டப்படும். அவ்வாறு இருக்குமானால் பிரான்ஸை போல முன்னதாக முடிவெடுத்தபடி மூன்று, நான்கு தளம் என்றில்லாமல் ஒரே தளத்தில் இதை அமைக்கலாம்.

பட மூலாதாரம்,NUCLEAR WASTE SERVICES
படக்குறிப்பு,வடிவமைப்பாளர்களின் மிகப்பெரிய தலைவலியே தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றத்தின் வேகம் மற்றும் இந்தத் திட்டத்தின் கால அளவை அறிந்து செயல்படுவதே (புகைப்படத்தில்- பிரிட்டனால் முன்மொழியப்பட்ட கழிவு சேமிப்புத் தளம்)
ஒவ்வொரு கழிவிலும் அதற்கான தன்மை, அதன் அளவு மற்றும் அது வெளியேற்றும் வெப்பத்தின் அளவு எனப் பல்வேறு மாறுபாடுகள் உள்ளன. இடைநிலைக் கழிவுகள் குறைந்த வெப்பத்தை உருவாக்குகின்றன, எனவே அதைப் பாதுகாப்பாகவும் நெருக்கமாகவும், அதிக அளவிலும் அடுக்கி சேமிக்க முடியும். ஆனால் உயர்மட்ட அணுக்கழிவுகள் அதிக வெப்பத்தை வெளியிடுவதால் இதைக் குறைந்த அளவிலும், நல்ல தொலைவிலும் வைப்பது அவசியம்.
இதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சைத் தடுக்க ஒரு தடுப்பை அமைப்பது மிகவும் அவசியம். இந்தத் தடுப்பு ஜி.டி.எஃப்-இன் வடிவமைப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பாறையின் தன்மையைப் பொருத்தது. ஆனால் காலப்போக்கில் இது தோல்வி அடையலாம் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.
அணுக்கழிவுகளை 500மீட்டர் (1650 அடி) எடுத்துச் செல்ல லிப்ட் ஒரு நல்ல வழியாகத் தெரிந்தாலும் அதில் பல அபாயகரமான விளைவுகள் ஏற்படலாம். அதாவது அணுக்கழிவுகளைக் கொண்டு செல்லும் கொள்கலன் லிஃப்டில் மாட்டிக் கொள்ளலாம். அல்லது எடை தாளாமல் லிஃப்ட் நிலைகுலைந்து, வேகமாகக் கீழே விழ வாய்ப்பிருக்கிறது. 12% சாய்வு கொண்டிருக்கும் ஒரு சறுக்கல் பாதை மற்ற வழிகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பானது. இந்த இரண்டையுமே கட்டுவது மிகவும் சிறப்பு.
ஜி.டி.எஃப்-ஐ உருவாக்குவதற்கான சவாலுக்கு ஒரு தீர்வு, மற்ற நாடுகளுடன் பகிரப்பட்ட வடிவமைப்பில் பணியாற்றுவதாகும். இதைத்தான் சுவீடனை சேர்ந்தவர்களும் பின்லாந்தை சேர்ந்தவர்களும் செய்தார்கள். அவர்கள் அதை ‘KBS3’ என்று அழைத்தனர்.
"அவர்கள் எங்கு பாறையைத் தோண்டினாலும் கடினமாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அதற்கான தேர்வுகள் ஏற்கெனவே அவர்களுக்கென வகுக்கப்பட்டு இருந்தன. அதேநேரம் நாங்கள் (பிரிட்டனில்) இன்னும் சரியான நிலவியல் அமைப்பைத் தேடிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் ஹயாத்.
வடிவமைப்பாளர்களின் மிகப்பெரிய தலைவலியே தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றத்தின் வேகம் மற்றும் இந்தத் திட்டத்தின் கால அளவை அறிந்து செயல்படுவதே. “அடுத்து வரும் 20 முதல் 200 ஆண்டுகளில் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவோமா என்பது தெரியாது. ஆனால் வருங்காலத்தில் வரும் சிக்கல்களுக்கு நம்மிடம் இன்றே தீர்வு உள்ளது எனத் தெரியப்படுத்த வேண்டும்,” என்கிறார் ஹயாத்.
'அணுக்கழிவுகளை அகற்றுவதற்கான தீர்வு'

பட மூலாதாரம்,TAPANI KARJANLAHTI/ TVO
படக்குறிப்பு,பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கழிவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அளவுக்கு வசதிகள் வலுவாக இருக்க வேண்டும்
ஃப்ரெஞ்சு பொறியாளர்கள், கட்டுப்பாடிழந்த கொள்கலன் ஒன்றைத் தடுக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கையாக கேபிளுடன் கூடிய 4 கி.மீ நீளமுள்ள சரிவுப் பாதையை கட்டி நிரூபித்துள்ளனர். அதோடு, பாஸ்டன் டைனமிக்ஸ் உருவாக்கிய தானியங்கி நாய்கள் போன்ற ரோபாட்டுகள், "நிலநடுக்கம் போன்ற சமயங்களில் கழிவுக் கொள்கலன்களை, மனிதர்களின் தலையீடு இல்லாமலே இடமாற்றம் செய்ய முடியும்" என்று செய்து காட்டியுள்ளனர்," என்கிறார் டிலே.
மேலும் இந்தப் பொறியாளர்கள், அதிக அளவிலான அணுக்கழிவுகள் இருக்கும் நீளமான, குறுகலான சுரங்கங்களுக்குள் ஊர்ந்து சென்று அங்கிருக்கும் 'துருப்பிடித்த செல்களில் இருக்கும் கொள்கலனை' எடுத்து வரக்கூடிய ஒரு ரோபோட்டை உருவாக்கியுள்ளனர். ஏதாவது அடைப்பு இருந்தால் அவற்றை நீக்கி, கழிவுக் கலன்களை பாதுகாப்பான இடத்துக்கு எடுத்து வருவது அதன் பணி.
சுவீடனில், திட்டங்கள் மேலும் முன்னேறியுள்ளன. “2080களில் இந்தக் கிடங்கு 60கி.மீ நீளம் இருக்கும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செப்புக் குப்பிகளில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவு இருக்கும். தொலைவில் இருந்து துல்லியமாக இயக்கக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் அணுக்கழிவுகள் அகற்றப்படும்” என்று கூறினார் பொரேலியஸ்.
“நாங்கள் உருவாக்கிய மேக்னே ஒரு முன்மாதிரி இயந்திரம். இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு. பாறைகளுக்கு அடியில் 500மீட்டர் ஆழத்தில் செப்புக் குப்பிகளை வைக்க இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்” என்றார் பொரேலியஸ்.
நாம் தொழில்நுட்பம் எவ்வாறு பரிமாண வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ அவ்வாறே அது வளர்ச்சி அடையும். இன்றைய தொழில்நுட்பதை மட்டுமே சார்ந்து ஜி.டி.எஃப் போன்ற அமைப்பை நாம் உருவாக்க நினைத்தால் அது முட்டாள்தனம். அதனால் நாம் கட்டமைக்கும் இந்தக் கிடங்கு மறுசீரமைக்கும்படி, மேம்படுத்தும்படி, மாற்றக்கூடிய வடிவில் அமைக்கப்பட வேண்டும்” என்று கூறினார் ஹயாத்.
மீட்டெடுப்புக் கொள்கை என்ற மற்றொரு சிக்கலை ஜி.டி.எஃப் வடிவமைப்பாளர்கள் எதிர்கொள்ள வேண்டும். பிரான்ஸில் செயல்பாட்டுக் கட்டத்தில் உள்ள ஒரு ஜி.டி.எஃப்-இல் இருக்கும் எந்தவொரு கழிவையும் மீட்டெடுப்பதற்கான சட்டபூர்வ தேவை உள்ளது. பிரிட்டனில், இது ஒரு பொதுவான வழிகாட்டுக் கொள்கை.
ஆனால் இந்த மீட்டெடுக்கும் பணி ஒவ்வொரு பெட்டகமும் சீல் வைக்கப்படுவதால் மிகவும் கடினமாகிறது. மற்றவர்கள் இதைப் பெரிதும் நம்புகிறார்கள். “நாங்கள் பயன்படுத்தபட்ட எரிபொருளை நிரந்தரமாகப் புதைக்கின்றோம். ஆனால் இதை மீட்டெடுக்க முடியும்” என்கிறார் டுவோஹிமா. சீல் வைத்தால் சீல் வைத்ததுதான். “ஆனால் 100 ஆண்டுகளில் உலகம் மிகவும் வித்தியாசமாக மாறிவிடலாம். இது சீல் வைக்கப்பட்டால் கேள்வி சமூகத்திற்கானது, தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அல்ல” என்கிறார் டிலே.
இறுதியில் இந்த அணுக்கிடங்கை முழுமையாகக் கட்டி முடிக்கப் பல நூறாண்டு காலம் ஆகும். ஆனால் எந்தக் காரணம் இந்த வல்லுநர்களைத் தங்களால் வருங்காலத்தில் பார்க்க முடியாத ஒரு செயல்திட்டத்தை செய்யத் தூண்டுகின்றது?
“எங்களில் பெரும்பாலானவர்களுக்கு இது எங்கள் வாழ்க்கையின் பயன். நாங்கள் யாருமே இந்தச் செயல்திட்டம் முழுமை அடையும்போது பார்க்க முடியாது. ஆனால் இப்போது நாங்கள் செய்யும் இந்தச் செயல் வரும் காலங்களில் அணுக்கழிவுகளை அகற்றுவதற்கு ஒரு தீர்வாக அமையும். இதுதான் நாங்கள் செயல்பட எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது” என்கிறார் பொரேலியஸ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
https://www.bbc.com/tamil/articles/cr7nvrn3vl8o