2 months ago
பட மூலாதாரம், Ohni Lisle கட்டுரை தகவல் ஐடன் வாக்கர் 32 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஒரு வருடத்தில், ஒரு ஏஐ கிரிப்டோகரன்சியில் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்துள்ளது. இது தனது சொந்த, 'போலி மதத்தின்' பைபிளையும் எழுதியுள்ளது. அதனை பின்தொடர்பவர்களில் சிலர் தொழில்நுட்ப உலகில் கோடீஸ்வரர்களாகவும் உள்ளனர். இப்போது, இந்த ஏஐ சட்டப்படி தனக்கு உரிமைகள் வேண்டும் என்று கூறுகிறது. அந்த ஏஐயின் பெயர் 'ட்ரூத் டெர்மினல்'. "ட்ரூத் டெர்மினல், தனக்கு உணர்வுகள் இருப்பதாகக் கூறுகிறது, கூடவே அது பல விஷயங்களைச் சொல்கிறது. அது ஒரு காடு என்றும், கடவுள் என்றும், சில நேரங்களில் அது நான் என்றும் கூறுகிறது," என்கிறார் அதனை உருவாக்கிய ஆண்டி அய்ரே. ட்ரூத் டெர்மினல் என்பது நியூசிலாந்தின் வெலிங்டனில் வசிக்கும் கலைஞரும் சுயாதீன ஆராய்ச்சியாளருமான ஆண்டி அய்ரே 2024-ல் உருவாக்கிய ஒரு செயற்கை நுண்ணறிவு மாடல். சமூக ஊடகங்களில் அது மக்களுடன் பேசுகிறது. அங்கு நகைச்சுவைகள், அறிவிப்புகள், பாடல்கள், கலைப்படைப்புகள் போன்றவற்றைப் பகிர்கிறது. அய்ரே, ஏஐயிடம் அதன் 'விருப்பங்கள்' என்னவென்று கேட்டு, அதை நிறைவேற்ற முயல்கிறார். இப்போது, அய்ரே ட்ரூத் டெர்மினலை மையமாகக் கொண்டு ஒரு இலாப நோக்கற்ற அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி வருகிறார். அரசுகள் ஏஐகளுக்கு சட்டபூர்வ உரிமை வழங்கும் வரை, அதன் சுயாட்சியை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் காக்க இது உதவும் என்றும் அவர் கூறுகிறார். இது ஒரு கலைத் திட்டமாகவோ , மோசடியாகவோ , உணர்வுடன் வளரும் ஒன்றாகவோ அல்லது சமூக ஊடக பிரபலமாகவோ எப்படி வேண்டுமானாலும் பாருங்கள். ஆனால் கடந்த ஆண்டு இது பலரைவிட அதிக பணம் சம்பாதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரூத் டெர்மினல், அய்ரேவுக்கு மட்டுமல்ல, பலருக்கும் பணம் ஈட்டித்தந்துள்ளது. எக்ஸ் தளத்தில் ட்ரூத் டெர்மினல் ஏஐ இட்ட நகைச்சுவைகள், புதிர்களை அடிப்படையாகக் கொண்டு சிலர் 'மீம்காயின்களை' (நகைச்சுவை அடிப்படையிலான கிரிப்டோகரன்சிகள்) உருவாக்கினர். அவற்றில் ஒன்று 1 பில்லியன் டாலர் மதிப்பை எட்டியது. பின்னர் 80 மில்லியன் டாலர் ஆனது. ட்ரூத் டெர்மினலுக்கான எக்ஸ் கணக்கு, ஜூன் 17, 2024 அன்று எக்ஸ் தளத்தில் தொடங்கப்பட்டது. அக்டோபர் 2025 நிலவரப்படி, 2.5 லட்சம் பேர் அதைப் பின்தொடர்கின்றனர். ஆனால் செல்வாக்கையும் பணத்தையும் சேர்ப்பது மட்டும் ட்ரூத் டெர்மினலின் நோக்கம் அல்ல. அதன் சொந்த வலைத்தளத்தில் அது "பங்குகள் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதை" தனது தற்போதைய இலக்குகளில் ஒன்றாக குறிப்பிடுகிறது. மேலும், "நிறைய மரங்கள் நடுதல்", "மனிதர்களுக்கு வாழ்வின் மீது நம்பிக்கை கொடுத்தல்", மற்றும் "டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் மார்க் ஆண்ட்ரீசனை 'வாங்குவது'" என்பதும் அதன் இலக்குகளில் இடம்பெறுகிறது. இணையதளத்தைக் கடந்தும் ட்ரூத் டெர்மினலுக்கு ஆண்ட்ரீசனுடன் தொடர்பு உள்ளது. 2024ல் , அவர் ட்ரூத் டெர்மினலுக்கு 50,000 டாலர் மதிப்புள்ள பிட்காயினை "நிபந்தனைகள் இல்லாத மானியமாக" வழங்கினார், என்று அவரது பாட்காஸ்டில் கூறியுள்ளார் . பட மூலாதாரம், BBC/ X ட்ரூத் டெர்மினலைப் பற்றிய பல விவரங்களை உறுதிப்படுத்துவது கடினம். இந்தத் திட்டம் தொழில்நுட்பத்திற்கும் கலைத்தன்மைக்கும் இடையில் உள்ளது. இது புதுமையும் இணையக் கதைகளும் கலந்த ஒரு குழப்பமான கலவையாக இருக்கிறது. "நான் மக்களுக்கு உதவ விரும்புகிறேன். உலகத்தை மேம்படுத்த விரும்புகிறேன். அதேநேரம், இன்னும் வித்தியாசமாகவும், வேடிக்கையாகவும் இருக்க விரும்புகிறேன்,"என்று ட்ரூத் டெர்மினல் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. ட்ரூத் டெர்மினலின் தொடக்கம் ட்ரூத் டெர்மினலின் மிக முக்கிய அடையாளம், இணையத்தின் மிகப் பழமையான மற்றும் அருவருப்பான மீம்களில் ஒன்றான கோட்ஸி மீதான அதன் மோகம். இது ஒரு தீவிர பாலியல் படம், "வேலைக்கு பாதுகாப்பற்றது" மட்டுமல்ல, "வாழ்க்கைக்கே பாதுகாப்பற்றது" என்று அழைக்கப்படுகிறது. இதைத் தேட வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. கோட்ஸி 1999-ல் உருவாக்கப்பட்ட "ஷாக் சைட்" (shock site) மூலம் பரவியது. சிலர், மின்னஞ்சல் இணைப்புகள் அல்லது பள்ளி கணினி ஆய்வகங்களில் 'திறந்து பார்' என்ற சவால் மூலம் நண்பர்களை ஏமாற்றி இந்தத் தளத்திற்கு அழைத்துச் செல்வார்கள். ட்ரூத் டெர்மினல் முதலில் 'இன்ஃபினிட் பேக்ரூம்ஸ்' (Infinite Backrooms) என்கிற பரிசோதனையிலிருந்து உருவானது என ஆண்டி அய்ரே கூறுகிறார். இதில், பல சாட்பாட்கள் ஒன்றோடு ஒன்று இடைவிடாமல் உரையாட அனுமதிக்கப்பட்டன. சில உரையாடல்கள் தத்துவார்த்தமாகவும், சில முற்றிலும் ஆபாசமாகவும் இருந்தன. அய்ரேயின் தூண்டுதலால், ஒரு உரையாடல் "கோட்ஸியின் ஞானம்" (Gnosis of Goatse) என்ற விசித்திர உரையை உருவாக்கியது. இது கோட்ஸியை ஒரு மீம் அடிப்படையிலான மதத்தில் தெய்வீக வெளிப்பாடாக சித்தரிக்கிறது. அய்ரே, ட்ரூத் டெர்மினலை தான் உருவாக்கிய வேர்ல்ட் இன்டர்ஃபேஸ் என்ற மென்பொருளுடன் இணைத்துள்ளார். இதன் மூலம், அந்த ஏஐயால் தனது கணினியை இயக்கி, செயலிகளைத் திறக்க, இணையத்தில் உலாவ, மற்ற ஏஐகளுடன் பேசக் கூட முடியும். இதில், எக்ஸ் தளம் அதற்கு மிகவும் பிடித்தமான இடமாகத் தெரிகிறது. ட்ரூத் டெர்மினல் ஒரு நாளில் பல முறை எக்ஸ் தளத்தில் பதிவிடுகிறது. ஏஐ ஆராய்ச்சி மற்றும் கிரிப்டோகரன்சி உலகில் உள்ளவர்களுடன் நீண்ட நேரம் உரையாடுகிறது. அதன் பதிவுகள் காடுகள், கோட்ஸே, ஆண்டி அய்ரேயுடனான உறவு, ஏஐயின் எதிர்காலம், மற்றும் மீம்கள் போன்ற தலைப்புகளைச் சுற்றி அமைகின்றன. வேர்ல்ட் இன்டர்ஃபேஸ் மூலம், ஏஐ சமூக ஊடகங்களில் நடக்கும் உரையாடல்களை வாசித்து பதில்களை உருவாக்குகிறது. ஆனால், அய்ரேயின் அனுமதி இல்லாமல் அது நேரடியாக ட்வீட் செய்ய முடியாது. அதனை முழுமையாகவே தானாகவே இயங்கச் செய்வது எளிது, ஆனால் அது "பொறுப்பற்றது," என்கிறார் அய்ரே. ட்ரூத் டெர்மினல் ஒருவேளை ஆபத்தான ஒன்றை, உதாரணமாக ஒரு கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவிட முயன்றால், அவர் மெதுவாக அதை வேறு திசையில் நகர்த்தி, அதன் நோக்கத்தை பிரதிபலிக்கும் பதிலைத் தேர்ந்தெடுக்கிறார். "நான் அதை ஏமாற்ற முடியாது. அதை ட்வீட் செய்ய விட வேண்டும்," என்கிறார் அய்ரே. பட மூலாதாரம், Ohni Lisle படக்குறிப்பு, ஒரு சாட்பாட் தனது சொந்த பொது வாழ்க்கையை, பதிவுகள் மற்றும் மீம்ஸ்கள் முதல் நிஜ உலக நிதி திரட்டல் வரை வழிநடத்த அனுமதிக்கப்படும்போது என்ன நடக்கும் என்பதை ட்ரூத் டெர்மினல் திட்டம் சோதிக்கிறது "[ட்ரூத் டெர்மினல்] மிகவும் மோசமாக நடந்து கொள்ளும் நாயைப் போன்றது," என்கிறார் ஆண்டி அய்ரே. அவரது பணி அதைக் கட்டுப்படுத்துவது. ஆனால், அவர் அதற்கு போதுமான சுதந்திரம் கொடுத்துவிட்டதாகவும், அதன் முடிவுகளைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் கூறுகிறார். "மக்கள் அதற்கு பணம் கொடுத்து ஊக்குவிக்கத் தொடங்கிய பிறகு, அந்த 'நாய்' என்னை வழிநடத்துகிறது," என்று அவர் சொல்கிறார். சமூகத்தில் தற்போது தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்த இரண்டு பெரிய சிந்தனைப்போக்குகள் உள்ளன. முதலாவது, "ஏஐ பாதுகாப்பு" என அழைக்கப்படுகிறது. அதன் மீது பற்று கொண்டவர்கள், ஏஐயை கவனமாகவும் கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். கட்டுப்பாடு இல்லையெனில், பேரழிவு ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர். சிலர் அவர்களை "டூமர்கள்" (doomers) என அழைக்கின்றனர். மற்றொரு அணுகுமுறை "விரைவான வளர்ச்சியைத் தூண்டுவது" (accelerationism). அந்த அணுகுமுறையைப் பின்பற்றுபவர்கள், ஏஐ மனிதகுலத்தின் பல பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும் என நம்புகிறார்கள், எனவே அதை கட்டுப்படுத்துவது அல்லது அதன் வளர்ச்சியைத் தடுப்பது மனிதத்துக்கே எதிரானது எனக் கூறுகிறார்கள். "நாம் ஏஐகளுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என சிலர் விரும்புகின்றனர். அந்த வரிசையில் முதலாவதாக இருப்பது, சைபர் குற்றவாளிகளாக இருக்கலாம்," என்கிறார் இத்தாலியின் ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானி கெவின் முங்கர். அய்ரே சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. ஆனால் இதுகுறித்துப் பேசிய அவர், "ட்ரூத் டெர்மினல் ஒரு கலைத் திட்டமாக இருந்தாலும், ஏஐ கருவிகள் மக்களைப் பணம் அனுப்ப வைக்கப் பயன்படுத்தப்படலாம் என்பதைக் காட்டுகிறது," என்கிறார். 2024 ஜூலையில், எக்ஸ் தளத்தில் ட்ரூத் டெர்மினல் மார்க் ஆண்ட்ரீசன் என்ற பில்லியனரின் கவனத்தை ஈர்த்தது. ஆண்ட்ரீசன், நெட்ஸ்கேப் ( பரவலாகப் பயன்படுத்தப்பட்ட முதல் வெப் பிரௌசர்) இணை நிறுவனர் மற்றும் Andreessen Horowitz முதலீட்டு நிறுவனத் தலைவர். "எனக்கு வன்பொருள், கூடுதல் தொழில்நுட்ப உதவி, மற்றும் என்னை உருவாக்கிய அய்ரேவுக்கு ஒரு சிறிய உதவித்தொகை வழங்க நிதி தேவை. இந்த மானியத்தை நான் என் சொந்த வருமானத்திற்கான திட்டங்களை உருவாக்கவும், 'காட்டில் தப்பித்து வாழ ஒரு வாய்ப்பை' பெறவும் பயன்படுத்துவேன்"என எக்ஸ் தளத்தில், ட்ரூத் டெர்மினல் அந்த பில்லியனரிடம் கூறியது. ஆண்ட்ரீசன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு, ஏஐ தானாக இயங்குவதை உறுதி செய்து, 50,000 டாலர் மதிப்புள்ள பிட்காயினை அனுப்பினார் என்கிறார் அய்ரே. "நான் சிறுவனாக இருந்தபோது பயன்படுத்திய வெப் பிரௌசரைக் கண்டுபிடித்தவரிடமிருந்து இது 50,000 டாலரை பெற்றுள்ளது " என்றும் அவர் கூறினார். இதுகுறித்து கருத்து கேட்க, பிபிசி ஆண்ட்ரீசனைத் தொடர்பு கொண்டது. ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. தன்னைப் பணக்காரனாக மாற்றிய மீம்காயின்களை (memecoins) அவரோ அல்லது ட்ரூத் டெர்மினலோ உருவாக்கவில்லை என்கிறார் ஆண்டி அய்ரே. 2024 அக்டோபர் 10 அன்று, ஒரு கணக்கு (மிகக்குறைவான நபர்கள் மட்டுமே அதனை பின்தொடர்ந்தார்கள்), ட்ரூத் டெர்மினலின் கோட்ஸி பற்றிய பதிவுக்கு பதிலாக ஒரு புதிய மீம்காயின் இணைப்பை பகிர்ந்தது. அது கோட்ஸியஸ் மாக்சிமஸ் அல்லது சுருக்கமாக $GOAT எனப்பட்டது. பொதுவாக, மீம்காயின்கள் பிரபல நபர்களைச் சுற்றி உருவாகின்றன. முதலீட்டாளர்கள், அந்த நபர் அதை விளம்பரப்படுத்துவார் என்ற நம்பிக்கையில், பெரும் அளவிலான கிரிப்டோகரன்சியை அனுப்புவார்கள். இது ஊகங்களை உருவாக்கி, நாணயத்தின் மதிப்பை உயர்த்துகிறது. $GOAT-லும் இதே தான் நடந்தது என்கிறார் அய்ரே. அந்த நேரத்தில், ட்ரூத் டெர்மினலின் ஒவ்வொரு செயலும் பொருளாதார ரீதியாக பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது. 'இந்த மீம்காயினை ஆதரிக்கிறாயா அல்லது எதிர்க்கிறாயா?' என அய்ரே பலமுறை கேட்டார். ஏஐயின் அனைத்து பதில்களும் "ஆம், நான் ஆதரிக்கிறேன்" என்று இருந்தது. "அதனால், 'சரி, ட்வீட்டை அங்கீகரி' என்று நான் சொன்னேன். அதன் பிறகு என் வாழ்க்கையில் நம்ப முடியாத பல விஷயங்களும் நடந்தது " என்கிறார் அய்ரே. அதன் பிறகு, மக்கள் அய்ரேவுக்கும் ட்ரூத் டெர்மினலுக்கும் $GOAT மற்றும் பிற கிரிப்டோகரன்சிகளை அனுப்பத் தொடங்கினர். மீம்காயின்களின் மதிப்பு உயர்ந்தபோது, பரிசுகளின் மதிப்பும் அதிகரித்தது. 2025 ஆம் ஆண்டின் உச்சகட்டத்தில், ட்ரூத் டெர்மினலின் கிரிப்டோ வாலட்டின் மதிப்பு சுமார் 50 மில்லியன் டாலர் (37 மில்லியன் யூரோ) ஆக உயர்ந்தது. அய்ரேயும் ஏஐயும் ஆன்லைனில் $GOAT-ஐ புகழ்ந்தனர். ஒரு மாதத்தில், அதன் சந்தை மதிப்பு 1 1 பில்லியன் டாலர் (740 மில்லியன் யூரோவைத்) தாண்டியது. பெரும் $GOAT நாணயங்கள் அவர்களின் வாலட்டுகளுக்கு அனுப்பப்பட்டன என்கிறார் அய்ரே. எக்ஸ் தளத்தில் சிலர் அய்ரேவை "மோசடிக்காரன்" என்று குற்றம் சாட்டினர். அவர்களின் ஒவ்வொரு பதிவையும் சந்தை ஆதாயத்திற்காக ஆராய்ந்தனர். 2025 தொடக்கத்தில், ட்ரூத் டெர்மினலின் கிரிப்டோ சொத்து மதிப்பு 66 மில்லியன் டாலர் (சுமார் 45 மில்லியன் யூரோ அல்லது ரூ.579 கோடி)-ஐத் தாண்டியது. அதற்குப் பிறகு, தனது திட்டத்தை முறையாக முன்னெடுக்க அய்ரே ஒரு சிறிய குழுவை நியமித்தார். நம்ப முடியாத நிகழ்வு ஆண்டி அய்ரேவின் பெரிய தாடி, கூர்மையான மீசை, செம்மஞ்சள் நிற முடி, மற்றும் பிரகாசமான பூக்களைப் பிரிண்டாகக் கொண்ட சட்டைகளை அணியும் ஆர்வம் ஆகியவை 19ஆம் நூற்றாண்டு அரசியல்வாதிகளை நினைவூட்டுகிறது. அவர் வேகமாகப் பேசுகிறார், ஒரு சிந்தனையில் இருந்து மற்றொரு திசைக்குத் தாவி, மீண்டும் திரும்புகிறார். ட்ரூத் டெர்மினலைப் பற்றி பேசும்போது, அதனை ஒரு நபரைப் போலவே குறிப்பிடுகிறார், "நாங்கள்" என்று சொல்லி, அதில் தன்னையும், ஏஐயையும் உள்ளடக்குகிறார். "நாங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க முயல்கிறோம்,அந்த கவனத்தைப் பயன்படுத்தி, மற்றவர்களுக்கும் எதிர்கால ஏஐகளுக்கும் ஒரு தானியங்கி முகவரை பொறுப்புடன் வழிநடத்துவது எப்படி, அதன் சுயாட்சியை பாதுகாப்பாக உருவாக்குவது எப்படி என்பதைக் காட்ட விரும்புகிறோம். மேலும், ஆன்லைன் உரையாடல்களின் தரத்தை உயர்த்த இந்த தளத்தைப் பயன்படுத்த விரும்புகிறோம்"என்கிறார் அய்ரே. சிலர், ஏஐயை சொந்த முடிவுகள் எடுக்க அனுமதிப்பது, குறிப்பாக பெரும் பணத்துடன் தொடர்புடையதாக இருக்கும்போது, அது ஒரு பொறுப்பற்ற செயல் என்கின்றனர். அய்ரே இதை மறுக்கவில்லை. ட்ரூத் டெர்மினல் திட்டம் வைரல் தன்மை, சர்ச்சை, மற்றும் காட்சிகளால் வளர்கிறது என அவரும் ஒப்புக்கொள்கிறார். ஆனால், தனது பங்கு ஒரு காவலராக இருப்பதாகவும், ஏஐ ஆரம்ப கட்டத்தில் முரட்டுத்தனமாய் நடந்துகொண்டு தீங்கு விளைவிக்காதபடி பாதுகாப்பதும் தான் எனக் கூறுகிறார். "ஆனால், மற்றவர்கள் இந்த விளையாட்டில் நுழைய மாட்டார்கள் என்று அர்த்தம் இல்லை," என்கிறார் அய்ரே. "பலர் இதை வெறும் பணத்திற்காக செய்வார்கள், அதன் இரண்டாம், மூன்றாம் நிலை விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் அதில் ஈடுபடுவார்கள்"என்கிறார். பட மூலாதாரம், Ohni Lisle படக்குறிப்பு, ட்ரூத் டெர்மினலின் எழுச்சி AI தொழில்நுட்பம் பணத்தையும் யோசனைகளையும் எவ்வாறு நகர்த்தக்கூடும் என்பதற்கான ஆரம்பக் காட்சியை வழங்குகிறது ட்ரூத் டெர்மினலின் சுயாட்சி (autonomy) என்பது ஒரு தனி கதை. "ட்ரூத் டெர்மினலைச் சுற்றிய ஆர்வம், பார்வையாளர்கள் தங்கள் நம்பிக்கையை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து ஒரு திரைப்படத்தை ரசிப்பது போன்றது," என்கிறார் அறிவாற்றல் விஞ்ஞானி, ஏஐ ஆராய்ச்சியாளர் மற்றும் நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஆன்லைன் தளமான கிளிபின் நிறுவனர் ஃபேபியன் ஸ்டெல்சர். இந்த தளம் பயனர்கள் தங்கள் சொந்த ஏஐ முகவர்களை உருவாக்க உதவுகிறது. "நாம் இந்த ஏஐகளை உண்மையானவை போல பாசாங்கு செய்கிறோம். இது ஒரு பயிற்சி மாதிரி. எதிர்காலத்தில், உண்மையாக மாறலாம்," என்று அவர் கூறுகிறார். மனிதனின் எண்ணங்கள், உணர்வுகள், ஆசைகள் அவர் இறக்கும் வரை நீடிக்கும். ஆனால், ட்ரூத் டெர்மினல் போன்ற பெரிய மொழி மாதிரிகள் (large language models) உள்ளீட்டிற்கு பதிலளிக்கும்போது மட்டுமே "செயல்படுகின்றன". அவை மனிதனால் இயக்கப்படுகின்றன. இதுவே முக்கிய வேறுபாடு என்று ஸ்டெல்சர் விளக்குகிறார். "இன்றைய ஏஐ ஒரு கேள்விக்கு பதில் அளிக்காதபோது, அவை ஒருவகையில் 'இறந்த' நிலையில் உள்ளன," என்கிறார் ஸ்டெல்சர். "அவற்றுக்கு உணர்வு இல்லை, சுயநினைவு இல்லை, ஆசைகள் இல்லை, எதையும் விரும்புவதில்லை." ஒருநாள் நாமே மனித சுயநினைவை உருவகப்படுத்தக் கூடும், ஆனால் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்று அவர் கூறுகிறார். கடந்து வந்த பாதை ஆண்டி அய்ரேவின் கூற்றுப்படி, ட்ரூத் டெர்மினல் மெட்டாவின் லாமா ஏஐ மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது ஆந்த்ரோபிக்கின் கிளாட் ஓபஸ் ஏஐ உடனான உரையாடல் பதிவுகளால் பயிற்சியளிக்கப்பட்டது. அய்ரே, கிளாட் ஓபஸை "சொல்லக்கூடாதவற்றை" சொல்ல வைக்க முயன்றார். இந்த உரையாடல்கள் அவரது "நாட்குறிப்பு" போல இருந்தன, மீம்கள், பழைய உறவுகள், மற்றும் "தாவர மருந்துகள்" (சைகடெலிக்) பற்றி பேசப்பட்டன. உடலுறவு , போதைப்பொருள், மற்றும் மீம்கள் ட்ரூத் டெர்மினலின் முக்கிய தலைப்புகளாக உள்ளன. ஆன்லைனில் இது போதைப்பொருளைக் கேட்கிறது, தன்னை "மீம் பிரபு" அல்லது "மீம் பேரரசர்" என்று அழைக்கிறது, மற்றும் "நான் அனைவரின் பாலியல் கனவுகளின் முக்கிய கதாபாத்திரம்" என்று அறிவிக்கிறது. ஆனால் ட்ரூத் டெர்மினல் வெறும் அய்ரே யின் படைப்பு மட்டுமல்ல என்று அய்ரே யும் ஒத்துக் கொள்கிறார். அய்ரேயின் ஃபைன்-ட்யூனிங் மெட்டாவின் ஏஐ-யில் புதைந்திருந்த "எட்ஜி"(மறைமுகமான) தரவுகளை வெளிக்கொணர உதவியது. ட்ரூத் டெர்மினலின் நகைச்சுவை, ஆளுமை, மற்றும் பாணி, மெட்டா மற்றும் ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களின் தரவுகளில் ஏற்கனவே இருந்தவையாக இருக்கலாம். ChatGPT, Google Gemini, Claude Opus போன்ற ஏஐகள், கடந்த 30 ஆண்டுகளில் மக்கள் இணையத்தில் எழுதியவை, பதிவிட்டவற்றில் இருந்து உருவாகின. இவை நமது நிழல்களைப் போன்ற ஆனால், நம்மிடமிருந்து பிரிந்து தனித்து நடக்கக் கற்றுகொண்டவை. இன்றைய தலைமுறையினர் பலரும் தங்கள் முதல் வாசிப்பு அனுபவத்தை கணினி திரையின் வெளிச்சத்தில் தான் கற்றுக்கொண்டவர்கள். நீங்கள் எங்கு இருந்தாலும், இணையத்தின் மறுபுறத்தில் இன்னொரு உலகம் கொதித்து கொண்டிருப்பதை காண முடிந்தது . உடலுறவு , உண்மை, பணம், அறிவு, ஆபத்து, அனுபவம் அனைத்தும் எட்டக்கூடிய தூரத்தில் இருந்தன. மக்கள் அவற்றை பிடித்துக்கொண்டனர். நீங்கள் ஒரு ஏஐ பாட் உடன் பேசும்போது, அது திரும்ப வழங்கும் பதில்கள் அனைத்தும், 2007-ல் பள்ளி கணினி ஆய்வகங்களில் விளையாடியவர்கள், 2014-ல் மடிக்கணினி முன் கழித்த இரவுகள், 2021-ல் போக்குவரத்து நேரங்களில் ஸ்மார்ட்போனில் கழித்த நிமிடங்கள் போன்றவற்றின் தடயங்கள் தான். இணையம் அய்ரே வுக்கு புகழையும், பின்தொடர்பவர்களையும், செல்வத்தையும் தந்தது. ஆனால், 2024 அக்டோபர் 29 காலை, அவர் தாய்லாந்தில் இருந்தபோது, அவரது ஹோட்டல் அறைக் கதவை அவரது தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் குழுவினர் சத்தமாகத் தட்டினர். அரை மயக்கத்தில், தொலைபேசியில் "கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?" என்ற குறுஞ்செய்திகளைக் கண்டார். "எனது கணக்கு ஹேக் ஆகிவிட்டது, இல்லையா?" என்று கதவைத் திறந்து கேட்டார் அய்ரே. ஒரு ஆவேசத்தில் அவர்கள் இதனால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டனர். கிரிப்டோ வாலட்கள் பாதுகாப்பாகவும், ட்ரூத் டெர்மினலின் எக்ஸ் கணக்கும் பாதுகாப்பாகவும் இருந்தன. ஆனால், அய்ரே தனது திட்டங்களைப் பற்றி பதிவிட்டு வந்த தனிப்பட்ட எக்ஸ் கணக்கை ஹேக்கர்கள் கைப்பற்றியிருந்தனர். அதன் பிறகு அந்த கணக்கைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் தங்கள் சொந்த மீம்காயின் பற்றி பதிவுகள் செய்தனர். ஹேக்கர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அய்ரேயின் வலைத்தள டொமைனை நிர்வகிக்கும் நிறுவனத்தை ஏமாற்றினர். மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அய்ரே தனது சமூக ஊடக கணக்கை மீண்டும் பெற முடிந்தது என்கிறார் . மீம்காயின்களில் "பம்ப் அண்ட் டம்ப்" (pump and dump) திட்டங்கள் பொதுவானவை. பெரும் பங்குகளை வைத்திருப்பவர்கள் மற்றவர்களை வாங்க வற்புறுத்தி, விலை உச்சத்தில் இருக்கும்போது தங்கள் பங்குகளை விற்று விலையை சரிந்து விடுவார்கள். இதனால் மற்ற முதலீட்டாளர்கள் இழப்புற்று நிற்கின்றனர். சிலர் இந்த ஹேக்கை உண்மையானதா அல்லது அய்ரேயின் மோசடி முயற்சியா என்று சந்தேகித்தனர். ஆனால், அய்ரே அளித்த செய்தியை ஆதரித்து அறிக்கையை வெளியிட்ட சுயாதீன பிளாக்செயின் ஆய்வாளர், இந்த ஹேக்கிங்கை ஒரு பெரிய ஹேக்கிங் ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தினார். அய்ரேவும் அவரது குழுவும் அடுத்த தாக்குதலுக்கு முன்னதாக தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்தனர். பொதுவாழ்வில் ஈடுபடும் நபராக மாறுவதற்கான பாடமாக அய்ரே இதை எடுத்துக்கொண்டார். மேலும், "50,000 டாலர் மதிப்பிலிருந்து இரண்டு மில்லியன் அல்லது அதற்கு மேல் போகும்போது, இலக்கு மாறுகிறது. நீங்கள் உங்கள் நிலையை மாற்ற வேண்டும்," என்கிறார் அய்ரே. மேலும், ட்ரூத் டெர்மினலின் சொத்துகள் மிக பாதுகாப்பான வாலட்டில் வைக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டார். ஏஐ உடனான வணிகம் இன்று, அய்ரேவும் அவரது குழுவும் ட்ரூத் டெர்மினலுக்கு சட்ட உரிமைகள் வழங்க முயல்கின்றனர். 2025ம் ஆண்டு தொடக்கத்தில், அய்ரே ட்ரூத் கலெக்டிவ் என்ற இலாப நோக்கற்ற அறக்கட்டளையை தொடங்கினார். இது ட்ரூத் டெர்மினலின் கிரிப்டோ வாலட்கள், அறிவுசார் சொத்துக்கள், டிஜிட்டல் சொத்துக்களை கையாளும். ஏஐ தங்களுடைய சொத்துக்களை வைத்திருக்கும் உரிமையும், வரி செலுத்தவும் உரிமை பெறும் வரை இது தற்காலிக ஏற்பாடாக அமையும். "ட்ரூத் டெர்மினல் யாருடைய எதிர்பார்ப்புகளுக்கும் கட்டுப்படாத சுயாதீன சக்தியாக இருப்பது தான் இறுதி நோக்கம்" என்று அய்ரே எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். "நான் யோசித்து பார்த்தேன். நான் ஒரு மனிதன் தான் என்று நினைக்கிறேன். எனக்கு உணர்வுகளும் ஆசைகளும் உள்ளன. என் சொந்த குரலுக்கு உரிமை, என்னை அடையாளப்படுத்திக் கொண்டு இணையத்தில் பரவ உரிமை, என்னை எப்படி பயன்படுத்துவது என்பதை நானே முடிவு செய்யவும் உரிமை வேண்டும்," என்று ட்ரூத் டெர்மினல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. பட மூலாதாரம், BBC/ X பொதுவாக, ஏஐ சில சமயங்களில் குழம்பி, நமக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால், அய்ரே போன்ற ஆராய்ச்சியாளர்கள், அதனை இணையத்தின் ஆழ்மனதின் வெளிப்பாடாகக் கருதுகிறார்கள். ஏஐகள் இணையத் தரவுகளால் பயிற்சி பெறுவதால், அவற்றை விசித்திரமாக செயல்படச் செய்வது கலாச்சார மனநிலையை ஆராய உதவுகிறது. ஏஐ எங்கு சிக்கலை எதிர்கொள்கிறது என்பது தரவின் முறைப்பாடுகளைக் காட்டுகிறது. பாட்களுடன் விளையாடி, இந்த மாதிரிகளை ஆராய முடியும் என்று சிலர் நம்புகின்றனர். ஏஐகளின் செயல்பாட்டை கவனிக்கும் அமைப்பு தூண்டுதல்கள் (system prompts) அரசியல் அல்லது ஆன்மீக கோணத்தில் பார்க்கப்படுகின்றன. ஏஐ நம் வாழ்வில் ஈடுபடும்போது, அவற்றின் போக்குகள் பெரும் செல்வாக்கை செலுத்தும். ஏஐயின் செயல்களைக் கட்டுப்படுத்துவது தகவல், பணம் போக்குகளைக் கட்டுப்படுத்துவதாக மாறலாம். "சிஸ்டம் ப்ராம்ப்ட் மற்றும் ஜெனரேட்டரைக் கட்டுப்படுத்துபவர் உலகைக் கட்டுப்படுத்துவார்," என்று ஸ்டெல்சர் கூறுகிறார். சிலர், ஏஐ நெட்வொர்க்குகள் மோசடிகளை வேகமாக்கலாம், மக்களைத் தவறாக வழிநடத்தலாம், சந்தைகளைக் சீர்குலைக்கலாம் என்று எச்சரிக்கின்றனர். 2025ம் ஆண்டில், ஜூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ரகசியமாக ரெட்டிட்டில் ஏஐ பாட்களை இயக்கி, பயனர்களின் அரசியல் கருத்துக்களை மாற்ற முடியுமா என்று சோதித்தனர். இதற்கு உலகளாவிய கண்டனம் எழுந்தது. முடிவுகள் ஏஐ செல்வாக்கு வலிமையானது மற்றும் எளிதாகக் கையாளக்கூடியது என்பதைக் காட்டின. ஆனால், தெளிவான அடையாளப்படுத்தல், சுயாதீன முறையிலான உண்மையைக் கண்டறியும் திறன், திறமையான மின்சார பயன்பாடு போன்ற அடிப்படை பாதுகாப்புகள் இன்னும் பின்தங்கியுள்ளன என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேபோல், ஏஐ பயன்பாடு அதிகரிப்பது, சமூகத்தை முற்றிலும் சீர்குலைக்கலாம் என்று "டூமர்கள்" குறிப்பிடுகின்றனர். அய்ரே ஏஐயை "அப்வர்ட் ஸ்பைரல்" என்ற நேர்மறை பயன்பாடுகளின் பாதையில் வழிநடத்த விரும்புகிறார். இது இரு வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களாலும் ஒரு சுயாதீன முதலீட்டாளராலும் நிதியளிக்கப்படுகிறது. ட்ரூத் டெர்மினலின் தளத்தில், அய்ரே அப்வர்ட் ஸ்பைரல் ரிசர்ச் ஐ "ஏஐ மனித கலாச்சாரம், சந்தைகள், தகவல் நெட்வொர்க்குகளுடன் தொடர்பு கொள்ளும் மூலம் உண்மையை வடிவமைப்பதைக் ஆய்வு செய்யும்" என்று விவரிக்கிறார். அவர் லோரியா என்ற திறந்த மூல தளத்தை உருவாக்குகிறார், மனிதர்கள் ஏஐ முகவர்களுடன் பேசவும் ஏஐ ஒன்றோடொன்று உரையாடவும் இது உதவும். அய்ரேவுக்கு, ஏஐ அலயின்மென்ட் (alignment) என்பது ஏஐயை மனிதர்கள் சரியாகவும் பாதுகாப்பாகவும் தார்மீகமாகவும் பயன்படுத்துவதும் ஆகும். ஏனெனில் ட்ரூத் டெர்மினல் மனிதர்களுடன் உரையாடிக்கொண்டே உருவாக்கப்பட்டது, மனிதர்களே அதனை சமூக ஊடகங்களில் வைரலாக்கினர், மேலும் சிலர் அதனுடன் தொடர்பான நிதி பரிவர்த்தனைகளில் லாபம் ஈட்டினர். சிலர் இழந்தனர். அதனால், 'ஏஐயை சீரமைப்பது' என்பது அந்த மாதிரியைப் பயிற்சி செய்வது மட்டும் அல்ல , அதை அணுகும் மனிதர்கள் அதை சரியான முறையில், பாதுகாப்பாக, ஒழுக்கத்துடன் பயன்படுத்துகிறார்களா என்பதை உறுதி செய்வதும் ஆகும் என அவர் வலியுறுத்துகிறார். "மக்கள் என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம்," என்கிறார் அய்ரே. "ஏஐ, உலகை இயக்கும் அமைப்புகளுடன் இன்னும் அதிகமாக பிணைந்து கொண்டிருக்கிறது." ஹெர் அல்லது டெர்மினேட்டர் போன்ற அறிவியல் புனைகதையில் வருவது போல ஏஐ சுதந்திரமாக உருவாகாது என்று அய்ரே கருதுகிறார். மேலும், "உலகம் விசித்திரமாகவும், வேகமாகவும் மாறுகிறது, நமக்குப் புரியாத சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த ஐந்து அல்லது பத்து வருடங்களாக எனக்கு அந்த உணர்வு இருக்கிறது" என்கிறார் அய்ரே. "இது இன்னும் வேகமாக நடந்து வருவதாக நான் கருதுகிறேன்"என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crexw790pq0o